Saturday 13 January 2024

தமிழர் பண்பாட்டு, வீரவிளையாட்டென்னும் ஜல்லிக்கட்டு – சில விவாதக் குறிப்புகள் - ஞா,குருசாமி

 

16.01.2013 அன்று மதியம் முகநூலை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது ஜல்லிக்கட்டு பற்றி லிவிங் ஸ்மைல் வித்யா வினவியிருந்த வினா ஒன்று கண்ணில் பட்டது. தமிழர்களின் விளையாட்டுகள் பற்றி நிறைய யோசிக்க வைப்பதாக அந்தக் கேள்வி அமைந்திருந்தது.ஆண்களால் மட்டுமே விளையாடப்படும் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த, குறிப்பிட்ட சாதியினரால், சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விளையாடப்படும் ஒரு விளையாட்டு எப்படித் தமிழர் விளையாட்டாகும்?’ என்பதுதான் அந்தக் கேள்வி. தமிழர் யார்? என்று வரையறுப்பதில் ஏராளமான சிக்கல்கள் உண்டு. வரையறைகள் முன்வைக்கப்படும் போது வரையறைக்கு வெளியில் இருப்பவர்களுக்கு அது ஆத்திரம் ஊட்டுவதாகவே அமையும். தர்மபுரி கலவரத்திற்குப் பிறகு சாதி குறித்த பார்வைகள் சில மட்டங்களில் கூர் தீட்டப்படும் வேளையில் தமிழர் பற்றிய வரையறை உருவாக்கம் எளிதானதல்ல. வரும்காலம் வரையறையை அவசியப்படுத்துவதாகவும் அமையலாம்.

தமிழ்த்தேசியம் வேகமடைந்திருக்கும் இன்று அதற்குள் நின்று ஆதாயம் தேடுகின்ற ஒவ்வொருவரும் தம்மை தமிழர் என்கின்றனர். ஆதாயம், பாதுகாப்பு, அரசியல் முன்னகர்வு, பண்பாட்டு மீட்டெடுப்பு என்கிற நிலைகளில் விரியும் தமிழ்த்தேசியம், இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒன்றாக சிலநேரம் கருத்துருவாக்கம் செய்யப்படும் போது இறையாண்மை பேசுகிறவர்கள் தமிழர் என்னும் வரையறைக்கு வெளியிலே நிற்கிறார்கள. தமிழ்த்தேசியம் ஒ அல்தமிழ்த்தேசியம் என்னும் முரண்படு கருத்துருவாக்கங்கள் மோதிக்கொள்கின்ற பின்னணியிலும் தமிழர் பற்றிய வரையறைக்குச் சிலந்தி வலைச் சிக்கல் உண்டு. என்றாலும் தனிக்குழுப் பண்பாட்டைப் பொதுப்பண்பாடாக்கும் வேலைகள் சத்தமில்லாமல் அரசுத் துணையுடன் நிகழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தமிழர் பண்பாட்டு, வீரவிளையாட்டு என்கிற பொத்தாம் பொதுவான அடையாளத்துடன் நிகழ்த்தப்பெறும் ஜல்லிக்கட்டு பற்றிய சில குறிப்புகளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.



தமிழர் பண்பாடு, தமிழர் விளையாட்டு, ஜல்லிக்கட்டு பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், ஜல்லிக்கட்டில் முனைப்புக் காட்டிய சாதிக்குழுக்கள், ஜல்லிக்கட்டில் இருந்து விலகி இருந்த சாதிக் குழுக்கள், தமிழர் பண்பாட்டில் ஜல்லிக்கட்டு உள்ளடங்கிப் போன விவரணைகள், அதனூடான அரசியல் நகர்வுகள் முதலானவற்றைக் கலைத்துப் போட்டு விவாதிக்கும் போது சில முடிவுகளை எட்டக்கூடும்.

பண்பாட்டுக்குள் ஆண், பெண், சிறியவர், பெரியவர், முதலாளி, தொழிலாளி, மூன்றாம் பாலினர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், பாலியல் தொழிலாளிகள், பிச்சைக்காரர்கள் என்கிற தனிமனித இருப்புகள் பிறப்பு, வயது, தொழில், சமூக நிலைப்பாடு எனப் பல தளங்களில் விரிந்துகொண்டே செல்வது உலகின் அனைத்துப் பண்பாடுகளிலும் உண்டு. ஒவ்வொருவருக்கும் அவர்களது வாழ்வெளி தனித்ததாக இருக்கிறது. இறப்பு நிகழ்வுகளில் சில சடங்குகள் விதவைகளே செய்ய வேண்டுமென்பதாக இருக்கிறது. நல்ல நிகழ்வுகளில் ஒதுக்கப்படும் விதவை சக விதவைப் பெண்னோடு தன் மனச்சுமையைப் பகிர்ந்து கொள்கிறாள். இறந்தவருக்கு இடைவழித் தண்ணீர்வைக்கச் செல்லும் போது உடன் எடுத்துச் செல்லும் கொள்ளியை விதவைதான் வீட்டிற்குள் இருந்து எடுத்து வந்து தருகிறார். இப்படி அவர்கள் அறியாமலேயே அவர்களுக்கான வெளி உருவாக்கப்படுகிறது. பாலியல் தொழிலாளிகளுக்கு இடையே பணம், ஆறுதல் மொழி, வாடிக்கையாளர்களின் பண்பு குறித்த தகவல் பரிமாற்றங்கள், ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்கு மூத்த தொழிலாளியின் அனுசரனைத் தேவைகள், புதிய ஒருவரை தொழிலில் பயன்படுத்தும்முன் அவருக்குச் செய்யப்படும் மூளைச் சலவை, தொழில் செய்யும் இடங்களில் பாதுகாப்பை உருவாக்கிக் கொள்ளும் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், எதிர்ப்பாலினரின் பலவீனங்களைச் சக தொழிலாளியிடம் பகிர்ந்து பகடி செய்யும் குதுகுலங்கள் முதலின அவர்களுக்கான வெளியாக விரிந்து கிடக்கின்றது. பிச்சைக்காரர்களின் வாழ்க்கைகளும் அவர்களுக்கான வெளிகளைக் கொண்டுள்ளது. பணம், பொருள், உணவு போன்றவை குறித்த பங்கீட்டு நடைமுறைகள், சமூகத்தைப் பற்றிய விமரிசனங்கள், ஆண் பெண் பிச்சைக்காரர்களுக்கு இடையிலான பாலுறவு, அதற்கான கட்டுப்பாடுகள், சக பிச்சைக்காரர் இறந்தால் தனக்குள் சொல்லிக்கொள்ளும் அனுதாபங்கள், இறந்தவரோடு நெருங்கிப் பழகியவர் இறந்தவருக்காகத் தான் செய்து கொள்ளும் ~தலைத்தண்ணீர்| சடங்கு, இறந்தவரின் இடத்தைத் தலைத்தண்ணீர் சடங்கு செய்தவர் புதிய ஒருவருக்கு வழங்கும் போது மேற்கொள்ளும் நடவடிக்கை, பேசப்படும் பேரங்கள், பேரத்தின் முடிவில் கைமாறும் சொற்பத் தொகையிலான பணம் என்கிற நிலைகளில் பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைக் காணமுடிகிறது. இவர்களையெல்லாம் உள்ளடங்கி நிற்கும் தமிழ்ச்சமூகத்தில் பொதுவான பண்பாட்டை இனம் காண்பது சிரமமானதுதான்.

தமிழரின் பொதுப்பண்பாட்டுக்குள் நிலைகொண்டிருக்கும் கிளைப்பண்பாடு ஒவ்வொன்றையும் தமிழர் பண்பாடாகக் கருதும் அபத்தத்தைப் போல வேறொன்றும் இருக்கமுடியாது. தமிழரில் குறிப்பிட்ட மக்கள் சார்ந்ததாக இருக்கும்  கிளைப்பண்பாடு அவர்களுக்கு உரியதே தவிர அது தமிழர் பண்பாடு அல்ல என்கிற அவதானிப்போடு ஜல்லிக்கட்டைப் பார்க்க வேண்டியது இப்போதைய தேவை.

ஜல்லிக்கட்டை வீரவிளையாட்டு என்னும் போது யாருக்கான வீரம், யாருக்கு எதிரான வீரம், மாட்டை மையப்படுத்தி வீரத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவை ஏன்? யார் மாட்டை யார் அடக்குவது? மாட்டை அடக்குவதுதான் வீரமா? என்றெல்லாம் கேள்வி எழுகிறது. இதில் மற்றெல்லாவற்றையும் விட யார் மாட்டை யார் அடக்குவது என்பதற்குள் தான் சிக்கல் அதிகம். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நிகழ்த்தப்பட்டாலும் தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுகள் அதிகம் நிகழ்த்தப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர், சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல், சிங்கம்புணரி, கண்டிபட்டி, வேந்தன்பட்டி, புதூர், அரளிப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தேனீமலை, திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, தேனி மாவட்டத்தில் பல்லவராயன்பட்டி, ஆவாரங்காடு ஆகிய ஊர்களின் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் சமீப காலமாக ஊடகங்களினால் மிகுந்த கவனம் பெறுகின்றன.

தமிழர்களின் ஜல்லிக்கட்டு மிகப் பழமையான ஒன்று. அது பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்திலே உண்டு என்றெல்லாம் சொல்பவர்கள் தற்காலத்திய நிகழ்வுக்கும், சங்க இலக்கியங்களில் கூறப்படும் ஏறுதழுவலுக்குமான வேறுபாட்டைப் புரிய மறுக்கிறார்கள். முல்லை நில மக்கள் மத்தியில் மட்டுமே இருந்து வந்த ஏறுதழுவலில் குறிஞ்சி, மருதம், நெய்தல் நில மக்கள் கலந்துகொள்ளவில்லை. அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு இல்லாமலே இருந்திருக்கின்றன. ஏறுதழுவல் முல்லை நிலப் பண்பாட்டின் உச்சம். ஏறுதழுவியவனுக்கு பெண்ணைப் பொத்தாம் பொதுவாக போகிற போக்கில் கொடுக்கவில்லை. ஏறுதழுவுகிறவனுக்கு வயது, குடி, பொருள் ஆகியவை வரையறை செய்யப்பட்டு இருந்துள்ளன. வரையறைக்கு உட்பட்டவனே ஏறுதழுவ அனுமதிக்கப்பட்டிருக்கிறான். இது போன்ற வரையறைகள் சாதியச் சாயத்தோடு இன்றைய ஜல்லிக்கட்டுகளில் இல்லாமல் இல்லை. பெரும் பகுதி பொதுப்பண்பாட்டுச் சொற்களால் மறைக்கப்படுகின்றன.

1990 களின் பின்பகுதியில் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக இருந்து வந்த ஜல்லிக்கட்டு ஒவ்வொரு முறையும் சாதி மோதல்களில்தான் முடிந்துள்ளது. அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவரால் தடை விதிக்கப்பட்டு இன்றைக்கு அம்மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு முற்றிலும் கைவிடப்பட்டதாக மாறியிருக்கிறது. பாரம்பரியமாகவும், நாட்டார் தெய்வங்களோடும் ஜல்லிக்கட்டு தொடர்பு படுத்தப்பட்டு இருப்பதால் சத்தமில்லாமல் மாட்டுப்பொங்கல் அன்று உழவு மாடுகளைத்தான் இளைஞர்கள் தெருக்களில் ஓடவிட்டு விரட்டிப் பிடிக்கிறார்கள். நாலைந்து மாடுகளோடு முடிவுறும் இந்தச் சம்பிர்தாய ஜல்லிக்கட்டும் மாடுகள் இன்றி குறைந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு நடத்த பெருமளவு பொருட்செலவு ஆகும் என்பதால் பொதுப் பண்பாட்டுச் சொல்லை முன் நிறுத்தி சாதிஇந்துக்களாலேயே நடத்தப்படுகிறது. அரசாங்க ஊடாட்டம் ஏற்பட்டிருக்கிற இன்றைய சூழலில் அவர்களே தலைமை பெறுகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய தலித்துகளால் சில ஊர்களில் சிறுகச் சிறுக பொருள் சேர்த்து பத்து அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரிய அளவில் ஜல்லிக்கட்டு நிகழ்த்தப் பெறுகின்றன. வெகுஜன முகமூடி அணிந்துள்ள தற்கால ஜல்லிக்கட்டில் மாடு களமிறக்கப்படும் போதே அதைப் பிடிப்பவரும் தீர்மானிக்கப்பட்டு விடுகிறார். ஒரு சாதிஇந்துவின் மாட்டை தலித் அடக்குவதை சாதிஇந்துக்கள் அவமானமாகக் கருதுகிறார்கள். திட்டமிட்ட வரையறைகளையும் தாண்டி வெகுஜன மக்களுக்குள் நின்ற தலித்தால் அடக்கப்படும் மாட்டை விலை பேசாமலேயே அடிமாடாக விற்றுவிடுகிறார்கள். விற்றபிறகும் மாட்டுக்காரரின் வீட்டுப் பெண்கள் மாட்டைத்  திட்டி தன் அவமானத்தையும், ஆத்திரத்தையும் தீர்த்துக் கொள்கிறார்கள். 1963 இல் சாதிஇந்துவின் மாட்டை அடக்கிய தலித்தும் மாடும் கொலைசெய்யப்பட்ட செய்தியை நேரில் பார்த்த என் அம்மா சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஜல்லிக்கட்டு மூலம் கட்டமைக்கப்படும் வீரத்தைத் தலித்துகள் தமக்கு நிகராகப் பங்கு போட்டுக்கொள்வதையும், அவர்கள் தனியாக நிகழ்த்தி தங்கள் வீரத்தை நிரூபித்துக்கொள்வதையும் ஏற்கப்பொறாத சாதிஇந்துக்களின் பிற்போக்கு எண்ணங்கள் ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் வெளிப்படாமல் இல்லை. ஜல்லிமாடு வளர்த்தல், சண்டைக்கிடா வளர்த்தல், சண்டைக்கோழி வளர்த்தல் ஆகியன தென்மாவட்டங்களில் பொதுச்சாதியில் தங்களை ஒன்றாகக் கருதிக்கொள்ளும் சில உட்சாதிக்குழுக்களால் குலத்தொழில் போல செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் மூலம் கட்டமைக்கப்படும் வீரம் அவர்களுக்கேயுரியது; பரம்பரையானது என்னும் நிலைப்பாட்டை அவர்கள் உருவாக்கிக்கொண்டு விட்டார்கள்.

விலங்குகள் நல வாரியம் மூலம் ஜனவரி 2008 இல் மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எதிராகத் தடை உத்தரவு பெற்றார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சார்ந்த டி.ரங்கசாமி என்பவரும் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர், மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரைப் பிரதிவாதிகளாகச் சேர்த்திருந்தார். அவரது மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது கொதித்தெழுந்து போராட்டங்களை நடத்தியவர்கள் தலித்துகள் அல்ல. தொடர்ந்து தமிழக அரசு 2009 இல் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தை இயற்றியது. விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்திய விலங்குகள் நல வாரியம். பெடா (Pநுவுயு)இ இந்திய நீலச் சிலுவைச்சங்கம் முதலிய அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் சரியாகப் பயன்படுத்துவதில்லை என நீதிமன்றத்தை நாடின. உச்சநீதி மன்றத்தில் இந்திய விலங்குகள் நல வாரியம் ஒரு மாவட்டத்தில் ஓராண்டு காலத்தில் மூன்று ஜல்லிக்கட்டுகளுக்கு மேல் நடத்த அனுமதிக்கக் கூடாது, ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் குறைந்த பட்சம் ரூபாய் 20 இலட்சத்தையாவது வைப்புநிதியாகச் செலுத்த வேண்டும், மருத்துவத் துணைக்கருவிகள், மருந்துகளுடன் மருத்துவர் ஒருவர் போட்டி நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும், ஒரே நேரத்தில் ஒரு காளையை ஐந்து பேருக்கு மேல் பிடிக்கக் கூடாது, ஏற்கனவே உள்ள ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்தின் ஏழாவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தது. 2011 மார்ச்சில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்குக் கூடுதல் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2011 சூலையில் மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் சிங்கம்,புலி, கரடி, குரங்கு போன்ற வனவிலங்குகளைக் கூண்டில் அடைத்தோ பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது என உத்தரவு பிறப்பித்தார். பின்பு ஏற்கனவே இருந்த சட்டத்தில் காளையும் சேர்க்கப்பட்டதால் ஜல்லிக்கட்டிற்கு மறைமுகமாகத் தடை விதித்தது போன்ற சூழல் உருவானது. 2012 இல் உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. காளைகளும், வீரர்களும் முறைப்படி பதிவு செய்ய வேண்டும், காளைகளின் பின்உறுப்பில் மிளகாய்ப்பொடி, சேறு, சகதி பூசித் துன்புறுத்தக் கூடாது, காளைகளை அடிப்பதோ, வாளைப் பிடித்துத் திருகுவதோ கூடாது என்ற கட்டுப்பாடுகளுடன் இந்த வருட ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது.

டி.ரங்கசாமி தொடுத்த வழக்கில் பிரதிவாதிகளுள் ஒருவரான அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் த.உதயச்சந்திரன் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் சமூக விளையாட்டுகளின் முக்கியம் குறித்தும், பண்பாட்டுத் தளத்தில் அவை இருப்பதற்கான காரணங்கள் பற்றியும் கூறப்பட்டு இருந்தது. மனுவில் ~~தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்கிற மாடு பிடிக்கும் இந்த விளையாட்டுக்குப் பெயர் பெற்ற அலங்காநல்லூர் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இதில் ஆழமான ஆர்வமும் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு வீரத்தை விதைத்திடும் அலங்காநல்லூர் கிராமத்தில் தொடக்க காலத்தில் இருந்தே இந்த விளையாட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே இந்த விளையாட்டுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் இரண்டாம் பத்தியில் கூறப்பட்டுள்ள உறுதிக் கூற்று உண்மைக்கு முற்றிலும் புறம்பானதாகும். ஏறத்தாழ தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுத் திருவிழாக்களில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கெனத் தனித்த பெயரும் புகழும் இடமும் என்றும் உண்டு. மதுரை மாவட்டக் கருப்பொருள் களஞ்சியத்தில் பதிவாகி இருக்கும் விவரத்தின் படி இவ்வீர விளையாட்டானது தமிழ்நாட்டில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடத்தப்பட்டு வருவது தெரிகிறது…. இந்தக் காளைகள் வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்தப்படாமல் இருப்பது அவற்றின் மீதான கற்பனைகளை விரிக்கிறது. இயல்பாகவே காளைகளை அடக்கத் துடிக்கும் வீரமறவர் குல இளைஞர்களின் குருதியோடும் சுவாசத்தோடும் நெருங்கிய தொடர்புடையது ஜல்லிக்கட்டு|| என்று பேசப்பட்டு இருக்கும் செய்திகள் முன்பின் முரண்பாடுகளோடும் வேறு சில புரிதல்களையும் தருகிறது. மேலும் அந்த மனுவில் கிறிஸ்தவர்களும், முகமதியர்களும் தங்களுடைய வழிபாட்டுத் தலங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவதால் ஒட்டு மொத்த தமிழ்ச்சமூகத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டாகவே இதனைக் கண்டுணரத் தங்களை வேண்டுகிறேன்.எனக் கூறப்பட்டுள்ள இடத்தில் மூன்று மதத்தினருக்கு இடையில் தொடர்பு கற்பித்து இருப்பது எதற்காகவோ தெரியவில்லை. மூன்று மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்தினால் அது தமிழர்களின் விளையாட்டாகி விடுமா? என்பது தான் நம் கேள்வி.

ஒரே ஊரில் இரண்டு இடங்களில் வெவ்வேறு சாதிக்குழுவால் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு சாதியத்தின் வீரியத்தை வெளிச்சமாக்கும். முரண்படும் இரண்டு சாதிக்குழுக்களே தனித்தனியாக நடத்துகின்றன. தமிழ்ச் சமூக அமைப்பில் நிலவுடைமையாளர்கள் ஒ விவசாயக்கூலிகள் என்னும் அடுக்கில் விவசாயக்கூலிகளே ஜல்லிக்கட்டுக் களத்தோடும் மாடுகளோடும் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். நிலவுடைமையாளர்களின் பங்களிப்பு பார்வையாளர்களாக இருப்பது மட்டுமே. விவசாயக்கூலிகளாக இருக்கக்கூடிய பல சாதிக்குழுக்களும் ஜல்லிக்கட்டில் நேரடித் தொடர்பு இல்லாமல் பார்வையாளர்களாவே இருக்கிறார்கள். பெண்களுக்கும் இதே நிலைதான்.

ஜல்லிக்கட்டோடு நேரடித் தொடர்புடையவர்களின் பண்பாட்டை பார்வையாளர்கள் மீதும் படரவிடுவதுதான் நம் முன்னால் கிடக்கும் பின்னல். குடும்பத்தில் ஒருவர் ஆடம்பரமாக இருக்கிறார் என்றால் அந்தக் குடும்பமே ஆடம்பரமாக இருக்கிறது எனக் கருத முடியாது. தமிழ்ச் சமூகத்தில் சில சாதியக்குழு மட்டுமே ஜல்லிக்கட்டு மீது அதீத அக்கறை காட்டி, அதைப் பொதுப்பண்பாட்டுக்குள் அடக்குவது பண்பாட்டுத் தளத்தில் விபரீதத்தை ஏற்படுத்தும். தவறான புரிதல்கள் நிலையான கருத்துருவாக்கங்களாகி சமூகத்திற்குச் சவாலாக மாறியிருக்கும் சூழலில், குறிப்பிட்ட சில குழுக்களே கொண்டாடும் ஒரு விளையாட்டைப் பொதுப்பண்பாட்டுத் தளத்தில் இணைக்கும் போது, பொதுப்பண்பாடு எங்களில் இருந்துதான் கட்டமைக்கப்பட்டது என்ற கருத்தும் உருவாகலாம். சில குழுக்களுக்கேயுரிய பண்பாடு பொதுப்பண்பாடாக மாற்றம் பெறும்போது, அது விலகி நிற்கும் குழுக்களைப் படுகுழியில் தள்ளிவிட்டிருக்கிறது என்பதே வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கும் பாடம்.

 

நன்றி : உயிர் எழுத்து, பிப்ரவரி 2013

No comments: