நூல் அறிமுகம்

 

கே.என்.சிவராஜ பிள்ளையின் THE CHRONOLOGY OF THE EARLY TAMILS என்கிற நூல் பற்றிய குறிப்புகள்

ஞா.குருசாமி

கே.என்.சிவராச பிள்ளை தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் பொழுது எத்தகைய முன்னாய்வுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். தன்னுடைய ‘The Chronology of the Early Tamils’ நூலில் இலக்கிய வரலாற்றை எழுத முனைகிறவர்கள் என்னென்ன விசயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய நூலில் எவையெவை கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் விவரிக்கிறார். அதில்  குறிப்பாக மூன்று விஷயங்களைக் குறிப்பிடலாம். ஒன்று தொன்மம் குறித்த மறுப்பு, இரண்டு சொல் பயன்பாட்டு ஆய்வின் வழி காலத்தை உறுதி செய்தல், மூன்று காலத்தின் வரிசைப்படி வரலாற்றை எழுதுதல்.

அவர் தொன்மத்தை மறுத்தல் என்பதில் சங்கம் பற்றி இறையனார் களவியல் உரை தருகிற செய்திகளை மறுக்கிறார். அகத்தியர் பற்றி வழங்கிவரும் செய்திகளை முற்றாக மறுக்கிறார். அகத்தியர் பற்றிய செய்திகளும் சங்கம் பற்றிய செய்திகளும் உண்மைக்குப் புறம்பானவை. நம்ப முடியாதவையாக இருக்கின்றன என்பதை சான்றுகளோடு நிறுவுகிறார்.

நூலின் அட்டைப்படம்

 உந்து, ஆங்கு என்கிற இரண்டு சொற்கள் வழி காலத்தை வரையறை செய்ய முடியும் என்று நிறுவியிருக்கிறார். உந்து வினைமுற்று சொல். பெயரெச்சம் அல்ல. பலரால் அது பெயரெச்சம் என தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார். ஒரே பாடலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில்உந்து சொல் வந்து வினைமுற்றாக இருக்கும் போது, அந்த பாடலில் ஆங்கு என்ற இடைச்சொல்  வரும். அதுதான் பாட்டில் வரும் பல வினைமுற்று தொடர்களின் பொருளைத் தொகுத்துத் தரும். சங்க இலக்கியத்தில்ஆங்கு என்ற சொல்லை புரிந்து கொள்ளாமல் உந்து என்கிற வினைமுற்றுச் சொல்லை புரிந்து கொள்ள முடியாது என்கிறார் கே.என்.சிவராஜ பிள்ளை.

 மேலும் அவர் தொல்காப்பியர் உந்து வினைமுற்று சொல் பற்றி கூறவில்லை என்று குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தில்உந்து என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்களாக மாங்குடி கிழார், ஒருசிறை பெரியனார், பரணர், கருவூர் கதப்பில்லை, புறத்திணை நன்னாகன், கோவூர்கிழார், மதுரை நக்கீரர் முதலியோர்களைக் குறிப்பிடுகிறார். இவர்களெல்லாம் உந்து என்கிற சொல்லை பயன்படுத்தி எழுதிய பாடல்கள் புறநானூற்றில் கிடைக்கின்றன. இப்புலவர்களைத் தொல்காப்பியர் காலத்துக்கு முந்தியவர்கள் எனக் குறிப்பிடும் கே.என். சிவராஜ பிள்ளை, உந்து என்னும் சொல் வழக்கு தொல்காப்பியர் காலத்தில் வழக்கொழிந்திருக்க வேண்டும், அல்லது இழிவழக்காக இருந்திருக்க வேண்டும் அல்லது தொல்காப்பியர் காலத்திற்கு பின்னால் வழக்கிற்கு வந்திருக்கலாம் என்கிறார். இதில் மூன்றாவது காரணம் ஏற்புடையதாக இல்லை. ஏற்றால் கே.என்.சிவராஜ பிள்ளையின் ஆய்வே முரணாகும் அபாயமிருக்கிறது.

 இலக்கிய வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல்களாக 1. தலைமுறையை பகுப்பதில் உள்ள சிக்கல்,  2.காலவரையறையை முடிவு செய்வதில் உள்ள சிக்கல் என இரண்டு சிக்கல் பற்றிக் கூறும் அவர், அவற்றை எவ்வாறு வரையறை செய்வது என்பதை விளக்குகிறார். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எழுதும் பொழுது ஓர் இலக்கிய வரலாறு உண்மையிலேயே வரலாறாக இருக்கும் அதில் உண்மைக்கு புறமான செய்திகளுக்கு இடம் இருக்காது. நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும் என்கிறார். நூல் ஆங்கிலத்தில் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்நூல் 1932 - இல் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கிறது. மொத்த பக்கம் 316. அன்றைய விலை ரூ 5/-

.................................



No comments: