Friday 21 December 2018

பண்பாட்டுத் தகவமைப்பு: பயணித்த வரலாறும் பயணிக்க வேண்டிய திசையும்

பண்பாட்டுத் தகவமைப்பு: பயணித்த வரலாறும் பயணிக்க வேண்டிய திசையும் 
ஞா.குருசாமி 
பண்பாடு என்பது பழம்பெருமை பேசுதல் என்னும் நிலையைக் கடந்து வாழ்தலுக்கான உரிமைகளை வரையறை செய்யும் அளவுகோலாக மாற்றப்பட்டிருக்கும் தற்கால டிஜிட்டல் யுகச் சூழலில் பிராந்திய பண்பாடுகளுக்கு நேர்ந்திருக்கும் சிக்கல்களை இனம் கண்டு மீட்டெழுப்புவதற்கான பணிகள் சர்வதேசிய அளவில் குறிப்பாக யுரோவை மையமாக வைத்து தொடங்கப்பட்டு இருபதாண்டு காலம் நிறைவு பெறுகிற இன்றைய தருணத்தில் தான் புதிய சூழலுக்கு தகுந்த தமிழ் பண்பாட்டு மீள் கட்டமைப்பு குறித்து செயல்பட வேண்டிய தேவை உணரப்பட்டிருக்கிறது. இந்த காலம் கடந்த முன்னெடுப்புக்குக் காரணம் நாமில்லை என்றாலும் இன்றைய பண்பாட்டு உருவாக்கம் அல்லது மீள் கட்டமைப்பு என்பது உலகச் சந்தையின் ஒற்றை பொருளாதார கோட்பாட்டுச் சித்தாந்தத்தின் பி;ன்புலத்தில் உருவாக்கப்படுகிறது. அவ்வாறு அவர்கள் உருவாக்கும் போதே அதற்கான விளைவுகளையும் அறிந்து ஆயத்தமாகிக் கொண்டார்கள். ஆனால் மத்திய மற்றும் கிழக்காசிய நாடுகள் ஒற்றை பொருளாதாரக் கோட்பாட்டினால் ஏற்பட்ட பண்பாட்டுச் சிதைவுகளை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்ட பின்னே விழிப்படைந்தன. அது தான் தமிழ்ப் பண்பாட்டு மீள் கட்டமைப்பிலும் நேர்ந்திருக்கிறது. இனங்களை வைத்து மட்டுமே வரையறை செய்யப்படும் பண்பாடு, எப்போதுமே சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களின் வாழ்வியல் உரிமைகளையும் சடங்குகளையும் உள்ளடக்கி உருவாக்கப்படுவதில்லை. 

உலகின் அனைத்துச் சமூகங்களிலும் உயர்வானதாக இருக்கும் கற்பிதங்கள் தான் பண்பாடாக உருப்பெற்றிருக்கிறது. அதாவது சமூகத்தின் எல்லா நடவடிக்கைளும் கணக்கில் கொள்ளப்பட்டு உயர்வு, இழிவு என்று வகைப்படுத்திய பின்பு உயர்வானவையாகக் கருதப்பட்டவை பண்பாடு என்னும் வடிவம் பெறுகிறது. இழிவு என்று கருதப்பட்டவை பண்பாட்டு வளையத்தில் இருந்து விலக்கி வைக்கப்பெறுகிறது. இந்த உயர்வும் இழிவும் விலக்கி வைக்கப்படுவதால் உருவாகும் இடைவெளி தான் தொடர்ந்து இந்திய மதவாதிகள் வியாபாரம் செய்யும் சந்தைக் களமாக இருந்து வருகிறது. அதில் இருந்துதான் காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் பண்பாடு தன்னை தானே தகவமைத்துக்கொள்கிறது. தமிழ்ப் பண்பாட்டை அரசியல் நடவடிக்கை சார்ந்து மீள்கட்டமைப்பு செய்த வரலாற்றை இரண்டு நிலைகளில் வகைப்படுத்திக் காண முடியும். ஒன்று சோழ மன்னன் ராஜராஜனின் நடவடிக்கை. இரண்டு தந்தை பெரியாரின் நடவடிக்கை. ராஜராஜனின் காலம் முதல் தந்தை பெரியார் காலம் வரை ஏறக்குறை ஒன்பது நூற்றாண்டு காலப்பரப்பில் தமிழ்ப்பண்பாடு குறித்து காத்திரமான செயல்பாடுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அதுமாதிரியான செயல்பாடுகளைப் பொதுத்தளத்தில் ஏழாமல் பார்த்துக்கொண்ட தந்திரமும், சூழ்ச்சியும் தான் இன்று வைதீகத்தின் வெற்றியாக அல்லது வளர்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. 

தமிழ்ப் பண்பாட்டு நிர்மானச் செயல்பாட்டிற்கான முதல் காலச் சூழலில் தமிழ்ப் பண்பாட்டை வைதீகம் தான் வடிவமைத்தது. வைதீகத்தின் பிடியில் சோழப் பேரரசு முழுவதுமாக சிக்குண்டு இருந்தாலும் மற்ற மன்னர்களை விட ராஜராஜ சோழனை வைதீகம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. வைதீகத்திற்கு ராஜராஜன் கொடுத்த ஒத்துழைப்பிற்காகவே அவனை வைதீக வரலாற்றாசிரியர்கள் சோழ பேரரசுக்கு அடையாளமாக்கினார்கள். அந்தவகையில் வைதீக அளவுகோலின்படி ராஜராஜனின் முப்பதாண்டு ஆட்சிக்காலம் தான் சோழ மன்னர்களின் வரலாற்றில் முக்கியம் பெறுகிறது. ஆட்சிமுறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகியவற்றில் ஏற்பட்ட எழுச்சிகள் ராஜராஜனின் காலத்தவை என்பதில் உண்மைகள் இல்லாமலும் இல்லை. முதன்முதலாக நிலங்கள் அளவிடப்பட்டு வரி விதிக்கப்பட்டது, கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் அளவு நிரந்தரமாக பட்டயச் சாசனங்கள் வழி உறுதிப்படுத்தப்பட்டது முதலியவையும் ராஜராஜனுக்கு உரியவை. வைதீகம் அபகரித்துக்கொண்ட நிலங்களை தொடர்ந்து தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்குத்தான் ‘கோயில்சொத்து குலநாசம்’, ‘கோ தானம் குல விருத்தி’ என்றெல்லாம் நிறுவனமாக்கபட்ட பண்பாட்டு வரைமுறைகள் உருவாக்கப்பட்டன. சோழர்கள் குறிப்பாக ராஜராஜனும் ராஜேந்திரனும் படையெடுப்புகள் மூலமாக ஆண்டை நாடுகளில் நுழைந்த போதெல்லாம் வெற்றியின் சின்னங்களாக கோயில்கள் தான் அந்தந்த நாடுகளில் எழுப்பப்பட்டன. உள்நாட்டிலும் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் கோயில்களாகவே தான் உருவாயின. அப்படி உருவாக்கப்பட்ட கோயில்களே இன்று தமிழர்களின் பண்பாடாக, கலை வடிவமாக திரும்பத் திரும்பக் காட்டப்படுகின்றன. இன்றைக்கும் கூட தமிழர்களின் பண்பாட்டுக் காவல் நிலையங்களாக கோயில்களே இருந்துவருகின்றன. 

தமிழகப் பண்பாட்டுக் கலை வரலாற்றில் முக்கியச் சாதனையாக, பேசு பொருளாக இன்றுவரை இருந்துவருகிற ராஜராஜனின் தஞ்சை பெருங்கோயிலை தமிழர்களின் கலை பண்பாட்டு வடிவமாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். தமிழ்ச் சைவ மெய்யியல் அறிஞர்களான அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்களையெல்லாம் நாம் வசதியாக மறந்துவிட்டு, ஆரிய சித்தாந்தத்தோடு முழுவதுமாகச் சமரசம் செய்துகொண்ட, கௌனியர் கோத்திரத்தைச் சார்ந்த ஞானசம்பந்தரின் வழிபாட்டு மரபான லகுலீச பாசுபதரின் கொள்கைப்படி கட்டப்பட்ட தஞ்சைப் பெருங்கோயிலை தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நமது பொதுப்புத்தி வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான் நம் காலத்தின் கேலிக் கூத்து. தஞ்சைப் பெருங்கோயிலை நமக்கான பண்பாட்டு அடையாளமாக ஏற்கும் போது இந்த இடத்தில் இன்னொரு கேள்வியையும் நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதாவது ஆரியச் சித்தாந்தத்தின் மூலம் உருவாக்கம் பெற்ற நிறுவப்பட்ட கடவுள்களுக்காக, தமிழ் நெறிக்கு மாறான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்கள் எப்படி தமிழர்களுக்கான பண்பாட்டு அடையாளமாக இருக்கமுடியும்? என்பதுதான் அது. இது ஒன்றும் புதிய கேள்வி அல்;ல. பல சூழ்நிலைகளில் சுதந்திரமான சிந்தனாவாதிகள் கேட்டு வைத்ததுதான். ஞானசம்பந்தருக்கும் நாவுக்காரசருக்கும் கொள்கை ரீதியான முரண்பாட்டை அவர்களின் பதிகங்களிலே காண்கிறோம். ஞானசம்பந்தர் தனது பதிகங்களின் பல இடங்களில் கௌனியர் கோன் என்று தனது குலப்பெருமை பேசுகிறார். நாவுக்கரசர் சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்கள் என்று கண்டிக்கிறார். அரச அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்வது ஞானசம்பந்தருக்கு எளிதாக இருக்க, நாவுக்கரருக்கு அது கைநழுவும் போதுதான் அவர் நாம் யாருக்கும் குடியல்லோம் என்கிறார். இதுதான் ஆன்மிகத் தளத்தில் இருந்துகொண்டு சுத்தத்தமிழன் பண்பாட்டு அடிமைத்தனத்திற்கு எதிராக எழும்பிய முதல் குரல். ஞானசம்பந்தர் நீர் பண்பாட்டை வெறுக்கிறார். நாவுக்கரசர் நீர் பண்பாட்டை துதிக்கிறார். காரணம் நீர் பண்பாடு தமிழ் மக்களின் வழிபாட்டு வடிவம். சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரத்தில் நீர் வழிபாட்டுக்குரியது என்னும் பதிவுகள் ஏராளமாக இருக்கின்றன. ‘நீரின்றி அமையாது உலகு என்பதற்கு தமிழ்ப்பண்பாடு இன்றி உலகம்’ என்ற ஒன்று இருந்துவிட முடியாது என்பதாகவும் நாம் பொருள்கொள்ள முடியும். அதுதான் வள்ளுவம். அடுத்தாக இரண்டாம் சூழ்நிலை கால கட்டம். இது நீண்ட பல நூற்றாண்டு இடைவெளிக்குப் பின் தோற்றம் பெறுகிறது. 

இந்திய விடுதலைப் போரில் வட இந்தியாவில் நிகழ்ந்த மொழிவழி அணி திரட்டலின் தேவையும் பங்கும் உணர்ந்துகொள்ளப்பட்ட பின் தமிழ்நாட்டிலும் அப்படியான ஒரு அணி திரட்டல் உருவாக்கப்படுகிறது. பின்னாளில் அது தனித்தமிழ் இயக்கமாக உருப்பெறுகிறது என்பதெல்லாம் நாம் அறிந்த வரலாறு. இந்த நிலையில் தமிழ் நாட்டில் இரண்டு விதமான சிந்தனை களங்கள் உருக்கொள்கின்றன. ஒன்று மொழியை சுத்தம் செய்தால் போதும் சுத்தமான சமூகத்தை உருவாக்கமுடியும் என்னும் சிந்தனை. இதை நம்பி முன்னெடுத்தவர்கள் மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், சி.இலக்குவனார் போன்றவர்கள். மற்றொன்று சமூகத்தை சுத்தம் செய்தால் போதும் மொழி சுத்தமாகிவிடும் என்னும் சிந்தனை. இதை தந்தை பெரியாரிடம் காணமுடியும். எனக்குத் தெரிந்தவரை பெரியாரின் களப்பணியில் அவர் அதிகமாக கவனம் செலுத்தியது மொழித்தூய்மையை விட சமூகத்தூய்மைக்குத் தான். பின்னாளில் தனித்தமிழ் இயக்கம் வலியுறுத்திய மொழிதூய்மையும் தந்தை பெரியார் முன்வைத்த சுயமரியாதையும் ஒன்று சேரும் புள்ளியில் பாரதிதாசன் என்ற ஆளுமை உருவாக்கம் பெறுகிறது. இந்த இரண்டையும் ஒன்றிணைத்த பெருமை அறிஞர் அண்ணாவைச் சாரும். பெரியார் முன்வைத்த சுயமரியாதை என்பது சங்ககால தமிழ்ச் சமூகம் கொண்டாடிய வீரயுகப் பண்பாட்டின் புதுவடிவம். பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்து பெரியாருக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்த போதிலும், சங்க இலக்கியங்களில் காணலாகும் வீர உணர்வும், ‘மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்’ என்னும் பிற்கால ஓளவையின் மான உணர்வும் பெரியாரின் சுரிமரியாதைக்குள் பிரதிபலித்தது. தனித்தமிழ் இயக்கவாதிகள் தமிழருக்கான பண்பாடாக வைதீகத்தின் கறைபடியாத முற்காலச் சோழர்கள் கட்டமைத்த விருந்தோம்பலை முன்வைத்த போது, தந்தை பெரியார் இன்னும் பலபடி மேலே சென்று சுயமரியாதையை முன்வைத்து ‘மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு’ என்றார். இது பெரியார் காலத்தில் இருந்த சூழலுக்கு தக்கவாறு தேர்ந்து அவர் தேர்ந்து கொண்ட பாதை. இன்றைக்குக் காலமும் சூழலும் மாறியிருக்கிறது. அதன் வழி பண்பாடும் சிதைவுக்குள்ளாகி வருகிறது. மாக்டொனால்ட் உணவகத்திற்குள் நுழைந்து உண்டு சுவைத்து வெளியில் வரும் போது இருக்கும் பெருமிதம் முனியாண்டி விலாஸ_க்குள் நுழைந்து வெளிவரும் போது நமக்குள் இருக்கக் கூடாது என்ற எண்ணம் உருவாக்கப்பட்டுவிட்டது. மிகப்பெரிய ஷாபிங் மால்களில் வாங்கும் பொருள்களுக்கு லேபில் விலையை கொடுக்கும் நாம் சாலையோரக் கடைகளில் பேரம் பேசும் வணிக நடவடிக்கையில் தான் இன்றைய உயர்வும் தாழ்வும் திணிக்கப்படுகிறது. அதாவது ராஜராஜ சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட பண்பாடு மானுடப் பிறப்பில் கற்பிக்கப்பட்ட உயர்வு தாழ்வின் அடிப்படையில் உருவாக்கம் பெற்றது. இன்று, நுகரும் பொருளை வைத்தும் அது உற்பத்தி செய்யப்படும் இடம் குறித்தும் உயர்வு தாழ்வு உருவாக்கப்படுகிறது. அந்த உயர்வுக்கும் தாழ்வுக்குமான இடைவெளியில் தன்னை நிலைநிறுத்தும் பெருவணிகச் சந்தைதான் பிராந்தியப் பண்பாடுகளைச் சிதைக்கிறது. உதாரணமாக, தொற்றுநோய்க்கான கிருமி நாசினியாகவும் தமிழ்ப் பெண்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்த மஞ்சள் பூசிக்கொள்ளும் பழக்கம் இன்றைக்கு ஏறக்குறைய முடிவுக்கு வந்திருக்கிறது. மஞ்சள் பூசிய பெண்ணை சக பெண்ணே கேலி செய்து அவருக்கு கார்ப்பரேட் கம்பெனிகளின் முகப்பூச்சுக்களைப் பரிந்துரைக்கும் நிலையை கல்லூரி பெண்களிடம் காணமுடிகிறது. ஒவ்வொரு தனித்தனிக் குழந்தைகளையும் குறிவைத்து உருவாக்கப்பட்ட விளையாட்டுப் பொருள்கள் சந்தைக்கு வந்த பின்பு கூடி விளையாடும் விளையாட்டுகளை நாம் இழந்திருக்கிறோம். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. சர்வதேசிய ஒற்றைப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்ட அல்லது உலகமயமாக்கலுக்கு தன் கதவுகளைத் திறந்து விட்ட எல்லா நாடுகளிலும் இன்றைக்கு இதுதான் விதி. இதை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்பது தான் நமக்கான சவால். 

காலத்திற்கேற்றவாறு தன்னைத் தகவமைத்துக்கொண்டே வந்திருக்கும் தமிழ்ச் சமூகம் இனியும் தம்மை தகவமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது எவ்வாறு நிகழவேண்டும் என்கிற கருத்தியல் தளத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கறது. அதற்கான சமீபத்திய உதாரணம் தான் வான்காரி மாத்தாய். 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் கென்யாவின் மத்திய மலைப்பகுதிக் கிராமமான இகித்தேயில் வான்காரி மாத்தாய் பிறந்தபோது அது பிரிட்டிஸ் கென்யா. அவர் பிறந்த ஆண்டு வாக்கில் பிரிட்டிஸாரின் புதிய பொருளாதாரக் கொள்கை அங்கு அமலில் இருந்தது. அப்போது மாத்தாயின் குலப்பிரிவான கிகியுயு உள்ளிட்ட அனைத்து கென்ய குலப்பிரிவினர்களும் அவர்களுடைய அனைத்து பண்பாட்டையும் இழந்து கிறித்தவ மத அடையாளங்களோடு பண்ணை அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள்;. குடும்பங்களில் பிளவுகள் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. விபரச்சாரமும் பால்வினை நோய்களும் பெருகுகின்றன. வெறும் முப்பதாண்டுகளுக்குள் தாய்மொழியை மறந்து போகிற அளவுக்கு அங்கு பண்பாட்டு சீரழிவு நடந்தது. கூடவே கென்யாவுக்கும் உகாண்டவுக்கும் இடையில் ரயில்பாதை அமைப்பதற்காக 1890 இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்பட்ட அடிமைகள் இந்தியாவின் உணவுப் பழக்கத்தை கென்யர்களிடம் புகுத்தினார்கள். குறிப்பாக உப்பு, எண்ணெய், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றை கென்யர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். பின்னாளில் கென்யர்களுக்கு ஊட்டச்சத்து குறைந்ததிற்கும் அதனால் உருவான நோய்க்கும் இந்திய உணவு முறை தான் காரணம் எனக் கூறி; வன்மையாக கண்டித்தார் வான்காரி மாத்தாய். 

1960 இல் அமெரிக்க அதிபர் கென்னடி கொண்டு வந்த உதவித் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்று படிக்க மாத்தாய்க்கு வாய்ப்பு கிடைக்கிறது. அமெரிக்க வாழ்க்கை அவரை புரட்டிப் போடுகிறது. 1963 இல் கென்யா விடுதலை பெறுகிறது. 1965 இல் படிப்பை முடித்து தாய் மண்ணுக்குத் திரும்புகிறார். தாய்மண் தனது எல்லா முகங்களையும் இழந்து கிடக்கிறது. 1971 இல் முனைவர் பட்டம் பெற்ற மாத்தாய் பேராசிரியராக சிறிது காலம் பணியாற்றுகிறார். பின் அரசியலில் தளத்தில் செயல்பட்டு வெற்றி பெறுகிறார். விடுதலை பெற்ற கென்யாவில் இழந்து போன பண்பாட்டை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு மரங்களை நடுகிறார். ஒரு கட்டத்தில் ‘மானுட இனமே மதங்களையும் மனிதர்களையும் நம்பாதீர்கள். அவர்களுக்குப் போதிய அறுவடை இல்லையென்றால் கைவிட்டுவிடுவார்கள். காடுகளை நம்புங்கள். அவை ஒருபோதும் நம்மை கைவிடாது’ என்று தான் செல்லும் இடங்களில் எல்லாம் பேசுகிறார். எல்லாவற்றையும் இழந்திருந்த மக்கள் அவர் வார்த்தைகளை நம்புகிறார்கள். தனது பணியில் அந்தந்த பிராந்தியங்களின் பெண்களையும் இணைத்துக்கொண்டு மிகக் குறுகிய காலத்திற்குள் பல லட்சம் மரங்களை நடவு செய்து கென்யா முழுமையும் பசுமையைக் கொண்டுவருகிறார். பசுமை, தவறிப்போயிருந்த பருவ மழையை இழுந்து வருகிறது. மழை புல்வெளிகளை உருவாக்குகிறது. புல்வெளி உகாண்டாவிற்கும் பக்கத்து தேசத்திற்கும் இடம் பெயர்ந்திருந்த விலங்குகளையும் பறவைகளையும் மீளக் கொண்டு வருகிறது. அந்த மண்ணுக்கேயுரிய கலப்படமற்ற வேளாண்மை முறை நடைமுறைக்கு வருகிறது. மறக்கடிக்கப்பட்ட சடங்குகளையும் விழாக்களையும் கொண்டாடுகிறார்கள். அதன் வழி பண்பாட்டை மீண்டும் கட்டியெழுப்பிய வான்காரி மாத்தாய் ஐ.நாவின் கவனத்தை பெறுகிறார். விளைவு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கிறது. 2011இல் மரணமடைகிறார். தனியொரு மனுசி மரங்களை மட்டுமே நம்பி மிகப்பெரிய ஆச்சரியத்தை நம் கண்முன்னாலேயே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். இப்படி நமக்கு முன்னாள் இருக்கும் பண்பாட்டை மீட்டெடுத்தல் குறித்த உதாரணங்கள் ஏராளம். நமது இலக்கு எது என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். இனியேனும் பயணத்தைத் தொடங்குவோம்.