Thursday 31 August 2017

ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகள் - சில புரிதல்கள்



ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகள் - சில புரிதல்கள்
ஞா.குருசாமி
தமிழின் மிக முக்கியக் கவிஞர்களுள் ஒருவராக அடையாளம் காட்டப்பெறாத, அதிபரிசுத்தமான இலக்கியவாதிகள் அவ்வப்போது தயாரிக்கும் அனைத்து தகுதிப் பட்டியலிலும் தவறாது இடம் பெறாமல் இருந்து வருகிற ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகள் கூர்மையான ஆயுதங்களைச் சுமந்துகொண்டிருப்பவை. ஆயுதம் வைத்திருந்தலும் ஆயுதமாகவே வாழ்ந்தாலும் அது தரும் அச்சத்தில் விலகிநின்று வீரம் பேசும் அதிபரிசுத்த இலக்கியவாதிகள் ஆதவன் தீட்சண்யாவை தவிர்த்துவிட்டுப் பேசுவது ஆச்சரியமில்லை தான். அது அவர்களது இயல்பு. அது போலவே எதையும் கண்டுகொள்ளாமல் சுட்டெரித்துக்கொண்டிருப்பது ஆதவனின் இயல்பு.
சமுதாயச் செயல்பாட்டாளராக, பத்திரிகையாளராகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகள் சமகாலத்தின் தேவைகளில் முக்கியமானவை. அவை மக்களின் வலிகளை, வரலாற்றை, தியாகத்தை, சுபாவத்தை, பேதத்தை, காலந்தோறும் நிகழ்த்தப்பட்ட சதிகளை, துரோகங்களை உள்ளபடியை பேசுவதில் கவனத்திற்குரியனவையாய் நிற்கின்றன.
‘அம்பலம்’ என்னும் கவிதை தேசத்தைப் பற்றி பேசுகிறது. தேச அபிமானிகளின் உண்மை மனத்தை வெளிச்சத்திற்கு இழுத்துவருகிறது. அதாவது, தேசம் இங்கு தேசமாக இல்லை எனச் சொல்லி தேசத்தைத் தேசமாகப் புரிந்துகொண்டிருக்கும் அபத்தத்தைத் தோலுரிக்கிறது. தேசம் என்று பேசப்படுவதெல்லாம் சுகபோகிகளின் சொத்துக்கள் தான். அவர்களின் சொத்துக்களைத்தான் அவர்கள் தேசம் என்று கொண்டாடுகிறார்கள். நமது தேசத்தைப் பாதுகாப்போம் என்று சொல்வதன் பொருள் நமது சொத்துக்களைப் பாதுகாப்போம் என்பது தான் என்கிற சிந்தனையைத் தந்து நிற்கிறது. இதில் இடம் பெறும் ‘சொத்துக்களற்ற எனக்கு சொத்துக்கள் உள்ளோர் கொண்டாடும் தேசத்திற்கு விசுவாசமாய் இருக்க முடியாது’ என்பதான கூற்று நியாயமானது.
‘இன்னும் இருக்கும் சுவர்களின் பொருட்டு’ கவிதை சுவர்கள் பற்றிய புரிதலை விசாலமாக்குகிறது. சுவர்கள் மனிதர்களைக் காப்பதற்காகவே என்று காலங்காலமாக நம்பப்பட்டு வருவது மாறி இப்பொழுது மனிதர்கள் சுவர்களைக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்னும் செய்தி மனித மனங்களில் புரையோடியிருக்கும் சாதிய வன்மத்தின் கோரத்தைப் புலப்படுத்துகிறது. சுவர்களால் பிரிக்கப்பட்டிக்கும் தேசத்தில், சுவர்களே நிறைந்திருக்கும் தேசத்தில் தேச ஒற்றுமை குறித்துப் பேசுகிறவர்களின் இருப்பைச் சந்தேகிக்கச் சொல்லும் தொனி கவிதையில் குறிப்பாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
‘புகைப்படத்தின் கொலையாளி அல்லது கொலையாளியின் புகைப்படம்’ என்னும் கவிதை குற்றவாளிகளுக்கான தேசமாக ஒன்று உருவாக்கப்பட்டுக் கொண்டு இருப்பதைக் கூறுகிறது. தேசத்தின் பிதாவாக இருப்பவரைக் கொன்றாலும் கூட, கொல்லப்பட்டவரும் அவருக்கு ஆதரவானவர்களும் மீண்டும் மீண்டும் கொல்லப்படுகிறார்கள். கொன்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள் என்பதைச் சொல்கிறது. என்ன பிரச்சினைகள் நடத்தாலும் எல்லாவற்றுக்கும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பதிலோடு காத்துக்கொண்டிருக்கும் அரசின் கையாலாகாத் தனத்தையும் இக்கவிதையில் தனக்கேயுரிய பாணியில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆதவன் தீட்சண்யா.
‘ரியல் எஸ்டேட் பிரச்சினை’ நிலத்தின் வழி ஊடாடும் சாதியத்தை முன்வைக்கிறது. நிலங்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கும் போது சேரி மக்களின் நிலம், சேரிகயை ஒட்டிய நிலம், சேரி மக்களின் தலைவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டிக்கும் நிலம் ஆகியன விலையேற்றம் பெறாமல் இருப்பதற்கான காரணம் சாதி அன்றி வேறென்ன என்பதை வெளிப்படுத்துகிறது. ‘இப்பொழுதெல்லாம் சாதி பார்க்கப்படுவதில்லை’ என்போருக்கான பதிலைக் கொண்டிருக்கிறது இக்கவிதை.
‘முகவரி’ என்னும் கவிதை ஊரின் இரண்டு முகங்களைப் பற்றியது. சேரிக்கான உலகம் என்னுடையது. சேரிக்கு வெளியிலிருக்கும் உலகம் நான் காணக் கூடாதது என்று நீங்கள் கருதியது என்னும் செய்தியைச் சொல்லுகிறது. இதன்வழி யார் எதைப் பார்க்கவேண்டும்? யார் எதை உடுத்த வேண்டும்? யார் எதை உண்ண வேண்டும் என்று வரையறுத்ததின் மீதும் சாதி வாழ்ந்து கொண்டிருக்கிறது, சாதியைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளே வரையறைகள் என்னும் கருத்தியலை இக்கவிதை வெளிப்படுத்துகிறது.
‘அபகாரியின் சரிதம்’ பார்ப்பனர்களை அகதிகளாய் சித்திரித்துள்ளது. அகதிகளாய் வந்தவர்கள் அகதிக்கான நேர்மையோடு நடந்துகொள்ளவில்லை என்று குற்றம் சுமத்துகிறது. பார்ப்பனர்களின் தந்திரங்களையும் வக்கிரப்புத்தியையும் துரோகத்தால் வீழ்த்தும் பிறவிக்குணத்தையும் சுட்டிக்காட்டிவிட்டு அவர்களிடம் பலியாகிப் போன மக்களின் சோக வரலாற்றை துக்கமொழியில் எடுத்துரைக்கிறது. அபகரித்து சொந்தமாக்கி தனதெனப் பெருமை பேசும் இழிகுணத்தைக் காரித் துப்புவதும் கவிதைக்குள் பொதிந்து கிடக்கிறது.
‘பாரதமாதா கீ ஜே’ என்னும் கவிதை விஞ்ஞானத்தின் ஊடேயும் நாறிக் கிடக்கும் சாதியத்தைப் பேசுகிறது. வியாழன் கோளில் சந்தித்துக்கொள்ளும் இரண்டு நபர்களில் ஒருவரின் சாதியை அறிந்துகொண்ட மற்றவர், அவர் பேசுவதற்கு ஏதுமற்றவர்போல் விலகிச் செல்லும் நுவல்பொருளைக் கொண்டுள்ள இது, பாரதமாதாவின் தவப்புதல்வர்கள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியானவர்கள். வேற்றுக்கிரகத்திலும் சாதியற்ற மனிதராக வாழ முயற்சிக்காதவர்கள் என்பதை முன்வைக்கிறது.
‘கடவுளும் கந்தசாமி பறையனும்’ கவிதை கடவுளும் கந்தசாமி பறையரும் உரையாடுவதாக அமைந்துள்ளது. இக்கவிதையின் போக்கு கோவிலுக்குள் நடக்கும் அக்கிரமங்களைப் பொறுக்கமாட்டாமல் மூர்ச்சையாகிக் கிடந்த கடவுள், கந்தசாமி பறையரின் பாதம் பட்டு சுயநினைவைப் பெற்றதாக அமைந்திருக்கிறது. பறையரின் பாதம் பட்டால் தான் கடவுளுக்கே புத்திவரும், வருகிறது என்பதான மொழிதலை இக்கவிதையில் காணமுடிகிறது.
‘பிரகடனம்’ என்னும் கவிதை, நீண்ட வரலாற்றை நியாயம் சார்ந்த தருக்கத்தோடு முன்வைக்கிறது. சுயத்தைப் பாடுகிறது. முன்னோர்களின் சமரசமற்ற போராட்டத்தை அதன் வீரியத்தோடு எடுத்தியம்புகிறது. தேசத்தின் வரலாறாக எழுதப்பட்டதில் எங்கள் ரத்தமும் உள்ளது என்று வரலாற்றுக்கு உரிமை கோருகிறது. இக்கவிதைகளில் ஆதவன் தீட்சண்யா பயன்படுத்தியிருக்கும் கவிதை மொழி, தனித்துவமானதாகவும் கனல் நிரப்பப்பட்ட கலனாகவும் புத்தியுள்ளோர் ஆமோதிக்கும் பகடியாகவும் இருக்கிறது. தேசம், ஒற்றுமை, ஒழுக்கம், நேர்மை, மேன்மை என எல்லாவற்றின் மீதும் கட்டமைக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி அவமானப்படுத்துகிறது. அவமானத்தை உரியவர்களுக்குக் கடத்துகிறது. இவ்விதமான மொழியில் அமைவது கவிதை இல்லை என்று சொல்வோர்களுக்கு கவிதை குறித்த புரிதலின் போதாமையைக் காட்டி நிற்கிறது.

Tuesday 22 August 2017

தலித் நில அபகரிப்பும் சர்வே கோப்புகளைத் தேடியலையும் ரியல் எஸ்டேட் அதிபர்களும்

தலித் நில அபகரிப்பும் சர்வே கோப்புகளைத் தேடியலையும் ரியல் எஸ்டேட் அதிபர்களும்
ஞா.குருசாமி

அதிகாரத்தை நோக்கிய பயணம் குருதி வாடையுடையது. அதன் வழி நெடுக மோசடிகளைக் காணமுடியும். பசி உணர்வைப் போல மிக எதார்த்தமான ஒன்றாக அதிகாரத்திற்கான இயங்கியல் வௌ;வேறு வடிவங்களில் மனிதனுக்குள் இருந்து வந்திருக்கிறது. சமூக அதிகாரம் குடும்ப அதிகாரம் எனப்பட்டவை ஈர்ப்பு மையங்களாக தகவமைக்கப்பட்டு அதைக் கைப்பற்ற மேற்கொண்ட நடவடிக்கைகளை வரலாறு எனச் சொல்லி நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள். சமூக அதிகாரத்தின் உற்பத்தி களமாக நிலமும், குடும்ப அதிகாரத்தின் உற்பத்திக் களமாக பெண்ணும் இருப்பதை நாம் அவதானிக்கமுடியும். இன்று நிலங்களை வாங்கிக் குவிக்கும் வினைகளுக்குப் பின்னால் உருவாகும் அதிகார மையம் தலித்துகளுக்கான பழைய தடைகளைத் திடப்படுத்துவதாகவோ, வீரியமுடைய புதிய தடையை ஏற்படுத்துவதாகவோ அமையக் கூடும்.
நிலவுடைமையிலான காலம் தொடங்கி இன்று வரை சமூக அதிகாரம் நிலவுடைமையாளர்களிடம் இருந்து வருவதற்குக் காரணம் அவர்களின் நில அனுபோகம் தான். நிலம் × நிலமின்மை என்னும் முரண் கருத்துருவாக்கங்கள் இயல்பாகவே ஆண்டான் × அடிமை என்பதை உடன் உருவாக்கிக் கொள்கிறது. இது தொடர்ந்து நிலமற்றவர்கள் நிலம் உள்ளவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி நிலமற்றவர்களை மௌனியாக்கி வருகிறது. தலித்துகளுக்கு நிலவுடைமையாளர்களின் நேரடியான செயல்பாடுகளினால் ஏற்படும் கொடுமைகளை விட அவர்கள் மௌனியாக்கப்படுவதன் மூலம் ஏற்படும் கொடுமைகள் வலிகள் நிரம்பியவை. இது சத்தமில்லமால் சாகடிக்கும் தன்மையை ஒத்ததாகும்.
கடந்த நாற்பது ஆண்டுகளில் சூடு பிடித்த ரியல் எஸ்டேட் தொழில் இன்றைக்கு மிகுந்த வருமானம் ஈட்டும் தொழிலாக மாறியிருக்கிறது. உள்;ர் தொலைக்காட்சி சேனல்களின் விளம்பரத் தீனியாக ரியல் எஸ்டேட் விளம்பரங்களே வலம் வருகின்றன. ரியல் எஸ்டேட் அதிபர்கள் சிலரும் தொலைக்காட்சி சேனலை நடத்துகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அதிகாரி, வட்டாச்சியர், சார்பதிவாளர், பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து எழுத்தர் என ஒரு கூட்டமே சத்தமில்லாமல் வேலை செய்து கொண்டு இருக்கிறது. அதற்காக லட்சங்கள் கைமாறுகின்றன. நிலங்களின் விற்பனை பரப்பு அரசுப்பணியில் இருக்கும் நடுத்தர மக்களை நோக்கியும், கொள்முதல் பரப்பு தலித்துகளையும் சிறுநிலவுடைமையாளர்களை நோக்கியுமே விரிகிறது. மாநில, மாவட்ட நிர்வாகங்களில,; பள்ளி, கல்லூரிகளில் புதிதாக பணி வாய்ப்;புப் பெற்ற, பணி செய்து கொண்டிருக்கிறவர்களின் தொலைபேசி எண்கள், பணிபுரியும் இடம், பெறுகின்ற சம்பள விபரம் ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு உரியவரோடு தொடர்பு கொள்கிறார்கள். மதி மயங்கப் பேசி, இலவசமாகக் காரில் அழைத்துச் சென்று வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்து விற்பனையைச் செய்து வாழ்நாள் கடனாளியா மாற்றி விடுகிறார்கள். தலித்துகளின் நிலங்கள் கிராம நிர்வாக அரிகாரி மூலம் வட்டாச்சியருக்கு அடையாளம் காட்டப்படுகிறது. அடுத்த கட்ட வேலையை வட்டாச்சியர் பார்த்துக்கொள்கிறார். நிலத்தின் வரலாறு தலித்துகளுக்கு எதிரானதாக புனையப்பட்டு அவர்கள் துரத்தப்படுகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர்களின் பணபலத்திற்கும், ஆள்பலத்திற்கும், நீதிமன்றங்களின் இழுத்தடிப்புகளுக்கும் பயந்து தலித்துகள் தன்னுடைய நிலங்களை இழந்து வருகிறார்கள். மாவட்ட, மாநில இணைப்புச் சாலைகளை ஒட்டிய வீடுகளுக்கு இருக்கும் குறைந்த பட்ச நிரந்தரம் கூட தலித் குடியிருப்பு நிலங்களுக்கு இல்லாத நிலையை வலிந்து உருவாக்குகிறார்கள்.
தலித் குடியிருப்புகளை ஒட்டியுள்ள சாதி இந்துகளின் விளை நிலங்கள் மனையடி நிலங்களாக மாறி பல ஆண்டுகள் ஆகியும் விளையேற்றம் காணவில்லை. இது போதிய விற்பனையையும் எட்டவில்லை என்ற குற்றச்சாட்டு சாதி இந்துகளால் முன்வைக்கப்படுகிறது. தலித் குடியிருப்புகளை ஒட்டி தன் வீட்டை அமைத்துக்கொள்வதில் சாதி இந்துகள் விரும்புவதில்லை. இதனால் தலித்துகள் தானாகவே தங்கள் குடியிப்புகளை காலி செய்கின்ற அளவுக்கு தொல்லைகள் கொடுக்கப்படுகின்றன. மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மாடக்குளம் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியைச் சுற்றியிருந்த விளைநிலங்கள் சமீப காலம் வரை விளைபோகமால் இருந்து இப்பொழுது வேறு வழியின்றி தலித்துகளுக்கே விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து, தண்ணீர் வசதியுள்ள கிராமப்பகுதிகளில் தலித் குடியிருப்புகளை ஒட்டிய நிலங்களை வாங்கி வீட்டடி நிலங்களாக மாற்றுமுன் முதல் வேலையாக தலித் குடியிருப்புகளைப் பிரித்து தார்ச்சாலை அமைக்கிறார்கள். தீண்டாமைச் சுவர்கள் கண்ணுக்குத் தெரிகிற அளவுக்கு தீண்டாமை தார்ச்சாலைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்கிற நுட்பத்தைச் சாதி இந்துகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
இந்திராகாந்தி நினைவு குடியிருப்புத் திட்டம், பசுமை வீடுகள் திட்டம் முதலியவற்றினால் பயன்பெறும் தலித்துகள் தங்களது வீடுகளைக் கட்டி முடிப்பதற்குள் குறைந்தபட்சம் இரண்டு லட்சங்களுக்காவது கடனாளியாகிறார்கள். இதைத் தனியார் நிதி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு நிலவேட்டையில் இறங்குகின்றன. நிதியுதவி செய்வதாகக் கூறிக்கொண்டு தானே முன்வரும் நிதிநிறுவனங்கள் வீட்டுப் பட்டாவை வாங்கிக்கொண்டு நிதி வழங்குகின்றன. ஐந்து வருடத் தவனைக் காலத்தில் இரண்டு லட்சத்திற்கு இரண்டு லட்சம் வட்டி கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் தலித்துகள், கடனை அடைக்கமுடியாமல் இறுதியில் நிதிநிறுவனத்திடமே தங்கள் வீடுகளை விற்றுவிடுகின்ற அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்படி விற்கப்படும் வீடுகள் ஏலத்தின் மூலம் உள்;ர் சாதி இந்துகளுக்குக் கைமாறுகின்றன.
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இதுவரை சராசரியாக 12 வீடுகள் வரை அபகரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆண்டுதோறும் 800 இல் இருந்து 1200 ஹெக்டர் வரை அரசு பயன்பாட்டுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதில் வேளாண்மை நிலங்கள் 700 இல் இருந்து 1000 ஹெக்டர் வரையிலும், குடியிருப்பு நிலங்கள் 300 இல் இருந்து 500 ஹெக்டர் வரையிலும் கையகப்படுத்தப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புறம்போக்கு நிலங்கள் 200 இல் இருந்து 300 ஹெக்டர் வரை ஆண்டுதோறும் அரசுப் பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படுகின்றன. இதில் வேளாண்நிலங்களில் சராசரியாக 600.5 ஹெக்டர் நிலங்களும், குடியிருப்பு நிலங்கள் 175.25 ஹெக்டர் நிலங்களும் தலித் நிலங்களாக இருக்கின்றன. சாதி இந்துகளின் நிலங்களை விட தலித்துகளின் நிலங்களைக் கையகப்படுத்துவதில் அரசு எப்போதுமே தீவிர முனைப்பு காட்டுகிறது. இதற்குக் காரணம் என்னவெனில் நிலங்களைக் கையகப்படுத்தும் போது சாதி இந்துகளின் அளவுக்கு தலித்துகள் எதிர்வினை ஆற்றுவதில்லை. சிலபொழுது எதிர்வினை ஆற்றினாலும் தலித்துகளை எளிதாக சமரசம் செய்து விட முடிகிறது என்று வெளிப்படையாகவே அரசு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சிருக்கிறது. நான்குவழிச் சாலை அமைப்பதற்கு மட்டும் தமிழகத்தில் தலித்துகளின் வேளாண்மை நிலங்கள் சுமார் 380 ஹெக்டர் நிலங்களும், குடியிருப்பு நிலங்கள் சுமார் 120 ஹெக்டர் நிலங்களும் கையப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தலித் அல்லாதோரின்; வேளாண்மை, குடியிருப்பு நிலங்கள் இரண்டிலுமாக சுமார் 900 ஹெக்டர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஒப்பீட்டளவில் சாதி இந்துகளின் நிலங்களை விட தலித்துகளின் நிலங்கள் குறைவு என்றாலும் வாழ்க்கை தரம், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும் போது தலித்துகள் தங்கள் தகுதிக்கு அதிகமாகவே இழந்திருக்கிறார்கள். குடியிருப்பு நிலங்களை அபகரிக்க முடியாத சூழல்களை உருவாக்கி தலித்துகள் சுய வலிமையை கட்டமைக்கும் போது தான் கொள்ளையடித்தல், தீ வைத்தல் போன்றவை நிகழ்கின்றன. இதற்கு ஊடகக் கவனம் பெற்ற தர்மபுரி, மரக்காணம் கலவரங்கள் சமீபத்திய உதாரணங்கள். அக்கனாபுரம் காலனி போன்ற ஊடக்கக் கவனம் பெறாத கொள்ளையடிப்புகள் ஏராளம்.
ரியல் எஸ்டேட் அதிபர்களின் கொள்முதல் இலக்குகள் தலித் நிலங்களைப் பொறுத்த வரை 99 விழுக்காடு வேளாண்மை நிலங்களை நோக்கியதாகவே இருக்கிறது. சில கோடிகளை கையில் வைத்திருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் சமீன்தாரின் வாரிசுகளாவோ, வெளிநாடுகளில் தொழில் செய்யும் தமிழர்களின் எஜென்டுகளாகவோ, அரசியல்வாதிகளின் பினாமிகளாகவோ இருக்கிறார்கள். சர்வே கோப்புகளுக்காக நாள்தோறும் வட்டாச்சியர் அலுவலகம் ஒவ்வொன்றுக்கும் குறைந்த பட்சம் மூன்று கார்களாவது வந்து செல்வதாகக் கூறுகின்றனர். வருவாய் கிராமங்களின் எல்லைகள், நிலவுரிமையாளர்களின் பெயர்கள், அவர்களின் சாதிகள், வில்லங்க விபரங்கள், அரசின் விலை நிர்ணயம். சர்வே எண்கள் பற்றிய விவரங்கள் முதலியவற்றை வட்டாச்சியர் அலுவலகங்களை விட ரியல் எஸ்டேட் அலுவலகங்கள் கணினி மயமாக்கி நிர்வகித்து வருகின்றன. சர்வே கோப்புகளை வைத்துக் கொண்டு நிலங்களை சாலையை ஒட்டியுள்ளவை, கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளை ஒட்டியவை, நீர்வசதி மற்றும் செழிப்பானவை, மாநகராட்சி எல்லைக்குள் வருபவை, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் வருபவை, கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் வருபவை என்ற ஏழு பிரிவுகளாக வகைப்படுத்திக் கொள்கின்றனர். மேலும் அவற்றை வேளாண்மை செய்யப்படுபவை, தரிசு நிலங்கள், வேளாண்மைக்கு உதவாத உப்புநிலங்கள் என்றும் வகைப்படுத்துகின்றனர். மாநகராட்சி எல்லைக்குள் சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை ஒட்டிய வேளாண்மை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நிலங்கள் ~கிரேடு ஒன்| எனப் பெயரிடப்பட்டு உச்சபட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் வரும் உப்புநிலங்கள் ~கிரேடு செவன்| எனப் பெயரிடப்பட்டு சில ஆயிரங்களுக்குள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
குறிப்பிட்ட நபரின் நிலத்தைக் கொள்முதல் செய்வதற்கு முன்னால் அவரை சரிக்கட்டி இடைத்தரகராகச் செயல்படுவதற்கு தகுதியான நபரைத் தேர்வு செய்கின்றனர். நிலங்களை அபகரிப்பதில் இடைத்தரகர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. தலித் நிலங்களைப் பொறுத்தமட்டில் மாநகராட்சி எல்லைக்குள் வரும் நிலங்களைக் கொள்முதல் செய்வதற்கும், கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் வரும் நிலங்களைக் கொள்முதல் செய்வதற்கும் வேறுவேறு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். கிராம நிலக்கொள்முதலில் உரிமையாளருக்குச் சொல்லிவிடப்படுகிறது. அலுவலகத்திற்கு வரும் அவர்களிடம் தேநீர், குளிர்பான உபசரிப்போடு பேச்சுகள் தொடங்குகின்றன. சில நேரங்களில் ஆண்டுக் கணக்கில் கூட விட்டு விட்டு பேரங்கள் நடக்கின்றன. ஆசை வார்த்தைகளும் தேவையானால் பயமுறுத்தல்களும் செய்து நிலங்கள் வாங்கப்படுகின்றன. மாநகராட்சி எல்லைக்குள் வரும் தலித் நிலங்களை வாங்குவதற்கு உரிமையாளரின் வீட்டுக்கே சென்று விடுகின்றனர். பேரங்கள் நடக்கும் போது சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. பொறியியல் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகவும், குறிப்பிட்ட நிலவுடைமையாளர் அவர் விற்பனை செய்யவிருக்கும் நிலத்தில் எந்த இடத்தில் விரும்புகிறாரோ அதில் வீடு ஒன்றைக் கட்டிக் கொடுப்பதாகவும், அந்தப் பகுதிக்கு அவருடைய பெயர் வைப்பதாகவும் கூறி நிலம் வாங்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட் அதிபர்கள் பத்திரப் பதிவு நடைபெறும் வரை ஒருவித அணுகுமுறையும், பதிவு நடைபெற்ற பிறகு வேறொரு அணுகுமுறையையும் கையாளுகின்றனர். கல்வியறிவு முழுமையாக கிடைக்கப்பெறாத தலித்துகள் நிலவிற்பனை தொடர்பான சிறு நடவடிக்கைகளைக் கூட அறியாமல், சட்ட பாதுகாப்பு, வழிமுறைகளைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கின்ற காரணத்தினால் ரியல் எஸ்டேட் அதிபர்களின் வேலை மிகவும் சுலபமாக முடிந்து விடுகிறது. சில இடங்களில் தலித் பஞ்சாயத்து தலைவர்களே ரியல் எஸ்டேட் அதிபர்களின் தலித் நில அபகரிப்புக்கு உடந்தையாக இருக்கின்றனர். தலித்துகள் குடியிருப்பு நிலங்கள் வாங்குகிற போது பின்பற்றப்படும் நடைமுறைகள் விரிவானவை. ஊரின் கழிவுநீர் தேங்கும் இடம், சுடுகாடு, இருப்பதிலேயே பள்ளமான இடம் போன்றவைகளே தலித்துகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. சாதி இந்துக்களின் குடியிருப்புக்கு மத்தியில் தலித் வீடுகள் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
நிலங்களும் நிலங்கள் மூலமான உற்பத்திப் பொருளும் ஓரிடத்தில் குவியும் போது அது அதிகாரத்தை  உற்பத்தி செய்யும் தளமாக வினைப்படும். நிலங்களின் இழப்பு அதிகார இழப்பு என்பதை தலித்துகள் உணரவேண்டிய தேவையை இன்றைக்கு காலம் உருவாக்கிவிட்டிருக்கிறது. நில விற்பனை சாதி இந்துகளிடம் இருந்தாலும் அடுத்த கட்ட நகர்வுக்கான ஏற்பாட்டுச் சுழல்கள் எளிதாக உருவாகி விடுகின்றன அல்லது உருவாக்கப்படுகின்றன. தலித்துகளின் நிகழ்காலமே போராட்டத்திற்கு உரியதாக இருப்பதால் அடுத்த கட்ட நகர்வு சிக்கலானதாகவே இருக்கிறது. இனிவரும் காலங்களில் வேளாண்மை மூலமாக லாபம் ஈட்டல் சாத்தியமில்லாதது என்பதை சாதி இந்துக்கள் உணர்ந்து வேளாண்மையில் இருந்து விடுபட்டு சமீப காலமாக தொழில்துறைக்கு மாறி வருகிறார்கள். வேளாண் நிலங்களை விற்று தொழிலில் முதலீடு செய்கின்றனர் 2001 ஆம் ஆண்டில் சாதி இந்துகள் வேளாண்மையில் 43 விழுக்காட்டினரும் தொழில்துறையில் 27 விழுக்காட்டினரும் இருந்தனர். 2011 ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தின் படி வேளாண்மையில் 21 விழுக்காட்டினரும் தொழில்துறையில் 47 விழுக்காட்டினரும் இருந்துவருகின்றனர். தலித்துகள் 2001 ஆம் ஆண்டு வேளாண்மையில் 17 விழுக்காட்டினரும், தொழில்துறையில் 3 விழுக்காட்டினரும் இருக்க 2011 ஆம் ஆண்டு கணக்கின் படி வேளாண்மையில் 8 விழுக்காட்டினரும், தொழில்துறையில் 4.7 விழுக்காட்டினரும் இருந்து வருகின்றனர்.
வேளாண்நிலங்கள் பறிபோகும் நிலையில் சமூக அதிகாரத்தை நோக்கிய நகர்வுக்கு தலித்துகள் தொழில்துறைக்கு மாற வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக தொழில்துறைக்கு ஏதுவான சூழல்களை உருவாக்க வேண்டிய தேவையும் வினைப்பாடுகளும் நிறைய இருக்கின்றன. நிலம் - அரசுப்பணி – அதிகாரம் என்றிருந்த சாதி இந்துகளின் மனோபாவம் இன்று நிலம் - தொழில் - அதிகாரம் என மாறியிருக்கிறது. இட ஒதுக்கீட்டுப் பயனால் தலித்துகளின் கவனம் அரசுப்பணி மீது குவிந்திருக்கும் இன்றைய நிலையில் அவர்கள் நிலம் - தொழில் - அதிகாரம் என்பதிலும் கவனத்தைக் குவிப்பது அடுத்த கட்ட நகர்வுக்கு உதவும். அதற்கும் தலித்துகள் போராடத்தான் வேண்டியிருக்கிறது.

Wednesday 16 August 2017

நவீனத்துவப் பெருவெளியில் தமிழ் அடையாளத்தின் இருப்பும் எதிர்கோடலும்



 ஞா.குருசாமி

        அடையாளம் என்பதான ஒற்றைச்சொல் ஓர் இனம் பற்றிய பின்புலத்தில் பொருள் கொள்ளப்படுமானால் அது சராசரி பொருள் தரும் சொல்லாக இருக்கமுடியாது. ஓர் இனக்குழுவின்  அடையாளம் என்பது அவ்வினத்தின் சர்வதேச முகவரி ஆகும். எப்பொழுதுமே மனித இனங்களுக்கான அடையாளம் ஒற்றைத் தன்மை உடையதாக இருந்ததும் அல்ல. நிலையாக இருந்ததும் அல்ல. அது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு சூழலுக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்பினது. அதாவது குறிப்பிட்ட இனக்குழுவின் பண்பாட்டு நடவடிக்கைகளில் புறச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் போது அக்குழு தமக்கான இயங்குவெளிகளை மாற்றிக்கொள்ளும். இயங்குவெளிகள் மாறும்போது ஏற்கனவே இருக்கும் பண்பாடு மீட்டுருவாக்கம் பெறுவதும், புதிய பண்பாட்டை தமக்கேற்றவாறு தகவமைத்துக்கொள்வதும் வழக்கம். இவ்வாறான மாற்றம் உடனடியாக நிகழ்வதல்ல. அதற்கு சில நூற்றாண்டுகள் தேவைப்படும். இந்தப் பண்பாட்டு உள்மாற்றங்கள் மெல்ல மெல்ல வெளிப்பட்டு பின்னர் அதுவே அக்குழுவின் பொதுக் குணமாக முன்வைக்கப்பட்டு அடையாளமாக உருப்பெறும். சான்றாக மங்கோலியர்களின் அடையாள உருவாக்கத்தைக் கூறலாம்.
        உலக மக்கள் தொகையில் சுமார் 37 சதவீதம் உடைய மங்கோலியார்கள் ஆசியாவைத் தாண்டி ஒஷனியாவிலிலும் அமெரிக்காவிலும் பரவியிருக்கிறார்கள். அமெரிக்க இந்தியர்களின் மூதாதையர்கள் எனக் கருதப்படும் மங்கோலியர்கள் பெரிங் ஜலசந்தி வழியாக ஆசியாவில் இருந்து அமெரிக்காவிற்குக் குடியேறியவர்கள். பெரிங் ஜலசந்தி என்னும் நீர்வழிப் பாதை பனிக்கட்டியாக உருமாறி வழித்தடம் தடைபடும் போதெல்லாம் மங்கோலியர்களின் பண்பாட்டுத் தொடர்புகள் பூர்விகப் பூமியில் இருந்து துண்டிக்கப்பட்டன. நாளடைவில் அவர்களின் பண்பாடு தனித்துவமானதாக உருவெடுத்தது. இன்றைக்கு உலக மானிடவியலாளர்களால் ‘மஞ்சள் இனத்தவர்’ என அழைக்கப்படும் மங்கோலியர்களுக்கு ‘மஞ்சள்’ என்னும் நிறம் சார்ந்த அடையாளம் சர்வதேச அடையாளமாக மாறியிருக்கிறது. வெள்ளை, கறுப்பினத்தவர்களின் சர்வதேசிய இனவேறுபாட்டு பிரச்சினைகளில் இருந்து தம்மை முழுவதுமாக விலக்கிக்கொண்டுள்ள மங்கோலியர்கள், விளையாட்டுத் துறை முதற்கொண்டு அடையாளத்தை உருவாக்கிவிட்டனர். இன்றைக்கும் கூட ஒலிம்பிக்கில் மேற்குலக வீரர்களுக்கு நிகரான போட்டியாளர்கள் மங்கோலியர்கள் தான். அதோடு ஒலிம்பிக் கொடியில் உள்ள ‘மஞ்சள் வளையம்;’ எங்களைக் குறிக்கிறது என மங்கோலியர்கள் கருதுகிற அளவுக்கு அவர்களின் நிறம்சார் அடையாளம் மிக அழுத்தமாக உருக்கொண்டுவிட்டது.
அதேபோல் இன்றைய நவீனத் தொழில்நுட்ப உலகம் யூதர்களை ‘அறிவாளிகள’; என்னும் அடையாளத்தோடு தொடர்புடையவர்களாக முன்வைத்து வெற்றியும் பெற்றுவிட்டது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜிகர்பெர்க், கூகுல் நிறுவனர்கள் லாரிபேஜ், செர்கி பிரின், டெல் கம்பியூட்டர் நிறுவனர் மைக்கேல் டெல், மாக்ஸ் ஃபேக்டர், எஸ்ட்டீ லேடர், கால்வீன் க்ளெயின் போன்ற அலங்காரப்பொருள் உற்பத்தியாளர்கள், நியூயார்க் டைம்ஸ், யு.எஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் பத்திரிகையின் உரிமையாளர்கள், ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதலிய உலகின் முக்கியப் பிரபலங்கள் யூத மரபினர். உலகின் மிகப் பழைமையான இனங்களான மங்கோலியமும், யூதமும் தமக்கென அடையாளங்களை உருவாக்கி விட்டது. இப்படி இனம், மொழி, நிறம், உணவு, உடை, வாழ்விடம் முதலியவற்றைத் தனித்தனியாகவோ, கலவையாகவோ முன்வைத்து உருவாக்கப்படும் ஒவ்வொரு இனக்குழுவுக்குமான அடையாளங்கள் சர்வதேசிய அளவில் அவர்களின் அங்கீகாரமாக மாறியிருக்கின்ற சூழலில் தமிழர்களின் அடையாளம் குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது.
      நவீனச் சூழலில் ‘அடையாளம்’ என்பது முக்கியமான அரசியல் சார்ந்த ஒன்றாக மாறிப்போனதில் டார்வினிஸ்ட்டுகளின் பங்களிப்பு முதன்மையானது. இன்றளவும் அவர்கள் ஆரியச் சிந்தாந்தத்தை வலியுறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வலிமையுள்ளதே வாழத் தகுதியுடையது. வெள்ளை இனம் உயர்ந்தது என்றும் கறுப்பு, மஞ்சள் நிறம் தாழ்ந்தவை என்னும் பரப்புரையைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். இந்தக் கருத்தாடல்களுக்கு மங்கோலியர்களும் கறுப்பர்களும் தொடர்ந்து எதிர்வினையாற்றி வந்தார்கள்; வருகிறார்கள். அவர்களால் வெள்ளை இனக்கருத்தியலை வெற்றிகொள்ள முடியாவிட்டாலும் விடாமல் தொடர்ந்து மட்டம் தட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ‘வெள்ளை இன எதிர்ப்பு அரசியலில் நாங்கள் விளையாட்டைக் கூட ஓர் ஆயுதமாக முன்னெடுத்தோம’; எனக் கூறிய நெல்சன் மண்டேலாவின் கூற்று இவ்விடத்து இணைத்து நோக்கத்தக்கது. வெள்ளை இனம் அறிவுசார் துறையாகக் கருதிய யாவற்றிலும் மங்கோலியர்களும் கறுப்பர்களும் கால்பதித்து தாமும் அறிவாளிகள் என்பதை நிறுவிவிட்டார்கள். அவர்கள் அவர்களுக்கான தனித்த அடையாளத்தை முன்னெடுத்துப் பேணியதன் விளைவு தனிநாடுகளைப் பெற்று அதிகாரமிக்கவர்களாக மாறிப்போனார்கள். இன்றைக்கு உலக வல்லரசுகளாக இருக்கிற ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் அந்நியச் செலாவணியையும் தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாக மங்கோலியா விளங்குகிறது. தமக்கென நாடு இன்றி சிதறடிக்கப்பட்ட யூதர்கள் தனிநாடு பெற்றுவிட்டார்கள். இவையெல்லாம் ஆரிய அல்லது வெள்ளை இனச் சித்தாந்தத்திற்கு எதிரான அரசியலில் சாத்தியமானவை. தனிநாடு இருந்தாலே தனி அடையாள உருவாக்கம் சாத்தியப்படும் என்பதை உணர்ந்து தமிழருக்கென்று தனிநாடு கோரிய ஈழப்போரும் சூழ்ச்சிகளால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நிற்க.
      இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஏற்கனவே பன்னெடுங்காலமாக தனித்த அடையாளம் இருந்து வந்திருக்கிறது. அவை இயக்க ரீதியிலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. விடுதலைக்குப் பின்னும் அந்நிலை தொடர்ந்தது. இந்த அடையாளம்சார் இயக்கங்கள் 1950களின் பிற்பகுதியில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது முதல் சிக்கலைச் சந்தித்தன. இதில் திராவிடம் என்னும் பேரினம் துண்டுபோடப்பட்டு, துண்டுகளில் ஒன்று தமிழ்நாடாக மாறிப்போனது நமக்கெல்லாம் தெரிந்த வரலாறு. இரண்டாவது சிக்கலை 1990களில் சந்தித்தன. அப்போதைய ஆட்சியாளர்கள் உலகச்சந்தைக்கு இந்தியாவின் கதவைத் திறந்துவிட்டு இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் வெகுவாக உயரும் என நம்பினார்கள். ஆனால் இன்றைக்கு நடந்துகொண்டிருப்பது வேறு.
     இந்தியாவில் 1970 தொடங்கி 2000 ஆம் வரை ‘இராமர்’ என்னும் தொன்மமும், தமிழ்நாட்டில் ‘கண்ணகி’ என்னும் தொன்மமும் தேசிய மற்றும் உள்தேசிய அடையாளங்களாக உருவாக்கம் பெற்றன. ஆனால் சர்வதேசிய அரங்கில் இராமர் தொன்மத்திற்குக் கிடைத்த இடம் போல உள்தேசிய அரங்கில் கண்ணகி தொன்மத்திற்குக் கிடைக்கவில்லை. காரணம் திராவிடக் கட்சிகளில் ஏற்பட்ட பிளவும், தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு கண்ணகி குறித்த புரிதலில் இருந்த முரணும் தான். கூடவே மத்திய மாநில உறவிலான அரசியல் சூழலும் அதற்குச் சாதகமாக அமையவில்லை.
      தமிழ் அடையாள உருவாக்கத்தில் இந்திய விடுதலைக்கு முன்; ஆங்கிலேயர்கள் கூட முனைப்புக் காட்டி இருக்கின்றனர் என்பதும் வியப்பாக இருக்கிறது. எல்லீஸ் தம் பெயரை தமிழ்ப்படுத்திக்கொண்டதோடு மட்டுமல்லாமல் திருவள்ளுவர் உருவம் பொறித்த நாணயங்களையும் வெளியிட்டிருக்கிறார். பின்னர் இந்தத் திருவள்ளுவர் அடையாள முன்னெடுப்பு விடுதலைப் போராட்டம் தொடங்கியது முதல் தனித்தமிழ் இயக்கம் உருவான காலம் வரை நீண்ட தொய்வைச் சந்தித்தது. தொடர்ச்சியாக தமிழின் பொது அடையாளமாகத் திருவள்ளுவர் முன்னெடுக்கப்படாத நிலையில் மீண்டும் 2000க்குப் பிறகு இராமருக்கு நிகரான, அதேசமயம் திராவிடக் கருத்தியலுக்கு முரண்படாதது என்னும் நிலையில் திருவள்ளுவர் தொன்மம் முன்னெடுக்கப்பட்டது. கன்னியாகுமரியில் சிலை நிறுவுதல், உலகத் தமிழ்ச் சங்கங்களில் திருவள்ளுவர் படங்கள் இடம் பெறக் கோரிக்கை வைத்தல், அண்டை மாநிலத்தில் திருவள்ளுவர் சிலை திறத்தல், உலகச் செம்மொழி மாநாட்டு இலச்சினையில் திருவள்ளுவரையும் திருக்குறளையும் வைத்து உலகின் கவனத்தை அதில் குவியச்செய்தல் வரை அடையாள உருவாக்கம் நிகழ்ந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் உலக அரங்கில் தமிழுக்கான அல்லது தமிழர்களுக்கான அடையாள உருவாக்கத்தில் மு.கருணாநிதி என்கிற ஒற்றை மனிதரின் செயல்பாடுகள் சில அதிருப்திகளை உள்ளடக்கி இருந்தபோதிலும் முக்கியமானவை.
      இந்நிலையில் இன்று மேற்குலகின் உணவு, உடை, விளையாட்டு, பொழுதுபோக்கு, உள்கட்டமைப்பு, பாலியல் நடவடிக்கை முதலிய அனைத்தும் உயர்வானவையாக முன்வைக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் சூழலில் உலக முதலாளிகள் தங்கள் கருத்தியலுக்கும் வணிக நடவடிக்கைக்கும் வேறுபாடு இல்லாமல் நுட்பமாக விளம்பரங்களை உருவாக்கி திரும்பத்திரும்ப ஒலிபரப்பி அவர்களின் உற்பத்திப் பொருளுக்கு ஏங்கிக்கொண்டு இருப்பவர்களாக நுகர்வோர்களை வடிவமைக்கிறார்கள். இந்தப் போலியான மேட்டிமை வாழ்க்கைக்குப் பலியாகும் இனங்கள் தமக்கான அடையாளத்தை இழந்து நிற்கும் போது உலக முதலாளியம் தாம் உருவாக்கிய ஒற்றை அடையாளத்தைத் திணித்து தமக்கான சந்தையை உறுதிப்படுத்திக்கொள்கிறது. உலகமயமாக்கல் கொள்கை அமலில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் அந்நாட்டு இனக்குழுக்களின் பண்பாடு, மொழிசார் அடையாளங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன. உலகமயத்தின் நோக்கமே குழுமனப்பான்மையை உடைத்து பிராந்திய அடையாளங்களை அழிப்பதுவும் தான். அந்த வேலையை அது இன்றளவும் சரியாகவே செய்கிறது.
     மற்றொரு புறம் மொழிவழி அடையாளத்தை பாதுகாத்து வந்த கல்விப்புலங்களின் நோக்கமும் இன்று மாறிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் தமிழுக்கும் தமிழாசிரியருக்குமான இடம் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாலேயே தவிர்க்க முடியாததாகத் தொடர்கிறது. தமிழை ஒரு பாடமாக வைத்துக்கொள்வது பற்றி அந்தந்தக் கல்வி நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்னும் அரசாணை வருமெனில் அடுத்த நொடியை தமிழ் துரத்தியடிக்கப்படும். அந்தளவுக்கு உலகமயமாக்கல் சித்தாந்தம் மொழிவழிக் கல்வி மீது வெறுப்பை உருவாக்கி வைத்;திருக்கிறது. இந்நிலையில் உயிர்ப்புள்ள, உலகில் அனைத்துப் பகுதியில் வாழும் தமிழர்களின் கருத்தியலையும் உள்ளடக்கிய பொதுவான தமிழ் அடையாளத்தை உருவாக்கி, வரும் சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதுதான் நமக்கான கடமை. இல்லையெனில் தமிழினம் முகவரி இழந்து அகதியாவதைத் தவிர வேறு வழியில்லை.
சமீப காலத்தில் குறிப்பாக 2010க்குப் பிறகான அடையாள முன்னெடுப்புகளில் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. சான்றாக சர்வதேசிய அரங்கில் தமிழர்கள் வெற்றி பெறும் போதெல்லாம் அவர்களின் மொழிசார் அடையாளம் புறந்தள்ளப்பட்டு இந்தியராகச் சித்திரிக்கப்படுகிறார்கள். குடியரசுத்தலைவர், பிரதமர் சகிதம் புகழ்ந்து தள்ளுகிறார்கள். சர்வதேசியக் கொள்கையினால் தமிழர்கள் பாதிக்கப்படும்போது அவரது தேசிய அடையாளம் மறுக்கப்பட்டு தமிழராகக் காட்டப்படுகிறார். இதை வேறுவிதமாகச் சொல்வதென்றால் இப்படிச் சொல்லாம்: கூகுல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை பொறுப்பேற்றால் அவர் தமிழரல்லர்; இந்தியர். இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்படும் ராமேஸ்வர மீனவர் இந்தியர் அல்லர்; தமிழர். கடுமையான வெள்ளத்தில் புவனேஸ்வர், பாரதீப் பாதிக்கப்பட்டால் அது ஒடிசா அல்ல; இந்தியா. சென்னை, தூத்துக்குடி பாதிக்கப்பட்டால் அது இந்தியா அல்ல; தமிழ்நாடு. இப்படித்தான் இருக்கிறது தமிழ் அல்லது தமிழரின் இன்றைய அடையாளம். என்ன செய்ய!