Friday 6 October 2023

அமுதா ஆர்த்தி: சமகால பெண் எழுத்தின் புது வசீகரம்

2019 – இல் அழகிய பெரியவனின் அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார்என்னும் சிறுகதைத் தொகுப்புக்கான மதிப்புரையை பேசும் புதிய சக்தியில் எழுதியிருந்தேன். அந்த இதழில் தான் அமுதா ஆர்த்தியைத் தெரியும்.

அமுதா ஆர்த்தி

அதில் சைக்கிள் சவுட்டுஎன்ற கதையை எழுதியிருந்தார். நாடோடி இளைஞன், அவன் மீது காதல் கொள்ளும் உள்ளூர் பெண். அவனை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லும் திருநங்கை என்று மூவருக்குமான உணர்வுச் சிக்கலை நுட்பமாக விவரித்த கதை அது.  மார்ச் 2020 இல் அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும்கதையை காலச்சுவடில் வாசித்தேன். 2022 – இல் அம்ருதாவில் வெற்றுடல் குளம்வாசித்தேன். 2023 ஜனவரியில் காலச்சுவடில்ரயிலைத் துரத்தும் இரவுவாசித்தேன். இப்படித்தான் அமுதா ஆர்த்தி கதைகளோடு எனது பயணம் தொடங்கியது. அவரது கதைகளின் களம் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை தான் என்றாலும் அவரது ஒவ்வொரு கதைக்கும் அவர் காட்டுகிற வேறுபாடு தான் அவரது கதையின் தனித்துவம்பெண், தனிமை, வெறுமை, முடிந்தவரை தனிமைக்குள்ளும் கொண்டாட்டத்தைத் தேடுதல், தேடுதல் கைகூடாத போது விரக்தி என்பதாக பல கதைகள் அமைந்திருக்கின்றன. தன்னிலை பேசும் கதைகளாக இருந்தாலும் மூன்றாம் நபரின் புறநிலையை தன்னிலையோடு இணைத்து இரண்டையும் இயக்க விதியாக்கும் சித்திரிப்பில் அமுதா ஆர்த்தி தேர்ந்து கொண்டே வருகிறார்.


ஜனவரி 2023 – இல் எதிர் வெளியீடாக வந்த பருந்து கதைத் தொகுதியில் இருக்கும் பதினான்கு கதைகளும் ஒரே தன்னிலையை வேறுவேறு புறநிலையோடு எழுதிப் பார்த்த கதைகள் தான். குறிப்பாக ஆடையும் ஒரு அடையாளமாக இருக்கும் சமூகத்தில் ஆடை துறந்து அடையாளம் இழக்கும் மனிதனின் நிச்சயமற்ற இருந்தலைப் பேசியஅடையாளம் அற்றவனின் ஆடைஇந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க கதை. ‘இரவை வெளிச்சமிடும் வானம்கதையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் தனிமையைசோப்பின் கவரைப் போலவே கவனிக்கப்படாமல் போகும் தனிமைஎன்கிறார். புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் வலியை நுணுக்கமாக எழுதிவிட முடியும் என்பதற்கு இக்கதை சிறந்த உதாரணம். ‘நெகிழிக் கனவுகதையில் மலம் கழிப்பதிலும் தூங்குவதிலும் சிக்கலைச் சந்திப்பவனின் உலகை அவனது விமர்சனப்பூர்வமாகவே வாசகனுக்குக் கடத்துகிறார் அமுதா ஆர்த்திஆகஸ்ட் 2023 இல்கடலுக்கு பறவையின் குரல்கவிதைத் தொகுதி வேரல் வெளியீடாக வந்துள்ளது.

கதையைப் போலவே இதிலும் தனிமை, ஏகாந்தம் ஆகியவற்றை எழுதிப் பார்த்திருக்கிறார். ‘செல்லும் வழியெல்லாம் / முட்களை பரப்பிச் சென்றான் / அவளின் காயங்களைக் காயப்படுத்த’, ‘பிடிக்க முயல்கையில் / காற்றோடு காற்றாய் / கரைந்து போகிறாய்’, ‘எண்ணங்களால் நிரம்பியது / எனது நாள்காட்டிஎன்று தன்னை வைத்து தனது தனிமையை அதன் சகல குணாதிசயங்களும் நீர்த்துப்போய்விடாத படி எழுதியிருக்கிறார். ‘துளிர்விடவும் / உதிரவும் காரணம் / கேட்காத காற்று / அதன் இஷ்டத்திற்கு / ஆட்டிவிட்டுச் செல்கிறது / கிளையைஎன்று தன்னை ஒரு தனி மரமாகவும் சூழலால் தான் கேட்பாரற்று இம்சிக்கப்படுவதையும் காதலாகவும் தாபமாகவும் தொனிக்கும்படி எழுதியிருப்பது அமுதா ஆர்த்தியின் எழுத்துகள் மீது வசீகரத்தை உண்டாக்கிவிடுகிறது. இதை அவரது அடையாளமாக எடுத்துச்செல்வாரேயானால் சமகால பெண் எழுத்தில் தவிர்க்க முடியாதவராக இருப்பார். நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துக்கள்.

.......


No comments: