நண்பர் ராம்ராஜ் சமகால தமிழ் நாடகத்தில் முக்கியமானவரத் தெரிகிறார். Campus Theatre என்ற வகைமையை நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு 2018 வாக்கில் திண்டுக்கல்லில் அர்ஷியாவின் படைப்புகள் குறித்த ஆய்வரங்கில் ஒரு நாடகத்தை நிகழ்த்தினார். அந்நிகழ்வில் எனது உரையை முடித்துவிட்டு அந்த நாடகத்தைப் பார்த்தேன். ஒரு விசயத்தைப் பேசுவதற்கும் நிகழ்த்துவதற்குமான பாரதூர வேறுபாட்டை அன்று தான் கண்டு உணர்ந்தேன். அது முதலே ராம்ராஜின் அரங்கச் செயல்பாட்டின் மீது எனது பார்வையை வைத்துக் கொண்டே வந்திருக்கிறேன்.
ஐரோப்பிய நாடுகளின்
அரசியல், பண்பாட்டு மாற்றங்களில் Campus Theatre முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. அதற்குப் பல முகங்கள் இருந்தாலும் எளியோர்களின்
முகங்களைச் சுமந்து வரும்போதெல்லாம் பாசிஸ்ட்டுகளின் தூக்கத்தைக் கெடுக்காமல் அவை இருந்ததில்லை.
அதனால் தான் கல்விப் புலத்துக்குள் அதிலும் குறிப்பாக நிறுவனப்படுத்தப்பட்ட அதிகாரம்
இருக்குமிடத்தில் நாடகம் என்பது எப்போதும் அச்சத்துடனே அணுகப்படுகிறது.
சமீபத்தில் அருள் ஆனந்தர்
கல்லூரி ஏற்பாடு செய்திருந்த கு.அழகிரிசாமி குறித்த கருத்தரங்கில் அவரது படைப்புகளை
மையப்படுத்தி நாடகம் ஒன்றை நிகழ்த்தினார். கதை, கட்டுரை, கடிதம் என்று கலந்துகட்டி
அது ஒருவகையிலான Colace Type Ply என்று சொல்லும் வகையில் இருந்தது. அழகிரிசாமி பசி,
வறுமை, துரோகம், ஏமாற்றம், இழப்பு, வலி என்று எழுதிய கதைகளை நேர்கோடற்ற தன்மையில் இணைத்து
நிகழ்த்தினார் ராம்ராஜ்.
ஒருவரின் ஒரு பிரதியை
நடிப்புக்கு உகந்த வகையில் மாற்றியதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. ஆனால் ஒரு படைப்பாளியின்
பல பிரதிகளைக் களைத்துப் போட்டு ஒரு நாடகமாக்குதல் என்பது அந்தப் படைப்பாளியை அவரது கருத்தியல்
அடிப்படையில் உட்கிரகித்துக் கொள்ள உதவக் கூடும் என்பதை ராம்ராஜ் தனது அசாத்திய நடிப்பு,
இயக்கத்தின் வழி பார்வையாளர்களுக்குக் கடத்தினார். ராம்ராஜ் வெற்றி பெற்ற இடம் இது
தான் என்பேன்.
ராம்ராஜோடு ரிதன்யா
சாருமதி, ஜாக்குலின் பாய் ரம்யா என்னும் இரு மாணவிகள் நடித்தனர். இருவருமே தங்களது
உடல்மொழியை வகிபாகமாக்கிக் கொள்ளும் வகையில் உரையாடல் அமைக்கப்பட்டு இருந்தது. அது
நாடகத்தை அழகாக்கியது. Dominate
Acting இல்லாமல்
சம அளவிலான நடிப்பைச் சக நடிகர்களுக்குப் பகிர்ந்து கொடுத்ததன் வழி தனது ‘இயக்குநர்’
பொறுப்பை உன்னதப்படுத்தி இருந்தார். எல்லோருக்கும் இந்த மனம் வாய்க்காது. பெண்கள் இருவரும்
அனுபவ முதிர்ச்சியோடு நடித்தார்கள். அவர்களுக்கு இது முதல் நாடகமாக இருக்கும் பட்சத்தில்
அளவுக்கு அதிகமான திறமையை வெளிப்படுத்தினார்கள் என்றே சொல்வேன். நிகழ்வை முழுமையாகப்
பார்த்த அழகிரிசாமியின் மகன் சாரங்கன் தனது தந்தையை, தந்தையின் படைப்பை இந்தக் கோணத்தில்
நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். உணர்ச்சிப் பெருக்கில் உட்கார்ந்து இருந்தார்.
இது ராம்ராஜூக்கு உற்சாகத்தைக்
கொடுத்திருக்கும். புதியதாய் முயன்று பார்க்கும் எல்லா கலைஞனுக்கும் நேரக்கூடிய அனைத்தும்
ராம்ராஜூக்கும் நேரும். அவர் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. வழக்கம் போல
தமிழ்ச் சூழலுக்குப் புதியதான நாடகங்களைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும். சமூகத்தின்
பைத்தியகாரத் தன்மையை ஒரு கலைஞன் மட்டுமே நேர் செய்ய முடியும். ராம்ராஜ் அதைச் செய்வார்
என்று நம்புகிறேன். அவருக்கும் அவரது குழுவினருக்கும் அன்பும் பாராட்டும்.
...........
Comments