Monday 25 July 2022

பா.திருச்செந்தாழையின் ‘வீழ்ச்சி’யும் இளங்கோவன் முத்தையாவின் ‘துறப்பு’ம்

 

பா.திருச்செந்தாழையின் ‘வீழ்ச்சி’யும்

இளங்கோவன் முத்தையாவின் ‘துறப்பு’ம்

ஞா.குருசாமி

இன்று (25.07.2022) தமிழினியில் பா. திருச்செந்தாழையின் வீழ்ச்சி கதை வெளியாகியிருக்கிறது. வழமையான ஒரு நடத்தையை புதியதொரு உத்தியிலும் சொல்ல முடியும் என்பதற்கு அவரின் ‘தேவைகள்’ கதை நல்ல உதாரணம். அதற்குப் பிறகு அவருடைய கதைகளை விரும்பி வாசித்தேன். சமீபத்தில் வெளியான அவரது ‘விலாஸம்’ கதைத் தொகுதி, கதை சொல்லலின் பல புதிய கோணங்களைப் பரிசோதித்திருந்தது.


திருச்செந்தாழையின் கதைகள் வணிக உலகத்தின் ஏற்றம், மாற்றம், துரோகம், போலியான கரிசனம், பெருவணிகத்தின் வரவு, சிதறும் சிறுவணிகம், வணிகத்தில் தாக்குப் பிடிக்கும் வல்லமை பற்றி அசாத்தியமான புனைவில் அமைந்தவை. வணிகம் என்பது வணிக லாபம் பார்ப்பது மட்டுமல்ல. சக வணிகனை வெல்வதும், களத்தை விட்டே துரத்தியடிப்பதும் வணிகம் தான் என்பதை வேறுவேறு கோணத்தில் நின்று வாசகனை உணர வைப்பவை.

சிவபாலன், சகுந்தலா, தினகரன், காசி நால்வரும் தான் வீழ்ச்சி கதையின் முக்கியப் பாத்திரங்கள். சகுந்தலாவின் அப்பா பெரிய அளவில் இரட்டை மாடி மளிகைக்கடை நடத்தியவர். தொழில் வீழ்ச்சி அடைந்து இன்று தீப்பெட்டி அளவிலான கடையில் இருந்து தொழில் செய்கிறவர். அவரது வீழ்ச்சிக்கான காரணம் யாராலும் அறியப்படாததாக இருக்கிறது. அவரே உணர்ந்தும் உணராமலும் தன்னைக் காட்டிக் கொள்கிறார். கடனுக்குச் சரக்குக் கொடுத்த கணக்கை எழுதிவைத்த கணக்குச்சிட்டையில் காரணம் கண்டு பிடிக்க முயல்கிறாள் சகுந்தலா. ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து மிகச் சரியாக் கணிக்கிறாள் சகுந்தலா.  

தினகரன் சகுந்தலாவின் கணவன். செல்வந்தன். பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே அள்ளி செலவழிப்பவன். பணம் கொடுத்து செலவு போக வாங்கும் மீதப் பணம் எவ்வளவு என்றாலும் எண்ணி பார்க்காமலேயே பையில் வைத்துக் கொள்கிறவன். வியாபார உலகின் சூது அறியாதவன்.

சிவபாலன் சகுந்தலாவின் மகன். பத்து வயது சிறுவன். விளையாட்டுப் பிள்ளை. அடித்தாலும் சிரித்துக்கொண்டே இருக்கும் வெகுளி. வயதுக்கும் உடலுக்கும் அறிவுக்கும் இயைபு இல்லாதவன். காசி சூதன். தினகரனின் குடும்ப உதவியில் தொழில் தொடங்கியவன்.

சகுந்தலாவின் பிறந்த வீடும் புகுந்த வீடும் வியாபாரத்தில் நட்டமடைந்து அதலபாதாளத்தில் கிடக்கும் போது ,அதிலிருந்து மீண்டும் விட எத்தடனிக்கும் சகுந்தலா பற்றிய விவரிப்பு கதையின் முக்கியமான இடம். வணிக உலகில் சக வணிகனிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் துரோகம் இழைக்கப்படலாம் என்பதை, காசி வழியாகச் சித்தரித்த இடம் யதார்த்தம் தாண்டிய, வாசகனுக்குள் உறைநிலையை ஏற்படுத்தும் பாடியானது.

கடன்பட்டு சகுந்தலா வேறொரு ஊருக்கு ஓடிய பின் காசியுடன் விட்டுவந்த தன் மகன் சிவபாலனைப் பார்க்க போகிறாள். சிவபாலன் அங்கு மூட்டை தூக்குபவனாக இருக்கிறான். சிவபாலனின் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவரின் ஒத்துழைப்பால் தான் இன்றைக்கு வணிகத்தில் இருக்கிறோம் என்பது காசிக்கு தெரியும். என்ற போதிலும் நிராதரவாக விட்டு விட்டுப் போன  குழந்தைத்தனம் மாறாத சிவபாலனை மூட்டை தூக்க வைக்கிறார் காசி. தன் மகன் மூட்டைதான் தூக்கியிருக்கிறான் என்பதைத் தெரிந்துவிட்ட சகுந்தாவின் முன் சமாளிக்கும் காசியை  சிவபாலன் பார்க்கும் பார்வை, காசிக்கும் சகுந்தலாவுக்கும் வேறுவேறு உணர்வைக் கடத்துவது அருமை.

 சகுந்தலாவின் கனவு, காசிக்கு மீன் வைப்பது, சகுந்தலாவின் மாமனார் புரிதல், கோழியின் சிலிர்ப்பு ஆகிய விவரிப்புகளைக் கதையின் போக்கோடு தொடர்பு படுத்தி இருக்கும் இடம் அழகு.

சகுந்தலாவைப் புரிந்து கொள்ள கதையில் வரும் உருவங்களும் பூடக விவரிப்புகளும் முக்கியமானவை. உருவங்கள் வழியாக கதைக்குள் கதை சொல்ல முடியும், வாசகனின் மனவெளியை அவனுக்குள் அவனையே விஸ்தரிக்க வைக்கும் கலையை நிகழ்த்தி விடமுடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தக் கதையை உறுதியாகச் சொல்லலாம்.

இதே தமிழினியில் இளங்கோவன் முத்தையா எழுதிய ‘துறப்பு’ கதையும் வெளியாகி இருக்கிறது. அது, உதாசீனம், புறக்கணிப்புக்கு மத்தியில் தீவிர திடீர் நோயாளியின் உலகம் பற்றியது. விபத்தில் சிக்கி குழந்தையோடு மருத்துவமனையில் தானே நடந்து வந்து சேர்கிறார். குழந்தை எதுவும் அறியாமல் விளையாடிக்கொண்டே போனில் இருக்கிறது. வரும் அழைப்புகளைத் துண்டித்துவிட்டு விளையாடுகிறது. தன்னைப்பற்றி எந்த தகவலும் சொல்லாமலே சுயநினைவற்றுப் போகிறாள். அது பற்றி குழந்தை எதுவுமே அறியாமல் சார்ஜ் தீர்ந்து போன போனுக்காக சார்ஜர் கேட்டுத் திரிகிறது. பொறுப்பற்ற, சுற்றி நடப்பவற்றைக் கவனிக்க விரும்பாத, உறவுகளின் மீது பிடிப்பற்ற மனிதர்கள் சூழ் உலகமொன்று உருவாகிவிட்டதைச் சித்திரிக்கும் இந்தக் கதையின் மொழி முன்னும் பின்னும் ஒட்டாமல் இருக்கிறது. கதையின் நுவல்பொருள் சமகாலத்தின் பேரவலம்.

.......................

Sunday 10 July 2022

கு.இலக்கியனின் ‘காத்தாள்’ கதை

 


கு
.இலக்கியனின்காத்தாள்கதை

பணம் இருந்தால் குற்றக்கண்மாயின் கசிவை அடைத்து விடலாம் என்பது ஓர் அசைக்க முடியாத கருத்தியலாகவே இருந்து வருகிறது. அதை இலக்கியம் சினிமாக்கள் நிறைய பேசியிருக்கின்றன. ஒரே விஷயத்தை ஏன் திரும்பத் திரும்ப பேச வேண்டும் என நான் யோசித்தது உண்டு. ஆனாலும் பேச வேண்டிய தேவை இருப்பதை சீக்கிரமே கண்டு கொண்டேன். ஒரே விஷயம் ஒரே மாதிரி நடப்பதில்லை. வேறுபாடுகள் உண்டு. வேறுபாடுகளைப் பேச வேண்டும். வேறுபாடுகள் போதி மரங்கள். வேறுபாடுகளைச் சரியாக புரிந்து கொண்டவர்கள் வேஷமற்ற வெகுமக்களின் அரசியலைப் பேசுகிறவர்களாக இருப்பார்கள். அத்தகையோர்களை உருவாக்கிக் கொண்டே இருப்பதற்கு ஒரே விஷயங்களின் வேறுபாடுகளை எல்லா வடிவங்களிலும் பேச வேண்டியிருக்கிறது. அப்படி பேசிய கதை தான் கு.இலக்கியனின்காத்தாள் கதை. 2022 ஜூலை நீலம் இதழில் வெளியாகியிருக்கிறது.

பூவான். காத்தாள், கொயிந்துப் பண்ணை மூவரும் கதையின் முக்கிய புள்ளிகள். பூவான் பசுஞ்சோலைக் கிராமத்தின் பரம்பரை வெட்டியான். பிணம் எரிக்க மேடை தயார் பண்ணுவது, விறகு அடுக்குவது, வேகாத எலும்புகளைப் பொறுக்கிப் புதைப்பது ஆகியவற்றில் நிபுணன். யாரும் இல்லாத தனி ஆள். நெஞ்சுரம் கொண்டவன்.

காத்தாள் அவள் அம்மாவோடு அறுவடை காலத்தில் அறுப்பு அறுத்து பஞ்சம் பிழைக்க பசுஞ்சோலை கிராமத்திற்கு வந்தவள். காத்தாளுக்கு அவள் அம்மாவை தவிர நாதியில்லை. அவள் அம்மாவும் நாதியற்றவள். தனி ஆள். காத்தாளின் அம்மா காத்தாள் பிறப்பதற்கு முன்பிருந்தே பசுஞ்சோலை கிராமத்திற்கு அறுவடைக்கு வந்து போனவள். இப்போது வயது வந்த மகளோடு வந்திருக்கிறாள். வந்த இடத்தில் கடும்காய்ச்சல் உண்டாகி இறந்து விட்டாள். அவளை அடக்கம் செய்ய வேண்டும். நாதியற்றவர்களுக்கு நாதியற்றவர்களே துணை என்பது போல பூவான் காத்தாளின் அம்மாவை தோளில் தூக்கிக்கொண்டு சுடுகாடு செல்கிறான். ஊர்க்காரர்கள் வழி மறிக்கிறார்கள். ஊரோடு சம்பந்தமில்லாதவர்களை அதுவும் பஞ்சம் பிழைக்க வந்தவர்களையெல்லாம் ஊர் சுடுகாட்டில் எரிக்க அனுமதிக்க முடியாது என்கிறார்கள். பூவான் பேசிப் பார்க்கிறான். யாரும் ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. சட்டென்று காத்தாளின் கையைப் பிடித்து இப்போது முதல் இவள் என் பொஞ்சாதி இனி இவளுக்கும் இந்த ஊருக்கும் சம்பந்தம் உண்டு என்கிறான். ஊர் என்ன செய்வதென்று தெரியாமல் வாய்மூடி வழி விடுகிறது

ஊரின் பெரிய மனிதன் கொயிந்துப் பண்ணை. ஒண்டிக்கட்டை. கல்யாணத்தில் மட்டும் விருப்பம் இல்லாதது போல் காட்டிக்கொண்டவன். திடீரென நெஞ்சு வலி கண்டு சாகக் கிடக்கிறான். பூவானை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்புகிறான் கொயிந்துப் பண்ணை. தனது குடிசையில் இருந்த பூவான் அவசர அவசரமாக கொயிந்துப் பண்ணை வீட்டுக்குள் வருகிறான். வீட்டுக்குள் நுழைகிறான். கொயிந்துப் பண்ணை பூவானை அருகில் வருமாறு அழைத்து பூவானின் காதில் அவனுக்கு மட்டுமே கேட்கும்படி மெல்ல ஏதோ சொல்லுகிறான். சொல்லியதும் இறந்தும் போகிறான்.

பூவான் எரிமேடையைத் தயார் செய்கிறான். கொயிந்துப் பண்ணையின் பிணம் கொண்டுவரப்படுகிறது. தன் மனைவி காத்தாளை வைத்து கொள்ளி வைக்கிறான் பூவான். இந்தப் பொருண்மையில் தான் அந்தக் கதை அமைந்திருக்கிறது.

கதையில் கதைக்கான நடை குறைவாகவும் கட்டுரைக்கான நடை அதிகமாகவும் இருக்கிறது என்றாலும் அது கதை ஓட்டத்திற்குத் தடையாக இல்லை. விளிம்புநிலை மக்கள் வேலைத்தளத்தில் பாலியல் ரீதியாக சுரண்டப்படும் வரலாற்றைப் பதிவு செய்த கதைகளில் இதுவும் ஒன்றுதான் என்றாலும் சில வேறுபாடுகளைக் காட்டி இருக்கிறது. வெட்டியானின் மனைவியான காத்தாளை ஊரின் பெரும்பணக்காரப் பண்ணையின் மகளாக சித்திரித்தது மிக முக்கியமான வேறுபாடு. அதையும் பண்ணையின் வாயாலேயே சொல்ல வைத்தது அரசியல். இன்று உள்ள பண்ணைகளின் நிலங்களில் காத்தாள் போன்ற நிறையப் பெண்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதையும் பண்ணைகளின்ஒழுக்கத்தையும் பேசிய விதத்தில் இது நல்ல கதை.

ஒருவர் வாழும் போது நேரும் அவமானத்தை விட அவரின் மரணத்தில் நேர்ந்து விடும் அவமானம் துயரமானது’. தலை குனிந்திருப்பவர்கள் தலை நிமிர்ந்து விடுவதை சரியென்று ஏற்றுக் கொள்ளாத சமூகமிது’. பிடித்தவர்களின் அருகாமையற்ற இந்த இரவின் உறக்கத்தைக் கவலைகள் தின்று செரித்துவிடும் என்கிற கவித்துவ விவரிப்புகள் கதையை கதையாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கின்றன. கு.இலக்கியன் இன்னும் நிறைய எழுத வேண்டும்.

…………………………

                            

இமையத்தின் ‘கொல்லிமலை சாமி’ என்றொரு கதை

 


கொல்லிமலை சாமி என்றொரு கதை

2022 ஜூலை நீம் இதழில் இமையம் கொல்லிமலை சாமி என்றொரு கதை எழுதி இருக்கிறார். ‘ஜோதி என்கிற பெண் தான் கதையின் மையம். பெரம்பலூரை அடுத்த அன்னமங்கலத்துக்காரி. அவள் ஒரு துறவி. துறந்ததால் துறவியானவள் அல்ல. அன்னமங்கலத்திலிருந்து துரத்தப்பட்டதால் துறவியானவள். தேசமெங்கும் சுற்றிவிட்டு தற்போது கொல்லிமலை சேர்ந்து  கொல்லிமலை சாமி’ ஆகிப் போனவள். சுற்று வட்டாரத்தில் அவளுக்கு ஏக மரியாதை. துயருடன் வருவோருக்கு துயர் களைவது ஜோதியின் வேலை. தன்னை நாடி வருவோரின் கதைகளைக் கேட்டுக்கேட்டு மனிதர்களினுடைய அற்பத்தனங்களின் பல்வேறு ரூபங்களைக் கண்டுபிடித்தவள். மனிதர்களின் பலமும் பலவீனமும் அவர்களின் ஏகோபித்த அற்பத்தனங்கள் தான் என்பதை அனுபவத்தில் கண்டவள். தன்னை தேடி வரும் பக்தர்கள் தருவது தான் அவது உணவு. நல்ல அழகி. துறவிக்கு அழகு கூடாது என்பதற்காகவே மொட்டை அடித்துக் கொண்டவள். இன்று அவளிடம் அருள் வாக்கு கேட்பதற்காக ஜோதியின் ஊர்க்காரனே ஒருவன் வந்திருக்கிறான். எதிர்பாராத சந்திப்பு.

அவள் துறவியானதற்கான காரணத்தை அவளே நினைத்துப் பார்ப்பது போன்ற தோரணையில்  கதையை எழுதி இருக்கிறார் இமையம். ஏற்கனவே லட்சுமி என்னும் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமான ஒருவன் ஜோதியை கல்யாணம் செய்ய விரும்புகிறான். ஜோதிக்கு அதில் துளியும் விருப்பமில்லை. தவறு என்பதில் தெளிவாய் இருக்கிறாள். ஜோதி சம்மதிக்காவிட்டால் தான் செத்துப்போவதாக மிரட்டுகிறான். ஒரு உயிர் செத்துப் போவதற்குத் தான் காரணமாகிவிடக் கூடாதே என்று கவலையும் பயமும் கொள்கிறாள். ஆனாலும் அவன் ஜோதியைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்கிறான். ஜோதி திருமணம் முடிந்து வீடு திரும்புகிற வழியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் ஜோதிக்குத் தாலி கட்டியவன் இறந்து போகிறான். காலையில் கட்டப்பட்ட தாலியை ஜோதி மாலையில் அறுத்து எரிகிறாள்.

 இறந்து போனவனுக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் லட்சுமி தனக்கு நிச்சயம் செய்யப்பட்டு இருந்தவன் வேறொரு பெண்ணோடு திருமணம் செய்து கொண்டானே என்று இம் புரியாத விரக்தியில் தூக்கு மாட்டி இறந்து போகிறாள். இருவர் சாவுக்கு காரணமாகி விட்டாயே என்று கூறி பெருத்த அவமானத்தில் சோதியின் அம்மா அரளி விதை தின்று செத்துப் போகிறாள். அந்த மூன்று பேரின் சாவுக்கு ஜோதி தான் காரணம் என ரே நினைக்கிறது. அவள் காரணம் அல்ல என்பதைச் சரியான தர்க்கத்துடன் பேசுவது தான் கதை.

தான் காரணம் இல்லை என்பதை ஜோதி சொல்ல நினைத்தாலும் சொல்வதற்கான சூழலோ கேட்டுக் கொள்ளும் மனநிலையில்ரோ இல்லை. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட அனுமானத்தின் படி அவளை ஊரே சேர்ந்து அடிக்கிறது. துப்புகிறது. எல்லாமே வேடிக்கை தான் பார்க்கிறார்கள். ன்று சோதியிடம் அருள்வாக்கு கேட்டு வந்திருப்பவனும் அன்று ஜோதியை வேடிக்கை பார்த்தவன் தான் என்பது கதையில் குறிப்பாகச் சொல்லப்படுகிறது. அவன் ஜோதிக்கு மாமா முறையும் கூட. தற்போது ஜோதியின் பெரியப்பா மகள் சுமதியைத்தான் அவன் திருமணம் செய்திருக்கிறான் .சுமதிக்கு இரண்டு குழந்தைகள். தற்போது மனப்பிறழ்வுக்கு உள்ளாகி இருக்கிறாள்.  நிறைய வைத்தியம் பார்த்தாயிற்று;னில்லை. தனது நண்பன் ஒருவனின் திருமணத்திற்கு வந்த இடத்தில் தான் கொல்லிமலை சாமியின் சக்தியை கேள்விப்பட்டு, ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு போகலாம் என வந்திருக்கிறான்.

ஜோதியும் சுமதியின் கணவனும் ஒரே சாதி. ஒரே ஊர். உறவினர்கள் என்ற போதிலும் இருவரும் பல வருடங்கள் கழித்து எதிர்பாராமல் யூகித்திருக்கவே முடியாத சூழலில் சந்தித்து கொள்கிறார்கள். கதையின் முடிச்சு இந்த பகுதிதான். ஓர்ணுக்கு அவனது ஒவ்வொரு அத்துமீறலுக்காகவும் அவனுக்குக் கிடைக்கும் வலிக்குவியலை பாரமேற்றி சுமந்து திரிவதற்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. பலநேரங்களில் அந்த ‘ஏதோ ஒன்று’ பெண்களாகவே இருக்கிறார்கள் என்பதை மிக இயல்பாக போகிற போக்கில் சொல்லிவிடுகிறார் இமையம்.

மனப்பிறழ்வில் இருக்கும் சுமதியின் உலகமும் புதுவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மனப்பிறழ்ச்சி ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படலாம் என்றபோதிலுல் ஆணைவிட பெண்ணின் இருப்பு, அவள் குறித்து பொதுவெளியில் உருவாக்கப்படும் சித்திரம் எவ்வளவு துயரும் புனைவும் கலந்தது என்பது நுணுக்கமான பதிவாக கதையில் அமைந்திருக்கிறது.

பெண்களின் உள்மன உலகம் பற்றி எழுதப்படாத எண்ணற்ற பக்கங்களின் ஒற்றைப் பிரதியாக அமைந்திருக்கிறது கொல்லிமலை சாமி.மையத்தின் கதைகளில் பெண்கள் பிரதானமாகி விடுவது இக்கதையிலும் தொடர்கிறது. ஜோதியின் உணர்வுகள் குடும்பம் என்னும் சதி வலைக்குள் சிக்கிக்கொண்டு வெளியேற எத்தனிக்கும் பல பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கிறது. சுதந்திரமான, மனம் விரும்புகிற, தனது வாழ்க்கையைத் தானே வாழ்ந்து பார்க்கிற, எதையும் இயல்பாகவே கருதி கடந்துவிட விரும்புகிறவர்களாகவே பெண்கள் இருக்கிறார்கள். முயற்சிக்கவும் செய்கிறார்கள் அவர்களின் அந்த இருப்பை இந்த உலகம் விரும்புவதில்லை என்பதை மிக அழகான புனைவு நேர்த்தியில் அமைந்திருக்கும் கதை தான் கொல்லிமலை சாமி.

…………………………