பயணங்கள்



 

 25.06.2022 அன்று மதுரையில் இருந்து பாபநாசம் சென்று அகத்தியர் அருவியில் குளித்துவிட்டு சொரிமுத்து அய்யனார் கோயில் சென்று பார்த்துவிட்டு வருவதென திட்டம். ரயில் பயணம். அதிகாலையில் ரயிலில் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து செல்வது அலாதி இன்பம் தான். 

தென்காசி ரயில் நிலையத்தில்  இருந்து பாபநாசம் செல்வதற்கு பழைய பஸ் ஸ்டாண்ட் வரவேண்டும். தென்காசியில் அடிக்கடி பாபநாசத்திற்கு பஸ் இல்லை. ஆகவே அம்பாசமுத்திரம் சென்று அங்கிருந்து பாபநாசம் செல்ல வேண்டும். 

தென்காசியில் காலை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ராஜ் மெஸ் போகலாம். பழைய வீடு தான் அது. அதை ஹோட்டலாக மாற்றி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் சுவையான டிபன். வீட்டுச் சுவை. 

....

சொரிமுத்து அய்யனார் கோயில் என்னும் விகார்
.......
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் இருந்து காரையார் செல்லும் வழியில் சுமார் 11 கிமீ தொலைவில் உள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில். இந்த கோயிலின் பெயரே இது ஒரு பிக்கு இருந்த மடமாகவோ அல்லது விகாராகவோ இருந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
கோயில் மண்டபத்தின் நிலைத்தூண்களில் செதுக்கப்பட்ட தாமரையும் யானைகளும் நிறைய காணக் கிடைக்கின்றன. நீறு பூசி, சிவன் கோயிலைப் போல இக்கோயிலின் வழிபாட்டு முறை இருந்தாலும் பார்ப்பனர் தலையீடு இல்லாமல் பார்ப்பனரல்லாதாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சாமியாடி அருள்வாக்கு சொல்கிறார். இக்கோயிலில் புத்தரால் தென்மொழி போதிக்கப்பட்டு தென்னாட்டிற்கு அனுப்பப்பட்டவர் என்பதாக அயோத்திதாசரால் சொல்லப்படும் அகத்தியரும் சங்கிலி பூதத்தாரும் (சங்கம் சேர்ந்திருந்த பூதத்தார்) பரிவார தெய்வமாக வணங்கப்படுகிறார்கள். அகத்தியர் - சங்கிலி பூதனார் தாமரை - யானை - சின்னங்கள், பார்ப்பனர் இல்லாமை - நீறு - சொரி முத்து அய்யனார் என்னும் அடையாளங்கள் அனைத்தும் இத்தலத்தை ஒரு பிக்கு தங்கியிருந்து அறம் போதித்த மடமாகவோ அல்லது ஒரு விகாரையாவோ முன் வைப்பது முக்கியமானது.
அய்யனார் கோயில்களுக்கெல்லாம் தலைமை கோயிலாக இதைக் கருதி வரும் வழக்காற்றின் வழி தமிழகத்தின் தென்பகுதி பிக்குகளுக்கு இக்கோயில் (மடம்) தலைமை இடமாக இருந்திருக்கிறது என்கிற முடிவுக்கு வர முடிகிறது.
இந்தக் கோயிலுக்கு இன்னொரு சிறப்புண்டு. அது என்னவென்றால் வெளிப்படையான ஏராளமான பௌத்த அடையாளங்களை இன்றளவும் சுமந்து கொண்டிருக்கும் தென்தமிழகக் கோயில் இது ஒன்று மட்டுமே.




No comments: