பா.திருச்செந்தாழையின் ‘வீழ்ச்சி’யும்
இளங்கோவன் முத்தையாவின் ‘துறப்பு’ம்
ஞா.குருசாமி
இன்று (25.07.2022) தமிழினியில் பா. திருச்செந்தாழையின் ‘வீழ்ச்சி’ கதை வெளியாகியிருக்கிறது. வழமையான ஒரு நடத்தையை புதியதொரு உத்தியிலும் சொல்ல முடியும் என்பதற்கு அவரின் ‘தேவைகள்’ கதை நல்ல உதாரணம். அதற்குப் பிறகு அவருடைய கதைகளை விரும்பி வாசித்தேன். சமீபத்தில் வெளியான அவரது ‘விலாஸம்’ கதைத் தொகுதி, கதை சொல்லலின் பல புதிய கோணங்களைப் பரிசோதித்திருந்தது.
திருச்செந்தாழையின் கதைகள் வணிக உலகத்தின் ஏற்றம், மாற்றம்,
துரோகம், போலியான கரிசனம், பெருவணிகத்தின் வரவு, சிதறும் சிறுவணிகம், வணிகத்தில் தாக்குப்
பிடிக்கும் வல்லமை பற்றி அசாத்தியமான புனைவில் அமைந்தவை. வணிகம் என்பது வணிக லாபம்
பார்ப்பது மட்டுமல்ல. சக வணிகனை வெல்வதும், களத்தை விட்டே துரத்தியடிப்பதும் வணிகம்
தான் என்பதை வேறுவேறு கோணத்தில் நின்று வாசகனை உணர வைப்பவை.
சிவபாலன், சகுந்தலா, தினகரன், காசி
நால்வரும் தான் வீழ்ச்சி கதையின் முக்கியப் பாத்திரங்கள். சகுந்தலாவின்
அப்பா பெரிய அளவில் இரட்டை மாடி மளிகைக்கடை நடத்தியவர். தொழில் வீழ்ச்சி அடைந்து இன்று
தீப்பெட்டி அளவிலான கடையில் இருந்து தொழில் செய்கிறவர்.
அவரது வீழ்ச்சிக்கான காரணம் யாராலும் அறியப்படாததாக இருக்கிறது.
அவரே உணர்ந்தும் உணராமலும் தன்னைக் காட்டிக் கொள்கிறார். கடனுக்குச் சரக்குக் கொடுத்த கணக்கை எழுதிவைத்த கணக்குச்சிட்டையில்
காரணம் கண்டு பிடிக்க முயல்கிறாள் சகுந்தலா. ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து மிகச்
சரியாக் கணிக்கிறாள் சகுந்தலா.
தினகரன் சகுந்தலாவின் கணவன். செல்வந்தன். பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே அள்ளி செலவழிப்பவன். பணம் கொடுத்து செலவு போக வாங்கும் மீதப் பணம் எவ்வளவு என்றாலும் எண்ணி பார்க்காமலேயே பையில் வைத்துக் கொள்கிறவன். வியாபார உலகின் சூது அறியாதவன்.
சிவபாலன் சகுந்தலாவின் மகன். பத்து வயது சிறுவன். விளையாட்டுப் பிள்ளை.
அடித்தாலும் சிரித்துக்கொண்டே இருக்கும் வெகுளி.
வயதுக்கும் உடலுக்கும் அறிவுக்கும் இயைபு இல்லாதவன். காசி சூதன். தினகரனின் குடும்ப உதவியில் தொழில் தொடங்கியவன்.
சகுந்தலாவின் பிறந்த வீடும் புகுந்த வீடும் வியாபாரத்தில்
நட்டமடைந்து அதலபாதாளத்தில் கிடக்கும் போது ,அதிலிருந்து மீண்டும் விட எத்தடனிக்கும்
சகுந்தலா பற்றிய விவரிப்பு கதையின் முக்கியமான இடம். வணிக
உலகில் சக வணிகனிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் துரோகம் இழைக்கப்படலாம் என்பதை, காசி வழியாகச் சித்தரித்த இடம் யதார்த்தம் தாண்டிய, வாசகனுக்குள் உறைநிலையை ஏற்படுத்தும்
பாடியானது.
கடன்பட்டு சகுந்தலா வேறொரு ஊருக்கு ஓடிய பின் காசியுடன்
விட்டுவந்த தன் மகன் சிவபாலனைப் பார்க்க போகிறாள். சிவபாலன் அங்கு மூட்டை தூக்குபவனாக இருக்கிறான். சிவபாலனின் தாத்தா, பாட்டி, அப்பா,
அம்மா அனைவரின் ஒத்துழைப்பால் தான் இன்றைக்கு
வணிகத்தில் இருக்கிறோம் என்பது காசிக்கு
தெரியும். என்ற போதிலும் நிராதரவாக
விட்டு விட்டுப் போன குழந்தைத்தனம்
மாறாத சிவபாலனை மூட்டை தூக்க வைக்கிறார் காசி.
தன் மகன் மூட்டைதான் தூக்கியிருக்கிறான் என்பதைத் தெரிந்துவிட்ட சகுந்தாவின் முன் சமாளிக்கும்
காசியை சிவபாலன் பார்க்கும் பார்வை, காசிக்கும்
சகுந்தலாவுக்கும் வேறுவேறு உணர்வைக் கடத்துவது அருமை.
சகுந்தலாவின் கனவு, காசிக்கு மீன் வைப்பது, சகுந்தலாவின் மாமனார்
புரிதல், கோழியின் சிலிர்ப்பு ஆகிய விவரிப்புகளைக் கதையின் போக்கோடு
தொடர்பு படுத்தி இருக்கும் இடம் அழகு.
சகுந்தலாவைப் புரிந்து கொள்ள கதையில் வரும் உருவங்களும் பூடக விவரிப்புகளும் முக்கியமானவை. உருவகங்கள் வழியாக கதைக்குள் கதை
சொல்ல முடியும், வாசகனின் மனவெளியை அவனுக்குள் அவனையே
விஸ்தரிக்க வைக்கும் கலையை நிகழ்த்தி விடமுடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக
இந்தக் கதையை உறுதியாகச் சொல்லலாம்.
இதே
தமிழினியில் இளங்கோவன் முத்தையா எழுதிய ‘துறப்பு’ கதையும் வெளியாகி இருக்கிறது. அது,
உதாசீனம், புறக்கணிப்புக்கு மத்தியில் தீவிர திடீர் நோயாளியின் உலகம் பற்றியது. விபத்தில்
சிக்கி குழந்தையோடு மருத்துவமனையில் தானே நடந்து வந்து சேர்கிறார். குழந்தை எதுவும்
அறியாமல் விளையாடிக்கொண்டே போனில் இருக்கிறது. வரும் அழைப்புகளைத் துண்டித்துவிட்டு
விளையாடுகிறது. தன்னைப்பற்றி எந்த தகவலும் சொல்லாமலே சுயநினைவற்றுப் போகிறாள். அது
பற்றி குழந்தை எதுவுமே அறியாமல் சார்ஜ் தீர்ந்து போன போனுக்காக சார்ஜர் கேட்டுத் திரிகிறது.
பொறுப்பற்ற, சுற்றி நடப்பவற்றைக் கவனிக்க விரும்பாத, உறவுகளின் மீது பிடிப்பற்ற மனிதர்கள்
சூழ் உலகமொன்று உருவாகிவிட்டதைச் சித்திரிக்கும் இந்தக் கதையின் மொழி முன்னும் பின்னும்
ஒட்டாமல் இருக்கிறது. கதையின் நுவல்பொருள் சமகாலத்தின் பேரவலம்.
.......................
Comments