அட்டைப்படத்தில் ஆம்ஸ்ட்ராங்
‘உயிர் எழுத்து’ அட்டைப் படத்திற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இருக்கும். பெரும்பாலும் அன்றைய மாதத்தில் பேசுபொருளாக
இருக்கும் அரசியல், சமூக ஆளுமைகளின்
படங்களைத் தாங்கி வரும். உதாரணமாக, இரோம் ஷர்மிளா தேசிய
அளவில் கவனம் பெறத் தொடங்கிய நேரத்தில் அவரது படம் தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் முதன்முதலில்
உயிர் எழுத்தில் தான் அட்டைப்படமாக வந்தது. அதன் வழி பலர் இரோம் ஷர்மிளா பற்றி அறியலானார்கள்.
ஒருமுறை பிரபஞ்சன் சிகரெட் புகைப்பது போன்ற அட்டைப்படம் உயிர் எழுத்தில் வந்தது. அது தன்னொழுக்கத்தில் கனிந்து சிறந்த சில அறிவுஜீவிகளிடம் புகைச்சலை உண்டாக்கியது. அதற்காக அவர்கள் கண்டபடி அபிநயம் பிடித்து விதவிதமான அடவுகளில் ஆடி முடித்தார்கள். இப்படி உயிர் எழுத்து அட்டைப்படங்கள் குறித்து நேர்/எதிர் மறையாக நிறைய சொல்ல முடியும். இதுவரை வெளிவந்த அட்டைப் படங்களின் வரிசையை மையப்படுத்தி அவை பேசிய அரசியல் குறித்தே விரிவான கட்டுரையை எழுதலாம். அந்த வகையில் உயிர் எழுத்து பாராட்டப்பட வேண்டிய சிறு பத்திரிகை. நிற்க.
ரஷ்யாவில்
சோசலிச யதார்த்த வாதம் என்ற கோட்பாட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு தாங்கள்
கருதுகிறதும் தமக்கு லாபம் தருகிறதுமான ஒரு வித அரசியலைப் பற்றி மட்டுமே
பேசுவதெல்லாம் ‘முற்போக்கு’ என்றும் மற்றவைகளைப் ‘பிற்போக்கு’ என்றும் ஸ்டாலின் காலத்தில் முத்திரையிட்டனர். இந்த ஜிகினா வேலையை அப்படியே
இன்றைய உள்ளூர் அரசியல் சூழலில் சமூகநீதியோடும் இணைத்துப் பேசலாம். அந்த அளவுக்கு அந்த ‘முற்போக்கும்’ இந்த ‘சமூகநீதி’யும் ஒத்துப் போகிறது. அவர்கள்
பேசுவது மட்டுமே சமூகநீதியாகவும் எதிர்த்தரப்பார் சமூகநீதியைப் பேசினாலுமே அதை வேண்டுமென்றே குதர்க்கமாகப் புரிந்து கொள்ளும்படியான சூழலை மக்களுக்கு சமூகநீதிக் குத்தகைதாரர்கள் உருவாக்கி வருகிறார்கள். அதன்
விளைவாகத்தான் தொடர்ந்து உண்மையான சமூகநீதி பற்றி பேசிவந்த ஆர்ம்ஸ்ட்ராங்கை ‘ரவுடி’ என்று முத்திரை குத்தினார்கள். இதே மாதிரியான
ஒரு இறப்பு அந்தப் பக்கம் நிகழ்ந்திருக்குமானால் அவரை 'சமூகநீதி'
காவலராக, இனமானத் தலைவராக அவர்கள் ஆக்கியிருக்கக் கூடும். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களை யார் விமர்சித்தாலும் அவர்களைப்
பொதுச்சமூகத்தில் இருந்து விலக்கும்படியான அடையாளத்தை ஒட்டி விடுவார்கள். அவர்களின்
வரலாறு அப்படி.
இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் தான் ஆம்ஸ்ட்ராங் படத்தை போதிமுரசு அட்டையில் வெளியிட்டது. ஆம்ஸ்ட்ராங் பௌத்தச் செயல்பாட்டாளராக இருந்தமையால் பௌத்தக் கருத்தியலைப் பேசும் போதிமுரசு அவரைச் சிறப்பித்திருக்கலாம். அப்படி ஒரு தொடர்பு உயிர் எழுத்திற்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இல்லை. ஆனாலும் அவரை உயிர் எழுத்து (2024 ஆகஸ்ட்) அட்டைப்படமாக வைத்துத்திருக்கிறது. சிறு பத்திரிகை உலகில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வமானது. உயிர் எழுத்து-க்குப் பாராட்டுக்கள்.
குறிப்பு : இந்தப் பதிவு வெளியிடப்பட்ட பின் வெளியான நீலம் இதழிலும் ஆம்ஸ்ட்ராங் அட்டைப்படமாக வைக்கப்பட்டிருந்தார்.
......................
Comments