1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ