கட்டுரை
மனைக்குறி சாஸ்திரம் - சில விவாதக் குறிப்புகள்
ஞா.குருசாமி
இப்பொழுதெல்லாம் ‘சாஸ்திரம்’ என்கிற சொல் அதிகமாக
உச்சரிக்கப்பட்டு வருகிறது. ‘சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது’, ‘சாஸ்திர வாக்கு’,
‘சாஸ்திர தர்மம்’, ‘சாஸ்திரக் கட்டுப்பாடு’ என்றெல்லாம் அந்தச் சொல் புழங்கப்படுகிறது.
இந்தியத் துணைக்கண்டத்தில் ‘சாஸ்திரம்’ என்கிற சொல்லும், அதன்வழி உருவாக்கப்பட்டிருக்கும்
பண்பாட்டு வெளியும், அதன்வழியாகக் கிடைக்கின்ற லாபமும் இதுவரை யாருக்கானதாக இருந்திருக்கிறது.
யாருக்கானதாக இல்லாமல் இருந்திருக்கிறது என்பது குறித்த விவாதங்கள் பன்னெடுங்காலமாக
முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. என்றாலும், அதே வேலையைத் தொடர்ந்து செய்யவேண்டிய
தேவை இன்றைக்கு மேலதிகமாக உருவாகிவிட்டிருக்கிறது.
வேடனுக்கும் வேட்டை உயிருக்கும் இடையே விரிக்கப்பட்டிருக்கும் வலையின் குணத்தை
ஒத்தது சாஸ்திரம். சாஸ்திரத்தை உருவாக்கியவர்களுக்கு அதை உருவாக்காதவர்கள் அனைவரும்
வேட்டை உயிர்களே. உயிர்களை வேட்டையாடுவதன் வழி வேட்டை உயிரின் வாழ்வெளியை நிர்மூலமாக்கி
அபகரித்தல் தற்செயலாகவே நடைபெற்றுவிடுவதை ஒத்ததே சாஸ்திரத்தின் தொழிற்பாடும். அதை நம்புகிறவர்
பலியிடப்படுகிறார். பலியின் விளைச்சலை சாஸ்திர ஆக்கவாதிகள் சுகிக்கிறார்கள். இதற்கெல்லாம்
காரணம் ‘சாஸ்திரம்’ என்பது ‘விரிக்கப்பட்டிருக்கும் வலை’ என்பதை வேட்டை உயிர்கள் அறியாமல்
இருப்பதே.
சாஸ்திரத்தைப் பின்பற்றுகிற அனைவரும் சாஸ்திரத்தின் அரசியலைப் புரிந்திருக்கவில்லை.
படித்தவர் படிக்காதவர் என்ற பேதமில்லாமல் அதன் பிடிக்குள் இருக்கிறார்கள். தான் வாழ்வுக்கும்
வீழ்வுக்கும் அதுவே காரணம் என நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையில் தான் சாஸ்திரத்தின்
ஜீவன் திடப்படுகிறது; வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது. அந்தவகையில் ‘மனைக்குறி சாஸ்திரம்’
என்கிற நூல்வழி உருவாக்கப்பட்ட ஒற்றை நலன் கொண்ட தந்திர நுட்பங்களையும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.
‘மனைக்குறி சாஸ்திரம’ 1894 ஆம் ஆண்டு சென்னை, ஸ்ரீ லட்சுமி நாராயண விலாச அச்சகத்தில்
பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. செஞ்சி ஏகாம்பரரால் எழுதப்பட்ட இந்நூலை ராமசாமி என்பார் பதிப்பித்திருக்கிறார். ‘சிற்ப சாஸ்திரம் என்னும் மனைக்குறி சாஸ்திரம்’
என்கிற இந்நூலில் மனை கட்டுவதற்கான அளவுகள், மனை கட்ட ஏற்ற மாதங்கள், மனை கட்டக் கூடாத
மாதங்கள், அவற்றிற்கான காரணங்கள்,
மனை கட்ட ஏற்ற நிலங்கள், மனை கட்ட நிலம் தோண்டும்போது கிடைக்க வேண்டிய பொருட்கள், கிடைக்கக்
கூடாத பொருட்கள், கிடைக்கக் கூடாத பொருட்கள் கிடைத்தால் அதனால் உண்டாகும் கேடுகள், குடி புக வேண்டிய மாதங்கள்,
ராசி, நட்சத்திரம், வாசல் வைக்க வேண்டிய திசைகள் முதலியன பேசப்பட்டுள்ளன.
பெரும்பாலும் விளக்க முறையில் அமைந்திருக்கும் இந்நூல், சில இடங்களில் பகுப்பு முறையில் அமைந்திருக்கிறது. அந்த இடங்கள் தான் அடர்த்தியான அரசியல் தந்திரங்களைக்
கொண்டதாக இருக்கின்றன. அந்தத் தந்திரம், தந்திரம் எனத் தெரியாதபடி விளக்கமுறையால் மூடப்பட்டிருக்கிறது.
நூல், பிராமணர் x பிராமணரல்லாதார் x மற்றவர்கள் என்னும் பகுப்பில் நின்று கொண்டு பேசும்
செய்திகள் பிராமணர்களின் நலனை உறுதிப்படுத்துவனவாகவே இருக்கின்றன. பிராமணர்கள் தம்மை
பிராமணரல்லாதார், மற்றவர்களிடமிருந்து விலக்கிக் கொள்ளவும், பிராமணர்களுக்கான சுகபோகத்திற்கு
உத்திரவாதம் ஏற்படுத்திக் கொடுக்கவுமே மனைக்குறி வகைமையிலான சாஸ்திர நூல்களின் உருவாக்கத்
தேவை இருந்திருக்கிறது. பிராமணர்கள் சுகபோகமாக வாழ வழிசெய்யும் ஒரு நூலை பிராமணர் அல்லாதவர்
எழுதியிருப்பது நகைமுரணாக இருக்கிற அதேவேளையில், பிராமணியத்தின் சுகபோகத்தைப் போல தாமும்
பெறுவதற்கு பிராமணரல்லாதவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சொல்வதாகவும் இந்நூலைப்
புரிந்து கொள்ள முடியும்.
ஆடி, மார்கழி,
புரட்டாசி, பங்குனி, மாதங்களில் குடி போகக்கூடாது எனக் குறிப்பிடும் இந்நூல், அதற்கான காரணங்கள் முறையே ராவணன்
மரணம், பாண்டவர்கள் போர் செய்தமை, இரணியன் மரணம், பிரம்மனின் ஐந்தாவது தலை கொய்யப்பட்டது
முதலியனவற்றைச் சொல்கிறது. புராணக்கதைகளைக்
காரணம் காட்டி மாதங்களைத் தீட்டுக்குரியதாகத் திரித்திருக்கிறது. சித்திரை, ஐப்பசி, தை மாதங்களையும் தீட்டுக்குரியதாகவே குறிப்பிடுகிறது.
கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம்,
அவிட்டம், சித்திரை, புனர்பூசம், விசாகம், புரட்டாதி நட்சத்திர நாள்களில் குடித்தனம்
போனால் குடி பாழாகும் என குறிக்கும் நூல், அந்நாட்களில் பருவமெய்திய பெண்கள் மலடாவார்கள், யாத்திரை போனாலும் துன்பப்படுவார்கள்
என்கிறது. பெண்களின் இயல்பான உடலியல் மாற்றங்களை நட்சத்திரங்களோடு தொடர்புபடுத்தி,
அதைக் குடிபுகுதலோடு இணைத்துத் தீட்டுக்கு உள்ளாக்கும் தொழிற்பாடு
நகைப்புக்குரியது. சமத்துவத்திற்கு எதிரானது. சாஸ்திரங்களுக்கேயுரிய பெண்ணை புறத்தொதுக்கும்
கருத்தியல் மனைக்குறியிலும் நிரம்பி வழிகிறது.
தாமரை மலர் போன்ற
வாசனையுள்ள இடத்தில் பிராமணர்
வீடு கட்ட வேண்டும் எனக் குறிப்பிடும் நூல், சூத்திரர் வீடுகட்டும் இடம் கருமை நிறத்தோடும்
காரமும் உப்பும் கசப்பும் தானிய வாசமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறது. இது மக்களைப்
பிரித்து வைக்கும் வெறுப்பரசியல்.
நீர்நிறை நிலத்தோடு
தொடர்புடைய தாமரையை பிராமணரோடு
தொடர்புபடுத்தி நீர்நிறை நிலத்தை பிராமணருக்கு உடமையாக்கும் வேலையைச் செய்திருக்கும்
சாஸ்திரம், அதற்கு முற்றிலும் மாறுபட்ட, வறண்ட கரிசல் நிலத்தைச் சூத்திரருக்கு உடமையாக்கும்
வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது.
சத்திரியருக்கான
நிலம் அதிகச் சிகப்பாகவும்
துவர்ப்புச் சுவையோடு குதிரை மணமுடையாதாகவும் இருக்க வேண்டும் என்கிறது. சிவப்பு, துவர்ப்பு,
குதிரை என்கிற சொற்களுக்கு பின்னுள்ள அரசியல் முக்கியமானது. சூத்திரருக்குக் கருப்பு,
சத்திரியருக்குச் சிவப்பு என முரண் நிறங்களை முன்னிறுத்தி சூத்திரருக்கும் சத்திரியருக்கும்
முரணை உருவாக்கி சத்திரியரின் வெளியிலிருந்து சத்திரியர்களைக் கொண்டே சூத்திரர்களைத்
துரத்தி அடிக்கும் வேலையைச் செய்திருக்கிறது மனைக்குறி சாஸ்திரம்.
ஜங்கமர் சாதியினர் பச்சை நிறமுடையதும் உப்பு,
புளிப்பு சுவையும் உள்ள இடத்தில் வீடு கட்டுவது உத்தமம் எனச் சொல்லும் நூல், அடுத்த
நிலையில் சகல சாதிகளுக்கும் வீடு கட்டுவதற்கு நீங்காத மதுரமும் பரிமள மணமும் கொண்ட
நிலத்தைப் பரிந்துரைக்கிறது. சகல சாதிக்குரிய நிலத்திற்கு நிறம் சொல்லப்படவில்லை. ஜங்கமர்
சாதி என்பதற்கு ‘திருக்கூட்டத்தார்’, ‘வீரசைவர்’ என தமிழ் அகராதிகள் பொருள் தருகின்றன.
ஜங்கமைரைத் தனித்துக் குறிப்பிடுவதற்கான காரணம் ஆராய்ச்சிக்குரியது.
வீடு கட்ட வானக்குழி
தோண்டும்போது கரி, உமி, விறகு, எறும்பு, தேள், பாம்பு, தேன்கூடு, ஆமை, பூரான், கரையான்,
முட்டை, நகம், மயிர் ஆகியவை காணப்பட்டால் பொல்லாங்கு நேரிடும் என குறிப்பிடும் நூல், தவளை, அரணை, பல்லி, நண்டு,
பசுவின் கொம்பு, தானியம், செங்கல், பஞ்சலோகம், புதையல் ஆகியன கிடைத்தால் உத்தமம் என்கிறது.
உத்தமத்திற்குக் காரணமானவற்றில் பல முற்றிலும் நீர்நிறை நிலத்தோடு தொடர்புடையவை. நீர்நிறை
நிலம் பிராமணருக்கு உரியது. இப்படி நீர்நிறை வளமுள்ள இடத்தை பிராமணருக்கு உறுதி செய்த
சாஸ்திரங்களை அரசர்கள் சட்ட நூலாகக் கொள்ளும்போது பிராமணரல்லாதவர்கள் நீர்நிறை நிலத்திலிருந்து
வெளித்தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
வானக்குழி தோண்டும் போது பொன், வெள்ளி, செம்பு காணப்பட்டால் உத்தமம். இரும்பு,
ஈயம், பித்தளை காணப்பட்டால் மத்திமம். கருங்கல், எலும்பு காணப்பட்டால் மனைக்குரியவளும்
உரியவனும் மரணிக்க நேரிடும் என்கிறது. வானக்குழி தோண்டிய மண்ணைக் கொண்டு வானத்தை மூடும்
போது மண் மீதமிருந்தால் லாபம். சமமாக இருந்தால் மத்திமம். குறைவாக இருந்தால் செலவு
அதிகரிக்கும் என்கிறது. வீடுகட்ட உதவாத மரங்களாக அத்தி, ஆலம், அரசு, குச்சம், இறந்தை,
பிலி, மகிழம், விளாம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, ஆற்றில் அடிபட்டு விழுந்த மரம்,
ஆலயத்தில் இருந்த மரம், மயானத்தில் இருந்த மரம் ஆகியவற்றை வீட்டிற்குப் பயன்படுத்தினால்
வம்சம் நாசமடையும் என்கிறது. வீட்டின் எல்லைக்குள் பரித்தி, அகத்தி, பனை, நாவல், நெல்லி,
எருக்கு, புளி மரங்கள் இருந்தால் லட்சுமி ஓடிப்போவாள் என்று அம்மரங்களுங்குத் தீட்டுக்
கற்பிக்கிறது. சாதாரண அகத்தி, பனை முதலிய மரங்களுக்குப் பயந்து ஓடிப்போகின்ற அளவுக்குப்
பலவீனமானவளா லட்சுமி என்கிற கேள்வி இவ்விடத்தில் எழாமலில்லை.
ஊரில் பிராமணர்
தெற்கிலும் சத்ரியர் மேற்கிலும் வைசியர் வடக்கிலும் சூத்திரர் கிழக்கிலும் குடி இருப்பார்களேயானால்
லட்சுமி குடியிருப்பாள் என்கிறது. ஊரின் தெருக்கள் அமைந்திருக்கும் விதத்தை வைத்தே
சாதியை அறிந்துகொள்ளும் தந்திரத்தை லட்சுமியுடன் இணைத்து அதற்குப் புனிதத்தன்மையை ஏற்றியிருக்கிறது.
தமிழக நில அமைப்பில் தெற்கு, வடக்கு, மேற்குத் திசைகளில் பயன்படுத்திய தண்ணீர் கழிவாகி
சூத்திரரின் கிழக்குத் தெருவுக்குள் செல்ல வேண்டும். வாடைக்காற்றை வைசியர் எதிர்கொள்ள
வேண்டும். தென்றலை பிராமணர் அனுபவிக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடென்றே இதைப் புரிந்துகொள்ள
முடியும். தான் இருக்கும் கிழக்கிற்கும் கிழக்குத் திசையில் சேரிகளை வைத்திருக்கும்
வன்மமும் அதிபயங்கர நுட்பமுடையது. இந்த இடத்தில் சூத்திரர்களும் பிராமணர்களாகி விடுகிறார்கள்.
சாஸ்திரங்களின் முகங்கள் இப்படி இருக்க, இப்பொழுது சாஸ்திரம் என்பதன் வழியான பண்பாட்டு
மீள்கட்டமைப்புக்கான குரல் ஒருபுறத்திலிருந்து ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்தச் சூழலில் ‘சாஸ்திரம்’ என்ற சொல்லுக்கு ‘சமத்துவத்துக்கு எதிரானது’ என்றே பொருள்
என்பதைப் பூர்வீகக் குடிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
………………….
Comments