Skip to main content

அரசுப் பள்ளி மாணவர்களின் புதிய எதிர்கொள்ளல்…



அரசுப் பள்ளி மாணவர்களின் புதிய எதிர்கொள்ளல்…
ஞா.குருசாமி

          மக்களின் பொறியியல் குறித்த எதிர்மறை எண்ணம் கடந்த ஆண்டை விட இப்பொழுது அதிகரித்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிக்குச் செலவிடும் தொகையில் சிறுபகுதியைத் தனியார் பள்ளியில் செலவளித்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குத் தம் பிள்ளைகளைத் தயார் படுத்துவதே நிரந்தர வருவாயுள்ள, நடுத்தர மக்களின் பெருங்கனவாக இருக்கிறது. அது சாத்தியப் படாத பொழுது அவர்களின் அடுத்த இலக்கு பொறியியல். போதிய வேலை வாய்ப்பின்மை, தற்போதைய சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் பொறியியல் இலக்கை மாற்றி இன்று கலை அறிவியல் கல்லூரிகளை நாடத் தொடங்கி விட்டனர். அறிவியலில் இயற்பியல், கணிதப் பட்டப்படிப்புகளுக்கும் கலையியலில் ஆங்கில இலக்கியப் படிப்புக்கும், வணிகவியலுக்கும் மிகுந்த போட்டி ஏற்பட்டிருக்கிறது.
       அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கணிசமான பேரளவில் வெற்றி பெற்று பணிவாய்ப்பு பெற்றுவிடுகின்றனர். கல்வியியல் முடித்த பலர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி இருபத்தைந்து வயதுக்குள் அரசுப் பள்ளியில் ஆசிரியராகி விடுகின்றனர். தனியார் பள்ளிகளிலும் பணி வாய்ப்பு நிரம்ப இருக்கின்றன. இச்சூழலோடு பொறியியலை ஒப்பிடும் மக்களின் மனப்போக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் அவர்களைத் திருப்பி விட்டிருக்கிறது. அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளிலும் தற்போது விண்ணப்பம் வாங்கவும், சமர்ப்பிக்கவும் நீண்ட வரிசையைக் காண முடிகிறது. நான்காயிரம் இடங்களைக் கொண்டுள்ள பிரபலமான கலை அறிவியல் கல்லூரிகள் சிலவற்றில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் இருபத்தைந்தாயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
    பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் விழுக்காட்டு அடிப்படையில் தனியார் பள்ளி மாணவர்களில் பெரும்பாலும் ஆயிரத்திற்குக் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் குறைவு. அதே போல அரசுப் பள்ளி மாணவர்களில் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களும் மிகமிகக் குறைவு. இந்த வேறுபாடு பாடவாரியாக இருப்பதும் மறுப்பதற்கில்லை. மாநில முழுவதும் பாடவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த 54 மாணவர்களில் அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் மூவர் மட்டுமே. கன்டோண்மெண்ட் போர்டு பள்ளிகள் 99.20 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளில் குறிப்பாக பழங்குடியினர் பள்ளிகள், நகராட்சி, சமூக நலப் பள்ளிகள், வனத்துறை, ஆதி திராடவிடர் நலத்துறைப் பள்ளிகள் 86 விழுக்காட்டிற்கும் குறைவான தேர்ச்சி விகிதங்களையை பெற்றிருக்கின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையில் மதிப்பெண் பெறுவதிலும் தேர்ச்சி விகிதத்திலும் உள்ள இடைவெளி, தொடர்ந்து இருந்துவரும் விஷயம் தான் என்றாலும் அது தற்பொழுது புதியதொரு கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.
    தனியார் பள்ளியில் படித்து மருத்துவம் கிடைக்காத நிலையில் பொறியியல் விருப்பமில்லாமல் இருக்கும் மாணவர்களின் வரவு கலை அறிவியல் கல்லூரிகளில் அதிகரித்துள்ளதால், அதை மட்டுமே நம்பியிருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு மிகவும் பின்னுக்குத் தள்ளப்படுகின்ற சூழல் உருவாகி வருகிறது. கலை அறிவியல் கல்லூரிகள் நிர்ணயிக்கும் கட்ஆஃப் மதிப்பெண் விகிதம் தனியார் பள்ளி மாணவர்களிடமே இருப்பதால் அவர்களே அதிக வாய்ப்பு பெறுகிறார்கள். அறுநூறுக்கும் எண்ணூறுக்கும் இடைப்பட்ட மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களால் உயர்ந்துள்ள கட்ஆஃப் மதிப்பெண்ணைக் கல்லூரியின் அறிவிப்புப் பலகையில் பார்த்து கூசுகின்றனர். ஐநூறுக்கும் அறுநூறுக்கும் இடைப்பட்ட மதிப்பெண் பெற்ற பின்தங்கிய கிராமப்புற அரசுப்பள்ளி ஏழை மாணவர்கள் உயர்கல்வியை நினைத்துக்கூட பார்க்கமுடியாத நிலை உருவாகி வருகிறது. இதனால் சராசரி மற்றும் சராசரிக்கும் குறைவான மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் நிலை கவனப்படுத்த வேண்டியதாக இருக்கிறது.
           அரசுப் பள்ளி மாணவர்களும் உயர்கல்வி பெற ஏதுவாக குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் அவர்களுக்கென்று இடஒதுக்கீடு செய்ய வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது. அது இல்லாத பொழுது தனியார் பள்ளி மாணவர்களின் கலை அறிவியல் கல்லூரிக்கான வரவு அரசுப் பள்ளி மாணவர்களைத் துரத்தியடிக்கும் என்பதே நம் கண்முன் நிற்கும் உண்மை.
      பொறியியலை இலக்காகக் கொண்டவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளை நாடுவதாலும், ஓரிடத்திற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களிடையை போட்டி உருவாகியிருப்பதாலும் பெரும்பாலான சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் இவ்வாண்டு கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இந்தக் கட்டண உயர்வும் தனியார் பள்ளிகளில் இலட்சங்களைக் கொட்டி படித்தவர்களை விட அரசுப் பள்ளிகளில் இலவசமாகப் படித்துத் தேறிய மாணவர்களைப் பாதிக்கும் காரணியாக மாறியுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு தீர்வு காணாவிடில் அரசுப் பள்ளிகள் மீது இருந்து வரும் குறைந்த பட்ச நம்பிக்கையையும் கொன்றொழிக்கத் துணை போவதாகிவிடும்.

Comments

Popular posts from this blog

சாங்கிய காரிகை என்னும் தத்துவ நூல்

            சாங்கிய காரிகை என்னும் தத்துவ நூல் ஞா.குருசாமி வடமொழி என்பது சமஸ்கிருதம் , பிராகிருதம் , பாலி ஆகிய மூன்று மொழிகளையும் குறிக்கும் . மூன்று மொழிகளில் இருந்து தமிழில் வழங்கும் சொற்களை வடமொழிச் சொற்கள் என்று குறிப்பிடுவது தமிழில் வழக்கம் . அப்படி மூன்று மொழிகளின் சொற்களைத் தமிழில் பொதுப்பெயர்ச் சொல்லால் குறிப்பிடுவது பல நேரங்களில் தவறாகவும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது . ஏன் இது நேர்ந்தது என்று தெரியவில்லை .  நெல்லை க . சுப்பிரமணியன் எழுதிய ‘ சாங்கியக் காரிகை ’ என்னும் நூல் 1980 ஆம் ஆண்டு வெளியானது . இந்நூலுக்கான அணிந்துரையை இலங்கை , சிதம்பரா கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியர் கே . எஸ் . கிருஷ்ண ஐயங்கார் ஆங்கிலத்தில்   எழுதியிருக்கிறார் . அதில் கடைசிப் பத்தி ‘The original sutra in sanskirt have been carefully compared with Tamil rendering and I am glad to state that the translate brings out the meaning clearly’ என்பதாக அமைந்திருக்கிறது . இதைத் தமிழுக்கு மொழிபெயர்த்த பா . வளன் அரசு sanskirt என்பதற்கு வடமொழி எனப் பெயர்த்திருக்கிறார் . அப்படி பெயர்ப்பது வளன் அரச

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்தியாவின