Skip to main content

பண்பாட்டை முன்னெடுத்தலில் இளைஞர்களுக்கான வெளி



ண்பாட்டை முன்னெடுத்தலில் இளைஞர்களுக்கான வெளி
ஞா.குருசாமி,
அரசுக்கும் மக்களுக்குமான வெளி சிறுகச் சிறுக அதிகரித்து இன்று உச்சத்தை எட்டியிருக்கிறது. ஆட்சியாளர்களின் சிந்தனையும் செயல்பாடும் அவர்களின் உள்மனவெளியின் பாசாங்குத் தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. மக்கள் எல்லாவற்றையும் சகிக்கப் பழகிவிட்டிருப்பதுதான் காலத்தின் பேரவலம். ‘கறுப்பாக இருப்பவர்கள் இந்தியர்கள் அல்ல’, ‘சிறுபான்மையினர் தேசத் துரோகிகள’;, ‘லெக்கின்ஸ் அணியும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள’; என்றெல்லாம் ஆட்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்ட ஆபத்தான பேச்சுகளுக்கும் பண்பாட்டோடு தொடர்புடைய பிற்போக்கான கருத்துக்களுக்கும் மக்கள்திரள் போதுமான எதிர்வினையைக் காட்டாதது சமுதாய அக்கறையுள்ளவர்களைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. தேசியச் சூழல் இப்படியிருக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் உளவியல் நெருக்கடிகள் ஏராளம். இவைகளுக்கு இடையில் எல்லாவற்றுக்கும் ஏங்கித் தவிக்கும் சமூகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுவிட்டது.
வாழ்தலுக்கான இருத்தலுக்கே ஏங்கித் தவிக்கும் சூழலில் பண்பாட்டை முன்னெடுக்கும் சாத்தியப்பாடுகள் குறித்தும் அவதானிக்க வேண்டிருக்கிறது. சர்வதேசிய மற்றும் இந்தியத் தேசியத்திற்கான பண்பாட்டுக் கூறுகளில் சில, பிராந்திய பண்பாடுகளுக்கும் பொருந்துவதுண்டு. அந்தவகையில் சர்வதேசிய, இந்தியப் பண்பாட்டுக்கேயுரிய வேளாண்மையை மையமிட்ட தன்மை தமிழ்ப்பண்பாட்டுக்கும் பொருந்தும். தமிழ்ப் பண்பாடும் வேளாண்மையோடு பின்னிக்கிடப்பது. சடங்கு, விழா, வழிபாடு முதலிய எல்லாமும் வேளாண்மையில் இருந்தே உருவாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைத்தவை. இதனால் தான் பழந்தமிழ் இலக்கியங்களும் காப்பியங்களும் வேளாண்மையையும் அதோடு தொடர்புடைய நீர், நிலம், காடு, மலை என எல்லாவற்றையும் கொண்டாடி இருக்கின்றன. இப்போக்கை கிரேக்க காவியங்களிலும் வட இந்தியப் பழங்கதைகளிலும் காணமுடியும்.
வேளாண்மை உயிர்ப்போடு இருந்தவரையில் பண்பாடும் உயிர்ப்போடு இருந்தது. சமுதாயம் இயற்கையில் இருந்து அந்நியப்பட்டதன் விளைவு வேளாண்மையை இழந்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் வேளாண்மைக்கு ஏற்பட்ட பின்னடைவில் குடும்பங்கள் உடைந்திருக்கின்றன. களத்துமேட்டில் வாரக் கணக்கில் குடியிருந்து கதிரடித்து அங்கேயே பச்சை நெல்லைக் குத்திச் சமைத்து உண்டு பெருங்கூட்டமாய் வாழ்ந்த குடும்பத்தின் சிதைவுக்குப் பின,; எஞ்சி நின்ற உறவுச் சொற்களும் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா என்னும் இரண்டாம் மூன்றாம் நிலை உறவுச் சொற்களைக் குடும்பங்கள் உச்சரிக்கும் சூழல் வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கிறது.
சர்வதேசிய மற்றும் தேசியக் கொள்கைகள் கூடி வாழும் வாழ்வியல் முறையைச் சிதைத்தமைக்குப் பின் புதிதாக உருவான தனிக்குடும்ப வாழ்வியல் முறையும் இன்றைக்குக் கடைசி மூச்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கல்வி, வேலை, திருமணம் முதலியவைகளின் பொருட்டு ஒவ்வொருவரும் சிதறடிக்கப்பட்டுவிட்டனர். நான்கு உறுப்பினர்களைக் கொண்ட மத்தியதரக் குடும்பத்தில் நால்வரும் சந்தித்துக் கொள்ளும் தருணங்கள் அருகி வருகின்றன. திருவிழா காலங்களிலும் தொடர் விடுமுறை நாட்களிலும் விமானம், இரயில், பேருந்துகளில் நிரம்பி வழிகின்ற மக்கள் கூட்டம் பூர்வீக வாழ்விடத்தில் இருந்து சிதறடிக்கப்பட்டிருக்கும் மக்கள் திரளின் அளவுகோள்.
இவ்வளவு சூழ்நிலைகளையும் கடந்து படித்து முடிக்கும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் தீராத பிரச்சினை வேலையின்மை. அமைப்பு சாரா தொழிலாளர்கள் சம்பாதிப்பதற்கு இருக்கும் சூழல் கூட படித்த இளைஞர்களுக்கு இல்லை. இதனால் இளைஞர்களுக்குத் தக்க வயதில் கிடைக்க வேண்டிய நிரந்தர வருமானம், திருமணம் முதலிய யாவும் தள்ளிப் போகின்றன. இவற்றால் இளைஞர்களுக்கு நேரும் உளவியல் சிக்கல் கொடூரமானது. அதுவும் முதல் தலைமுறையில் இருந்து படித்துவந்த இளைஞர்களெனில் அவர்களுக்கு முன்னால் விரியும் வெறுமை சூழ்ந்த உலகம் இருக்கிறதே அது சொல்லில் அடங்காதது.
இந்நிலையில் இன்று உருவாக்கப்பட்டிருக்கும் நவீன நுகர்வுக் கலாச்சாரம் பணம் படைத்தவர்களுக்கான உலகத்தை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. முன்பெல்லாம் பழுதான பொருள்களைப் பழுது நீக்கிப் பயன்படுத்துகிற பழக்கம் இருந்தது. இன்று தூக்கி எறிந்துவிட்டு புதிதாக வாங்க வேண்டிய மனநிலை அனைவருக்குள்ளும் கட்டமைக்கப்பட்டுவிட்டது. வாரம் ஒருமுறையேனும் உயர்தர உணவகங்களுக்குச் செல்வது அவசியமாக்கப்பட்டுவிட்டது. நண்பனொருவன் இருபதாயிரம் மதிப்புள்ள செல்போன் வைத்திருக்கும் இடத்தில் ஐந்தாயிரம் மதிப்புள்ள செல்போனை வைத்திருப்பவனின் நிலை அவமானத்திற்குரியதாக மாற்றப்பட்டுவிட்டது. நண்பன் வீட்டில் கார் நிற்கும் போது தனது வீட்டில் பைக் கூட இல்லையே என ஏங்குவோரும் இல்லாமல் இல்லை. வசதி படைத்த ஆண் நண்பனைக் கொண்டிருக்கும் சக பெண்ணின் வாழ்வியல் சூழல், அது அமையாத பெண்ணுக்குக் கௌரவப் பிரச்சினையாக ஆகியிருக்கிறது. வரதட்சனை என்ற ஒற்றைக் காரணத்திற்காகத் தள்ளிப் போகும் திருமணத்தாலும் மாப்பிள்ளை வீட்டார் நிராகரிப்பதற்காகச் சொல்லும் அற்பக் காரணங்களாலும் மனம் வெதும்பிப் போயிருக்கிற இளைஞிகள் எக்கச்சக்கம்.
பெருநகரங்களில் படித்த வேலையில்லா இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுக் கைதாகின்ற செய்திகளின் வரத்தும் இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது. இதற்கான காரணம் இன்று நேற்று உருவானதல்ல. வேளாண்மையைச் சிதைக்கத்; தொடங்கியபோதே ஆரம்பித்து விட்டது. மக்களின் வாசிப்பிடத்திலேயே அவர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்துக்கொண்டிருந்த வேளாண்மை அழிக்கப்பட்டதால் உருவான பிரச்சினை அது.
இந்தச் சூழலில் இளைஞர்கள் பண்பாட்டை முன்னெடுக்க வேண்டும். பண்பாடு பேணப்பட வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுக்கான தனித்தன்மையை இழந்து விடக்கூடாது என்பதான முன்னெடுப்புகள் சவால் நிறைந்தது. மக்கள் யாரும் இப்பொழுது கூட்டாக இல்லை. ஒவ்வொருவரும் தனித்தனி மனிதராக ஆக்கப்பட்டுவிட்டார்கள். எல்லாருடைய கைகளிலும் இருக்கின்ற வசதிகள் நிரைந்த செல்போன்களே அவர்களின் உலகத்தைத் தீர்மானிக்கின்றன. அரைமணி நேரப் பயணம் என்றாலும் கூட பக்கத்தில் அமர்ந்திருப்பவரோடு பல கதைகளைப் பேசி பயணம் செய்த காலத்தின் சுகம் இனி சாத்தியம் இல்லை. பத்துமணி நேரப் பயணம் என்றாலும் பக்கத்தில் இருப்பவரை அறியாமல் வாழ்தல் தான் வாழ்வாக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தனித்தனியாகச் சிதைந்திருக்கும் மனிதர்கள் தமது பண்பாட்டைக் காப்பாற்ற முடியுமா? தனி மனிதர்களால் பண்பாட்டு நீட்சி சாத்தியமானதா? இதுவரை கைக்கொண்டு வந்த, மேன்மையானதாக நம்பப்படுகின்ற பண்பாடு இனி அதே வடிவத்தில் தொடர்ந்து வருமா? தற்போதைய பண்பாட்டின் வடிவம் உண்மையிலேயே மிகப் பழமையானதா? உலகம் ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் போது பிராந்தியப் பண்பாட்டைச் சுமந்துகொண்டிருக்க முடியுமா? என்பதான கேள்விகளையும் அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளி விடமுடியாது. காலந்தோறும் காலத்திற்கேற்றவாறு தகவமைப்பட்டே வந்திருக்கும் பண்பாடு, டிஜிட்டல் யுகத்திலும் டிஜிட்டலாக மாற்றப்படும். ஏனெனில் பண்பாடு ஆவதல்ல ஆக்கப்படுவது. பண்பாட்டு முன்னெடுப்பு இளைஞர்களால் மட்டுமே ஆகக்கூடியதும் அல்ல. அது ஒரு கூட்டு மனநிலைச் செயல்பாடு. அது நிகழ்ந்தேற இளைஞர்களோடு அனைத்துத் தரப்பினரும் கைகோர்க்க வேண்டும். அரசியலையும் ஆட்சியையும் இளைஞர்களுக்குக் கொடுத்தாக வேண்டும். செய்யத் தவறும் பட்சத்தில் காலம் அவர்களின் கைகளில் ஆயுதங்களைத் தந்துவிட்டுப் போகும்.
.....

Comments

Popular posts from this blog

சாங்கிய காரிகை என்னும் தத்துவ நூல்

            சாங்கிய காரிகை என்னும் தத்துவ நூல் ஞா.குருசாமி வடமொழி என்பது சமஸ்கிருதம் , பிராகிருதம் , பாலி ஆகிய மூன்று மொழிகளையும் குறிக்கும் . மூன்று மொழிகளில் இருந்து தமிழில் வழங்கும் சொற்களை வடமொழிச் சொற்கள் என்று குறிப்பிடுவது தமிழில் வழக்கம் . அப்படி மூன்று மொழிகளின் சொற்களைத் தமிழில் பொதுப்பெயர்ச் சொல்லால் குறிப்பிடுவது பல நேரங்களில் தவறாகவும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது . ஏன் இது நேர்ந்தது என்று தெரியவில்லை .  நெல்லை க . சுப்பிரமணியன் எழுதிய ‘ சாங்கியக் காரிகை ’ என்னும் நூல் 1980 ஆம் ஆண்டு வெளியானது . இந்நூலுக்கான அணிந்துரையை இலங்கை , சிதம்பரா கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியர் கே . எஸ் . கிருஷ்ண ஐயங்கார் ஆங்கிலத்தில்   எழுதியிருக்கிறார் . அதில் கடைசிப் பத்தி ‘The original sutra in sanskirt have been carefully compared with Tamil rendering and I am glad to state that the translate brings out the meaning clearly’ என்பதாக அமைந்திருக்கிறது . இதைத் தமிழுக்கு மொழிபெயர்த்த பா . வளன் அரசு sanskirt என்பதற்கு வடமொழி எனப் பெயர்த்திருக்கிறார் . அப்படி பெயர்ப்பது வளன் அரச

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்தியாவின