பள்ளி உணவு சமைப்பதில் மீண்டும் தொடரும் வன்கொடுமை.
கரூர் மாவட்டம் சின்னரெட்டிபட்டியின் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் கிழ் சமையலராகப் பணிபுரிந்த நிரோஜாவை டிசம்பர் 16 ஆம் தேதி சமைக்க விடாமல் தடுத்துள்ளனர் சாதி இந்துக்கள். பள்ளி தலைமை ஆசிரியர் பானுமதி, மகளிர் திட்ட கிளை மேலாளர் சத்யா ஆகியோரும் குற்றத்திற்குத் துணையாக இருந்திருக்கின்றனர். ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு பிறகு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
2018 இல் திருப்பூர் அருகில் உள்ள திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு பள்ளியில் பட்டியலினத்தைச் சார்ந்த பாப்பாள் என்பவரைச் சமையல் செய்யவிடாமல் தடுத்தனர். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டு சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. குற்றம் சாட்டப்பட்ட 36 பேரில் 25 பேர் விடுவிக்கப்பட்டனர். 4 நபர்கள் மரணம். 6 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இது மிகவும் குறைவான தண்டனை என்று வழக்கறிஞர் ப.பா.மோகனும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
குறைவான தண்டனையும் அபராதமும் விதித்தல், குற்றவாளிகளை விடுவித்தல், சாட்சிகள் பிறழ்தல், பொய்யான ஆவணங்களின் அடிப்படையில் முடிவுக்கு வருதல், அரசு அலுவலர்களின் சாதிவெறி, வழக்கை நடத்துவதில் அரசு எந்திரத்தின் மெத்தனம் என எல்லாமும் சேர்ந்து சாதிஇந்துகளைக் காப்பாற்றுவதால் இது போன்ற குற்றங்கள் தொடர்கின்றன.
இது கண்டிக்கப்பட வேண்டும்.
செய்தி ஆதாரம்: The Hindu 29.12.2025
பாப்பாள் சம்பவம் குறித்த இணைப்பு
https://share.google/ICIkSlzrjeGdekKIh

Comments