ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகள்
- சில புரிதல்கள்
ஞா.குருசாமி
தமிழின்
மிக முக்கியக் கவிஞர்களுள் ஒருவராக அடையாளம் காட்டப்பெறாத, அதிபரிசுத்தமான இலக்கியவாதிகள்
அவ்வப்போது தயாரிக்கும் அனைத்து தகுதிப் பட்டியலிலும் தவறாது இடம் பெறாமல் இருந்து
வருகிற ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகள் கூர்மையான ஆயுதங்களைச் சுமந்துகொண்டிருப்பவை.
ஆயுதம் வைத்திருந்தலும் ஆயுதமாகவே வாழ்ந்தாலும் அது தரும் அச்சத்தில் விலகிநின்று வீரம்
பேசும் அதிபரிசுத்த இலக்கியவாதிகள் ஆதவன் தீட்சண்யாவை தவிர்த்துவிட்டுப் பேசுவது ஆச்சரியமில்லை
தான். அது அவர்களது இயல்பு. அது போலவே எதையும் கண்டுகொள்ளாமல் சுட்டெரித்துக்கொண்டிருப்பது
ஆதவனின் இயல்பு.
சமுதாயச்
செயல்பாட்டாளராக, பத்திரிகையாளராகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஆதவன் தீட்சண்யாவின்
கவிதைகள் சமகாலத்தின் தேவைகளில் முக்கியமானவை. அவை மக்களின் வலிகளை, வரலாற்றை, தியாகத்தை,
சுபாவத்தை, பேதத்தை, காலந்தோறும் நிகழ்த்தப்பட்ட சதிகளை, துரோகங்களை உள்ளபடியை பேசுவதில்
கவனத்திற்குரியனவையாய் நிற்கின்றன.
‘அம்பலம்’
என்னும் கவிதை தேசத்தைப் பற்றி பேசுகிறது. தேச அபிமானிகளின் உண்மை மனத்தை வெளிச்சத்திற்கு
இழுத்துவருகிறது. அதாவது, தேசம் இங்கு தேசமாக இல்லை எனச் சொல்லி தேசத்தைத் தேசமாகப்
புரிந்துகொண்டிருக்கும் அபத்தத்தைத் தோலுரிக்கிறது. தேசம் என்று பேசப்படுவதெல்லாம்
சுகபோகிகளின் சொத்துக்கள் தான். அவர்களின் சொத்துக்களைத்தான் அவர்கள் தேசம் என்று கொண்டாடுகிறார்கள்.
நமது தேசத்தைப் பாதுகாப்போம் என்று சொல்வதன் பொருள் நமது சொத்துக்களைப் பாதுகாப்போம்
என்பது தான் என்கிற சிந்தனையைத் தந்து நிற்கிறது. இதில் இடம் பெறும் ‘சொத்துக்களற்ற
எனக்கு சொத்துக்கள் உள்ளோர் கொண்டாடும் தேசத்திற்கு விசுவாசமாய் இருக்க முடியாது’ என்பதான
கூற்று நியாயமானது.
‘இன்னும்
இருக்கும் சுவர்களின் பொருட்டு’ கவிதை சுவர்கள் பற்றிய புரிதலை விசாலமாக்குகிறது. சுவர்கள்
மனிதர்களைக் காப்பதற்காகவே என்று காலங்காலமாக நம்பப்பட்டு வருவது மாறி இப்பொழுது மனிதர்கள்
சுவர்களைக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்னும் செய்தி மனித மனங்களில் புரையோடியிருக்கும்
சாதிய வன்மத்தின் கோரத்தைப் புலப்படுத்துகிறது. சுவர்களால் பிரிக்கப்பட்டிக்கும் தேசத்தில்,
சுவர்களே நிறைந்திருக்கும் தேசத்தில் தேச ஒற்றுமை குறித்துப் பேசுகிறவர்களின் இருப்பைச்
சந்தேகிக்கச் சொல்லும் தொனி கவிதையில் குறிப்பாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
‘புகைப்படத்தின்
கொலையாளி அல்லது கொலையாளியின் புகைப்படம்’ என்னும் கவிதை குற்றவாளிகளுக்கான தேசமாக
ஒன்று உருவாக்கப்பட்டுக் கொண்டு இருப்பதைக் கூறுகிறது. தேசத்தின் பிதாவாக இருப்பவரைக்
கொன்றாலும் கூட, கொல்லப்பட்டவரும் அவருக்கு ஆதரவானவர்களும் மீண்டும் மீண்டும் கொல்லப்படுகிறார்கள்.
கொன்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள் என்பதைச் சொல்கிறது. என்ன பிரச்சினைகள் நடத்தாலும்
எல்லாவற்றுக்கும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பதிலோடு காத்துக்கொண்டிருக்கும் அரசின் கையாலாகாத்
தனத்தையும் இக்கவிதையில் தனக்கேயுரிய பாணியில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆதவன் தீட்சண்யா.
‘ரியல்
எஸ்டேட் பிரச்சினை’ நிலத்தின் வழி ஊடாடும் சாதியத்தை முன்வைக்கிறது. நிலங்களின் விலை
நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கும் போது சேரி மக்களின் நிலம், சேரிகயை ஒட்டிய நிலம்,
சேரி மக்களின் தலைவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டிக்கும் நிலம் ஆகியன விலையேற்றம் பெறாமல்
இருப்பதற்கான காரணம் சாதி அன்றி வேறென்ன என்பதை வெளிப்படுத்துகிறது. ‘இப்பொழுதெல்லாம்
சாதி பார்க்கப்படுவதில்லை’ என்போருக்கான பதிலைக் கொண்டிருக்கிறது இக்கவிதை.
‘முகவரி’
என்னும் கவிதை ஊரின் இரண்டு முகங்களைப் பற்றியது. சேரிக்கான உலகம் என்னுடையது. சேரிக்கு
வெளியிலிருக்கும் உலகம் நான் காணக் கூடாதது என்று நீங்கள் கருதியது என்னும் செய்தியைச்
சொல்லுகிறது. இதன்வழி யார் எதைப் பார்க்கவேண்டும்? யார் எதை உடுத்த வேண்டும்? யார்
எதை உண்ண வேண்டும் என்று வரையறுத்ததின் மீதும் சாதி வாழ்ந்து கொண்டிருக்கிறது, சாதியைப்
பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளே வரையறைகள் என்னும் கருத்தியலை இக்கவிதை வெளிப்படுத்துகிறது.
‘அபகாரியின்
சரிதம்’ பார்ப்பனர்களை அகதிகளாய் சித்திரித்துள்ளது. அகதிகளாய் வந்தவர்கள் அகதிக்கான
நேர்மையோடு நடந்துகொள்ளவில்லை என்று குற்றம் சுமத்துகிறது. பார்ப்பனர்களின் தந்திரங்களையும்
வக்கிரப்புத்தியையும் துரோகத்தால் வீழ்த்தும் பிறவிக்குணத்தையும் சுட்டிக்காட்டிவிட்டு
அவர்களிடம் பலியாகிப் போன மக்களின் சோக வரலாற்றை துக்கமொழியில் எடுத்துரைக்கிறது. அபகரித்து
சொந்தமாக்கி தனதெனப் பெருமை பேசும் இழிகுணத்தைக் காரித் துப்புவதும் கவிதைக்குள் பொதிந்து
கிடக்கிறது.
‘பாரதமாதா
கீ ஜே’ என்னும் கவிதை விஞ்ஞானத்தின் ஊடேயும் நாறிக் கிடக்கும் சாதியத்தைப் பேசுகிறது.
வியாழன் கோளில் சந்தித்துக்கொள்ளும் இரண்டு நபர்களில் ஒருவரின் சாதியை அறிந்துகொண்ட
மற்றவர், அவர் பேசுவதற்கு ஏதுமற்றவர்போல் விலகிச் செல்லும் நுவல்பொருளைக் கொண்டுள்ள
இது, பாரதமாதாவின் தவப்புதல்வர்கள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியானவர்கள். வேற்றுக்கிரகத்திலும்
சாதியற்ற மனிதராக வாழ முயற்சிக்காதவர்கள் என்பதை முன்வைக்கிறது.
‘கடவுளும்
கந்தசாமி பறையனும்’ கவிதை கடவுளும் கந்தசாமி பறையரும் உரையாடுவதாக அமைந்துள்ளது. இக்கவிதையின்
போக்கு கோவிலுக்குள் நடக்கும் அக்கிரமங்களைப் பொறுக்கமாட்டாமல் மூர்ச்சையாகிக் கிடந்த
கடவுள், கந்தசாமி பறையரின் பாதம் பட்டு சுயநினைவைப் பெற்றதாக அமைந்திருக்கிறது. பறையரின்
பாதம் பட்டால் தான் கடவுளுக்கே புத்திவரும், வருகிறது என்பதான மொழிதலை இக்கவிதையில்
காணமுடிகிறது.
‘பிரகடனம்’
என்னும் கவிதை, நீண்ட வரலாற்றை நியாயம் சார்ந்த தருக்கத்தோடு முன்வைக்கிறது. சுயத்தைப்
பாடுகிறது. முன்னோர்களின் சமரசமற்ற போராட்டத்தை அதன் வீரியத்தோடு எடுத்தியம்புகிறது.
தேசத்தின் வரலாறாக எழுதப்பட்டதில் எங்கள் ரத்தமும் உள்ளது என்று வரலாற்றுக்கு உரிமை
கோருகிறது. இக்கவிதைகளில் ஆதவன் தீட்சண்யா பயன்படுத்தியிருக்கும் கவிதை மொழி, தனித்துவமானதாகவும்
கனல் நிரப்பப்பட்ட கலனாகவும் புத்தியுள்ளோர் ஆமோதிக்கும் பகடியாகவும் இருக்கிறது. தேசம்,
ஒற்றுமை, ஒழுக்கம், நேர்மை, மேன்மை என எல்லாவற்றின் மீதும் கட்டமைக்கப்பட்டிருக்கும்
கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி அவமானப்படுத்துகிறது. அவமானத்தை உரியவர்களுக்குக்
கடத்துகிறது. இவ்விதமான மொழியில் அமைவது கவிதை இல்லை என்று சொல்வோர்களுக்கு கவிதை குறித்த
புரிதலின் போதாமையைக் காட்டி நிற்கிறது.
Comments