ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சிவில் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவர் ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் (Hosea Lorenzo Williams). போராட்டக் களத்தில் வெகுஜன உளவியலின் உருவாக்கத் தேவையை நன்கு அறிந்திருந்த அவர், சமகாலத் தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ளப் பங்களித்து இருக்கிறார். சர்வதேசிய அளவில் சிவில் உரிமைப் போராட்டக் களத்தின் எதார்த்த முகமாக இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் வில்லியம்ஸ் ஜனநாயகம், அகிம்சை, அரச வன்முறை, ஊடக அரசியல், வர்க்கம், இனம் ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகும் பெரியதொரு அரசியல் கேள்வியை அவர் காலத்தில் தம் வாழ்வனுபவத்தின் வழி எழுப்பியிருந்தார். தேர்தல் பாதையில் அரசமைக்கும் நாடுகளுக்கான கேள்வி அது.
![]() |
| ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் |
மதநீதியும் அரசியலும்
வில்லியம்ஸ் 1926 ஜனவரி 5ஆம் தேதி, அமெரிக்காவின்
ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தவர். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு
கல்வி, வேலை, வீடு, வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்த ஜிம் க்ரோ (Jim Crow)
சட்டங்கள் அமலில் இருந்தபோது இளமைப் பருவத்தைக் கடந்தவர். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்தில் பணிசெய்தவர். ஆயுதங்களினால் நேரடியாக நிகழ்த்தப்படும் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த
சூழ்ச்சிகளை அறிந்து அகிம்சையின் பக்கம் திரும்பியவர். உரிமை
கோரியும் அடக்குமுறைக்கு எதிராகவும் போரை நிகழ்த்தும் இராணுவத்திலும் இனபேதம்
இருப்பதை அறிந்து தமது எதிர்கால இலக்கை உருவாக்கிக் கொண்டவர். போர் முடிவுக்குப் பிறகு அட்லாண்டா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பட்டம்
பெற்ற அவர், படிப்பின் போது ஆய்வகத்தில் கிடைத்த பயிற்சி
அனுபவங்களிலிருந்து தனக்கான அரசியல் சிந்தனைகளைப் பெற்றார். அதாவது,
போராட்டத்திற்கு உணர்ச்சி மட்டும் போதாது. காரண
காரியத் தருக்கத்தின் அடர்த்தியை அறிந்திருக்க வேண்டும். அதன்படி
செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தார். அதைத்
தம்முடைய வழியில் நடைமுறைப்படுத்தியும் காட்டினார். ஆப்பிரிக்க
அமெரிக்கர்களில் ஒரு பிரிவினர் கிறிஸ்தவத்தைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த
நேரத்தில், அந்த மதம் சொல்லிய நீதிகளை அரசியலுடன் இணைத்தார்.
கிறித்தவத்தில் அடக்குமுறைக்கு எதிரான நெறி, தியாகத்தை
முன்மொழியும் மனவுறுதி, கூட்டுத் தலைமையின் கீழ் செயல்படுதல்
ஆகியவற்றுக்கான வழிகாட்டல் இருப்பதாக நம்பினார்.
இயக்கப் பணி
1950களின் இறுதியில்
மார்டின் லூதர் கிங்கின் தலைமையில் செயல்பட்ட தெற்குக் கிறிஸ்தவத் தலைமைத்துவ
அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்ட வில்லியம்ஸ், மேடைகளில்
பெரிதும் கவனம் செலுத்தாமல் தெரு, சிறை, பேரணி, வாரச்சந்தை, காவல்
நிலையம் ஆகிய இடங்களில் போராட்டத்திற்கான ஆதரவைத் திரட்டினார். வெள்ளையர்களே காவலர்களாக நிரம்பிய காவல் நிலையத்தில் சென்று தங்களது
போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டியது வில்லியம்ஸை உளவுத்துறையின் கண்காணிப்புக்கு
உரியவராக மாற்றியது. அவர் தனது வாழ்நாளில் 150 முறைக்கு மேலாகக் கைதாகி சிறைக்குச் சென்றார். ஒவ்வொரு
சிறைவாசமும் சிறைக்குள் இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு அரசியல் வகுப்பாக மாறியது.
அதனால் சிறைக் கொடுமைகளையும் சக போராளிகளின் மனநிலையையும் ஒருசேர பிரதிபலிக்குமாறு
‘அமெரிக்க ஜனநாயகத்தின் இருண்ட ஆய்வகம்’ என்று
சிறையைக் குறிப்பிட்டார்.
ஆப்பிரிக்க அமெரிக்க
மாணவர்களுக்கு எதிரான வெள்ளை அதிகாரிகளின் பாரபட்ச அணுகுமுறையைக் கண்டித்து 1963இல் நடைபெற்ற பர்மிங்காம் போராட்டத்தில்தான் ‘அகிம்சை
என்பது பலவீனமானதல்ல. அதற்கு வன்முறையை அம்பலப்படுத்தும்
வலிமை உண்டு’ என்பதை வில்லியம்ஸ் நிருபித்துக் காட்டினார். மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் செல்மாவிலிருந்து மாண்ட்கோமரியை நோக்கி
நடைபெற்ற அமைதிப் பேரணியில் இரண்டாம்நிலைத் தலைவராக இருந்து பேரணியை வழி நடத்தினார்.
அப்போது காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வில்லியம்ஸ்
ரத்தம் சிந்தியதைத் தேசியத் தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்புச் செய்தன. அந்தக் காட்சிகள் அமெரிக்கச் சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியதன் விளைவாக
1965இல் அனைவருக்குமான ஓட்டுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.
அதன் பிறகு மக்களின் மனங்களையும் தொலைக்காட்சிகளையும் தன்பக்கம்
திருப்பினார் வில்லியம்ஸ்.
அகிம்சை அன்றாடத்துக்கான வாழ்வியல்
அகிம்சையை வில்லியம்ஸ்
போராட்டத்தின் ஒருவகைக் கோட்பாடாகவோ, தத்துவமாகவோ
முன்வைக்கவில்லை. மாறாக,
அன்றாடத்துக்கான வாழ்வியல் முறையாக விளக்கினார். அகிம்சையை
அமைதியாக அடிபணிதல், செயலில் மெத்தனம் காட்டுதல், எதிரிக்கு ஒத்துழைத்தல் என்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. அது ஆள்வோர்களினுடைய வன்முறையின் மூர்க்கத்தைச் சமூகத்திற்குப்
புலப்படுத்தும் ஒருவகையான திட்டமிட்ட மோதல் என்றார். தான் தீவிரமாக
இயங்கிக் கொண்டிருந்த 1960களில் அமெரிக்காவில் தொலைக்காட்சி
வழி அரசியல் (Television Politics) பிரபலமாகிக்
கொண்டிருந்தது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
என்ற நிலைப்பாட்டை எடுத்த வில்லியம்ஸ், ‘கைதாகி ரத்தம் சிந்த வேண்டும். அதைத் தொலைக்காட்சி வழி
மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்’ என்பதை அவருக்கேயுரிய
போராட்டப் பாணியாகத் தேர்ந்து கொண்டார். அதனாலேயே அரசியல் நோக்கர்களால்
‘அகிம்சையின் களத் தந்திரவாதி’ (Field Tactician of Non-Violence) என அழைக்கப்பட்டார்.
தொடர்ந்து ஒவ்வொரு போராட்டமும் தேசியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகுமாறு
திட்டமிட்டுச் செயல்பட்டார். கேமராவுக்காகப் போராட்டம் நடத்தக்
கூடாது. கேமரா வரும்போது பின்வாங்கவும் கூடாது என்ற உறுதியை அவர்
கடைசி வரை கைவிடவில்லை. இந்தப் பார்வை ஆயுத வழிமுறை
போராட்டத்தை ஆதரித்த மால்கம் எக்ஸ் போன்றவர்களைத் தனிமைப்படுத்தும் செயல் என்று
தம்முடைய சக போராளிகளிடம் இருந்தே விமர்சனம் வந்தபோது, அகிம்சையும்
ஆயுதமும் வேறுபட்டதாக இருக்கலாம். ஒரே நோக்கம் என்று வருகிறபோது
அவை ஒன்றுக்குக்கொன்று எதிரி இல்லை என்றார். மாற்றுப்
போராட்ட வடிவத்தை ஏற்றுச் செயல்பட்டவர்களைப் பற்றி அவர் எதையும் பேசிக்கொள்ளவில்லை.
அவர்களோடு இணைந்து பணி செய்யப் போவதில்லை என்றாலும் முரண்பட்டுக் கொள்ளக்கூடாது
என்பதில் கவனமாக இருந்ததை அவரது செயல்பாடுகள் தெரிவிக்கின்றன. தொலைக்காட்சிகள் வில்லியம்ஸை ‘அப்பாவி மக்களைத் துண்டிவிடுபவர்’
என்று சித்திரித்த போது ‘அநீதி அமைதியாக இருக்கும்
போது போராளி அமைதியாக இருக்க முடியாது’ என்று விளக்கம் கொடுத்தார்.
தேர்தல் வெற்றி
அட்லாண்டா நகரத்தின்
அரசியலில் ஈடுபட்ட அவர் தேர்தலில் வெற்றி பெற்று நகர்மன்ற உறுப்பினர் ஆனார். அப்போது வீடில்லாதோரின் இயக்கத்துடன் இணைந்து பணியாற்றி ஏராளமானோருக்கு வீடு
பெற்றுக் கொடுத்தார். தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து சட்டத்தின்
துணையோடு இருந்து வந்த ‘அதிக வேலை குறைந்த ஊதியம்’ என்ற நீண்டகால சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவந்தார். 1968இல் சிவில் உரிமைப் போராட்டக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட ‘ஏழை மக்கள் பேரணி’ அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அரசியல்
ஆதரவைப் பெறவில்லை. அதை வில்லியம்ஸ் ஒத்துக்கொண்டாலும் ஒரு போராட்டம்
உடனடி வெற்றியைப் பெறாமல் போகலாம். ஆனால் அது எதையும் விதைக்காமல்
போகாது என்றார். உள்நாட்டு இன உரிமைக்கு மட்டுமின்றி அமெரிக்காவுடனான
போரில் வியட்நாமை ஆதரித்தார். ஒப்பீட்டு அளவில் மற்ற உரிமைப்
போராளிகளை விட கள நடைமுறை அரசியலை வெகுஜன உளவியலாக மாற்றும் உத்தி வில்லியம்ஸிடம் அதிகமாகவே
இருந்தது. அதனாலேயே இன்றளவும் வரலாற்றில் மட்டுமின்றி எளிய மக்களின்
நினைவுகளிலும் நிரம்பியிருக்கிறார்.
உரிமை தொடர்பான செயல்பாட்டில் ஒரு முரணில் இருந்து மீளும்போது வேறொரு முரணை எதிர்கொள்ள வேண்டும் என்பது முடிவுறாததாகவே இருந்திருப்பதை வில்லியம்ஸின் வாழ்க்கையிலும் பார்க்க முடிகிறது. தேர்தல் அரசியலில் மகத்தான வெற்றி பெற்ற வில்லியம்ஸை அவரது இறுதிக் காலத்தில் முதலாளித்துவக் கட்டுப்பாடுகளும் நிருவாக அரசியலும் முழுமையாகக் கட்டுப்படுத்தின. தமக்கு முன்னால் எழும்பி நிற்கும் புதிய எதிரியைப் புரிந்துகொண்டு திட்டம் வகுத்து அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்குக் காலம் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இன்று தேர்தலை ஜனநாயக வழிமுறையாக நம்பிக்கொண்டிருக்கும் நாடுகளும் போராளிகளும் வில்லியம்ஸ் விட்ட இடத்திலிருந்து அடுத்த இலக்கை நோக்கி நகர வேண்டும். அவர் விட்டுச் சென்ற செய்தி அதுதான்.
******************

Comments