ஒருநிமிடச்
செய்திகள்
01.01.2018
1.வேணுவாட்டு
வேணுவாட்டு தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள
நாடு. இதன் பழைய பெயர் நியூ கெப்ரீட்ஸ். 12 பெரிய தீவுகளையும் 70 சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. பிரிட்டன் - பிரெஞ்ச்
நாடுகளின் கூட்டு ஆதிக்கத்திலிருந்து 1980 இல் விடுதலை பெற்றது. அடி ஜார்ஜ் ஜோகோ மனு முதல் அதிபராகப் பொறுப்பேற்றார். 3 லட்சம் மக்களைக் கொண்ட இந்நாட்டில் பிஸ்லாமா தாய் மொழி. ஆஸ்ட்ரோனேசியன்
மொழிகளின் பிறப்பிடமாகவும் சொல்லப்படுகிறது. இதன் கிழக்கில் பிஜி தீவும்
தென்கிழக்கில் கலேடோனியாவும் வடகிழக்கில் ஆஸ்திரேலியாவும் உள்ளன. தேங்காய், மது,
மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது. கால்நடை, வேளாண்மை, சுற்றுலா வழி
உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கிக்கொள்கிறது. இந்நாட்டு அரசு தனது மக்களிடம்
பெரும்பாலான விஷயத்திற்கு வரி வசூலிப்பதே இல்லை.
……………………
02.01.2018
2.பிஷ்ணோய் மக்களும் மரங்களும்
1730களில் இராஜஸ்தானின் ஜோத்பூர் மன்னராக இருந்த அஜய்சிங், தனது
ஆளுகைக்கு உட்பட்ட மார்வார் வனப்பகுதியில் புதிய அரண்மனை கட்ட திட்டமிட்டு அதற்காக
அங்கிருந்த மரங்களை வெட்ட உத்தரவிட்டார். மரங்களைத் தங்கள் இனத்தில் தெய்வமாகக்
கருதும் மார்வார் வனப்பகுதி பிஷ்ணோய் மக்கள் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து
மரங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டனர். மன்னர் தனது எண்ணத்தை மாற்றிக்
கொள்ளவில்லை.
வீரர்கள்
மன்னரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.
வேறுவழி இன்றி மக்களை வெட்டிவிட்டு மரங்களை வெட்டினர். இந்நிகழ்வில் 363 மனிதர்களும் மரங்களும் வெட்டப்பட்டனர். இதற்குப் பிறகுதான்
மன்னார்
தனது அரண்மனை கட்டும் முடிவைக் கைவிட்டார். வரலாற்றாளர்கள்
இந்தப் போராட்டத்தை இந்தியாவில் சுற்றுச்சூழலுக்காக நிகழ்த்தப்பட்ட முதல்
போராட்டம் எனக் குறித்துள்ளனர்.
……………………
03.01.2018
3.திருக்குறளை எழுதியவர் குந்த குந்தர்
வந்தவாசி
வட்டத்தில்
வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில்
சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஊர் பொன்னூர்மலை.
இம்மலையின் மீது அமைந்துள்ள ஆலயத்தில் குந்தகுந்தரின் பாதச் சுவடுகள்
வணங்கப்படுகின்றன. அந்த இடத்தில்தான் அவர் 96 வயதில் சமாதி ஆனதாகச் சொல்லப்படுகிறது.
இந்தக்
குந்தகுந்தர் வடநாட்டில் சிரிமதி, கரதுண்டன்
என்னும் தம்பதியரால் எடுத்து வளர்க்கப்பட்டவர். பெற்றோர் இன்னாரென அறியப்படாதவர்.
சிறுவயது முதல் மாடு மேய்த்த குந்தகுந்தர் 11 வது வயதில் குமாரநந்தியிடம் தீக்சை பெறுகிறார். பின்னர் தேசமெங்கும் அலைந்து
நன்நெறிகளைப் போதித்துவிட்டு வாழ்நாளின் பிற்பகுதியில் பொன்னூர்மலைக்கு வருகிறார்
இந்தக்
காலகட்டத்தில் திருப்பாதிரிப்புலியூர் என்றழைக்கப்பட்ட கடலூரில் இருந்த சமண
சங்கத்திற்குத் தலைவராகவும் இருந்திருக்கிறார். பத்மநந்தி, ஏலாச்சாரியார் என்னும் பெயர்களைக் கொண்ட குந்தகுந்தர் தான்
திருக்குறளை இயற்றினார் என்பது சமணர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
---------------------
04.01.2018
4. டெட்சுகன் பதிப்பு
ஜென்
தத்துவங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் டெட்சுகன். ஜென் தத்துவங்கள் யாவும் சீன
மொழியில் இருந்ததால் அவற்றை ஜப்பானிய மொழிக்கு பெயர்க்க விரும்பினார். அதற்குப்
பெரும்பணம் தேவைப்பட்டது. ஜப்பானில் கிராமங்கள், நகரங்கள் என 10 ஆண்டுகள் அலைந்து திரிந்து நன்கொடைகள் வாங்கி பெரும் பணம்
சேகரித்திருந்தார். அந்த நேரம் பார்த்து உஜி நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில்
மக்களில் பலர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்தனர். உணவின்றி தவித்தனர்.
அம்மக்களுக்கு டெட்சுகன் தான் சேகரித்திருந்த பணமர் முழுவதையும் செலவளித்துவிட்டார்.
இரண்டாம்
முறையாக பல ஆண்டுகள் ஒரு பெரும்தொகையைத் திரட்டியிருந்தார். அந்த நேரத்தில்
ஜப்பான் முழுமையுமாக தொற்றுநோய் பரவியது. ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். அதைக் கண்ட
டெட்சுகன் அவர்களுக்காக தன்னிடமிருந்த பணத்தை செலவளித்துவிட்டார்.
மூன்றாம்
முறையாக பல ஆண்டுகள் முயற்சி செய்து பணம் திரட்டி ஜென் தத்துவத்தை ஜப்பானிய
மொழியில் முதல் பதிப்பாக வெளியிட்டார். இன்றைக்கு அப்புத்தகம் ஜப்பானின் கியோடோ
நகரில் ஓபகு மடாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்நூலைப் பார்த்த ஜென் துறவி ஒருவர்
தன் சீடரிடம் இப்படிக் கூறினார். டெட்சுகன் வெளியிட்ட இந்நூல் மூன்றாவது
பதிப்புதான். கண்ணுக்குத் தெரியாத முந்தைய பதிப்புகள் இரண்டு உள்ளன. அவை இந்தப்
பதிப்புகளை விட அற்புதமானவை.
---------------------
05.01.2018
5.டேக்குவாண்டோ
தற்காப்புக்கலை
உலக மக்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக இன்றைக்கு மாரியிருக்கிறது. சில நாடுகளில்
அரசாங்கமே தங்களது மக்களுக்கு தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி
வருகிறது. அந்தவகையில் இன்று கொரியாவில் பிரபலமாக உள்ள தற்காப்புக்கலை ஒன்றின்
பெயர் டேக்குவாண்டோ. 1955 இல் இராணுவப் பயிற்சி முறையோடு கராத்தே உத்தி முறையையும்
கலந்து உருவாக்கப்பட்ட கலை இது. இதை உருவாக்கியவர் சாய் ஹாங் ஹீ. இவர்
இராணுவத்தில் ஜெனரலாகப் பணிபுரிந்தவர். அப்போது இராணுவ வீரர்களுக்கும்
டேக்குவாண்டோவை பயிற்றுவித்தார்
பின்னர்
இது மலேசியாவிற்குப் பரவியது. அங்கும் பிரபலமானது. குறிப்பாக மலேசியத் தமிழர்கள்
இக்கலையை ஆர்வமுடன் கற்றனர். அவர்கள் இந்தியாவிற்கு வரும் போதெல்லாம்
இந்தியர்களுக்கும் கற்றக்கொடுத்தனர். அதனால் 1979 இல் இக்கலை தமிழ்நாட்டில் பிரபலமடைந்தது. இன்று 120 நாடுகளில் 20 மில்லியன் மக்கள் டேக்குவாண்டோ கலையை கற்றிருக்கின்றனர். இதைத் தற்காப்புக்
கலை என்பதை விட மனஅமைதியோடு வாழ்வதற்கான ஓர் உத்தி முறை எனச் சொல்கின்றனர்
கொரியர்கள்.
---------------------
06.01.2018
6.கேட்கப் பழகுவோம்
பிறர்
பேசுவதைக் கேட்கின்ற பண்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. அதேநேரம் தான் பேசுவதைக்
கேட்டே ஆக வேண்டும் என்கிற எண்ணம் வளர்ந்திருக்கிறது. இந்த மனநிலை தான்
இருபத்திரண்டாம் நூற்றாண்டின் சூழலைத் தீர்மானிக்கும் என்கின்றனர்
சமூகவியலாளர்கள்.
பிடிக்கவில்லை
என்றாலும் கூட மனைவி பேசுவதைக் கணவனும் கணவன் பேசுவதை மனைவியும் காது கொடுத்துக்
கேட்டாலே பிரச்சினைகள் வராது. அது போலவே பணி செய்கின்ற இடங்களில் பிறர் சொல்வதைக்
கேட்கத் தொடங்கினாலே பிரச்சினைகள் குறையும். டென்சன் ஆகாது. உடல் ஆரோக்கியமாக
இருக்கும் என்கினறனர் மனநல மருத்துவர்கள்.
ஒரு
மனிதனுக்கு அடுத்தவர்களின் பேச்சிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்கிற எண்ணம்
திடீரென்று வந்துவிடாது. அது குழந்தையிலிருந்தே தொடங்க வேண்டும். எனவே
குழந்தைக்குக் கதை சொல்லுங்கள். கதை கேட்பதற்கு குழந்தைகள் பழகிவிட்டாலே பிறர்
பேசுவதைக் கேட்பதற்கும் அவர்கள் பழகிவிடுவார்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
---------------------
07.01.2018
7.ஹிட்லரும் ஓநாயும்
இருபதாம்
நூற்றாண்டில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர்களின் பட்டியலில் அடால்ப் ஹிட்லரின்
பெயர் முதலிடத்தில் இருக்கிறது. ‘அடால்ப்’ என்ற சொல்லுக்கு ஜெர்மானிய மொழியில் ‘தலைமை ஓநாய்’ என்று பொருள். ஆங்கிலத்தில் Lead Wolf
என்பார்கள். அப்பெயரை ஹிட்லர் தனது பெயரின் முன்னொட்டாக
விரும்பியே ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஓநாய்களைப் பற்றி அறிந்து கொள்வதில் அதிக
ஆர்வமுடையவராகவும் இருந்திருக்கிறார்.
தனது
அன்றாட தகவல் பரிமாற்றத்திற்காக ஓநாயைக் குறிக்கும் Wolf என்ற சொல்லைக் கொண்டே இரகசியக் குறியீடுகளை உருவாக்கி
இருக்கிறார். தனது இராணுவப் படைகளுக்கு அவர் வழங்கிய உத்தரவுகள் அனைத்தும்
ஓநாய்களின் பெயர்களோடே இருந்திருக்கின்றன. Here Wolf,
Conductor Wolf, Wolf Gulch, Wolf Lair, Were Wolf என்பன ஹிட்லர் தனது இராணுவப் படையின் தலைமையகங்களுக்கு
வைத்திருந்த பெயர்.
---------------------
08.01.2018
8.சாமானியனின் குரல்
திரு.கோவிந்தாச்சாரியாராவர்கள்
திருச்சியைச் சார்ந்தவர். 1900 களில் வாழ்ந்தவர். நாதஸ்வரம் இருக்கும் போது பாண்ட் வாத்தியம்
எதற்கு?
நாட்டுப் பருத்தி இருக்கும் போது கம்போடியா பருத்தியை ஏன்
கொள்முதல் செய்கிறீர்கள்?
இயற்கையாய் விளையும் பொருள்களுக்கு விலையை அதிகமாக
நிர்ணயித்துவிட்டு இறக்குமதி செய்யப்பட்ட செயற்கைப் பொருளுக்கு ஏன் விலையை குறைவாக
நிர்ணயம் செய்கிறீர்கள்?
தினந்தோறும்
கூலி கொடுப்பதுதான் கூலிக்காரனுக்கு இலாபம். மாதம் ஒருமுறை கூலி என்பது
முதலாளிக்கே இலாபம். நெல் விளையும் ஊரில் நெல்லை இறக்குமதி செய்வது விவசாயத்தை
அளிக்கின்ற செயலல்லவா?
ஆரோக்கியமாக மிளகு இருக்கும் போது மிளகாயைக் கொண்டுவந்த
சூட்சுமம் என்ன?
சீடை, முறுக்கு இருக்கும் போது கேசரியும் காபியும் விற்கப்படுவது
அந்நியப்பொருள்களுக்கு அடிமைகளை உருவாக்குவதாகாதா? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இவை இன்றைக்கு எளிய
கேள்விகளாக இருக்கலாம். எழுப்பப்பட்ட காலத்தில் மிக வலுவான கேள்விகளாக
இருந்திருக்கும்.
---------------------
09 - 09.01.2018
இளைஞரும்
புளியமரமும்
நேற்று
ஒருவர் சாலையோரமாக இருந்த புளிய மரத்திடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசிய
விதமும் பேச்சின் அர்த்தமும் என்னை வெகுவாகப் பாதித்துவிட்டது.
திரும்பத்
திரும்பச் சொல்றேன் ரோட்டுக்கு வராதேனு. நீ கேக்க மாட்டேங்குற. எப்பப்பாரு நீ
இங்கயே நிக்குற. பிள்ளக பள்ளிக்கொடத்துக்குப் போகாமெ சுத்திக்கிட்டு இருக்கு. என்
ஆத்தாக்காரி அழுதழுது ஒப்பாரி வைக்கிறா. ஒங்க அப்பங்கிட்ட சொன்ன அவன் என்னெ அடிக்க
வாரான். நீயும் புரிஞ்சுக்க மாட்டேங்குற. உங்க அப்பனும் புரிஞ்சுக்க
மாட்டேங்குறான். உங்க அண்ணங்கிட்ட சொன்ன அவன் உங்க குடும்பப் பிரச்செனங்கரான்.
நான் என்னத்தெப் பண்ண?
சொல்லிப் பார்ப்பேன். கேட்டா கேளு. இல்லனா டைவர்ஸ்
வாங்கிக்கோ என்று புளிய மரத்திடம் பேசிக்கொண்டிருந்தார்.
கடந்த
ஜனவரி 1 ஆம் தேதி மட்டும் மதுவிற்பனை 230 கோடிக்கு நடந்துள்ளதாம். இன்னும் எத்தனை இளைஞர்கள் எத்தனை
புளியமரங்களிடம் பேசப்போகிறார்களோ?
---------------------
10 - 10.01.2018
கின்னஸில்
கின்னஸ்
அயர்லாந்து
நாட்டைச் சார்ந்த சர்க்யூ பீவர் என்பவர் கின்னஸ் வாட் என்ற அமைப்பின் தலைவராக
இருந்தவர். வேட்டையாடுவதில் பிரியமுடையவர். அவர் 1951 - ஆம் ஆண்டுவாக்கில் ஒருநாள் வேட்டையாடச் சென்றார். அப்போது
கோல்டன் பிளவர் என்னும் பறவைகள் மின்னல் வேகத்தில் பறந்து போவதைக் கண்டார்.
ஒருவேளை உலகிலேயே இதுதான் வேகமாகப் பறக்கும் பறவையினமாக இருக்கக் கூடும் என
நினைத்துக்கொண்டார். உடனே இதனை ஆவணப்படுத்தினால் என்ன எண்ணம் அவருக்குள் உதயமானது.
அவரது எண்ணத்திற்கு நோரிஸ்,
ரோஸ் என்னும் இரட்டையர்கள் உறுதுணையாக நின்றனர். அவர்கள்
மூவராலும் உருவானதுதான் கின்னஸ் புத்தகம்.
முதன்முதலில்
கின்னஸ் புத்தகம் 1955 இல் வெளியானது. உலகிலேயே மிகவும் பெரியது, மிகவும் சிறியது என்னும் விவரங்கள் அதில் இடம்
பெற்றிருந்தன. மேலும் அவ்வாண்டு அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வகையில் கின்னஸ்
புத்தகமே கின்னஸ் புத்தகத்தில் கின்னஸ் சாதனையாக இடம் பெற்றது வியப்பான செய்தி.
---------------------
11 - 11.01.2018
செய்யும்
தொழில் தெய்வமா?
'செய்யும்
தொழிலே தெய்வம்' என்னும் சொற்றொடரை உச்சரிக்கக் கேட்டிருப்போம். தொழிலை ஏன்
தெய்வத்தோடு தொடர்புபடுத்துகிறார்கள்? தொடர்புபடுத்த வேண்டிய தேவை என்ன? தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் போது அதைத் தெய்வத்தோடு ஒப்பிட்டால்
தெய்வமும் ஏற்றத்தாழ்வுக்கு உரியதாகாதா? தொழிலே தெய்வம் என்றால் கோயில் எதற்கு? வழிபாடு எதற்கு?
என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது. சரி. இது ஒருபுறம்
இருக்கட்டும். இன்னொரு கேள்வி.
நாளொன்றுக்கு
லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் மருத்துவருக்கு, மாதந்தோறும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வணிகருக்கு, தீர்ப்பெழுதுகிற நீதிபதிக்கு, வழக்கறிஞருக்கு,
விஞ்ஞானிக்கு, ஆட்சியாளருக்கு,
ஆசிரியருக்கு, அர்ச்சகருக்கு,
அதிகாரத்தில் இருப்பவருக்கு பங்குச் சந்தை முதலீட்டாளருக்கு
வேண்டுமானால் அவர்கள் செய்கின்ற தொழில் தெய்வமாக இருக்கலாம்.
பிச்சை எடுப்பவருக்கு, பாலியல் தொழிலாளிக்கு, மலம் அள்ளுபவருக்கு,
பிணம் எரிப்பவருக்கு, முடி வெட்டுகிறவருக்கு, செருப்பு தைப்பவருக்கு அவரது தொழில் எப்படி
தெய்வமாக இருக்க முடியும்?
---------------------
12 - 12.01.2018
தன்னிலை அறிதல்
மாவீரர்
பகத்சிங் தன்னுடைய நூலொன்றில் இப்படி எழுதுகிறார். கடவுளுக்கு முன்பே உலகம்
இருந்தது என்பதைப் போல எனக்குப் பிறகும் உலகம் இருக்கும். ஆனால் என்
மூச்சுக்காற்றும் காலடியும் பட்டபிறகு அது பழைய மாதிரியை சூழன்று கொண்டிருக்க
முடியாது என்று. இது வாழ்தலின் அர்த்தத்தைச் சொல்லுகின்ற கூற்று. தன் காலடியும்
மூச்சுக்காற்றும் பட்டபிறகு மாற்றம் உருவாகி இருக்கும் என்று உறுதியாக நம்புகிற
நம்பிக்கை இருக்கிறதே அதுதான் தன்னிலை அறிதல். தன் இலக்கு எது என்பதை உணர்ந்த நிலை
அது.
நீண்ட
நெடிய வரலாற்றில் யார்யாரெல்லாம் தீர்க்கமாக தன்னிலை அறிதலோடு
இருந்திருக்கிறார்களோ அவர்களே வரலாற்றை தீர்மானித்திருக்கிறார்கள். அதுதான்
வாழ்தலின் அடையாளமாகவும் புரட்சியாளர்களால் நம்பப்பட்டு வந்திருக்கிறது. தன்னிலை
அறிதல் என்பது தன்னை அறிந்த நிலை மட்டுமல்ல தன்னை அறிவிக்கும் நிலையும் கூட.
---------------------
13 - 13.01.2018
பழையதைப்
புதுப்பிப்போம்
இன்று
போகிப்பண்டிகை. பழையனவற்றை கழிக்க வேண்டும் புதியனவற்றை ஏற்கவேண்டும்
என்கிறார்கள். பழையனவற்றைக் கழித்துக் கழித்து உலகத்தைக் குப்பைத்தொட்டியாக மாற்றி
வைத்திருக்கிறோம். இந்தச் சூழலில் பழையனவற்றை ஏன் கழிக்க வேண்டும் என்று கொஞ்சம்
சிந்திப்போம்.
முன்பெல்லாம்
குடை,
டார்ச் லைட், ரேடியோ பெட்டி பழுதானால் பழுது நீக்கிப் பயன்படுத்தினோம். அதனால்
சுற்றுச்சூழலின் மாசு குறைவாக இருந்தது. வேளாண்மை செழிப்போடு இருந்தது. ஆனால்
இன்று எல்லாமே மாறிவிட்டது. பழைய பொருள்களை பழுது நீக்கிப் பயன்படுத்தாமல் புதிய பொருள்களுக்கு மாறுவதால்
குப்பைகள் பெருகுகின்றன. குறிப்பாக மின்னணுக் கழிவுகள் நாளுக்குநாள்
அதிகரிக்கின்றன. இதன் விளைவு நாம் இயற்கையில் இருந்து அந்நியப்படுகிறோம். உடல்
ஆரோக்கியத்தை இழக்கிறோம். இதைத் தவிர்க்க, இயற்கையோடு இணைந்து வாழ, பழைய
பொருள்கள் பழுதானால் தூக்கி எறிந்துவிடாமல் பழுது நீக்கிப் பயன்படுத்துவோம்.
சுற்றுச்சூழலைக் காப்போம். கூடவே பழைய உறவுகளையும் புதுப்பித்துக் கொள்வோம்.
---------------------
14 - 14.01.2018
விவசாயிகளைப்
பாதுகாப்போம்
நேற்று
நண்பரொருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். நல்லதொரு கோரிக்கையாக
அமைந்திருந்தது. பொங்கல் திருநாளையொட்டி சாலை ஓரங்களில் இருக்கும் வியாபாரிகளிடம்
பொருள்கள் வாங்குங்கள். அவர்கள் வியாபாரிகள் அல்லர். விவசாயிகள் என்பதாக இருந்தது.
விவசாயிகளைப்
பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணம் மிகவும் தாமதமாக வந்திருந்த போதும் அந்தச்செய்தி
மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதை நண்பர்களுக்கு அனுப்பி பரவலாக்கிய விதம்
மெச்சும்படியாக இருந்தது. மேலும் அது அறுவடைத் திருநாள் என்பது விவசாயிகளின்
மகிழ்ச்சியில் தானே இருக்க முடியும் என்கிற உண்மையையும் சொல்லாமல் சொல்லியது.
அறுவடைத் திருநாளை முன்னிட்டு மட்டுமல்ல முடிந்தவரை தினந்தோறும் விவசாயிகளிடமே
பொருள்கள் வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்வோம். விவசாயிகள் மகிழ்ச்சியோடு
இருக்கிறார்கள் என்பதை விட வேறெதுவும் தை முதல் நாளில் நமக்கு மகிழ்ச்சியைத்
தந்துவிடாது தானே!
---------------------
15 - 15.01.2018
ஜல்லிக்கட்டு
தமிழர்கள் விளையாட்டு அல்ல
ஜல்லிக்கட்டு
அல்லது ஏறுதழுவுதல் தமிழர்களின் வீரவிளையாட்டு என்கிறார்கள். வீரமும் விளையாட்டும்
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது. வீரம் விளையாட்டாக முடியாது. விளையாட்டு வீரமாக
முடியாது. ஆக வீர விளையாட்டு என்னும் சொல் சரியான சொல் அல்ல. மிருகத்தை
அடக்குவதாலேயே மனிதன் வீரமானவனாகவும் முடியாது. சங்க இலக்கியத்தில்
முல்லைக்கலியில் முதற்பாடல் ஏறுதழுவுதலைப் பேசுகிறது. முல்லை மக்களிலும் ஆயர்குடி
மக்களே ஏறுதழுவுதலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை பாடல் நேரடியாகவே குறிப்பிடுகிறது.
அதில் வெற்றி பெற்ற ஆயர்குடி மகனுக்கே ஆயர்குடியைச் சேர்ந்த பெண்ணைக்
கொடுத்திருக்கிறார்கள். வேறுகுடியைச் சார்ந்தவர்கள் ஏறைத் தழுவ முடியாது
என்பதையும் அப்பாடல் நமக்குக் குறிப்பாக உணர்த்திவிடுகிறது.
ஆக ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதல் தமிழர்களுக்கானது
அல்ல. அதை ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான பண்பாடாகக் கொள்வதில் அர்த்தமில்லை.
ஒருவேளை ஜல்லிக்கட்டை அல்லது ஏறுதழுவுதலை எல்லா தமிழர்களுக்குமான பண்பாடாகக்
கொள்வோம் எனில் தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு சில சமூகத்திற்கேயுரியதாகச்
சொல்லப்பட்டு வருகிற இழிதொழில்களையும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கான தொழில்களாகக்
கொள்ளவேண்டும். அது தான் சரியானதும் கூட.
---------------------
16 - 16.01.2018
சோப்பு சந்தை
தொல்லியல்
ஆய்வில் கி.மு. 2800 பாபிலோனில் சோப்பு கிடைத்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.
ஆனால் சோப்பு கண்டுபிடிக்கப்பட்ட காலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கி.மு. 1500 இல் எகிப்தியர் தாவர எண்ணெயைப் பயன்படுத்தி சோப்பைத்
தயாரித்திருக்கின்றனர். கி.பி. 16 ஆம்
நூற்றாண்டளவில் பிரெஞ்சுக்காரரர்கள் வாசனையுடன் கூடிய சோப்பைத்
தயாரித்திருக்கின்றனர். பிரெஞ்ச்காரர்கள் தயாரித்தபோது சோப்பு பெரும்பணக்காரர்களின்
ஆடம்பரப்பொருளாக இருந்திருக்கிறது. ஏழைகளும் அடிமைகளும் சோப்பைப் பயன்படுத்தக்
கூடாது என்ற சட்டம் இருந்திருக்கிறது. பிரெஞ்ச் புரட்சியின் விளைவாக 1791 லீ பிளாங் என்னும் பிரெஞ்சுக்காரர் குறைந்த விளையில் சோப்பைத் தயாரித்து
ஏழைகளுக்கும் அடிமைகளுக்கும் பரவலாக்கியிருக்கிறார்.
இந்தியாவில்
லீவர் பிரதர்ஸ் தான் சோப்பை அறிமுகப்படுத்தினர். 1918 ஜாம்ஜெட் ஜி டாட்டா கேரளாவில் தேங்காய் புண்ணாக்கில் சலவைச் சோப்பைத்
தயாரித்தார். 1937 இல் பிரிமியம் குளியல் சோப்பை உருவாக்கத் தொடங்கியது.
இன்றைக்கு சோப் 40க்கு மேற்பட்ட வகைகளில் கட்டியாக, பவுடராக, திரவமாகவும்
கிடைக்கிறது. அது உலகின் முன்னணித் தொழிலாகவும் இருக்கிறது.
---------------------
17 - 17.01.2018
அன்பின் அளவு
குறுந்தொகை
102 பாடல் ஒளவையார் பாடியது. தலைவன் பிரிந்து போய்விட்டான்.
அவனது பிரிவு தலைவியை வாட்டுகிறது. அதனால் தலைவி தன் தோழியிடம் புலம்புகிறாள்
இப்படி,
அவனை
நினைத்தால் நெஞ்சு வேகின்றது. அவனை நினைக்காமல் இருப்பதும் சாத்தியமல்ல. அவன்
மீதான என்னுடைய காமமோ வானத்தைத் தொடுமளவுக்கு மிகவும் பெரிய அளவுடையதாக
இருக்கின்றது. என்னை இப்படியெல்லாம் வருத்தமடையச் செய்து கொண்டு இருக்கும் அவன்
இரக்கமுடையவனே அல்ல என்கிறாள்.
இப்பாடலில்
தலைவனை இரக்கமற்றவனாகச் சொல்வது மட்டும் தலைவியின் நோக்கமல்ல. தலைவியைப் பிரிந்து
வாழ வேண்டும் என்கிற எண்ணத்தை மட்டுமே உடையவனுமல்ல தலைவன் என்பதான தொனி ஒருபுறம்
இருக்க தலைவிக்கும் தலைவனுக்குமான அன்பின் அளவை அவர்களது பிரிவை வைத்தே
வெகுநுட்பமாகச் சொல்லியிருக்கிறது பாடல். அதாவது ஒத்த அன்புடைய இருவர் பிரிந்து
இருக்கும் போது உணர்கின்ற வேதனையின் அளவே அவர்கள் சேர்ந்திருக்கும் போது
உணரப்படும் அன்பின் அளவாகவும் இருக்கும் என்கிறார் ஒளவையார்.
காதலர்களுக்கு
இடையிலான பிரிவு தருகின்ற வேதனைதானே அவர்கள் சேர்ந்திருக்கும் தருணத்தின்
இன்பத்தைக் கூட்டுகிறது.
---------------------
18 - 18.01.2018
பணமும் அழகும்
ஒருவர்
அழகாக இருக்கிறார் என்பது உடலை வைத்து தீர்மானிக்கப்டுகிறதா? அல்லது மனதை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறதா? என்றால் பலர் மனதை வைத்தே தீர்மானிக்கப்டுகிறது என்பார்கள்.
ஆனால் மனம் - உடல் - அழகு என்ற வரிசையில்தான் அழகு என்ற கருத்தியல்
உருவாக்கப்பட்டிருக்கிறதா?
என்றால் இல்லை.
எப்படி
பணம் படைத்தவர்கள் ஏழைகளை நோக்கி ‘களவு செய்வது குற்றம்’
எனப் போதித்து தாங்களுக்குச் சார்பாக ஓர் அறவிதியை
உருவாக்கிக் கொண்டார்களோ அது போன்றதுதான் ‘அழகு மனதில் இருக்கிறது’ என்ற
கருத்தியலும். ‘அழகு’ என்ற விஷயத்தில்
ஏழைகளைத் திருப்தி படுத்துவதற்காகவே அழகை மனதோடு தொடர்புபடுத்தி அறவிதியை
உருவாக்கி இருக்கிறார்கள் பணம் படைத்தவர்கள்.
வழக்கமாகவே
பணம் படைத்தவர்கள் தாங்களுக்குச் சாதகமாகவே அறவிதியை உருவாக்குவார்கள். அதை
ஏழைகளுக்கானதாக படம் காட்டுவார்கள். தேவைப்பாட்டால் அதை சட்ட வடிவமாகவும்
ஆக்குவார்கள். உருவாக்கப்பட்ட அறவிதியின் பயனை அவர்களே அனுபவிப்பார்கள்.
அதனாலேயேதான் அவர்கள் பணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அழகானவர்களாகவும்
இருக்கிறார்கள். ஆக அழகு என்பது மனதில் இல்லை. பணத்தில் தான் இருக்கிறது. மனதில்
இருப்பதாகச் சொல்வது ஏமாற்று வேலை.
---------------------
19 - 19.01.2018
ஒய்நிச்
வரைபடப் பிரதி
15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ரோஜர் பெக்கான் என்பவர் வரைந்ததாக நம்பப்படுமர் ஒரு வரைபடப் பிரதியை ஜெர்மானியின் பேரரசர் இரண்டாம்
டரூடால்ப்ஃக்குச் சொந்தமானது, அவர் ஜானி டி
என்ற வான சாஸ்திர அறிஞரிடமிருந்து விலைக்கு வாங்கினார் என்கிறார்கள். இது பலரின்
கைகளுக்குச் சென்று 19 ஆம் நூற்றாண்டில் ரோம், பிராஸ்காட்டில் உள்ள சேசுசபைக் கல்லூரிக்கு வந்தது. அங்கிருந்து வில்பர்ட் எம்
ஒய்நிச் 1912 இல் அந்தப் பிரதியைப் பெற்றார். அவரது பெயராலேயே அந்தப்
பிரதி ஒய்நிச் வரைபடப்பிரதி என்று அழைக்கப்படுகிறது.
அந்தப்பிரதி
6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை தாவரவியல், வானசாஸ்திரம், பெண்களின் உடற்கூறியல்,
புவியியல், மருத்துவம், மருத்துவச் செய்முறையியல் ஆகியவற்றைப் பேசுகிறது என்ற
முடிவுக்கு எல்லோரும் வந்திருக்கிறார்கள். ஆனால் அவற்றில் உள்ள குறியீட்டு மொழிகள்
என்ன சொல்ல வருகின்றன என்பதை யாவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. எழுத்து பரவலாகி
பலரும் எழுதிய காலமான 16 ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு பிரதியின் உண்மைப்பொருள்
இன்றுவரை அறிய முடியாதபடி இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. இன்றைக்கு மர்மங்களைச்
சுமந்துகொண்டிருக்கும் விஷயங்களின் பட்டியலில் ஒய்நிச் பிரதியும் ஒன்று.
---------------------
20 - 20.01.2018
ஆர்க்கிட்டுகளின்
சொர்க்கம்
உதயசூரியனின்
மாநிலம் என்றழைக்கப்படும் அருணாச்சல பிரதேசம் இந்திய மாநிலங்களிலேயே அதிகமான
மொழிகள் பேசப்படும் மாநிலம். வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரியதும் அதுதான்.
மோண்பா வம்சத்தைச் சார்ந்த மக்கள் அதிகமாக வசிகர்கின்றனர். நோக்கடே மக்களின் சாலோ
லோகூ விழாவும் லோகித் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் பரசுராம
மேளாவும் முக்கியத் திருவிழாக்கள். பழத்தோட்டங்கள் நிறைந்த பூமி. கைத்தறி முக்கிய
வருமானத் தொழில்.
இந்தியாவின்
மிகப்பெரிய புத்த விகாரான கோல்டன் நங்கியேல் லாத்ஸே இங்குதான் உள்ளது. 1972 ஜனவரியில் 20 ஆம் தேதி அருணாச்சல பிரதேசம் என்ற பெயரில் மத்திய ஆட்சிப்பகுதியாக மாறியது.
பின்னர் 55 ஆவது சட்ட திருத்தத்தின் படி 1986 ஆம் ஆண்டு தனிமாநில அந்தஸ்து பெற்றது. இந்த மாநிலத்தின்
வழியாகத்தான் பிரமபுத்திரா இந்தியாவிற்குள் நுழைகிறது. இந்தியாவில் உள்ள 1000க்கு மேற்பட்ட ஆர்க்கிட்டுகளில் 600க்கும் மேற்பட்ட ஆர்க்கிட்டுகள் இங்குதான் உள்ளன. அதனாலேயே ஆர்க்கிட்டுகளின்
சொர்க்கமாக அழைக்கப்படுகிறது அருணாச்சலப் பிரதேசம்.
---------------------
21 - 21.01.2018
போராளிக்
கவிஞர்
சமீபத்தில்
வாழ்ந்து மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்கள் தன்னைப் பற்றிச் சொல்லும் போது இப்படிச்
சொல்கிறார்.
வரலாற்றில்
நான் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நின்று பார்க்கவே விரும்புகிறேன். எனக்கு
வரலாறு என்பது மன்னர்களின் பீடுகளும் பெருமைகளும் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின்
கண்ணீரும் பெருமூச்சும் கோபமும் தான் நான் பார்க்கிற வரலாறு என்கிறார்.
மேலும்
அவர்,
ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை நான் பார்க்கும் போது
ராஜராஜனின் பெருமையோடு என்னால் ஒன்றிணைந்து நிற்க முடியவில்லை. அந்தப் பெருமைகளில்
என்னால் பங்கெடுக்க முடியவில்லை. அவன் ஜாவாவையும் சுமத்ராவையும் இலங்கையையும்
வென்றான் என்னும் போது அவனுடைய படைவீரர்களின் வெற்றிக் களிப்பு என்னுடைய வெற்றிக்
களிப்பு ஆகாது. மாறாக அவனால் தோற்கடிப்பட்ட மக்களின் எல்லா ஆதங்கங்களும் என்னுடைய
ஆதங்கங்களே ஆகும். தமிழன் என்பதால் எந்த ஆதிக்கத்தையும் தலையில் வைத்துக்கொண்டாட
முடியாது என்கிறார்.
தொடர்ச்சியாக
ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல்
கொடுத்தவர். ஆதிக்கம் எந்த வடிவத்தில் எங்கிருந்து கிளம்பினாலும் சமரசமற்று
சமர்புரிந்த போராளி கவிஞர் இன்குலாப் அவர்கள்.
இந்தச் சமுதாயத்திற்கு இன்றைக்கு இன்னும் பல இன்குலாப்கள் தேவையாய்த் தானே
இருக்கிறார்கள்.
---------------------
22 - 22.01.2018
இந்திரன்
சித்திரிப்பு
விதேக
நாட்டை ஆட்சி செய்த சித்தார்த்தனுக்கும் பிரியகாருணிக்கும் மகனாக சித்திதை மாதம் 13 நாள் மகாவீரர் பிறந்தார். குழந்தையை விதேக நாட்டின்
தலைநகரான குண்டலபுரத்திற்குக் கொண்டுவந்து வர்த்தமானர் என்று பெயர் சூட்டினார்கள்.
அவ்விழாவில் கலந்துகொண்ட இந்திரன் அளவில்லாத ஆனந்தத்தின் விளைவாக தன்னுடைய
ஆற்றலால் தனக்குத்தானே ஆயிரம் கண்களைப் படைத்துக்கொண்டான். ஆயிரம் கண்களாலும்
மகாவீரரைப் பார்த்து மகிழ்ந்தான் என்கின்றன சமணக் காவியங்கள்.
அகலிகையை
அவளுடைய கணவனுக்குத் தெரியாமல் ஏமாற்றி கூடியதாகவும் அதனால் கோபமடைந்த அகலிகையின்
கணவன் இந்திரனுக்கு சாபமிட்டதாகவும் அதனால் அவனுக்கு ஆயிரம் கண்கள் உருவானதாகவும்
கதை சொல்கின்றன வைதீகக் காவியங்கள்.
இந்திரன்
என்கிற ஒற்றைப் பிம்பம் பந்தாடப்பட்ட அளவுக்கு இந்தியக் காவியங்களில் வேறெந்தப்
பாத்திரமும் கிடையாது. இந்திரன் என்கிற பாத்திரம் படைக்கப்பட்டு பல நூற்றாண்டுகள்
தாண்டி வாழுகிற நாமும் கூட பாவம் என்று பரிதாபப்படக் கூடிய அளவுக்கு இந்திரனைச்
சித்திரித்திருக்கின்றன வைதீகக் காவியங்கள். உலக வரலாற்றில் மதங்கள் தனது கைகளில்
ஆயுதங்களை வைத்துக்கொண்டுதான் அன்பைப் போதித்திருக்கின்றன.
---------------------
23 - 23.01.2018
காட்டுயிர்களின்
காதலன்
தமிழில்
மிக முக்கியமான எழுத்தாளராக இருந்த திரு. அ.மாதவையாவின் புதல்வர் திரு கிருஷ்ணன்.
அவரும் மிகச் சிறந்த எழுத்தாளர். திரு. அ. மாதவையா புனைகதை எழுதுவதில் விருப்புடையவராக
இருந்ததைப் போல திரு.கிருஷ்ணனும் காட்டுயிர்களைப் பற்றி எழுதுவதில் ஆர்வமுடையவராக
இருந்தார். தமிழில் அறிவியல் நோக்கில் காட்டுயிர்களைப் பற்றி எழுதியதில் திரு.
கிருஷ்ணன் தான் முதல்வராக அறியப்படுகிறார். அவரது எழுத்துக்களில் காட்டுயிர், காட்டுயிர்களைக் காக்கவேண்டியதன் அவசியம் முதலியவைகளே
முதன்மைப் பொருள்களாக இருந்தன.
வேட்டை
இலக்கியம எழுதுவதற்கென்றே சிலர் காட்டுயிர்களை வேட்டையாடிய போது ‘வேட்டையாடுதலும் வேண்டாம் வேட்டை இலக்கியமும் வேண்டாம்’ என எதிர்க்குரல் எழுப்பியவர். ஒலியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில்
பறக்கும் ஜெட் விமானம் எனக்கு வியப்பைத் தருவதே இல்லை. துள்ளியோடுகின்ற அணிலும்
பாய்ந்து செல்கின்ற மானுமே எனக்கு வியப்பளிக்கும் விஷயங்கள் என்று தொடர்ந்து தனது
எண்ணங்களை வெளிப்படுத்தியவர். ஜ.நா.சபையின் சுற்றுச்சூழல் விருது பெற்ற தமிழர்
என்றும் இந்தியாவின் சிறந்த காட்டுயிர் புகைப்படக் கலைஞர் என்றும்
பெருமைப்படுத்தப்படும் திரு. கிருஷ்ணனின் சுற்றுச்சூழல் பணி போற்றுதலுக்குரியது.
---------------------
24 - 24.01.2018
கண்களைக்
காப்போம்
இன்றைக்குக்
அலுவலகங்கள் அனைத்தும் கணினிமயமாகிவிட்டன. வீட்டுக்குள் தொலைக்காட்சிகள்
இருக்கின்றன. பயணங்களின் போது வாகனங்களிலும் படம் பார்ப்பதற்கான வசதிகள்
வந்துவிட்டன. எதுவுமே இல்லை என்றாலும் ஏறக்குறைய எல்லாருடைய கைகளுக்கும் செல்போன்
வந்துவிட்டது. ஆக, ஒளித்திரையில் இருந்து நாம் நம் கண்களை
விலக்கி வைத்திருப்பதற்கான நேரம் மிகவும் குறைவு. ஏதாவது ஒரு தேவைக்காகவோ
பொழுதுபோக்கிற்காகவோ ஒளித்திரையை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். சிலர் இரவு
முழுக்க வெளிச்சமற்ற சூழலில் செல்போனை பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலர்
அதிகாலை எழுந்தவுடனேயே ஓய்வில் இருந்த கண்களை முறைப்படி வெளிச்சத்திற்குப் பழக்காமல்
செல்போனைப் பார்க்கிறார்கள். குழந்தைகளும் கூட அதிகமான நேரத்தை ஒளித்திரையிலேயே
செலவிடுகிறார்கள். இப்படியான வாழ்க்கை முறை கண்பார்வையில் பாதிப்பை
ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக கண் கண்ணாடி
அணிந்திருப்பவர்களின் பார்வைத்திறனில் பாதிப்பு அதிகமாவதற்கு கூடுதல் வாய்ப்புகள்
இருக்கின்றன. எனவே முடிந்தவரை ஒளித்திரையில் இருந்து நாம் நம் கண்களை அவ்வப்போது
விலக்கியே வைத்திருப்போம். கண்களைக் காப்போம். கண்களின் அழகு தானே காட்சிகளின்
அழகு.
---------------------
25 - 25.01.2018
தேவதாசி
கோவில்களில்
இறைப்பணி செய்த பெண்களில் ஒரு பிரிவினர் தேவதாசிகள். இப்பெண்கள் திருவலகிடல், திருமெழுகிடல், தெய்வங்கள் புசிப்பதற்காகப் படைக்கப்படும் படையலுக்கான அரிசியைத் தூய்மை
செய்தல்,
நடனம் ஆடுதல், பாசுரம் பாடுதல் முதலிய வேலைகளைச் செய்தனார் என்கிறார் டாக்டர் மா.இராசமாணிக்கனார். ஆண்டாளும்
பாசுரங்கள் பாடியுள்ளார். திருவிழாக் காலங்களில் தெய்வச்சிலைகள் ஊர்வலமாகக்
கொண்டுவரப்படும் போது இப்பெண்கள் திருநீற்றுத்தட்டையும் மலர் தட்டுகளையும் ஏந்தி
வந்திருக்கின்றனர். தெய்வச்சிலைகளுக்கு கவரி வீசுவதும் தேவதாசிகளது பணியாக
இருந்திருக்கிறது.
முதல்
குலோத்துங்க சோழன் காலத்தில் படைத்தலைவனாக இருந்த ஆச்சுப்பிடாரன் கணபதிநம்பி
என்பவர் தன் குடும்பத்துப் பெண்களை திருவல்லம் கோவிலுக்குத் தேவதாசிகளாக
ஒப்படைத்ததை திருவல்லம் கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. தாசிகள் விரும்பினால்
திருமணம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டு இருந்திருக்கிறது. நாகன் பெருங்காடன்
என்பவன் சதுரள் சதுரி என்னும் தாசியைத் திருமணம் செய்துகொண்டதை திருவொற்றியூர்
கல்வெட்டு குறிப்பிடுகிறது. கோவில் ஒழுங்குகளோடு நெருங்கிய தொடர்பில் இருந்த
தாசிகள் இறந்த பிறகு அவர்களும் தெய்வநிலையில் வைத்துப் போற்றப்பட்டதாகத்
தெரிகிறது.
---------------------
26 - 26.01.2018
அரசியலமைப்புச்
சட்டம்
இந்திய
அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து இன்றோடு 67 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் அதன் அடிப்படை நோக்கங்கள் இன்னும் எழுத்தளவில்
தான் இருக்கிறது. கருத்து,
பேச்சு, நம்பிக்கை, வழிபாடு சார்ந்த விஷயங்களில் சுதந்திரத்தையும், வாய்ப்பிலும் தரத்திலும் சமத்துவத்தையும், தனிமனித மதிப்பையும் ஒருமைப்பாட்டையும் உறுதிசெய்யும்
வகையில் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது அரசியலமைப்புச் சட்டத்தின்
முகப்புரை.
முகப்புரையின் வழிகாட்டலுக்கு மாறாக இன்றைக்கு நிலைமை வேறாக
இருக்கிறது. நடக்கும் எல்லாவற்றையும் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இதையெல்லாம் முன்கூட்டியே தீர்க்கமாகக் கணித்துதான் ‘முரண்பாடுகள் நிறைந்த இந்த வாழ்க்கையை எத்தனை காலம் தான்
வாழப்போகின்றோம். நமது சமூக வாழ்க்கையிலும் பொருளாதார வாழ்க்கையிலும் சமத்துவம்
அற்ற இந்த ஏற்றத்தாழ்வுகளை நாம் தொடர்ந்து அனுமதித்தால் நமது அரசியல் ஜனநாயகம்
என்பது ஆபத்திற்குள்ளாகும். இந்த முரண்பாடுகளை நாம் விரைவில் களைய வேண்டும்.
இல்லையென்றால் இந்த சமத்துவமற்ற நிலையால் பாதிக்கப்படும் மக்கள் இந்த அரசியல்
ஜனநாயக அமைப்பை உடைத்து நொறுக்குவார்கள். நாம் அரும்பாடுபட்டு வடிவமைத்த இந்த சட்ட
அமைப்பு நொறுங்கும்’
எனக் கூறியிருக்கிறார் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள்.
---------------------
27 - 27.01.2018
பாவாணர்
வாழ்வு
தமிழகத்தில்
1930 களில் இந்தியைக் கட்டாயமாகத் திணித்தபோது உருவான
எழுச்சியும் போராட்டங்களும் நாம் அறிந்ததே. அந்தப் போராட்டத்தில் தீவீரமாகப்
பணியாற்றியவருள் ஒருவரான திரு. தேவநேயப் பாவாணர் அவர்கள் அப்போது காங்கிரஸ்
கட்சியின் சார்பாளராகவும் இருந்தார். அந்த நேரத்தில்தான் 1937 இல் தேசாபிமானத் தண்டமிழ் தொண்டன் என்னும் புனைப்பெயரில்
செந்தமிழக்காஞ்சி என்றொரு நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலின் அட்டைப்படத்தில்
காந்தியடிகளின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சியின் சார்பாளராக
இருந்துகொண்டே காந்தியடிகளின் படத்தை தன்னுடைய நூலிற்கு அட்டைப்படமாக
வைத்துக்கொண்டு,
இந்தியை எதிர்த்தவர் தேவநேயப் பாவாணர் அவர்கள்.
அவர்
வேலை தேடிக்கொண்டிருந்த போதும் சரி, வேலை செய்த இடங்களிலும் சரி தமிழர் மானத்தையும் தமிழர் உரிமையையும்
விட்டுக்கொடுக்காதவராகவே இருந்திருக்கிறார். யாருக்குச் சார்பாக இருந்தாலும் தன்மானத்தையும்
இனமானத்தையும் இழந்துவிடக் கூடாது என்பதை தன் வாழ்க்கையின் வாயிலாக உணர்த்தியவராக
இருக்கிறார் தேவநேயப்பாவாணர் அவர்கள்.
---------------------
28 - 28.01.2018
நிலங்களின்
பெயர்கள்
மன்னராட்சிக்
காலத்தில் கோவில் பணியாளர்களுக்கு ஏராளமான நிலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது
அறிந்த செய்தியே. வழங்கப்பட்ட நிலங்களுக்குச் சூட்டிய பெயர்கள் என்ன
காரணங்களுக்காக வழங்கப்பட்டது என்னும் தகவலைச் சுமந்தனவாய் இருக்கின்றன.
அந்தணர்களுக்கு
வழங்கப்பட்ட நிலம் ‘அர்ச்சானாபோகம்’, ‘அர்ச்சனைக்காணி’ என வழங்கப்பட்டிருக்கிறது. ‘பட்டவிருத்தி’ என்பது பட்டருக்கு வழங்கப்பட்ட நிலத்தின் பெயர். பண்டாரக் கணக்கு
எழுதுவோருக்கு வழங்கப்பட்டது ‘கணக்குக்காணி’. தேவதாசி,
நடனமாதர், பதியிலார், தளிச்சேரிப்பெண்களுக்கு வழங்கிய நிலங்கள் ‘சர்வமானியம்’, ‘காணி’,
‘சீவிதம்’, ‘நெல்’, ‘இறையிலி’, ‘சோறு’ என்னும்
பெயருடையன.
இசைக்கருவி
மீட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் ‘நிலம்’
என்றே குறிக்கப்பட்டிருக்கிறது. வேதம் ஓதும் பிராமணருக்கு
வழங்கப்பட்டது ‘கிடைவிருத்தி’, ‘பிரம்மதேயம்’, ‘சதுர்வேதி மங்கலம்’ என்பன. திருமஞ்சனம் எடுப்பவர், திருப்பள்ளித்தாமம் செய்பவருக்கு வழங்கப்பட்ட நிலத்தின் பெயர் ‘சீவிதம்’. வழிபாட்டுக்கு, சேனாதிபதிக்கு, ஜீயர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு ‘காணி’ என்பது பெயர். ‘நட்டுவக்காணி’, ‘நிருத்தபோகம்’, ‘கூத்துக்காணி’, ‘கூத்தாட்டுக்காணி’ என்பன நட்டுவருக்கு வழங்கப்பட்ட நிலங்களின் பெயர்கள்.
---------------------
29 - 29.01.2018
தமிழ்த்தாத்தா
மயிலை சிவமுத்து
தமிழ்நாட்டில்
‘தமிழ்த்தாத்தா’
என்னும் சிறப்பு அடைமொழி பெற்றவர்கள் இருவர். ஒருவர் உ.வே.சா. அவர்கள், மற்றொருவர் பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்கள். மயிலை சிவமுத்து அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்
முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர். மாணவர்களை ஒருங்கிணைத்தவர்களில்
முக்கியமானவர். பாவேந்தர் பாரதிதாசன் மேல் அளவில்லா பற்றுக் கொண்டவர்.
பாரதிதாசனோடு ஒன்றாக பல இடங்களுக்குப் பயணித்தவர். அவர் சிறந்த சொற்பொழிவாளரும்
கூட.
ஒருமுறை
பாரதிதாசனின் மாணவரொருவர் மயிலை சிவமுத்துவிடம் பாரதிதாசனைப் பற்றி உங்கள் கருத்து
என்ன என்று கேட்டார். அதற்கு அவர், சீர்திருத்தத்தை பெரிதும் விரும்பிய பாரதிதாசன், சுயமரியாதையின் பால் நம்பிக்கை கொண்டிருந்த பாரதிதாசன், அடிமை என்னும் பொருளுடைய தாசன் என்னும் பின்னொட்டை ஏன்
ஏற்றுக்கொண்டார் எனத் தெரியவில்லை. பாரதியார் நாட்டு விடுதலைக்காகப் பாடினார்.
புரட்சிக் கவிஞர் தமிழருக்காகவும் தமிழுக்காகவும் பாடினார். பாவேந்தர் அவர்கள், பாரதியாருக்கு எந்த விதத்திலும் குறைந்தவரல்ல என்பது என்
எண்ணம். ஆக,
சுயமரியாதையை வலியுறுத்திய பாவேந்தர், பாரதிக்குத் தாசன் என்னும் பொருளில் தன்பெயரைச்
சூட்டிக்கொண்டது வருத்தமாக இருக்கிறது என்றார்.
---------------------
30 - 30.01.2018
இந்திய
எழுத்துக்கள்
இந்தியாவில்
காணப்படும் பழைய எழுத்துக்களை 4 பிரிவுகளாகப்
பிரித்துள்ளனர். அவை பிராமி, கரோஷ்டி, திராவிடி, யவனாணியா
என்பன.
பிராமி என்பது அசோகருடைய கல்வெட்டுகளிலும் தென்னிந்தியாவில்
காணப்படும் குகைகளிலும் உள்ள எழுத்துக்கள். இவை மிகப் பழமையானவை. இன்றைய தமிழ்
எழுத்துக்களின் பழைய வடிவம் என்று கூறப்படுகிறது. கரோஷ்டி என்பது இந்தியாவின்
வடமேற்குப் பகுதியில் கி.பி. 4 ஆம்
நூற்றாண்டில் வழக்கிலிருந்த எழுத்துமுறை. திராவிடி என்பது வட்டெழுத்து. இது கி.மு.
3 நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்துள்ளதாகத்
தெரிகிறது. பிற்கால தமிழ்நாட்டில் சோழநாடு, பல்லவ நாடு தவிர்த்த ஏனைய பகுதிகளுக்குள் பிராமி எழுத்துக்களின் பயன்பாடு
சுருங்கியிருக்கிறது. சோழ,
பல்லவ நாடுகளில் பிராமி லிபி என்னும் எழுத்து வகையின் வழி
வந்த கிரந்தம் வழக்கில் இருந்திருக்கிறது. தென்னிந்தியா முழுவதும் சோழர்களின்
ஆட்சிப்பகுதியாக இருந்த காலத்தில் கிரந்தமே வழக்கில் இருந்துள்ளது. சோழர்களுக்குப்
பிறகு தமிழ்நாட்டில் விஜயநகர, மகாராஷ்டிர
மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் நாகர எழுத்துகள் வழக்கத்தில் இருந்துள்ளன.
தாஞ்சாவூரில் மராத்திய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கி.பி.1679 இல் இருந்து மோடி எழுத்து வழக்கில் இருந்திருக்கிறது.
யவனாணியா என்பது தமிழ்நாட்டில் கிரேக்கர்களும் அவர்களைச் சார்ந்தோரும் பயன்கொண்ட
எழுத்து.
---------------------
31 - 31.01.2018
மாரத்தானும்
பெண்ணும்
இன்று
உலகம் முழுவதும் மாரத்தான் பல நோக்கங்களுக்காக நடத்தப்படுகிறது. சில நேரங்களில்
அது ஒரு விதமான விளம்பர உத்தியாகக் கூட பாவிக்கப்படுகிறது. இந்த மராத்தானில்
பெண்கள் கலந்து கொள்வதற்கு இருபதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிவரை கடுமையான
தடைகள் இருந்தன. ஆண்களே மாரத்தானில் முழுவதுமாகப் பங்கெடுத்திருக்கின்றனர்.
இந்நிலையில்
ஜெர்மனியில் பிறந்த கேத்தரின் ஸ்வைட்சர் என்னும் பெண்மணி 1967 இல் சிராக்கஸ் ஹாரீரீஸ் அத்லெடிக் கிளப் நடத்திய
மாரத்தானுக்கு தனது பெயரின் சுருக்கத்தை மட்டுமே குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்தார்.
அந்த கிளப் கேத்தரின் ஸ்வைட்சரை ஆண் என நினைத்துக்கொண்டு 261 ஆம் எண்ணை அவருக்கு ஒதுக்கிக் கொடுத்தது. நிகழ்வின் போது
ஆண்களோடு சேர்ந்து ஓடும்போதுதான் 261 ஆம் எண்ணில் ஓடுகிறவர் பெண் என கண்டுபிடிக்கப்பட்டது. மாரத்தான் ஒருங்கிணைப்பாளர்கள்
வெளியேற்ற முயன்ற போது கேத்தரின் ஸ்வைட்சருக்கு அவருடைய காதலர் தாம் மில்லர் உதவி
செய்தார். கேத்தரின் ஸ்வைட்சரும் தொடர்ந்து ஓடினார். என்றாலும் மாரத்தானில் கலந்து
கொள்வதற்கு பெண்களுக்கு முறைப்படியான அனுமதி 1972 இல் தான் கிடைத்தது.
---------------------
32 - 01.02.2018
உடையும்
அலைகள்
கடலில்
பேரலைகளின் அதிர்வுகளால் சிற்றலைகள் உருவாகின்றன. அந்த அலைகள் ஆயிரக்கணக்கான தூரம்
பயணித்து ஓர் எல்லையில் உடைகின்றன. அலை உருவான மையத்திலிருந்து அலையின் பயணத்
தொலைவு அதிகரிக்க அதிகரிக்க உயரம் குறைந்து நீளம் அதிகரிக்கிறது. இத்தகைய அலைக்கு
நீர்ப்பெருக்கு அலை என்று பெயர். இந்த அலையின் உயரம் மிகவும் தாழ்வாகவும் சீராகவும்
இருக்கும். இது கரையை நெருங்கும்போது அலையின் அடிப்பகுதி தரையை உராய்கிறது. இதனால்
ஏற்படும் மாற்றத்தில் அலையின் வேகமும், நீளமும் குறையத் தொடங்கும். அதே சமயம் உயரம் கூடும். உயரம் கூடிய அலை, கரையை நோக்கி வரவர பின்பகுதியில் அதிகமான நீர்ச்சுமையோடு
முன்னோக்கி வளைகிறது. வளைந்த நீர் முன்னோக்கிச் சரிவதால் இரைச்சல் உண்டாகிறது.
இந்த
அலை சிதறும் உடையலை,
சிதையும் உடையலை என்று இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது. கடல்
தரையின் சரிவு சீராகக் காணப்படும் இடத்தில் சிதறி உடைவது சிதறும் உடையலை.
வெகுதொலைவிலிருந்து நுரையுடன் வந்து நுரையை மணலில் கலக்கியதும் அடங்கிவிடுகிற அலை
சிதையும் உடையலை. இவை தவிர,
மூழ்கும் உடையலை, பிரதிபலிக்கப்பட்ட அலை என்ற வகைப்படுகளும் உள்ளன.
---------------------
33 - 02.02.2018
இயற்கணிதம்
அரேபிய
கணித மேதையான அல் கோவரிஸ்மி என்பவர்தான் இயற்கணிதத்தின் தந்தையாகக்
கருதப்படுகிறார். இவர் எழுதிய Al Jabr Mugabala என்னும் நூலில் இருந்தே இயற்கணிதம் என்னும் சொல்
உருவானதாகக் கூறுவாரும் உண்டு. கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம்
நூற்றாண்டு வரை இயற்கணிதம் என்பது கூட்டல், கழித்தல்,
பெருக்கல், வகுத்தல்
போன்ற செய்முறைகளை மட்டுமே கொண்டிருந்தது. இயற்கணிதத்தின் வளர்நிலையான கருத்தியல்
இயற்கணிதம் 19 ஆம் நூற்றாண்டில் தான் உருவானது. அதற்கு காஸ், கேய்லி என்பவர்கள் காரணமாக இருந்தனர். பின்னர் நீண்ட
பயிற்சிக்குப் பிறகு கேய்லி அணி இயற்கணிதத்தை உருவாக்கினார். அணி இயற்கணிதத்தின்
தந்தையாகக் கருதப்படும் கேய்லி ஹேமில்டனுடன் இணைந்து அணிக்கொள்கையைக்
கண்டுபிடித்தார். பிறகு கேய்லி சில்வஸ்டர் என்பவருடன் சேர்ந்து இயற்கணிதத்தின்
மாறா அலகுகள் பலவற்றைக் கண்டுபிடித்தார்.
இன்னொரு
புறம் ஜார்ஜ் பூல் என்பவரால் வளர்க்கப்பட்ட இயற்கணிதம் முற்றிலும் மாறுபட்டு
அமைந்திருந்தது. இவரின் Investigation of the laws of Thought என்னும்
நூலை அடிப்படையாகக் கொண்டுதான் பின்னாளில் பூலியன் இயற்கணிதம் உருவானது.
---------------------
34 - 03.02.2018
கீழ்ப்படிதல்
கீழ்ப்படிந்து
நட,
பணிவோடு இரு, அடக்க ஒடுக்கத்துடன் இருக்கப்பழகு என்றெல்லாம் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம்.
சரி,
கீழ்ப்படிவதில், பணிவோடு இருப்பதில்,
அடக்கத்துடன் நடந்து கொள்வதில் நமக்கு என்ன இலாபம்? ஏன் கீழ்ப்படிய வேண்டும்? ஏன் பணிவோடு இருக்க வேண்டும்? ஏன்
அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்? நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இன்னொருவர் ஏன் முடிவு செய்கிறார்? அந்த அதிகாரம் அவருக்கு எப்படி வந்தது? யார் கொடுத்தது? இந்த மாதிரியான கட்டளை மொழிகளை எல்லாராலும் எல்லாரிடத்தும் பயன்படுத்த
முடியுமா?
முதலாளி
தொழிலாளியிடம் கீழ்ப்படிதலை எதிர்பார்ப்பதைப் போல தொழிலாளி முதலாளியிடம்
எதிர்பார்க்க முடியுமா?
எதிர்பார்க்க முடியாமைக்கு என்ன காரணம்? யார் காரணம்? கீழ்ப்படி,
பணிவோடு இரு, அடக்கமாக வாழ்,
என்பதில் இருக்கும் அதிகாரத்தொனி யாருக்கானது? கீழ்ப்படியவில்லை என்றால், பணிவு இல்லையென்றால் குடும்பமும் சமுதாயமும் சிரழிந்து போகும் என்கிறார்கள்.
இங்கு குடும்பம் சமுதாயம் என்பன சாதியும் மதமுமாகத் தானே இருக்கின்றன.
கீழ்ப்படியாமல் எதிர்த்துப் பேசுவதால், சமத்துவம் கோருவதாலேயே குடும்பம் அல்லது சமுதாயம் என்கிற அமைப்பு
சிதைந்துவிடுமென்றால் சிதைந்து விட்டுத்தான் போகட்டுமே.
---------------------
35 - 04.02.2018
கப்பல்
புழுக்கள்
புகழ்பெற்ற
கடல்வழி பயணியான கொலம்பஸின் நான்காம் கடற்பயணத்தின் போது அவரது கப்பல் புழுக்களால்
அழிக்கப்பட்டது என்னும் செய்தி வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. கப்பல் புழுக்கள்
எல்லாக் கடல்களிலும் இருந்தாலும் வெப்பப் பிரதேசக் கடல்களில் தான் அதிகமாகக்
காணப்படுகின்றன. அதனால் வெப்பப் பிரதேசங்களில் பயணம் செய்யும் கப்பல்களே கப்பல்
புழுக்களால் சிதைவுக்கு உள்ளாகின்றன. இந்தியாவைப் பொருத்த மட்டில் கிழக்குக்
கடற்கரையில் 23 வகையான கப்பல் புழுக்களும் மேற்குக் கடற்கரையில் 10 வகையான கப்பல் புழுக்களும் காணப்படுகின்றன. இவற்றில்
டெரிடோ (Teredo),
பேங்கியா (Bankia),
நாசிடோரா வகைப் புழுக்கள் வலிமையான மரப்பலகைகளையும்
துளைத்து அழிவை ஏற்படுத்த வல்லவை.
கப்பல்
புழுக்கள் தம் பாதுகாப்பிற்காக மரப்பலகைகளைத் துளைத்தாலும், சில வகைப் புழுக்கள் மரங்களை உணவாகவும் உட்கொள்கின்றன.
டெரிடோவும்,
பேங்கியாவும் நாளொன்றுக்கு 2 செ.மீ. வீதம் துளைத்து 6 முதல் 12 மாதங்களுக்குள்ளாக மரப்பலகையைத் தேன்கூடு போல
ஆக்கிவிடுகின்றன. இப்புழுக்கள் நன்னீரில் வாழும் தன்மையற்றதால் இப்புழுக்களால்
பாதிக்கப்பட்ட கப்பலை நன்னீர்நிலைகளில் நிறுத்தி வைத்து இப்புழுக்களை
அழிக்கிறார்கள்.
---------------------
36 - 05.02.2018
14 அம்சக் கோட்பாடுகள்
1918 ஜனவரி 8 ஆம் நாள் அமெரிக்காவின் வில்சன் தனது அமைதித் திட்டத்தைக்
காங்கிரஸில் சமர்ப்பித்தார். இந்த அமைதித் திட்டத்தில் 14 அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அதனால் அவை 14 அம்சக் கோட்பாடுகள் என்று அழைக்கப்பட்டன. அவை, உலக நாடுகள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் வெளிப்படையாய்
இருக்க வேண்டும். அமைதி மற்றும் போர்க்காலங்களில் எல்லா நாட்டுக் கப்பல்களும்
எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். ரஷ்யாவிடம் இருந்து
கைப்பற்றிய பகுதிகளை ஜெர்மனி திருப்பித்தர வேண்டும். ருமேனியா, செர்பியா, மாண்டிநெக்ரோ
முதலிய நாடுகளில் இருந்து அந்நியப் படைகள் வெளியேற வேண்டும். போலந்து தன்னுரிமை
பெற்ற நாடாக வேண்டும். பெல்ஜியத்தின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
அங்கிருக்கும் ஜெர்மானியப் படைகள் வெளியேற வேண்டும். தேசிய உணர்வின் அடிப்படையில்
இத்தாலியின் எல்லைகள் வரையறுக்கப்பட வேண்டும். உள்நாட்டு பாதுகாப்புக்கு மட்டும்
குறைவான அளவில் போர்க்கருவிகள் உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். உலக நாடுகள்
தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள சர்வதேச அளவில் சங்கம் ஒன்றை நிறுவ
வேண்டும் என்பன 14 அம்சக் கோட்பாடுகளில் முக்கியமானவை. இந்தக் கோட்பாட்டை
அடிப்படையாகக் கொண்டே முதல் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
---------------------
37 - 06.02.2018
பாசிச முகம்
சமீபத்தில்
ஆட்டோ ஒன்றில் ‘காதலுக்குத் தேவை காசு பணம். கழற்றி விடுவது பெண்ணின் குணம்’ என்றொரு வாசகத்தைக் கண்டேன். இந்த வாசகத்தில் நாம் கவனிக்க
வேண்டிய அம்சங்கள் சில இருக்கின்றன. ஒன்று - ஆண் என்ற சொல் பயன்படுத்தப்படவே
இல்லை. இரண்டு - பெண் என்ற சொல் அவளது குணத்தோடு தொடர்புபடுத்தி
அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாசகத்திற்கு வெளியே ஆணின் முகம் மிகவும்
வலுவுடையதாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.
காசு
பணம் மட்டும் இருந்தாலே போதும் காதலித்துவிடலாம் அல்லது காதல் வந்து
சேர்ந்துவிடும் என்பதாக கூற்றின் முதல்பாதி அமைந்திருக்கிறது. ஆக, காதல் உணர்ச்சியின் பொருட்டோ, எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பின் பொருட்டோ வருவதில்லை என்கிற செய்தியைச்
சொல்கிறது கூற்றின் முதல்பாதி. கூற்றின் பின்பாதி காசும் பணமும் இல்லாவிட்டால்
கழற்றி விடுவது பெண்ணின் குணம் என்பதாக விரிகிறது. இந்தக் கூற்றின் போக்கிலேயே
சிந்திப்போம். இதில்,
காசும் பணமும் இருக்கின்ற இடத்திலேயே பெண்ணுக்குக் காதல்
உருவாகும் என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிற எண்ணம் இருக்கிறதே அதுதான் ஆணின்
பாசிசமுகம். இன்னும் சொல்லப் போனால் இது, காசு இருந்தால் வந்து விடுவாள் என்று பாலியல் தொழிலாளியையும் காதலியையும்
ஒன்றாகக் கருதுகிற ஆணாதிக்க மனப்போக்குத் தானே தவிர வேறொன்றுமில்லை.
---------------------
38 - 07.02.2018
நண்பேன்டா
ஓர்
ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரே ஒரு குடிமகன் நெருங்கிய நண்பராக
இருந்தார். நண்பர் என்றால் சாதாரண நண்பர் இல்லை. அந்தரங்க விஷயங்களைக் கூட
பகிர்ந்து கொள்கிற அளவுக்கு நண்பர். அந்த நண்பர் தினந்தோறும் செய்தித்தாள்
வாசிப்பதால் ராஜாவை விட அறிவு நிரம்பியவராக இருந்தார். சில நேரங்களில் அரண்மனை
விவகாரங்களைக் கூட செய்தித்தாள் வழியாகத் தெரிந்துகொண்டு ராஜாவிடம் வாதம்
செய்வதில் வல்லவர்.
ஒருநாள்
அந்தக் குடிமகன் ராஜாவிடம் இரயில்வே துறை நட்டத்தில் ஓடுகிறதாமே எனக் கேட்டார்.
அதற்கு ராஜா ஆமாம். தனியாரிடம் விட்டுவிடலாம் என்றிருக்கிறேன் என்றார். குடிமகன், சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்தும் நட்டத்தில் ஓடுகிறதாமே எனக் கேட்டார். அதற்கும் ராஜா, ஆமாம். அதையும் தனியாரிடம் விட்டுவிட ஏறக்குறைய
முடிவாகிவிட்டது என்றார். இப்படியாக அவர்களது நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது.
ஒருநாள் இராஜா மிகவும் சோர்வாக இருந்தார். குடிமகனுக்கு ராஜா மீது இரக்கம்
வந்துவிட்டது. குடிமகன் ராஜாவிடம் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள் எனக் கேட்டார்.
அதற்கு ராஜா எனக்குத் திருமணமாகி பல வருடங்கள் ஆகின்றன. குழந்தைப்பேறு இல்லை.
அதனால் தான் சோர்வாக இருக்கிறேன் என்றார். அதற்குக் குடிமகன் அதையும் தனியாரிடம்
விட்டுவிடுங்களேன் என்றார்.
---------------------
39 - 08.02.2018
கடல் எல்லை
உலகின்
எல்லா நாடுகளிலும் மீன்பிடிப்பதில் சிக்கல்கள் இருந்தே வருகின்றன. கடலுக்குள்
நாட்டின் எல்லைகளைத் தாண்டி மீன் பிடிப்பதற்காக கடலோடிகள் தண்டிக்கப்பட்டுக்
கொண்டே இருக்கிறார்கள். கடலோடிகளும் போராட்டங்களைச் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு சிக்கல் முடியும் போது இன்னொரு சிக்கல் வந்து உருவாகிவிடுகிறது.
கடலுக்குள் நாடுகளின் எல்லைகளைத் தீர்மானிப்பதற்கு குறிப்பிட்ட நாட்டு மக்களின்
உடன்பாடுகள்,
நீதி மன்றத்தின் முந்தைய கடல்சார் தீர்ப்புகள் முதலியவற்றை
அடிப்படையாகக் கொண்டே விதிகள் உருவாக்கப்படுகின்றன.
தொடக்கத்தில்
மீன்பிடிப்பதற்கும் பயணிப்பதற்கும் மட்டுமே கடல் பயன்பட்ட போது பெரிய அளவிலான
சிக்கல் உருவாகவில்லை. கடலுக்குள் இருக்கும் கனிம வளங்கள் வியாபாரமாக்கப்பட்ட
பின்தான் பெரிய பெரிய சிக்கல் உருவானது. அதனால் ஐ.நா. சபை 1955 இல் உலக நாடுகள் கடல் வளத்தைப் பயன்படுத்துவதை
நெறிப்படுத்துவதற்கான விதிகளை உருவாக்க மாநாடு ஒன்றைக் கூட்டியது. பின்னர் 1960 இலும் இரண்டாவது மாநாட்டைக் கூட்டியது. பல குளறுபடிகள்
இருந்ததால் இரண்டு மாநாடுகளிலுமே கடலின் அளவு ஒவ்வொரு நாட்டுக்கும் எவ்வளவு என்பது
முடிவு செய்யப்படவே இல்லை. மூன்றாம் மாநாட்டில் தான் 20 கிலோ மீட்டர் என முடிவு செய்யப்பட்டது.
---------------------
40 - 09.02.2018
இஞ்சி
இஞ்சி
உணவுப்பொருள்களிலும் சித்த மருத்துவத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் ஒன்று.
இஞ்சியை இலக்கியங்களும் சித்தர்களும் வெவ்வேறு பெயர்களில் அடையாளப்படுத்தி
இருக்கின்றனர். அல்லம்,
ஆர்த்தரகம், ஆத்திரகம்,
இலாக்கொட்டை, சுப்பிரமணி என்பன இஞ்சிக்கு வழங்கிய பெயர்கள். இஞ்சி உலர்ந்து சுக்கான பிறகு
அதையும் நிறையப் பெயர்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதகம், உபகுல்லம், கடுபத்திரமர், சுண்டி, சொண்டி, சௌபன்னம், சௌவர்ணம், நவசுறு, நாகரம், விடமூடிய அமிர்தம், வேர்க்கொம்பு என்பன சுக்குக்கு வழங்கிய பெயர்கள்.
ஜமைக்கா, தைவான், மொரிஷியஸ், நைஜீரியா, பிரேசில், சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இஞ்சி பயிரிடப்பட்டாலும்
தாயகம் இந்தியாவாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.
இந்தியாவில்
கேரளா,
கருநாடகம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், பீகார்,
உத்திரபிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் இஞ்சி பயிரிடப்படுகிறது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு
சராசரியாக 1 லட்சம் டன் விளைவிக்கப்படும் இஞ்சியில் 70 சதவீதம் கேரளாவில் இருந்து கிடைக்கிறது.
---------------------
41 - 10.02.2018
மாடிசன் போர்
அரசியல்
அளவில் சுதந்திரம் அடைந்த அமெரிக்கா 1812 ஆம் ஆண்டு பொருளாதார சுதந்திரத்திற்கான போரைத் துவக்கியது. அப்போது ஜேம்ஸ்
மாடிசன் குடியரசுத் தலைவராக இருந்தார். அதனால் தான் அப்போர் ‘மாடிசன் போர்’ எனக் குறிக்கப்படுகிறது.
அந்தப்
போரின் விளைவாக இந்தியப் பழங்குடிகள் அடக்கப்பட்டனர். அதனால் இந்தியப் பழங்குடிகள்
வசித்த பகுதிகளில் அமெரிக்கர்கள் குடியேறினர். தேசிய உணர்வு பெருகிறது. அமெரிக்க
மாலுமியான பிரான்ஸிஸ் ஸ்காட் கே என்பவர் ‘The
star of spanglad canner’ என்ற பாடலைப்
பாடினார். அதுவே அமெரிக்காவின் தேசிய கீதம் ஆயிற்று. அமெரிக்கர்கள் ஐரோப்பிய
விவகாரங்களில் இருந்து விலகி நிற்கக் கூடிய தனித்திருக்கும் கொள்கையைப் பின்பற்றத்
தொடங்கினார். கூட்டாச்சி கட்சி தன் செல்வாக்கை இழந்தது. பயணத்தின் மதிப்பு
வெகுவாகக் குறைந்தது.
இந்த
மாடிசன் போரின் போது இங்கிலாந்து அனுப்பிய படையின் ஒரு பிரிவினர் வாஷிங்டனைத்
தாக்கி குடியரசுத் தலைவர் மாளிகைக்குத் தீ வைத்தனர். தீயின் சுவடுகளை மறைக்க
வெள்ளை வண்ணம் பூசப்பட்டது. அதற்குப் பிறகே குடியரசுத் தலைவர் மாளிகை வெள்ளை
மாளிகை என அழைக்கப்படலாயிற்று.
---------------------
42 - 11.02.2018
காந்தியார்
முகம்
அடையாளம்
பதிப்பகத்தின் வழி இரண்டாம் பதிப்பாக வந்துள்ள ‘இந்து இந்தி இந்தியா’
என்னும் நூலை எழுதியவர் எஸ்.வி.ராஜதுரை. அவர் அந்நூலின் 189 வது
பக்கத்தில் இந்திய அரசமைப்பு அவை தேசியக் கொடியை வடிவமைத்தது தொடர்பான காந்தியின்
எண்ணத்தைப் பிரதிபலிக்கும் குறிப்பொன்றை எடுத்தாண்டுள்ளார். அந்தக் குறிப்பின்
செய்தி இப்படி அமைந்திருக்கிறது. ‘காந்தியின் இராட்டைச் சின்னம் தொழில் வளர்ச்சியடையாத காலத்தைக் குறிக்கிறது
என்றும்,
நவீன இந்தியாவிற்குப் புதிய சின்னங்கள் தேவை என்றும்
காங்கிரஸார் பலர்
விரும்பியதால், இந்தியாவில் பல போர்களை நடத்தி பேரரசு ஒன்றை நிறுவிய அசோகரின் சின்னங்களை
இந்திய அரசமைப்பு அவை ஏற்றுக்கொண்டது. இவை அசோகப் பேரரசின் வலிமையையும்
வீரத்தையும் அதிகாரத்தையும் குறிக்கின்றன. ஆனால் அந்தப் பேரரசின் சின்னங்களில் ஒன்றான
தர்ம சக்கரத்தை,
இராட்டினத்தின் இடத்தில் வைப்பதை காந்தி விரும்பவில்லை
என்றும்,
அரசியலமைப்பு அவை வடிவமைத்த கொடி எவ்வளவு அழகியல்தன்மை
கொண்டிருந்தாலும்,
அந்தக் கொடிக்குத் தான் தலை வணங்கப் போவதில்லை என்றும்
காந்தி கூறிவிட்டதாக ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்னும் புகழ்பெற்ற நூலை எழுதிய லாரி காலின்ஸ், டொமினிக் லாபியெர் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்’ என்பதாக அக்குறிப்பு அமைந்திருக்கிறது.
---------------------
43 - 12.02.2018
பழைய
கருத்தியல் மறுப்பு
20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தத்துவவியலாளராக அறியப்படுகிறவர் பேராசிரியர்
ட்யூயி (Prof.Dewey). இவார் மிச்சிகன், சிகாகோ, கொலம்பியா பல்கலைக்கழக்களில் பணியாற்றியவர். அமெரிக்க
பொருளியலாளர் வெப்லென்,
புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், ஸ்பேனிஷ் தத்துவவியலாளரான ஜார்ஜ் சண்டயானா, ஜெர்மானிய
தத்துவவியலாளரான கெபர்மஸ் முதலியோருக்கு ஆசிரியராக இருந்தவர்.
கல்விச்
சீர்திருத்தத்திலும் சமுதயாச் சீர்திருத்தத்திலும் தம்மை முழுமையாக
அர்பணித்துக்கொண்டவரான பேராசிரியர் ட்யூயி பழமையைக் கொண்டாடுவதானால் நேர்வனவற்றை
இப்படிக் கூறுகிறார். கடந்த காலங்களைப் பற்றி ஆராய்வது நிகழ்காலத்தைப் புரிந்து
கொள்ள உதவாது. கடந்த காலத்தையும் அதன் பாரம்பரியத்தையும் பற்றிய அறிவு
நிகழ்காலத்திற்குப் பயன்படும் விதத்தில் தான் அதன் முக்கியத்துவம் இருக்கிறது. மற்றபடி இல்லை. கடந்த காலத்தின் ஆவணங்களையும்
சின்னங்களையும் கல்விக்கு முதன்மையான அடிப்படை விஷயங்களாக வைப்பது தவறு. அவ்வாறு
செய்வதன் மூலம் கடந்த காலம் நிகழ்காலத்திற்குப் போட்டியாக வருகிறது. நிகழ்காலம், கடந்த காலத்தைப் பார்த்தே வாழுகிற பயனற்ற முயற்சியாகி
விடுகிறது என்கிறார். அதாவது கடந்த காலத்தின் அனுபவங்களைப் பயன்படுத்திக்
கொள்ளலாமே தவிர,
அதையே நிகழ்காலத்திலும் தூக்கிக்கொண்டு சுமந்து திரிய
வேண்டியதில்லை என்கிறார்.
---------------------
44 - 13.02.2018
தக்காளி
அரசியல்
இப்பொழுது
நாட்டுத் தக்காளி,
நாட்டு வெங்காயம் மிகவும் விலை மலிவாகக் கிடைக்கிறது. கடந்த
டிசம்பர் மாதம் வரை தக்காளியும் வெங்காயமும் சாமான்ய மக்களால் வாங்க முடியாத
அளவுக்கு விலை உயர்ந்திருந்தது. வசதியான மத்திய தர வர்க்கத்தினர் கூட தக்காளி, வெங்காயம் வாங்குவதற்கு யோசித்தனர். அதுவும் பெங்களூர்
தக்காளி என்று நம் மண்ணுக்கே சம்பந்தமில்லாத ஒருவகையான தக்காளி தான் சந்தையில்
கிடைத்தது.
இப்போது
நாட்டுத் தக்காளியின் விளைச்சல் கணிசமாக இருக்கிறது. சந்தைக்கும் அதன் வரத்தும்
சீராக இருக்கிறது. நாட்டு வெங்காயத்தின் விலையும் எல்லோராலும் வாங்கக் கூடிய
அளவுக்குக் குறைந்திருக்கிறது. சரி விஷயத்திற்கு வருவோம். ஏன் நாட்டுத்
தக்காளியும் நாட்டு வெங்காயமும் சந்தைக்கு வரத்தொடங்கும் தருணத்தில் விலை
குறைகிறது. மற்ற நேரங்களில் தக்காளி, வெங்காயத்தின் விலை மட்டும் ஏன் ஏறிக்கிடக்கிறது என்று சிந்திக்க
வேண்டியிருக்கிறது. நாட்டுத் தக்காளிக்கான சந்தையின் பெரும்பகுதி விவசாயிகளின்
கட்டுப்பாட்டில் இருக்கிறது. பெங்களூர் தக்காளியின் சந்தை விவசாயம் சாராத வணிகர்களின்
கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் தான் விவசாயிகள் தமது உற்பத்தியை அதிகரிக்கும்
போதெல்லாம் சந்தை விலையைத் தீர்மானிக்கும் வணிகர்கள் விலையை
குறைத்துவிடுகிறார்கள். இதுதான் சிக்கல். ஆக, விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் வணிகருக்கான இடத்தில் விவசாயிகள் அமர
வேண்டும்.
---------------------
45 - 14.02.2018
ஆதலினால்
காதல் செய்வீர்
அலெக்ஸாண்டர்
டூடுமாஸ் தனது காதலிக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் கூறுகிறார் அருமைக் காதலியே, நான் உன்னிடம் ஐம்புலன்களின் குழப்பத்துடன் மிருகத்தனமாகவே
பேச விரும்புகிறேன். இப்படி பேச எழுத அனுமதி தருவாயாக. யார் யார் என்ன
வேண்டுமானாலும் சொல்லட்டும். யாருடைய உபதேசமும் நமக்குத் தேவையில்லை. நீதிமான்கள்
நீதி பேசட்டும். கவிஞர்கள் கற்பனை உலகிலே கலங்கி அலைந்து கதறட்டும். யாருடைய
உண்மையும் நமக்குத் தேவையில்லை. நமது வாழ்க்கையைச் சூழ்ந்து கொள்கிறது காதல்.
இயற்கை வெறியில் பாய்ந்து நமது உடலையை கடலாக மாற்றிக் காய வைத்து இன்பம் பாய்ச்சி
மீண்டும் உயிரோவிய எழிலை எழுப்புகின்றது. எந்த வாசனையும் இதற்கு நிகரில்லை. காதல்
மணம் அபூர்வமானது. காற்றை விட லேசானது. இரணத்தைவிடக் கூர்மையானது. காதலின் மேல்
வீரம்,
மோசம், நாசம் எல்லாம்
சிலிர்த்து கம்பீரமாக வளர்கின்றன. ஆகையால், நாம் காதலையை காதலிப்போம். அமைதியான ருசியற்ற காய்ந்த காதலையல்ல. துணிகரமான, குமுறிக் கும்மாளமிடுகிற, அடக்கமுடியாத காதலையே காதலையே காதலிக்கப் பழகுவோம். என அற்புதமாக காதலை
விவரித்திருக்கிறார். காதலின் இயல்பும் இருப்பும் தானே பிரபஞ்சத்தை அழகாக்குகிறது.
ஆதலினால் காதல் செய்வீர்.
---------------------
46 - 15.02.2018
இந்திய -
சீனப் பிரச்சினை
தீபெத்
சுதந்திரப் பகுதியா அல்லது சீனாவுக்கு உரிமையுடையதா என்கிற சர்ச்சை நீண்ட காலமாக
இருந்து வந்தது. சுதந்திரமாகச் செயல்பட இந்தியாவும் உத்திரவாதம் அளித்தது. ஆனால்
சீனா 1955ல் தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதனால் 1959 இல் தீபெத்திய மக்கள் சீனாவுக்கு எதிராகக் கிளர்ச்சி
செய்தனர். இந்தக் கிளர்ச்சியில் பாதிக்கப்பட்ட பலர் அண்டை நாடுகளுக்குள் தஞ்சம்
அடைந்தனர். பௌத்த மதத் தலைவர் தலாய் லாமாவும் தனது 13000 சீடர்களுடனும் ஆதரவாளர்களுடனும் இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்தார். அவர்கள்
அனைவரும் முசௌரியில் தங்க வைக்கப்பட்டனர். தீபெத்தியர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்ததால் சீனாவின் கோபம்
இந்தியாவின் மீது திரும்பியது. இந்தியாவும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இதன்
விளைவாக சீனாவுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாத்
தலைமையிலான கேரள அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1959 இல் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் லாங்ஜு (Longju) என்னுமிடத்தில் இந்தியப் படையினர் மீது சீனா
துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்நிகழ்வு தான் இருநாட்டு எல்லைகளைக் காரணமாகக்
கொண்ட போருக்கான முதல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
---------------------
47 - 16.02.2018
ஏமாற்றப்பட்ட
தலைவர்
சுவான்
பெரான் (Juan Peron) என்பவர் அர்ஜென்டினா குடியரசின் முன்னாள் தலைவர். அனைவராலும் மிகவும்
நேசிக்கப்பட்ட தலைவர். 1949 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவை அணு ஆயுதத்தில் சிறந்த நாடாக
மாற்ற வேண்டும் என்று விரும்பி டாக்டர் ரொனால்ட் W ரிச்சர்டு என்னும் நாசிச விஞ்ஞானியை நியமித்தார். அவரும்
பல அணுஆயுத சோதனைகளைச் செய்வதைப் போல பாவனை செய்தார். அந்த நடவடிக்கையில் பல கோடி
டூரூபாய்களை சுருட்டிக்கொண்டார் டாக்டர் ரிச்சர்டு. ஆனால் உண்மையில் அவர் ஒரு
வெடிமருந்து தொழிற்சாலையில் வெறும் 6 மாதங்கள் மட்டுமே வேலை பார்த்தவர் என்பதை மறைத்திருந்தார். ஒரு வருடம்
கழித்து பெரானிடம் தான் ஒரு புதிய அணு ஆயுத தொழில்நுட்பத்தைக் கண்டு
பிடித்திருப்பதாகவும் அதை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த பெரான், 1951 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் பலரை அழைத்து அணுஆயுத சோதனைக்கு ஏற்பாடு செய்தார்.
விஞ்ஞானிகள்
குழுவில் இருந்த வெர்னர் ஹென்ஸ்பெர்க் என்ற விஞ்ஞானி ஒருவர் ரிச்சர்டு செய்தது
சாதாரண வெடி என்றும்,
அது அணு ஆயுதத்தின் கீழ் வராது என்றும் விளக்கினார்.
ரிச்சர்டுவின் குற்றம் நிருபிக்கப்பட்டது. பெரான் பதவியை இழந்தார். ஆட்சியை
இராணுவம் கைப்பற்றிக் கொண்டது.
---------------------
48 - 17.02.2018
பெண்களுக்கான
தலைவர்கள்
இந்திய
வரலாற்றில் தேசத்தின் மானம், குடும்பத்தின்
மானம் பெண்களோடே தொடர்புபடுத்திப் பேசப்பட்டுள்ளது. அதாவது, பெண்களின் மானமே தேசத்தின் மானமாகவும் குடும்பத்தின்
மானமாகவும் தலைவர்களால் பாவிக்கப்பட்டு இருக்கிறது. காந்தியார், ராஜாராம் மோகன்ராய், ரானடே,
நேரு ஆகியோரும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அதனாலேயே
பாகிஸ்தான் பிரிவினையின் போதும் உள்நாட்டுக் கலவரத்திலும் பெண்கள் பாலியல்
வன்முறைக்கு உள்ளாகும் போதெல்லாம் பெண்களின் மானத்தைக் காப்பது போன்ற தோரணையில்
அவர்கள் தேசத்தின் தூய்மையை வலியுறுத்தினர். இதற்காக 1948 இல் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் கூட நடத்தப்பட்டன. இந்த
விவாதத்தில் இந்து ஆண்கள் மூலம் பெற்ற குழந்தைகளே இந்தியர்களாக இருக்க முடியும்
என்ற கருத்தே அனைத்துத் தலைவர்களுக்குமான பொதுக்கருத்தாக வெளிப்பட்டது.
அப்படிப்பட்ட குழந்தைகள் வாழ்வதுதான் தேசத்தின் மானம் என்று அவர்கள் நம்பினர்.
ஆனால்
பூலே,
அம்பேத்கர், பெரியார் போன்றோரின் பெண்கள் பற்றிய சிந்தனைகள் ஒருபோதும் பெண்களின் மானம்
குறித்து அமைந்ததில்லை. அவர்கள் பெண்களின் மானம் என்பதை பெண்களை அடிமைப்படுத்த
ஆண்கள் கையாளும் ஒருவகை உத்தியாகவே பார்த்தனர். அதனால் தான் அவர்கள் பெண்களின்
மானம் குறித்துப் பேசாமல் பெண்களின் விடுதலை குறித்துப் பேசினர்.
---------------------
49 - 18.02.2018
தாசிகளின்
பரதநாட்டியம்
1928 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னையில் சி.பி.ராமசாமியால் சங்கீத் வித்வத் சபை
ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் செயலாளரான கிருஷ்ணன் என்பவர் சதிராட்டம்
அல்லது தாசி ஆட்டத்தை சங்கீத் வித்வத் சபை வழி அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல
முயற்சிகள் எடுத்தார். அதற்காக இராஜலட்சுமி, ஜீவரத்தினம் என்னும் பெண்களைப் பயன்படுத்திக்கொண்டார். இவ்விரு பெண்களும்
தாசியர் குலத்தில் பிறந்த சகோதரிகள்.
சபை
தொடங்கப்பட்ட போது தாசிகளின் ஆட்டத்தை பொதுமேடைகளில் நிகழ்த்துவதற்குக் கடுமையான
எதிர்ப்புகள் இருந்தன. அவைகளை எல்லாம் மீறிய கிருஷ்ணன், சங்கீத் வித்வத் சபையின் ஆறாவது ஆண்டுவிழா நிகழ்ந்த 1931 இல் இராஜலட்சுமி, ஜீவரத்தினத்தைக் கொண்டு தாசி ஆட்டத்தை முதல் முதலாக பொதுமேடையில்
நிகழ்த்தினார். அப்போதும் அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அந்த
எதிர்ப்புகளைச் சமாளிக்கும் விதத்தில் தான் கிருஷ்ணன், 1931 இல் தாசி ஆட்டத்திற்கு பரத நாட்டியம் எனப் பெயர்
சூட்டினார். அதற்குப் பிறகு தாசி ஆட்டம் நிகழ்த்தப்பட்ட போதெல்லாம் அது
பரதநாட்டியம் என்றே அழைக்கப்பட்டது. அந்தச் சொல் வழக்கு இன்றைக்கும் தொடர்கிறது.
---------------------
50 - 19.02.2018
பாஹாயீ
பாரசீக
மக்கள் அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கி இருந்தபோது அவர்களை மீட்பதற்கு
உருவான மதமே பாஹாயீ. இதன் நிறுவனர் பாஹாஹூல்லா என்பவர். இது 19 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. பாப் என்பவர் 1844 இல் பாப்வழி என்றொரு வழிபாட்டு மரபைத்
தோற்றுவித்திருந்தார். அவர், கடவுள்
விரும்புவது வெறும்வழிபாடல்ல. ஒழுக்கமே என்று போதித்தார். அதோடு சகல மதங்களையும் ஒன்றாக்கி பூமியில் உண்டாகும்
தேவலோகத்தை படைக்கவிருக்கும் கடவுளுக்குத் தாமே முன்னோடி எனவும் கூறிக்கொண்டார். இது
ஏற்கனவே இருந்த மதவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எரிச்சலூட்டியது. ஆகவே பாப்
கொல்லப்பட்டார். அப்போது அவரது பக்தர்களாக இருந்த 20 ஆயிரம் பேரும் உயிர்துறந்தனர்.
அதற்குப்
பிறகு பாஹாஹூ என்பவர்,
பாப் பூமியில் தோன்றுவதாகக் கூறிய கடவுள் நான் தான் எனக்
கூறி போதிக்கக் தொடங்கினார். அவரையும் அரசு துன்புறுத்தி நாட்டை விட்டுத்
துரத்தியது. அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் அப்துல் பாஹா என்பவர் உலகமெங்கும்
சென்று பாஹாஹூ மதத்தைப் பிரச்சாரம் செய்தார். இவரது பரப்புதலின் காரணமாகவே
இன்றைக்கு 80 நாடுகளில் பாஹாயீ மதத்தைப் பின்பற்றும் மக்கள்
இருக்கிறார்கள்.
---------------------
51 - 20.02.2018
கனவுகளும்
விழித்திரையும்
அமெரிக்காவில்
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் கண்களின் அசைவுகள் குறித்த ஆராய்ச்சி செய்தவர்
யூஜின் அசெரின்ஸ். இரவு அதிக நேரம் விழித்திருந்து வேலை பார்க்கும் அசெரின்ஸ், 1951 ஆம் ஆண்டில், ஒருநாள் தனது இயற்பியல் ஆய்வகத்தில் இருந்த Offner
Dynograph என்னும் Brain wave machine -ஐ வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அப்போது அவரது 8 வயது மகன் அவரைப் பார்ப்பதற்காக வந்தான். உடனே அவனை வைத்தே
தனது ஆராய்ச்சியின் அடுத்தகட்ட சோதனையைச் செய்யத் தொடங்கிய அசெரின்ஸ், மகனை மேல், கீழ், வலம், இடமாகப்
பார்க்கச் சொல்லி கணினியின் மானிட்டரைப் பார்த்துக் குறிப்பெடுத்துக்
கொண்டிருந்தார்.
சிறிதுநேரம்
கழித்து Brain
wave machine தானாகவே அசைய ஆரம்பித்தது. மகன் விழித்திருப்பதாக நினைத்து
பக்கத்தில் சென்று பார்த்தபோது அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். இயந்திரம்
பழுதாகிவிட்டதோ எனப் பதறிய அசெரின்ஸ் சில வினாடிகளில் நிதானத்திற்கு வந்து
மகிழ்ச்சி அடைந்தார். அதாவது மகனின் தூக்கத்தில் வரும் கனவுகளின் காட்சிகளுக்கு
ஏற்ப கண்விழி அசைவதையும் அதை Brain wave machine பதிவு செய்வதையும் கண்டறிந்தார். அதை வைத்தே நமது மூளை
அதற்குப் பழக்கப்பட்ட விஷயங்களைப் பார்ப்பதற்கு மட்டுமே கண்களுக்குக்
கட்டளையிடுகிறது என்பதை உறுதிசெய்தார். இது Journal of
Science இல் கட்டுரையாகவும் வெளிவந்தது.
---------------------
52 - 21.02.2018
மூக்குக்
குத்துதலும் மணி கட்டுதலும்
தமிழ்ப்
பழமொழிகளில் இரண்டு இப்படி அமைகின்றன. ஒன்று - அடங்காத மாட்டுக்கும் அடங்காத
பெண்ணுக்கும் மூக்கைக் குத்து என்பது. இன்னொன்று - திருட்டு மாட்டுக்கும்
தில்லுவாரி பெண்ணுக்கும் மணியக் கட்டு என்பது. தில்லுவாரி பெண் என்றால் ஏமாற்றுகிற
பெண் என்று பொருள். இந்தப் பழமொழிகளில் நாம் கவனிக்க வேண்டியன மூக்குக் குத்துதல், மணி கட்டுதல் என்னும் சொற்கள் வழி அறியலாகும் பொருள்கள்.
கன்றுக்
குட்டிகள் பிறந்தவுடன் வாய்க்கூடு மட்டுமே கட்டி விடுவார்கள். அது சில மாதங்களில்
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்து வரும் போது மூக்கைக் குத்திக் கயிறு
போடுவார்கள். அந்த மூக்குக்கயிறு பிடிகயிறோடு பிணைக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு
மாடு அடங்கி நடந்துகொள்ளும். மேய்ச்சலுக்க மாடுகளைக் கூட்டமாக ஓட்டிச்செல்லும்
போது சில மாடுகள் மந்தையிலிருந்து பிரிந்து மேய்ப்பாளரின் கண்ணுக்குத் தெரியாமல்
மறைந்து மேய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும். அத்தகைய மாடுகளுக்கு கழுத்தில்
மணியைக் கட்டிவிடுவார்கள். அதனால் அவை மறைந்து மேய முடியாது. கண்காணிப்பிலேயே
இருக்கும்.
சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். பெண்ணுக்கு மூக்குக்
குத்துவதும் கொலுசு அணிவிப்பதும் அழகு என்று நம்பப்படுகிறது. உண்மையில் இந்தச்
சமுதாயம் பெண்களை மாடாகத்தான் கருதுகிறது. அதனால் தான் மூக்குக் குத்தி
கட்டுப்படுத்துகிறது. கொலுசு மாட்டி கண்காணிக்கிறது.
---------------------
53 - 22.02.2018
மனிதனின்
இயல்பு
ஓர்
ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் தினமும் மலையின் உச்சியில் அமர்ந்து
சுற்றியிருந்த வனாந்தரங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். கண்காணித்தால்
மட்டும் போதாது அவற்றை எழுதியும் வைக்க வேண்டும் என்று அத்துறவிக்கு அவரது தலைமைத்
துறவி கட்டளையிட்டிருந்தார். அதன்படியை துறவியும் வனாந்தரத்தைக் கண்காணித்து
கண்டவற்றை எழுதியும் வைத்துக்கொண்டிருந்தார்.
ஒருநாள்
ஆயிரக் கணக்கிலான எருமைகள் அந்த வனாந்தரத்தைக் கடந்து சென்றன. அதைப் பார்த்த துறவி, எருமைகள் நடந்து சென்ற தேதியையும் நாளையும் குறிப்பிட்டு
எழுதி வைத்தார். சில நாள்கள் கழித்து யானைக் கூட்டமொன்று அந்த வனாந்தரத்தைக்
கடந்து சென்றது. அதையும் கவனமாக எழுதி வைத்தார். சில மாதங்களுக்குப் பின் பன்றிகள்
பல கூட்டங்கூட்டமாக அந்த வனாந்தரத்தைக் கடந்துசென்றன. அதையும் துறவி
மிகத்துல்லியமாக எழுதி வைத்தார்.
இன்னும்
சில நாள்கள் கழித்து மான்கள் துள்ளிக் குதித்து அநர்த வானந்தரத்தைக் கடந்து
சென்றன. அதைக் குறித்தும் துறவி எழுதி வைத்துக்கொண்டார். அடுத்த சில நாள்களில்
மனிதர்கள் சிலர் நடமாடத் தொடங்கினர். அதைப் பார்த்த பின் துறவி தனது
குறிப்பேட்டில் ‘விலங்குகள் நடந்துசென்ற பின் அவை நடந்த பாதையில் புற்கள்
அப்படியே இருந்தன. விலங்குகளும் இருந்தன. மனிதன் நடந்த பிறகு புற்களையும்
காணவில்லை. விலங்குகளையும் காணவில்லை’ என்று எழுதினார்.
---------------------
54 - 23.02.2018
தீக்குச்சி
வேதிப்பொருளைப்
பயன்படுத்தி தீக்குச்சி தயாரிக்கத் தொடங்கிய காலத்தில் பாஸ்பரஸ் வத்தியைக்
கண்டுபிடித்தனர். சுருட்டப்பட்ட காகிதத்தின் முனையில் பாஸ்பரஸை வைத்து அதைக்
கண்ணாடிக் குழாயினுள் வைத்துவிடுவர். தேவைப்படும் போது குழாயை உடைப்பர்.
வெளிக்காற்று பட்டவுடன் எரியத்தொடங்கும். இதைக் கையாளுவதற்குச் சிரமமாக இருந்ததால்
1827 இல் ஜான் வாக்கர் என்பவர் வேறொரு முறையில் முயற்சி
செய்தார். என்றாலும் அவரது முயற்சியில் உருவாக்கப்பட்ட தீக்குச்சி எரியும் போது
துர்வாடை வீசியது. அதனால் அது பெரிய அளவில் வெற்றியடையவில்லை. இதே காலத்தில்
சாமுவேல் ஜோன்ஸ் என்பவரும் லூசியர் என்னும் ஒருவகை தீக்குச்சியைக்
கண்டுபிடித்தார். ஆனால் அது எரியும் போது நச்சுப்புகை வெளியானது. 1830 இல் சார்லஸ் சாவுரியா என்பவர் எந்தப் பொருள் மீது தேய்த்தாலும்
தீப்பற்றுமாறு தீக்குச்சியை உருவாக்கினார். அதன் முனையில் பயன்படுத்திய
வேதிப்பொருள்களால் மக்களிடையே நெக்ரோசிஸ் என்ற நோய் பரவியது. இதில் இருந்த மஞ்சள்
பாஸ்பரஸ் கொலை செய்யவும் தற்கொலை செய்யவும் பயன்படுத்தப்பட்டதால் அதைத்
தவிர்க்கும் பொருட்டு 1844 இல் கஸ்ட்டாவ் ஈ பாஸ்க் என்ற சுவீடன் நாட்டுக்காரர் தான்
இன்றைக்கு நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் தீக்குச்சியைக் கண்டுபிடித்தார்.
---------------------
55 - 24.02.2018
துருக்கி
மொழியும் தமிழும்
துருக்கியில் பேசப்படும் துருக்கி மொழி யூரல் -
ஆல்ட்டா மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. இது தொடக்கத்தில் துருக்கியிலிருந்து
சீனம் வரை வழக்கு மொழியாக இருந்தது. இந்த மொழியின் அமைப்பில் பெரும்பகுதி தமிழோடு
ஒத்துக் காணப்படுகிறது. துருக்கி மொழில் உள்ள 8 உயிரெழுத்துகளும் ஒலிப்புமுறையில் ஒரே மாதிரியாக இருக்கின்றன. தமிழைப் போலவே
பெயர்ச்சொற்கள் வேற்றுமைகளை ஏற்கின்றன. எழுவாய், பயனிலைகளின் அமைப்பும் கூட தமிழின் அமைப்பையை ஒத்துள்ளன. கி.பி. 732 ஆம் ஆண்டைச் சார்ந்த சீன மன்னன் கோல் தெகினின் கல்வெட்டும், 1073 இல் முகம்மது காஷ்கரி உருவாக்கிய அகராதியும் துருக்கி
மொழியின் பழமையையும் பாரம்பரியத்தையும் எடுத்துரைக்கின்றன.
1923 க்குப் பிறகு துருக்கி மொழியில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.
துருக்கியின் முதல் அதிபரான முஸ்தாபா கெமால் ஆட்டட்டர்க் என்பவர் மொழிசார்ந்த
பணிகளுக்குப் பேரளவில் துணை நின்றார். ஆதலால் துருக்கி மொழியிலாளர்கள்
துருக்கியின் பழைய வரலாற்றின் துணைகொண்டு உலகத்தின் மிகப்பழைய மொழிகளுக்கும்
துருக்கியே தாய்மொழி என்னும் கருத்தை வெளியிட்டனர். இந்த மொழியில் எழுதப்பட்ட
இலக்கியத்தை கஜல்,
கசீடா, மல்நவி எனப்
பகுக்கின்றனர். (கஜல் 12 ஈறுடிச் செய்யுள். கசீடா என்பது பிரபுக்களைப் புகழும்
அந்தாதி. மல்நவி என்பது தொடர்நிலைச் செய்யுள்).
---------------------
56 - 25.02.2018
வயிறும்
பசியும்
பசியை
சமுதாய நோயாகக் குறிப்பிடுகிறது மணிமேகலை. ஏனைய காவியங்களும் பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களும் கூட பசியை முக்கியமான இடத்தில் வைத்து விவரித்திருக்கின்றன. பகிர்ந்து
உண்ண வேண்டும்,
இரப்பவருக்கு ஈதல் வேண்டும், ஈயாமை இழிவு தரும் என்றெல்லாம் பசியை மையமிட்ட ஏராளமான அறங்களை ஒளவையார், காளமேகம், ஒட்டக்கூத்தரின்
தனிப்பாடலர்களும் கூட பேசியிருக்கின்றன.
பசி
எல்லாருக்கும் பொதுவான பிரச்சினையாக இருந்தபோதிலும் அது ஏனைய பிரச்சினைகளை விட
வேறுபட்டது. உடலில் நோய் வந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். அல்லது நோய் வராமல் தடுக்க முடியும். தீராத கடன் பிரச்சினை என்றாலும்
அதை தள்ளி வைக்க முடியும் அல்லது அதற்குப் பல வகைகளில் தீர்வு காண முடியும். ஆனால்
பசி அப்படியல்ல. அதை சம்பந்தப்பட்டவரே தான் அனுபவிக்க வேண்டும். அதை இன்னொருவரோடு
பகிர்ந்து கொள்ளவே முடியாது. அதனால் தான் ஒளவையாரின் நல்வழி பாடல் ஒன்று இப்படி
அமைகிறது. ஒருநாள் சாப்பிடாமல் இருக்கலாம் என்றால் அதற்கும் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறாய்.
இரண்டு நாளுக்கான உணவை மொத்தமாய் எடுத்துக்கொள் என்றால் அதையும் செய்ய மாட்டேன்
என்கிறாய். என் நோயை ஒருநாளும் நீ அறிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய். வயிறே
உன்னோடு வாழ்தல் கொடுமையானது என்றமைந்திருக்கிறது அப்பாடல்.
---------------------
57 - 26.02.2018
பொன் பித்து
பண்டைய
காலந்தொட்டே தமிழர்களும் சரி, தமிழரல்லாத
பிற இந்தியர்களும் சரி பொன் மீது அளவுகடந்த ஆசை வைத்திருக்கின்றனர். அரசர்கள்
தங்களுக்காவும் தங்களது அரசிகளுக்காகவும் பொன்னை வாங்கிக் குவித்திருக்கின்றனர்.
அவர்கள் தமது பகைநாடுகளை வென்று அங்குள்ள பெண்களைக் கொண்டுவரும் போது அப்பெண்கள்
அணிந்திருந்த பொன்களும் அவர்களுக்குச் சொந்தமாகியிருக்கின்றன. அதுவும் போதாதென்று
பொன்னை இறக்குமதி கூடச் செய்திருக்கின்றனர். கோவில்களிலும் ஏராளமான நகைகள்
குவிந்து கிடந்தன;
கிடக்கின்றன என்பதை நாம் அறிவோம். குடும்பங்களிலும் கூட
பொன்னின் அளவு கௌரவத்தின் அளவாகவும் இன்றுவரை பாவிக்கப்படுகிறது. பொன்னில் முதலிடு
செய்வதும் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது.
மேலை
நாட்டு பயணிகளான பிளைனி,
தாலமி, ஸ்டிராபோ, மார்க்கபோலோ முதலியோரின் குறிப்புகள் வழி ஏராளமான பொன்
தமிழகத்திற்கு வந்துள்ளதை அறியமுடிகிறது. ரோமில் இருந்து மட்டும் 5 கோடிக்குச் சமமான பொன், வெள்ளியை இந்தியர்கள் இறக்குமதி செய்ததாக பிளைனி குறிப்பிடுகிறார். கி.பி.117 ஆம் ஆண்டில் கிரிஸ்டாட்டம் என்னும் ஆசிரியார் ஒருவர் இந்தியாவில் உள்ள விளைபொருள்களை வாங்கிக் கொண்டு
அதற்கு விலையாக நம்முடைய நாட்டில் உள்ள பொன்களைக் கொடுத்து வருகிறீர்கள். இதனால்
இந்தியாவில் பொன் பெருகுகிறது. நமது நாட்டில் பொன் குறைந்து கொண்டே வருகிறது என்று
கூட எச்சரித்திருக்கிறார்.
---------------------
58 - 27.02.2018
விநோத மிருகம்
ஓர்
ஊரில் ஒரு விநோத மிருகம் இருந்தது. சில நேரம் சிரிக்கும். சில நேரம் சிந்திப்பதைப்
போல காட்டிக் கொள்ளும். சில நேரம் தனக்கு ஆறறிவு இருப்பதாகவும் ஏழு அறிவு எட்டு
அறிவு இருப்பதாகவும் கூட சொல்லிக்கொண்டு அலையும். ஆனால் அதற்கான அறிகுறி கொஞ்சம்
கூட இருக்காது. அவ்வப்போது மீசையை முறுக்கிக் கொள்ளும். மீசைக்கும் வீரத்திற்கும்
தொடர்பு இருப்பதாக நம்பும். இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு ஒரு மிருகம் ஆட்சி
செய்தது. அந்த மிருகத்தின் வழித் தோன்றல் நாங்கள் தான் எனவும் வாய் கிழிய பேசும்.
நாங்கள் ஆண்ட பரம்பரை என்று வீதிக்கு வீதி போஸ்டர் அடித்து ஒட்டிக் கொள்ளும். ஒரு
காலத்தில் எங்களுக்கு உலகமே அடி பணிந்து கிடந்தது. உலகத்திற்கு நாங்கள் தான்
உண்ணவும் உழைக்கவும் சொல்லிக் கொடுத்தோம் என்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்
கதை சொல்லும்.
பல
நேரங்களில் பச்சைக் குழந்தை என்று கூட பார்க்காமல் வன்புணர்ச்சி செய்து தன்
மிருகத்தன்மையை நிரூபிக்கும். சிறுவன் என்று கூட எண்ணாமல் கழுத்தறுக்கும்.
தெருக்களை மறித்து சுவர்களைக் கட்டிக் கொள்ளும். காதலித்தால் கொலை செய்யும்.
குடிசைகளை எரிக்கும். உழைத்துச் சேர்த்த பொருளைக் கொள்ளையடித்துப் போகும். ஒருநாள்
அந்த விநோத மிருகத்திடம் உனது ஊர் எது எனக் கேட்டபோது ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ எனச் சொல்லி பல்லிளித்தது.
---------------------
59 - 28.02.2018
கேம்பிரியக்
காலம்
கி.மு.
640 மில்லியன் ஆண்டு முதல் கி.மு. 70 மில்லியன் ஆண்டு வரையிலான காலம் கேம்பிரியக் காலம்
எனப்படுகிறது. இந்தக் காலத்தின் படிதான் தொன்மையான உயிர்களின் வாழ்ந்த காலம்
அறியப்படுகிறது. ஏற்கனவே எழுதப்பட்ட வரலாறுகளை மாற்றி எழுதும்படியாக இன்றைக்குக்
கிடைத்துள்ள ஏராளமான புதைபடிவங்கள் இந்தக் காலத்தைச் சார்ந்தவைகள் தான். குறிப்பாக, கடல்வாழ் முதுகெலும்பற்ற விலங்குகளின் புதைபடிவங்களின்
பெரும்பகுதி இந்தக் காலத்தவை தான். தவிர, பூமியில் ஏற்பட்ட மாறுதல்கள், விலங்குகளின் புவிப்பரவல் முதலியனவற்றை அறிவியல் நோக்கில் அணுகுவதற்கும்
கேம்பியரிக் காலம் துணை செய்கிறது. இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் பகுதியின் பாறை
அமைப்புகளைக் கொண்டு 1835 இல் ஆடெம் செட்ஜ்விக் என்பர் இக்காலப்பகுதிக்கு
கேம்பிரியக் காலம் எனப் பெயரிட்டார்.
கேம்பிரியக்
காலத்தில் புவிப்பரப்பில் இரண்டு கண்டங்களே இருந்துள்ளன. அவை பேன்ஜியா, கோண்டுவானா என்பன. பேன்ஜியா கண்டத்தில் இன்றைய அமெரிக்கா, ஐரோப்பா, சைபீரியா, இந்தோனேசியா ஆகியனவும், கோண்டுவானாவில் ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, மடகாஸ்கர், அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, நியூகினியா ஆகியனவும் இடம் பெற்றிருந்தன.
---------------------
60 - 01.03.2018
பொறாமையும்
கடவுளும்
பொறாமை
குறித்து பலரும் பல விதங்களில் குறிப்பிட்டிருந்தாலும் திருவள்ளுவர் குறிப்பிடும்
செய்திகள் வித்தியாசமானவை. அத்தனை பிரச்சினைகளுக்கும் பொறாமையை அடிப்படை, பொறாமையை விலக்கிவிட்டால் வாழ்வில் அடைய வேண்டிய அனைத்து
நிலைகளையும் அடைந்துவிடலாம் என்னும் கருத்தை வள்ளுவர் விளக்கி இருக்கும் விதம்
அற்புதமானது.
ஒருவர்
பொறாமை இல்லாத மனம் படைத்தவராக இருப்பதைக் கொள்கையாக்கிக் கொள்ள வேண்டும்.
பொறாமையை விலக்கி விட்டால் எல்லா செல்வங்களையும் அடைந்துவிட முடியும். இம்மை சுகம்
எதையும் இழக்கத் துணிந்தவனே பொறாமை கொள்வான். பொறாமைக் குணம் இல்லாதவனே அறிஞராக
முடியும். பொறாமை பட்டால் பொறாமைப் படுபவன் மட்டுமல்ல, அவனது சுற்றமும் கெடும். திருமகள் நீங்கி விடுவாள். பொறாமை
இம்மையிலும் மறுமையிலும் துன்பத்தைத் தரும். பொறாமையால் பெருமையடைந்தவர்கள்
யாருமில்லை என்றெல்லாம் திருவள்ளுவர் பேசியிருக்கிறார். இந்தக் கருத்துக்களை
அப்படியை ஏற்றுக்கொள்ள வேண்டும், வாழ்க்கையில்
பின்பற்ற வேண்டும் என்பதை விட மாற்றி யோசிக்க வேண்டிய தேவை இன்றைக்கு நிறைய
இருக்கிறது. ஏனென்றால் பொறாமை தான் உலகத்தை இயக்குகிறது. சாதனையாளர்களை உருவாக்கியிருக்கிறது.
சொல்லப்போனால் டிஸைன் டிஸைனாகக் கடவுளை உருவாக்கியது கூட பொறாமை தான்.
---------------------
61 - 02.03.2018
சகாரோவ்
ஆன்ட்ரே
அணு
விஞ்ஞானியாகவும் மக்கள் போராளியாகவும் மனித உரிமை ஆர்வலராகவும் தம்மை
நிலைப்படுத்திக் கொண்டவர் ரஷ்யாவைச் சார்ந்த சகாரோவ் ஆன்ட்ரே. 1800 களின் பிற்பகுதியில் ரஷ்யாவின் முதல் ஹைட்ரஜன் அணுகுண்டை
டாம் என்பரோடு இணைந்து உருவாக்கிய ஆன்ட்ரே பின்னாளில் அணு ஆயுதத்திற்கு எதிரானவராக
மாறினார்.
1961 இல் நிகிட்டா குருஷேவ் என்பவர் கொண்டுவந்த அணு ஆயுதத் திட்டத்தை கடுமையாக
எதிர்த்தார். 1968 இல் வெஸ்ட் பிரஸ் இதழில் ரஷ்யா தனது அணு ஆயுதத்தைக்
குறைக்க வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். இதற்காகவே 1975 இல் சகாரோவுக்கு அமைதிக்கான நோபல் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து மனைவியையும் தம்முடன் இணைத்துக்கொண்டு மனித உரிமைக்கு ஆதரவு கொடுத்தார்.
அதற்காக 1984 இல் மனைவியுடன் சேர்த்து நாடு கடத்தப்பட்டார். பின்னர்
ரஷ்யா திரும்பியபின் 1989 இல் மக்கள் மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களை
அளவுக்கு அதிகமாக நேசித்த சகாரோவ் என்ன காரணங்களுக்காக அரசை எதிர்த்தாரோ அதே
காரணங்கள் மிகைல் கொர்பசேவ் ஆட்சிக்காலத்தில் அரசின் அதிகார பூர்வ கொள்கைகளாயின.
---------------------
62 - 03.03.2018
ஷெஸஷாவா
ஷோஷோன்
இனத்தைச் சார்ந்த ஷெஸஷாவா மிகக் குறைந்த வயதில் மிகப்பெரும் செயல்களைச் செய்தவார். லூவிஸ் மற்றும் க்ளார்க் ஆகியோர் தமது தொழிற்சாலைகளை அமெரிக்காவில் நிறுவ முயன்றபோது அவார்களுக்கு
மொழிசார்ந்து துணைநின்றவர். ஷோஷோ இன மக்களுக்கும் லூவிஸ் கிளார்க்குக்கும்
பாலமாகச் செயல்பட்டவர். லூவிஸ் கிளார்க்கின் பயன்பாட்டுக்காக ஷோஷோன் மக்களிடம்
இருந்து குதிரைகளை வாங்கிக்கொடுத்து அவர்களுக்கே வழிகாட்டியாக இருந்தவர்.
அவர்களோடு 8000க்கும் அதிகமான மைல்கள் பயணித்த போது தனிமனுஷியாக தன்
கைக்குழந்தையையும் முதுகில் சுமந்துக்கொண்டு திரிந்தார்.
ஷெஸஷாவா
சிறுமியாக இருந்தபோது சார்போனியூ என்னும் பிரெஞ்ச் வியாபாரிக்கு அடிமையாக
விற்கப்பட்டார். பின்னாளில் சார்போனியூ அவரை மனைவியாக்கிக் கொண்டார்.
பிரெஞ்ச்காரரான சார்போனியூ ஹிதாஸ்தா மொழி பேசுபவர் ஆகையால் ஷெஸஷாவா, ஹிதாஸ்தா மொழியிலும் பிரெஞ்சிலும் புலமை பெற்றார்.
கணவனுக்கும் மனைவிக்கும் இருந்த
மொழிப்புலமைக்காகவே லூவிஸ் மற்றும் கிளார்க்கால் ஷெஸஷாவா கொண்டாடப்பட்டார்.
ஷெஸஷாவாவின் வாழ்க்கையை விட அவர்தம் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகள் தான்
இன்றைக்கு வரலாற்றுப் புகழ்பெற்றவையாக இருக்கின்றன.
---------------------
63 - 04.03.2018
பகடிமுறைத்
திறனாய்வியல்
சமகாலத்
தமிழ்த் திறனாய்வாளர்களில் மிகவும் முக்கியமானவர் ராஜ்கௌதமன். மேலைநாட்டு
மறுமலர்ச்சி கால தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் இலக்கியங்களை அவர் அணுகிய
விதம் சனாதனிகளுக்கும் பழமைவாதப் பண்பாட்டுக் காவலர்களுக்கும் அதிர்ச்சியைக்
கொடுத்தது. அவரது ஆய்வு முடிவுகள் பழைய கற்பிதங்களையும் சார்புநிலை ஆய்வுகளின்
அரசியல் பாசாங்கையும் உடைத்தெறிந்தது. பழந்தமிழ் இலக்கியங்களில் புதுவெளிச்சத்தைப்
பாய்ச்சியது. இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை விட காக்கப்பட்ட கள்ள
மௌனங்கள் தான் அதிகமாக வெளிப்பட்டது. அந்த மௌனங்களில் ராஜ்கௌதமனின் ஆய்வை
மறுக்கமுடியாத இயலாமையும் இருந்தது; வன்மமும் இருந்தது.
இலங்கை, மலேசிய ஆய்வாளர்கள் சிலரின் நிலைப்பாடும் கூட அதுவாகவே
இருந்தது. அதைத் தவிர்த்து ராஜ்கௌதமனின் ஆய்வுப் போக்குக்கு எதிராக உள்ளடி
வேலைகளும் செய்யப்பட்டன. அவற்றையெல்லாம் தனது ஆழ்ந்த அறிவாலும் ஆய்வுத்திறத்தாலுமே
ராஜ்கௌதமன் எதிர்கொண்டார். அவர் தமது ஆய்வுப் போக்கில் பயன்படுத்திய பகடி வைதீக -
சாதிய கண்கொண்ட ஆய்வாளர்களைக் கலங்கடித்ததற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.
அந்தவகையில் தமிழ்த் திறனாய்வு உலகில் பகடிமுறை திறனாய்வியல் இன்றைக்கு
ராஜ்கௌதமனின் முகமாக மாறியிருப்பது பெருமைக்குரிய விஷயம்.
---------------------
64 - 05.03.2018
ஒத்துழையாமை
ஒத்துழைக்காமல்
இருப்பது என்பது இருமனிதர்களுக்கு இடையிலானது என்பது முதல் பெரிய நிறுவனங்கள் வரை
எல்லா மட்டங்களிலும் இருந்து வரும் எதிர்ச்செயல்பாடு. இந்த ஒத்துழையாமை என்பது, உரிமைப் பங்கீடு அல்லது முழு விடுதலை சார்ந்துதே தான்
பெரும்பாலும் பயன்கொள்ளப் பெற்றிருக்கிறது. இன்றளவும் இந்தியாவில் அது ஒருவிதமான
போராட்ட உத்தியாகப் பாவிக்கப்படுகிறது. ஆனால் மேலைநாடுகளில் போராட்ட வடிவமாகப்
பார்க்கப்படுவதைக் காட்டிலும் தத்துவமாகப் பார்க்கப்படுகிறது. வரலாற்றில்
ஒத்துழையாமை அரசுக்கும் சமுதாய மறுமலர்சியை விரும்பிய தலைவர்களுக்குமான
முரண்பாட்டுச் செயல்பாடாகவே இருந்து வந்திருக்கிறது. அரசு எதேச்சை அதிகார
நிலைப்பாட்டுடன் செயல்படும்போது அதைக் கட்டுப்படுத்துவதற்கும் ஏற்கனவே இருக்கும்
சட்ட வடிவங்களில் அரசு மாற்றங்களைக் கொண்டு வர மறுக்கும் போது, வன்முறையற்ற வழியில் சட்டங்களுக்கு ஒத்துழைக்காமல்
இருப்பதும் தான் இதன் வடிவம்.
அரசுக்கு
ஒத்துழைக்க மறுப்பதன் வழிதான் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டி அரசின் கவனத்தைப் பெற
முடியும் என்று இந்த போராட்ட வடிவத்தைக் கையிலெடுத்தவர்கள் நம்பினார்கள்.
வெற்றியும் பெற்றார்கள். ஹென்றி டேவிட் தோரா, சீனியர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் மேலைநாடுகளில் ஒத்துழையாமை வழி வெற்றி
கண்டவர்கள்.
---------------------
65 - 06.03.2018
சபா வம்சம்
அரபு
நாடுகள் சிலவற்றில் இன்றைக்கும் மன்னராட்சி நடந்து வருகிறது. அதனால் மிகப்பழமையான
பழக்கங்கள் கூட எந்த விதக் கேள்விக்கும் உட்படுத்தப்படாமல் பின்பற்றப்பட்டு வருகின்றன.
குற்றவாளிகளுக்கான தண்டனையும் கூட பழைய வடிவத்தில் தான் உள்ளது. காரணம் பழைமையைப்
போற்றுகிற ஒருவித மனோபாவம். குவைத்தில் இதனுடைய நீட்சியைக் காணமுடியும். 1756 ஆம் ஆண்டுமுதல் சபா வம்சம் குவைத்தை ஆட்சி செய்து
வருகிறது. இன்றைய குவைத் 300 ஆண்டுகளுக்கு முன்பு ‘பானு உதுப்’
என்னும் அரேபிய பழங்குடிகள் வாழ்ந்த பகுதி. 1764 வாக்கில் அப்பழங்குடிகள் தம் இனக்குழுவில் இருந்த ‘சபாஹர் இபின் ஜபிர்’
என்பவரைத் தங்களுக்கான ஆட்சியாளராக நியமித்தனர். இவர்கள்
தமது அரசியல் நடவடிக்கைளுக்குத் தொடர்ந்து அயல்நாடுகளைச் சார்ந்திருந்த போதும்
தன்னாட்சிக் கொள்கைகளைக் கைவிடவில்லை.
19 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் இந்த சபா வம்சத்தினர் ஓட்டோமான் பேரரசைச்
சார்ந்திருந்தனர். அதைக் காரணம் காட்டி ஈரான் தன் படைகளை அனுப்பி குவைத்தை அடக்க
நினைத்தது. தொடக்கத்தில் பிரிட்டனின் ஆதரவைப் பெற்றிருந்த குவைத், தற்போது அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுள்ளது. இன்றைய
குவைத்தில் பலப்பல அரசியல் அமைப்புகள் இருந்தலும் முழு அதிகாரம் இன்றைக்கும் சபா
வம்சத்திடமே உள்ளது.
---------------------
66 - 07.03.2018
நல்ல நேரம்
சில
நாட்களுக்கு முன்பு எனது நண்பன் ஒருவனது வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தேன்.
நல்ல வசதியான குடும்பம். பழமை மாறாத வீடு. மறுநாள் காலை வழக்கம் போல நான்கு
மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன். என் கூடவே என் நண்பனும் எழுந்துவிட்டான்.
வழக்கத்துக்கு மாறாக நண்பனின் தந்தையும் எழுந்துவிட்டார். எழுந்தது முதல் அவரால் நிலை
கொண்டு நிற்க முடியவில்லை. நடந்து கொண்டே இருந்தார். உடலை முறுக்கினார். அடிக்கடி
கடிகாரத்தை வேறு பார்த்துக் கொண்டே இருந்தார். மணி மிகச் சரியாக ஐந்தரை ஆனது.
மிகுந்த பதற்றத்தோடு கழிவறைக்குள் சென்று விட்டு வந்தார். எனக்கு ஒன்றுமே
புரியவில்லை. என்நிலையைப் புரிந்து கொண்ட அவர், அவராகவே முன்வந்து ‘காலைக் கடனுக்கும் நல்ல நேரம் பார்ப்பது எங்கள் குடும்ப
வழக்கம்’
என்றார்.
அவர்
கூறிய விதமும் நடந்து கொண்ட விதமும் என்னை ஆச்சரியப்பட வைத்தன. விஞ்ஞான உலகத்தில்
தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வேறு எனக்குள் வந்துவந்து போனது. அன்று முழுவதும்
அவர்களோடு தான் தங்கியிருந்தேன். அவர்களின் அன்றாட ஒவ்வொரு நடவடிக்கைகளையும்
பார்த்தேன். எல்லாவற்றையும் நல்ல நேரம் பார்த்தே செய்கிறார்கள். முக்கியமான
நபரிடம் இருந்து தொலைபேசி வந்தால் கூட நல்ல நேரமாக இருந்தால் தான் எடுத்துப்
பேசுகிறார்கள். இதைவிட ஆச்சரியமான செய்தி, பால்காரர் போட்டுவிட்டுப் போன பால் பாக்கெட்டை எடுக்கும் போது கூட நல்லநேரம்
பார்க்கிறார்கள்.
---------------------
67 - 08.03.2018
பெண்மையைக்
கொண்டாடுவோம்
தந்தை
பெரியார் 1931 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் கிரே நகரில் தாம் நிகழ்த்திய சொற்பொழிவில் ‘ஆண்களைப் போலவே பெண்களும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
ஆண் 2 வைப்பாட்டிகள் வைத்துக்கொண்டால் பெண்கள் 3 ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை
சரிப்பட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு இருவருக்கும் கஷ்டம்
இருக்காது’
என்று பேசினார்.
பெரியார்
பெண் விடுதலை என்பது ஆண்களிடம் பெண்கள் கேட்டுப் பெற வேண்டிய ஒன்றல்ல. கேட்டுப்
பெறுவதற்கு அது ஒன்றும் ஆண்களுக்கேயுரிய உடைமையுமல்ல என்னும் கருத்தில் உறுதியாக
இருந்தார். அதனால் தான் பெண்களின் விடுதலையைப் பற்றிச் சொல்லும் போது ஒவ்வொரு பெண்ணும்
ஆணைப் போல நடக்க முயற்சி செய்தாலே போதும் பெண்ணின் உணர்வுகளும் உரிமைகளும்
உணர்த்தப்பட்டுவிடும் என்ற கருத்தை திரும்பத் திரும்ப எழுதியும் பேசியும் வந்தார்.
அதனாலும் தான் தமிழ்ச் சமுதாயத்தில் இன்றைக்கு நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
எல்லாத் தளங்களிலும் பெண்கள் நிறைந்திருக்கிறார்கள். சுயசார்பில் வாழ
தயாராகிவிட்டார்கள். வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள். என்றாலும் இன்றைக்கு
இருக்கும் வளர்ச்சி போதாது. ஆண்களின் அதிகாரம் இருக்கும் இடங்கள் அனைத்திலும்
பெண்களும் இருக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமான சமுதாயத்தின் அடையாளமாக இருக்க
முடியும். அனைவருக்கும் இனிய மகளிர்நாள் வாழ்த்துக்கள்.
---------------------
68 - 09.03.2018
பட்டினத்தார்
அரசியல்
பட்டினத்தார்
நன்கு அறியப்பட்ட கவிஞர். சித்தராகவும் சொல்லப்படுகிறவர். வாழ்வின் யதார்த்தத்தை
புரிந்துகொண்டு விளக்கியவராக பட்டினத்தாரின் பிம்பம் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
எவரொருவரும் என்னதான் வலிமையான
துறவு மனம் வாய்க்கப் பெற்றிருந்தாலும் அவர் தாயன்புக்கு முன்னால் ஒருகணம்
உருகித்தான் போக வேண்டியிருக்கிறது என்பதை பட்டினத்தாரின் பாடல்கள் நமக்குச்
சொல்கின்றன. பட்டினத்தார் தன் தாயின் உடலைப் பார்த்து அழும்போது பத்து மாதம்
நொந்து பெற்றவள் எனக் கூறி தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார். தாய் தனக்கு பால்
ஊட்டிய அந்தச் சித்திரம் அவரது கண் முன்னால் வந்து போகிறது. அதை நினைத்து
உருகுகிறார். வயிறு சரிய சுமந்து பெற்ற தாயின் உடலுக்கு தான் தீ மூட்ட வேண்டிய
சூழல் வாய்த்துவிட்டதே எனக் கலங்குகிறார்.
இன்னொரு
இடத்தில் இறைவனை நினைக்காமல் இருந்துவிட்டதற்கு பெண்ணே காரணம் என்கிறார். அந்தக்
காரணத்தை இறைவனிடம் முறையிடும் போது பெண்ணை மாயப் பிசாசு என்கிறார். பெண்ணின்
உறுப்புகள் ஆண்களைப் படுகுழியில் தள்ளுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன
என்கிறார். இவ்விரண்டு இடங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது தாயை தெய்வநிலையில்
வைத்துப் போற்றியும் தாய் அல்லாத பெண்ணை பிசாசு என்று வெறுத்ததிலும்
பட்டினத்தாருக்கு இரண்டு மனம் இருப்பதாகத் தோன்றும். ஆனால் இரண்டு இடங்களிலும்
பட்டினத்தார் பேசியிருக்கிற அரசியல் மிகவும் நுட்பமானது.
---------------------
69 - 10.03.2018
பொல்லாத யானை
பாரதியார்
கடையத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு செல்வந்தர் வீட்டு மங்கல நிகழ்ச்சிக்காக
சங்கரன்கோவிலில் இருந்து கோவில் யானை வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த யானை ஏற்கனவே ‘பொல்லாத யானை’ என்று ஊருக்குள் பெயர்
வாங்கியிருந்தது. அதனால் அந்த யானையைப் பார்க்க மக்கள் கூட்டங்கூட்டமாக வந்து
போயினர். பாரதியாரும் கூட்டத்தோடு கூட்டமாய் பார்க்கச் சென்றிருந்தார். அங்கே
வேதம் படித்த ஒருவன் யானைக்குப் பாகனாக நின்று கொண்டிருந்தான். அவன் தான் அந்த
யானை மீது ‘பொல்லாத யானை’ என்ற
பிம்பத்தை உருவாக்கியவன். அவனைப் பார்த்ததுமே பாரதியாருக்கு ஆச்சரியம். காரணம்
அதுவரை வேதம் படித்த ஒருவனை யானைக்குப் பாகனாக இருந்து பார்த்ததே இல்லை. அந்த
வேலையை அவர்கள் செய்யவும் மாட்டார்கள். அதனால் தான் பாரதியாருக்கு அது
ஆச்சரியத்தைக் கொடுத்தது.
அந்த
யானையோடு இன்னொரு பாகனும் இருந்தான். அவனும் வேதம் படித்தவன். அவனிடம் பேச்சுக்
கொடுக்கத் தொடங்கிய பாரதியார், முன்னொருநாள்
ஆற்றங்கரையில் அந்த யானை பாகனால் அடிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். அதற்கு அந்த
யானைப் பாகன் சாஸ்திரக் கட்டுக்களையெல்லாம் எடுத்து படித்துக்காட்டி விட்டு, யானைகளில் பிரம்ம, சத்திரிய,
வைசிய, சூத்திரர்
என்று நான்கு வகை யானைகள் உண்டு. இந்த யானை கீழ்ச்சாதி யானை அதனால் தான் அடித்தேன்
என்று விளக்கம் சொன்னான்.
---------------------
70 - 11.03.2018
சர்க்கஸ்
சர்க்கஸ்
பண்டைய காலம் தொட்டு மக்களின் கேலிக்கைகளில் முக்கிய இடம் பெற்று வருகிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கஸை விரும்புகிறவர்கள் இன்றும்
இருக்கிறார்கள். நிகழ்த்துநர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்படும் சர்க்கஸில்
பார்வையாளர்களும் ஒன்றிப்போய் சர்க்கஸின் சாகசங்கள் வழி தம்முடைய ஆற்றலையும்
உணர்கின்றனர். சர்க்கஸ் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் நிகழ்த்தப்பட்டிருந்தலும்
முறைப்படுத்தப்பட்ட சர்க்கஸ் 1768 இல்
இங்கிலாந்தில் தான் நிகழ்த்தப்பட்டது.
அப்போது
ஃபிலிப் ஆஸ்லி என்பவர் குதிரையின் வெற்றுமுதுகில் அமர்ந்து சர்க்கஸை நிகழ்த்திக்
காட்டினார். அவரே சர்க்கஸ் நிகழ்த்தும் இடத்தைச் சுற்றி மக்கள் அமர்ந்து
பார்க்கும் விதமாக வட்டவடிவை அரங்கத்தைச் சர்க்கஸ்க்காக உருவாக்கினார். பின்னாளில்
அத்தகைய சர்க்கஸ் அரங்கு அவரது பெயராலேயே ஆஸ்லி ஆம்ஃபி தியேட்டர் என
அழைக்கப்பட்டது.
இப்போது
சர்க்கஸ் முற்றிலும் மூடிய அரங்கத்தில் நிகழ்த்தப்படுகின்றன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியா, ஸ்பெயின், பிரேசில்
மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் சர்க்கஸ் வளர்ச்சியடைந்துள்ளன. இந்நாடுகளில்
சர்க்கஸ் நிகழ்த்துபவர்கள் காலத்திற்கு ஏற்றவாறு போதிய மாற்றங்களைச் செய்துள்ளனர்.
பழைய மரபை மாற்ற விரும்பாமல் சர்க்கஸ் நிகழ்த்துகின்ற குழுக்களும்
இருக்கின்றன.
---------------------
71 - 12.03.2018
ஏடானா காவியம்
பரம்பரை
வாரிசுகள் பற்றிய மெசபடோமிய புராணக் கதைக்கு ‘ஏடானா காவியம்’
என்று பெயர். பண்டைய கடவுளர்கள் ஏடானாவை முதல் மன்னராகத்
தேர்ந்தெடுத்தன. ஏடானாவின் மனைவி கர்ப்பமுற்று இருந்தும் குழந்தையை பெற்றெடுக்க
முடியவில்லை. இதனால் ஏடானாவிற்கு வாரிசு இல்லாமல் போயிற்று. மிகுந்த கவலையில்
இருந்தான். கடவுளர்களிடமும் வேண்டினான். ஏடானாவின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த ‘ஷாமஷ்’ என்னும் கடவுள், அவனைக் காயம்பட்டிருந்த கழுகு ஒன்றைக் காப்பாற்றுமாறு
கேட்டுக்கொண்டது. ஏடானாவும் அப்படியை செய்தான். அதனால் ஏடானாவை ஒரு கழுகு
சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு தனது மனைவி குழந்தை பெற்றுக்
கொள்வதற்கான செடி ஒன்று கிடைத்தது என்பதாக ஏடானா காவியத்தின் போக்கு
அமைந்திருக்கிறது. இது மட்டுமின்றி இதே போல் ஒரே மாதிரியான போக்குடைய கதைகள்
மெசபடோமிய புராணக் கதைகளில் நிறையக் கிடைக்கின்றன. அந்த பிரதிகளில் ஏடானா குறித்த
ஒன்றுக்கொன்று முரண்பாடான கதைகளும் உள்ளன. இதே போக்குடைய காவியங்கள் பல சிதைந்த நிலையில்
பாதியளவே கிடைக்கின்றன. இதனிடையே ‘ஏடானா’ என்னும் பெயருடைய மன்னனொருவன் கி.மு. 3ஆம் நூற்றாண்டளவில் தெற்கு மெசபடோமியாவில் உள்ள ‘கிஷ்’ என்னும் நாட்டை ஆட்சி செய்தான்
என்றொரு வரலாற்றுக் குறிப்பும் வழக்கில் உண்டு.
---------------------
72 - 13.03.2018
நான்கு
போப்பாண்டவர்கள்
1430 முதல் 1737 வரை ப்ளாரன்ஸையும் டஸ்கானியையும் மெடிச்சி குடும்பம் ஆட்சி
செய்தது. பிரான்ஸின் அரச குடும்பத்து சம்பந்தியான மெடிச்சி குடும்பம் கலைகளைப்
பாதுகாத்தமைக்கும் கொடுங்கோலாட்சிக்கும் பெயர் பெற்றது. பூர்ஷ்வா வம்சத்தைச்
சார்ந்த இந்தக் குடும்பத்தின் ஆதிக்கத்தை நிறுவியவர் ஜொவன்னி தெ மெடிச்சி. இவரது
பெயராலேயே இக்குடும்பம் மெடிச்சி குடும்பம் எனப்படுகிறது. இவர் வணிகத்தின் வழி
ஏராளமான சொத்துக்களைக் குவித்தார். 1430 முதல் 1439 வரை ப்ளாரன்ஸை ஆட்சி செய்தார். இவருக்கு இரண்டு
கொள்ளுப்பேரன்கள். மூத்த கொள்ளுப் பேரனான கிலியனோ ‘நிமோர்ஸ்’
பகுதியின் டியுக் ஆனார். இரண்டாவது கொள்ளுப்பேரனான ஜொவன்னி 1513 இல் பத்தாம் லியோ என்னும் பெயரில் போப்பானார். மற்றொரு
பேரனான கிலியோ என்பவர் 1592 இல் எட்டாம் கிளெமென்ட் என்னும் பெயரில் போப்பானார்.
இவர்களின் சகோதர உறவுடையவர்களான நான்காம் பயஸ் 1559 ஆண்டும்,
பதினோராம் லியோ 1605 ஆண்டும் போப்பாயினர். இப்படி ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு நபர்கள்
போப்பாண்டவரர்களாக பொறுப்பேற்றதைப் போன்ற நிகழ்வு வேறெந்த பூர்ஷ்வா
குடும்பத்திற்கும் இதுவரை வாய்க்கவில்லை.
---------------------
73 - 14.03.2018
மேயோ கிளினிக்
பிரபலமான
மருத்துவர்களைக் கொண்டது மேயோ குடும்பம். இங்கிலாந்தில் 1819 இல் பிறந்த வில்லியம் வொரல் மேயோ 1845 இல் அமெரிக்கா வந்தடைந்தார். 1863 இல் மருத்துவத் தொழிலை ஆரம்பித்த அவர், 1889 இல் தனது இருமகன்களுடனும் செயின்ட் பீட்டர்ஸ் கன்னியர்
சபையைச் சார்ந்த அருள்சகோதரிகளுடனும் இணைந்து செயின்ட் மேரீஸ் மருத்துவமனையைத்
தொடங்கினார். இவருடைய மூத்த மகனான வில்லியம் ஜேம்ஸ் வயிறு, கீழ்வயிறு, சிறுநீரக
அறுவைச் சிகிச்சைகளில் மிகத் தேர்ந்த மருத்துவராக விளங்கினார். இரண்டாம் மகனான
சார்லஸ் ஹோரேஸ் என்பவர் மருத்துவத்துறையில் ஒப்பீடே இல்லாத அளவுக்கு திறமைசாலியாக
விளங்கினார். இவர்தான் பல நவீன செயல்முறைகளை அறுவைச் சிகிச்சைகளில்
அறிமுகப்படுத்தினார். குறிப்பாக இவருக்கு சுரப்பி வீக்க அறுவைச் சிகிச்சை, நரம்பியல் மற்றும் முடநீக்கியல் அறுவைச் சிகிச்சை ஆகியன
பெரும் புகழைப் பெற்றுத்தந்தன. தந்தையோடு இணைந்த மகன்களினுடைய கூட்டுப்பணியின்
விளைவாக செயின்ட் மேரீஸ் மருத்துவமனை என்பதை மேயோ கிளினிக் என பெயர்
மாற்றினர். இவர்கள் 1915 இல் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான மேயோ
கூட்டமைப்பைத் தொடங்கினர். இன்றளவும் அது மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளை
வழங்கி வருகிறது.
---------------------
74 - 15.03.2018
மீஸோ சமயங்கள்
கொலம்பஸ்
அமெரிக்காவைக் கண்டுபிடித்தற்குப் பிறகு அமெரிக்காவில் இல்லாமல் ஆக்கப்பட்டவை
ஏராளம். அவற்றுள் ஒன்று அமெரிக்காவிற்கேயுரிய சமயமரபு. அவரது வருகைக்கு முன் அமெரிக்காவில்
ஓல்மெக்,
மாயர், டோல்டெக், அஸ்டெக் ஆகிய சமயங்கள் இருந்தன. அவைகள் இன்று ‘மீஸோ சமயங்கள்’ அல்லது ‘மீஸோ அமெரிக்க சமயங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
இச்சமயங்கள் பலகடவுள் கோட்பாட்டைக் கொண்டவை. ஒரே மாதிரியான குறிப்பிட்ட
வரையறைகளுக்குள் வரும் கடவுளர்களை வழிபடும் வழக்கம் இச்சமயங்களில் இருந்தது.
பிரபஞ்சமானது பல அடுக்குகளைக் கொண்டது என்றும் இப்பொழுது இருக்கும் பிரபஞ்சம்
ஐந்தாவதாக உருவாக்கப்பட்டது என்றும் ஏற்கனவே இருந்த நான்கும் அழிந்துவிட்டன
என்றும் இச்சமயங்களைப் பின்பற்றும் மக்கள் நம்பினர்.
இந்தச்
சமயங்கள் சூரியன்,
சந்திரன், விண்மீன்
முதலிய கோள்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தன. இந்தக் கோல்களைப் பற்றிய
இச்சமயத்தலைவர்களின் குறிப்புகள் மிகத் துல்லியமாக உள்ளன. அஸ்டெக் மக்கள்
தெய்வத்தை ஆடல்,
பாடல், சுய தண்டனைகள், நரபலிகள் முதலியவற்றின் மூலம் அணுக முடியும் என நம்பினர்.
மாயர் சமயத்திலும் நரபலி பழக்கம் உண்டு. இந்தச் சமயம் பற்றிய ஏராளமான செய்திகளை
மாயர் சுவடிகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
---------------------
75 - 16.03.2018
மவுண்ட்
பேட்டன்
இந்தியா
சுதந்திரம் பெற்ற இரவு நினைவுக்கு வரும்போதெல்லாம் கண்முன் வந்துபோகின்றவர்
மவுண்ட் பேட்டன் பிரபு. இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகும் பிரிட்டன் அரசில்
அவர் வகித்த பதவிகள் அவரின் திறமைகளைப் பறைசாற்றும். அவரின் நிருவாக முறைகள்
அனைத்தும் பிரபலமாகப் பேசப்பட்டவை. லூயி பிரான்ஸிஸ் ஆல்பர்ட் விக்டர் நிக்கோலஸ்
என்னும் இயற்பெயருடைய மவுண்ட் பேட்டன் சிறந்த கப்பல்படை அதிகாரியும்
ராஜதந்திரியும் ஆவார். விக்டோரியா ராணியின் கொள்ளுப் பேரனான இவர் 1913 இல் அரச கப்பற்படையில் சேர்ந்தார். 1921 இல் வேல்ஸ் இளவரசருக்குப் பக்கத்துணையானார். இரண்டாம்
உலகப் போரில் தென்கிழக்கு ஆசியாவுக்கான நேசநாடுகளின் படைத்தலைவராகப்
பணியாற்றினார். அதில் பர்மாவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்தியாவின்
வைஸ்சிராயாக நியமிக்கப்பட்ட பிறகு பிரிட்டனிலிருந்து கைமாறும் சுதந்திரத்தை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் பகிர்ந்தளிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். 1955 இல் முதல்கடல் பிரபுவாகத் திகழ்ந்தார். 1959 இல் பிரிட்டனின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் தலைவராகவும் இருந்தார்.
---------------------
76 - 17.03.2018
யார் உண்மையான
மன்னன்?
தமிழில்
இருக்கும் நீதி இலக்கியங்களில் மன்னனுக்குச் சொல்லப்பட்டிருக்கும் நீதிகள் ஏராளம்.
மன்னன் படைகளைத் தேர்வதில் இருந்து அரண்மனையின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்
என்பது வரை நீதி இலக்கியங்கள் மன்னனுக்காகப் பேசியிருக்கின்றன. ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’ என்பது திருக்குறள். இக்குறள், செய்யும் தவறைச் சுட்டிக்காட்டி அறிவுரை கூறுகின்ற
பெரியவர்களைத் துணையாகக் கொள்ளாத மன்னன், தனக்கு பகைவர்கள் யாரும் இல்லாமலேயே கெட்டுப்போய்விடுவான் என்னும் கருத்தைப்
புலப்படுத்துகிறது. இக்குறள் இடம் பெற்றிருக்கும் அதிகாரத்தின் பிற குறள்களிலும்
மன்னனை விட அறிவில் மேலோங்கிய பெரியவர்களை மன்னன் தனக்குத் துணையாகக் கொண்டிருக்க
வேண்டும். தன்னை விட பெரியவர்களோடு சேர்ந்து வாழும் மன்னனுக்கு எந்தக் கேடும்
வராது. மன்னனின் அரிய செயல்கள் எல்லாவற்றிலும் அரிய செயல் பெரியவரைத் துணையாகக்
கொள்தல் என்பதான கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. இக்கருத்துக்களையெல்லாம்
ஒன்றாய்ச் சேர்த்துப்பார்க்கும் போது மன்னன் அறிவில் உயர்ந்த பெரியவர்களைத்
துணையாகக் கொண்டிருக்க வேண்டும் என்னும் செய்தி புலனாகிறது. இதில் இருந்து நமக்கு
இரண்டு கேள்விகள் வருகின்றன. 1. மன்னனை விட
அறிவில் உயர்ந்த பெரியவர் எனச் சொல்லப்படுகிறவர் யார்? என்கிற கேள்வி. 2. அந்தப் பெரியவரின் வழிகாட்டுதலின் படிதான் மன்னன் ஆட்சி செய்கிறான் என்றால்
உண்மையான மன்னன் யார் என்பது இரண்டாவது கேள்வி.
---------------------
77 - 18.03.2018
காதல்
உணர்வின் அழகு
காதலில்
உணர்தலும் உணர்த்துதலும் அழகான விஷயங்கள். எல்லோருக்குள்ளும் ஏதேனும் ஒரு
கணப்பொழுதில் அரும்பி மலர்கின்ற அற்புதம் அது. உலக இயங்கியலின் அடிப்படை.
ஐங்குறுநூற்றில் அன்னாய் வாழிப் பத்தின் ஐந்தாவது பாடல் காதலின் உணர்த்துதலை
அற்புதமாகச் சொற்சித்திரமாக்கி இருக்கிறது.
வேற்று
இளைஞனுக்கு தலைவியை மணம் முடிக்க ஏற்பாடு நடக்கிறது. அது கண்ட தலைவி வருத்தம்
தோய்ந்து முகம்வாடிக் கிடக்கிறாள். அதற்கான காரணம் தாய்க்குத் தெரியவில்லை. ஆதலால்
செவிலிக்கும் தெரியவில்லை. தனது மகளிடம் தலைவியின் வருத்தத்திற்கான காரணத்தை
விசாரிக்கிறாள் செவிலி. அப்போது தோழி, அன்னையே நீ வாழ்க. என்னுடைய சொல்லைக் கேள். என் தோழி மிகவும் நாணமுடையவள்.
உனக்கு அஞ்சுகிறாள். ஒலியெழுப்பியபடி வீழுகின்ற அருவி நாட்டின் தலைவன் அவளது
காதலன். அவனது மார்பில் கிடந்து தூங்குவதையே அவள் விரும்புகிறாள். அவள் நிலைக்காக
நானும் வருந்துகிறேன் என்கிறாள். தலைவியின் துயரை தோழி உணர்ந்திருந்த விதமும் அதை
உரிய இடத்தில், உரிய நேரத்தில் உணர்த்திய விதமும் தான்
கவிச்சுவையாக இருக்கிறது.
பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதிலும்
புரிந்துகொண்டதை உணர்த்துவதிலும் ஒருவிதக் காதல் இருக்கிறதே அதுதான்
எல்லாவற்றையும் அழகாக்குகிறது. தன்னையும் அழகாக்கிக் கொள்கிறது.
---------------------
78 - 19.03.2018
மாத்யமிகம்
புத்தரின்
போதனைகள் இன்றைக்கு ஒரு அரசியல் புரிதலாக முன்னெடுக்கப்படுகிறது. பல இடங்களில்
அரசியல் சார்ந்தே விவாதப்பொருளாகி வருகிறது. சமயப் பாசிசத்திற்கு எதிரான ஜனநாயகமான
முறையியல் கொண்ட சிந்தனைப்பள்ளியாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பௌத்த
சிந்தனைப்பள்ளியின் ஒரு வகைமைதான் ‘மாத்யமிகம்’ என்பது. புத்தர் தான் வாழ்ந்த காலத்தில்
தன்னுடைய போதனைகள் எல்லாவற்றையும் இடைப்பட்ட வழியிலானது என்று கூறிக்கொண்டே
இருந்தார். இந்த இடைவழி போதனைகளைப் பின்பற்றியவர்கள் இடைவழி மார்க்கத்தினர் என்று
அழைக்கப்பட்டனர். இவர்களை வடமொழியில் மாத்யமிகர்கள் என்பார்கள். இவர்களால்
பிற்காலத்தில் பௌத்தத்தின் கோட்பாடுகளை விளக்குவதற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒருவித
கருத்தியல் அமைப்பே ‘மாத்யமிகம்’.
மாத்யமிகர்கள்
உலகின் உண்மைத் தன்மைக்கும் பொய்மைக்கும் இடையில் ஏதோ ஒன்று உண்டு என்று
நம்பினார்கள். தன்னைக் காத்துக்கொள்வதற்கும் தன்னை அழித்துக்கொள்வதற்கும் இடையே
வாழுகின்ற வேறொரு வாழ்க்கை முறையைத் தான் இவர்கள் இடைவழி என்றார்கள். இந்தக்
கோட்பாட்டின் வரைவாளராகக் கருதப்படுகிறவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த
நாகார்சுனர். இவர் நாளந்தாவில் இருந்த பௌத்த மடத்தில் தலைவர் பொறுப்பில்
இருந்தபோது மாத்யமிகக் கோட்பாட்டை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது.
---------------------
79 - 20.03.2018
உலகம் ஒன்றல்ல
உலகம்
என்பது ஒன்றே ஒன்றுதான். அதற்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்கிற தோரணையில்
நமக்கு உலகம் பற்றி திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. அதை நாமும் மிக எளிதாகக்
ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதையும் கொஞ்சம் மாயாஜாலம் கலந்து சொல்லிவிட்டால்
மறுபேச்சே இல்லாமல் மனதில் பொதிந்து கொள்வோம். அது ஒருபுறம் சரியானதாகக் கூட இருந்துவிட்டுப்
போகட்டும்.
ஒரு
ரயில் இருக்கிறது. அந்த ரயிலில் பணம் உள்ளவர்கள் முதல் வகுப்பில் பயணிக்கிறார்கள்.
அதில் அவர்களுக்கு கூடுதல் வசதிகள் இருக்கும். ஓரளவு வசதி உள்ளவர்கள் இரண்டாம்
வகுப்பில் பயணிக்கலாம். அவர்களின் கட்டணத் தொகைக்கு ஏற்ப வசதிகள் அதில் வழங்கப்
பெற்றிருக்கும். அவர்களுக்கான இடம் அங்கே உறுதி செய்யப்பட்டிருக்கும். வேறு யாரும்
அவர்களுக்கான இடத்தைப் பறித்துக்கொள்ள முடியாது. ஏனெனில் பணம் படைத்தவர்களின்
உலகம் எப்பொழும் பத்திரமாகத் தான் இருக்கும்.
முன்பதிவு
செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்வது அவ்வளவு வசதியானதாக இருக்காது. விரும்புகிற
சுத்தம் இருக்காது. அதற்குள் வேறொரு உலகத்தைக் காண முடியும். ஆக உலகம் ஒன்று என்று
சொல்லப்பட்டிருக்கிறதே தவிர நிலைமை அப்படியல்ல. தனது கையில் இருக்கும்
பணத்திற்குத் தக்கபடி உலகம் இங்கே விற்பனைக்கு இருக்கிறது. விருப்பம்போல வாங்கி
வாழ்ந்து கொள்ளலாம்.
---------------------
80 - 21.03.2018
லிங்காயத்துகள்
மதத்தில்
தனக்கு உரிமையானது மறுக்கப்படும்போது அதைவிட்டு வெளியேறுவது ஒருவிதமான போராட்ட
வடிவம். அரசியலும் கூட. 16 ஆம் நூற்றாண்டில் மார்டின் லூதர் கத்தோலிக்கத்திற்கு
மாற்றாக திருத்தமுறைக் கிறித்துவத்தை நிறுவினார். டாக்டர் அம்பேத்கர் 1956 இல் பௌத்திற்கு மாறினார். 1981 இல் திருநெல்வேலி மாவட்டத்தின் மீனாட்சிபுரம் கிராமத்தில் ஒரு பிரிவினர்
இஸ்லாத்துக்கு மாறினார். இப்படி வரலாற்றில் தலைவர்களும் மக்களும் மதம் மாறியதற்கு
நிரைய சான்றுகள் உண்டு. அந்தவரிசையில் பசவண்ணாவும் குறிப்பிடத்தக்கவர்.
கருநாடகத்தில்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவண்ணா, இந்து மதத்தின் இழிவுகளிலிருந்து மக்களை விடுவிக்கும் பொருட்டு லிங்கத்தை
அடிப்படையாகக் கொண்டு தனி வழிபாட்டு முறையை உருவாக்கினார். அதை பின்பற்றியவர்கள்
லிங்காயத்துகள் அல்லது வீரசைவர்கள் என அழைக்கப்பட்டனர். பின்னாளில் அந்த வழிபாட்டு
முறை இந்து மதத்தின் ஒரு பிரிவாக மாறிப்போனது. என்றாலும் பசவண்ணாவின் பற்றாளர்கள்
லிங்காயத்தை தனிமதமாக அறிவிக்கக்கோரி 1942 இல் இருந்து வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில், 20.03.2018 அன்று கருநாடக அரசு லிங்காயத்தை தனிமதமாக அறிவித்தது.
இன்றை அரசியல் சூழலில் இது முக்கியமான நகர்வு.
---------------------
81 - 22.03.2018
கேள்விகள்
கேள்விகள்
அறியாமையைப் போக்கும் வல்லமை பெற்றவை. கேள்விகள் எழுப்பப்படும் போது தான் அங்கு
விவாதம் பிறக்கிறது. கேள்விகள் தான் மனிதனை ஒருகட்டத்திலிருந்து இன்னொரு
கட்டத்திற்கு இட்டுச் செல்கிறது. ஜென் துறவிகள் கூட பலநேரங்களில் கேள்விகளை
எழுப்பிவிட்டு அதற்கு அவர்கள் தந்த பதில்கள் தான் ஜென் தத்துவத்தின் பரிணாமங்களாக
மாறியிருக்கின்றன.
ஏழை
மனிதர் ஒருவர் தனது வயிறு வலி தொடர்பாக மருத்துவரைச் சந்திக்கச் சென்றிருந்தார். பரிசோதித்த
மருத்துவர் என்ன சாப்டீங்க?
என்றார். அதற்கு அந்த ஏழை, சாப்பிடாவிட்டாலும் வயிறு வலிக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா என்றார்? திடுக்கிட்ட மருத்துவர் அடுத்த நொடியில் நிதானத்திற்கு
வந்து ஏன் சாப்பிடவில்லை?
எனக் கேட்டார். அதற்கு அந்த ஏழை, கேள்வியை தவறு. சாப்பிட எதுவுமில்லையா? என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் என்றார். மருத்துவர்
ஏழையின் பேச்சுப்படியை சரிங்க அய்யா, இப்ப சொல்லுங்க. சாப்பிட எதுவுமில்லையா? எனக் கேட்டார். அதற்கு அந்த ஏழை, ஆமாம். சாப்பிட எதுவுமில்லை என்றார். உடனே மருத்துவர், ஏன் சாப்பிட எதுவுமில்லை? என்றார். அதற்கு மறுமொழியாக அந்த ஏழை, மருத்துவரிடம் அய்யா உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் கேள்வி கேட்டும் போது, நீங்கள் அறிந்து கொண்டவைகளின் மீது நின்று கொண்டே தான்
கேட்கிறீர்கள். ஒருமுறையாவது நாங்கள் அறிந்துகொண்டவைகளின் மீது நின்று கொண்டு
கேள்விகளைக் கேட்டக் கூடாதா? என்றார்.
---------------------
82 - 23.03.2018
பகிர்வும்
பதிவேற்றமும்
இன்றைக்கு
சமுதாய வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஒருவரே தகவல்களைப் பரிமாறிக்
கொள்ளப் பயன்படும் அனைத்து செயலிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை
வைத்திருக்கிறார். அதிநவீன செல்பேசியைப் பயன்படுத்தும் நபர்களில் சராசரியாக
ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு நான்கிலிருந்து ஆறு மணிநேரம் வரை சமுதாய வலைத்தளத்தில்
செலவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிநவீன
செல்பேசியைப் பயன்படுத்தும் அனைவராலும் வலைத்தளங்களில் எல்லாவிதமான தகவல்கள்
பகிரப்பட்டாலும் சிலரிடமிருந்து மட்டும் மிகவும் கொடுரமான படங்களை பதிவேற்றுவது, பகிர்வது வாடிக்கையாக இருக்கும். அப்படிப்பட்டவர்களை நாமும்
பார்த்திருக்கலாம். அவர்களை மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கின்றனர்
மனநல மருத்துவர்கள். கொடுரமான செயல்களைச் செய்து பார்க்கத் துடிக்கும் அவர்களது
உள்மனமே வலைத்தளங்களில் படங்களைப் பகிர்வதில் பிரதிபலிக்கிறது. அப்படிப்பட்டவர்கள்
உடனடியாக கவுன்சிலிங் பெறுவது அவசியம். இல்லாவிட்டால் நாளடைவில் அந்தப் பழக்கம் அவர்களிடம்
மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம் என்று விளக்கமும் எச்சரிக்கையும் தந்திருக்கிறார்கள். மருத்துவர்களின் இந்த விளக்கமும்
எச்சரிக்கையும் நாம் அதிநவீனத்திற்கு மாறியிருக்கும் சூழலில் நம் உறவுகளைக்
கண்காணிக்க வேண்டிய தேவையும் நமக்கு அதிகமாகியிருப்பதைச் சுட்டுகின்றன.
---------------------
83 - 24.03.2018
சி.பி.ராமசாமியார்
புகழ்பெற்ற
வழக்கறிஞரும் அரசியல் அறிஞரும் கல்வியாளருமான சி.பி.ராமசாமியார், பிரிட்டிஸ் இந்தியாவில் முக்கியமான வழக்குகளில்
இந்தியருக்காக வாதாடியவர். குறிப்பாக ஆஷ் கொலை வழக்கில் இவரது வாதம் முக்கியமானது.
முதல் மற்றும் மூன்றாம் வட்ட மேஜை மாநாடுகளில் கலந்து கொண்ட இவர் காஷ்மீருக்கான
அரசியல் அமைப்புத் திட்டத்தையும் உருவாக்கினார். இவர் திருவிதாங்கூர்
சமஸ்தானத்தில் திவானாக இருந்தபோது 1939 இல் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தை நிறுவி அதன் முதல் துணைவேந்தராகவும்
பணியாற்றினார். இதே காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பயிலும் ஏழை
மாணவர்களுக்காக மதியவுணவு திட்டத்தையும் கொண்டுவந்தார். ‘அன்னா சாண்டி’ என்னும் பெண்மணியை முதல்
மாவட்ட நீதிபதியாக நியமித்து பெண்களின் முன்னேற்றத்துக்குத் துணைநின்றார்.
முதல்முறையாக
சாலைப் போக்குவரத்தை நாட்டுடைமையாக்கிய இவர், பிரிட்டிஸாரின் தூக்குத்தண்டனை முறையை கடுமையாக எதிர்த்து வந்தார். இந்திய
வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் காசி
இந்து பல்கலைக்கழகத்திற்கும் தூணைவேந்தராகப் பணியாற்றினார். சென்னை விவேகானந்தா
கல்லூரியையும் பல பள்ளிகளையும் இவர் தனது தனிமுயற்சியால் உருவாக்கினார்.
---------------------
84 - 25.03.2018
வீரவாழ்க்கைக்
காவியம்
நார்வே
மற்றும் ஐஸ்லாந்து நாட்டினுடைய வீரயுகத்தின் முக்கியமான மனிதர்கள் மற்றும்
சம்பவங்களைப் பற்றி உரைநடையில் கூறும் இலக்கியம் மரபு ‘வீரவாழ்க்கை காவியம்’ எனப்படுகிறது. இவ்வகை இலக்கிய மரபு கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐஸ்லாந்து மொழியில் உருவாக்கம் பெற்றது.
நெடுங்காலமாக வாய்மொழியாக வழங்கி வந்த இவ்விலக்கிய மரபு, கி.பி. 12 ஆம்
நூற்றாண்டில் எழுத்துப்பிரதியாக மாற்றம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இதில் இடம்
பெற்றிருக்கும் கதைகள் இன்றைக்கு, பழங்கால
நிகழ்ச்சிகளின் மறுவடிவமாகவும் கற்பனையால் அமைக்கப்பட்டனவாகவும் கருதப்படுகின்றன.
வீரமும் தலைமைக்கு விசுவாசமாக இருப்பதை வலியுறுத்துவதும் இவ்விலக்கியத்தின்
பொதுப்பண்பாக இருக்கின்றன. இதில், சொல்லவரும் கருத்துக்களை விட புனைவுக்கான விவரணைகள் விரிந்த
அளவில் உள்ளன.
ஸ்காண்டிநேவிய
ஆட்சியாளர்களின் வீர வாழ்க்கையை நினைவு கூர்வதான மன்னர்களின் வீர வாழ்க்கைக்
கதைகள்,
மரபுவழியாக வந்த விசித்திரக் கதைகள் மற்றும்
கட்டுக்கதைகளின் பொருண்மையைக் கொண்டு புனையப்பட்ட புராணம் சார்ந்த வீரவாழ்க்கைக்
கதைகள்,
ஐஸ்லாந்தியர்களின் வீரவாழ்க்கைக் கதைகள் ஆகியன இவ்வகை
இலக்கிய வகைமைக்குள் அடங்கும். இந்த இலக்கிய வகைமை ஆங்கிலத்தில் Saga எனப்படுகிறது.
---------------------
85 - 26.03.2018
தூக்கத்தின்
கணக்கு
பிரெஞ்ச்காரரான
அபிரஹாம் டி மொய்வீர் பதினேழாம் நூற்றாண்டின் மிகவும் முக்கியமான கணிதவியல்
அறிஞர். எட்மன் ஹெலி,
ஐசக் நியூட்டன் ஆகியோருக்கு நெருக்கமான நண்பர். இவரது முதல்
கட்டுரையான ‘ஃப்ளாக்ஸன் இன் பிரின்ஸ்பா’ என்பது ராயல் சொஸைட்டியில் பிரசுரமான பின்பு பிரபலமானார். அதன் பிறகு
நியூட்டனின் பைனாமல் கோட்பாட்டை மறுத்து அதை மல்டினாமல் கோட்பாடு என்று
நிருப்பித்தார். கோள்களின் மைய ஈர்ப்பு விசை கோட்பாட்டையும் இவர்தான்
உருவாக்கினார்.
இவர்
தினமும் தூக்க மாத்திரை மூலமாகவே தூங்கினார். அதனால் ஒவ்வொரு நாளும் பதினைந்து
நிமிடம் கூடுதலாகத் தூங்க வேண்டியிருந்தது. கூடுதலாகத் தூங்கிய ஒவ்வொரு பதினைந்து
நிமிடத்தையும் மொத்தமாகக் கூட்டி, மொத்த
நிமிடங்களை இருபத்து நான்கு மணிநேரமாகப் பிரித்து ஒரு கணக்கீட்டு முறையை
உருவாக்கினார். அந்தக் கணக்கீட்டின் வழியாக தன்னுடைய மரணத்தின் நாளை 1754 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தேழாம் நாள் எனக்
கணித்தார். அவரது கணிப்பின் படியை மிகச் சரியான நாளில் சரியான நிமிடத்தில் சரியான
வினாடியில் மரித்துப்போனார்.
---------------------
86 - 27.03.2018
ஸவஸ்திகா
இந்திய
தேர்தலின் போது வாக்குச் சீட்டில் வாக்காளர்கள் பதிக்கும் முத்திரைக் குறிக்கு
ஸ்வஸ்திகா என்று பெயர். இரண்டு பக்கமும் சம அளவுள்ள சிலுவைக்குறியைப் போன்று
இருக்கும் ஸ்வஸ்திகா குறியின் நான்கு முனைகளும் இடமிருந்து வலம் நோக்கித்
திரும்பியிருக்கும். இக்குறியீடு உலகம் முழுவதும் வளமையின் சின்னமாக
நம்பப்படுகிறது. இந்தியாவில் இந்துக்களுக்கும் ஜைனர்களுக்கும் மங்களக் குறியாக
இருந்து வருகிறது. பௌத்தர்கள் இதைப் புத்தரின் பாதமாகக் கருதுகிறார்கள். சீனப்
பௌத்தர்கள் இக்குறியீட்டை வழிபடுவதன் வழி நீண்ட ஆயுளைப் பெறமுடியும் என்றும்
செல்வம் பெருகும் என்றும் நம்புகின்றனர்.
ஐரோப்பிய
நாடுகளில் கிறிஸ்தவத்தின் தொடக்க கால கட்டிடக் கலையிலும் பைஸாண்டிக் கலையிலும்
மாயா,
நவஜோ கலைகளிலும் இந்த ஸ்வஸ்திகா குறியீடு அதிக அளவில்
பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெர்மானிய கவிஞரான க்விடோ வான் லிஸ்ட் என்பவர் 1910 இல் ஸ்வஸ்திகாவை யூதர்களுக்கு எதிரான சின்னமாகப்
பரிந்துரைத்தார். 1919 இல் ஜெர்மனியில் நாசிக் கட்சி நிறுவப்பட்ட போது
அக்கட்சியின் சின்னமாக ஸ்வஸ்திகா ஏற்றுக் கொள்ளப்பட்டது.
---------------------
87 - 28.03.2018
பாரதியாரின்
மொழிப்பற்று
அதிகமான
சமஸ்கிருதச் சொற்களைக் கலந்து தமிழில் கவிதை எழுதி மாபெரும் வெற்றியையும் பெற்றவர்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேர்ந்தவரான அவர்
தமிழ் மொழி குறித்துச் சொல்லும் போது ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்கிறார். தமிழ்மொழி குறித்த அவரின் மதிப்பீடு அது.
அதேசமயம்
பாரதியார்,
‘தைரியம்’ என்னும்
பொருண்மையில் அமைந்த தன்னுடைய கட்டுரை ஒன்றில் சமஸ்கிருத மொழி பற்றி எழுதும் போது, ‘நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றி நாமும் கூட புண்ணிய
பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதை ‘தெய்வபாஷை’ என்று சொல்வது விளையாட்டன்று.
மற்ற ஸாதாரண பாஷைகளெல்லாம் ‘மனித பாஷை’
என்று சொல்லுவோமேயானால், இவை
அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்’ எனக் குறிப்பிடுகிறார். அதாவது பாரதியாருக்கு அவர் அறிந்த
மொழிகளிலேயே இனிமையானது தமிழ். தெய்வத்தன்மை பொருந்தியது சமஸ்கிருதம். இதை
இப்படியும் ‘சொல்லலாம். தமிழ்ப் பேசுகிறவர்கள் இனிமையானவர்கள்.
சமஸ்கிருதம் பேசுகிறவர்கள் தெய்வம் போன்றவர்கள்’. பாரதியாரின் இந்த மொழிப்பற்றும் தான் அவரை மகாகவி ஆக்கியது.
---------------------
88 - 29.03.2018
ஹிப்பார்க்கஸ்
பூகோளம்
பற்றிய ஆய்வில் அளப்பரிய சாதனைகளைப் படைத்தவர் ஹிப்பார்க்கஸ். கிரேக்கரான இவர்
கணித அறிஞராகவும் வானியல் அறிஞராகவும் இருந்து அத்துறை சார்ந்த முக்கியமான
கோட்பாடுகளை உருவாக்கினார். இவரது ஆய்வு முடிவுகளில் இருந்த துல்லியத்
தன்மைக்காகவே பெரிதும் கவனம் பெற்ற இவர் ஓர் ஆண்டின் கால அளவை மிகத்துல்லியமாகக்
கணித்தார். விண்மீன்கள் குறித்த அட்டவணையை முதல்முதலாகத் தயாரித்தார். அதில் 850 விண்மீன்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை மிகத்
துல்லியமானதாக இருந்துவரும் கோணவியல் அமைப்புமுறையை உருவாக்கியவரும் இவர்தான்.
ஜோதிடவியலை முற்றாக மறுதலித்த ஹிப்பார்க்கஸ், சூரியனை மையமாக வைத்துச் சொல்லப்பட்ட பிரபஞ்சக் கருத்துகளை நம்பவில்லை.
விண்மீன்களின் நீள்வட்டச் சுற்றுப்பாதை காரணமாக எழும் ஒழுங்கின்மைகளை நன்கு
விளக்கினார். பூமியில் இருக்கும் இடங்களை மிகவும் துல்லியமாக அறிந்துகொள்ள பல
ஒப்பற்ற கணிதக் கொள்கைகளைக் கையாளும் உத்தியை அறிமுகப்படுத்தினார். அட்சரேகை
மற்றும் தீர்க்கரேகையை முதன்முதலான அறுதிப்படுத்தியவரும் ஹிப்பார்க்கஸ் தான்.
இவரது கொள்கைகள் டாலமியின் கொள்கைகளின் மீது பெருமளவு தாக்கத்தைச் செலுத்தியது.
இவர் கண்டுபித்த ‘எக்கியூனாக்ஸ்’
கணிதமுறையை அடிப்படையாகக் கொண்டுதான் வெப்ப மண்டல பகுதியில் ஒருநாளின் நீளம்
கணக்கிடப்படுகிறது.
---------------------
89 - 30.03.2018
சிலுவை
சிலுவையில்
அறைதல் என்பது கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் இருந்து வந்த மிகப் பழமையான தண்டனை
முறை. பாரசீகர்கள்,
செலூசிட்கள், யூதர்கள்,
கார்த ஜினியர்கள், ரோமானியர்கள் ஆகியோரிடம் இத்தண்டனை முறை வழக்கில் இருந்தது. மரக்கட்டை ஒன்று
செங்குத்தாக ஓரிடத்தில் நடப்பட்டிருக்கும். அந்த இடத்தை நோக்கி மரண தண்டனை விதிக்கப்பட்டவரை
சாட்டையால் அடித்தபடி அவரையே குறுக்குக் கட்டையை சுமக்கச் சொல்லி இழுத்துச்
செல்வார்கள். அந்த இடம் சென்றதும் குறுக்குக் கட்டையை செங்குத்துக் கட்டையில்
தரையிலிருந்து ஒன்பது அடி உயரத்தில் இருக்கும் படி இணைப்பார்கள். அதன் பிறகே
மனிதனை அறைவார்கள்.
இந்தத்
தண்டனை அடிக்கடி விதிக்கப்படவில்லை. மிகவும் அரிதான குற்றச் செயல்களுக்காகவே
விதிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் இத்தண்டனை பெறும் நபர்கள் அரசியல் சார்ந்தோ
அல்லது சமயம் சார்ந்தோ கிளர்ச்சி செய்தவர்களாகவோ, சட்டத்தை மீறியவர்களாகவோ தான் இருக்கிறார்கள். அதுவும் கூட கி.மு. இரண்டு
முதல் கி.மு. முதல் நூற்றாண்டு வரையிலான காலத்தில் மட்டும் தான் இத்தண்டனை அதிக
அளவில் விதிக்கப்பட்டிருக்கிறது. கி.பி. 337 இல் கான்ஸ்டன்டைன் என்னும் கிரீஸ் மன்னர் இத்தண்டனை முறையை முற்றிலுமாகத் தடை
செய்தார்.
……………………..
90 - 31.03.2018
பெருங்கடவுள்
ஒருவர்
சொல்லிவிட்டார் என்பதற்காக அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை.
சொல்லப்பட்ட கருத்தை அவரவர் புரிதலுக்கேற்பவும் நிலைப்பாட்டிற்கேற்பவும்
விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டும். அப்பொழுதுதான் சொல்லப்பட்ட கருத்துக்களின்
நோக்கம் நிறைவேறும். பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதற்காகவே பின்பற்றுதல்
என்பது சரியான நிலைப்பாடாகாது. என்னதான் முன்னோர்கள் சொல்லி வைத்திருந்தாலும்
சொந்தமாக உருப்பெரும் சிந்தனைதான் மனிதனை முன்னேறியவனாகக் காட்டும்.
ஒருவரால்
சொல்லப்பட்ட கருத்து அரச அதிகாரத்தின் பின்னணியின் எல்லாத் தரப்பு மக்களுக்கும்
பரப்பப்பட்டு விட்டால் அது எல்லோருக்குமான பொதுவான கருத்து என்பது போல்
ஆகிவிடுகிறது. அதை அப்படியை நம்புவதால் தான் ஏராளமான சிக்கல்கள் உருவாகின்றன.
இந்தநிலை மாற வேண்டும். யார் என்ன சொன்னாலும் அதை சொல்லியவர்களின் கருத்தாக
மட்டுமே பார்க்கக் கூடிய நிலை உருவாக வேண்டும். உதாரணத்திற்கு ஒரு கேள்வியைக்
கேட்டு வைப்போம். நான்கு தலைகளை உடையவன் அதீத ஆற்றல் பெற்ற கடவுள்.
இருந்துவிட்டுப் போகட்டும். ஆறு தலைகளை அதாவது ஆறு முகங்களை உடையவன் வேறொரு
கடவுள். இருந்துவிட்டுப் போகட்டும். அவர்களெல்லாம் கடவுள் என்றால் பத்துத்தலைகளை
உடையவன் என்று சொல்லப்பட்ட ராவணன் அவர்களை விட பெருங்கடவுளாகத் தானே இருக்க
வேண்டும்?
---------------------
91 - 01.04.2018
மிலான் ஆணை
பதினெட்டாம்
நூற்றாண்டில் மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவிய நெப்போலியன் போனபார்ட்டின்
வாழ்க்கையைத் தீர்மானித்தவைகளுள் மிக முக்கியமானது மிலான் ஆணை. 1807 இல் பிறப்பிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் நெப்போலியன் ஐரோப்பாவில் தனது அதிகாரத்தை நிறுவ போராடிக்
கொண்டிருந்தார். அதே காலத்தில் தான் கிரேட் பிரிட்டனை ஒடுக்கியாக வேண்டும் என்ற
எண்ணத்தோடும் இருந்தார். ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் உள்ள வணிகத்
தொடர்பைத் துண்டித்துவிட்டால் பிரிட்டனை எளிதாக ஒடுக்கிவிடலாம் என்றும்
திட்டமிட்டார். அதற்காக பர்லீன் என்னும் பெயரிலொரு ஆணையை 1806 இல் பிறப்பித்தார். அந்த ஆணையைத் தொடர்ந்து பிரிட்டிஸ்
துறைமுகத்திற்கு வரும் எந்த நாட்டுக் கப்பலாக இருந்தாலும் நெப்போலியனால் பறிமுதல்
செய்யப்படும் என்று மற்றொரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதற்குப் பெயர்தான் மிலான்
ஆணை. நெப்போலியனிடம் கடற்படை இல்லாததால் இந்த ஆணையை முழுமையாக அமல்படுத்த
முடியவில்லை. இருந்தபோதிலும் நெப்போலியனின் இந்த ஆணைக்கு பிரிட்டனிடமிருந்து
மட்டுமின்றி நெப்போலியனால் பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளிடமிருந்தும் கண்டனக் குரல்
எழும்பின. இந்தப் புள்ளியிலிருந்து தான் நெப்போலியனின் வீழ்ச்சி தொடங்கிற்று.
---------------------
92 - 02.04.2018
உணர்வுகளை
மதித்தல்
இன்றைக்கு
மாற்றுக் கருத்தையோ எதிர்கருத்தையோ ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் குறைந்து
வருகிறது. மக்களும் ஆட்சியாளர்களும் அதிகாரத்தின் வழியாகவோ, பணத்தின் வழியாகவோ எதையும் சாதித்து விடலாம் என்ற
எண்ணத்திற்கு வந்துவிட்டார்கள். அந்த எண்ணம் நாளடைவில் தனிமனித உரிமைகளையும்
உணர்வுகளையும் நசுக்கும். அது ஒரு பெருங்கூட்டத்தை எப்பொழுதுமே தனக்கு எதிரியாக
நிறுத்தி வைக்கும் படியான சூழலை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உருவாக்கும். சிறுகச்
சிறுகப் பெருகி பொதுச் சமுதாயத்தின் அமைதியைச் சிதைக்கும். இதிலிருந்து விடுபட
வேண்டுமானால் அனைவருடைய உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்
அவரவருக்குப்
பிடித்தமான உணவை உண்பதற்கும், பிடித்தமான
ஆடைகளை அணிவதற்கும்,
விரும்புகிற வழிபாட்டு முறையை பின்பற்றுவதற்கும்
அனைவருக்கும் உரிமை உண்டு என்ற எண்ணம் எல்லோருக்கும் வரவேண்டும். தனிமனிதர்களின்
உரிமைகளில் தலையிடுவது தமது தகுதியைக் குறைக்கும் என்பதை ஒவ்வொருவரும் உணர
வேண்டும். காலமும் சூழலும் தமக்கு ஏதுவாக இருக்கிறது என்பதற்காகச் சூழ்ச்சிகளைக்
கையிலெடுக்கக் கூடாது. அது தற்காலிக வெற்றியைக் கொடுப்பது போல கொடுத்து நிரந்தரமான
தோல்விக்குள் தள்ளிவிட்டு விடும்.
---------------------
93 - 03.04.2018
நீச்சல்
முன்பெல்லாம்
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமானவுடன் நகரத்துச் சிறுவர்கள் கிராமங்களுக்கு
வந்துவிடுவார்கள். விடுமுறை முழுமையையும் கிராமத்திலேயே கழிப்பார்கள். அவர்கள்
கிராமத்திற்கு வரும்போது பெரும்பாலும் இரண்டு நோக்கங்களுக்காகவே வருவார்கள். ஒன்று
நீச்சல் கற்பது. மற்றொன்று மரம் ஏறிப் பழகுவது. நகரத்துச் சிறுவர்கள்
கிராமத்துக்குள் நுழைந்ததும் அவர்களிடம் கிராமத்துச் சிறுவர்கள் கேட்கும் முதல்
கேள்வி நீச்சல் தெரியுமா என்பதுதான். அவர்கள் தெரியாது என்றால் கேலியாகச்
சிரிப்பார்கள். அடுத்த நாளிலிலிருந்து கிராமத்துச் சிறுவர்கள் நகரத்துச்
சிறுவர்களையும் கண்மாய்க்கோ கிணறுக்கோ அழைத்துச் செல்வார்கள். ஓரிரு நாளில்
நீச்சலையும் கற்றுக்கொடுத்து விடுவார்கள்.
நீச்சல்
பழகியதும் ஒருமாதம் நீருக்குள்தான் விளையாட்டே நடக்கும். நகரத்தில் அவர்களுக்குக்
கிடைக்காத அத்தனையையும் கொண்டாடித் தீர்ப்பார்கள். இப்படி நகரத்துச்
சிறுவர்களுக்குக் கிராமத்துச் சிறுவர்கள் கற்றுக்கொடுப்பதற்கான ஆரோக்கியமான
வாழ்க்கை முறைகள் ஏராளம் இருந்தன. இன்று நிலைமை மாறி ஒவ்வொன்றாய் இழந்துவிட்டோம்.
இப்பொழுதெல்லாம் கிராமத்திற்கு வரும் நகரத்துச் சிறுவர்களிடம் கிராமத்துச்
சிறுவர்கள் உனக்கு நீச்சல் தெரியுமா எனக் கேட்பதே இல்லை. நீந்தத் தெரிந்தால் தானே
கேட்பதற்கு.
---------------------
94 - 04.04.2018
மூத்தோர் சொல்
சில
நாட்களுக்கு முன்பு நண்பனது கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அவனுக்கு ஒரு பாட்டி
இருந்தார். அவரை அவன் எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். பேசுவதற்கு புதியதாய்
ஒருவன் கிடைத்துவிட்டதில் அவருக்கு மகிழ்ச்சி இருந்திருக்கலாம். அருகே இழுத்து அமர
வைத்துக்கொண்டார். புரையோடிய கண்களில் அன்பைத் தேக்கி தனது வீட்டுப் பிள்ளைபோல
என்னிடம் பேசிக்கொண்டே இருந்தார். நேரம் போய்க்கொண்டே இருந்தது. அவர் ஊர் பற்றி, அவரது பிறந்த வீட்டின் பெருமை பற்றி, அவசர அவசரமாக திருமணம் முடிக்கப்பட்டு முன்பின் அறியாத ஒரு
ஆணோடு இரண்டு சீமை தாண்டி வந்து வாழ்ந்த வாழ்க்கை பற்றி என்னிடம் பேசிக்கொண்டே
இருந்தார்.
இரவு
வந்துவிட்டது. பாட்டிக்கு உணவு கொடுக்கப்பட்டது. என்னிடம் பேசிக்கொண்டே
சாப்பாட்டுப் பாத்திரத்தைத் திறந்த பார்த்த பாட்டி தயிர்க்கஞ்சியும் கீரையும்
கொடுத்திருப்பதாகச் சொல்லியபடியை பாத்திரத்தை மூடினார். நான் உடனே இரவில் தயிரும்
கீரையும் சாப்பிடக் கூடாது. வாட்ஸ் ஆப்பில் படித்தேன் என்றேன். அதற்கு அந்தப் பாட்டி
பசித்தவன் சாப்பாட்டில் நோயைப் பார்க்க மாட்டான். நமது மண்ணில் விளைகிற உண்ணும்
பொருளோடு வேறு எந்த உண்ணும் பொருளையும் சேர்த்து உண்ணலாம். ஒன்றும் ஆகாது.
அப்படிச் சாப்பிட்டுத்தான் நான் இத்தனை காலம் நடமாடிக்கொண்டு இருக்கிறேன் என்றார்.
---------------------
95 - 05.04.2018
மேதை
உலகம்
தோன்றிய காலம் முதல் உலகம் முழுக்க எல்லாத் துறைகளிலும் மேதைகள் இருந்தே
வந்திருக்கிறார்கள். முடியாட்சி காலத்தில் மேதை என்ற சொல் ஒலிக்காத நாளே இல்லை
என்கிற அளவுக்கு அரண்மனைகளில் அந்தச் சொல் பயன்கொள்ளப் பெற்றிருக்கிறது. அந்தச்
சொல் மற்ற மனிதர்களில் இருந்து அறிவுத்தளத்தில் வேறுபடும் மனிதரைச் சிறப்பிக்க
வழங்கிய நடைமுறையின் உச்சமாகவே தான் பல நேரங்களில் இருந்திருக்கிறது. இந்த
இடத்தில் நாமக்கொரு கேள்வி எழுகிறது. சிறப்பாகச் சொல்லப்படும் ஒவ்வொரு
விஷயத்திற்கும் ஒரு அளவுகோல் இருப்பதைப்போல மேதை என்று ஒருவரை
அடையாளப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல் என்ன என்பது தான் அந்தக்
கேள்வி.
மேதை
குறித்த அளவீட்டில் முக்கியமானவர் பிரிட்டனைச் சேர்ந்த பிரான்ஸிஸ் கால்ட்டன்
என்பவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். இவர்தான்
முதன்முதலாக அறிவை அளத்தல்,
IQ என்று
சொல்லப்படக் கூடிய அறிதிறன் ஈவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேதைக்கான
அளவீட்டை உருவாக்கினார். அறிதிறனின் அளவு 130 முதல் 140 வரை இருந்தால் அறிவாளி என்றும் 140 முதல் 150 வரை
இருந்தால் மேதை என்றும் 150க்கு மேல் இருந்தால் அதிமேதை என்றும் பிரான்ஸிஸ் கால்ட்டன்
வகைப்படுத்தினார்
---------------------
96 - 06.04.2018
மெலனீசியா
பசிபிக்
பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கும் பிஸ்மார்க், பிஜி தீவுக் கூட்டங்களுக்கும் இடையில் இருக்கும் தீவுகளுக்கு ‘மெலனீசியா’ என்று பெயர். இத்தீவுகள்
ஒஷியானியா தீவுகளின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. ‘மெலனீயா’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு கறுப்பர்கள் அதிகமாக வாழும் இடம் என்பது பொருள்.
உலகமெங்கும் நிறைய மாற்றங்களும் குடியேற்றங்களும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும்
சூழுலில் இன்றளவும் இந்தத் தீவுக் கூட்டங்களில் கறுப்பர்களே அதிகமாக
வசிக்கின்றனர். இந்தத் தீவுக் கூட்டத்தில்
நியூ காலிடோனியா, லாயல்ட்டி, அட்மிரால்டி, சாலமன் முதலிய முக்கியமான தீவுகளும் அடங்கும். இந்தத் தீவுகள் பெரும்பாலும்
எரிமலைக் குழம்புகள் வடிந்து உருவானவை என்பதால் மண் கறுப்பு நிறத்தில் உள்ளது.
வேளாண்மைக்கு ஏற்ற மண்ணாக இருக்கும் இதில் பயிர்கள் செழித்து வளர்கின்றன.
கிழங்குகள்,
வாழை ஆகியன அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. ‘பாப்புவான்’ என்னும் ஆதிக்குடியைச்
சார்ந்த இத்தீவு மக்கள் பன்றிகளை விரும்பி
வளர்க்கிறார்கள். ஓய்வுநேரத்தில் மீன் பிடிப்பதிலும், வேட்டையாடுவதிலும் பொழுதைக் கழிக்கிறார்கள். இம்மக்கள்
அண்மையில் தான் கற்கருவிகளை விட்டுவிட்டு உலோகக் கருவிகளைப் பயன்படுத்தப்
பழகினார்கள். இவர்களின் மொழி மலேயா மொழியோடு அதிகபடியான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.
---------------------
97 - 07.04.2018
சட்டப்
பேரவைக் குற்றச்சாட்டு
அரசின்
உயர் பொறுப்பில் இருப்பவர்கள், அரசுப்
பணியாளர்கள் ஆகியோருக்கு எதிராக சட்டமன்றம் முன்வைக்கும் குற்றச்சாட்டு ‘சட்டப்பேரவைக் குற்றச்சாட்டு’
எனப்படுகின்றது. இந்த முறைமையில் அரசில் உயர்பதவி வகித்தவர்களையும் அரசுப்
பணியாளர்களையும் குற்றம் சாட்டுதல் உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் இருந்தாலும்
அமெரிக்காவின் நடைமுறை சற்று வித்தியாசமானது.
அமெரிக்காவின்
குடியரசுத் தலைவர்,
துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர்கள்,
நீதிபதிகள் முதலியோர் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர். முதலில் குற்றச்சாட்டையும் அவற்றுக்கான ஆதாரங்களையும்
தொகுத்து குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு பேரவையில் வைக்கப்படும். பெரும்பாலான
உறுப்பினர்கள் விசாரணைக்கு ஒப்புதல் அளித்துவிட்டால் குற்றப்பத்திரிகை மேலவையில்
வைக்கப்படும். மேலவைதான் விசாரணையை மேற்கொள்ளும். பிறகு தீர்ப்பு எழுதப்பட்டு அந்த
தீர்ப்பும் பேரவை உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக வைக்கப்படும். பெரும்பான்மையான
உறுப்பினர்கள் தீர்ப்புக்கு ஆதரவாக ஒப்புதல் வழங்கினால் மட்டுமே குற்றம்
சாட்டப்பட்டவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார். அந்தவகையில் இதுவரை ஆண்ட்ரூ ஜான்ஸன், பில் கிளிண்டன் ஆகிய இரண்டு குடியரசுத் தலைவர்கள் சட்டப்
பேரவைக் குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். பின்னர் இருவருமே விடுதலை
செய்யப்பட்டார்கள். 1974 இல் குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சனுக்கு எதிராகவும்
குற்றம் சாட்டப்பட்டது. தீர்ப்பு வருவதற்கு முன்பாக அவராகவே பதவி விலகிவிட்டார்.
---------------------
98 - 08.04.2018
மக்டலீனிய
நாகரிகம்
நாகரிகம்
எப்போதும் நீண்ட காலத்திற்கு ஒரே மாதிரியாக இருந்ததில்லை. மக்களில் ஏற்படும்
கலப்புமர்,
படையெடுப்புகளும், தட்பவெட்ப சூழ்நிலைகளும் தான் நாகரிகத்தின் வயதைத் தீர்மானித்திருக்கின்றன.
குறிப்பாக படையெடுப்புகளால் அழிக்கப்பட்ட நாகரிகங்கள் ஏராளம். இதுவரையிலான உலக
வரலாற்றில் ஒரு நாகரிகத்தின் மீதே இன்னொரு நாகரிகம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் மிகவும் குறிக்கத்தகுந்தது மக்டலீனிய நாகரிகம். ஐரோப்பாவின் பழைய
கலைநயம் பொருந்திய கற்கருவி தொழில் சார்ந்ததே மக்டலீனிய நாகரிகம் எனப்படுகிறது.
கலைநயம் மிக்க கற்கருவிகள் அதிகமாகக் கிடைத்த தென்மேற்கு பிரான்ஸில் உள்ள லே மாடெ
லெய்ன் வழி இதற்கு மக்டலீனிய நாகரிகம் என்ற பெயர் சூட்டப்பட்டது. கி.மு
பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாகரிகம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நாகரிகத்தைச் சார்ந்த மக்களின் வாழ்க்கை முறை நாடோடியாக அல்லாமல் ஓரிடத்தில்
நிலைகொண்டு வாழ்ந்ததாகத் தெரிகிறது. ஈட்டிகள், கண்ணிகள் வழி விலங்குகளை வேட்டையாடியிருக்கின்றனர். சுற்றுச்சூழலில் வெப்பம்
அதிகரித்ததாலும் கூட்டமாகக் காணப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து போனதாலும்
ஏறக்குறைய கி.மு. பத்தாயிரமாவது ஆண்டளவில் மக்டலீனிய நாகரிகம் முடிவுக்கு
வந்ததாகச் சொல்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள்.
---------------------
99 - 09.04.2018
சோறுகள்
நாட்டுப்புற
ஆய்வாளரான பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் தமது ‘பிராமண போஜனமும் சட்டிச் சோறும்’ என்றும் நூலில் சோறு பற்றிய செய்திகளை விரிவாகத் தந்துள்ளார். சோறு எச்சோறு, புள்ளிச்சோறு, திங்கள்சோறு,
வரிச்சோறு, வெட்டிச்சோறு, சட்டிச்சோறு என பல அடைமொழிகளுடன் வழங்கப்பெற்றிருக்கிறது.
சோறுக்கு வழங்கிய அடைமொழிகள் ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்தைக் குறிப்பனவாக
இருந்திருக்கின்றன. மக்கள் சோறை வரியாகச் செலுத்தியிருக்கிறார்கள். மன்னர்களும்
நிலவுடைமையாளர்களும் அவர்தம் பணியாளர்களுக்குச் சோற்றை ஊதியமாக
வழங்கியிருக்கிறார்கள். நிலவுமையாளர்கள் குழந்தைகளுக்குத் தானமாக வழங்கியது ‘பிள்ளைசோறு’ என வழங்கப்பெற்றிருக்கிறது.
கிராம
ஊழியர்களுக்கு அவர்கள் செய்த பணிக்காக இரவில் வழங்கப்பட்ட சோறு ‘எச்சோறு’ என
வழங்கப்பட்டிருக்கிறது. ஊதியம் இன்றி வேலை செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட சோறு ‘வெட்டிச்சோறு’ எனக் குறிக்கப்பட்டிருக்கிறது. மன்னர்களுக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கு
நிலவுடைமையாளர்களால் வழங்கப்பட்ட சோறு ‘புள்ளிச்சோறு’
எனப்பட்டது. கோவில் பணியாளர்கள், நாடோடிகள், பரதேசிகள்
முதலியோருக்கு வழங்கப் பெற்றது ‘சட்டிச்சோறு’ எனக் குறிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாழி அளவுள்ள
அரிசியில் சமைத்த சோறும் ‘சட்டிசோறு’ எனச்
சுட்டப்பெற்றிருக்கிறது.
---------------------
100 - 10.04.2018
புத்தரும்
துணியும்
வாழ்க்கை
என்பது அடர்த்தியான பொருண்மைகள் நிறைந்த ஒரு சொல். அதை அழகுற
வார்த்துக்காட்டுவதில் தான் வெற்றியின் ரகசியங்கள் உறைந்து கிடக்கின்றன. இதைத்தான்
தத்துவஞானிகளும் அவரவர்களுக்குத் தெரிந்த மொழிகளில் புலப்படுத்தி
வந்திருக்கிறார்கள். ஒருநாள் புத்தர் தனது சீடர்களுக்கு ஒரு துணியை வைத்துப்
போதித்துக்கொண்டிருந்தார். யாரும் எதிர்பார்க்காத பொழுதில் திடீரென அந்தத்
துணியில் முடிச்சுக்களைப் போட்டார். பிறகு தனது சீடர்களை நோக்கி துணியைக் காட்டி
இந்த துணி முன்பு நான் கொண்டுவந்த துணிதானா? அல்லது வேறு துணியா?
எனக் கேட்டார். அதற்கு ஆனந்தன் என்னும் சீடன் ஒருவன்
எழுந்து ‘அதே துணிதான் முன்பு முடிச்சுகள் இல்லை. இப்பொழுது
இருக்கின்றன’
என்றான். சிறிதுநேரம் அமைதியாக இருந்த புத்தர் சரி இனி இந்த
துணியில் இருக்கும் முடிச்சுக்களை எப்படி அவிழ்ப்பது? என்று கேட்டார். அதற்கு சாரிபுத்தன் புத்தரை நோக்கி, ‘சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்றால்
முதலில் சிக்கலுக்கு அருகில் செல்ல வேண்டும். சிக்கலின் தன்மைகள் ஆராயப்பட
வேண்டும். சிக்கல் உருவான அதே வழியில் சென்றுதான் சிக்கலை முடிவுக்குக் கொண்டுவர
முடியும்’ எனக் கூறினார். அதற்கு புத்தர் ‘துணி முடிச்சுகள் கண்ணுக்குப் புலப்படும். மனதின் முடிச்சுகள் கண்ணுக்குப்
புலப்பாடாது. மனதை நெருங்கிப் பார்த்துச் சிக்கலை உணராத வரை வாழ்வின் முடிச்சுகளை
ஒருபோதும் அவிழ்க்க முடியாது’ என்றார்.
---------------------
101 - 11.04.2018
சுதேசியம்
பத்தொன்பதாம்
நூற்றாண்டில் வைதீகத்தை மிகச் சரியான கோணத்தில் மாற்று அரசியலுக்கு உட்படுத்திய
பேரறிஞரான அயோத்திதாசர் சுதேசியம் பற்றிக் கூறும் கருத்துகள் மிகவும் கவனிக்கப்பட
வேண்டியவை. தமிழ்நாட்டில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் குடிகள், வேற்றுமொழி பேசும் பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டில்
குடியேறி வாழ்ந்து வருபவர்கள் சுதேசிகள் ஆவர். ஆயிரம் ஆண்டுகள் இந்நாட்டில்
வாழ்ந்து இருந்தாலும் சாதி வேறுபாடுகளைக் கடைப்பிடிப்பவர்கள் சுதேசிகள்
ஆகமாட்டார்கள் என்கிறார் அயோத்திதாசர். மேலும் அவர் சிந்து நதி ஓரமாக வந்து
குடியேறி தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு இந்திய தேசத்தில் பன்னூறு
ஆண்டுகள் குடியிருந்தாலும் அவர்கள் சுதேசிகளாகி விட முடியாது என்கிறார். அதாவது
சாதிபேதம் பார்க்காமல் மிகக் குறைவான ஆண்டுகளே இந்தியாவில் வசித்தாலும் அவர்கள்
இந்தியர்கள். பன்னூறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருந்தாலும் அவர்கள் சாதிபேதம்
பார்ப்பார்களேயானால் அவர்கள் சுதேசிகளாக முடியாது என்கிறார். அயோத்திதாசரைப்
பொறுத்தவரை ‘இந்து’ என்பதும் ‘சாதி’ என்பதும் இந்த தேசத்திற்கு உரியதல்ல. அவை
இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவர்களால் கொண்டுவரப்பட்டவை. ஆகவே அவற்றை
பின்பற்றுபவர்கள் சுதேசிகளாக இருக்க முடியாது என்பது அயோத்திதாசரின் நிலைப்பாடு.
---------------------
102 - 12.04.2018
லெவலர்கள்
பதினேழாம்
நூற்றாண்டில் இங்கிலாந்தில் மன்னர் முதலாம் சார்லஸிற்கு எதிராக கிளர்ச்சி செய்த
பொதுமக்களில் சிறுஉற்பத்தியாளர்களின் பக்கம் நின்றவர்கள் லெவலர்கள்
எனப்படுகின்றனர். லெவலர்கள் என்ற சொல்லிற்கு ‘சமப்படுத்துவோர்’
என்பது பொருள். ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்குப் போராடியதால்
இவர்களுக்கு லெவலர்கள் என்ற பெயர் வழங்கப்பெற்றது. லெவலர்கள் கிராம்வெல்லின்
படையினரிடம் செல்வாக்குப் பெற்றவர்களாயிருந்தனர். மன்னருக்கு எதிரான சிந்தனைப்
போக்குடைய பெருநிலப்பிரபுக்கள் இவர்களுக்கு ஆதரவு அளித்தனர். தடையற்ற
வாணிபத்திற்காகவும்,
அரசனின் ஆதரவு பெற்ற நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முடிவு
கட்டுவதற்காகவும் சிறுஉடைமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவுமான கோரிக்கைகளை
முன்வைத்துப் போராடினர். குடியாட்சி வேண்டும் என்பதும் ஆண்களுக்கு வாக்குரிமை
வேண்டும் என்பதும் கூட லெவலர்களின் கோரிக்கையாக இருந்தது. நாடாளுமன்றத்திற்கான
வாக்குரிமையைத் தளர்த்தி பரவலாக்கக் கூறினர். கடன் பற்றிய சட்டங்கள் மாற்றப்பட
வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். 1649 ஆம் ஆண்டு உள்நாட்டுக் கலவரத்தினாலும் சூழ்ச்சியினாலும் ஒடுக்கப்பட்டனர்.
அதற்குப்
பிறகு இவர்கள் குவேக்கர்கள், அனாபாப்டிஸ்டுகள் முதலிய சமயச் சீர்திருத்தக் குழுக்களில் இணைந்துக்கொண்டனர்.
---------------------
103 - 13.04.2018
பயிர்வட்டங்கள்
விண்வெளியில்
இருந்து வயல்களை நோக்கும் போது பல்வேறு உருவங்கள் தெரியும்படியாக பயிர்கள்
சாய்க்கப்பட்டிருப்பதுதான் ‘பயிர்வட்டங்கள்’ எனப்படுகிறது. ஆரம்பத்தில் பெரும்பாலானவை வட்டவடிவங்களிலேயே
காணப்பட்டதால் அவை ‘பயிர்வட்டங்கள்’ என்று அழைக்கப்பட்டதாக சு.இராமசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா,
ஜப்பான், கனடா முதலிய
நாடுகளில் 1970கள் முதல் பயிர்வட்டங்கள் உருவாகிக்கொண்டே இருந்தன. அவை
எப்படி உருவாகின்றன என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. விண்ணிலிருந்து
பறக்கும் தட்டுகள் வழியாக பூமிக்கு வரும் ஏலியன்கள்தான் பயிர்வட்டங்களை
உருவாக்குவதாக நீண்ட காலமாக மக்களிடம் நம்பிக்கை ஒன்றும் இருந்துவருகிறது.
காந்தப்புலம்,
சுழல்காற்று முதலிய இயற்கை நிகழ்வுகளே பயிர்வட்டங்கள்
தோன்றுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று இயற்பியலாளர்கள் குறிப்பிட்டனர். சிலர்
பயிர்வட்டங்கள் அமைப்பதில் தேர்ந்தவர்களில் யாரோ சிலர் இரவோடு இரவாக பயிர்வட்டத்தை
உருவாக்கிவிட்டு மறைந்து விடுகிறார்கள் என்றும் பேசிக்கொண்டனர். எண்பது விழுக்காடு
பயிர்வட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டாலும் மற்ற பயிர்வட்டங்கள் எப்படி
உருவாகின்றன என்பது புரியாத புதிராகவே நீடிக்கிறது என்கிறார் பயிர் வட்டங்களின்
ஆய்வாளர் காலின் ஆண்ட்ரூஸ்.
---------------------
104 - 14.04.2018
எல்லோருக்குமானவர்
உலகமே
கண்டு வியந்த மாபெரும் ஆளுமையான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று
உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவரது வாழ்வும் எழுத்தும்
நமக்கு எண்ணற்ற படிப்பினைகளைத் தந்திருக்கிறது. அரசியலில் அவரது சமரசமற்ற
நிலைப்பாடுகள் அவருக்கு ஏராளமான வெற்றிகளைக் கொடுத்திருக்கிறது. அந்த வெற்றியின்
ருசிகளை இன்றைக்கு இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பெண்களின்
நலன்,
தொழிலாளர்களின் நலன், ஏழைகளின் நலன் என எல்லாவற்றிலும் தனது காலத்தைச் செலவிட்டவர் டாக்டர்
அம்பேத்கர். பெண்களின் இயங்கியலுக்கான நியாயங்களைச் சட்ட வடிவமாக்கிய அவர், தொழிலாளர்களின் பாதுகாப்பு, அவர்கள் உழைக்கும் நேரம், அவர்களுக்கான
ஊதியம் முதலியவற்றை வரன்முறைப்படுத்தியலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
மக்களை அரசியல் மயப்படுத்தும் முறையியலுக்காக சர்வதேசிய அளவில் நினைவு கூரப்படுகிற
அம்பேத்கர் தமது வாழ்நாளின் இறுதிவரை சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும்
வலியுறுத்திக் கொண்டே இருந்தார். வாழ்வில் கடைப்பிடித்தும் வந்தார். இந்திய மாற்று
அரசியலின் வரலாற்றில் மாபெரும் அத்தியாயமாகவும் மாறியிருக்கிறார். அவரை நாம்
எல்லாருக்குமான தலைவராகக் கொள்வதும் கொண்டாட வேண்டியதும் அவசியம். அதுதான் வாழும்
குடிகளுக்கும் வாழப்போகிற சந்ததிகளுக்கும் உயர்வளிக்கும்.
---------------------
105 - 15.04.2018
திராவிடரின்
திறன்
தமிழையும்
திராவிடத்தையும் சுயமரியாதைத் தளத்தில் நின்று கொண்டு தூக்கிப் பிடித்ததில்
பாரதிதாசனுக்கு முதன்மையான இடம் உண்டு. ஏறக்குறைய தந்தை பெரியாரின் பல கொள்கைகள்
பாரதிதாசனிடத்தில் கவிதைகளாகி இருப்பதைக் காணமுடியும். பாரதிதாசன் தமது கவிதையில்
ஓரிடத்தில் திராவிடரின் திறன் பற்றிப் பாடும் போது
ஒருவன்
உள்ள வரையில் / குருதி - ஒருசொட்டு உள்ள வரையில் / திராவிட நாட்டின் உரிமைக்குப்
போரிடச் / சிறிதும் பின்னிடல் இல்லை / பெரிது மானம் உயிர் பெரிதில்லை / பெற்ற
தாயைப் பிறராள விடுவோன் / திராவிடன் அல்லன் திராவிடன் அல்லன் / தீமை செய்து
பார்க்கட்டும் ஆள்வோர் / அடித்தோன் அடிபட நேர்ந்ததில் உலகில் / ஆளவந்தார் ஆட்படல்
உண்டு / நெடிய திராவிடம் எங்களின் உடைமை / நிறை உணர்வு உண்டு எங்கள் பட்டாளம்
உண்டு / வஞ்சக நரிகள் புலிக்காட்டை ஆளுமோ? / வடக்கர் எம்மை ஆளவும் மாளுமோ / அஞ்சும் வழக்கம் திராவிடர்க் இல்லை / ஆள்வலி
தோள்வலிக்குப் பஞ்சம் இல்லை என்கிறார். இந்த இடத்திலும் சொற்களுக்குள்
போர்முனையைக் காட்டிய கவிஞனாக மிளிர்கிறார் பாரதிதாசன்.
---------------------
106 - 16.04.2018
கொண்டாட்ட
விபரீதம்
முன்பெல்லாம்
பிறந்தநாள்,
திருமணநாள், நினைவுநாள் முதலியவற்றை மிக எளிதாகக் கடந்துவிடுவோம். அந்தநாட்கள் நமக்கு ஒரு
பொருட்டாகவே இருந்ததில்லை. ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. மேலைநாட்டு
பழக்கவழக்கங்கள் நமது வாழர்க்கை முறையில் அதிகமாகவே கலந்துவிட்டன. மாதந்தோறும்
ஏதாவது நாளைக் கொண்டாடுகிற அல்லது அப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டத்தில் கலந்து
கொள்கிற போக்கு அதிகரித்திருக்கிறது. பரிசுகளோடும் பூங்கொத்துகளோடும் சென்று
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களைச் சொல்கிறோம். சில குடும்பங்களில்
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அவர்களின் பிறந்தநாள், திருமணநாள் ஆகியவற்றில் இன்ப அதிர்ச்சி தரும் விதமாக கூட
நடந்துகொள்வதும் உண்டு.
உண்மையிலேயே
இப்படியான கொண்டாட்டங்கள் குடும்பங்களிலும் அலுவலகங்களிலும் பிரச்சினைகளைக்
குறைத்திருக்கின்றன. உறவுகள் பலப்படுவதற்கு இது ஒரு நல்ல வழிமுறையாகக் கூட
தோன்றுகிறது. ஆனால் சிலநேரங்களில் இத்தகைய கொண்டாட்டங்கள் விபரீதங்களிலும்
முடிந்திருக்கின்றன. அமெரிக்காவில் ஒருவர் தனது மனைவியின் பிறந்த நாளில் இன்ப
அதிர்ச்சி கொடுத்து அவரை மகிழ்ச்சி படுத்த வேண்டும் என எண்ணினார். கைநிறைய
பரிசுகளை வாங்கிக்கொண்டு அடையாளம் தெரியாதபடி முகமூடி அணிந்து ஜன்னலில் ஏறிக் குதித்து
வீட்டுக்குள் நுழைந்தார். பயந்து அலறிய மனைவி திருடன் எனத் தவறாகக் கருதி தனது
கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்.
---------------------
107 - 17.04.2018
சம்பூகன் வதம்
வால்மீகி
ராமாயணத்தின் உத்திரகாண்டத்தில் உள்ள எழுபத்து மூன்று முதல் எழுபத்து ஆறு வரையிலான
சருக்கங்கள் சம்பூகன் வதம் பற்றிப் பேசுகின்றன. சம்பூகன் என்பவன் இந்தியாவின்
தென்பகுதியில் உள்ள சைவல மலையின் வடக்கில் இருந்த ஏரிக்கரையில் தலைகீழாகத்
தொங்கியபடி தவம் செய்துகொண்டிருந்த ஒரு சூத்திரன். அப்போது வடக்கே அயோத்தியில்
இராமன் ஆட்சி செய்துவருகிறான். அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதியைச் சார்ந்த அந்தணச்
சிறுவன் ஒருவன் இறந்து விடுகிறான். அச்சிறுவனின் தந்தை அரசன் நீதி தவறியதால் தான்
தன் மகன் இறந்து விட்டதாக இராமன் முன்னால் நின்று முறையிடுகிறான். இராமன்
துடிதுடித்துப் போகிறான். அவ்விடத்தில் இருந்த நாரதன் இராமனிடம் உன்நாட்டின்
எல்லைக்குள் அந்தண,
சத்திரிய, வைசியருக்கு
மட்டுமேயுரிய தவத்தை எங்கோ ஒரு சூத்திரன் மேற்கொண்டு இருக்கிறான். அதனால்தான்
இச்சிறுவன் இறந்துவிட்டான் எனக் கூறுகிறான்.
இராமன்
தன் நாட்டில் அறத்தை நிலைநாட்டும் பொருட்டும் அந்தணச் சிறுவனை உயிர்ப்பிக்கும்
பொருட்டும் தவமிருக்கும் சம்பூகனைத் தேடிப்போய் அவன் தவமிருக்கும் இடத்தைக்
கண்டுபிடித்து சம்பூகனிடம் பேசுகிறான். சம்பூகன் தேவலோகம் வேண்டி தவமிருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே
இராமன் தனது வாளை எடுத்து சம்பூகனை வெட்டிக் கொன்றான். அதுதான் ராமராஜ்யம்.
அப்படித்தான் இருக்கும் ராமராஜ்யம்.
---------------------
108 - 18.04.2018
சாஅதி
சொல்லும் பொக்கிஷம்
பாதுகாப்பு
வேண்டுமென்றால் கரையில் நில். பொக்கிஷம் வேண்டும் என்றால் கடலுக்குள் செல்
என்கிறார் சூஃபி கவிஞர் சாஅதி. இந்தச் சொற்றொடரில் பாதுகாப்பு, பொக்கிஷம் என்னும் இரண்டு நிலைப்பாடுகள்
எடுத்துரைக்கப்பட்டு உள்ளன. இரண்டும் எதிரெதிரான கோணம். அந்தக் கோணம் இரண்டும்
இரண்டு நபர்களுக்கான வாழ்தலின் இடத்தை தத்துவநிலையில் வைத்து விளக்குகிறது. பாதுகாப்பு
வேண்டுவோர் கரையில் நின்று கொள்ளலாம். அவர்களுக்குப் பொக்கிஷயங்கள் கிடைக்காது.
பொக்கிஷங்கள் கிடைக்க வேண்டும் என்றால் பாதுகாப்பு பற்றி கவலை கொள்ளக் கூடாது
கடலுக்குள் இறங்க வேண்டும் என்பது தான் அச்சொற்றொடர் உணர்த்தும் செய்தி.
பாதுகாப்பாக
கரையில் நின்று கடலைப் பார்த்துக்கொண்டிருக்காமல் கடலுக்குள் இறங்கி உழைக்கும்
பொழுது அந்த வாழ்க்கை பொக்கிஷமாக மாறிவிடுகிறது. கடலுக்குள் இறங்காமல் இருந்தால்
பாதுகாப்பாக இருகர்கலாம். ஆனால் பொக்கிஷங்கள் கிடைக்காது என்பதான இக்கருத்தை நாம்
வேறு விதமாகவும் புரிந்து கொள்ளலாம். அதாவது, உழைத்து அமைந்துக் கொள்ளும் வாழ்க்கை தான் பொக்கிஷமாகிறது. உழைக்காமல்
அமைத்துக் கொள்ளும் வாழ்க்கை பொக்கிஷமாகாது என்பததாகவும் புரிந்து கொள்ளலாம்.
அமைதியற்ற கடலைப் போலவே அலைவுற்றுக் கொண்டிருக்கும் வாழ்க்கைக் கடலில் விழுந்து
திளைப்பதே ஒருவகையிலான பொக்கிஷம் தானே!
---------------------
109 - 19.04.2018
மட்லி குமார
அனந்தராசாக்கள்
விஜயநகரத்தில்
ராயருக்கு மிகுந்த அன்புக்குரியவராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் படைத்துணைவராகவும் இருந்த விஸ்வநாதர் உள்ளிட்ட பல
தளபதிகளுக்கு விஜயநகரத்தின் பல பகுதிகள் வெவ்வேறு காலகட்டங்களில் ஆட்சி உரிமையாகக்
கொடுக்கப்பட்டன. அந்தப் பகுதிகளை வாங்கிக்கொண்ட விஜயநகரத்தின் படைத்தளபதிகள்
தங்களது குடிகளையும் கூடவே வேறு சில குடிகளையும் அழைத்துச் சென்று விஜயநகரத்தின்
கீழ் புதிய ஆட்சிப்பகுதிகளைக் கட்டியெழுப்பினர். புதிய பகுதிகளில் அவர்களின் ஆட்சி
நிலைத்து நிற்க அவர்களோடு இடம் பெயர்ந்து வந்த குடிகள் பெரும்பங்கு வகித்தனர்.
அக்குடிகளைச் சார்ந்த பலர் விஜயநகர அரசர்களுக்காக நரபலி கூட ஆகியிருக்கிறார்கள்.
அப்படி விஜயநகர அரசர்களுக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் துணையாக இருந்த குடிகளில்
ஒன்றுதான் மட்லி குமார அனந்தராசாக்கள். அவர்கள் சிலநேரங்களில் படைத்தலைவர்களாகவும்
இருந்தனர். அரசன் அளித்த பொருள்களினாலும் தமது சொந்தப் பொருள்களினாலும் சிவன், பெருமாள் கோயில்களுக்குத் திருப்பணி செய்தனர்.
பௌத்தத்தையும் சமணத்தையும் கடுமையாகக் கண்டித்தனர். வைஷ்ணவ பக்தர்களாகத் தம்மை
வரிந்துகொண்ட அவர்கள் ஆந்திராவில் உள்ள கடப்பை மாவட்டத்தின் மாண்டவ்வான் ஆற்றின்
கரையில் உள்ள ‘மட்லி’ என்னும்
இடத்தில் இருந்து வந்ததால் ‘மட்லி குமார
அனந்தராசாக்கள்’
என்று சுட்டப்படுகின்றனர்.
---------------------
110 - 20.04.2018
நவீன
வங்காளத்தின் நிறுவுநர்
நவீன
வங்காளத்தைத் தோற்றுவித்தவராகச் சுட்டப்பெறும் ஈஸ்வர சந்திர வித்தியசாகார் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கைம்பெண் திருமணத்தை
ஆதரித்தும் பலதார மணத்தைத் தடுக்கவும் சட்டம் இயற்றக்கோரி ஓர் இயக்கமே நடத்தினார்.
அதற்காக பெரும்பான்மையான மக்களைப் பகைத்துக்கொள்ளவும் வேண்டியிருந்தது. அதற்காக
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஒருநாளும் பின்வாங்கவில்லை. சமுதாய மேம்பாடே முக்கியம்
எனக் கருதி இறுதிவரை களத்தில் நின்றார். ஈஸ்வர சந்திர சர்மா என்னும் இயற்பெயரைக்
கொண்ட இவர்,
கல்கத்தா சமஸ்கிருதக் கல்லூரியில் ‘வித்யாசாகர்’ பட்டம் பெற்ற பிறகு ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என அழைக்கப்பட்டார். இவர்தான்
வங்காளியில் உரைநடையைத் தோற்றுவித்தார். மிகச்சிறந்த இலக்கியவாதியாகத்
திகழ்ந்தார். அதனாலேயே போர்ட் வில்லியம் கல்லூரியில் தலைமைப் புலவராகப் பணியாற்ற
வாய்ப்புக் கிடைத்தது. அதற்குப்பிறகு தான் படித்த சமஸ்கிருதக் கல்லூரிக்கே
முதல்வரானார். அதனைத் தொடர்ந்து கல்கத்தாவைச் சுற்றியிருந்த பாடசாலைகளுக்கான
ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். இவர் ஆய்வாளர் பொறுப்பில் இருந்த காலத்தில் தான்
கல்வித்துறையில் ஏராளமான சீர்திருத்தங்கள் நடந்தன.
---------------------
111 - 21.04.2018
ஐந்தாம்படை
ஒரு
தேசம் முழுமையும் ஒத்த கருத்துடையவர்கள் இருந்தார்கள் என்று சொல்வதற்கு
வராலாற்றில் ஒரு சான்றும் இல்லை. மாற்றுக் கருத்தும் எதிர்கருத்தும் உடையவர்கள்
இருப்பார்கள். முடியாட்சி இருந்த காலத்திலும் இன்றைக்கு முடியாட்சி நடந்து
கொண்டிருக்கக் கூடிய தேசத்திலும் அரசனுக்குப் பயந்து மக்கள் அமைதியாக இருப்பார்களே
தவிர முரண்பாடுகள் இன்றி யாரும் இருக்க முடியாது. பலநேரங்களில் அரசனை அவனது மகனே
சிறைப்படுத்தியும் கொலைசெய்தும் ஆட்சியைக் கைப்பற்றிய நிகழ்வுகள் ஏராளம்.
ஆக, ஒரு தேசத்தில் அரசனுக்கு எதிராக வேலை செய்வதற்கும் அரசனின்
பகைவர்களுக்கு உதவி செய்வதற்கும் சில குழுக்கள் உருவாகி இருக்கின்றன. அந்தக்
குழுக்களுக்கு ‘ஐந்தாம்படை’ என்று
பெயர் வழங்கியிருக்கிறது. நீண்ட காலமாக அந்தக் குழு உலகம் முழுமைக்கும்
இருந்தாலும் ஏறக்குறைய இராணுவத்தைப் போன்ற கட்டமைப்பை 1936இல் தான் பெற்றது. ஜந்தாம் படையினர் பல்வேறு நாடுகளுக்குள்
நுழைந்து மக்களிடையே குழப்பத்தையும் பயத்தையும் உருவாக்குவார்கள். அம்மக்களை
அந்நாட்டு அரசனுக்கு எதிராகத் திரட்டுவார்கள். அதில் தமக்கான ஆதாயத்தையும்
பெற்றுக்கொள்வார்கள். இரண்டாம் உலகப்போரைத் தீர்மானித்ததில் ஐந்தாம்படையினரின்
பங்கு பெருமளவில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
---------------------
112 - 22.04.2018
ஐம்பது
தலைமுறை அரசர்கள்
பழைய
ஆந்திராவின் பல்லாரி பகுதியைச் சார்ந்த வாடிக்கோட்டை என்னும் ஊரில்
கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாலர்ராஜா என்னும் சிற்றரசருக்கும்
வீரலக்கம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் கட்டபொம்மு. அவர் இளைஞராக இருந்தபோதே அவரது
தந்தை தென்தமிழ்நாட்டின் சாலிகுளத்திற்கு வந்துவிட்டார். சிற்றரசனின் மகன்
என்பதால் கட்டபொம்மு வாள்,
சிலம்பப் பயிற்சிகளிலும் தேறியிருந்தார். ஒருநாள்
கட்டபொம்மு தான் வாழ்ந்த ஊரில் நடந்தை திருட்டைத் தடுத்து, திருடுபோன பொருளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார். அந்தச்செய்தி அப்பகுதியை ஆண்ட
சகவீரபாண்டியனுக்குச் சென்றது. கட்டபொம்முவைச் சிறப்பிக்க எண்ணிய அவர் தனது
படைகளுக்குத் தலைவனாகக் கட்டபொம்முவை நியமித்தார். பின்னாளில் சகவீரபாண்டியனுக்கு
வாரிசு இல்லாததால் அரசரான கட்டபொம்மு ஒரு முயல் பல வேட்டை நாய்களைத் துரத்திய
இடத்தில் நகரை உண்டாக்கி தனது பாட்டனாராகிய பாஞ்சாலனின் நினைவாக பாஞ்சாலங்குறிச்சி
என்ற பெயரைச் சூட்டினார். இவருக்குப் பிறகு சகவீர கட்டபொம்மு, கெட்டி பொம்மு, சின்னபொம்மு,
தளவாய் குமாரசாமி, செகவீரபொம்மு,
செகவீர கட்டபொம்மு உள்ளிட்ட ஐம்பது தலைமுறையினர் அரசராக
இருந்தனர். அந்த வரிசையில் பாஞ்சாலங்குறிச்சின் நாற்பத்தி ஏழாவது அரசராகப்
பட்டத்திற்கு வந்தவர்தான் சற்று அதிகமாக அறியப்பட்டிருக்கிற வீரபாண்டிய
கட்டபொம்மு.
---------------------
113 - 23.04.2018
முதல்நிலை
ஞானம்
வாழ்க்கையில்
மணவாழ்வு என்பது அதிஅற்புதமானது. அது ஒரு கலையின் தொடக்கம். அது உலகத்தைச் சரியான
விதத்தில் புரிந்து கொள்வதற்கு நாமே நமக்கு ஏற்படுத்திக்கொண்ட ஒருவிதமான
கல்விமுறை. பிறரது தயவில் வாழ்ந்த ஆணும் பெண்ணும் திருமணத்திற்குப் பிறகே ஞானம்
பெற தொடங்குகிறார்கள். அப்போது வரும் மெய்தீண்டும் காதல் இருக்கிறதே அதுதான்
ஞானத்தின் தொடக்கநிலை. ஞானத்தின் தொடக்கத்தில் திளைக்கும் புதுமணத் தம்பதியர்
மிகவும் காதல் வயப்பட்டவர்களாக இருப்பர்.
மனைவிக்குக்
குழந்தை பிறந்தவுடன் மனைவியின் அன்பு குழந்தையிடம் தாவி விடும். மனைவி தரும்
முன்னுரிமை குழந்தைக்கானதாக மாறிவிடும். அது பிறந்த குழந்தையை ஞானியாக்கும்
முயற்சிக்கான பணியில் தாயின் தொடக்கச் செயல். மனைவியின் அன்பை தான் மட்டுமே
அனுபவித்த கணவன் அதை இழக்கும் போது வருகிற வலி இருக்கிறதே அது ஞானத்தின் இரண்டாம்
நிலை. கவிஞர் கண்ணதாசன் ஆண்களுக்கு தொடக்கநிலை ஞானமே போதும் என்கிற எண்ணத்தில் ‘மனைவிளக்க மகவொன்று வேண்டுமென்றால் வயது அறுபது ஆகும்கால்
வரட்டும் போதும். இனிச் சகியோம் ஆடவர்காள் எழுந்து வாரீர் இன்றுமுதல் பிள்ளைகளை
எதிர்ப்போம்’
என்கிறார்.
---------------------
114 - 24.04.2018
ஜார்ஜ் கஸ்த்
கேமரா
கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் ஓவியராக இருந்தவர்கள் பின்னாளில் புகைப்படக்
கலைஞர்களாக மாறிப் போனார்கள். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் ஜார்ஜ் கஸ்த். 1850களில் ஐரோப்பாவில் மிக முக்கிய ஓவியராக இருந்த அலெக்ஸாண்டர்
காபெல் என்பவரின் மாணவராக இருந்த கஸ்த் எகிப்தில் வளர்ந்தவர். பல தேசங்கள் பயணமாகி
1905 இல் வடஇந்தியாவிற்கு வந்தார். ஓவியம் வரைவதிலும்
புகைப்படம் எடுப்பதிலும் தனது வாழ்நாளைச் செலவிட்டார். 1908 இல் வடஇந்தியாவில் இருந்து மதுரைக்கு வந்தார். மதுரையின்
அழகை பல ஓவியங்களாக வரைந்து குவித்தார். பிரெஞ்ச் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த
ஓவியரான ஜார்ஜ் கஸ்த் மதுரையில் இருந்து வரைந்த ஓவியங்களுள் மிகவும் புகழ்பெற்றது
தேவதாசி ஓவியம்.
அந்தக்காலத்தில்
தேவதாசிகளின் அணிகலன்,
ஒப்பனை, அவர்களின்
வாழ்வியல் முறைகள் ஆகியன எப்படி இருந்தன என்பதை இன்றுவரை அந்த ஓவியம் தான்
சொல்லிக்கொண்டே இருக்கிறது. அவரின் இறுதிக்காலத்தில் புகைப்படக் கலையும் வளரத்
தொடங்கியிருந்தது. புகைப்படக்கலை இந்தியாவில் அறிமுகமாகி இருந்த காலத்தில்
மதுரையில் ஜார்ஜ் கஸ்த் எடுத்த 34
புகைப்படங்கள் வரலாற்றுப் பொக்கிஷங்களாக இருக்கின்றன. அவை இன்றளவும் பார்வைக்குக்
கிடைக்கின்றன.
---------------------
115 - 25.04.2018
நாலை கிழவன்
நாகன்
நாலை
என்னும் நாலூர் இன்றைக்கு அருப்புக்கோட்டைக்கு பக்கத்தில் உள்ள ஊர். முற்காலத்தில்
பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. அந்த ஊரை உரிமைகொண்டிருந்தவன்
நாகன் என்பவன். பாண்டிய மன்னர்களுக்கு மிகுந்த விசுவாசத்தோடு இருந்தும் படையுதவி
செய்தும் வந்தவன். இதனால் நாகனின் செல்வம் நாளுக்குநாள் பெருகிற்று. தம்மை நாடி
வருகிற அனைவருக்கும் இல்லை என்று சொல்லாது வாரிவாரி வழங்கினான். வேண்டியவர்
வேண்டாதார் எனப் பாராமல் வழங்கிய கொடையால் அவன் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றான்.
அவ்வள்ளலைப் பற்றி புறநானூற்றில் வடநெடுந்தத்தனார் பாடியுள்ளார்.
உலகில்
வள்ளல் தன்மை உடையோர் இறந்துவிட்டனர். ஆதலால் எனது உணவுண்ணும் பாத்திரம் கவிழ்த்தி
வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு உணவிட்டு நிமிர்த்த வல்லார் யாரோ எனக் கேட்டேன்.
அதற்கு பாண்டியனுக்குப் படை உதவியும் ஆலோசனையும் வழங்கியவனான நாகன் என்போன்
நற்புகழை உடையவன். பருந்தின் பசிபோக்கும் படியாக போரினைச் செய்கின்றவன். அவன்
இரவலர்களின் பசி தீர்ப்பதற்காக உள்ளான் என்று பலரும் சொன்னார்கள் என்று நாலை
கிழவன் நாகனின் புகழைப் பாடியுள்ளார் வடநெடுந்தத்தனார்.
---------------------
116 - 26.04.2018
நிதான சூத்ரம்
புத்தரின்
செல்லிடங்கள் என்றும் பௌத்தத்தை பின்பற்றியவர்களின் பயணத் தடங்கள் என்றும் புத்தர்
தொடர்பான ஆய்வுகள் இன்றும் நடந்துகொண்டிருக்கின்றன. அகழ்வாய்வில் பௌத்த விகாரை
இருந்ததற்கான ஆதரங்கள் இன்றளவும் கிடைத்த வண்ணம் உள்ளன. புத்தர் தொடர்பான
கதைகளுக்கும் கூட ஏராளமாக வந்துவிட்டன. கிடைத்த வரலாற்றுச் சான்றுகளின் துணைகொண்டு
பௌத்தத்தின் தத்துவமரபும் இலக்கியமரபும் வளர்த்தெடுக்கப்பட்டு விட்டன. இந்தப் பின்னணியில்
பௌத்ததின் பரவல் கடந்த சில நூற்றாண்டுகளை விட இப்பொழுது அதிகரித்திருக்கின்றது.
வட
இந்தியாவில் குசி நகரத்தில் இருந்த ஒரு தோப்பில் புத்தர் வீடுபேறடைந்தார் என்று
சொல்கிறார்கள். அவ்விடத்தை 1876 இல்
அகழ்வாராய்ச்சி செய்த போது செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு ஸ்தூபி மண்ணுக்குள்
இருந்து வெளியை எடுக்கப்பட்டது. பின்னாளில் அவ்விடத்திலிருந்து ஏராளமான ஸ்தூபிகள்
கண்டெடுக்கப்பட்டன. தொடர்ச்சியாகச் செய்த அகழ்வாராய்ச்சியில் ஸ்தூபியின்
உள்ளிருந்து தாமிரத் தகட்டில் செதுக்கப்பட்டும் வண்ணக் குழம்பால் எழுதப்பட்டும்
இருந்த ஒரு நூலைக் கண்டுபிடித்தார்கள். அந்த நூலின் பெயர் நிதான சூத்ரம்.
அந்நூலில் பயன்கொண்டிருந்த எழுத்து குப்தர் காலத்தைச் சார்ந்தது என்கின்றனர்
ஆய்வாளர்கள்.
---------------------
117 - 27.04.2018
டெகார்ட்டே
1596 இல் பிறந்த டெகார்ட்டே அறிவியல் திறனும் அரசியல் நுட்பமும் வாய்க்கப்பெற்ற
ஐரோப்பிய தத்துவ அறிஞர். படிப்பதற்கும் எழுதுவதற்கும் நிரைய நேரங்களைச்
செலவிட்டார். 1637இல் வெளியான டெகார்ட்டேவின் ‘முறையைப் பின்பற்றிய சொல்லாடல்’ என்னும் நூலை மனிதனின் அறிவுத் திறனின் அதிசயங்களுள் ஒன்று என பரோஸ் டன்ஹாம்
பாராட்டியுள்ளார். மேலும் அவர் அந்த நூலை ‘புரட்சிகரமான கருத்துக்களைத் தந்திரமாக வெளியிட்ட நூல்’ எனவும் குறிப்பிட்டுள்ளார். கோபர்நிக்கசின் கோட்பாட்டை சரி
என்றதற்காக கலிலியோவுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்திருந்த டெகார்ட்டே மிகத்
தந்திரமாக அறிவியல் கோட்பாட்டை பழமைவாதிகளுக்குள் புகுத்தினார். தனது
சிந்தனைகளுக்கு யாரிடமிருந்து எதிர்ப்பு வருமென்று கருதினாரோ அவர்களுக்கே அந்நூலை
அர்ப்பணம் செய்தார். என்றாலும் மிகச்சிறந்த அறிவு ஜீவிகளின் கண்களிலிருந்து டெகார்ட்டேவால்
தப்பமுடியவில்லை. 1642 இல் உட்ரெக்ட் பல்கலைக்கழகத்திலிருந்தும் 1647 இல் லிடன் பல்கலைக்கழகத்திலிருந்தும் டெகார்ட்டேவின்
சிந்தனைகள் நீக்கப்பட்டன. எவ்வளவுதான் அறிவியல் உண்மை என்று நிருபிக்கப்பட்டாலும்
பழமைவாதிகளின் நம்பிக்கைகள் அறிவியலையும் அடக்கி வைப்பதாகவே
இருந்துவந்திருக்கிறது.
---------------------
118 - 28.04.2018
மனிதனின் விரும்பம்
ஆசிரியர்
மாணவனை நோக்கி,
‘உனக்கு மிகவும் பிடித்தமானது எது?’ என்று கேட்டார். மாணவன் சில வினாடிகள் சிந்தித்துவிட்டு ‘எனக்கு உண்பதும் உறங்குவதும் பிடிக்கும்’ என்றான். அப்பதிலைக் கேட்டு மகிழ்ந்த ஆசிரியர், ‘உனது பதில் தத்துவரீதியில் மிகவும் சரியானது. மனிதனின் தேவை
உண்மையிலேயே அதுதான். உனக்கு எனது பாராட்டுக்கள்’ என்றார்.
தொடர்ந்து
அதே மாணவனிடம்,
‘உனக்கு உண்பதும் உறங்குவதும் மட்டுமே போதுமானதா? வேறெதுவும் வேண்டாமென்று உன்னால் உறுதியாகச் சொல்லிவிட
முடியுமா?’
என்று இன்னொரு கேள்வியைக் கேட்டார். மாணவன் அப்படிச்
சொல்லிவிட முடியாது. எனக்கு பைக்கில் அதிகமான வேகத்தில் செல்வது மிகவும்
பிடிக்கும் என்றான். அப்படியா? என்ற ஆசிரியர்
வேறு என்னென்ன உனக்கு பிடிக்கும் எனக் கேட்டார். நண்பர்களோடு ஊர் சுற்றுவது, திரைப்படம் பார்ப்பது, அடிக்கடி விருந்துகளில் கலந்துகொள்வது முதலியவையும் எனக்குப் பிடிக்கும்
என்றான் மாணவர். மாணவனைப் பாராட்டிய ஆசிரியர்,
தனது நாட்குறிப்பில் ‘எப்பொழுதுமே மனிதனின் விருப்பம் தொடக்கத்தில் துணியில் நுழைந்து தலைகாட்டும்
ஊசியின் நுனியைப் போன்று மிகவும் சிறியதாகவே வெளிப்படும். அதைப் பற்றிக்கொண்டு
இழுக்க இழுக்க ஊசிக்குப் பின்னால் வரும் நூல் போல் வந்துகொண்டே இருக்கும்’ என்று எழுதி வைத்தார்.
---------------------
119 - 29.04.2018
கடவுள்
பித்தரான ஸ்பினோசா
கிறித்தவர்களாலும்
யூதர்களாலும் ‘கடவுள் பித்தர்’ எனச் சுட்டப்பெற்றவர் ஸ்பினோசா. மனம்போன போக்கில் தனக்குச் சரியெனப்பட்டதை
நோக்கி மட்டுமே நகர்ந்துகொண்டிருந்தவர். கடவுள் பற்றிய எதிர்மறையான பகுத்தறிவுத்
தன்மையிலான கொள்கையில் அவர் ஆழ்ந்த பற்றுள்ளவராக இருந்த போதிலும் கடவுளைப் பற்றியே
சிந்தித்துக் கொண்டிருந்ததால் அவ்வாறு அவர் அழைக்கப்பெற்றார். யூதரான ஸ்பினோசா
யூதர்களாலேயே விலக்கி வைக்கப்பட்டார். யூதர்களின் புனித நூல்கள் அனைத்தும்
பாலஸ்தீனத்தைச் சார்ந்த கால்நடை மேய்ப்பவர்களால் உருவாக்கப்பட்டவை என்று
கூறியதற்காக யூதர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டார். இதனாலேயே ஸ்பினோசாவின்
மிகச்சிறந்த படைப்பான ‘The
Ethics’ என்னும் நூல்
அவரது காலத்தில் வெளியிடப்படவில்லை. பின்னர் 1670 இல் வெளியான ‘இறையியல் மற்றும் அரசியல் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்’ என்னும் நூல் அரசாங்கத்தின் ஆட்களால் எரியூட்டப்பட்டன.
எதைப் பற்றியும் கவலை கொள்ளாத ஸ்பினோசா தனது வாழ்நாளில் மனிதனுக்கு மகிழ்ச்சி
அளிக்கக் கூடியது எது என்பதைப் பற்றி மட்டும் தேடிக்கொண்டே இருந்தார். மனிதனின்
உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அறநெறிகளே மனிதனை மகிழ்ச்சியோடு
வைத்திருக்கும் என நம்பினார்.
---------------------
120 - 30.04.2018
பியூரிட்டன்களின்
குணம்
கி.பி.
16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்த ஒரு சமயப்
பிரிவினர் பியூரிட்டன்கள். இவர்கள் அரசின் சமயத்தை ஏற்காமல் சமயச் சுதந்திரத்தை
விரும்பினர். மக்கள் என்ன சமயத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யக்
கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தனர். அதனால் லண்டன் உள்ளிட்ட பல இடங்களில்
தத்தமக்குப் பிடித்தமான வழிகளில் வழிபாடுகளை நிகழ்த்தினர். இச்செயல் அரசுக்குப்
பிடிக்கவில்லை. ஆதலால் அரசு பியூரிட்டன்களைப் பிடித்துத் துன்புறுத்தியது. அரசின்
சமயம் உணர்த்திய அன்பு காற்றில் பறக்கவிடப்பட்டது. பியூரிட்டன்கள் சிறையில்
அடைக்கப்பட்டனர்.
தனிமனிதச்
சுதந்திரத்தில் அரசு தலையிடுவதை விரும்பாத பியூரிட்டன்கள் நாட்டை விட்டு வெளியேற
முடிவு செய்தனர். 74 ஆண்களும் 28 பெண்களும் கொண்ட ஒரு குழு 1620 ஆம்
ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள் இங்கிலாந்தின் பிளைமௌத் இருந்து கிளம்பி டிசம்பர்
16 ஆம் நாள் அமெரிக்காவில் குடியேறினர். எந்தச் சூழலிலும்
எமது சுதந்திரத்தைப் பறிகொடுக்க மாட்டோம் என்பதில் உறுதிக்குணம் கொண்ட
பியூரிட்டன்களை பிளைமௌத் குடியேற்றத்தினர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
---------------------
121 - 01.05.2018
மஹாகனி
உலகத்
தரமான மரச் சாமான்கள் செய்வதற்கு பயன்படுத்தப் பெறும் மரம் மஹாகனி. இது கியூபா, தாய்லாந்து, மத்திய அமெரிக்கா,
மேற்கிந்தியத் தீவுகள் முதலியவற்றில் காணப்படுகின்றது.
சிற்றுளி கொண்டு தச்சு வேலை செய்வதற்கு ஏற்றதாக இருப்பது இம்மரத்தின் கூடுதல்
சிறப்பு. உலகப் பணக்காரர்கள் மஹாகனி மரத்திலான பொருள்களைப் பயன்படுத்துவதை கௌரவமாகக் கருதுகின்றனர்.
சுவர்ப்பலகை முதல் கப்பல் கட்டுவதுவரை, ஆர்கன்,
பியானோ முதலிய இசைக்கருவிகள் செய்வதற்கு இம்மரங்கள் அதிக
அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
உழைப்பு, தேய்வுகளுக்கு ஏற்ற வலிமையும் கடினத் தன்மையும் இம்மரத்தில்
உண்டு. மக்கள் விரும்புகிற அளவை விடவும் அதிகமான அளவுக்கு மெருகேற்றுவதற்கு
ஒத்துழைக்கும் பண்பினைக் கொண்ட இம்மரம் சுருங்குவதோ, உப்புவதோ,
திருகுவதோ இல்லை. இம்மரத்தின் ரேகைகள் மிகவும் நெருக்கமாக
அழகுற அமைந்திருக்கும். நிறம் பார்ப்பவர்களை உடனடியாகக் கவரக் கூடிய ஒருவிதமான
பழுப்பாகக் காணப்படுகிறது. 100 அடி முதல் 150 அடி வரை வளரும் இம்மரம் 6 அடி குறுக்கு விட்டம் அமையும் அளவுக்கு பருமன் கொண்டதாக இருக்கிறது. 1795 இல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட இம்மரம் இன்றைக்கு
மேற்குவங்காளத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.
---------------------
122 - 02.05.2018
எழுத்தென்னும்
ஆயுதம்
வாள்
முனையை விட பேனாவின் முனை கூர்மையானது என்பார்கள். அந்த அளவுக்கு எழுத்துகள்
வீரியம் கொண்டவை. அதனால்தான் புரட்சியாளனின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு சிப்பாய்க்குச்
சமம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். எழுத்துக்கள் அறிஞர்களை உருவாக்கி
இருக்கின்றன. அரசாங்கங்களை உருவாக்கியிருக்கின்றன. ஒருவரது எண்ணங்களை எழுத்துகளே
நிலைக்கச் செய்கின்றன. சரியான நேரத்தில் சரியான விதத்தில் வெளிப்படுகின்ற எழுத்துகள்
ஆயுதங்களாகப் பரிணமித்திருக்கின்றன. சமீபத்தில் கல்வியாளரும் எழுத்தாளருமான
இரா.எட்வின் எழுதிய கவிதை ஒன்று கூர்மையும் ஓர்மையும் அணுகுண்டின் வலிமையையும்
ஒருங்கே கொண்டிருந்தது. படிக்கின்ற யாவரையும் சுயவிமரிசனம் செய்ய வைக்கின்ற, போலி மனங்களை அசைத்துப் பார்க்கிற வலுவினைக் கொண்டதாக
அமைந்திருந்தது. இதோ அந்தக் கவிதை
தெரு தாண்டும் வரை
கைகளில் சுமக்க
தீர்ப்பளித்தீர்
வரும்
கோபம்
எங்களுக்கும்
எங்களுக்கு
கோபம் வரும் வேளை
எம்மெதிரே
நீங்களும் வரலாம்
கழட்ட வேண்டிய
தேவையும் இல்லை
கைகளில் தான்
இருக்கிறது.
---------------------
123 - 03.05.2018
காதிமை
கோடை
காலம் வந்துவிட்டாலே அம்மன் திருவிழாக்களும் வந்துவிடும். கொளுத்தும் வெயிலிலும்
மக்கள் வீதியில் இருந்து விழாக்களைக் கொண்டாடுவர். சிறுசிறு சடங்குகள், பலியிடல்கள் என கோவில் திடல் வித்தியசமான சூழலில்
காட்சியளிக்கும். அப்படிப்பட்ட திருவிழாக்களுள் ஒன்றுதான் நேபாளத்தில் உள்ள
காதிமையம்மன் கோவில் திருவிழா. அது உலகப் பிரசித்தி பெற்றது. திருவிழாவைக்
காண்பதற்காகவே உலகம் முழுவதுமிருந்து பார்வையாளர்கள் வருகின்றனர். பத்து நாட்கள்
நடைபெறும் இக்கோவில் திருவிழாவில் கடைசி இரண்டு நாட்கள் உயிர்ப்பலி
கொடுப்பதற்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. எருமை, ஆடு,
கோழிகள் ஆயிரக் கணக்கில் பலிகொடுக்கப்படுகின்றன.
இந்தியாவில்
பிகார்,
உத்திரபிரதேசம் முதலிய மாநிலங்களில் இருந்து பெருவாரியான
மக்கள் காதிமையம்மன் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். இம்மாநிலங்களில்
இருந்துதான் பலியிடுவதற்காக ஏராளமான விலங்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. நீண்ட
காலத்திலான கொண்டாட்ட பின்புலத்தைக் கொண்ட இக்கோவில் திருவிழாவில் 2009 ஆம் ஆண்டு உயிர்ப்பலியைப் பொறுத்தமட்டில் குறிப்பிடத்தக்க
ஆண்டாக உள்ளது. அந்த ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 20 ஆயிரம் எருமைகளும் 2 லட்சம் ஆடுகளும் பலியிடப்பட்டதாக புள்ளிவிவரங்கள்
தெரிவிக்கின்றன.
---------------------
124 - 04.05.2018
ஜீவபந்து
டி.எஸ்.ஸ்ரீபால்
காஞ்சிபுரத்திற்கு
அருகில் உள்ள திருப்பறம்பூரில் 1900 ஆம்
ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் நாள் பிறந்தவர் டி.எஸ்.ஸ்ரீபால். ஜீவபந்து, பிராணி மித்ரா, சமாஜரத்னா,
சமயக் காவலர் என்னும் அடைமொழிகளால் சிறப்பிக்கப்படுபவர்.
முரண்பட்ட சிந்தனை கொண்டவர்களிடமும் நட்பு பாராட்டியவர். சமணத்தின் வளர்ச்சிக்காக
தனது வாழ்நாள் முழுமையையும் அர்ப்பணித்தவர். காங்கிரஸ் பேரியக்கத்திலும்
காந்தியிடமும் அன்பு கொண்டிருந்த ஸ்ரீபால், அனைத்து உயிர்களுக்கும் வாழும் உரிமை இருக்கிறது என்பதை நடைமுறைப்படுத்துவதில்
தீவிரமாகச் செயல்பட்டவர்.
ஓர்
இயக்கத்தின் பணியை தனிமனிதராகவும் செய்து காட்ட முடியும் என்பதற்கு உதாரணமாகத்
திகழ்ந்தவர். கோவில்களில் பலியிடல் என்னும் பெயரில் விலங்குகள் மீது
நிகழ்த்தப்பட்ட வன்முறையை நிறுத்தக்கோரி அறவழியில் போராடியவர். மதுரை மாவட்டம்
திருமங்கலம் பத்தரகாளியம்மன், விருதுநகர்
மாரியம்மன், திருநெல்வேலி மாவட்டம் குரங்கணி முத்துமாரியம்மன், திருவொற்றியூர் நாச்சியாரம்மன், கோயம்புத்தூர் கோணியம்மன் என நாற்பதுக்கும் மேற்பட்ட
கோவில்களில் உயிர்ப்பலி நிறுத்தப்படுவதற்கு ஸ்ரீபால் காரணமாக இருந்தார். அவரது
முயற்சியாலேயே 1949 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் நாள் தமிழ்நாட்டுச் சட்டசபையில் உயிர்ப்பலி தடைச்சட்டம்
நிறைவேற்றப்பட்டது.
---------------------
125 - 05.05.2018
அட்மிஷனுக்கான
அவஸ்தை
மேற்கு
வங்காளத்தின் பிரபலமான எழுத்தாளர் சுசீத்ரா பட்டாச்சார்யா. அவர் எழுதியது ராம்தானு
என்னும் சிறுகதை. இது பிரபல இயக்குநர்களான நந்திதாராய், டுபோ பிரசாத் முகர்ஜி ஆகியோரின் கூட்டு இயக்கத்தில்
திரைப்படமாகவும் வந்தது.
குழந்தையை
எல்.கே.ஜியில் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் படும் அவஸ்த்தையை இப்படம் நகைச்சுவையோடு
காட்சிப்படுத்தியிருக்கிறது. படத்தில் வரும் சிறுவன் தனக்கு எல்.கே.ஜி சீட்
வாங்குவதற்கான நேர்முகத் தேர்வில் தோற்றுவிடுகிறான். அதற்காக அந்த மூன்று வயது
சிறுவன் மீது அவனது தாய் மிகுந்த கோபங்கொள்கிறாள். மேலும் அச்சிறுவன் வேறொரு
பள்ளியின் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில்
வீட்டிலேயே கோச்சிங் கிளாஸிற்கு ஏற்பாடு செய்கிறாள். சிறுவனின் விளையாடும் நேரம்
பறிபோகிறது. பயிற்சிக்குப் பிறகு பெற்றோரின் கல்விச் சான்றிதழ், சம்பளச் சான்றிதழ், வருமான வரி செலுத்திய ரசீது முதலியவற்றை எடுத்துக்கொண்டு மற்றொரு பள்ளியின்
நேர்முகத் தேர்வுக்குச் செல்கின்றனர். அச்சிறுவனின் தந்தை பட்டதாரி இல்லை என்பதால்
பட்டதாரி ஒருவரை வாடகைத் தந்தையாக ஏற்பாடு செய்துகொள்கின்றனர். அதை குடும்ப
புகைப்படம் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் அந்த முயற்சியைக் கைவிடுகின்றனர்.
அந்தப்பள்ளியிலும் அட்மிஷனும் கிடைக்கவில்லை. கடைசியில் சிறுவனின் தாய் தனது
முயற்சியில் இருக்கும் அபத்தங்களை நினைத்து திருந்துவதாக படம் முடிவடையும்.
---------------------
126 - 06.05.2018
மடையர்கள்
உலகம்
விடுதலை
போராட்ட வீரரும் சமூகச் சீர்த்திருத்தவாதியுமான பாபு ஜெகசீவன் ராமை தெரியாதவர்கள்
இருக்க முடியாது. பீகாரில் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ‘சந்த்வா’ என்னும் கிராமத்தில் ‘சாமர்’ என்னும் பட்டியல் இனத்தில் பிறந்தவர்.
நிறையப் படித்தவர். தேர்ந்த அறிவாளி. தொடர்ச்சியாக முப்பதாண்டுகள் இந்திய அரசில்
கேபினெட் அமைச்சராக பணியாற்றியவர். ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில்
தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். தொலைத்தொடர்புத்துறை, செய்தி மற்றும் போக்குவரத்துத்துறை, ரயில்வே துறை, உணவு மற்றும் வேளாண்மைத்துறை ஆகியவற்றில் அமைச்சராக இருந்து வரலாற்று
சிறப்புமிக்க பணிகளை ஆற்றியவர். இந்திராகாந்தி தலைமையிலான அமைச்சரவையில்
பாதுகாப்புத்துறை அமைச்சராக முப்படைகளுக்கும் பொறுப்பானவராக இருந்தவர். அரசின்
முக்கியப் பொறுப்புகள் பலவற்றை அலங்கரித்தவர். துணை பிரதமராகவும் பொறுப்பு
வகித்தவர். ஒருமுறை அவர் சம்பூரானந்தா சிலையைத் திறந்து வைத்துவிட்டுச் சென்ற போது
தீட்டுப்பட்டு விட்டதென கங்கை நீரால் சிலையைக் கழுவினர். அந்நிகழ்ச்சி அவரை
மிகவும் புண்பட வைத்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, படித்து எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் அவர்களைத்
தீட்டாகக் கருதும் மடையர்கள் உலகத்தில் மடையர்களை மன்னிப்பதைத் தவிர வேறு என்னதான்
செய்ய முடியும்?
---------------------
127 - 07.05.2018
ஆயிகுளம்
புதுச்சேரியில்
கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாசிக்குலப் பெண் ‘ஆயி’ என்பவள். ஒரு முறை கிருஷ்ண
தேவராயரும் அவரது அமைச்சருமான அப்பாஜியும் புதுச்சேரிக்கு வந்த போது இரவு
நேரமானதாலும் தூரத்தில் நின்றதாலும் ஆயி வீட்டை கோவில் எனக் கருதி
வழிபட்டுவிட்டனர். பின்னர் மன்னர் தான் வணங்கியது ஒரு தாசியின் வீடு எனத்
தெரிந்ததும் கோபம் கொண்டார். உடனே தனது படையை அழைத்து தாசியின் வீட்டை அழித்து
அவ்விடத்தில் ஒரு குளத்தையும் குளத்திற்குள் ஒரு கிணறையும் வெட்ட உத்தரவிட்டார்.
அப்படியே செய்யப்பட்டது. நடந்தவற்றின் உண்மையை அறிந்திராத ஆயி, மன்னர் அங்கு நின்று கொண்டிருப்பதைப் பார்த்து பதறியபடி ஒடி வந்தாள்.
மன்னரிடம் வேண்டினாள். மன்னர் மன்னிக்கவில்லை. பின்னர் ஆயி மன்னரிடம் தாங்கள்
ஆணைப்படியே அவ்விடத்தில் அமையும் குளமும் கிணறும் என்னுடைய செலவிலேயே அமையட்டும்
என்றொரு கோரிக்கையை வைத்தாள். மன்னரும் ஏற்றுக் கொண்டார். இன்றைக்கு அந்தக் குளம்
அவளது பெயராலே ‘ஆயிகுளம்’ என
அழைக்கப்படுகிறது. இன்றைக்கும் அதுதான் புதுச்சேரியின் நீர் ஆதாரமாக விளங்குகிறது.
அவளது செயலைப் பெருமைப்படுத்த நினைத்த பிரெஞ்ச் அரசாங்கம் அவளுக்கு நினைவுச்
சின்னம் அமைந்தது. அந்த நினைவுச் சின்னம் இன்று ‘ஜலமாளிகை’ என்று அழைக்கப்படுகிறது.
---------------------
128 - 08.05.2018
தத்துவமும்
விதியும்
தத்துவத்தின்
தன்மை விதியிலும் விதியின் தன்மை தத்துவத்திலும் இருப்பதாக சிலர் கருதுகின்றனர்.
ஆனால் அடிப்படையில் இரண்டும் வேறுவேறு. அவ்வேறுபாட்டை பலர் அவர்களது வழியில்
விளக்கிச் சென்றிருக்கின்றனர். டாக்டர் அம்பேத்கர் தம்முடைய ‘இந்தியாவில் சாதிகள்’ என்னும் நூலில்
அற்புதமான விளக்கத்தை தந்திருக்கிறார்.
விதிகள்
யதார்த்தமான நடைமுறை பற்றியவை. காரியங்களைக் குறிப்பிட்ட முறைப்படி செய்வதற்கு
வழக்கமான வழிகள் அவை. விதிகள், ஒருவர் ஒரு
காரியத்தைச் செய்யும் போது என்ன வழியில் செயல்பட வேண்டும் என்று கூறுகின்றன.
விதிகள் சமையல் குறிப்புகளைப் போல. என்ன செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும்
என்று கூறுகின்றன. தத்துவம் என்பது ஒருவன் தன்னுடைய ஆசைகளும் நோக்கங்களும் எப்படி
அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் கவனிக்க வேண்டிய அளவை ஆகும். அது, ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது என்னென்ன
அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டி சிந்தனைக்கு
வழிகாட்டுகிறது. தத்துவம் தவறாக இருக்கலாம். ஆனால் அதன் அடிப்படையில் செய்யப்படும்
செயல் உணர்வுடனும் பொறுப்புடனும் செய்யப்படுகிறது. விதி சரியானதாக இருக்கலாம்.
ஆனால் அதைப் பின்பற்றும் செயல் யந்திரத்தனமானது என்று வேறுபடுத்துகிறார்
அம்பேத்கர்.
---------------------
129 - 09.05.2018
தியாகம்
எனப்படுவது…
உலகம்
முழுவதும் தியாகிகள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களால் மதிக்கப்படுகிறார்கள்.
இந்தியா போன்ற நாடுகளில் தியாகிகள் வணங்கப்படவும் செய்கிறார்கள். காரணம்
தியாகிகளுக்கான சமுதாய மரியாதை உயர்வானது. அவர்களால் இந்த உலகம் ஏதோ ஒருவிதத்தில்
பயனடைந்திருப்பதன் விளைவால் அவர்கள் வணங்கப்படுகிறார்கள். நினைக்கப்படுகிறார்கள்.
ஆனால் ஒரு தியாகி என்பவர் எல்லோருக்கும் தியாகியாகவே இருப்பார் எனச் சொல்லிவிட
முடியாது. அப்படி இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆக, யார் தியாகி என்பதை அவரது செயலை விட அவரால் பயன்பெற்ற
மக்களே தீர்மானிக்கிறார்கள். தியாகி ஆவதற்கு அவருக்குக் கீழே பெருங்கூட்டம் இருக்க
வேண்டும் என்பதும் இல்லை. தியாகம் என்பது தனி நபருக்கானதிலிருந்தே தொடங்கி
விடுகிறது. பல நேரங்களில் விட்டுக்கொடுப்பதே தியாகத்திற்கான விளைநிலமாக மாறும். தியாகம்
என்பது தன்னையே காணிக்கையாக்கும் செயல். கவிஞர் சேயோன் யாழ்வேந்தன் தன்னுடைய கவிதை
ஒன்றில் தியாகம் குறித்து இப்படிச் சொல்கிறார். ஒரு நண்பனுக்குச் செய்யும் துரோகம், ஒரு மனைவிக்குச் செய்யும் துரோகம், ஒரு முதலாளிக்குச் செய்யும் துரோகம், ஒரு நாட்டுக்குச் செய்யும் துரோகம் பாவமென்று
சொல்லப்படுகிறது. நீ உனக்குச் செய்யும் துரோகம் தியாகம் எனப்படுகிறது.
---------------------
130 - 10.05.2018
ஆற்று மீன்கள்
நீர்நிலைகள்
பொய்த்துப் போனதன் விளைவாக இன்று ஆற்று மீன்கள், குளத்து மீன்கள்,
கிணற்று மீன்களின் வகைகளையும் இழந்துவிட்டிருக்கிறோம்.
அதிவேகத்தில் வாழ்க்கை மாறிக்கொண்டிருக்கும் சூழலில் நம்மால் இழக்கப்பட்டவைகள்
திரும்பவும் கிடைக்கும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் நமக்கு இல்லை. நாம்
இழந்தவைகள் குறித்து பழைய இலக்கியக் குறிப்புகள் நமக்கு நினைவூட்டும் போது கொஞ்சம்
மனம் துணுக்குறத் தான் செய்கிறது. அந்தவகையில்
வேளாண்மை குறித்து அற்புதமான ஓவியம் போன்ற காட்சி விவரணைகளுடன் கூடிய
நயமிக்க இலக்கியம் முக்கூடற் பள்ளு. இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் ஆற்று
மீன்களின் வகைகள் அரியதொரு பட்டியலாக அமைந்திருக்கிறது. துதிக்கை, மூக்கன், பண்ணைச்சாலை, எண்ணைமீன், பசலி, திருக்கை, கசலி, கெழுத்தி, பண்ணாங்கு, பழம்பாசி, மகரமீன், சள்ளை, மத்தி, உல்லம், பொத்தி, மடந்தை, கடந்தை, செம்பொன் நொறுக்கி, பஞ்சாலைக் கெண்டை,
கருங்கண்ணி, பரவை,
குரவை, வாளை, கோளை, தேளி, மயிந்தி, அயிரை, கெண்டை, கெளிறு, வரால் முதலிய மீன் வகைகள் முக்கூடற்பள்ளுவால்
அறியப்படுகின்றன.
---------------------
131 - 11.05.2018
ஃபேன்றி
மராத்திய
இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே எழுதி இயக்கிய படம் ஃபேன்றி. தமிழில் பன்றி. இந்திய
சாதியச் சமூகத்தின் உண்மையான முகத்தைக் காட்டிய படம். படத்தில் வரும் ஜப்பையா
என்கிற சிறுவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன். வீட்டில் வறுமை. ஜப்பையா
படிப்பதை குடும்பம் விரும்பவில்லை. அதையும் தாண்டி அவன் பள்ளி செல்கிறான். வழக்கம்
போல அவனுக்கும் தனது வகுப்பில் படிக்கும் ஷாலு என்கிற வேற்றின பெண் மீது காதல்
வருகிறது. தனது செயல்களின் வழி ஷாலுவின் கவனத்தை ஈர்க்க முற்படுகிறான்.
ஒரு
கட்டத்தில் ஊர்த்திருவிழாவில் தொந்தரவு தரும் பன்றிகளைப் பிடித்துக்
கட்டுப்படுத்துமாறு ஊர்த்தலைவர் ஜப்பையாவின் தந்தைக்கு உத்தரவிடுகிறார்.
ஜப்பையாவும் அவனது குடும்பமும் பன்றியைப் பிடிப்பதில் ஈடுபடுகிறது. குடும்பத்தினர்
இயல்பாக பன்றியைப் பிடிக்கின்றனர். ஜப்பையாவால் அப்படி இருக்க முடியவில்லை.
ஜப்பையாவின் பள்ளிச் சிறுவர்களும் ஊராரும் ஜப்பையாவை கேலி செய்கின்றனர். சாதியின்
பெயரைச் சொல்லி அவமதிக்கிறார்கள். கேலி, அவமதிப்பு,
காதலி பார்த்துவிடுவாளோ என்கிற தவிப்பு ஆகியவற்றால் கோபமடையும்
ஜப்பையா பெற்றோரின் தடைகளையும் மீது தன்னைக் கேலி செய்த ஆதிக்க சாதியினரை நோக்கி
எறியும் கல் கேமராவை நோக்கி வந்து பார்வையாளர்கள் மீது படுவதுபோன்ற அதிர்ச்சியைத்
தருவதோடு படம் முடிகிறது.
---------------------
132 - 12.05.2018
கௌடில்யர்
விதி
வருணாசிரமத்தை
நியாயப்படுத்தி விதிகளை உருவாக்கித் தந்தவர் கௌடில்யார். அரசியல் சார்ந்தும் அரசு சார்ந்தும் அவர் உருவாக்கிய
விதிகள் உழைக்கும் வர்க்கத்தினருக்கு சாதகமானதல்ல. அவரது விதிகளை நுணுகி நோக்கும்
போது ஒவ்வொருவருக்கும் அவர் வெவ்வேறு விதமான அளவுகோலைப் பயன்படுத்தி இருப்பதைப்
பார்க்க முடியும். அதை கௌடில்யரே ஒப்புக்கொண்டு அதற்கு அவர் நியாயமும் கற்பிப்பர்.
யாசகர்களுக்கும்
கலைஞர்களுக்கும் விதி வகுத்த கௌடில்யர், மழைக்காலங்களில் ஊர்விட்டு ஊர் செல்லக் கூடாது என்கிறார். அப்படிச் செய்யாமல்
விதிகளை அவர்கள் மீறுவார்களேயானால் அவர்களுக்குக் கசையடி கொடுப்பட வேண்டும் என
வலியுறுத்துகிறார். யாசகர்களுக்கும் கலைஞர்களுக்கும் கௌடில்யர் இப்படியொரு
கட்டுப்பாடு விதிக்க அவர் கூறும் காரணம், யாசகர்களும் கலைஞர்களும் மழைக்காலங்களில் ஊர்விட்டு ஊர் அலைந்துகொண்டு
இருந்தால் பயிர்த்தொழில் பாதிக்கப்படுமாம். அதனால் அவர்களுக்கு அப்படியொரு
கட்டுப்பாட்டை விதித்திருக்கிறார் கௌடில்யர். யாசகர்களாலும் கலைஞர்களாலும் தங்களது
பணியை மறக்கின்ற அளவுக்கு பயிர்த்தொழில் செய்கிறவர்கள் பலவீனமானவர்களா என்ன?
---------------------
133 - 13.05.2018
கொள்கையில்
உறுதி
உலகில்
முதன்மையான தத்துவவியலாளராகக் கருதப்படும் கன்பூசியஸ் தமது இருபத்திரண்டாம் வயதில்
‘கலைக்கழகம்’ என்றொரு
கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். படிப்பதில் விரும்பமுள்ள பலதரப்பட்ட மாணவர்களைச்
சேர்த்துக்கொண்டார். மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக்கொண்டே இருந்தது.
பெரும்பாலும் பெரும்பணக்காரர்களின் பிள்ளைகள் கன்பூசியஸிடம் படிப்பதில் தனி ஆர்வம்
கொண்டிருந்தனர். ஏழைப் பிள்ளைகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். கல்விக்கான கட்டணம்
வேறுவேறாக இருந்தது. பணக்காரர்களின் பிள்ளைகளுக்கு அதிகக் கட்டணம் வசூலித்தும்
ஏழைப்பிள்ளைகளுக்கு இலவசமாகவும் கற்பித்தார்.
கட்டணத்தை
விட பாடம் கேட்பதில் மாணவர்களுக்கு உள்ள ஆர்வத்தைத்தான் அவர் அளவுகோலாக
வைத்திருந்தார். அவரின் பாடங்களைச் சட்டென்று புரிந்து கொள்ளும் மாணவர்களை அவர்
மிகவும் நேசித்தார். அவர்கள் மீது அதிகக் கவனமும் செலுத்தினார். ஒரு விஷயத்தின் ஒரு
மூலையை நான் சொல்லிக் கொடுத்தால் மற்ற மூன்று மூலைகளையும் தாமாகவே முயன்று
புரிந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு நான் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை என்னும்
கருத்தில் உறுதியாக இருந்தார். மேன்மக்கள் மேன்மக்களே
---------------------
134 - 14.05.2018
தர்மமும் சரணடைதலும்
மேலை
நாடுகள் கீழை நாடுகளுக்கு விஞ்ஞானத்தை வழங்கியன. அதற்கு மாற்றாக கீழை நாடுகள் மேலை
நாடுகளுக்கு ஆன்மிகத்தை வழங்கியன என்பார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை. கீழை
நாடுகளுக்கான அறிவின் அடையாளமாகத் திகழ்பவர்களுள் ஒருவரான புத்தர் தனது
சீடர்களுக்கு போதிக்கும் போதெல்லாம் மூடநம்பிக்கைகள் குறித்து நிறையப்
பேசியிருக்கிறார். மூடநம்பிக்கைகளைக் கடந்து வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். ஒரு
முறை தனது சீடர்களுக்கு அவர் போதிக்கும் போது ‘மூடம்’ குறித்து பேசலானார். மூடத்தை அறியா மூடம், அறிவு மூடம், உலக மூடம் என மூன்றாகப் பகுத்தார்.
அறியா
மூடம் என்பது ‘எனக்குத் தெரியாதது உலகில் எதுவுமில்லை’ என்று எண்ணுவது. அறிவு மூடம் என்பது ‘எனது
ஆராய்ச்சியின் முடிவே உண்மையானதும், இறுதியானதும்’ என்று நம்புவது. பெரும்பான்மை மக்கள்
ஒத்துக்கொள்ளும் அல்லது நம்பும் செய்தி உண்மையானதாகத் தான் இருக்க வேண்டும் என
நம்புவது ‘உலக மூடம்’ என்கிறார்
புத்தர். இந்த மூன்று வகைகளில் எதனுள்ளும் அடங்காமல் இருப்பது தான் அறிவின் நிலை.
அதுதான் தருமம். அந்த அறிவு என்னும் தருமத்தின் நிலைதான் சரணடைவதற்கு உரியது
என்பது தான் புத்த சரணத்தின் இரண்டாவது சரணமாகிய ‘தர்மம் சரணம் கச்சாமி’
---------------------
135 - 15.05.2018
உலகக் குடும்ப
தினம்
இரண்டாம்
உலகப் போருக்குப் பிறகும் உலகமயமாக்கல் விரிவுபடுத்தப்பட்டதற்குப் பிறகும் சமுதாய
மற்றும் குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் உவப்பானதாக இல்லை என்றொரு கருந்து
முன்வைக்கப்பட்டது. அதன் விளைவாக சமுதாய பொருளாதார அமைப்பை
வளர்த்தெடுப்பதற்காகவும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காவும் அவர்களுக்கு
இடையிலான புரிதலில் சமநிலையை உருவாக்குவதற்காவும் மே மாதம் 15 ஆம் நாளை 1994 ஆம் ஆண்டு ஐ.நா.சபை உலகக் குடும்ப தினமாக அறிவித்தது. அந்த ஆண்டு முதல் மே 15 ஆம் நாள் உலகக் குடும்ப தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு
வருகிறது.
உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேசிய அளவில் நல்லுறவை வளர்க்கும்
குடும்ப நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்தல், வழிபாடு,
கருத்தரங்கங்கள், கண்காட்சிகள்,
விழிப்புணர்வுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல், இளைஞர்களுக்கும்
குழந்தைகளுக்கும் கல்வி தொடர்பான நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல், குடும்ப அமைப்புகளைப் பலப்படுத்துவதற்காக மாறிவரும்
சூழலுக்கு ஏற்ப கொள்கைகளை உருவாக்குதல் முதலிய நோக்கங்களுக்காக உலக குடும்ப தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகள் குடும்ப தினம் கொண்டாடப்பட வேண்டும்
என்பதற்காக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொண்டாட்டத்திற்குத் தேவையான
பொருள்களை வழங்கி உதவிகளும் செய்துவருகின்றன.
---------------------
136 - 16.05.2018
நல்ல நகர்வு
எழுத்தாளரும்
செயல்பாட்டாளருமான ஓவியா சென்னையிலிருந்து புதுக்குரல் என்றொரு அமைப்பை ஏற்படுத்தி
கூட்டங்களை ஒழுங்கு செய்து வருகிறார். இது ஒரு குழு முயற்சி. குறிப்பிட்ட
இடைவெளிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மதவாத
அரசியலுக்கு எதிரான,
சாதி மறுப்பு சிந்தனையுள்ள யார் வேண்டுமானாலும் இதில் உறுப்பினர்
ஆகிக்கொள்ளலாம். இவ்வமைப்பு ஒழுங்கு செய்யும் கூட்டங்களில் குடும்பமாகவும் கலந்து
கொள்ளலாம். பலர் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தின்
ஒருபகுதியாக கருத்தரங்கமும் கலந்துரையாடலும் இருக்கிறது. முற்போக்காளர்களும்
களப்போராளிகளும் பெண்ணியச் சிந்தனையாளர்களும் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து
கொண்டு உரையாற்றுகிறார்கள். உரையின் முடிவில் கலந்துரையாடுகிறார்கள். குறிப்பாக
கலந்துரையாடலில் குழந்தைகள் பங்கெடுத்து அறிவு பூர்வமான ஆரோக்கியமான கேள்விகளை
எழுப்புகிறார்கள். கலந்துரையாடல் அரசியல், பொருளாதாரம்,
பண்பாடு, கல்வி என பல
தளங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. ஒத்த சிந்தனையுள்ள அனைவரும் சாதி, மத பேதமற்று குடும்பமாக அமர்ந்து உணவருந்தி கூட்டத்தை
நிறைவு செய்கிறார்கள். மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சமுதாய அமைப்பில்
இது ஒரு நல்ல நகர்வு.
---------------------
137 - 17.05.2018
இடிஅமீனும்
நான்ஸிரியும்
உகண்டாவின்
சர்வதிகாரியாகச் சொல்லப்படும் இடிஅமீன் சிறுவயது முதல் ராணுவ வீரர்களுடன் வளரும்
வாய்ப்பைப் பெற்றவர். அவருக்கு ராணுவத்தின் மீது அளப்பரிய பற்றும் இருந்தது.
தானும் ராணுவ வீரராக ஆசைப்பட்டார். அதன்படியே இடிஅமீன் தனது 21ஆம் வயதில் ராணுவத்தில் சமையலறை உதவியாளராகச் சேர்ந்தார்.
குத்துச்சண்டை பயிற்சியும் பெற்று ஒன்பதாண்டுகள் தொடர்ச்சியாக தேசிய குத்துச்சண்டை
சாம்பியனாகத் திகழ்ந்தார். பின்னர் உகாண்டாவில் ஆட்சியையும் பிடித்தார்.
இடிஅமீன்
ஆட்சியில் இருந்த சமயத்தில் தனது நாட்டில் நான்ஸிரி என்னும் மல்யுத்த வீராங்கனை ஒருத்தி இருப்பதைக்
கேள்விப்பட்டார். அவள் யாராலும் வெல்ல முடியாத திறமையான பெண்மணி. அவளோடு
குத்துச்சண்டையிட இடிஅமீன் விரும்பினார். நான்ஸிரியும் ஆர்வத்துடன் கலந்து கொண்டாள்.
இடிஅமீன் தோல்வியை விரும்ப மாட்டார் என்றும் நாட்டின் சர்வதிகாரியைத்
தோற்கடித்தால் தனக்கு என்ன நடக்கும் என்பதும் நான்ஸிரிக்குத் தெரியாமலில்லை.
இருந்தும் போட்டில் கலந்து கொண்டாள். போட்டியில் தான் தோற்றுவிட்டதாக நடிக்கும்
முன் இடிஅமீனை பலமாக அடித்து நொறுக்கினாள். இரண்டு முறை மண்ணைக் கவ்விய இடிஅமீன்
நிலைகுலைந்து போனார். போட்டியில் நான்ஸிரி தோற்றுப்போனதாய் நடித்தாள். சர்வதிகாரி
தரப்பிலிருந்து இடிஅமீன் வென்றார் என்று அறிவிக்கப்பட்டது. சில நாட்களுக்குப்
பிறகு நான்ஸிரியின் உடல் கடலில் மிதந்துகொண்டிருந்தது.
---------------------
138 - 18.05.2018
அயலவர்
படையெடுப்பு
இந்தியா
பழங்காலம் தொட்டே உள்கட்டுமானத்தில் சிறந்து விளங்கியதற்கான தடையங்கள் நிறையக்
கிடைத்திருந்தாலும் சில நேரங்களில் அயலவர்களின் ஒப்பற்ற பங்களிப்பு
இருந்திருப்பதையும் நாம் மறுக்க முடியாது. முகலாயப் படையெடுப்பையும் அதற்கு
முந்தைய அலெக்ஸாண்டரின் படையெடுப்பையும் நேர்மறையாகப் பார்க்கும் போது நல்லவை
சிலவும் இந்தியாவிற்கு நடந்திருக்கின்றன.
வரலாற்றுப்
பேராசிரியர் டி.என்.ஜா ‘பண்டையக் கால இந்தியா ஒரு வரலாற்றுச்
சித்திரம்’ என்னும் தனது நூலில் நகரங்களின் வளர்ச்சிக்கு
உதவிய முக்கிய காரணிகளில் ஒன்று அலெக்ஸாண்டரின் படை கிரேக்கத்திலிருந்து இந்தியாவை
நோக்கிப் படையெடுத்ததாகும் என்கிறார். அந்தப் படையெடுப்பால் இந்திய நகரங்கள்
வளர்ச்சியடைந்தது மட்டுமல்லாமல் வடமேற்கு இந்தியாவிற்கும் மேற்காசியாவிற்கும்
இடையில் வணிகத்திற்கான அடிப்படைச் சூழலையும் உருவாக்கிக் கொடுத்தது. அது
வடஇந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்குமான வணிக்கச் சூழலிலும் தாக்கத்தைச்
செலுத்தியது. ஆக அலெக்ஸாண்டரின் படையெடுப்பு புராதன இந்தியாவின் பொருளாதாரத்தைத்
தீர்மானித்த நிகழ்வுகளுள் ஒன்றாக இருந்திருப்பதையும் நாம் கணக்கில் கொள்ளும்போது
தான் இந்தியவை நோக்கிய அயலவர்களின் படையெடுப்பு இந்தியாவை சீர்குலத்தது என்கிற
பார்வையில் இருந்து நம்மை நாம் விலக்கிக்கொள்ள முடியும்
---------------------
139 - 19.05.2018
சிலுவையின்
வகைகள்
புராதன
கிறித்துவத்தில் ஏற்பட்ட பிளவுகள் கிறித்தவத்தில் நேரான மற்றும் எதிர்மறையான
கருத்தியல் உருவாக வழி சமைத்துக்கொடுத்தன. அதன் விளைவால் கிறித்துவத்தில் எண்ணற்ற
பிரிவுகள் உருவாயின. குறிப்பாக இத்தாலிய பிரபுக்களின் அதிகாரத்தைச் சிதைப்பதற்காக
கிறித்தவத்திற்குள் உருவான பிளவுகள் இத்தாலியப் பிரப்புகளைப் போல பல அதிகார
மையங்களை உருவாக்கின.
சிலுவை
கிறித்தவத்தின் ஒற்றை அடையாளமாய் இருக்க அந்த ஒற்றை அடையாளத்திற்குள் நின்றுகொண்டு
தனி அடையாளங்களை உருவாக்கும் முயற்சிகள் கிறித்துவின் மரணத்திற்குப் பிறகான ஐம்பது
ஆண்டுகளிலேயே தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. அதன் விளைவால் சிலுவையில் வகைகள்
தோன்றின. அந்தவகையில் இன்றைக்கு பத்துக்கும் மேற்பட்ட வகையிலான சிலுவைகள்
புழக்கத்தில் உள்ளன. நான்கு பக்கமும் சமஅளவுள்ள ‘க் வாட் ரேட்டா’ என்னும் சிலுவை
கிரேக்கர்களுக்கானது. மற்ற மூன்று பகுதிகளை விட கீழ்ப்பகுதி மட்டும் நீளமாக
இருக்கும் ‘இம்மிஸா சிலுவை’ லத்தீன்
சிலுவையாகும். டி என்கிற ஆங்கில எழுத்தை ஒத்தது ‘கம்மிஸா
சிலுவை’. எக்ஸ் என்னும் ஆங்கில எழுத்தை ஒத்தது ‘டெகுஸேட்டா சிலுவை’. இவை தவிர ஜெருசலம், ரஷ்யன், பாபல், ஹெல்டிக், மால்டீஸ், பாட்ரியாக்கில் என்னும் சிலுவை வடிவங்களும் வழக்கத்திலும்
வழிபாட்டிலும் உள்ளன.
---------------------
140 - 20.05.2018
குடிமகனாதல்
குறுகிய
காலத்தில் அதீத வளர்ச்சி பெற்ற நாடுகளுள் ஒன்று ஜப்பான். மிகச் சிறிய நாடு
என்றாலும் அணுஆயுதத்திலும் பொருளாதாரத்திலும் தன்னிறைவைக் கொண்டுள்ள நாடு. அங்கு
குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்குள் பெயர் வைத்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
முப்பது நாட்களுக்குள் ஸிண்டோ என்னும் கோயிலில் அங்குள்ள குருவைச் சந்தித்து
பெயரைப் பதிவு செய்து கொள்கின்றனர். பதிவு செய்த பின்னரே அக்குழந்தை ஜப்பானின்
குடியுரிமையை சட்டப்படி பெறுகிறது. குழந்தை பிறந்த உடன் குழந்தையைத் தூக்குவதற்கு
ஆண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. குழந்தையின் இரத்த வழி உறவைச் சார்ந்த
பெண்களே தூக்குகிறார்கள்.
திருமணமும்
பாரம்பரிய முறைப்படி கோயில் தான் நடக்கிறது. மணமக்கள் கோயில் சென்று பாரம்பரிய
குவளையில் வைக்கப்பட்டிருக்கும் மதுவை மூன்று முறை உறிஞ்சிக் குடித்ததும் திருமணம்
முடிந்துவிடுகிறது. கிறித்துவ நாடுகளில் மோதிரம் மாற்றிக் கொள்வதைப் போன்றது
ஜப்பானில் மணமக்கள் பாரம்பரியக் குவளையில் மதுக்குடிப்பது. இந்தியாவைப் போலவே
நிச்சயிக்கபட்ட திருமணத்திற்கு ஜப்பானில் அதிக மதிப்பிருக்கிறது. ஆண்களை உயர்வாக
மதிக்கும் ஜப்பானின் சமூக அமைப்பு ஆண்களுக்கே அதிக உரிமைகளை வழங்கியுள்ளது. வயது
முதிர்ந்த பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஆண்களுக்கே
கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
---------------------
141 - 21.05.2018
ஞானத்தின்
சேரிடம்
ஒரு
துறவி தனது கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார். தீடிரென
அவரை அவரது தலைமைக் குரு அழைத்து எனக்கு வயதாகிவிட்டது. நீதான் இருப்பதில்
மூத்தவன். எனக்கு அடுத்து தலைமைப் பொறுப்பை நீதான் ஏற்வேண்டும் எனக் கூறி ஒரு
புத்தகத்தைக் கொடுத்தார். எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் நீங்கள் கற்பித்து
விட்டீர்களே பிறகு எதற்கு இந்த நூல் எனக் கூறி துறவி வாங்க மறுத்தார். அதற்குத்
தலைமைக் குரு அப்படிச் சொல்லாதே இது ஏழு தலைமுறைகளால் இந்த மடத்தல்
பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று அதன் பெருமையைச் சொன்னார். துறவி அப்போதும் அதை
ஏற்கவில்லை.
தலைமைக்
குருவும் விடுவதாயில்லை. பசி வந்தால் என்ன செய்வாய் என்றார். பிச்சை எடுத்து
உண்பேன் என்றார் துறவி. அதைப் போலவே இந்த நூலையும் பிச்சையாக வாங்கிக்கொள் என்று
கைகளில் தினித்தார். துறவி அப்படியே பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த
நெருப்புக்குள் போட்டுவிட்டார். திடுக்கிட்ட தலைமைக் குரு எதற்கு நெருப்புக்குள்
போட்டுவிட்டாய் என பெருங்குரலில் கத்தினார். அதற்கு துறவி சாந்தமான குரலில்
போடப்பட்ட பிச்சை என்ன ஆனது என்று பிச்சையிட்ட யாரும் கவனிப்பதில்லை குருவே
என்றார். மேலும் அவர் ‘ஞானம் என்பதே நெருப்புத்தானே. நெருப்பு நெருப்புடன் சேர்ந்துவிட்டது’ என்றார்.
---------------------
142 - 22.05.2018
அறிவாளிகளின்
செயல்
பிரிட்டிஸ்
சாம்ராஜ்யத்தில் ஏறக்குறைய ஆறுநூறாண்டு கால வரலாற்றில் நிகழ்ந்திராத சம்பவம் ஒன்று
சமீபத்தில் மே 19 ஆம் தேதி நடந்தேறியது. அது பிரிட்டீஸ் இளவரசர் ஹாரியின்
திருமணம். வழக்கத்திற்கு அதிகமான கொண்டாட்டத்தோடு ஹாரி மெகன் மார்க்கலை
மணந்துகொண்டார். ஐந்நூறாண்டு பழமையான புனித ஜார்ஜ் தேவாலயத்தில் பேராயர் ஜஸ்டின்
வெல்பி திருமணத்தை நடத்தி வைத்தார்.
நிறவெறி
உச்சத்தில் இருந்ததும் கறுப்பர்கள் விலங்கினும் கீழாக நடத்தப்பட்டதுமான தேசத்தின்
ராஜகுடும்பம் மெகன் மார்க்லை திருமணம் செய்ததன் வழி இன்று இந்தளவுக்கு
மாறியிருப்பது அவர்களை அறிவாளிகளாக முறையான பரிணாமம் பெற்றவர்களாகக்
காட்டியிருக்கிறது. அவர்கள் கறுப்பர்களை மனிதர்களாக மதிக்கத் தொடங்கி வெகுகாலம்
ஆகிவிட்டதன் பின் சமீபத்தில் அதை உறுதிப்படுத்தும் செயலைச் செய்திருக்கிறார்கள்.
மிகவும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க விஷயம் ஹாரி - மெகன் மார்க்கலின் திருமணத்தை
இங்கிலாந்தே கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. வெள்ளை நிறம் மட்டுமே செங்கோல்
ஏந்தியிருந்த பிரிட்டீஸ் அரண்மனைக்குள் ஹாரியைத் திருமணம் செய்ததால் முதன்முதலாக
கறுப்பின பெண் மெகன் மார்க்கல் இளவரசி ஆகியிருக்கிறார். கறுப்பு இனி வெள்ளைகளை
ஆளும்.
---------------------
143 - 23.05.2018
விஷ நூல்
சுமார்
நூறாண்டுகள் பழமையான ஓலைச்சுவடி ஒன்றை அம்பிகா என்பவரிடமிருந்து பெற்று ‘விஷநூல்’ என்ற
பொருண்மையில் பவழராணி என்பவர் 2010இல்
ஆய்வும் பதிப்பும் செய்திருக்கிறார். இந்நூல் அரியநூல் என்பதில் ஜயமில்லை. கொடிய
விஷமுள்ள பாம்பான விரியன் பாம்பையும் அதன் வகைகளையும் விரித்துரைக்கும் இந்நூல்
ஒவ்வொரு வகைப்பாம்பின் குணங்களையும் அவற்றிடம் இருக்கும் விஷயத்தின் அளவுகளையும்
குறிப்பிடுகிறது. கடிவாயை வைத்து விரியனில் எந்தவகையான விரியன் என கண்டுபிடிக்கும்
வழிமுறையைக் குறிப்பிடுகிறது. விரியன் பாம்பு கடிபட்டவருக்குத் தோன்றும்
அறிகுறிகள்,
அறிகுறிகளை வைத்துக்கொண்டு உடலில் ஏறியிருக்கும் விஷயத்தின்
அளவைக் கண்டறிவதற்கான வழிமுறைகள், கடிபட்டவருக்கு
உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி, அடுத்தடுத்துச்
செய்யவேண்டிய மருத்துவ முறை ஆகியவற்றைத் தெளிவாக விளக்கியிருக்கிறது.
திப்பிலி, வெந்தையம், சிறியாநங்கை, பெருங்காயம், மிளகு,
வசம்பு, இஞ்சி, குப்பைமேனி, அவரியிலை முதலியவற்றைத் தான் மருந்தாகக் கூறுகிறது. அவற்றைக் கொண்டு எப்படி
மருந்து தயாரிக்க வேண்டும் என்கிற வழிமுறையை மிக அருமையாக விவரிக்கிறது. அதன்படி
மருந்து தயாரித்து முறையான அளவில் கொடுத்தால் விஷமேறி மரணத்தின் விளிம்பைத்
தொட்டுவிட்டவரையும் காப்பாற்றிவிடலாம் என உறுதியாகக் கூறுகிறது இந்நூல்.
---------------------
144 - 24.05.2018
பச்சை குத்துதல்
பச்சை
குத்துதல் உலகம் முழுவதும் பரவலாக இருந்து வரும் பழக்கம். அது மக்களிடையே மிக
நீண்டகாலமாக இருந்து வரும் பழக்கங்களுள் ஒன்று. கி.மு. இரண்டாயிரத்து முன்பே
மம்மீஸ்களில் குத்தப்பட்ட பச்சைகளில் இருந்த அதன் பழமையை நாம் அறியமுடியும்.
தொடக்கத்தில் குழுவாக வாழ்ந்த மக்கள் தம்மை எந்தக் குழுவினர் என்று
அடையாளப்படுத்திக் கொள்வதற்காக பச்சை குத்திக்கொண்டனர். சமூகத்தில் தமக்குரிய
இடத்தை பிறருக்கு அறிவிக்கும் நோக்கத்தில் பச்சை குத்திக் கொண்டனர். ஒருவரை அடிமை
என்று அடையாளப்படுத்துவதற்கும் பச்சை குத்துதல் பயன்பட்டது. போர் வீரர்கள் தாம்
எந்தப் படையைச் சார்ந்தவர்கள் என்பதைக் குறிக்க பச்சை குத்திக் கொண்டனர். கடல்
கொள்ளையர்களில் பச்சைகுத்திக் கொள்வது இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிறது.
ஹிட்லரின் நாசிப் படைப்பிரிவினருக்கு அவர்களது படைப்பிரிவின் அடையாளத்தை
பச்சைகுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. ஐரோப்பாவில் மேலாடை இல்லாமல்
வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது உடல்களை அலங்காரப் படுத்திக் கொள்வதற்காக உடல்
முழுவதும் பச்சை குத்திக் கொண்டனர். அரேபியர்கள் பச்சை குத்திக் கொள்வது தம்மை
தீமையிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகிறார்கள். 1980களுக்குப் பிறகு மேற்கு உலகப் பெண்கள் நிரந்தரமாக இருக்கும்
பொருட்டு கண் மை தீட்டிக்கொள்வதைப் போல கண் இமைகளில் பச்சை குத்திக் கொண்டனர்.
---------------------
145 - 25.05.2018
தெய்வ
உருவங்கள்
தமிழில்
எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வறிஞரான மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வு
முடிவுகளை முன்வைப்பதில் மிகவும் துணிச்சலானவர். யாருக்காவும் ஆய்வின் முகத்தைப்
போலியாக்கிக்கொள்ளாதவர். தமிழில் கணிசமான அளவில் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்த
பௌத்த,
சமண இலக்கண இலக்கியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர்.
அவர் தம்முடைய ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்னும் நூலில் பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வைத்து
வழிபட்டபோது இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை.
அந்தந்தத் தெய்வங்களின் அடையாளங்களை மட்டும் வைத்து வணங்கினார்கள். உதாரணமாக முருகனை
வணங்கிய தமிழர் இப்போது வணங்கப்படுகிற முருகன் உருவத்தை வைத்து வணங்காமல்
முருகனுடைய படையாகிய வேலை மட்டும் வைத்து வணங்கினார்கள். இந்திரனுடைய உருவத்தை
வைத்து வழிபடாமல் அவனுடைய வச்சிராயுதத்தை வைத்து வணங்கினார்கள் அல்லது அவனது
வெள்ளை யானை,
கற்பகத் தரு இவற்றின் உருவங்களை வைத்து வணங்கினார்கள்.
இதனால் அறியப்படுவது என்னவென்றால் இப்போது கோயில்களில் வைத்து வணங்கப்படும் தெய்வ
உருவங்கள் பண்டைக் காலத்தில் சிற்ப உருவங்களாக அமைக்கப்படவில்லை. அவை
பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை என்கிறார்’ அவர்.
---------------------
146 - 26.05.2018
கொகா இலை
இயற்கைக்கும்
மனிதனுக்கும் இடைவெளி இருந்துவிட முடியாது. பல நேரங்களில் இயற்கை மனிதன் மீதும்
சில நேரம் மனிதன் இயற்கை மீதும் ஆதிக்கம் செலுத்தினாலும் இயற்கையை மனிதன்
வெற்றிகொள்ள முடிந்ததில்லை. இயற்கையிலும் குறிப்பாக தாவரங்களுக்கும் மனிதனுக்கும்
உள்ள நெருக்கம் உடலுக்கும் உயிருக்கும் உள்ள நெருக்கத்தை ஒத்தது. தமிழ்நாட்டில்
வாழை இலைக்கும் உணவுக்குமான பிணைப்பு பண்பாட்டோடு இணைந்தது. உடலுக்கு வாழையிலை ஆரோக்கியமானது என்றும்
சொல்லப்படுகிறது. மூலிகைகளை அடிப்படையாக வைத்தே தோன்றிய மருத்துவமுறையியல் கூட
தமிழ்நாட்டின் அடையாளமாகியிருக்கிறது.
அதுபோல
பெரு நாட்டில் மனித வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கும் ஒன்று கொகா இலை. இது
வெற்றிலையைப் போல பெரு நாட்டில் அவர்களது பண்பாட்டோடு பிணைப்புக் கொண்டதாக
இருக்கிறது. புனிதமானதாகக் கருதப்படுகிறது. அந்த இலையில் சிறிதளவு ஆல்கஹால்
இருப்பதால் அந்த இலைகளின் சாறு பெரு நாட்டு மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
பெரு நாட்டு மக்கள் வேலை இல்லாமல் இருந்தாலும் சும்மா இருப்பதில்லை. கொகா இலையை
மென்று துப்புவதையை வேலையாகக் கொண்டிருக்கிறார்கள். மென்று துப்பியதை வயலுக்கு
உரமாக்கி அதிகமாக மகசூலையும் பெறுகின்றனர்.
---------------------
147 - 27.05.2018
டிஜிட்டல்
மாடு
தமிழ்நாட்டில்
கோயில்களைக் கட்டி மக்களை சிந்திக்க விடாமல் அடிமைச் சமுதாயத்தை உருவாக்கியதில்
சோழர்களுக்கு அதிகமான பங்குண்டு. அவர்களில் ஒருவராகச் சொல்லப்படும் மனுநீதிச்
சோழன் தொடர்பான பசுமாட்டுக்கதை பரவலாக எல்லோரும் அறிந்ததே. கன்றை இழந்த பசுமாடு
அரண்மனைக்கு ஓடி வந்து மணியை அடித்து நீதி கேட்க மன்னன் தனது மகனை
தேர்ச்சக்கரத்தின் கீழ் வைத்துக்கொன்றான் என்ற கதையை குழந்தைகளுக்கு
திரும்பத்திரும்பச் சொல்லி பசுமாட்டு அரசியலுக்கு குழந்தைகளை அடிமையாக்கிக்
கொண்டேதான் இருக்கிறோம். அது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கதை பசுமாட்டை
அறிவாளியாகச் சித்திரித்து மன்னனை மதிகெட்டவனாகச் சித்திரித்திருக்கிறது. அது
மட்டுமின்றி பசுமாட்டின் வேண்டுகோளையும் கூட நிவர்த்தி செய்கிற மன்னனே ஆட்சியில்
இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பாகச் சுட்டுகிறது. இந்தக் கதை பசுமாடுகளின்
தேசத்தில் மன்னர்கள் மதிகெட்டவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்கள் தனது
பிள்ளைகளையும் தானே கொல்வார்கள் என்ற வேறொரு உண்மையையும் உணர்த்துகிறது.
இன்றைக்கு
டிஜிட்டல் மாடு வந்துவிட்டது. அது மணி அடிப்பதற்குப் பதில் துப்பாக்கியைத்
தூக்குகிறது. மன்னர்கள்
மதிகெட்டுப் போயிருக்கிறார்கள். மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
---------------------
148 - 28.05.2018
பிளாட்டோவின்
கற்பனைக் குடியரசு
ஆட்சியாளர்கள்
தமது மனைவி,
குழந்தைகள், உறவினர்கள் ஆகியோருக்காகச் செய்துவந்த முறைகேடுகளை நேரில் கண்ட பிளாட்டோ தனது
கற்பனையில் ஒரு குடியரசை உருவாக்கினார். அக்குடியரசில் பிளாட்டோவுக்கு முக்கியமான
நபராகப் பட்டது மக்களின் பாதுகாவலர்கள் அதாவது ஆட்சியாளர்கள். அவர்களுக்குச் சில
விதிகளை உருவாக்கினார். பாதுகாவலர்களுக்கு அடிப்படைத் தேவையான பொருள்களைத் தவிர
வேறு பொருள்களோ சொத்துக்களோ இருக்கக் கூடாது. சொந்தமாக வீடு கூட இருக்கக் கூடாது.
தங்கம்,
வெள்ளி முதலிய விலை உயர்ந்த பொருள்களையும் அவர்கள்
விரும்பக் கூடாது. பாதுகாவலர்கள் அனைவரும் குடும்பத்தின் கீழ் ஒருங்கிணையாமல் குழு
வாழ்க்கைதான் வாழ வேண்டும். ஒரே இடத்தில் தங்கியிருந்து ஒரே உணவினைத்தான் உண்ண
வேண்டும். ஒவ்வொருவரும் திருமணம் முடித்து மனைவியை தனித்தனியாக வைத்துக் கொள்ளக்
கூடாது. பொதுவில் தான் இருக்க வேண்டும். பிள்ளைகளும் தனிமனிதருக்கு உரியவர்களாக
இருக்கக் கூடாது. அப்படி வாழ்வதுதான் ஊழலைத் தடுக்கும் என நம்பினார். அதற்கேற்ப
விதிகளை உருவாக்கினார். இப்படி பிளாட்டோ கற்பனை செய்வதற்குக் காரணம் தனிச்
சொத்துரிமை ஆட்சியாளர்களை பேராசைக்காரர்களாகவும் அநியாயக்காரர்களாகவும் மாற்றி
விடுகிறதென்பதை அவர் உணர்ந்திருந்ததே ஆகும்.
---------------------
149 - 29.05.2018
கலைஞர்
லட்சுமி அம்மாள்
தெருக்கூத்து
பாமர மக்களின் கலையாகவும் அரசியல் பேசும் வடிவமாகவும் இருந்து வந்திருக்கிறது. அது
பெரும்பாலும் ஆண்களின் வெளி. பெண்களுக்கு தொடக்கத்தில் அதில் இடம் இல்லாமல்
இருந்தது. காலப்போக்கில் தெருக்கூத்தில் இணைந்து கொண்ட பெண்கள் மாபெரும்
வெற்றிகளைக் கொடுத்தார்கள். ஆண்களுக்கு இணையான நட்சத்திரத் தகுதி பெற்றார்கள்.
அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் கோயம்புத்தூர் பகுதியைச் சார்ந்த
காளியக்கவுண்டனூர் லட்சுமி அம்மாள். நடன அடவுகளில் பல்வேறு சாதனைகளைச் செய்த இவர்
கூத்துக்கான ஆடை வடிவமைப்பிலும் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தினார். புராணங்களை
ஆழமாக உள்வாங்கியிருந்தவர். ஆண்கள் பெண் பாத்திரத்திற்கு பெண்களை நாடாமல் பெண்
வேடத்தை அவர்களே போட்டுக்கொண்டதைப் போல லட்சுமி அம்மாள் அவரது கூத்தில் ஆண்
வேடத்தை அவரே ஏற்றார். பாரதக்கதையில் முப்பது இரவுகள், ராமாயணக்கதையில் பத்து இரவுகள், அம்மாணிக்கதைகள் பத்து இரவுகள் என இடைவிடாது கூத்துக்களை
நடந்தியவர். தேசிங்குராஜா கதை, தமயந்தி
கல்யாணம்,
மயில்ராவணன் சண்டை, நல்லதங்காள் முதலிய கதைகளை கூத்தாக நிகழ்த்திய கலைஞர் லட்சுமி அம்மாள்
தெருக்கூத்தில் பெண்களுக்கான இடத்தை உறுதிப்படுத்தியவர்களுள் முக்கியமானவர்.
---------------------
150 - 30.05.2018
யானைப்படை
பண்டைய
தமிழ் மன்னர்களில் யானையைப் போர்களில் அதிகமாகப் பயன்படுத்தியவர்கள் சேரர்கள்.
அதற்கான இலக்கியச் சான்றுகள் நிரையக் கிடைக்கின்றன. சேரர்களின் ஆளுகைப்
பிரதேசத்திற்குள் யானைகள் அதிகம் இருந்ததால் அவற்றைப் பழக்கப்படுத்தி போர்களில்
பயன்படுத்தியது இயல்பானது என்றாலும் பயன்படுத்திய விதமும் காலமும் சேரர்களுக்கு
சிறப்புச் சேர்த்துக்கொண்டிருக்கின்றன.
பதிற்றுப்பத்தில்
சேரர்களின் யானைப்படை அதிக இடங்களில் குறிப்பிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டு
இருக்கின்றது. அக்குறிப்புகள் வழி பகைவரது கோட்டைகளில் வாயிற்கதவுகளை அங்குசம்
கொண்டு உடைக்கப் பழக்கியிருந்தமையை அறியமுடிகிறது. குறிப்பாக பதிற்றுப்பத்தில்
யானையுடனான போர்க்களக்காட்சிகள் அழகுறச் சித்திரிக்கப்பட்டுள்ளன. யானைப்படை
குறித்து மெகஸ்தனிஸ் தன்னுடைய ‘இண்டிகா’ நூலில் யானையின் மீது அதன்
பாகனோடு வேறு மூவரும் அமர்ந்திருந்தனர். அம்மூவரும் மூன்று பக்கத்தில் திரும்பி
அம்பு எய்துகொண்டிருந்தார்கள். பாகன் தனது ஒரு கையில் அம்பும் மறுகையில்
அங்குசமும் ஏந்தியிருந்தான் என குறிப்பிட்டிருக்கிறார். வடஇந்தியாவில் போரஸ்
மன்னனின் யானைப்படைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அலெக்ஸாண்டர் தோற்றுத்
திரும்பியதும் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.
---------------------
151 - 31.05.2018
அடிமையை
ஒழித்த ஆங்கிலேயர்
பொருளாதாரத்தில்
முன்னேறியவர்கள் அதனால் கிடைத்த சுகபோக வாழ்க்கை தொடர்ந்து கிடைப்பதற்காக மக்களில்
சிலரை அடிமையாக்கிக் கொண்டனர். அடிமை என்னும் பெயரில் வாழ்ந்தவர்களுக்கு கல்வியும்
பிற அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டன. அவர்கள் விலங்குகளாகவே கருதப்பட்டனர்.
விலங்குகளைப்போல வாங்கி விற்கப்பட்டனர். அடிமை முறையால் ஒரு குறிப்பிட்ட மக்கள்
பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பது அன்றைய பிரிட்டீஸ் அரசுக்கு நன்கு தெரிந்திருந்த
போதிலும் அதில் தலையிட பயந்தது. அதனால் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 1830 இல் அடிமை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும்
இந்தியாவில் இருந்த மாவட்ட ஆட்சியாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அந்தச்
சட்டத்திலிருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கப்பட்டது. என்றாலும் 1833 இல் கிழக்கிந்தியக் கம்பெனியின் சாசனம்
புதுப்பிக்கப்பட்டபோது இந்தியாவில் அடிமை முறையை ஒழித்துவிடும்படி இங்கிலாந்து
பாராளுமன்றம் இந்திய கவர்னர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 1843 இல் இந்திய அடிமை முறை ஒழிப்புச் சட்டம்
நிறைவேற்றப்பட்டது. இன்றைக்கு சட்டப் பாதுகாப்பு இருந்தாலும் இந்தியாவில் அடிமைகளே
இல்லை என்று சொல்லிவிடவும் முடியாது. அது மாற வேண்டும்.
---------------------
152 - 01.06.2018
பாலும்
மாமிசமும்
நாலடியாரில்
322 வது பாடல் மாமிசம் உண்ணும் புலையருடைய நாய் பால் சோறின்
நன்மையை அறியாமல் இருப்பதைப் போல தாழ்ந்த அறிவினை உடையவர்கள் உயர்ந்த அறிவினை
உடையவர்களின் பொருளுரையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் குறிப்பிடுகிறது.
இவ்விடத்து தாழ்ந்த அறிவு மாமிசம் உணவுக்கும் உயர்ந்த அறிவு பால்சோறுக்கும்
ஒப்புமை செய்யப்பட்டிருக்கிறது. அதாவது பால் சோறு உண்பவர்கள் உயர்ந்த அறிவினை
உடையவர்கள். மாமிசம் உண்பவர்கள் தாழ்ந்த அறிவினை உடையவர்கள் என்ற கருத்தும்
உட்பொதியாகக் காணக்கிடைக்கிறது. இவ்விடத்து நமக்கு உண்ணும் உணவை வைத்து ஒருவரது
அறிவை அளந்தறிய முடியுமா?
உயர்ந்த அறிவு என்பதற்கும் தாழ்ந்த அறிவு என்பதற்கும்
நாலடியார் முன்வைக்கும் அளவுகோல் என்ன? என்கிற சில கேள்விகள் எழுகின்றன. நாலடியார் மாமிச உணவை மறுத்துரைப்பதால் அதை
கீழான உணவு எனக் குறிப்பிட்டிருக்கலாம் என இவ்விடத்தில் சமரசத்தை
வருவித்துக்கொண்டாலும் செய்யுளை செய்யுளாக மட்டுமே கருதிவிட முடியாது. அதிலும்
குறிப்பாக இந்தக்காலத்தில் பால்சோறு சாப்பிடுபவர்கள் மென்மையான குணம்
வாய்ந்தவர்கள் மாமிசம் சாப்பிடுபவர்கள் தீவிரவாதிகள் என்று சொன்னாலும்
சொல்லிவிடுவார்கள்.
---------------------
153 - 02.06.2018
சிறிய நிலமும்
பெரிய நிலமும்
மகாராஷ்டிர
அரசு வெளியிட்டிருக்கிற அம்பேத்கர் நூல்களில் முதல் தொகுதியில் கிராமப்புற சிறுநில
உடைமை பற்றிய ஒரு கட்டுரை உள்ளது. வேளாண்மை குறித்தும் வேளாண்மைப் பொருளாதாரம்
குறித்தும் விசாலமான பார்வையைக் கொண்டிருக்கிறது அக்கட்டுரை. கட்டுரையின் தொடக்கமே
மறுப்புரையாக இருக்கிறது. விவசாயத்தில் வெற்றி பெறுவதற்கு பெரிய அளவில் நிலம்
வேண்டும் என்ற கருத்தை முற்றாக மறுக்கும் அம்பேத்கர் சிறு நிலங்களைக் கொண்டு
முன்னேறிய பிரான்ஸ்,
டென்மார்க், ஹாலந்து முதலிய நாடுகளைச் சான்றாகக் காட்டுகிறார். விவசாயத்தில் வெற்றி
பெறுவதற்கு நிலம் அதிமாக இருந்தால் மட்டும் போதாது. இடுமுதல், வேளாண் கருவிகள், உழைப்புசக்தி,
உற்பத்திப் பொருளுக்குக் கட்டுபடியாகும் விலை, சரக்குப் போக்குவரத்து வசதி முதலிய பலவும் விவசாயத்தின்
வெற்றியைத் தீர்மானிக்கின்றன என்கிறார். சிறுநிலத்திலேயே பயிர்செய்ய உபவசதிகள்
இல்லாத தேசத்தில் அதிகமான நிலம் இருந்து என்ன செய்ய? என்று கேள்வி எழுப்புகிறார். வேளாண்மைக்கான கருவிகள் இல்லாமல், சரக்குப் போக்குவரத்து வசதி இல்லாமல் ஒருவரிடம் சிறிய
அளவில் நிலம் இருக்குமானால் அது சிறிய அளவிலான நிலமல்ல. பெரிய அளவிலான நிலம்
என்கிறார் அம்பேத்கர்.
---------------------
154 - 03.06.2018
கலைஞர்
மு.கருணாநிதி
தமிழ்நாட்டின்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி இன்று தனது 95 வயது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது செயல்பாடுகளில்
இந்தநேரத்தில் நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று அவர் கையில் எடுத்த தமிழர்களுக்கான
அடையாள அரசியல். வட இந்திய அல்லது மத்திய அரசியல் இராமரை இந்தியாவின் பிம்பமாகக்
காட்டுவதற்கு எடுத்த முயற்சியின் தொடக்கத்தை உடனடியாக அறிந்து அதற்கு மாற்றாக
தமிழர் அடையாளமாக கண்ணகியை முன்னிருத்தியவர். இராமரை இந்திய அடையாளமாகக் கட்டமைத்து
அதில் அவர்கள் பெற்ற வெற்றியின் அளவு அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்ததும்
திருவள்ளுவரைக் கையில் எடுத்தவர். கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்குச் சிலை
அமைத்தல். உலகத் தமிழ்ச் சங்கங்களில் திருவள்ளுவர் சிலை வைக்கக் கோரிக்கை வைத்தல், கருநாடகாவில் திருவள்ளுவர் சிலையை திறத்தல், உலகச் செம்மொழி மாநாட்டு இலச்சினையில் திருவள்ளுவரை வைத்தல்
முதலியவை முக்கியமானவை. கலைஞர் திருவள்ளுவரை அரசியல் மையப்படுத்திய பின்புதான்
திருக்குறள் முன்னெப்போதையும் விட கொண்டாடப்பட்டது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியலில் அவரது இடம் எவ்வளவு முக்கியமானது என்பதை
மாற்றுக்கருத்துடைய அரசியலாளர்களும் தமிழர்களும் இன்றைக்கு உணர்ந்துகொண்டு
இருப்பதைக் கூட அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதுவும் கூட கலைஞர்
மு.கருணாநிதியின் சாதனை தான்.
---------------------
155 - 04.06.2018
மணலி சி.
கந்தசாமி
தஞ்சாவூர்
பகுதியில் இருந்த பண்ணை அடிமைமுறை பண்ணையில் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மக்களின்
மீது ஈவு இரக்கமற்று ஆதிக்கம் செலுத்தியது. மக்கள் சொல்லொண்ண கொடுமைகளை
அனுபவித்தார்கள். உடம்பு சரியில்லை என்று ஒருநாளும் வீட்டில் இருந்து விட
முடியாது. அப்படி இருந்தவர்களுக்குச் சாணிப்பால் கொடுப்பட்டது. பிள்ளைகளை படிக்க
வைக்கக் கூடாது. படிக்கவைத்தால் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் சவுக்கடி உண்டு.
கால்களுக்குக் கிட்டி போடும் வழக்கமும் இருந்தது. செத்த நாய்களைப் போல வண்டிகளில்
கட்டி இழுத்துச் செல்வார்கள். சூடு வைப்பார்கள். பெண்களை அவர்களது மார்பகங்களில்
கிட்டி போட்டு முறுக்கி ரத்தத்தை வரவழைத்து வேதனையில் துடிக்கச் செய்தார்கள். அந்த
வேதனையைக் கண்டு ரசித்து சிரித்தார்கள். முழங்காலுக்குக் கீழே தெரியும் படி
சேலையைத் தூக்கித்தான் கட்டவேண்டும்.
முழங்காலுக்குக் கீழே மறையும் படி இறக்கிக்கட்டினால் சொல்லிச் சொல்லி
அடிப்பார்கள். இப்படிப்பட்ட பழம்பண்பாடு கொண்ட தமிழகத்தில் 1940களில் பண்ணை அடிமைப்பெண்களின் சுயமரியாதையை காப்பாற்றும்
பொருட்டு கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டு போராடி பெண்கள் முழங்காலுக்குக் கீழே
சேலை கட்டும் உரிமைக்காகப் போராடி வெற்றிபெற்றவர் மணலி.சி கந்தசாமி. பண்ணை அடிமைகளுக்கு
ஆதரவான நிலைப்பாட்டோடு வாழ்ந்த அவர் இறுதிவரை அதே நிலைப்பாட்டோடு இருக்கவில்லை.
---------------------
156 - 05.06.2018
குழந்தையாதலே
மகிழ்ச்சி
முன்னொரு
காலத்தில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார் ஒரு மன்னர். அவருக்கு ஊர்
சுற்றுவது பிடிக்கும் என்பதால் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு பக்கத்து
நாடுகளுக்கு விருந்துக்குச் சென்றுவிடுவார். அதுதான் மகிழ்ச்சி என்று கருதிய
அவருக்கு அவை எதிலும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர வெகுகாலம் பிடிக்கவில்லை. மனம்
கலங்கினார். தனக்குத் தெரிந்த ஜோதிடர்களிடமெல்லாம் தனது மனக்கவலைக்குக் காரணம்
கேட்டார். மருந்துகளை எடுத்துக்கொண்டார். எதிலும் சுகம் கிடைக்கவில்லை. நிரந்தரமான
மகிழ்ச்சியைக் கண்டுபித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனது
நாட்டில் அறிவாளி என்று நம்பப்பட்டுக்கொண்டிருந்த சிலரோடு ஆலோசனை நடத்தினார்.
அவர்கள் கூறிய ஆலோசனைகளும் எடுபடவில்லை.
இறுதியாக
ஞானநிலையை எய்தியை துறவி ஒருவர் இருப்பதை நண்பர்கள் மூலமாக அறிந்துகொண்ட மன்னன்.
அவரைப் போய் பார்ப்பதென்று முடிவெடுத்தார். அதன்படி அத்துறவியைச் சந்திந்து தனது
பிரச்சினையைக் கூறி நான் நிரந்த மகிழ்ச்சியைக் கண்டுபிடித்தாக வேண்டும். நிரந்தர
மகிழ்ச்சியிலேயே வாழ வேண்டும் அதற்கு என்ன வழி என்று கேட்டார். அதற்கு அந்த துறவி ‘நிரந்தர மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்றால் குழந்தைகளோடு
விளையாடிக் கொண்டே இரு’ என்றார்.
---------------------
157 - 06.06.2018
பெண்களும்
போர்க்களங்களும்
போர்களில்
தோற்றுப்போன நாடுகளின் பெண்கள் வெற்றிபெற்ற மன்னர்களுக்கு அடிமையாகிப் போவார்கள்
என்பது அறிந்த செய்தி. நிறையப் பெண்கள் அப்படி இழுத்துச் செல்லப்பட்டு
அடிமைப்படுத்தப்பட்டதற்கும் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டதற்கும் எண்ணற்ற சான்றுகள்
உள்ளன. பண்டையச் சமுதாயத்தில் மாடுகளைக் கவர்வதும் பெண்களைச் சிறைப்பிடிப்பதும்
போரின் ஒருபகுதியாக இருந்திருக்கிறது. விஜயநகர மன்னர்கள் தங்களது பெண்கள்
பகைவர்களிடம் சிக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்ததாகச் சில வரலாற்றுக்
குறிப்புகள் வழி அறியமுடிகிறது. பகைவர்கள் தனது நாட்டைச் சூழ்ந்த உடன் விஜயநகர
மகாராணிகளை தனித்த அறைகளில் வைத்துப் பூட்டிவிடுவார்கள் என்றும் போரில் வெற்றி
பெற்றால் அறை திறக்கப்பட்டு ராணிகள் வெளியில் வருவார்கள். தோற்றுப்போனதாகத் தகவல்
கிடைத்தால் அந்த அறை வெடிவைத்து தகர்க்கப்படும். அதன்வழி ராணிகள் தூய மரணம்
எய்துவர்கள் என்றொரு செய்தி உண்டு. பகைவர்களிடம் இருந்து தமது பெண்களைக் காப்பதற்கே விஜயநகர மன்னர்கள்
அப்படிச் செய்திருக்கிறார்களே தவிர வேறொன்றுமில்லை. இன்றும் கூட பல குடும்பங்களில்
பெண்களைக் கொலை செய்தே தான் தூய்மை காக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
---------------------
158 - 07.06.2018
வீதியும்
குழந்தையும்
நேற்று
வீதியில் ஒரு குழந்தையோடு விளையாடிக்கொண்டு இருந்தபோது வழக்கம் போல கதை சொல்லத்
தொடங்கியது. ஒரு நண்டு தனது உறவினர்களைப் பார்க்க ரயிலில் பயணிக்கிறது. ஏற்கனவே
ரயிலில் மயில்,
மான், குருவிகளோடு
ஜோட்டா பீமும் பயணிக்கிறான். நண்டுவைப் பார்த்த ஜோட்டா பீம் எங்கே செல்கிறாய் என
விசாரிக்கிறான். நண்டின் உறவினர்களைப் பார்க்க ஜோட்டா பீமும் விருப்பப்படுகிறான்.
நண்டும் சம்மதிக்கிறது. ஆனால் ஜோட்டா பீம் நண்டு உருவத்தில் தான் தன்னோடு
வரவேண்டும். அப்படி வந்தால் தனது உறவினர்களைப் பார்க்கமுடியும் என்று கண்டிஷன்
போடுகிறது நண்டு. ஜோட்டா பீமும் நண்டு வேஷம் பூணுகிறான். இறங்க வேண்டிய இடம்
வந்துவிடுகிறது. நண்டும் நண்டு வேஷம் பூண்டிருக்கும் ஜோட்டா பீமும் இறங்கி
நடக்கிறார்கள். சிறிது தூரம் சென்றதும் இருவரின் தலைக்கு மேலே காகம் ஒன்று
வட்டமடிக்கிறது. சூழலைப் புரிந்து கொண்ட நண்டு பக்கத்தில் இருந்த பொந்துக்குள்
சென்று மறைந்துகொள்கிறது. நண்டு வேஷத்தில் இருந்த ஜோட்டா பீம் நடப்பதை யூகிக்கும் முன்பாக
அவனை காகம் தூக்கிச் சென்றுவிடுகிறது என்பதாகக் கதையைச் சொல்லி விட்டு நாம்
யாருக்காகவும் மாறக் கூடாது. மாறினால் அது ஆபத்தைக் கூட உருவாக்கும் என்றது
குழந்தை. குழந்தைகளிடம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது.
---------------------
159 - 08.06.2018
உணர்தலே
விடுதலையின் துவக்கம்
சென்னை
கலைக்குழுவின் பிரளயன் ‘பறிமுதல்’ என்றொரு
நாடகத்தை 1979 இல் உருவாக்கினார். இது ஒரு பாவனை நாடகம். சுரண்டலுக்கு
எதிராக மக்கள் ஒருங்கிணைய வேண்டும் என்பதைக் கருவைக் கொண்டிருந்தது. கதையில் ஒரு
சர்க்கஸ் மாஸ்டர் வருகிறார். அவர் நான்கு சிங்கங்களை வைத்திருக்கிறார். சர்க்கஸில்
நான்கு சிங்கங்களும் நடிக்கின்றன. சிங்கங்களின் அபார நடிப்பை பார்த்து
வியப்பெய்திய பார்வையாளர்கள் சிங்கங்களுக்கு ரொட்டித் துண்டுகளை வீசுகிறார்கள்.
அவை அனைத்தையும் சர்க்கஸ் மாஸ்டரே பறித்துக்கொள்கிறார். சிங்கங்களுக்குச் சிறிதளவே
கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த சிங்கங்கள் சர்க்கஸ் மாஸ்டரைத்
தூக்கிக்கொண்டு சென்று விடுகின்றன. இன்றைக்கு இந்நாடகத்தை வேறுமாதிரியும் புரிந்து
கொள்ளலாம். நாடகத்தில் ரொட்டித் துண்டுகளை வீசுகிற பார்வையாளர்கள் கார்ப்ரேட்
முதலாளிகள். சர்க்கஸ் மாஸ்டர் என்பது அரசாங்கம். சிங்கங்கள் என்பது மக்கள்.
கார்ப்பரேட்டுகளின் வரவு மக்களுக்கு நலம் பயப்பது போலச் சொல்லப்படுகிறது. ஆனால்
அவர்கள் சர்க்கஸ் மாஸ்டர் விரும்பி உண்ணும் ரொட்டிகளையே வீசுகிறார்கள். மாமிச
உண்ணிகளான சிங்கங்கள் ரொட்டிகளையே தமக்கான உணவு என நம்பிக் கொண்டிருக்கின்றன.
சிங்கங்கள் ‘தமக்கான உணவு ரொட்டிகள் அல்ல’ என்பதை உணர வேண்டும். உணர்தலே விடுதலையின் துவக்கம்.
---------------------
160 - 09.06.2018
குரங்குப்
பட்டடை
பெருங்கற்காலச்
சின்னங்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. புதுக்கோட்டை
மாவட்டத்தில் இதற்கு ‘குரங்குப் பட்டடை’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. இச்சொல் கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நார்த்தாமலைக் கல்வெட்டில் காணக்கிடைக்கிறது.
இச்சொல்லுக்குப் பொருள் கூற வந்த கே.ஆர்.சீனிவாசன் ‘குரங்குப் பட்டடை’
என்பது ‘குரக்குப் படை’ என்பதன் திரிபு என்றும் ‘குரக்கு’
என்றால் மண்ணைத் ‘தோண்டுதல்’,
‘தாழ்தல்’ என்று பொருள்
உள்ளது என்றும் கூறுகிறார். மேலும் அவர், ‘படை’
என்பது படுக்கை என்பதிலிருந்து வந்தது என்றும் ‘படு’
என்பதன் திரிபு என்றும் பொருள் கொள்கிறார். சோழர் காலத்தில்
சோழ மன்னர்களுக்கு எடுக்கப்பட்ட பள்ளிப்படையை உதாரணமாகக் கூறலாம். எனவே, ‘படை’
என்பது ‘படு’, ‘படை’,
‘அடை’
போன்றும் ‘படுத்திருத்தல்’, ‘அடக்கம் செய்தல்’ என்றும் வந்துள்ளது. எனவே ‘குரக்குப்படை’ என்பது பள்ளிப்படையைப் போன்று பூமியைத் தோண்டி
எடுக்கப்படும் அறை என்று பொருள்கொண்டுள்ளது என்றும், இது மருவி குரங்குப்படையாகி விட்டது என்றும் கூறுகின்றார்.
---------------------
161 - 10.06.2018
பாரதி
பாடல்களும் தடையும்
1922 இல் பாரதியாரின் பாடல்கள் திருநெல்வேலி வட்டத்தில் இருந்த பள்ளிகளின்
பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதற்கு அன்றைய பனகல் அரசர் தலைமையிலான அரசு
அனுமதிக்கவில்லை. இதுதான் பாரதி பாடல்களுக்கான முதல் தடையாகத் தெரிகிறது. பிறகு 1928 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பர்மா அரசாங்கத்தின் காவல்துறை பாரதியின் பாடல்கள் ராஜத் துவேஷமானவை
என்றும் அவற்றை வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும் உத்திரவிட்டது. இந்த உத்தரவு
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி
சென்னை மாகாண அரசிதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. அதை அடிப்படையாகக் கொண்டு
அன்றைய சென்னை உளவுத்துறை ஆய்வாளர் சப்தார் ஹூசேன் பாரதியின் பாடல்களுக்கு
நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார். அதன்வழி சென்னையின் முக்கிய பதிப்பகம், இலக்கியக் கூடுகை இடங்களிலும் குறிப்பாக இந்திப் பிரச்சார
சபா,
பாரதி ஆஸ்ரமம், தண்டபாணி கம்பெனி ஆகிய இடங்களில் பாரதியின் பாடல்கள் ஏறக்குறைய இரண்டாயிரம்
பிரதிகள் வரை கைப்பற்றப்பட்டன.
---------------------
162 - 11.06.2018
பிள்ளை
விளையாட்டு
சைவ
வெளிச்சத்தில் நின்று அதற்கு வெளியே களமாடியவராகக் கருதப்படும் இராமலிங்கர்
முன்வைத்த மாற்றுச் சிந்தனைகள் வைதிகர்களுக்கு குறிப்பாக ஆறுமுக நாவலர் உள்ளிட்ட
சைவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இதனால் இராமலிங்கர் நீதிமன்றம் வரை செல்ல
நேரிட்டது. அவரது வாழ்வை புதிய ஆய்வுத்தடத்தில் நின்று விவரிக்கும் ராஜ்கௌதமன் ‘ஆத்திகர்கள் இராமலிங்கரை ஒரு தெய்வ அவதாரமாக வழிபடுவதைவிட, அவர் வலியுறுத்திய சாதி, சமய மத ஒழிப்பினைத் தங்களது வாழ்வில் அனுபவ சாத்தியமாக்க முயற்சிப்பதே
இராமலிங்கருக்கு அவர்கள் செய்யும் வழிபாடாக இருக்க முடியும். அவரே ‘பிள்ளை விளையாட்டு’ என ஒதுக்கிய விளையாட்டை தொடர்ந்து விளையாடுவதில் ஒரு பயனும் இல்லை.
நாத்திகர்கள் இராமலிங்கரின் சாதி, சமய
ஒழிப்புக் கொள்கையை வைத்து அவரை ஒரு பிராமண எதிர்ப்பாளராக முத்திரை இடுவதைவிட, அவரது ஜீவகாருண்யம் என்ற உயிர் இரக்கக் கொள்கையைத் தங்கள்
வாழ்வில் அனுபவ சாத்தியமாக்க முயற்சிப்பதே இராமலிங்கர் போன்றோருக்குச் செய்யும்
மரியாதையாக இருக்க முடியும்’ என்கிறார்.
---------------------
163 - 12.06.2018
பாரதிதாசனின்
மிளிர்வு
பழங்காலத்திய
தமிழ்நாட்டில் மக்கள் செல்வச் செழிப்பில் திளைத்தபடி காதலோடும் வீரத்தோடும்
கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழ்ந்தாக நாம் நம்பிக்கொண்டிருப்பதற்கு சான்றாதரமாக
இருக்கும் பழந்ததமிழ் இலக்கியத்தில் பெண் தம்முடைய பாலியல் உணர்வுகளை நேரடியாகவும்
வெளிப்படையாகவும் அச்சமின்றியும் துணிந்து பேசியதாக இல்லை. அதே காலத்தை ஒட்டி
வெளியான நீதி இலக்கியங்களும் பெண் அப்படித்தான் இருக்க வேண்டும். அதுதான்
பெண்ணுக்கான இலக்கணம் என்று சொல்லி வைத்திருக்கின்றன. இன்றைக்கும் கூட பெண்கள்
எப்படி படுத்துத் தூங்க வேண்டும் என்பது முதல் எப்படி சாப்பிட வேண்டும் என்பது வரை
வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிற மனோபாவம் மாறாத நிலையில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னால் பாரதிதாசனின் பாடல்களில் வரும் ஒரு
பெண் ‘ஓசைப்பாடாது என் வீட்டில் ஓர் இரவில் என்பால் ஒருமுறை
வரச்சொல்வாயடி தோழியே ஏசட்டுமே அவன் வரவால் என்னையே நான் இவ்வுலகுக்கு அஞ்சேனடி
தோழியே’
என்கிறார். ஒரு பெண் துணிச்சலோடு தான் விரும்பிய ஆண்மகனை
தனது வீட்டுக்கு இரவுப் பொழுதில் வரச் சொல்லி தூது அனுப்புகிற இடத்தில் பண்பாடு
குறித்து உருவாக்கி வைத்திருக்கும் அனைத்தும் அர்த்தம் இழக்கின்றன. பசப்பில்லாத
பண்பாடு ஒன்று உருப்பெறுகிறது. பாரதிதாசன் அடர்த்தியான புரட்சிக்கவிஞராக
மிளிர்கிறார்.
---------------------
164 - 13.06.2018
சானா
சிறிய
நிகழ்வுகளும் இடங்களும் கூட வரலாற்றில் மிக முக்கியமான படிப்பினைகளைத்
தந்துவிடும். தவிர்க்க முடியாத சக்தியாகவும் விளங்கியிருக்கும். அந்தவகையில்
குறிக்கத்தகுந்த நகரம் சானா. ஏமன் நாட்டின் தலைநகரமான இது நாட்டின் மேற்குப்
பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் கி.மு. முதலாம் நூற்றாண்டில் முன்னோர்கள்
உருவாக்கிய இடத்தில் கி.பி. முதலாம் நூற்றாண்டில் புதிதாக உருவாக்கப்பட்டது.
இந்நகரத்து மக்கள் 632
இல் இஸ்லாத்திற்கு மாறினார். 1516 முதல் ஓட்டோமான் பேரரசின் கீழ் சிறிய அளவில் மதமாற்றங்கள்
நடந்திருந்தாலும் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 1872 வரை சையதி இமாம்கள் மதமாற்றத்தைத் தீவிரப்படுத்தினர்.
முதலாம் உலகப் போரில் ஓட்டோமன் பேரரசு படுதோல்வியைச் சந்தித்த பிறகு விடுதலை பெற்ற
ஏமனின் தலைநகரமான சானா மாறியது. 1990 இல்
ஒருங்கிணைக்கப்பட்ட ஏமனின் தலைநகரமானது. பல நூற்றாண்டுகளாக சானா நகரம் ஏமனின்
பொருளாதார,
சமய,
அரசியல் நிலவரங்களைத் தீர்மானிக்கும் இடமாக
இருந்துவருகிறது. ஏமனின் நவீன வரலாறும் கூட சானா நகரில் இருந்தே தொடங்குகிறது.
---------------------
165 - 14.06.2018
சுதந்திரம்
என்பது
‘உன் இயல்பில் இரு. உன் போக்கில் போ. உன் அடி மனத்தின் குரலைக் கேள்’ என்கிறது ஜென்
தத்துவம். மூன்று கூற்றும் வெவ்வேறு தளங்களில் முக்கியமானவை. ‘உன் இயல்பிலேயே இரு’ என்பதன் வழி மற்றொருவர் இயல்புக்கு மாறிக்கொண்டே இருக்காதே என்கிறது. மற்றவர்
இயல்புக்கு மாறும் போது உனது இயல்பை, உனது வாழ்வை இழந்துவிடுகிறாய் என்பது அதன்பொருள்.’ உன் போக்கில் போ’ என்பதன் வழி உனக்கான
வழியே நீயே தீர்மானி. அடுத்தவர்களின் போக்கு உனக்கானதல்ல என்பது பெறப்படுகிறது. ‘உன் அடிமனதின் குரலைக் கேள் ‘என்பதன் வழி உனது
ஆசானாக,
உனது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஒன்றாக, உனக்கான நீதியை, அறத்தை முடிவு செய்யும் ஒன்றாக உனது அடி மனமே இருக்கட்டும் என்பதை உணர
முடிகிறது. அதாவது ஒருவரது இயல்பும் போக்கும் அவருக்கேயுரிய தனித்துவத்தோடு இருக்க
வேண்டும். ஒருவரது வாழ்க்கையை அவரது மனமே முடிவு செய்ய வேண்டும் என்பதைத் தான் ஜென்
தத்துவம் போதிக்கிறது. அதன்வழி அடிமனம் சொல்லியபடி தனக்கேயுரிய இயல்பிலும்
போக்கிலும் தனது இருப்பை நிறுவிக்கொள்வது தான் சுதந்திரம் என்கிற பொருளோடும்
விரிகிறது ஜென் தத்துவம்.
---------------------
166 - 15.06.2018
வாடிக்கை
1933 இல் நோபல் பரிசு பெற்றவரும் ஃப்ரெய் பெர்க் பல்கலைக்கழக வேதியியல்
பேராசிரியருமான ஹெர்மன் ஸ்டாடிங்கெர் முதல் உலகப் போரின் போது போரை எதிர்த்தார்
என்று ஹிட்லரின் ஆதரவாளரான ஹைடெக்கெர் குற்றம் சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டு
குறித்த தகவல் 1934 ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி கல்வி அமைச்சகத்திற்குப் போனது. இதனால் ஹெர்மன் ஸ்டாடிங்கெர்
வேலையையும் ஓய்வூதியத்தையும் இழக்க வேண்டியிருந்தது. உலகப் புகழர்பெற்ற
பேராசிரியர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நடவடிக்கை எடுத்தால் சர்ச்சை
கிளம்பிவிடும் எனக் கருதிய ஹைடெக்கெர், சில நாட்களில் ஹெர்மன் ஸ்டாடிங்கெருக்கு மென்மையான தண்டனை கொடுத்தால்
போதுமானது என்று கல்வியமைச்சகதிடம் கூறினார். என்றாலும் கல்வி அமைச்சகம் ஹெர்மன்
ஸ்டாடிங்கெரைக் கட்டாயப்படுத்தி ராஜினமா கடிதத்தைப் பெற்று ஆறு மாதம் வரை பணியிடை
நீக்கம் செய்தது. மக்களுக்கு ஆதரவான அறிவுஜீவிகளை துரத்திரயடிப்பதும் பொருளாதார
ரீதியாக துன்புறுத்துவதும் காலந்தோறும் அரசுக்கு வாடிக்கையாகவே இருந்திருக்கிறது.
---------------------
167 - 16.06.2018
மனிதனின்
தோற்றம்
மானுடவியலாளர்கள்
மனிதனின் தோற்றம் குறித்து நூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்த ஆராய்ச்சியின்
விளைவாக சில பத்தாண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட முடிவுகளை வெளியிட்டார்கள். அந்த
ஆய்வு முடிவில் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ப்ரோகான்சால் என்கிற
இனஉயிரியைத் தான் மனிதர்களின் மூதாதையாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த
இனத்திலிருந்து தான் மூடித் திறக்கக் கூடிய உள்ளங்கையும் வளையக் கூடிய
கையமைப்புமுடைய ப்ரை மேட்டா இனம் தோன்றியிருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர்.
இந்த ப்ரைமேட்டா இனம் அளவில் மிகச் சிறிதாகவும் மரங்களில் வாழ்ந்ததாகவும்
குறிப்பிடுகின்றனர். அதில் ஒரு பிரிவு பழக்கப்படுத்தபட்ட விலங்கினைப் போல
மரத்திலும் தரையிலும் வாழப் பழகிக்கொண்டதாகக் குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள்
ப்ரைமேட்டாவுக்கு அடுத்த நிலையிலேயே குரங்கைப் போன்று கைகால்கள் அமையப் பெற்ற ட்ரை
யோ பிதிகஸ் என்கிற இனம் வாழ்ந்திருக்க வேண்டும் எனக் கணிக்கிறார்கள்.
இவ்வினத்திற்கு காலை விட கையின் நீளம் அதிகமாக இருந்திருக்கிறது. அது மரங்களில்
தாவி ஏறுவதற்கு ஏதுவாக அமைந்திருக்கிருக்கலாம் எனக் கருதும் ஆராய்ச்சியாளர்கள் அது
வாழ்ந்த காலம் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எனச் சொல்கிறார்கள்.
---------------------
168 - 17.06.2018
செல்வந்தர்களும்
பாரீஸ் கம்யூனும்
1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரான்ஸூக்கும் ஜெர்மனிக்கும் போர் நடந்தபோது மார்க்ஸ்
ஜெர்மனியத் தொழிலாளர்களை ஆதரித்தார். போரில் அவர்களை பிரான்ஸூக்கு எதிராக நிற்கும்
படி கேட்டுக்கொண்டார். போரில் பிரான்ஸூம் தோற்றுப் போனது. என்றாலும் மீண்டும்
பிரெஞ்ச் செல்வந்தர்கள் ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என்று பிரெஞ்ச் தொழிலாளர்கள்
நம்பினார்கள். அதனால் 1871ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி பாரீஸ் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பாரீஸ் கம்யூனை அமைத்தார்கள்.
இது பிரெஞ்ச் செல்வந்தர்களுக்கு மட்டுமின்றி ஜெர்மனியர்களுக்கும் அச்சத்தைக்
கொடுத்தது. எனவே பிரெஞ்ச் செல்வந்தர்கள் கம்யூனுக்கு எதிராக அடக்குமுறையை
ஏவிவிட்டார்கள். அதில் கம்யூனின் உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். மிக
விரைவிலேயே கம்யூன் முடிவுக்கு வந்தது. இதுபோன்ற வரலாற்றுச் செய்திகள்
அதிகாரத்திற்கு எதிராக மக்கள் திரளும் போதெல்லாம் செல்வந்தர்கள் அரசை தன்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மக்களைத் தீர்த்துக்கட்டுவதில் முனைப்போடே
இருந்திருக்கிறார்கள் என்பதை நமக்குப் போதிக்கிறது. அது இன்னொரு செய்தியையும்
சொல்கிறது. அரசு ஒருபோதும் உழைக்கும் மக்களுக்காக இருக்காது என்பதுதான் அந்த
செய்தி. அது மாற வேண்டும்.
---------------------
169 - 18.06.2018
எருமையும்
மனிதனும்
தந்தை
பெரியார் ஒருமுறை இதிகாசத்தில் உள்ளபடி, புராணத்திலும் இலக்கியத்திலும் உள்ளபடி, முன்னோர்கள் சொன்னபடி ஒருவன் நடப்பானேயானால் அவன் எருமைக்கு ஒப்பாவான்.
எருமைதான் அடித்து ஓட்டுகிற பக்கமெல்லாம் போகும். சொந்தமாக யோசிக்காது என்றார்.
சொந்த அறிவே மனிதனை முன்னேற்றும் என்று பெரியார் நம்பியதன் விளைவுதான் அந்தக்
கூற்று. அது எல்லாக் காலத்திற்கும் தேவையான சிந்தனையும் கூட.
இதிகாசங்கள், புராணங்கள், இலக்கியங்கள் என்பன முரண்பட்ட இரண்டு புள்ளிகளில் ஒன்றை உயர்வாகவும் இன்னொற்றை
தாழ்வாகவும் கற்பிப்பதற்காக கைக்கொண்ட வடிவங்கள். அல்லது ஒரு புள்ளியை மட்டும்
புகழ்ந்தேத்தும் குணாதியசம் உடையவை. ஒருவகையில் படைப்பிலக்கியங்கள் யாவற்றையும்
தந்திர வாக்கியங்கள் என்று கூடச் சொல்லலாம். ஆக அவற்றில் கூறப்பட்டுள்ளவைகளை நாம்
அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. உதாரணமாக சிலருக்கு வேண்டுமானால்
இலக்கியங்கள் காட்டியபடி அந்தக்காலத்தில் தேனாறும் பாலாறும் ஓடியிருக்கலாம்.
பொற்காலமாக இருந்திருக்கலாம். எல்லோருக்கும் அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை.
அதனால் தான் அவற்றைப் பெரியார் எதிர்நிலையில் வைத்துப் பார்க்கிறார்.
---------------------
170 - 19.06.2018
அறம் பாடுதல்
கடந்த
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை நெற்களத்தில் அறம் பாடுதல் மரபாக
இருந்திருக்கிறது. அறம் பாடுகிறவர் இரவில் நெற்களத்திற்கு வருவார். புணையல்
கட்டப்பட்ட மாடுகள் சூடு அடித்து முடித்ததும் நெல் உதிர்க்கப்பட்ட வைக்கோலைத்
தனியாகப் பிரித்து எடுப்பார்கள். நெல் தூற்றி சுத்தம் செய்யாமல் களத்தில்
கிடக்கும். அறம் பாடுகிறவர் வரும்வரை நெல்லை குவியலாக்கக் கூடாது என்கிற மரபு
இருந்தமையால் நெல் சூடு அடித்த நிலையிலேயே கிடக்கும். அறம் பாடுகிறவர் வந்து அரை
மணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை விரிந்து கிடக்கும் நெல்மணிகளைப் பார்த்து அறம்
பாடுவர். பாடி முடித்ததும் தன்னால் முடிந்த அளவுக்கு மூன்று முறை கைகளால் வாரி
நெல்லை அள்ளிக்கொள்வார். அளந்து பார்த்தால் அவரால் அள்ளப்பட்ட நெல் இரண்டு முதல்
மூன்று மரக்கால் அளவினதாக இருக்கும். அவர் அள்ளி முடித்த பிறகே நெல் அம்பாரமாகக்
குவிக்கப்படும் என்கிற செய்தியை பெரியவர்கள் வழி அறிந்து கொள்ள முடிகிறது. அறம்
பாடியவர் என்ன பாடினார் என்பது பற்றி தகவல்கள் இல்லை. கடந்த ஐம்பதாண்டு வரை
பாடப்பட்ட ஒரு வாய்மொழி பாடல் இன்று கிடைக்காமல் போயிருப்பது பெரும் குறைதான்.
அறம் பாடியவர்களில் எஞ்சியவர்களைக் கண்டு பாடலைப் பதிவு செய்ய வேண்டும்.
---------------------
171 - 20.06.2018
தலாய் லாமா
1642 இல் மங்கோலியப் படைத் தளபதியான குஷ்ரீகான் என்பவன் தீபெத்தின் சிற்றரசர்களை
வென்று திபேத்தை ஒரே நாடாக்கினான். அதற்கு பிறகு அந்நாட்டை தனது பௌத்த மதத்தை
விரிவுபடுத்தும் பொருட்டு டெபுங் என்னும் பௌத்த மடத்திடம் பொறுப்பை ஒப்படைத்து
விட்டான். அந்த மடத்தின் தலைவரே தலாய்லாமா. தலாய் லாமா என்னும் மங்கோலியச்
சொற்களுக்கு பெருங்கடலைப் போன்று மிகவும் பெரியவர் அல்லது உயர்ந்தவர் என்பது
பொருள். மடத்தின் பொறுப்பை ஏற்றதும் தனது இயற்பெயரை இழக்கும் மடத்தின் அதிபர்
தலாய்லாமா என்றே பொதுப்பெயரால் அழைக்கப்படுவார். அவர்தான் நாட்டின் அரசியல்
தலைவராகவும் இருப்பார்.
ஒரு
தலாய்லாமாவின் மறைவிற்குப் பிறகே இன்னொரு தலாய்லாமா பிறக்கிறார். அவரை மறைந்த
தலாய் லாமாவின் தெய்வீக சக்தியும் ஜோதிடரும் கண்டுபிடித்து அரியணையில் அமர்த்திய
பிறகு அவர் புதிய தலாய்லாமா ஆகிறார் என்று திபெத்தியர்கள் நம்புகிறார்கள்.
பெரும்பாலும் தலாய் லாமா செல்வந்தர் வீடுகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்.
செல்வந்தர் வீடுகளுக்கிடையே தலாய் லாமா பொறுப்புக்கு போட்டி இருக்குமெனில்
ஏழ்மையான குடும்பத்திலிருந்து தலாய்லாமா தேர்ந்தெடுக்கப்படுவார்.
---------------------
172 - 21.06.2018
நற்குலத்தோரும்
இழிகுலத்தோரும்
‘சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி’ என்கிறார் ஒளவையார். இது சாதியில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் யார்யார்
என்பதற்கு ஒளவையார் பயன்படுத்திய அளவுகோல். வறியவருக்குக் கொடுக்கிறவர் பெரியவர்
அல்லது நற்குலத்தைச் சார்ந்தவர். வறியவருக்குக் கொடுக்காதவர் இழிகுலத்தைச்
சார்ந்தவர் என்பது தான் ஒளவையார் சொல்ல வருகிற செய்தி. சான்றோர் உரைகளும் கூட
அப்படித்தான் சொல்கின்றன. ஆக யார் நற்குலத்தினர் யார் இழிகுலத்தினர் என்பதை
அவரவர்களிடம் இருந்த பொருள் தான் தீர்மானிதர்திருக்கிறது. இந்தப் பாடலுக்கு
இன்னும் சிலர்,
பொருள் இருந்து அதை யாசிப்பவர்க்குக் கொடுப்பவர்கள்
நற்குலத்தினர். பொருள் இருந்தும் கொடுக்காதவர்கள் இழிகுலத்தினர் என்பதாக வலிந்து
பொருளுரை வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் கூற்றுப்படி பொருள் இருந்தும்
கொடுக்காதவர்கள் இழிகுலத்தினர் என ஒப்புக்கொண்டால் வறியவர்களுக்கு கொடுப்பதற்கு
பொருளே இல்லாமல் பற்றாக்குறையிலும் வறுமையிலும் உழலும் ஏழைகளை ஒளவையார்
கூற்றுப்படி எந்தச் சாதியில் சேர்ப்பது என்பது தான் நமக்கு முன்னால் நிற்கும்
கேள்வி.
---------------------
173 - 22.06.2018
படிக்காதோரும்
படித்தவரும்
இருபதாம்
நூற்றாண்டின் மத்திய தமிழ் திரைப்படங்களில் தனித்து நின்று கோலோச்சியவர்
எம்.ஆர்.ராதா. பகுத்தறிவுக் கருத்துக்களை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்த
எம்.ஆர்.ராதா திராவிட இயக்கத்தினரோடு மிக நெருக்கமாக இருந்ததோடன்றி தம்மையும்
திராவிட அரசியலோடு இணைத்துக்கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.
அவரது சுயசரிதை ‘எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது. அந்நூலில் எம்.ஆர்.ராதாவின்
வெளிப்படையான பேச்சு, துணிச்சலான
செயல் ஆகியன தன்னியல்பான போக்கில் பதிவாகியிருக்கிறது. அதே சமயம் அந்நூலில் அவரது
சமூக விமர்சனம் கூர்மையானதாக இருக்கிறது.
ஓரிடத்தில்
படிக்காதவர், படித்தவர் பற்றிச் சொல்லும் போது
படிக்காதவனுக்குச் சட்டம் தெரியிறதில்லே. படிச்சவனுக்குச் சட்டம் தெரியுது. அதனாலே
படிக்காதவன் எந்த தப்பைச் செஞ்சாலும் சட்டத்துக்கு விரோதமா செஞ்சிட்டு மாட்டிகிறான்.
படிச்சவன் செய்ய வேண்டிய அயோக்கியத்தனங்களையெல்லாம் சட்டப்படியே செஞ்சிட்டு
என்னிக்கும் பெரிய மனுஷனா பெயர் எடுத்துகிட்டிருக்கான் என்கிறார். இவ்விமர்சனத்தை
எளிதாக புறம் தள்ளி விடமுடியாது.
---------------------
174 - 23.06.2018
எளியோரும்
வலியோரும்
ஓநாய்க்கும்
ஆட்டுக்கும் இடையே நடக்கும் பழைய உரையாடல் ஒன்று மிகவும் பிரபலமானது. பலருக்கு அது
தெரிந்த ஒன்றாகக் கூட இருக்கலாம். ஓநாய் ஆட்டைப் பார்த்து நான் குடிக்கும் தண்ணீரை
நீ அழுக்காக்கி விட்டாய் என்கிறது. அதற்கு ஆடு இல்லை நீங்கள் தான் மேலிருந்து
வரும் தண்ணீரைக் குடிக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது என்னால் அதனை எப்படி
அழுக்காக்க முடியும் என்று பதில் கேள்வி கேட்கிறது. அதற்கு ஓநாய் ஆட்டிடம் நீ
அழுக்காக்கவில்லை என்றால் உன் முன்னோர்கள் அழுக்காக்கி இருப்பார்கள். நீ அதற்குப்
பதில் சொல்லியாக வேண்டும் என்கிறது.
சிறுவர்களுக்கான
கதை போன்ற தோற்றத்திலிருக்கும் இதில் சொல்லப்பட்டிருக்கும் செய்தி வாழ்வின் பல
தளங்களுக்கும் விரிகிறது. அதுதான் இவ்வுரையாடலின் சிறப்பம்சமே. எளியவர்கள் எதுவுமே
செய்யாவிட்டாலும் வலியவர்களுக்குப் பணிந்து போகத்தான் வேண்டியிருக்கிறது.
வலியவர்களுக்கான உலகத்தில் எளியவர்கள் தொந்தரவு செய்யப் பிறந்தவர்களாகவே
காட்சியளிக்கிறார்கள். செய்யாத தவறுகளுக்கு எளியவார்கள் பொறுப்பேற்பது மட்டுமின்றி
சில நேரங்களில் அவர்களது முன்னோர்களுக்காகவும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
இன்றைக்குப் பல நேரங்களில் குற்றங்களும் விசாரிப்புகளும் கூட இப்படித்தான் அமைந்து
விடுகின்றன.
---------------------
175 - 24.06.2018
பசூக்கா
‘பசூக்கா’ என்பது தோளில் சுமந்தபடி சிறிய அளவிலான
ஏவுகணையை செலுத்துவதற்கான ஓர் உபகருவி. சுமார் 5 அடி நீளமுடையதாக இருக்கும். இரு புறமும் திறந்த நிலையில் உள்ள
இக்கருவியில் தோளில் பொருத்திக் கொள்ளும் படியான வசதியுடன் கைபிடியும் இருக்கும்.
குறி பார்ப்பதற்கான பார்வைப் புள்ளியும் அமையப் பெற்றிருக்கும். டாங்குகளையும்
அரண்களையும் மிகவும் குறுகிய தொலைவில் இருந்து தாக்குவதற்காகவே இது
வடிவமைக்கப்பட்டது. அதிமான எடையைக் கொண்ட இந்த பசூக்காவை இரண்டாம் உலகப் போரில்
அமெரிக்கா அதிகமாகப் பயன்படுத்தியது. வேறுசில போர்களிலும் இதைப் பயன்படுத்திய
அமெரிக்கா வியட்நாம் போரில் குறைந்த எடையுள்ள ஏவுகணை கருவிகள்
கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால் பசூக்காவை கைவிட்டுவிட்டது. பசூக்காவின் உண்மையான
பெயர் எம்9ஏ1 ராக்கெட் லாஞ்சர் என்பது தான். புகழ்பெற்ற வானொலி நிலையத்தின் நகைச்சுவை
நடிகர் ஒருவர் வேடிக்கையாக பசூக்கா என்று அழைத்தால் அப்பெயரே நிலைத்துவிட்டது.
அமெரிக்க ராணுவத்தில் இன்றைக்கும் கூட அந்தப் பெயரே வழக்கில் இருக்கிறது. பசூக்கா
என்றால் ‘ஊதுகொம்பு’ என்று பொருள்.
நகைச்சுவை நடிகருக்கு எம்9ஏ1 ராக்கெட் லாஞ்சர் பார்ப்பதற்கு ஊதுகொம்பு மாதிரி
தெரிந்திருக்கும் போல. அதனால் தான் அப்படி அழைத்திருக்கிறார்.
---------------------
176 - 25.06.2018
டீஃப்ஸ்
உலகெங்கும்
பரவியிக்கும் சமயங்களில் கடவுளின் உருவங்களுக்கும் அது தொடர்பான
நம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை. மக்களின் அன்றாட உணவுத் தேவையைப் போல கடவுள்
குறித்த சிந்தனையும் மாற்றப்பட்டதன் விளைவுதான் அது. பயந்த சுபாவம் கொண்ட மனிதன்
தன்னை விட பலமுள்ள வேறொரு சக்தி இருக்கிறது என்று நம்பத் தொடங்கிய புள்ளியை புராதன
கார்பரெட் நிறுவனங்கள் கடவுளாக உருவாக்கின. இன்றைக்கு பணம் கொழிக்கும் வணிகமாக
கடவுள் மாற்றப்பட்டிருக்கிறார். அந்த வகையில் மிகவும் குறிக்கத்தக்க கடவுள்
டீஃப்ஸ். இது இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய பால்டிக் சமயத்தில் வணங்கப்பட்ட
தெய்வம். இது ஒரு ஆகாய ஆண் தெய்வம். இது லெய்மா என்கிற பெண் தெய்வத்துடன் இணைந்து
உலகத்தின் இயக்கத்தையும் மக்களின் விதியையும் நிர்ணயிக்கக் கூடியதாக
நம்பப்படுகிறது. சொர்க்கத்தில் பண்ணை வீடுகள் நிறைந்த பகுதியில் வசிக்கும்
பால்டிக் அரசராகவும் இத்தெய்வம் சித்திரிக்கப்படுகிறது. பால்டிக் சமயத்தைப்
பின்பற்றுவோர் விவசாயிகளையும் விளைநிலங்களையும் காப்பதற்காக எப்போதாவது குதிரை
மீதேறியோ ரதத்திலோ பூமிக்கு வந்து செல்வதாக நம்புகின்றனர். காலை மாலை விண்மீன்கள்
இவரது பிள்ளைகளாகக் கருதப்படுகின்றனர்.
---------------------
177 - 26.06.2018
சேலம் சூன்ய
வழக்கு விசாரணை
அமெரிக்கா
மாகாணமான ஒரேகானின் தலைநகரம் தான் சேலம்.
இது போர்ட்லாந்தின் தென்மேற்கில் வில்லாமெட்டி ஆற்றையொட்டி அமைந்துள்ளது. 1840 இல் உருவாக்கப்பட்ட இந்நகரம் 1859 இல் ஒரு மாகாணத்தின் தலைநகரமாக வளர்ந்தது. வேளாண்மை
அதிகமாக நடக்கும் இந்நகரத்தை ஒட்டிய பகுதிகளில் பழங்கள் அதிகமாக விளைகின்றன.
கால்நடைகள் அதிகம் உள்ளதால் பால்பண்ணைகளும் நிறைய உள்ளன.
இந்த
நகரத்தில் ‘சூன்யகாரி வழக்கு’
என்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மேற்கு இந்திய அடிமை ஒருவரால்
கூறப்பட்ட ஆவி பற்றிய கதைகளால் பல இளம்பெண்கள் தூண்டப்பட்டார்கள் என்று கூறி 3 இளம்பெண்கள் சூன்யகாரிகள் என்று குற்றம்
சுமத்தப்பட்டார்கள். இவ்வழக்கை சாமுவேல் சுவைல் என்னும் நீதிபதி உள்பட மூன்று
நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதன் விளைவாக 19 பெண்கள் சூன்யகாரிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டு
தூக்கிலிடப்பட்டனர். 130 பெண்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு
இக்குற்றச்சாட்டும்,
வழக்கு நடத்தப்பட்ட விதமும், வழங்கப்பட்ட தண்டனையும் சமூக ஆர்வலர்களால் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
அதனால் வழக்கு முடித்து வைக்கப்பட்டு தண்டனையும் விளக்கிக் கொள்ளப்பட்டது.
---------------------
178 - 27.06.2018
செனிகா மாநாடு
நியூயார்க்
மாகாணத்தில் உள்ள செனிகா அருவி பகுதியில் 1848 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19, 20 ஆம்
தேதிகளில் நடந்த மாநாடு ‘செனிகா மாநாடு’ அல்லது
‘செனிகா அருவி மாநாடு’ என்று
அழைக்கப்படுகிறது. இந்த மாநாடு தான் அமெரிக்க பெண்கள் வாக்குரிமை இயக்கம் உருவாகக்
காரணமாக அமைந்தது. செனிகா அருவிப் பகுதியில் வாழ்ந்த எலிசபெத் கேடி ஸ்டான்டன்
மற்றும் லூக்ரிஷா மாட் ஆகியோரின் முயற்சியால் கூட்டப்பட்ட இம்மாநாட்டில் 40 ஆண்கள் உட்பட 160க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். பெண்களின் பல்வேறு மனக்குறைகளும்
கோரிக்கைகளும் அடங்கிய அறிவிப்பு ஒன்று இம்மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட
இப்பிரகடனத்தில் பெண்கள் தங்களது வாக்குரிமையைப் பெற அணி திரளுமாறும் கோரிக்கைகளை
வலியுறுத்தி மனு அளிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இம்மாநாட்டில்
பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக கடுமையான கண்டனங்கள்
எழுந்தன. என்றாலும் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
---------------------
179 - 28.06.2018
சங்கிலிக்
கவசம்
உலகெங்கிலும்
போர்களில் சங்கிலிக் கவசம் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. சங்கிலிக் கவசத்தைப்
போரில் பயன்படுத்தியவர்கள் என்ற வகையில் ஐரோப்பியர்கள் முதலிடம் பெறுகின்றனர்.
பிற்கால ரோமானியர்கள் அணிந்திருந்ததற்கான குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன. பெரும்பாலோரால் இது ஆசியாவில் தான்
உருப்பெற்றிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. தொடக்க காலத்தில் இரும்பு வளையங்களை
துணியிலோ அல்லது தோலிலோ சேர்த்து இக்கவசத்தை உருவாக்கினர். பிற்காலத்தில்
சங்கிலிக் கவசத்தை வேறொரு உரைப்பகுதி கொண்டு தலைக் கவசத்தோடு
இணைத்திருக்கிறார்கள். இது கி.பி. 8ஆம் நூற்றாண்டில் ஒரு குட்டையான
அங்கியாக விளங்கியது. கி.பி. 12 ஆம்
நூற்றாண்டளவில் கைகள்,
கால்கள், பாதங்கள் என
உடலின் பல பாகங்களை மூடுவதாக உருப்பெற்றது. பின்னர் முதுகையும் மார்பையும் மூடும்
தகடுகள் சேர்க்கப்பட்டன. தகடு சேர்க்கப்பட்ட இந்த வடிவம் 14 ஆம் நூற்றாண்டளவில் முழுமையான தகட்டுக் கவசமாக மாறியது.
தகட்டுக் கவசம் உருவான பிறகு சங்கிலிக் கவசம் மறைந்து போயிற்று. இன்றைக்கு
ஸ்ரீரங்கம் கோயிலின் அருங்காட்சியகத்தில் சங்கிலிக் கவசத்தின் ஒரு பகுதி
காட்சிக்கு இருக்கிறது.
---------------------
180 - 29.06.2018
டோராவும்
சதுசேயரும்
சதுசேயர்
என்போர் யூத சமயத்தின் குருக்களில் ஒரு பிரிவினர். ஜெருசலமில் இரண்டாம் ஆலயம்
தகர்க்கப்பட்ட காலமான கி.பி. 70 வரை
ஏறக்குறைய 200 ஆண்டுகள் செல்வாக்குடன் இருந்தனர். செல்வந்தர்களாகவும்
பழைமைவாதிகளாகவும் இருந்த அவர்கள் தமக்குப் போட்டியாக இருந்த பரிசேயர்களைக்
காட்டிலும் அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்தனர். ‘டோரா’ என்னும் அவர்களது புனித நூல் தொகுதிகளில்
ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். அதனால் பிற சமயங்கள் போதித்த யாவற்றையும்
சதுசேயர் கண்ணைமூடிக் கொண்டு புறக்கணித்தார்கள். கிறிஸ்துவின் போதனைகளையும்
சந்தேகத்துடனே அணுகினார்கள். கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு சதுசேயர்களும்
ஒருவகையில் காரணமாக இருந்தார்கள் என்று இன்று வரை நம்பப்படுகிறது. அவர்களது
அளவில்லா செல்வமும் அரசரோடு இருந்த நெருக்கமும் அவர்களை பொதுமக்களிடம் செல்வாக்கு
மிக்கவர்களாக வைத்திருந்தது. இன்றைக்கும் கூட செல்வமும் அரசின் ஆதரவும் இருந்தால்
மக்களைச் சந்திந்து தம்மை வலிமையாக்கிக் கொள்ள முடியும் என நிருபித்துக்
கொண்டிருக்கும் அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சதுசேயர் பழைய உதாரணமாகத் திகழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
---------------------
181 - 30.06.2018
பகத்சிங்கின்
கேள்விகள்
இந்திய
விடுதலைப் போராட்டத்தின் சிவந்த முகமாக சித்திரிக்கப்படுகிறவர் இளம் புரட்சியாளர்
பகத்சிங். அவர் எழுதிய நூல்களும் மிகவும் புகழ் பெற்றது நான் ‘ஏன் நாத்திகனானேன்’ என்கிற நூல். இதில்
கடவுள் குறித்து பகத்சிங் எழுப்புகிற அடுக்கடுக்கான கேள்விகள் பதில்கள் அற்றவை.
கடவுள் மீது அதித நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு ஆத்திரம் மூட்டுபவை. இன்றைக்கு
வெவ்வேறு ஆளுமைகளால் வெவ்வேறு இடங்களில் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும்
கேள்விகள் அவை. சர்வ சக்தனாகிய கடவுள் ஒருமனிதன் பாவமோ, குற்றமோ செய்யும் போது ஏன் தடுக்கக் கூடாது? இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கும்படி ஒரு வகையான
நல்லுணர்ச்சியை அவன் பிரிட்டிஸாருக்கு ஏன் ஏற்படுத்தவில்லை? ஏன் முதலாளிகளின் இருதயங்களில் உதவிசெய்யும் எண்ணத்தை
உருவாக்கி தொழிலாளர் சமூகத்தையும் மனித வர்க்கம் முழுமையையும்
அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து காப்பாற்றாமல் இருக்கிறான்? ஒரு தேசம் மற்றொரு தேசத்தைக் கொடுமையாகக் கொள்ளையடிக்கும்
குற்றத்தை வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கிறது. இதைக் கண்ணாரக் கண்டபின்பும் கடவுள்
எங்கே இருக்கிறான் எனக் கேள்வி எழுப்பும் பகத்சிங், மனித வர்க்கத்தின் துன்பங்களை வேடிக்கையாகப் பார்த்து பொழுது
போக்கிக்கொண்டிருக்கிறான் கடவுள். அவனை வீழ்த்துங்கள் என்கிறார்.
---------------------
182 - 01.07.2018
நோ நாடகம்
‘நோ நாடகம்’ அல்லது ‘நோ தியேட்டர்’ எனக் குறிப்பிடப்படும் ஜப்பானின் தொன்மையான செவ்வியல் நாடக வடிவம்
இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நோ வகை நாடகங்களில் கதையில் வரும்
நாயகனைச் சுற்றியே கதை நகர்கிறது. இடையிடையே குழுப்பாடல்களும் இசைக்கப்படுகின்றன.
விரிவான அங்க அசைவுகளுடன் கூடிய குறிப்பும் நேர்த்தியான உடை அலங்காரமும் காட்சி
அமைப்புகளும் இந்த நாடகத்தில் வியப்பளிக்கும் விஷயங்களாக இருக்கின்றன. ஆண்கள்
மட்டுமே நடிக்கும் இவ்வகை நாடகத்தில் நடிகர்கள் அனைவருமே கதை சொல்லிகளாக
இருக்கின்றனர். கதையை நடித்துக் காட்டுவதைக் காட்டிலிலும் தம்முடைய தோற்றத்தாலும்
உடல்மொழியாலும் கதையை கச்சிதமாக உணர்த்தி விடுகின்றனர். ‘நோ’ என்ற சொல்லுக்கு ‘இயல்பாகவோ அல்லது பயிற்சியாலோ
பெற்ற திறமை’ என்று பொருள். 14 ஆம் நூற்றாண்டில் தனித்த நாடக வடிவமாக உருவாகத்
தொடங்கியிருந்த இது பழைய நாட்டிய நாடகத்தைத் தனக்காக தொடக்கப்புள்ளியாகக்
கொண்டிருக்கிறது. கடவுளின் வரலாற்றைச் சொல்லும் காமி நாடகம், போர் வீரர்களை மையமிட்ட ஷூரா மோனோ நாடகம், பெண்ணை மையமிட்ட கட்ஷூரோ மோனோ நாடகம், பலவகைப்பட்ட கருத்துகளைக் கொண்ட ஜென்டாய் மோனோ நாடகம், விலங்குகளையும் பூதங்களையும் மையமிட்ட கிசிகு நாடகம் என ஐந்து
வகைகளில் நோ நாடகம் நிகழ்த்தப்படுகிறது.
---------------------
183 - 02.07.2018
புரட்சியாளர்
எனும் சொல்
எல்லாச்
சொல்லும் பொருள் குறித்தனவே என்பார் தொல்காப்பியர். எந்த சொல்லும் வெற்றுச் சொல்
அல்ல. ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு சொல்லுக்குள்ளும்
பன்னூறு ஆண்டுகள் பொதிந்து கிடக்கின்றன. அந்தவகையில் புரட்சியாளர் என்னும் சொல்
கம்பீரமான வரலாற்றைச் சுமந்து நிற்கிறது. மன்னராட்சி அமைப்பிலோ அல்லது மக்களாட்சி
அமைப்பிலோ தீவிர மாற்றத்தை விரும்புகிற அல்லது அது தொடர்பான சிந்தனைகள் வழி
மக்களைத் திரட்டுகிற ஆளுமையை ‘புரட்சியாளர்’ என்னும் அடைமொழியோடு அழைத்து வந்திருக்கிறார்கள். இச் சொல் ரூட் என்னும்
லத்தின் மொழிச் சொல்லில் இருந்து வந்தது. இச்சொல்லை 1797 இல் சார்லஸ் ஜேம்ஸ் என்பவர் உலக மனித குல வாக்குரிமையின்
புரட்சிகரமான சீர்திருத்தத்தை வலியுறுத்தும் போது முதன் முதலாகப்
பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதற்குப் பிறகுதான் பிரான்ஸில் 1848க்கு முன்னால் குடியரசுக் கட்சியினரும் உலக ஆண்கள்
வாக்குரிமைக்குக் குரல் கொடுத்தவர்களும் புரட்சியாளர் என
அழைக்கப்பட்டிருக்கிறார்கள். பிறகு மார்க்சியவாதிகளைப் குறிப்பிடப் பயன்பட்டிருக்கிறது.
வலது மற்றும் இடதுசாரி அரசியலில் தீவிரவாதத் தன்மையிலான செயல்பாட்டாளர்களைக்
குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
---------------------
184 - 03.07.2018
பவுஹாட்டன் -
மக்கள்,
மொழி, போர்.
அமெரிக்காவின்
ஒக்லகோமா,
நியூ ஜெர்சி,
வர்ஜினியா மற்றும் கனடாவில் வாழும் 30க்கும் மேற்பட்ட அமெரிக்க செவ்விந்தியக் குடிகள் பவுஹாட்டன்
என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் பேசும் மொழியும் பவுஹாட்டன் என்றே
குறிப்பிடப்படுகிறது. இந்த மொழி அல்கான்க்வீய என்கிற மொழிக் குடும்பத்தைச்
சார்ந்தது. இவர்கள் மிகப் பழைய காலத்தில் வர்ஜினியாவின் கடலோரத்தின்
பெரும்பகுதியிலும் செஸாபீக் வளைகுடாவின்
கிழக்குக் கடற்கரையிலும் கூட்டமாக
வாழ்ந்து வந்தனர். அக்கூட்டத்திற்கு தலைவனாக இருந்த பவுஹாட்டனின் பெயரே அக்குடியினருக்கும்
அவர்களது மொழிக்கும் வழங்குவதாயிற்று. இக்குடியினர் வாழ்ந்த கிராமங்கள் நீண்ட
குடியிருப்புகளைக் கொண்டதாக இருந்தது. வீட்டின் கூரை மரப்பட்டைகளாலும்
கோரைப்பாய்களாலும் மூடிப்பட்டிருந்தது. பெண்கள் வேளாண்மையிலும் ஆண்கள்
வேட்டையாடுவதிலும் ஈடுபட்டனர். தீரத்துடன் போராடி ஆங்கிலக் குடியேற்றங்களைத்
தடுத்தனர். ஆங்கிலேயர்களைத் தடுப்பதற்காக பவுஹாட்டன் இனத்தவர்கள் செய்த போர்கள்
பவுஹாட்டன் போர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
---------------------
185 - 04.07.2018
முதல்
துணிச்சல்காரி
கி.பி.
5 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ்ச்சமூகத்தில் வாழ்ந்த
கணிகையர் பற்றிப் பேசுகிற காப்பியம் மணிமேகலை. பொதுச் சமூகத்தின் இசைவுக்கு ஏற்ப
கணிகையர் நடந்து கொள்ளாவிட்டால் ஏழு செங்கற்களைச் சுமந்து கொண்டு பொது அரங்கத்தைச்
சுற்றி வரவேண்டும் என்ற ஒரு தண்டனை முறை வழக்கில் இருந்திருக்கிறது. பல நேரங்களில்
அக்கணிகையர் ஜாதி விலக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை மணிமேகலை
வெளிப்படையாகவே பதிவு செய்திருக்கிறது. செலர்வந்தர்களின் அத்துணை தேவைகளையும்
பூர்த்தி செய்வதற்கென்று இழிதொழில்கள் பரவலாகிவிட்ட காலத்தில் அதனை எதிர்த்து
குரல் எழுப்புவதற்கு மணிமேகலைக்கு தனி துணிச்சல் இருந்திருக்க வேண்டும். அதனால்
தான் தன்னை பொதுச்சமூகத்தில் இருந்து விலக்கிக்கொண்டு துறவெய்துகிறாள். விலகி
நின்று உணவளித்து சமூகத்திற்கு புத்தி புகட்டுகிறாள். தலைமயிரை
மழித்துக்கொள்கிறாள். விடுதலையை ஆராதிக்கிறாள். மொத்தத்தில் இழிதொழிலுக்கு
எதிராகக் கிளர்ந்தெழுந்த முதல் துணிச்சல்காரியான மணிமேகலை தன் இருப்பின் வழி ஒரு
செய்தியைச் சொல்கிறாள். ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை வேண்டுமென்றால் அவர்கள் தாம்
செய்கிற இழிதொழிலை விட்டு வெளியேற வேண்டும்
என்பதுதான் அந்தச் செய்தி.
---------------------
186 - 05.07.2018
ஸ்கைலாப்
அமெரிக்காவின்
முதல் விண்வெளி நிலையத்தின் பெயரே ஸ்கைலாப். சாட்டன் 5 என்ற ஏவுகணையால் 1973 இல் பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு ஏவப்பட்டது. அதில் அதீத ஆற்றல் வாய்ந்த
சூரியத் தொலைநோக்கி,
எடையில்லாத நிலையில் மனிதனின் உடல் தன்னை எப்படி
தகவமைத்துக் கொள்கிறது என்பதைக் கண்டறிவதற்கான கருவிகள், ஆய்வுக்குத் தேவையான இன்னபிற கருவிகள் ஆகியன இடம்
பெற்றிருந்தன. இந்த ஸ்கைலாப்பில் மூன்று விண்வெளி வீரர் குழுக்கள் இடம்
பெற்றிருந்தனர். ஒருகட்டத்தில் இந்த நிலையத்தின் வெப்பஉறை பாதிக்கப்பட்டதால்
சூரியனின் வெப்பத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் செயல் இழந்தது. பிறகு 1979 இல் பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழைந்து வெடித்துச் சிதறியது. இதனுடைய சிதறிய
பாகங்கள் இந்தியப் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியிலும் மேற்கு
ஆஸ்திரேலியாவிலும் விழுந்தன. ஸ்கைலாப் பூமியில் குறிப்பாக தமிழ்நாட்டை ஒட்டிய
பகுதியில் விழ வாய்ப்பிருப்பதாக வந்த அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் தங்களது ஆடு.
மாடுகளை சொற்ப விலைக்கு விற்றுவிட்டனர். 1988 இல் நகர்சார் கதைப்பாடல் என்னும் பொருண்மையில் பேராசிரியர் கே.ஏ.குணசேகரனால்
தொகுக்கப்பட்ட ‘ஸ்கைலாப் கதைப்பாடல்’ இது பற்றிய செய்திகளை விரிவாகத் தருகிறது.
---------------------
187 - 06.07.2018
வியர்வைக்
குடில்
சடங்குகள்
மூலம் உடலைத் தூய்மைப்படுத்தும் குடில் வியர்வைக் குடில் எனப்படுகிறது. முதலில்
மரக்கன்றுகளை வட்டவடிவில் சுற்றி வளர்த்து உருவாக்குகிறார்கள். அதன்பின்
அம்மரங்கள் தோல் அல்லது கம்பளிப் போர்வைகளால் மூடப்பட்டு குடில்
உருவாக்கப்படுகின்றது. சூடான கற்கள் மீது தண்ணீரைக் கொட்டுவதால் உருவாகும்
நீராவியால் குடில் சூடுபடுத்தப்படுகிறது. இந்தக் குடிலை உருவாக்கும் போதும்
பயன்படுத்தும் போதும் சில சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. அந்தச் சடங்குகள் வழி
குடில் புனிதத்தன்மை அடைகிறது என்பது அவர்களது நம்பிக்கை. அந்தச் சடங்குகளுக்குப்
பிறகு ஆறு திசைகள்,
மனிதனின் இம்மை உலகம், மறுமை உலகம் ஆகியவற்றை இணைக்கும் மையத்தின் குறியீடாக வியர்வைக் குடில்
விலங்குவதாக மக்கள் நம்புகின்றார்கள். அமெரிக்காவின் பூர்வ குடியினரான
செவ்விந்தியர்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கும் இதை
அவர்கள் முக்கியச் சடங்காகக் கருதுகிறார்கள். இதனை நம்புகின்ற மற்ற இனத்தினரும்
வியர்வைக் குடிலால் கவரப்பட்டுள்ளனர். விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடாகக்
கருதப்படுகின்ற நாடுகளிலும் மூடநம்பிக்கைகள் வழக்கத்தில் இருப்பது நகைமுரணாகவே
படுகிறது.
---------------------
188 - 07.07.2018
மவுன்ட்
வெர்னான்
அமெரிக்காவின்
முதல் குடியரசுத் தலைவரான ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்ந்த இடமும் அவரது கல்லறை உள்ள
இடமும் சேர்ந்த நிலப்பரப்பு ‘மவுன்ட்
வெர்னான்’ எனக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவின் வடக்கு
வர்ஜினியாவில் போடோமேக் என்னும் ஆற்றங்கரையை ஒட்டியதும் கொலம்பியா மாவட்டப்
பகுதியுமான மவுன்ட் வெர்னான் இன்றும் மக்கள் விரும்பி பார்க்கச் செல்லும் சுற்றுலாத் தளமாக இருந்து வருகிறது. பரம்பரைச் சொத்தாக இருந்த மவுன்ட் வெர்னான் 1751 இல் ஜார்ஜ் வாஷிங்டனின் கைக்கு வந்து சேர்ந்தது. அவர்
மறைவுக்குப் பிறகு அவரது உடலும் அவரது மனைவியின் உடலும் அந்த இடத்தில் தான்
அடக்கம் செய்யப்பட்டது.
அமெரிக்காவின்
சுதந்திரப் போராட்ட வீரராகவும் முதல் குடியரசுத் தலைராகவும் இருந்த வாஷிங்டனின்
கல்லறை மற்றும் அவர் வாழ்ந்த இடத்தை அமெரிக்க அரசு தனது சொந்த செலவில்
பராமரிக்கவில்லை. தமிழ்நாட்டில் இருப்பது போன்ற அழகிய கடற்கரை அங்கு இருந்தாலும்
கடற்கரையில் பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தில் கல்லறையைக் கட்டி விழா
எடுக்கவில்லை. 1858 இல் வெர்னான் பகுதி அமெரிக்க ஐக்கிய பெண்கள் சங்கத்தினர் 2 லட்சம் டாலர் பொருள் செலவில் கல்லறையையும் வீட்டையும்
அதைச் சுற்றியுள்ள 200 ஏக்கர் நிலத்தையும் விலைக்கு வாங்கி இன்று வரை பராமரித்து
வருகின்றனர்.
---------------------
189 - 08.07.2018
பிரத்யேகப்
புத்தர்
பௌத்த
சமயத்தில் புத்தரின் போதனையால் அல்லாமல் தம்முடைய சொந்த முயற்சியால் ஞானம் அடையும்
ஒருவரை ‘பிரத்யேகப் புத்தர்’
என்று அழைக்கிறார்கள். சுயமாக ஞானம் அடையும் வழியை பௌத்த சமயத்தின் தேரவாத
பிரிவினர் மட்டுமே வழக்கத்தில் கொண்டிருந்தனர். மஹாயானப்
பௌத்தம் தானே ஞானம் பெறும் பிரத்யேக நிலையை சிறுமையானதாகக் கருதி
ஏற்றுக்கொள்வதில்லை. அதோடு தமது இறுதி முக்தியைத் தள்ளிப் போட்டு மற்றவர்களின்
உய்வுக்காக பாடுபாடும் நெறியான போதிசத்துவரின் கொள்கை நெறியையும் தழுவி நிற்கிறது.
அதாவது போதிசத்துவரின் நிலைக்கு அப்பாற்பட்டதும் மஹாயானத்தின் கொள்கைக்கு
மாற்றானதுமான தேரவாதத்தில் இருந்தே பிரத்யேகப் புத்தர் உருவாக முடியும். உருவாகிக்
கொண்டும் இருக்கிறார்கள்.
ஒரு
சமயத்தில் ஏற்பாடுகின்ற முரண்கள் சமயத்தை பிளவுபடுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட
தலைமைகளை உருவாக்கி சமயத்தை பரவலாகி இருக்கின்றன என்பதை ஒப்புக்கொண்டாலும், சமயப் பிரிவினையில் கருத்தியல் முரண்களை விட அதிகாரத்தை
தனதாக்கிக் கொள்ளும் போட்டியும் வணிக மனநிலையுமே காரணமாகி இருக்கின்றன. பிரத்யேகப்
புத்தரை ஏற்றுக்கொள்வதா அல்லது விலக்கிவைப்பதா என்பதை இந்தத் தளத்தில் தான்
புரிந்துகொள்ள முடியும்.
---------------------
190 - 09.07.2018
நெஸாமியின்
ஏழு அழகு
பாரசீக
இலக்கியத்திற்கென்று சில பாரம்பரியமும் அழகியல் தன்மையும் இருக்கின்றன.
அம்மொழியில் அமைந்த காதல் கவிதைகள் உலகக் கவிதைகளில் பெருமளவில் தாக்கம் செலுத்திய
இருக்கின்றன. பாரசீக இலக்கியத்தில் இன்றைக்கும் பெரும் மரியாதையோடு
போற்றப்படுகிறவர் நெஸாமி. 1150 மற்றும் 60களில் பாரசீக
இலக்கியத்தின் காதல் காவியத்தின் மகாகவியாக இருந்தவார். நிஸாமி என்றும் அழைப்பார்கள். இன்றைய அஸெர்பெய்ஜானில்
வாழ்ந்தவர் என்ற குறிப்பைத் தவிர வேறு குறிப்புகள் நெஸாமியைப் பற்றிக் கிடைக்கவில்லை.
இவர் இயற்றியவற்றுள் துள்ளல் பா வடிவத்தை ஒத்த சில
கஸீதாக்களும்,
கஸல் கவிதைகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஐந்து ஐந்து அடிகளில்
அமைந்த கம்ஸே என்கிற கவிதை வடிவத்தில் இவர் இயற்றிய 30,000 ஈரடிகளைக் கொண்ட ஐம்பெரும் கவிதைகள் இவருக்கு மாபெரும்
புகழைப் பெற்றுத் தந்தன. வசன நடையில் அமைந்துள்ள இக்கவிதைகளின் மொழி மிகவும்
நேர்த்தியான நடையை ஒத்திருக்கின்றன. இந்த ஐம்பெரும் கவிதைகளில் நான்காவது கவிதையான
‘தி செவன் ப்யூட்டிஸ்’ என்கிற கவிதை நெஸாமியின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.
---------------------
191 - 10.07.2018
ப்ளிஸ்டோஸீன்
சகாப்தம்
க்வார்ட்டனெரி
என்று சொல்லக் கூடிய மிகப்பெரிய காலத்தின் இரண்டு சகாப்தங்களில் மிகப்பெரியதும்
முதலாவதுமான சகாப்தமே ப்ளிஸ்டோஸீன் சகாப்தம் எனப்படுகிறது. இதன் காலம் 18 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி கி.மு.10,000 ஆண்டளவில் முடிந்திருக்கிறது என்று
கணித்திருக்கிருக்கிறார்கள். இந்த சகாப்தத்தில் தான் பனிக்காலம் உச்சத்தில்
இருந்தது. அப்போது இன்றைய பூமியின் பரப்பில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு பனியால் மூடியிருந்தது. இந்தக்
காலத்தில் தான் விலங்குகள் இன்றைய வடிவத்தை பெற்றன. புதிய வகைப் பாலூட்டிகள் நிறைய
தோற்றம் பெற்றன. மனிதர்களும் இந்தக் காலத்தில் தான் தோற்றம் பெற்றிருக்கின்றனர்.
இக்காலத்தின் முடிவில் பேரழிவு ஒன்று ஏற்பட்டு அதன் பாதிப்பு சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. இதில் 30 க்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்கள் முற்றாக அழிந்து போயின.
இந்தப் பேரழிவுக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றம். மற்றொன்று
மனிதனின் தீராத ஆசை.
---------------------
192 - 11.07.2018
வீதி
விளையாட்டின் விதி
வீதி
விளையாட்டுகள் கிராமங்களில் கூட இன்றைக்குக் குறைந்துகொண்டு வருகின்றன. சிறுவார்கள்
தமக்கு எதிராக ஒரு எதிரியை உருவாக்கிக் கொண்டு விளையாடுகின்ற விளையாட்டில் ஏற்படுகின்ற
வெற்றிகளும் தோல்விகளும் சிறுவர்கள் மத்தியில் ஒரு வித உளவியல் கல்வியாக இருந்து
வந்தன. விளையாட்டுகளில் எதிரி ஒரு போதும் வெறுக்கப்பட்டதில்லை. விளையாட்டில் மட்டும் எதிராக இருந்துவிட்டு
விளையாட்டு முடிந்த பின் இயல்பாக இணைந்தே இருப்பார்கள். விளையாடும் போது
அவர்களுக்குள் விட்டுக்கொடுத்தல்களும் சகிப்புத் தன்மையும் இருக்கும். இந்தப்
பக்குவம் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்பும் அவர்களது வாழ்க்கையைப் புரிந்து
கொள்வதற்கான தொடக்கமாக அமைந்தன. சிறுவார்களின் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தன.
புழுதியில் விளையாண்ட சிறுவர்களின் உடலில் நோயை எதிர்க்கும் சக்தி அதிகமாகவே
இருந்தது. தொலைக்காட்சியும் கணினியும் செல்போனும் சிறுவர்களின் விளையாட்டை தின்னத்
தொடங்கிய பின் சிறுவர்கள் சிறு தோல்விக்குக் கூட துவண்டு விடுகிறார்கள். உடலும்
மனமும் பாதிக்கின்றன. இன்றைய நவீன யுகம் அடிக்கடி நோய்களுக்கு ஆளாகும் மன
வலிமையற்ற குழந்தைகளைத் தான் நம் கைகளில் தந்துவிட்டிருக்கிறது.
---------------------
193 - 12.07.2018
உயரப் பரந்த
கொடி
இரண்டாயிரம்
முதல் இரண்டாயிரத்து பதினைந்து வரை தமிழ்த் திரையில் இலக்கியத் தரமான பாடல்களைக்
கொடுத்தவர் நா.முத்துகுமார். தெரிந்த சொற்களைக் கொண்டு யாரும் யூகித்து இருக்காத
உருவகங்களால் கவிதையை அழகுபடுத்தியவர். ஆயிரக்கணக்கான புதிய சொற்களைச் சந்தங்களில்
வைத்து கவிதையையும் இசையையும் அழகாக்கியவர். அவரது கவிதைகளில் காதல் ததும்பும்
இடங்களில் எல்லாம் ஒவ்வொருவரும் அவரவருக்கான காதலை கண்டடையக் கூடும் படியான
அடர்த்தியும் லாவகமும் இருந்தது. அவர் திரைத்துறையில் இருந்த பதினைந்து
வருடங்களில் எந்த வருடமும் விருது பெறாத வருடமாக இல்லை. தங்க மீன்கள் படம் வெளியான
ஆண்டு அவருக்கு விருதுகளின் ஆண்டாகவே அமைந்தது. மிகவும் குறைந்த வயதில்
திரைத்துறையின் உச்சபட்ட உயரம் தொட்டு உயரப் பரந்த கொடி நா.முத்துகுமார் இன்று
இருந்திருந்தால் தமிழ்ப்பாடல்கள் மேலும் மேருகேறியிருக்கும். ஒருவர் எவ்வளவு
முக்கியமானவர் என்பதை அவர் இல்லாத வெற்றிடமே உணர்த்தும் என்பார்கள்.
முத்துக்குமார் எவ்வளவு திறமையான கவிஞர் என்பதை அவரது வெற்றிடமே உணர்த்திக்
கொண்டிருக்கிறது. இன்று முத்துக்குமாரின் 43 வது பிறந்த நாள்.
---------------------
194 - 13.07.2018
மீனின்
மகிழ்ச்சி
ஒருநாள்
ஒரு தலைமைக் குரு தனது சீடருடன் ஆற்றின் கரையோரமாக நடந்து கொண்டிருந்தார்.
ஓரிடத்தில் அமர்ந்த அவர் நீரின் சலனமற்ற ஓட்டத்தைக் கண்டு பார்வையைக் குவித்தார்.
நீரைப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஆற்று மீன்கள் கண்ணாடித் தொட்டிக்குள்
இருப்பதைப் போன்று தெளிவாக வெளியில் தெரிந்தன. அந்த அளவுக்கு நீர் தூய்மையுடன்
ஓடிக் கொண்டிருந்தது. நிச்சயம் அது தொழிற்சாலையும் சாக்கடையும் கண்டு பிடிக்கப்படாத
காலமாக இருந்திருக்க வேண்டும். குருவின் செயலையும் ஆற்று மீன்களையும் கண்ட சீடர்
தனது குருவிடம் மீன்கள் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றன என்றார். அதற்கு
குரு மீன் மகிழ்ச்சியாக இருப்பது உனக்கு எப்படி தெரியும் எனக் கேட்டார். சீடர்
அதற்கு ‘அதைப் பார்த்தாலே தெரிகிறதே குருவே. துள்ளிக் குதித்து
நீந்துவதைப் பாருங்கள்’
என்றார். அதற்குக் குரு, ‘மீனுக்கு அது வாழும் உலகம் சலனமற்றும் தூய்மையாகவும் இருக்கிறது. அதனால் அது
மகிழ்ச்சியாக இருக்கிறது. அது மட்டுமில்லை. தொட்டுவிடும் தூரத்தில் நிற்கின்ற நாம்
அதைப் பிடிக்கும் எண்ணமற்று இருக்கிறோம். அதனாலும் அது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மகிழ்ச்சி என்பது, தான் வாழ்வதில் இல்லை. தூய்மையான, சலனமற்ற உலகில் பிறரை வாழ வைத்துப் பார்ப்பதில் தான்
இருக்கிறது’
என்றார்.
---------------------
195 - 14.07.2018
786 க்கு மாற்று 969
அனைத்து
சமயங்களைப் போல பௌத்தமும் அன்பைத்தான் போதித்தது. என்றாலும் 2012 இல் இருந்து இன்று வரை மியான்மாரின் பௌத்த சமயத்தினர்
அன்பை கொஞ்சம் தள்ளி வைத்தனர். பௌத்த பிக்குகளே மதச் சிறுபான்மையரான ரோஹியாங் முஸ்லீம்களுக்கு எதிராக பௌத்தர்களை முன்னிருத்தினர். அசின் விராத் என்னும் பிக்கு ஒருவர்
பௌத்தர்களைப் பார்த்து நீங்கள் கருணையும் அன்பும் நிறைந்தவராக இருக்கலாம். அதற்காக
பைத்தியம் பிடித்த நாயின் அருகே தூங்க முடியாது என்று முரண்பாட்டுச் சூழலை
விரிவாக்கினார். அவர் தான் மியான்மாரில் முஸ்லீம்கள் தொழில் துவங்கும் போதும் கடிதம் எழுதும் போதும் மங்கள
நிகழ்வுகளிலும் பயன்படுத்துகிற அப்ஜத் கணிதக் குறியீட்டு மொழியான 786 என்ற எண்குறியீடு உள்ள வணிகத் தளங்களைப் புறக்கணியுங்கள் என்றார். அதற்குப்
பதிலாக புத்தரின் 9 பெருங்குணங்கள், 6 தத்துவங்கள்,
9 நெறிமுறைகள் ஆகியவற்றைக் குறிக்கும் 969 என்ற எண்ணை மீட்டுருவாக்குங்கள் என்றார். வணிகம்
அரசியலாகவும் அரசியல் வணிகமாகவும் இருக்கும் வரை நிலைமை இப்படித்தான் இருக்கும்.
---------------------
196 - 15.07.2018
கவிமொழியில்
ஓர் அறிவியல்
கவிதை
மொழிக்கென்று ஒரு குணம் இருக்கிறது. சாட்டையைப் போன்றது அது. சுழற்றி அடிக்கும்
விதத்தில் அதன் வீரியம் வெளிப்படும். மணிக்கணக்கில் பேசி புரிய வைக்க வேண்டிய
சித்தாந்தங்களைக் கூட தேர்ந்த கவிதை மொழி ஒரு சில சொற்றொடரில் வெளிப்படுத்தி
விடும். பூலோக சுந்தர விசயன் என்பவர் இப்படி ஒரு கவிதையை எழுதியிருக்கிறார்.
‘நம்மீது அவர்கள் எறிந்த கற்களை பொறிக்கி வையுங்கள். மார்பில் முத்தமிட்ட
துப்பாக்கி ரவைகளை எடுத்து வையுங்கள். இரத்தம் கசிந்த தடியடித் தழும்புகளை எண்ணி
வையுங்கள். ஏனென்றால் அவர்கள் வட்டி வாங்கியே பழக்கப்பட்டவர்கள்’. என்பது தான் அந்த கவிதை. அதிகார வர்க்கம் தனது மூர்க்கத்தை காட்டும் போதெல்லாம்
அதை எச்சரிக்கும் இக்கவிதை ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்கிற அறிவியலை
இலக்கியமாக்கிய விதத்தில் மேலோங்கி நிற்கிறது.
---------------------
197 - 16.07.2018
கிழிக்க
வேண்டியன
நடிகரும்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் சாதிச் சான்றிதழைக் கிழித்துவிட்டால்
சாதி அழிந்துவிடும் என்று சமீபத்தில் சொல்லியிருந்தார். சாதிச் சான்றிதழைக்
கிழித்தவுடன் சாதி அழிந்து விடுவதற்கு சாதி என்ன காகிதத்திலா இருக்கிறது என்று
நமக்குள் இயல்பாக எழும் கேள்விக்கு அவர் தான் விளக்கம் சொல்ல வேண்டும். சாதி
மனங்களில் இருக்கிறது. தொடுவதில் இருக்கிறது. அமர்வதில் இருக்கிறது. குடிக்கும்
இடத்திலும் படுக்கும் இடத்திலும் இருக்கிறது. நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பதற்கு பயன்படுத்தும் அளவுகோளில் இருக்கிறது. திறமையானவர் யார்? திறமையாற்றவர் யார்?
என்பதற்கு வைக்கப்படும் தேர்வுகளில் இருக்கிறது. பதவியில்
இருக்கிறது. பதவி உயர்வில் இருக்கிறது. வாக்குச்சீட்டில், வாக்காளரில், வேட்பாளர் தேர்வில் சாதி இருக்கிறது. பிச்சை எடுப்பதில் சாதி இருக்கிறது.
விலைமகளைத் தேர்வு செய்வதில் கூட சாதி இருக்கிறது. கோயிலிலும் குடிக்கும் நீரிலும்
சாதி இருக்கிறது. இவைகளை எல்லாம் கிழிக்காமல் சாதி சான்றிதழைக் கிழித்தால் சாதி
அழிந்து விடும் என்று கமலஹாசன் சொல்வது வேர்களை விட்டுவிட்டு கிளைகளை வெட்டுவதற்கு
ஒப்பானது.
---------------------
198 - 17.07.2018
ஞானச் சிறுவன்
நாடோடி
ஒருவர் தினமும் தான் காணும் காட்சிகளையும் பேசும் உரையாடல்களையும் எழுதி வைக்கும்
பழக்கமுடையவராக இருந்தார். ஒருநாள் அவர்
மேய்ச்சல் நிலம் வழியாக பயணம் செய்துகொண்டிருந்த போது மாடு மேய்க்கும் சிறுவனைக்
கண்டார். சிறுவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்த அந்த நாடோடி மாடு என்ன விலை எனக்
கேட்டார். அதற்கு சிறுவன் மூன்று ரூபாய் கொடுத்துவிட்டு ஓட்டிச் செல்லுங்கள்
என்றான். அதற்கு அவர் மூன்று ரூபாய் என்பது அதிகமான விலை. மாட்டின் தோல், கால், தலை, குடல் என்று தனித்தனியாக விலை வைத்து வியாபாரம் செய்தாலும்
என்னால் அந்த தொகையைப் பெற முடியாது என்றார். அதற்கு அந்தச் சிறுவன் மாட்டை
மாமிசமாகப் பார்த்தால் மாட்டின் மதிப்பு குறைவாகத் தான் தெரியும். மாட்டை வாழ்வின்
ஆதாரமாகப் பாருங்கள். அது இன்னும் குறைந்தது பத்துக் கன்றுகள் ஈனும். அதன்படி
பத்தாண்டுகளுக்குப் பால் கொடுக்கும். பத்துக் கன்றுகள் பத்து மாடுகள் ஆகும்.
பத்தும் பத்துப் பத்தாகப் பல்கிப் பெருகும். ஒன்றின் மதிப்பு அழித்துப்
பார்ப்பதில் இல்லை. ஆக்கிப் பார்ப்பதில்தான் இருக்கிறது என்றான். அவனைவிட்டு
அகன்று சென்ற அந்த நாடோடி அன்றைய நாட்குறிப்பில் இன்று மாடு மேய்த்துக்
கொண்டிருந்த புத்தனைக் கண்டேன் என்று எழுதி வைத்தார்.
---------------------
199 - 18.07.2018
தோஹர்ராவும்
தோடயமும்
தமிழர்
இசையென்று மிகவும் பாரம்பரியமான இசைமரபு ஒன்று தமிழகத்தில் இருந்து வந்தது.
இன்றைக்கு அதிலும் கலப்புகள் அதிகமாக வந்துவிட்டன. இசை, பண்பாடு உள்ளிட்ட பலவற்றிலும் கலப்பற்ற தன்மையைப் பார்ப்பது
அரிதாகிவிட்டது. ஆட்சி அதிகாரம் கைமாறும் போதெல்லாம் மக்களின் பண்பாடு
மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. பண்பாட்டை மாற்றுதல் என்பதே ஒரு வித அரசியல்
நடைமுறையாகவும் இருந்து வந்திருப்பதை வரலாற்றில் பல இடங்களில் காண முடிகிறது. ‘தோஹர்ரா’ என்பது மராட்டியர்கள் தஞ்சையை ஆள வந்த போது
தமிழ்நாட்டிற்கு அவர்களால் கொண்டுவரப்பட்ட ஒருவகையான இசைப்பாட்டு மரபு. ‘தோடயம்’ என்பது வடமொழி பாட்டுவகையைச் சார்ந்தது.
விஜய நகர மன்னர்களோடு தெலுங்கு பேசும் மக்களும் தமிழ்நாட்டிற்கு வந்ததால்
சீசபத்யம்,
த்விபதம் என்கிற தெலுங்கு பாட்டு வகையும் தமிழில் கலந்தன.
இப்படி உள்நாட்டு அயல்நாட்டு பண்பாட்டு கலப்புகள் வெகுவாக தமிழர்களின் வாழ்வியலில்
பெரும் மாற்றங்களை எற்படுத்திவிட்ட நிலையில் இனத்தூய்மையும் மொழித்தூய்மையும்
இப்பொழுது அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அது மாநில உரிமைகளை மீட்டெடுக்க
வேண்டிய தேவையையும் உணர்த்துகிறது.
---------------------
200 - 19.07.2018
நிதான
மனநிலையின் வகிபாகம்
பலர்
சரியான நேரத்தில் தவறான முடிவை எடுத்து விடுவார்கள். பலர் தவறான நேரத்தில் சரியான
முடிவை எடுப்பார்கள். இரண்டுமே பொருத்தமற்றது. சரியான நேரத்தில் சரியான முடிவை
எடுப்பதுதான் சரியானதாக இருக்க முடியும். சரி. நேரத்தை எப்படி சரியான நேரமா அல்லது
தவறான நேரமான எனக் கணிப்பது? முடிவை எப்படி
சரியான முடிவா அல்லது தவறான முடிவா எனக் கணிப்பது? என்றால் அது தான் வெற்றியின் ரகசியம். திட்டமிடுவதில் இருக்கிற குழப்பம் தான்
தடுமாற்றத்திற்கு முதல் காரணமாகவே அமைகிறது. கணிப்பதில் இருக்கும் துல்லியம் தான்
வெற்றியை மிக அருகில் கொண்டு வருகிறது. ஆக நிச்சயமான வெற்றிக்குத் தேவையாக
இருப்பது துல்லியமான கணிப்பு தான். துல்லியமான கணிப்பு எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் கைவசப்படாது. அதற்கு நிதானமான
மனநிலை முக்கியம். மனநிலை நிதானமாக இருந்து கணிப்பு துல்லியமாக அமைந்து விட்டால்
அவர்தான் வெற்றி பெற்ற அரசியல் தலைவராகிறார். ராசியான ராணுவத் தளபதி ஆகிறார்.
திறமையான மருத்துவராகிறார். சாதித்த தொழிலதிபராகிறார். நல்ல மனைவியாகவோ கணவனாகவோ ஆகிறார்.
……………..
201 - 20.07.2018
அகுதை
‘பேரரசு உருவாக்கம்’ என்பதை ‘சிற்றரசுகளின்
வீழ்ச்சி’ என்றும் கூறலாம். மக்களை ஒருங்கிணைத்து ஊராக்கி
அல்லது ஒரு குலத்தின் கூட்டம் ஊராகப் பெருகி ஒரு குடித்தலைவனின் கீழ் நிலைபெற்று
அவர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் வளம் பெறும் போது அவர்களை விட அதிகார
வலிமையுடையவர்கள் அதைப் பறித்து தனக்குக் கீழ் வைத்துக்கொள்வார்கள். அதுதான்
அனைத்து பேரரசுகளின் உருவாக்கத்திற்குள்ளும் மறைந்து கிடக்கும் உண்மை. இன்றைக்கு
மதுரை என்றாலே பாண்டியர் என்கிற பேரரசு அடையாளம் கண்முன் வந்து நிழலாடிவிட்டுப்
போகும். அந்த அளவுக்கு மதுரை பாண்டியர்களோடே இணைத்துக் காணப்படுகிறது. அப்படி
இணைத்துக் காண்பதற்கு மதுரை பாண்டியர்கள் உருவாக்கிய நகரமா என்றாலும் அதுவும் இலர்லைதான்.
மதுரை முதலில் வேளிர்குல அரசனான அகுதை என்பவன் கட்டுப்பாட்டில் இருந்த நகரம்.
அவனிடமிருந்து மதுரையைப் பறித்த பாண்டியர்கள் தனது அதிகாரத்தை நிறுவினர். அதாவது
பறித்தவர்கள் மதுரையின் அடையாளமாகிப் போனார்கள். பறிகொடுத்தவர்கள்
மறைக்கப்பட்டார்கள். மதுரை பாண்டியர்கள் ஆண்ட மண் என்பதை விட அகுதை என்பவன்
வீழ்த்தப்பட்ட மண் என்றுதான் வரலாற்றில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்படி
எழுதவில்லை. இதில் வியப்பெய்துவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் பேரரசுகளின் வரலாறு
என்பதே துரோகங்களின் வரலாறு தானே.
---------------------
202 - 21.07.2018
அழகாய்
பிறந்து ஊரை அழித்தவள்
‘அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை மரம்படு சிறுதீப் போல அணங்காயினள் தான்
பிறந்த ஊர்க்கே’ என்பது சங்கப்பாடல். இப்பாடலில் பெண்ணின்
அழகு ஊருக்கு வருத்தம் தருவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் என்பவள் அழகாகப்
பிறந்து விட்டால் அவளை திருமணத்தின் வழி உரிமையாக்கிக் கொள்ள வேந்தன் பெண் கேட்டு
வருவான். மகளைப் பெற்றவர்கள் அவனுக்குக் கொடுக்கவில்லை என்றால் அவனால் பெண்ணின்
ஊர் அழிக்கப்படுவது ஒரு பலிவாங்கும் செயலாக இருந்ததை இப்பாடல் குறிப்பிடுகிறது.
மதுரை
மருதன் இளநாகனார் பாடியிருக்கிறார். ஊரை அழித்தவன் வேந்தன். அழிப்பதற்கான காரணம்
பெண் கொடுக்கவில்லை என்பது. ஆனால் புலவர் ஊர் அழிவுக்குக் காரணம் பெண் எனக்
குறிப்பிடுகிறார். வேந்தனை ஊரை அழித்த பழியில் இருந்து விடுவிக்கிறார்.
இதிலிருந்து ஒர் உண்மை புலப்படுகிறது. வேந்தனின் சுய விருப்பங்களால் நேருகிற
வன்முறைக்கு அதோடு எந்த விதத்திலும் தொடர்பில்லாமல் இருப்பவரைக் காரணமாகக்
காட்டுகின்ற வன்முறைகளும் இலக்கியங்களில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பது தான்
அந்த உண்மை.
---------------------
203 - 22.07.2018
நன்கு ஒளிரும்
நட்சத்திரம்
ரஷ்ய
வரலாற்றில் மிகவும் முக்கியமானவர் ஸ்டாலின். உழைக்கும் மக்களை சுரண்டும்
வர்க்கத்திற்கு எதிராக ஒன்று திரட்டியதிலும் வெற்றி கண்டதிலும் ஸ்டாலினின் மதி
நுட்பம் வாய்ந்த களப்பணிகள் இன்றளவும் போற்றப்படுகின்றன. பல நாடுகளில்
பின்பற்றப்படுகின்றன. ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னரின் கடுமையான
கொடுமைகளைத் தாங்கி ஆட்சி மாற்றத்தை விரும்பிய ஸ்டாலின் ஆயுதமற்ற வழியில் புரட்சி
சாத்தியமில்லை என்பதை திடமாக நம்பினார். 1905 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி
டிப்ளிஸ் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கோடான கோடி மக்கள்
கிளர்ந்தெழுந்து வீதியில் திரண்டு வெறுங்கூச்சல் போடுவதால் மட்டும் புரட்சி வெற்றி
பெறாது. அனைவரும் ஆயுதமேந்திப் போராடினால் தான் வெற்றி கிடைக்கும். தொழிலாளர்
வர்க்கத்தின் புரட்சி வெற்றி பெறத் தேவையானவை மூன்று. முதலாவது ஆயுதங்கள்.
இரண்டாவது ஆயுதங்கள். மூன்றாவது ஆயுதங்கள் என்று பேச்சை முடித்தார். பாறைகளைத்
தகர்ப்பதற்கு வெடிமருந்துகளே உதவும் என்று நம்புகிறவர்கள் வரிசையில் ஸ்டாலின்
நன்கு ஒளிரும் நட்சத்திரம்.
---------------------
204 - 23.07.2018
நூல்களும்
நூலகமும்
‘ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது’ என்பது பழமொழி. உலகின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் என்பார் தாமஸ்
ஆல்வா எடிசன். அந்தளவுக்கு முக்கியமானதும் முதன்மையானதுமாக இருக்கின்றன நூல்களும்
நூலகங்களும். உலகத்தில் நூலகங்கள் முதலில் கோயில்களிலும் பின்னர்
ஆவணக்காப்பங்களிலும் அமைக்கப்பட்டன. முதல் நூலகம் கி.மு.1900 வாக்கில் ஆஸ்திரியா மன்னன் சர்தான் பாலஸ் என்பவரால் நினிவே என்ற இடத்தில் உருவாக்கப்பட்டது.
பிறகு கி.மு1500 வாக்கில் எகிப்தில் நூலகம் உருவாக்கப்பட்டது. ரோமானிய தளபதி
ஆண்டனி கிளியோபட்ராவிற்கு இரண்டு லட்சம் நூல்களை பிறநாட்டு அரசர்களிடம் பெற்று
வழங்கியதாகத் தெரிகிறது. பின்னர் ரோம் நகரில் கி.மு.63 இல் பொது நூலகம் தொடங்கப்பட்டது. வாடிகனில் கி.பி.1449 இல் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. பிரிட்டீஸ் அருங்காட்சியக
நூலகம் 1753 இல் ஏற்படுத்தப்பட்டது. இந்நூலகத்தில் 1980 ஆம் ஆண்டு கணக்குப்படி
50 லட்சம் நூல்களும் 2 லட்சம் சுவடிகளும் உள்ளன. அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் 60 லட்சம் புத்தகங்களும்,
பாரீஸ் தேசிய நூலகத்தில் 45 லட்சம் புத்தகங்களும் 5 லட்சம்
கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன.
---------------------
205 - 24.07.2018
எல்லீஸ் வெட்டிய கிணறுகள்
சென்னை
இராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றை ஒட்டி எல்லீஸ் துரையால் அமைக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்று
காணப்படுகிறது. ‘சென்னைப் பட்டிணத்து எல்லீசன் என்பவன் யானே பண்டார காரியம் பாரம் சுமக்கையில் புலவர்கள் பெருமான் மயிலம்
பதியான் தெய்வப்புலமை திருவள்ளுவனார் திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றி
இருபுனலும் வாய்த்த மலையும் ஒருபுறனும் வல்லரணும் நாட்டின் குறிப்பு என்பதன்
பொருளை என்னூள் ஆய்ந்து ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாப்தம் இங்கிலீசு 1818 ஆம் ஆண்டில் பிரபவாதி வருஷத்துக்கு மேற்சொல்லா நின்ற
பகுதான்ய வருஷத்தில் வார திதி நட்சத்திரயோக கணம் பார்த்து சுபதினத்தில் இதனொடு
இருபத்தேழு துரவு கண்ட புண்யாகவாசநம் பண்ணுவித்தேன்’ என்பது அக்கல்வெட்டில் காணப்படும் சில செய்திகள். 1818 ஆம் ஆண்டு வாக்கில் சென்னையில் நிலவிய கடுமையான குடிநீர்
பற்றாக்குறையைப் போக்க எல்லீஸ் 27 கிணறுகள் வெட்டியதாகவும் அவற்றுள் ஒன்று பெரிய
பாளையத்தம்மன் கோவிலில் உள்ளதென்பதையும் கல்வெட்டால் அறியமுடிகிறது.
---------------------
206 - 25.07.2018
பண்டாரசாமிகள்
மேற்கு
நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து கத்தோலிக்க கிறித்தவத்திற்கு பணியாற்ற
பாதிரியார்களில் பண்டாரசாமிகள் என்றொரு பிரிவு இருந்தது. மற்றொரு பிரிவு பிராமண
சந்நியாசி என்பது. பிராமண சந்நியாசி என்ற பிரிவைச் சார்ந்த பாதிரியார்கள்
பிரமணர்களுக்கு மட்டுமே கிறித்துவத்தை அறிமுகப்படுத்தியவர்கள். பண்டாரசாமிகள்
என்போர் பிரமணர் அல்லாத மற்ற பிரிவினருக்குக் குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு
கிறித்துவத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
பிராமண
சந்நியாசிகள் வெள்ளையாடை பூணூல் அணிந்து பாதக்குறடோடும் கமண்டலத்தோடும்
இருந்திருக்கிறார்கள். அவர்கள் தாடி வைத்துக்கொள்ளவில்லை. பண்டாரசாமிகள் தாடி
வைத்திருந்திருக்கிறார்கள். காவி ஆடை உடுத்தி கடுக்கண் அணிந்திருக்கிறார்கள்.
பண்டாரசாமிகளின் வாழ்க்கை பிராமண சந்நியாசிகளின் வாழ்க்கையை விட எளிமை நிறைந்து இருந்திருக்கிறது. பிராமண
சந்நியாசிகள் வடமொழி பயில வேண்டும் என்பது கட்டாயமாக இருந்திருக்கிறது. பிராமண
சந்நியாசிகளுக்கே சமுதாயத்தில் போதிய பாதுகாப்பும் மரியாதையும் இருந்திருக்கிறது.
---------------------
207 - 26.07.2018
டாலர்
ராஜதந்திரம்
டாலர்
வழி லாபம் அடைவதற்கு அமெரிக்கா பின்பற்றும் ஒரு விதமான தந்திர நடவடிக்கை. அதாவது பிறநாடுகள் அமெரிக்காவின் வணிக நலன்களுக்குச் சாதகமான தன்மையில்
நடந்துகொள்வதற்குப் பிரதிபலனாக அந்தந்த நாடுகளில் பொருளாதாரச் சமநிலையை ஏற்படுத்துவதற்கு உதவுவது என்ற நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட
கொள்கையே டாலர் ராஜதந்திரம். இக்கொள்கையின் படியே அமெரிக்காவின் பொருளாதார வணிகக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் நாடுகளுக்கு அமெரிக்கா கடன் உதவிகளை
வழங்குகிறது. ரூஸ்வெல்ட் அதிபராக இருந்த போது டொமினிகன் குடியரசுக்கு அமெரிக்கா
செய்த பல கடன் உதவிகள் இந்த அடிப்படையிலானவை தான். அமெரிக்க முன்னாள் அதிபர்
வில்லியம் ஹெச். டாப்ஃப்டிடம் வெளியுறவு அமைச்சராக இருந்த ஃபிலான்டர் நாக்ஸ்
மத்திய அமெரிக்காவிலும் சீனாவிலும் இது போன்ற டாலர் ராஜதந்திரத்தை மேற்கொண்டார்.
உட்ரோ வில்சன் அதிபரான போது 1913 வாக்கில் இக்கொள்கை நிராகரிக்கப்பட்டது. அமெரிக்கப் பொருளாதார நலன்களுக்காக வெளியுறவு விவகாரத்தை வளைத்துக்கொள்ளும்
இச்சொல் இன்று இழிசொல்லாகக் கருதப்படுகிறது.
---------------------
208 - 27.07.2018
மெட்டிச்
சடங்கு
ரங்கூனைச்
சார்ந்த எஸ்.முனிஸ்வாமியர் என்பவர் திருமணங்களில் மணமக்களை உள்ளிருக்கும் படி திரை எழுப்பி மணமகனை திரைக்கு
வெளியில் கால் நீட்டச் செய்து மணமகளின் தாயார் நீர் கொண்டு கழுவி காலில் மெட்டி
போடுகிறார்கள். இவ்விதமான சடங்கு பூர்வ பௌத்தத்தில் இருந்து வந்ததா? அல்லது நூதன சாதிகளின் கொள்கையா? என்றொரு
கேள்வியை அயோத்திதாசரிடம் எழுப்பியிருக்கிறார். அதற்கு அயோத்திதாசர் 1913 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பதில் வழங்கியிருக்கிறார். அயோத்திதாசர் சொல்கிறார் மெட்டி
அணிவித்து விடுவது பௌத்தத்தில் இருந்தும் வரவில்லை. இந்து மதத்தைச் சார்ந்ததுமல்ல.
அதாவது பெண்ணின் தாயானவள் தனது மகளை யாதொரு குறையுமில்லாமல் காப்பாற்ற வேண்டுமென
கேட்டுக்கொள்வதற்குப் பாவனையாக வெள்ளியால் மோதிரம் செய்து அவன் காலைக் கழுவி
விரலில் போடுவது வழக்கம். அதைத் தெரிந்து சிலரும் தெரியாமல் சிலரும்
செய்கிறார்கள். மனம் போலதான் மாங்கல்யம் என்பதால் மருமகன் காலைப் பிடிப்பதிலும்
பயனில்லை. மெட்டியிடுவதினாலும் ஒரு பயனுமில்லை என்கிறார் அயோத்திதாசர்.
---------------------
209 - 28.07.2018
பக்குவப்படாத
சமுதாயம்
கடந்த
ஜூலை 20 ஆம் தேதி சமூக ஊடகங்களில் இரண்டு செய்திகள் மிகவும் வைரலாக
வெளியாயின. ஒன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பதற்கு உச்சநீதி மன்றத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டு தனது எதிர்ப்பைத்
தெரிவித்தது. இரண்டு திருப்பூர் மாவட்டம் அவனாசி அருகில் உள்ள
திருமலைக்கவுண்டன்பாளைத்தின் உயர்நிலைப்பள்ளியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த
சத்துணவுப் பணியாளரான பாப்பாள் என்பவரை ஆதிக்கசாதி வெறியர்கள் பணி செய்யவிடாமல்
தடுத்ததாக வெளியான செய்தி.
முந்தைய
செய்தி வழிபாட்டுச் சடங்குகளில் இன்னும் பெண்கள் முழுமையான விடுதலையை
பெற்றுவிடவில்லை என்பதைச் சொல்கிறது. இரண்டாவது செய்தி ஒடுக்கப்பட்ட பெண்கள்
தனக்குத் தெரிந்த வழியில் தன்னால் முடிந்த வழியில் உழைத்து முன்னேறும் போது
அவர்களை முன்னேற விடாமல் தடுக்கும் சாதிய வன்மம் இன்னும் குறைந்தபாடில்லை என்பதைச்
சொல்கிறது. இன்றைய நவீன உலகத்தில் படிப்பறிவு கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது.
தனிமனித பொருளாதாரம் கூடியிருக்கிறது. விஞ்ஞானத்தில் அளப்பறிய சாதனைகள்
நிகழ்த்தப்பட்டுவிட்டன. உயர்ந்த தத்துவச் சிந்தனைகள் பரந்த அளவில் மக்களிடம்
கொண்டுசெல்லப்பட்டுவிட்டன. இத்தனை மாற்றங்கள் நிகழ்ந்த பிறகும் பெண்கள்
கோயிலுக்குள் நுழைய அனுமதியில்லை. ஒடுக்கப்பட்ட பெண் சத்துணவு சமைக்கக் கூடாது
என்கிற எண்ணம் மாறாமல் இருப்பது என்ன நோக்கம் கருதியோ!
---------------------
210 - 29.07.2018
தற்காப்பு
இலக்கியம்
மேலை
நாடுகளில் தன்வரலாற்று இலக்கிய வகைமைகளில் சொல்லும் விதம் சார்ந்து எண்ணற்ற
வகைமைகள் உருவாகிவிட்டன. இன்றைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வகைமைகளைக்
காணமுடிகிறது. பல நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட தன் வரலாற்று இலக்கிய வகைமை
அங்கு இன்னும் புதியபுதிய வகைமைகளில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
எழுதப்படும் அனைத்து நூல்களும் விரும்பி வாசிக்கப்படுகின்றன. அந்தவகையில்
இலக்கியத்தில் ஓர் ஆசிரியர் தனது சொந்த நம்பிக்கைகளை வெளிப்படையாக விமர்சித்துப்
பேசும் போது தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வகைகளில் எழுதப்படும் தன் வரலாற்று
வடிவமே ‘தற்காப்பு இலக்கியம்’
எனப்படுகிறது. கி.மு. 4 ஆம்
நூற்றாண்டில் எழுதப்பட்ட பிளேட்டோவின் அபாலஜி என்னும் நூலில் சாக்ரடீஸ் தன்னைக்
குறை கூறுபவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக தனது வாழ்க்கை வரலாற்றையும் அற
ஈடுபாட்டையும் எடுத்துரைக்கும் முறை காணப்படுகிற பகுதி தற்காப்பு இலக்கிய
வகையினதாகும். 1864 இல் எழுதப்பட்ட ஜான் ஹென்றி நியூமனின் ‘அபாலஜியா ப்ரோ விட்டா சுவா’ என்னும்
நூலில் ரோமன் கத்தோலிக்கப் பிரிவுக்கு மதம் மாற எத்தகைய கொள்கைகள் தன்னைத் தூண்டின
என்பதை சித்திரிக்கும் பகுதியும் தற்காப்பு இலக்கிய வகையினதே ஆகும்.
---------------------
211 - 30.07.2018
மணிகட்டி
மறுத்தல்
எல்லோருக்கும்
பேசுவதற்கு உரிமை இருக்கிறது. பேசியதை மறுத்துப் பேசுவதற்கும் உரிமை இருக்கிறது.
ஆனால் யாருக்கும் பேசக்கூடாது என்று சொல்வதற்கு உரிமையில்லை. எல்லோருக்குமான
வாழ்க்கை சமத்துவமோடு இருக்க வேண்டும் என்பதுதான் சமத்துவப் போராளிகளின் நோக்கமாக
இருக்கிறது. ஆனால் மதம் என்று வருகிறபோது மனிதன் தம்மை அறியாமலேயே ஒருவித
நிலையில்லாத மனநிலைக்குள் சென்றுவிடுகிறான். தமது மதத்தை உயர்வாகவும் பிறரது
மதத்தை தாழ்வாகவும் கருதும் போக்கு அவனுக்குள் இயல்பாகவே உருப்பெற்றுவிடுகிறது. அவனது
தெய்வத்தைத் தவிர பிறரது தெய்வம் அவனுக்குச் சாத்தானாகவே தெரிகிறது. இந்த மனநிலை இன்று நேற்று ஏற்பட்டதல்ல.
பன்னூறாண்டுகளாக இருந்துவரும் ஒன்றாகும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு ‘சிவ சிவ’ என்று சைவர்கள் சொல்வது தமது காதுகளில்
கேட்கக் கூடாது என்று வைணவர்களும் ‘நமோ நாராயணா’ என்ற வார்த்தை தம் காதுகளில் விழுந்துவிடக் கூடாது என்று சைவர்களும் தமது
காதுகளில் மணியைக் கட்டிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். நாராயணனின் பெயரை யாராவது
உச்சரித்தால் அது தமது காதுகளில் கேட்கா வண்ணம் காதை ஆட்டி ஒலியெழுப்பி மணியோசை
மட்டுமே தமது காதில் விழும்படி சைவர்கள் இருந்திருக்கிறார்கள். சிவனின் பெயர் தமது
காதில் விழுந்துவிடக் கூடாதென வைணவர்கள் இருந்திருக்கிறார்கள்.
---------------------
212 - 31.07.2018
தண்டனைக்
குடியிருப்பு
குற்றவாளிகளைத்
தண்டிக்கும் பொருட்டு அவர்களைப் பொதுச்
சமுதாயத்தில் இருந்து பிரித்துக் கட்டாய
வேலைக்கு உட்படுத்துவதற்காக தொலைதூர நாடுகளிலோ அல்லது கடல் கடந்தோ
ஏற்படுத்தப்படுகிற குடியிருப்பு ‘தண்டனைக் குடியிருப்பு’ என்று சொல்லப்படுகிறது. இவ்வகையான குடியிருப்பு ஆங்கிலேயர்கள்.
பிரெஞ்சுக்காரர்கள்,
ரஷ்யர்களால் உருவாக்கப்பட்டன. புரட்சிப்போர் நடந்த
சமயத்தில் பிரிட்டீஸ் தனது குற்றவாளிகளை
அமெரிக்க குடியேற்றத்திற்கு அனுப்பியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை
ஆஸ்திரிலேயா தண்டனைக் குடியிருப்பாகவே இருந்தது. ஒரு காலத்தில் பிரெஞ்ச்
உருவாக்கியிருந்த ஃபிரெஞ்ச் கயானா என்னும் தண்டனைக் குடியிருப்பு அங்கு
நடத்தப்பட்ட கொடுமைகளுக்காகவே இழிவாகப் பேசப்பட்டது. ஜார் மன்னர்கள்
ஆட்சிகாலத்தில் சைபீரியாவில் தண்டனைக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. ஸ்டாலின்
காலத்தில் ரஷ்யாவில் தண்டனைக் குடியிருப்பின் தேவை அதிகமாகிக்கொண்டே இருந்தன. மனித
உரிமை அமைப்புகளின் தொடர்ச்சியான முன்னெடுப்புகளால் இன்று கடுமையான தண்டனைக்காவும்
குறைவான உணவுக்காகவும் பெயர் பெற்ற தண்டனைக் குடியிருப்புகள் முற்றிலும்
அகற்றப்பட்டுவிட்டன.
---------------------
213 - 01.08.2018
வாடகை
ரோபோக்களின் காலம்
இந்தியச்
சமுதாயத்திலும் சரி,
தமிழ்ச்சமுதாயத்திலும் சரி குடும்பம் என்பது வலுவான
அமைப்பாக இருக்கிறது. அதன்வழி நெகிழும் தன்மையற்ற உறவு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே
இருக்கிறது. சடங்குகள்,
விழாக்கள் முதலியவற்றில் உறவுகளுக்கான இடம் மிகவும்
முக்கியமான ஒன்று. உறவு நீட்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நெருங்கிய ரத்த
உறவுகளுக்குள் திருமணங்களை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரியான
பாரம்பரியமான பழக்கங்கள் அல்லது உறவைப் பேணுதல் என்பது குடும்ப உறுப்பினர்கள் அதிகமாக இருந்த காலம் வரை சிக்கல் இல்லாமல்
இருந்தது. இன்றைக்கு பல குடும்பங்களில் இரண்டு குழந்தைகளும் ஒரு குழந்தையுமாக
இருக்கிறார்கள். இந்த போக்கு நீடிக்கும் போது இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் அத்தை
மாமா பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா
இல்லாத மனிதர்கள் உருவாகுவார்கள். வீட்டு விழாக்கள் உறவுகள் நிறைந்து இருக்காது.
சடங்குகள் மீது பிடிப்பற்றுப் போகும். ஆண் பெண் விகிதத்தில் மிகப்பெரிய ஏற்றத்
தாழ்வு இருக்கும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். எல்லாவற்றையும் வாங்கும் சக்தி
கூட மக்களுக்கு வந்திருக்கும். மனிதனுக்கு உதவி என்று வருகிற போது உறவினார்கள்
இருக்க மாட்டார்கள். ரோபோக்கள் தான் வாடகைக்குக் கிடைக்கும்.
---------------------
214 - 02.08.2018
பிரமாண்டங்களுக்குப்
பின்னால்
உலகமெங்கும்
பிரமாண்டங்களுக்குப் பஞ்சமில்லை. பிரமாண்டங்கள் இல்லாத காலங்களுக்கும் பஞ்சமில்லை.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஆளுகின்றவர்கள் தமது ராஜ்யத்தின் நினைவாக ஏதாவது ஒரு
பிரமாண்டத்தை உருவாக்கி வைப்பதில் விருப்பம் உடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
இருந்துகொண்டும் இருக்கிறார்கள். பிரமாண்டத்தைப் பார்க்கும் போது அதை
உருவாக்கியவர்களின் பெருமை நினைக்கப்படும் என்பது தான் பிரமாண்டங்களை
உருவாக்கியதன் நோக்கம். அதோடு உருவாக்கியவர்களது செல்வவளத்தின் அடையாளமாகவும்
பிரமாண்டங்கள் இன்றைக்குக் குறிக்கப்படுகின்றன. பொதுவாக பிரமாண்டங்கள் இரண்டு
வகைப்படும். ஒன்று தனிமனிதனுக்கானது. மற்றொன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கானது.
இந்த இரண்டு வகைகளில் தனிமனிதனுக்கான பிரமாண்டங்கள் தான் உண்மையிலேயே பிரமாண்டமாக
இருக்கின்றன. சான்றாக அரண்மனைகள், அரச
வம்சத்தாருக்கான கல்லறைகள்,
தனக்குத் தானே எடுத்துக்கொண்ட சிலைகள் ஆகியன தனிமனிதனுக்கான
பிரமாண்டங்கள். இந்தப் பிரமாண்டங்களுக்குள் மறைந்து கிடக்கும் எண்ணற்ற மக்களின்
உழைப்பு,
பணம், தியாகம், நரபலி கொடுக்கப்பட்டவர்களின் மரணம் ஆகியவற்றை நினைத்துப்
பார்க்கும் போது ‘பிரமாண்டங்கள் பெருமையின் சின்னம்’ என்கிற பெருமையை இழந்து விடுகின்றன.
---------------------
215 - 03.08.2018
டோங்கா கிளார்ச்சி
1894 இல் கொரிய நாட்டு விவசாயிகள் செய்த கிளர்ச்சி ‘டோங்கா கிளர்ச்சி’
எனப்படுகிறது. பின்னாளில் இக்கிளர்ச்சி சீன ஜப்பான் போர் ஏற்படுவதற்கும் காரணமாக
இருந்தது. கிளர்ச்சியில் ஈடுபட்ட விவசாயிகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளான போதும்
டோங்கா என்னும் மதத்தில் இணைந்தனர். மேற்கத்திய பண்பாட்டை எதிர்த்து உள்நாட்டு
பண்பாட்டையும் விவசாயிகளின் நியாத்தையும் பேசியதால் விவசாயிகள் டோங்கா மதத்தில்
முழு விருப்பத்தோடு இணைந்தார்கள். பிறகு டோங்கா மதத்தினர் மக்களிடையே சமத்துவத்தை
வலியுறுத்தினர். சமுதாயச் சீர்திருத்தத்தை வலியுறுத்தினர். அக்கோரிக்கையை அரசு
ஏற்கவில்லை. விவசாயிகள் மதத்தின் பின்புலத்தில் நின்று அரசின் படைகளைத்
தோற்கடித்தார்கள். தென்கொரியா சீனாவின் உதவியை நாடியது. தன் விருப்பத்தின் பேரில்
யாரும் அழைக்காமலேயே ஜப்பானும் போரில் கலந்து கொண்டு சீனாவுக்கு எதிராக நின்றது.
இரண்டு நாடுகளுக்குமான போராக தமது கிளர்ச்சி மாறிவிடக் கூடாது என்பதை உணர்ந்த
விவசாயிகள் போர் நிறுத்தம் செய்தனர். எனினும் சீன, ஜப்பான்
போர் தொடர்ந்தது. சோ சீ யொன் உள்ளிட்ட கிளர்ச்சியை வழி நடத்திய பல தலைவர்கள்
தூக்கிலிடப்பட்டார்கள்.
---------------------
216 - 04.08.2018
அம்பு -
வகைகள்
பகழி, வாளி, வண்டு, பாணம், நிகழ்சரம், பத்திரி, சீலீமுகம், பல்லம், புங்கம், கணை, குதை, கங்கபத்திரம், அத்திரம், தோணி, கோல், விசிகம் அம்பே
என்று அம்பின் வகைகளைக் குறிப்பிடுகிறது சேந்தன் திவாகரம். ஒவ்வொரு அம்பும்
இலக்கைத் தாக்குவதில் தனித்தன்மை கொண்டிருக்கிறது. அம்பின் வகைகளுக்கு வழங்கப்
பெறும் இப்பெயர்கள் அனைத்தும் காரணப் பெயர்களாக இருக்கின்றன. அதாவது இலக்கைக்
குத்தி பிளந்து அழிக்கும் படியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அம்பு ‘பகழி’ எனப்பட்டிருக்கிறது. குறைந்த மனித சக்தியாலும் அதிகஅளவு காற்றாலும் உந்தப் பெற்று இலக்கைத் தாக்கும்
அம்பு ‘வாளி’ எனப்பட்டிருக்கிறது.
திரண்ட பிடியை உடைய அம்பு ‘கணை’ எனச்
சுட்டப் பெற்றிருக்கிறது. அதிகமான கூர்மையையும் இரும்புத் தலையையும் நீளமான உடல்
பகுதியையும் கொண்ட அம்பு ‘கணை’
எனப்பட்டிருக்கிறது. இப்படி பண்டைய தமிழர்கள் தாம் பயன்படுத்திய ஒரே ஆயுதத்தின்
வெவ்வேறு வடிவங்களுக்குக் காரணம் சார்ந்து பெயர் சூட்டியிருக்கும் பாங்கு வியப்பாக
இருக்கிறது.
---------------------
217 - 05.08.2018
சரக்கு
எல்லைக்கோடு
பிரிட்டீஸ்
சீர்திருத்தவாதியும் அரசியல்வாதியும் நிலக்கரி வியாபாரியுமான ப்ளிம்சால் சாமுவேல் 1860 முதல் 1880
வரையிலான காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் காலப்பகுதியில்
பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் உலகின் சரிபாதிக்குக்குப் பரவியிருந்தது. அதனால்
பிரிட்டீஸ் கடல் வணிகத்தில் கொடி கட்டிப் பரந்தது. உள்நாட்டு முதலாளிகளுக்கு இடையே
போட்டிகளும் பொறாமைகளும் உருவாயின. அதனால் வணிகத்தில் புதிய புதிய சிக்கல்கள்
உருவாயின. சிக்கல்களைத் தீர்த்தாக வேண்டிய கட்டாயத்திற்கு பிரிட்டீஸ் அரசுக்கு
நெருக்கடி உருவாயிற்று. அப்போது சரக்குக் கப்பலுக்குள் சரக்கை ஏற்றும் அளவை
நிர்ணயித்தல் முதலிய சீர்திருத்தங்களை முன்வைத்து பிரிட்டீஸ் நாடாளுமன்றம்
உருவாக்கிய புதிய சட்டத்திற்கு பிளிம்சால் சாமுவேல் 1873 இல் எழுதி வெளியான ‘அவர் ஸீ மென் ‘என்கிற நூல் தான் அடிப்படையாக
இருந்தது.
அந்த
நூலில் சொல்லப்பட்ட விதிகளை அடிப்படையாகக் கொண்டே சரக்குக் கப்பலின் வெளி
ஓரங்களில் சரக்கை எந்த அளவுக்கு ஏற்ற முடியும் என்பதைக் குறிக்கும் கோடு
வரையப்பட்டது. பின்னாளில் அந்தக் கோடு ‘பிளிம்சால் கோடு’ என அழைக்கப்படலாயிற்று.
---------------------
218 - 06.08.2018
விஞ்ஞானியல்ல
வியாபாரி
உலகம்
தாமஸ் ஆல்வா எடிசனை மிகச்சிறந்த விஞ்ஞானி என்று சொல்கிறது. ஆனால் எடிசன் தம்மை
ஒருபோதும் அப்படி சொல்லிக் கொண்டது இல்லை. தம்மை வியாபாரி என்று சொல்வதைத்தான்
விரும்பினார். ஒருமுறை பத்திரிகை ஒன்றில் தாம் விஞ்ஞானி என்று போடப்பட்டிருந்ததைப்
பார்த்த தாமஸ் ஆல்வா எடிசன் தனது நண்பரிடம் இதோ பார் தவறாகப் போட்டிருக்கிறார்கள்.
நான் விஞ்ஞானியல்ல. கண்டுபிடிப்பாளன். எனக்கு லாபம் இல்லாத போது அந்தக்
கண்டுபிடிப்பை எப்போதும் நான் செய்வதில்லை என்றார். அவர் மிகவும் புகழ்பெற்ற பிறகு
அவரைத் தேடி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அதற்காகவும் தான் வசதியாக
இருக்க வேண்டும் என்பதற்காகவும் மாளிகை ஒன்றைக் கட்டினார். அந்த மாளிக்கைக்கு
வரும் வாசல் படியை சுழல் குகை போன்று அமைந்திருந்தார். மக்கள் அதை மிதித்தபடி
கடந்து மாளிக்கைக்குள் வரும் போது அது சுழலும். மக்கள் அவரிடம் ஏன் வாசல் பாதையை
சுழலும் படி அமைத்திருக்கிறீர்கள் எமக்கு அவை சிரமமாக இருக்கிறது என்றார்கள்.
வாய்விட்டுச் சிரித்த எடிசன் உங்களுக்கு அது சிரமமாக இருக்கலாம். எனக்கு அதில் லாபம் இருக்கிறது. நீங்கள் அதை
மிதித்து வருகையில் அது சுழலும் போது மாடியில் எனக்கு எட்டுக் கலன் நீர்
நிரம்புகிறது என்றார். மக்களின் சிரமத்திற்கு இரக்கப்படுகிறவன் சிறந்த வியாபாரியாக
இருக்க முடியாது.
---------------------
219 - 07.08.2018
நம்பிக்கைகளும்
தீர்வுகளும்
உலகம்
முழுமையும் மக்கள் உண்மைக்கு மாறான நம்பிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்கள். தீராத
பிரச்சினைகளுக்கும் மர்மமான சம்பவங்களுக்கும் கூட நம்பிக்கைகள் தீர்வளிக்கும் என
நம்புகிறார்கள். தமிழ்நாட்டில் வெற்றிலையில் மை தடவிப் பார்க்கிற வழக்கம்
இருப்பதைப் போன்று அதை ஒத்த நம்பிக்கைகள் பிற நாட்டு மக்களிடம் இருந்து வருகின்றன.
வெற்றியிலையில் மை தடவி குறி சொல்லும் நபர்களைப் போன்றே ஆவிகளின் துணை கொண்டு
துப்பறியும் நபர்கள் ஐரோப்பாவிலும் இருக்கிறார்கள். இவர்களை ஆங்கிலத்தில் ‘சைக்கிக் டிடெக்டிவ்’ என்கிறார்கள். அந்த
நாடுகளில் துப்பறியும் போஸீசாருக்கு சில வழக்குகள் சிக்கலாக மாறும் போது அவர்கள்
சைக்கிக் டிடெக்டிவ்களையே நாடுகிறார்கள். அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட்டில் 1973 ஆம் ஆண்டு பெர்ரி சாரா என்கிற பெண்மணி மர்மமான முறையில்
இறந்து கிடந்தார். போஸிசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் கடைசியில் பசகரெல்லா
டவுனி என்கிற சைக்கிக் டிடெக்டிவ் மனிதரின் உதவியை நாடினர். அவர் போஸிசாருக்குச்
சில குறிப்புகளைக் கொடுத்து அந்தக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க நீண்ட காலம் ஆகும்
என்றும் கூறினார். அவர் கூறிய படியை அவரது குறிப்புகளை வைத்தே குற்றவாளியைக்
கண்டுபிடித்தார்கள். கண்டு பிடிக்க இருபத்தைந்து ஆண்டுகள் ஆயிற்று.
---------------------
220 - 08.08.2018
சிறிய
துவாரமும் பெரிய துவாரமும்
ஞானி
ஒருவர் ஏராளமான மாணவர்களுக்கு ஞானத்தின் பல்வேறு நிலைகளைப் போதித்துக்
கொண்டிருந்தார். ஞானமும் அறிவும் வேறுவேறு. அறிவு பெற்றவர்கள் ஞானம் பெற்றவர்கள்
ஆக முடியாது. ஞானம் பெற்றவர்கள் அறிவு பெற்றவர்கள் ஆக முடியாது. அறிவும் ஞானமும்
ஒன்றாக ஒருவருக்கு வாய்க்குமா என்றால் அது ஆராய்ச்சிக்குரியது என்று
போதித்துக்கொண்டிருந்தார். மாணவர்கள் நிறைய கேள்வி கேட்டார்கள். கேள்விகளுக்கு
அவர் அளித்த பதிலால் திருப்தி அடைந்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஞானி
தனது அறையின் கதவில் சிறியதும் பெரியமாக இரண்டு துவாரங்கள் போட்டிருந்தார்.
மாணவர்கள் இந்த துவாரம் எதற்காக என்றார். அதற்கு அந்த ஞானி நான் சிறிய பூனை
ஒன்றும் பெரிய பூனை ஒன்றும் வளர்க்கிறேன். சிறிய துவாரம் சிறிய பூனை வந்து
செல்வதற்கு பெரிய துவாரம் பெரிய பூனை வந்து செல்வதற்கு என்றார். மாணவர்கள் பெரிய
துவாரம் வழியாக சிறிய பூனை வந்து விடாதா என்றார்கள். அதற்கு அந்த ஞானி, நன்று மாணவர்களே நீங்கள் இப்பொழுதுதான் அறிவின் தொடக்க
நிலைக்கு வந்திருக்கிறீர்கள். சிறிய துவாரமும் பெரிய துவாரமும் பூனைகள் வருவதற்கான
வழிகள் அல்ல. உங்களுக்கான பாடநூல் என்றார்.
---------------------
221 - 09.08.2018
பிடித்த
விஷயமும் நீண்ட ஆயுளும்
அமெரிக்காவின்
‘ஜான்நேஷ்’ மிகச்
சிறந்த கணித அறிஞர். பொருளாதார நிபுணர். இதுவரையில் நோபல் நினைவுப் பரிசும்
பொருளாதார அறிவியலுக்கான ஏபல் பரிசும் பெற்ற ஒரே மனிதர் இவர் தான். இவர்
கண்டுபிடித்த ஆட்டக் கோட்பாட்டுப் பொருளாதாரம், அரசியல், உயிரியல், கணினி அறிவியல் ஆகியன இன்று பல இடங்களில் பயன்பாட்டில்
இருக்கிறது. ஜாமெட்ரி,
டிபரென்சியல் சமன்பாடு முதலியவற்றுக்கும் முன்னோடியாகத்
திகழ்ந்தவர். தனது துறையில் மிகுந்த திறன் பெற்றிருந்த ஜான்நேஷ் தீவிரமான மனநோயால்
பாதிக்கப்பட்டிருந்தார். கற்பனையில் உதிக்கும் சின்னச்சிறு விஷயத்திற்கும் பெரிய
அளவில் பயந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தனது வேலையில் கவனமாக
இருந்தார். 1928 இல் பிறந்து 2015 வரை 87 ஆண்டுகள் வாழ்ந்த இவர் அத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததற்குக்
காரணம் பிடித்த வேலையில் முழுமையாக ஈடுபட்டதுதான் என அவரது நண்பர்கள்
கூறுகிறார்கள். ஜான்நேஷ் நமக்கு இன்னொரு செய்தியையும் சொல்லிச் சென்றிருக்கிறார்.
பிடித்த வேலையில் யாருடைய நிருபந்தமும் இல்லாமல் சுதந்திரமாக ஈடுபட்டால் தீவிர
நோயாளியாக இருந்தாலும் நீண்ட நாள் புகழோடு வாழமுடியும் என்பது தான் அந்தச் செய்தி.
---------------------
222 - 10.08.2018
பறவைகளின்
மாநாடு
ஈரானின்
புகழ்பெற்ற நிஷாபூரில் பிறந்தவர் அத்தார். 82 ஆண்டுகள் வாழ்ந்த இவர் எப்பொழுது இறந்தார் என்ற குறிப்பு கிடைக்கவில்லை.
மங்கோலியரால் கொல்லப்பட்டார் என்றொரு தகவல் கதையாக வழங்கிவருகிறது. அது நம்பக்
கூடியதாக இல்லை. சுல்தான் அபூ இகாஸி
ஹூஸைன் என்கிற மன்னனின் கல்லறைக்குப் பக்கத்தில் இவருடைய கல்லறையும் இருப்பதாக
கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. அத்தாரால் அரேபிய மொழியில் 4600 பாடல்களில் எழுதப்பட்ட காவியம் தான் ‘பறவைகளின் மாநாடு’. குறியீட்டுத்
தன்மையில் எழுதப்பட்டுள்ளது. அழகிய ஏழு பள்ளத்தாக்குகள் வழியாக பயணம் செய்யும்
முப்பது பறவைகளின் பயணத்தையும் துன்பத்தையும் சொல்லும் இக்காவியத்தில் மனிதன்
தேடுவது எதுவுமே மனிதனுக்கு வெளியில் இல்லை என்கிற செய்தியை மிக நேர்த்தியாகப்
புரிய வைத்திருக்கிறார் அத்தார். ஒவ்வொரு பறவையின் நுணுக்கமான தகவல்களோடு இஸ்லாமிய
கதைகளையும் இணைத்து இக்காவியத்தை எழுதியிருக்கிறார். காவியத்தின் இடையிடையே சூஃபி
கதைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.
---------------------
223 - 11.08.2018
தானும்
அதுவாதலே ஆனந்தம்
கிளையில்
அமர்ந்திருக்கும் பறவை வானத்தில் பறக்கும் பறவையைப் பார்த்து வியப்பதில்லை என்கிறார்
சிந்தனையாளர் நாகூர் ரூபி. அதாவது எல்லா பறவைகளும் பறக்க முடியும். அதனால்
வனத்தில் பறக்கும் பறவையைப் பார்த்து கிளையில் அமர்ந்திருக்கும் பறவை
வியப்பதில்லை. பறக்க நினைத்த பறவை பறந்து கொண்டிருக்கிறது. பறக்க நினைக்காத பறவை
கிளையில் அமர்ந்திருக்கிறது என்பது தான் ரூபி வழங்கும் நேரடிச் செய்தி. இக்கூற்று
வாழ்வின் பல தளங்களுக்கும் விரித்து வைத்துப் பார்க்க இடம் தருவதாக
அமைந்திருக்கிறது.
எல்லா
மனிதனுக்கும் உழைக்கும் ஆற்றல் இருக்கிறது. உழைக்கும் மனிதனைப் பார்த்து
வியக்காதே. எல்லா மனிதனுக்கும் சிந்திக்கும் ஆற்றல் இருக்கிறது. சிந்திக்கும்
மனிதனைப் பார்த்து வியக்காதே. எல்லா மனிதனுக்கும் வாய்ப்புகள் வரும். வாய்ப்பைப்
பயன்படுத்திக் கொள்பவனைப் பார்த்து வியக்காதே என்பது தான் ரூபியின் கூற்றில்
அடங்கியிருக்கும் செய்தி. ஒவ்வொருவரும் அவரவருக்கு வழங்கப் பெற்றிருக்கும்
ஆற்றலைப் பயன்படுத்துங்கள். எல்லோருக்கும் பொதுவானது வானம். உயர உயர பறக்கலாம்
என்ற பொருளையும் தரும் ரூபியின் கூற்றில் இருக்கும் உண்மையின் வலிமை தான்
சிந்தனையாளர் ரூபியைக் கொண்டாட வைக்கிறது.
---------------------
224 - 12.08.2018
வழி
காட்டுதலின் ரகசியம்
சீடரின்
கேள்விகளுக்குப் பதில் சொல்பவரல்ல குரு. கேள்விகளை அழிப்பவர் தான் குரு என்கிறார்
ஓஷோ. குரு - சீடர்களின் உறவில் சீடர்களின் ஐயங்களைத்
தீர்ப்பவர் தான் குரு என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் ஓஷோ அந்த நிலைப்பாட்டை
தாண்டி நின்று குரு என்பவருக்குப் பொருள் சொல்கிறார். சீடர்களுக்கு
எழும் கேள்விகளுக்கு வெறுமனே பதில் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் அவர் குருவாக இருக்க
முடியாது. கேள்வியின் மூலத்தை அழிப்பது தான் குருவின் வேலை என்கிற ஓஷோவின் சிந்தனை
ஏற்கனவே சொல்லி வைத்திருக்கும் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது. நோய்க்கு
மருந்தளிப்பவன் மருத்துவன் ஆக முடியாது. நோயின் மூலத்தை அறிந்து அழிப்பவனே
மருத்துவன். சிக்கல்களைக் கண்டுபிடிப்பவர் கண்டுபிடிப்பாளர் அல்லர். சிக்கலுக்குத்
தீர்வைக் கண்டு பிடிக்கிறவரே கண்டுபிடிப்பாளர் என்பதான வேறு சில சிந்தனைகளையும்
விதைக்கிறது. ஒருவரால் சொல்லப்படுகிற கூற்று அதன் பொருளையும் தாண்டி வேறு சில
உண்மைகளையும் உணர்த்தும் போது சொல்கிறவர் வாழும் மக்களுக்கு வழி காட்டுபவராக
மாறிவிடுகிறார்.
---------------------
225 - 13.08.2018
தைசின்கூ
என்றொரு சொல்
ஒரு
ஜென் குரு தனது சீடரிடம் குளிப்பதற்காக வாளி நிறைய தண்ணீர் கொண்டு வந்து வைக்கும்
படி சொன்னார். சீடரும் தழும்பத் தழும்ப
வாளியில் நீர் கொண்டு வைத்தார். குரு மிகவும் நிதானமாக மனதை ஒருமுகப்படுத்திய படி
குளித்து முடித்தார். குருவுக்காக காத்திருந்த சீடர், குரு குளித்து முடித்தவுடன் வாளியில் இருந்த நீரை கீழே
கொட்டினார். அதைப் பார்த்த குரு மனம் கலங்கிப் போனார். அவரால் கீழே கொட்டப்பட்ட
நீரைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. சீடரிடம் ஏன் நீரைக்
கொட்டினாய் என்றார். அதற்கு சீடர் குருவே வாளியில் ஒரே ஒருதுளிநீர் தான் இருந்தது
என்றார். அதற்கு குரு ஒருதுளி என்றாலும் அதை ஒரு செடிக்கு ஊற்றியிருக்கலாமே.
ஒருதுளி நீர் நமக்குக் கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் இங்கு எத்தனை செடிகள் இருக்கின்றன என்று உனக்குத் தெரியுமா? ஒருதுளி நீரை வீணாக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கடிந்து கொண்டார்.
சீடர்
தனது தவறை உணர்ந்த கணம் ஞானம் பெற்றார். மறுகணமே அந்தச் சீடருக்குத் தனது
பெயரையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. பெயரை ‘தைசின்கூ’ என மாற்றிக் கொண்டார். ‘தைசின்கூ’ என்ற சொல்லுக்கு ‘ஒருதுளி
நீர்’ என்று பொருள்.
---------------------
226 - 14.08.2018
வறுமையின்
காரணங்கள்
அறிஞர்
பிளாட்டோ வறுமை நிலவிக்கொண்டு இருப்பதற்கு போதிய கல்வியறிவின்மை, கெட்ட சகவாசம், அநீதியான சமூக விதி என்னும் மூன்று காரணங்களைக் குறிப்பிடுகிறார். இதில்
முதலில் இருப்பது கல்வியறிவின்மை. கல்வி அறிவு இருந்தால் போதும் வறுமையை வென்று
விடலாம் என்பதை பிளாட்டோ திடமாக நம்பியதன் விளைவால் தான் கல்வியறிவின்மையை அவர்
முதலில் சொல்லியிருக்க வேண்டும். கல்வி அறிவிருந்தும் ஒருவர் வறுமையில்
இருக்கிறார் என்றால் அவருக்குக் கெட்ட சகவாசம் இருக்க வேண்டும் என்கிற நோக்கில்
கெட்ட சகவாசத்தை இரண்டாவதாக வைத்திருக்கிறார். கல்வியறிவும் நல்ல சகவாசமும்
கிடைக்கப் பெற்றும் ஒருவர் வறுமையில் இருக்கிறார் என்றால் அவர் வாழும் சமுதாயம்
அநீதியால் நிரம்பியிருக்கிறது என்று பொருள் என்கிற அடிப்படையில் அதை மூன்றாவதாக
வைத்திருக்கிறார். இந்த மூன்று காரணங்களை பிளாட்டோ வரிசைப்படுத்தி இருப்பதை உற்று
நோக்கும் போது ஏற்றத்தாழ்வான சமுதாயத்தில் வறுமையை ஒழிக்க கல்வியும் ஒழுக்கமும்
மட்டும் போதாது அநீதியான சமுதாய விதிகள் மாற்றப்பட வேண்டும் என்கிற பிளாட்டோவின்
எண்ணமும் உள்ளோடிக் கிடப்பதைக் காணமுடியும்.
---------------------
227 - 15.08.2018
விடுதலை
விடுதலை
என்பது விடுபடுதல். அதாவது வலிமையான ஒன்றிடமிருந்து வலிமையற்ற ஒன்று விடுபடுதலே
விடுதலை எனப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் வலிமையான ஒன்று வலிமையற்ற ஒன்றை வாழ
விட்டுப் பார்ப்பது தான் விடுதலை என்றும் கூடச் சொல்லலாம். பொருளாதார வலிமை கொண்டவர்கள் பொருளாதாரத்தில்
வலிமையற்றவர்களை வாழ விடுவது தான் விடுதலை. அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் அரசியல்
அதிகாரமற்று இருப்பவர்களை வாழ விடுவதுதான் விடுதலை. சமூகத்தில் வலிமையானவர்கள்
சமூகத்தில் நலிந்தவர்களை வாழ விடுவதுதான் விடுதலையாக இருக்க முடியும். சமூக, பொருளாதார, அரசியல்
சுரண்டல்கள் இன்றி ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளுக்கு ஒவ்வொரு மனிதனும் மதிப்பளித்தலே
விடுதலை. அந்த விடுதலை எல்லோருக்குமானதாக அமைய வேண்டுமெனில் சமூகத்தில்
வலிமையற்றவர்களின் அரசியலுக்கும் பொருளாதாரத் தேவைகளுக்கும் வலிமையானவர்கள் துணை நிற்க
வேண்டும். அதுதான் விடுதலை. அந்த விடுதலை தான் தேவையாகவும் இருக்கிறது.
---------------------
228 - 16.08.2018
தேசியப்
பேரரசர்
முகலாய
மன்னர்களில் வித்தியாசமானவராகக் கருதப்படும் அக்பர், மக்களின் கருத்துச் சுதந்திரத்தை மதித்தவர். அரசின் செயல்பாட்டை
விமர்சிப்பவர்களோடு கலந்துரையாடி பிரச்சினைக்குத் தீர்வு கண்டவர். தம்மை
விமர்சிக்கும் யாரையும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யாதவர்.
மக்களின் கலந்துரையாடலில் இருந்து சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார். அதையே
அவரது ஆட்சிக்காலம் முழுக்க பின்பற்றவும் செய்தார். 1575 இல் இபபத்கானா என்னும் மண்டபம் ஒன்றை எழுப்பிய அவர், அதில் அனைத்து மதத்தினரையும் தத்தமது கருத்துகளை
விவாதிப்பதற்கு அனுமதித்தார். மக்கள் எந்த விதக் காழ்ப்புணர்ச்சியும் இன்றி கலந்துரையாடினார்கள். 1582 இல் பழைமைவாத இஸ்லாத்தில் இருந்து விலகி தீன்இலாகி என்னும்
மதப்பிரிவை உருவாக்கி தனக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டார். சதியும் உடன்கட்டை ஏறுவதும் கொடுமையானது
என்பதை உணர்ந்த அக்பர், உடனடியாக அவைகளைத்
தடுத்து நிறுத்தினார். ஒவ்வொருவருக்கும் அவரது தெய்வங்களை வழிபடுவதற்கு உரிமை
உள்ளது என கூறிய அக்பரை,
அவரது மத சகிப்புத் தன்மைக்காகவே ‘தேசியப் பேரரசர்’ எனச் சுட்டுகிறார்கள்.
மிகப் பொருத்தமான அடைமொழி தான்.
---------------------
229 - 17.08.2018
மக்களும் புத்தகம்
ஒருமுறை
திருச்சியில் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த போது பார்வையாளரிடம் நீதியின்
பக்கம் இருப்பது சரியா?
அல்லது உண்மையின் பக்கம் இருப்பது சரியா? என்று கேட்டேன். சிலர் நீதியின் பக்கம் இருப்பது தான்
சரியாக இருக்கும். நீதிதான் நிலையானது. அதன் பக்கம் இருப்பதுதான் சரியானதாக இருக்க
முடியும் என்றார்கள். சிலர் உண்மையின் பக்கம் இருப்பது தான் சரியாக இருக்கும்.
நீதி எப்போது மேலே இருந்து கீழ் நோக்கி வழங்கப்பெறுவது. அதிகாரத்தில் இருப்போரின்
பிரயோகம் அது. சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப நீதி மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும்.
ஆனால் உண்மை அப்படியல்ல. உண்மை எங்கும் எப்பொழுதும் மிகச் சரியாகக்
கடைப்பிடிக்கப்படுமேயானால் நீதிக்கு இடமே இல்லை. நீதி வந்த பின் காப்பது. உண்மை
வருமுன் காப்பது. எனவே நீதியின் பக்கம் நிற்பதை விட உண்மையின் பக்கம் நிற்பதே
சிறந்தது. உண்மை எப்போதுமே உண்மையாகத் தான் இருக்கும் நீதி எப்போதுமே நீதியாகத்
தான் இருக்கும் என்று சொல்ல முடியாது என்றார்கள். மக்களிடம் கற்றுகொள்ள நிறைய
இருக்கிறது.
---------------------
230 - 18.08.2018
பித்தர் உலகம்
‘ஒவ்வொருவருக்குள்ளும் இருவர் இருக்கிறார்கள்’ என்பது
மேற்கத்தியப் பழமொழி. ஒருவர் உள்ளுக்குள்ளாக ஓர் உலகத்தில் வாழ்கிறார். அவரே வெளி
உலகத்தில் வேறொருவராக வாழ்கிறார். ஒருவர் கூட்டத்தில் ஒருவராக இருக்கும் போது ஒரு
மனநிலையில் இருக்கிறார். அவரே தனியாக இருக்கும் போது வேறொரு மனநிலையில்
இருக்கிறார். அதனால் தான் அந்தப் பழமொழி ஒவ்வொருவருக்குள்ளும் இருவர்
இருக்கிறார்கள் என்கிறது. வெளி உலகத்தில் வாழும் மனிதர் வெளி மக்களின்
விருப்பங்களுக்கேற்பவே தன்னை காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்
மனதுக்குள்ளாக விருப்பம் போல வாழ்ந்து கொள்ளலாம். உள்ளாகவும் புறமாகவும் வாழுகிற
இருவரும் இணைந்து இருக்கும் நிலையைத் தான் முழுமையான மனிதர் என்று சொல்லிக் கொண்டு
இருக்கிறோம். உளவியல் அறிஞர் பிராய்ட் மனிதர்கள் நனவில் மட்டும் இயல்பானவர்கள்.
கனவில் அனைவரும் பித்தர்களே என்கிற கூற்று உண்மைதான். மனிதர்கள் அனைவரும் அவர்தம்
கனவுலகில் விரும்பம் போல வாழ்ந்துகொள்ளலாம். தடையேதும் மில்லை. தடையின்றி
விருப்பம் போல வாழ்வது தான் பித்தர் உலகம்.
---------------------
231 - 19.08.2018
நீரின் பயணம்
சமீபத்தில்
எழுத்தாளரும் பள்ளி ஆசிரியருமான கவிஞர் இரா.எட்வின் எழுதிய கவிதை ஒன்றை வாசிக்க
நேர்ந்தது. மிகச் சிறிய கவிதை தான். ஆனால் கவிதை பேசிய செய்தி மிகப் பெரியது.
பல்வேறு தளங்களில் வைத்து பொருள் காண்பதற்கான திறப்புகளைக் கொண்டது. கவிதை இப்படி
அமைந்திருக்கிறது.
மாறுவதே இல்லை நீரின் பயணம்
ஊர் எதுவாயினும்
கீழிலிருந்து மேலாய் குடிநீரும்
மேலிருந்து கீழாய் சாக்கடையும்
என்பது
தான் அக்கவிதை. இந்தக் கவிதையில் மேல் X கீழ் என்கிற சொற்கள் தான் கவிதையின் அடர்த்தியைச் சுமந்து
நிற்கின்றன. மேலே இருப்பவர்கள் எப்பொழுதும் நல்லதை எடுத்துக்கொள்கிறார்கள். கீழே
இருப்பவர்களுக்கு கழிவுகளே கிடைக்கின்றன என்றும் பொருள் கொள்ளலாம். மேல் X கீழ் என்பதை ஊர் X சேரி எனவும் வைத்துப் பொருள் கொள்ளலாம். ஆண் X பெண் எனவும் வைத்துப் பொருள் கொள்ளலாம். அரசு X மக்கள் எனவும் வைத்துப் பொருள் கொள்ளலாம். கவிதையை
எப்படிப் பொருள் கொண்டாலும் கவிதையை வாசிக்கும் நேர்மையான மனம், மேல் X கீழ் என்னும் சமூக அடுக்கின் அபத்தத்திற்காகக் கோபப்படாமல்
இருக்காது. கோபப்பட வேண்டும்.
---------------------
232 - 20.08.2018
துயர்
துடைப்பதே நாகரிகம்
வரலாற்றில்
இல்லாத அளவுக்கு கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அம்மாநிலத்தின்
முதல்வர் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் மத்திய அரசிடம் இருந்தும் உதவியை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். சில மாநிலங்கள் தவிர பல மாநில அரசுகளும்
மக்களும் உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது. இன்னொரு
புறம் சமூக வலைத்தளங்களில் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற
கோரிக்கை வைக்கப்பட்ட பின் தான் இப்படி ஒரு பேரிடர் வந்துவிட்டது என்று சிலர்
பரப்புரை செய்கிறார்கள். அவர்களின் கருத்து அறிவுக்கு மாறானது. புறக்கணிக்க
வேண்டியது. மக்கள் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் போது அதை கடவுளுடன்
தொடர்புபடுத்தி பேசக்கூடாது என்பதை பரப்புரை செய்கிறவர்கள் உணர வேண்டும். பிறரின்
துன்பத்தில் மதவாத அரசியல் செய்வது மதத்திற்கும் இழுக்கு, அரசியலுக்கும் இழுக்கு என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள
வேண்டும். இப்போதைக்கு உடனடித் தேவை வேறுபாடுகளைப் புறந்தள்ளி சக மனிதர்களின்
துயரைத் துடைப்பதுதான். அதுதான் நாகரிகச் சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும்.
---------------------
233 - 23.08.2018
உபரிச்
செய்திகள் தரும் படிப்பினை
புத்தகங்கள்
மீது அளப்பரிய காதல் கொண்டிருந்தவர்களால் தான் பல நேரங்களில் உலகத்தின் இயக்கம்
திசை திருப்பி விடப்பட்டிருக்கிறது. அப்படி திருப்பிவிட்டவர்களுள் ஒருவரும்
இருபதாம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த சிந்தனையாளராருமான காரல் மார்க்ஸ் தனது மூலதனம்
என்ற நூலை எழுதுவதற்காகப் படித்த நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளின்
தொதிகள் ‘லண்டன் குறிப்பேடுகள்’
என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் பல புதிய சிந்தனைகள் காணக்கிடைக்கின்றன.
வேதியியல் வேளாண்மை,
உடலியக்க மானிடவியல் முதலிய செய்திகள் உள்ளிட்ட பல செய்திகளும் காணப்படுகின்றன. அந்தச் செய்தியின்
தொகுப்பும் செறிவும் மார்க்ஸ் புத்தகங்களின் மீது எவ்வளவு நேசம் கொண்டிருந்தார்
என்பதை புலப்படுத்தி நிற்கின்றன. மார்க்ஸ்
மூலதனம் எழுதியது போக எஞ்சி நிற்கும் அந்தக் குறிப்புகளே நமக்கு பெருவியப்பைத்
தரும் வேளையில்,
மார்க்ஸ் வாழ்க்கை நமக்குப் பல படிப்பினைகளைக் கற்றுத்
தருகிறது. அவற்றுள் பல புத்தகங்களைப் படித்தால் உலகைப் புரட்டிப்போடக் கூடிய ஒரு
புத்தகத்தை எழுதிவிடலாம் என்கிற படிப்பினையும் ஒன்று.
---------------------
234 - 22.08.2018
கையாக்
கோட்பாடு
பூமியில்
வாழும் உயிருள்ளவைகளும் உயிரற்றவைகளும் ஒரு மூல வடிவத்தின் ஓர் அங்கமே என்பதை
முன்வைப்பதே கையாக் கோட்பாடு. 1972 இல் பிரிட்டனைச் சார்ந்த வேதியல் அறிஞரான ஜேம்ஸ் ஈ லவ்லாக்
என்பவரும் அமெரிக்காவின் உயிரியல் அறிஞரான லின் மார்குலிஸ் என்பவரும்
இக்கோட்பாட்டை வடிவமைத்தார்கள். கிரேக்க நாட்டின் பூமி தேவதையான கையாவின் பெயரை அவர்களே இக்கோட்பாட்டிற்குச் சூட்டினர்.
என்ன
காரணத்தினால் கையாவின் பெயரை இதற்குச் சூட்டினார்கள் எனத் தெரியவில்லை. பூமியில்
உள்ள ஒட்டுமொத்த உயிரின வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பூமியின்
சுற்றுச்சூழலின் மீது அனைத்து உயிரினங்களும் ஓர் ஒழுங்குபடுத்தும் திறனைக்
கொண்டிருக்கின்றன. உயிர்கள் உயிர் வாழ்வதற்கு உதவும் வகையிலான அம்சங்களோடு பூமி
உருவாகி இருக்கிறது என்பதே இக்கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவமாகும். இக்கோட்பாடு
முன்வைக்கப்பட்ட காலத்தில் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாயிற்று.
---------------------
235 - 23.08.2018
கருஞ்சட்டை
படை
முசோலினி
தலைமையில் ஆயுதம் தாங்கிய இத்தாலிய பாசிசப் படையினர் ‘கருஞ்சட்டை படையினர்’ என
அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தங்கள் சீருடையின் ஒருபகுதியாக கருப்புச்சட்டையை
அணிந்திருந்தனர். 1919 இல் உருவாக்கப்பட்ட கருஞ்சட்டைப் படையினர் சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், குடியரசு ஆதரவாளர்களை தீவிரமாக எதிர்த்தனர். அது மட்டும் தான் அவர்களின்
வேலைத் திட்டமாக இருந்தது. இப்படையினரின் எண்ணிக்கை அதிகரித்தபோது
நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1922 இல் ரோமை நோக்கிச் சென்ற பேரணியில் இத்தாலியில் இருந்த கருஞ்சட்டையினர்
அனைவரும் திரளாக பங்கெடுத்தனர். தனி அமைப்பாக இருந்த இவர்கள் 1923 இல் தேசிய ராணுவமாக மாற்றப்பட்டனர். முசோலினி இருக்கும்
வரை கருஞ்சட்டையினர் சமுதாய மதிப்பின் உச்சத்தில் இருந்தனர். செல்லும் இடமெல்லாம்
செல்வாக்கு இருந்தது. முசோலினி மறைவுக்குப் பிறகு செல்வாக்கிழந்தனர்.
---------------------
236 - 24.08.2018
அட்லான்டிக்
சாசனம்
அமெரிக்க
முன்னாள் அதிபர் ஃபிராங்லின் டி ரூஸ்வெல்ட்டும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர்
வின்ஸ்டன் சர்ச்சிலும் இணைந்து இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் 1941ஆம் வருடம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கைக்கு ‘அட்லான்டிக் சாசனம்’ என்று பெயர். இரண்டாம் உலகப்
போரில் அமெரிக்கா இறங்குவதற்கு முன் வெளியிட்ட இந்த சாசனத்தில் அமெரிக்காவோ
இங்கிலாந்தோ தமது செல்வாக்கை பெருக்கிக்கொள்ள முயலவில்லை என்றும் எங்கெல்லாம்
தன்னாட்சி வலுக்கட்டாயமாக மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அதை மீட்கப் பாடுபடப்
போவதாகவும் கூறப்பட்டிருந்தது. 1942 இல் ஐ.நா.வின் பிரகடனத்தில் இந்த சாசனம் குறிப்புரையாக இடம் பெற்றது.
அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் இறங்குவதற்கு அறிகுறியாக வெளியிடப்பட்ட சாசனமாக
இதில் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது
மறைமுகமாகச் சுட்டப்பட்டு இருந்தது தான் இந்த சாசனத்தின் கூடுதல் சிறப்பம்சம்.
---------------------
237 - 25.08.2018
டி.எம்.ஸி.
கணக்கு
தலைக்
காவிரியில் கன மழை பெய்ததாலும் கேரளாவில் மிக அதிகமான மழை பெய்ததாலும்
தமிழகத்திற்கு வழக்கத்திற்கு மாறான அளவில் தண்ணீர் கிடைத்தது. முக்கியமான அணைகள்
யாவும் நிரம்பின. காவிரியில் வந்த 10,000 டி.எம்.ஸி தண்ணீர் வீணாக கடலில் கலந்து விட்டதாகவும்
செய்திகள் வருகின்றன. கிடைத்த தண்ணீரைச் சேமித்து வைப்பதற்கான வழிமுறைகள் ஏதும்
இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஆயிரம் மில்லியன் கியூபிக் ஃபீட் என்பதைத் தான்
சுருக்கமாக டி.எம்.ஸி என்கிறார்கள். அதாவது ஒரு டி.எம்.ஸி தண்ணீர் என்பது 2830 கோடி லிட்டருக்குச் சமம். ஒரு டி.எம்.ஸி தண்ணீரை வைத்துக்
கொண்டு தங்கு தடையின்றி சென்னை மாநகருக்கு 34 நாட்களுக்கு குடிநீர் வழங்க முடியும். ஒரு டி.எம்.ஸி தண்ணீரை 12 ஆயிரம் கொள்ளவு கொண்ட லாரியில் நிரப்ப வேண்டுமானால் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும். இது ஒரு டி.எம்.ஸி நீருக்கான
கணக்கு. இதைப் போல 10 ஆயிரம் மடங்கு அளவுள்ள நீர் கடந்த பத்து நாட்களில் கடலில்
வீணாகக் கலந்திருக்கிறது. ஆற்றில் அவ்வளவு நீர் ஓடியும் தமிழகத்தின் பாதி
கண்மாய்களும் குளங்களும் காய்ந்து கிடக்கின்றன என்றால் விவசாயிகள் எப்படி வாழ
முடியும்?
இது யாருடைய பிழை?
---------------------
238 - 26.08.2018
கண்ணீர்த்தடமும்
செரோக்கீ இந்தியர்களும்
1835 இல் ஜார்ஜியாவில் அந்நாட்டு பூர்வீக குடிகளான செரோக்கீ இந்தியர்கள் வாழ்ந்த
பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணிக்கையில் குறைவாக இருந்த செரோக்கீ
இந்தியர்களிடம் ஏராளமான நிலம் இருந்தது. அந்த நிலத்தில் தான் தங்கம் இருப்பதாக
கண்டு பிடித்தார்கள். அதனால் அந்த நிலத்தை செரோக்கீ இந்தியர்களிடம் இருந்து
கைப்பற்றுவதற்கு ஏராளமான முயற்சிகள் நடைபெற்றன. ஒரு கட்டத்தில் வேறு வழி இல்லாமல்
வெறும் 5 மில்லியன் டாலருக்கு அந்நிலங்கள் விற்கப்பட்டன. இந்த நில
விற்பனை சட்டப்படி செல்லாது என்று அமெரிக்க தலைமை நீதிமன்றம் கூறியது. அந்தத்
தீர்ப்பை மாநில அதிகாரிகள் யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஆதலால் மாநில
அதிகாரிகளால் செரோக்கீ இந்தியர்கள் ஒக்லகோமாவுக்கு வலுக்கட்டாயமாக இடம் பெயர்க்கப்பட்டார்கள்.
இடப்பெயர்வின் போது போதிய உணவுப் பொருள் தரப்படவில்லை. பயணத்தின் வழியில் நிலவிய
மோசமான தட்பவெட்பத்தினால் ஏறத்தாழ 4 ஆயிரம் செரோக்கீ இந்தியர்கள் இறந்து போனார்கள். இந்த நிகழ்வு ஐரோப்பிய
வரலாற்றியலாளர்களால் ‘கண்ணீர்த்தடம்’ எனக்
குறிப்பிடப்படுகிறது.
---------------------
239 - 27.08.2018
அமைதிக்கோல்
அடையாள
உருவாக்கத்தில் கிரேக்க கடவுள்களுக்கும் கிரேக்கச் சிந்தனையாளர்களுக்கும் மிகப்
பெரிய பங்குண்டு. அந்தவகையில் கிரேக்கத்தில் உருவாக்கப்பட்டு இருந்த ஓர் அடையாளச்
சின்னம் தான் ‘அமைதிக்கோல்’. இக்கோலை
அமைதியின் சின்னமாகக் கிரேக்கக் கடவுளான ஹெர்மிஸ் தனது கைகளில் தாங்கி நின்றதாகச்
சொல்லப்படுகிறது. இந்த அமைதிக்கோல் ரோமானிய மற்றும் கிரேக்கக்
கட்டியக்காரர்களுக்கும் அரசின் தூதர்களுக்கும் பாதுகாப்புச் சின்னமாகக்
கருதப்பட்டது. பின்னாளில் ஒரு கம்பு அல்லது தடி அல்லது இரண்டு தளிர்களைக் கொண்ட
ஒரு ஆலிவ் மரத்தின் கிளையாகச் சித்திரிக்கப்பட்டது. மாலைகளாலும் நாடாக்களாலும்
அலங்கரிக்கப்பட்டது. பிற்காலத்தில் வடிவமைக்கப்பட்ட ஹெர்மிஸ் சிலைகளில்
மாலைகளுக்குப் பதிலாக இரண்டு பாம்புகளும் ஹெர்மிஸின் வேகத்தைக் குறிப்பதற்காக
கோலுக்குப் பதிலாக இரண்டு சிறகுகளும் சேர்க்கப்பட்டன. அஸ்க்ளீப்பியஸின் கோலைப்
போலவே இருந்ததால் இந்த அமைதிக்கோல் பின்னாளில் மருத்துவர்களின் சின்னமாகவும்
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
---------------------
240 - 28.08.2018
காதலும் ஆண்மை
நீக்கமும்
பிரான்ஸில்
இறையியலாலராகவும் தத்துவஞானியாகவும் இருந்தவர்
அபிலார்ட்.பீட்டர். தத்துவம் பயிலக் கூடாது என்று வீட்டில் தடை விதித்தபோது
அதை மீறி தனது குடும்ப உரிமையை இழந்து தத்துவம் பயின்றார். 1114 ஆம் ஆண்டுவாக்கில் ஹெல்வா என்கிற பெண்ணை காதலித்தார்.
ஹெல்வா கருவுற்றார். அதன் பிறகே திருமணம் செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த
ஹெல்வாவின் மாமா அபிலார்ட். பீட்டருக்கு ஆண்மை நீக்கம் செய்தார். அதற்குப் பிறகு
அபிலார்ட் துறவு வாழ்க்கைக்கு வந்தார். அவரது மனைவி ஹெல்வாவும் துறவெய்தினார்.
இவரது நூல்கள் மதத்திற்குத் தடையாக இருப்பதாகச் சொல்லி பலமுறை தடைசெய்யப்பட்டுள்ளன.
அவற்றுள் ஒன்று தியோலாஜியா என்கிற நூல். 1140 இல் மதத்திற்கு எதிரான கருத்துக்களைப் பரப்புகிறார் என்று கடும்
கண்டனத்திற்கு ஆளானார். ஹிஸ்டோரியா காலாமிட்டேடம் என்பது அபிலார்ட். பீட்டரின்
சுயசரிதை. இவரது படைப்புகளிலேயே மிகவும் சிறப்பாக இருப்பது இவரும் இவரது காதல்
மனைவியும் துறவறம் எய்திய பிறகு பரிமாறிக்கொண்ட கடிதங்கள் தான்.
---------------------
241 - 29.08.2018
செல்வந்தனாதல்
மனிதர்கள்
அனைவருக்கும் கனவுகள்,
ஆசைகள், தேவைகள்
இருக்கவே செய்யும். யாரொருவரும் வாழ்ந்து முடித்த திருப்தியோடு இருக்க முடியாது.
வாழாமல் விட்ட வாழ்க்கை மிச்சம் இருப்பதாகவே உணர்வார்கள். வாழ வேண்டும் என்பதில்
உறுதியாக இருப்பார்கள். வாழ்வதற்காக தேடிக்கொண்டே இருப்பார்கள். பொருள், பொருள், மண், என்று தேடிக்கொண்டே இருப்பார்கள். தேடிய பொருளை கண்டடையவும்
செய்வார்கள். ஆனால் வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்களா என்றால் இல்லை என்று தான்
சொல்ல முடியும். திருப்திபட்டுக்கொள்ளாமல் தேடிக் கொண்டே இருப்பவர்களுக்கு தேடுதல்
சுகமாகவோ,
தேவையாகவோ இருக்கலாம். ஆனால் வாழ்க்கை அவர்களை விட்டு
வெகுதொலைவுக்குப் போயிருக்கும். வாழ்க்கைக்காகப் பொருளைத் தேடிதேடி வாழ வேண்டிய
வாழ்வை வாழாமல் விட்டு விடக்கூடாது. இது செல்வந்தனாக ஆக விரும்புபவர்களுக்கும்
பொருந்தும். செல்வந்தனாவது ஒருவன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதைப் பொறுத்ததல்ல.
எவ்வளவு செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது தான்.
---------------------
242 - 30.08.2018
துன்பத்தை
விலக்கும் வழி
மண்ணில்
பிறந்த யாவற்றுக்கும் ஒரே மாதிரியான இருப்பு எப்போதும் அமையாது. இன்பமும்
துன்பமும் இணைந்தே இருப்பது தான் உலகத்தின் இயற்கை. இன்பம் துன்பம் என்பனவற்றில்
நமக்குத் தேவையானவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு மற்றதை விலக்கிவிட்டு வாழ
முடியாது. அது யாருக்கும் வாய்க்காத ஒன்று. ஒவ்வொருவருமே எல்லா சூழ்நிலைகளிலும்
வாழ்ந்து விட்டுதான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். அந்தவகையில் இன்பம்
வருகிறதென்றால் அதை இயல்பாகச் சந்தித்துவிடலாம். கடந்து விடலாம். அதற்குத் துணை
என்பது அவசியமில்லை. ஆனால் துன்பம் என்பது அப்படியல்ல. வந்துவிட்டால் அதைக்
கடப்பதற்கு துணை ஒன்று தேவைப்படுகிறது. துணையின் வழியாக ஆறுதல் வார்த்தைகள் சில
தேவையாய் இருக்கின்றன. அதிலிருந்து விடுபடுவதற்கே பெரும் சிரத்தை எடுத்துக்கொள்ள
வேண்டியிருக்கும். ஆனால் திருவள்ளுவர் துன்பத்தை சற்று வேறுவிதமாக அணுகுகின்றார். ‘வெள்ளைத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்’ என்கிறார் வள்ளுவர். அதாவது துன்பத்தை விரட்ட பொன்னோ பொருளோ, துணையோ, ஆறுதல்
வார்த்தைகளோ தேவையில்லை. அறிவு இருந்தாலே போதும் என்பது வள்ளுவார் வாக்கு.
---------------------
243 - 31.08.2018
தேசிய
கீதத்தின் கதை
ரபிந்தரநாத்
தாகூர் ஐந்து சரணங்களைக் கொண்டு எழுதிய பாடலின் முதல் சரணத்தைத் தான் நாம் தேசிய
கீதமாகப் பாடிக் கொண்டு இருக்கிறோம். ஏனைய நான்கு சரணங்களும் அவ்வளவாக
புகழ்பெறவில்லை. 1911 இல் காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலாகப் பாடப்பட்ட ‘ஜன கன மன’ என்கிற
அந்தப்பாடலுக்கு 1918 இல் தான் முறையாக இசையமைக்கப்பட்டது. ஆந்திராவைச் சார்ந்த
ஜேம்ஸ் எச்.கசின் என்பவரும் அவரது மனைவியும் இணைந்து இசையமைத்தனர். அவர்கள் அமைந்த
மெட்டு தாகூருக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த மெட்டை அடிப்படையாகக் கொண்டுதான்
சிறுசிறு மாற்றங்களைச் செய்து பின்னாளில் இசையமைக்கப்பட்டது. இன்னொரு புறம் நேதாஜியும்
இந்தப்பாடலுக்கான இசையமைப்புக்குக் காரணமாக இருந்திருக்கிறார். அவரது ஐ.என்.ஏ வில்
கேப்டன் ராம்சிங் என்பவர் பேண்ட் வாத்தியத்தில் வாசிக்கும்படி இசையை
அமைந்திருந்தார். அது நேதாஜிக்குப் பிடித்துவிட, அதற்காக அவர் கேப்டன் ராம்சிங்கிற்கு தங்கப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தார்.
---------------------
244 - 01.09.2018
போப்பாண்டவருக்கான
பரிசு
மன்னராட்சி
நிலவிய காலங்களில் நட்பு பாராட்டிய மன்னர்களுக்குள் பரிசுப் பொருளைப்
பரிமாறிக்கொள்ளும் வழக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில்
இருந்து வெளி நாட்டிற்கும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கும் ஏராளமான பரிசுப்
பொருள்கள் பரிமாறப்பட்டு இருப்பதை வரலாற்றில் நாம் பார்க்க முடியும். 1515 ஆண்டு வாக்கில் இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு
காண்டாமிருகம் பரிசாக வழங்கப்பெற்றிருக்கிறது. போர்ச்சுக்கல்லின் லிஸ்பைன் நகரில்
இருந்த மக்கள் காண்டாமிருகத்தை வியப்போடு பார்த்திருக்கிறார்கள். அதுவரை
காண்டாமிருகத்தைப் பார்த்திராத அவர்களில் சிலர் பயந்திருந்திருக்கிறார்கள்.
பின்னர் அவர்கள் அந்தக் காண்டாமிருகத்தை போப்பாண்டவருக்குப் பரிசாக வழங்க முடிவு
செய்து கப்பலில் அனுப்பி வைத்தனர். அந்தக் கப்பல் மூழ்கியது. செய்தி
போப்பாண்டவருக்குப் போனது. தனக்கு வழங்கப்பட்ட அந்த மிருகத்தைப் பார்த்துவிட
வேண்டும் என்று போப்பாண்டவர் விரும்பியதால் ட்ஊர் என்னும் ஓவியரை அழைத்துவந்து
காண்டமிருகத்தைப் பார்த்தவர்கள் அதன் தோற்றத்தை விவரிக்க, ஓவியர் அந்த விவரிப்புகளைக் கொண்டே அச்சு அசலாக
காண்டாமிருகத்தை வரைந்து காட்டினார்.
---------------------
245 - 02.09.2018
நல்ல
தாய்மார்களும் நல்ல தேசமும்
Give me good
mothers and I will give you a good nation என்கிறார் மாவீரன் நெப்போலியன். உலகத்தின் பெரும்பகுதியை தனது
கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்த நெப்போலியன், தனது சிந்தனையையும் படைபலத்தையும் முழுமையாக நம்பி கொண்டிருந்தார். ஒரு
மன்னனின் நிரந்தர வெற்றிற்கு படைப்பெருக்கமே அவசியமானது என்கிற பொதுவான எண்ணத்தின்
மீதும் அவருக்கு மாற்றுக் கருத்தில்லை. அப்படிப்பட்டவரிடமிருந்து நல்ல
தாய்மார்களைக் கொடுங்கள் நல்ல தேசத்தைத் தருவேன் என்று வெளிப்பட்ட வார்த்தை
பெண்கள் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் தேசத்தின் நலனின் பெண்களின் பங்கு
எவ்வளவு முக்கியமானது என்பதையும் உணர்த்தி நிற்கிறது. நல்ல தேசம் என்பது
பொருளாதாரத்தில் உயர்ந்திருப்பதிலோ வல்லரசு என்று மார்தட்டிக் கொள்வதிலோ இல்லை.
நல்ல மனிதர்கள் என்பதில் தான் இருக்கிறது. நல்ல மனிதர்கள் இருந்துவிட்டால் தேசம்
நல்லதாகிவிடும். நல்ல தாய்கள் இருந்துவிட்டால் நல்ல மனிதர்கள்
கிடைத்துவிடுவார்கள்.
---------------------
246 - 03.09.2018
ஃபரீத்
அக்பர்
காலத்தில் ஃபிரீத் என்னும் ஒரு மக்கள் செல்வாக்குப் பெற்ற ஞானி இருந்தார்.
ஒருவருக்கொருவர் பெயர் சொல்லிக் கூப்பிடுகிற அளவுக்கு அக்பரோடும் அவருக்கு நட்பு
இருந்தது. ஒருநாள் மக்கள் சில கோரிக்கைகளோடு ஞானி ஃபிரீத்தை சந்தித்தார்கள்.
உங்கள் நண்பர் அக்பரிடம் சொல்லி எப்படியாவது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றச்
செய்யுங்கள் என்றார்கள். மக்களுக்காக ஃபிரீத்தும் அக்பரைச் சந்திக்கச் சென்றார்.
பிரபலமான ஞானி என்பதாலும் அக்பருக்கு நெருங்கிய நண்பர் என்பதாலும் எவ்வித
சோதனையும் தடையுமின்றி அரண்மனைக்குள் நுழைந்து அக்பரின் தனி அறைக்குள் சென்றார்.
அங்கே அக்பர் இறைவனிடம் தனது தேவைகளை முறையிட்டு கெஞ்சிக்கொண்டிருந்தார். அது ஞானி
ஃபிரீத் காதில் விழுந்துவிட்டது. சட்டென்று வந்த வழியே திரும்பினார். மக்களுக்காக
அரசரிடம் கேட்க வந்தால் அரசர் இறைவனிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாரே? இவ்வளவு ஏழ்மையான அரசரா நமது நாட்டை ஆள்கிறார். இவரிடம்
நமது மக்களுக்காகக் கேட்டுப்பெறுவதற்குப் பதிலாக இவர் வேண்டுகின்ற இறைவனிடமே நாம்
கேட்டு பெற்றுக்கொள்ளலாமே என மனதுக்குள் நினைத்துக்கொண்டார். அக்பரின்
சுயசரிதையில் குறிப்பிடப்பட்டு இச்சம்பவம் அரசனே ஆனாலும் பற்றாக்குறையுடன் தான்
வாழவேண்டும் என்பதை உணர்த்துகிறது .
---------------------
247 - 04.09.2018
கார்த்தோபேஸ்
மானுவெல்
பெனிடெஸ் பெரேஸ் என்னும் இயற்பெயரைக் கொண்ட கார்த்தோபேஸ் என்பவர் ஸ்பெயின்
நாட்டைச் சார்ந்த காளைச் சண்டை வீரர். பெற்றோர் இன்றி அநாதையாக வளர்ந்த இவருக்குப்
படிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை. முரட்டுக்குணம் கொண்டவராக வளர்ந்தார்.
அவரது முரட்டுக்குணம் காளைச் சண்டைக்கு ஏற்றதாக அமைந்தது. 1959 இல் முதன் முதலாக காளைச் சண்டை வீரராகக் களமிறங்கினார்.
என்றாலும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கவில்லை. 1963 இல் முழுநேர காளைச் சண்டை வீரராகவே மாறிப்போனார். அதற்குப் பிறகு அவருக்கு
வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்தன. 1965 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்ர்தில் மட்டும் காளைச் சண்டையில் 64 காளைகளைக் களத்திலேயே வீழ்த்தி கைகளால் அடித்தே கொன்றார்.
காளைச் சண்டையின் போது அவரது அனிச்சைச் செயலும் தைரியமும் அவருக்குத் தொடர்ச்சியான
வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தது. அந்தக் காலத்திலேயே 3.5 கோடி பெசட்டாகளைப் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.
அதிகமான ஊதியம் பெற்ற காளைச்சண்டை வீரர் என்கிற இவருடைய சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
---------------------
248 - 05.09.2018
கருஞ்சிறுத்தைக்
கட்சி
அமெரிக்க
ஆப்ரிக்காவின் புரட்சிகரமான அமைப்பு ஒன்றின் பெயர் கருஞ்சிறுத்தைக் கட்சி.
இக்கட்சியைக் கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்து எனும் இடத்தில் ஹ்யே நியூட்டன்
மற்றும் பாபி ஸ்கேல் என்னும் இருவரும் தோற்றுவித்தார்கள். அமெரிக்க
ஆப்ரிக்கர்களின் மீது காவல்துறை ஏவும் அடக்குமுறைகளில் இருந்து அம்மக்களை மீட்பது
இக்கட்சியின் நோக்கமாக அமைந்தது. பின்னர் இக்குழுவினர் மார்க்ஸிஸ்ட் புரட்சிகர
குழுவினராக மாறினர். அமெரிக்க ஆப்பிரிக்க மக்களை ஆயுதம் ஏந்தக் கோரியும் வெள்ளை
அமெரிக்கர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட அமெரிக்க ஆப்ரிக்காவினருக்கு நஷ்ட ஈடு
வழங்கக்கோரியும் இக்கட்சி களப்பணி ஆற்றி வந்தது. 1960களின் இறுதியில் இக்கட்சி 2000க்கும்
மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலக முழுமைக்கும் பரவியது. இக்கட்சியின் ஆரம்பகாலச்
செய்தித் தொடர்பாளராக எல்ட்ரீச் க்ளாவர் என்பவர் பணியாற்றினார். சரியான நேரத்தில் ஒரு சிறு பொறியை மக்களிடம் கொண்டு
சேர்த்து அதன் வழி மாபெரும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய கட்சி தான்
கருஞ்சிறுத்தைக் கட்சி.
---------------------
249 - 06.09.2018
அட்டார்கட்டீஸ்
வட
சிரியாவின் வட கிழக்கில் உள்ள அலெப்போ என்னும் பகுதியில் ஹீராபோலிஸ் என்னும்
இடத்தில் வணங்கப்பட்ட தேவதையின் பெயர் அட்டார்கட்டீஸ். அத்தேவதை பெரும்பாலும்
அவரது கணவரான ஹடார்
என்பவருடன் சேர்த்தே வணங்கப்பட்டார். வளமையின் தேவதையாகக்
கருதப்பட்ட அட்டார்கட்டீஸ் ஹீராபோலிஸ் நகரத்திற்கும் அங்கு வாழ்ந்த மக்களுக்கும்
எஜமானியாகக் கருதப்பட்டார். கிரீடம் அணிந்து ஒரு கையில் தானியக் கதிர்களை
ஏந்தியபடி அமர்ந்திருக்கும் அட்டார்கட்டீஸ் வேறிரு தேவதைகளான அனாத் மற்றும்
அஸ்டார்டீ ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்தவரே என்று
வேறு சிலரால் கருதப்படுகிறது. இத்தேவதைக்கு தெய்வங்களின் மகா அன்னை என்று
சொல்லக்கூடிய அனடோலிய ஸைபெலுடனும் உறவு உண்டு என்றொரு கதையும் வடசிரியாவில்
வழக்கத்தில் இருக்கிறது. வடசிரியாவின் வணிகர்களும் வடசிரியாவோடு வணிகத்தில் இருந்த
வெளிநாட்டினரும் அட்டார்கட்டீஸை கிரேக்கம் முழுவதும் பரப்பினார்கள். இன்றைக்கு வட சிரியாவில்
மட்டுமின்றி கிரேக்கப்பகுதிகளிலும் அட்டார்கட்டீஸ் வழிபாடு பரவியிருக்கிறது.
---------------------
250 - 07.09.2018
புல்லும்
மண்ணும்
கலில்
ஜிப்ரான் தனது நூலொன்றில் இப்படி எழுதுகிறார். ஒருநாள் வயல்காட்டின் வரப்பில் நின்று
கொண்டிருந்தேன். என்னருகே சோளக் கொல்லைப் பொம்மை ஒன்று நின்று கொண்டிருந்தது. நான்
அந்தப் பொம்மையிடம் நீண்ட காலம் இப்படியே நின்று கொண்டு இருக்கிறாயே உனக்குச்
சலிப்பு ஏற்படவில்லையா?
எனக் கேட்டேன். அதற்கு அந்தப் பொம்மை அப்படி ஒன்றும் இல்லை.
இங்கே வரும் பறவைகளை அச்சுறுத்துவதில் கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே அதுவே எனக்கு
நேரம் போவதே தெரியாமல் செய்துவிடும் என்று கூறியது. நான் கொஞ்ச நேரம் யோசித்தேன்.
பிறகு சொன்னேன். அந்த ஆனந்தத்தை நானும் அனுபவித்திருக்கிறேன். நம்மைக் கண்டு
யாரேனும் பயந்து ஓடினால் வருகிற ஆனந்தமே தனி சுகம் தான் என்றேன். அதற்கு அந்த
பொம்மை உண்மைதான். எவருடைய தேகத்தில் உள்ளே ஒன்றுமில்லாமல் புல்லும் மண்ணும்
இருக்கிறதோ அவர்களே அந்த ஆனந்தத்தை அனுபவிப்பார்கள் என்று சொன்னது என்று கதையை
முடிக்கிறார். அதாவது இக்கதையின் வழி ‘அதிகாரத்தின் மமதையில் இருந்து கொண்டு சக மனிதர்களைப் பயத்திலேயே
வைத்திருப்பவர்களின் உடல் புல்லும் மண்ணும் நிரம்பியதே’ என்கிறார் கலில் ஜிப்ரான்.
---------------------
251 - 08.09.2018
தங்கத்தின்
கதை
அமெரிக்காவின்
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கோலோமா என்கிற இடத்தில் ஜேம்ஸ் டபிள்யூ மார்ஷல் என்பவரால்
1848 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு தங்க வேட்டையாளர்கள்
என்று ஒரு சமூகமே உருவாகியது. அச்சமூகத்தில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிகமாக
இருந்தனர். அந்தக் காலத்தில் தங்கத்திற்காக அமெரிக்காவிற்கு வெளியில் இருந்து 3 லட்சம் மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தனர். ஆஸ்திரேலியா, சீனா முதலிய நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள்
படையெடுத்தனர். அதனால் 1846 ஆம் ஆண்டு வாக்கில் வெறும் 200 மக்களே குடியிருந்த சான்பிராசிஸ்கோவில் 1850க்குள்ளாக 35000க்கும் அதிகமான மக்கள் குடியேறினர். தங்கத்தின் பொருட்டே
புதிய புதிய ரயில் பாதைகளும் கப்பல் போக்குவரத்து எட்டுவழி பதினாறு வழி பசுமை
வழிச் சாலைகளும் உருவாக்கப்பட்டன. இதனால் பூர்வீக அமெரிக்கர்கள் தாக்கப்பட்டு
வெளியேற்றப்பட்டனர். இயற்கை வளத்தை கார்ப்பரேட்டுகள் சுரண்ட ஆரம்பிக்கும் போது பூர்வீக
மக்கள் துரத்தப்படுவது வழக்கமாகவே இருந்திருக்கிறது.
---------------------
252 - 09.09.2018
மகிழ்ச்சியில்
முடிந்த துயரம்
சிலி
நாட்டின் கனிமச் சுரங்கம் ஒன்றில் 2010 ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 33 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். சிக்கிக்கொண்டவர்களோடு எவ்விதத் தொடர்பும்
கொள்ள முடியவில்லை என்பதால் அனைவரும் இறந்துவிட்டனர் என்றே கருதப்பட்டது. பின்னர்
சிலி அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியால் 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பதில்
உறுதியாக இருந்த அரசு சுரங்கத்தின் அருகிலேயே பெரிய துளையிட்டு அதன் வழி பெரிய
கூண்டை உள்நுழைத்து ஆட்களை மேலே கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில்
பீனிக்ஸ் என்று பெயர் சூட்டப்பட்ட கூண்டு தயாரானது. அந்தக் கூண்டில்
மீட்புக்குழுவைச் சார்ந்த மானுவேல் கான்சலேஸ் என்பவர் துளைவழியாகச்
சுரங்கத்திற்குள் இறங்கினார். உள்ளுக்குள் இருந்தவர்கள் அவரைக் கண்டு
மகிழ்ச்சியடைந்தனர். மானுவேல் கான்சலேஸ் ஒவ்வொருவராகக் கூண்டுக்குள் அடைத்து
மேலேற்றினார். 31 வயதான பிளாரன்சியோ அவலோஸ் என்கிற தொழிலாளி ஒருவர் முதல்
ஆளாக மேலே வந்தார். 2050 அடி ஆளத்தில் இருந்து அவர் பூமியின் மேற்பரப்புக்கு வர 17 நிமிடங்கள் ஆனது. ஆள்துளை கிணறுக்குள் விழுந்து குழந்தைகள்
இறந்து போனதாக சிலியில் ஒரு சம்பவம் கூட இல்லை.
---------------------
253 - 10.09.2018
அரண்மனையல்ல
சத்திரம்
வழிநடைப்
பயணி ஒருவர் நீண்ட தூரம் நடந்த களைப்பில் சற்று ஓய்வெடுக்கலாம் என்று எண்ணியவராக
சரியானதொரு இடம் தேடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கண்ணில் ஒரு சத்திரம்
தென்பட்டது. அந்தச் சத்திரத்தில் தங்கிக்கொள்ளலாம் என முடிவெடுத்தார். உண்மையில்
அது சத்திரமல்ல. அரண்மனை. பக்கத்தில் சென்றார். காவலாளிகளிடம் இந்தச் சத்திரத்தில்
நான் ஓய்வெடுத்துவிட்டு காலையில் கிளம்பி விடுவேன். அனுமதிக்க வேண்டும் என்றார்.
அதற்கு காவலன் இது சத்திரம் அல்ல அரண்மனை. உங்களைப் போன்றவர்கள் தங்குவதற்கு இங்கே
இடமில்லை என்றார். அதற்கு அந்தப் பயணி காவலனிடம் நீங்கள் அரண்மனை என்று சொல்லும்
இதில் நூறாண்டுகளுக்கு முன் யார் இருந்தது? எனக் கேட்டார். அதற்குக் காவலன் தற்போதைய மன்னரின் தாத்தா என்றான்.
ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் யார் இருந்தது என்ற கேள்விக்கு தற்போதைய மன்னரின்
அப்பா என்று பதில் வந்தது. இன்னும் ஐம்பதாண்டுகள் கழித்து இங்கே யார் இருப்பார்கள்
என்ற பயணியின் கேள்விக்கு காவலன் தற்போதைய மன்னரின் மகன் இருப்பார் என பதில்
வந்தது. அதற்கு பயணி இதுவரை இங்கு சிலர் தங்கிச் சென்றிருக்கிறார்கள். இனி சிலர்
தங்கிச் செல்வார்கள். ஆகவே இங்கு அரண்மனை, மாளிகை,
வீடு என்று எதுவுமில்லை. அவையெல்லாம் தற்காலிகமாகத் தங்கிச்
செல்லும் சத்திரங்கள் தான் என்றார்.
---------------------
254 - 11.09.2018
நாற்காலி
உலகில்
அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்று நாற்காலி. மிகப்
பழைமையானதும் கூட. கீழே உட்கார முடியாத நோயாளிகளுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட இது
ஒரு கட்டத்தில் அரசரின் சிம்மாசனம் என்கிற அளவுக்கு வடிவ மாற்றம் கொண்டது.
நாற்காலி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் அதில் அமர்ந்திருப்பவர்களை நோயாளி என்றே
கருதி இருக்கிறார்கள். வரலாற்றில் நாற்காலி பயன்படுத்தப்பட்டது பற்றிய செய்தியை
கி.மு. 2630 ஆம் ஆண்டில் தான் முதன்முதலாகக் காணமுடிகிறது. அதே
காலத்தில் இன்றைய ஐரோப்பாவாக இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வெவ்வேறு வடிவங்களில்
நாற்காலிகள் பயன்பாட்டில் இருந்தாகத் தெரிகிறது. பிற்காலங்களில் அழகிய
வேலைப்பாடுகளுடன் கூடிய விதவிதமான நாற்காலிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அமர்வதற்கும் முதுகு சாய்ப்பதற்குமான இடங்களில் பஞ்சு, துணிகள் முதலியன பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கி.பி.17 ஆம் நூற்றாண்டில் தான் இங்கிலாந்தில் இருந்த நாற்காலிகளைக்
கொண்டு அமெரிக்காவில் நாற்காலி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
---------------------
255 - 12.09.2018
போடபாயா
மியான்மாரின்
அரசரான ஆலாங்பாயா என்பவரின் மகனே போடபாயா. ஆலாங்பாயா வம்சத்தில் ஆறாவது அரசராக
பொறுப்பு வகித்தவரே போடபாயா. தந்தையின் இறப்புக்குப் பிறகு பதவிக்கு வந்த தமது
உறவினரை நீக்கிவிட்டு ஆட்சியைப் பிடித்தார். 1784 ஆம் ஆண்டில் அரகான் நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டு மக்கள் 20000 பேரை அடிமைப்படுத்தி அகதியாக வெளியேற்றினார். அரகான்
மக்கள் போடபாயாவிற்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சிக்குத் தலைமை
தாங்கிய தலைவர்களைத் தேடி போடபாயாவின் படைகள் பிரிட்டீஸ் கட்டுப்பாட்டில் இருந்த
வங்காள எல்லை வரை சென்றதால் பிரிட்டிஸார் கோபம் கொண்டனர். அதனால் போடபாயாவிற்கும்
பிரிட்டீஸாருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. மக்கள் பதற்றத்திற்கு உள்ளாயினர்.
பௌத்தத்தில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்த போடபாயா தன்னை புத்தரின்
வழித்தோன்றலாக அறிவித்துக்கொண்டார். மக்கள் யாரும் அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை.
---------------------
256 - 13.09.2018
அன்னமைய்யா
திருப்பதியில்
தெலுங்கு மொழிக் கவிஞராகவும் இசை மேதையாகவும் வாழ்ந்தவர் அன்னமையா. வைணவத்தின்
மீது தீவிர பற்றாளராக இருந்த அன்னமைய்யா நாராயணனைப் பாடுவதையே தனது விருப்பமாகக்
கொண்டிருந்தார். அஹோபில மடத்தை நிறுவியவர்களுள் ஒருவரான ஆதி வண்சடகோப முனிவரிடம்
வேதாந்த பாடத்தைக் கற்றார். கற்கும் வயதிலேயே வான்மிகி ராமாயணத்தை இசைப்பாடலாக
எழுதினார். அன்னமையா தம்முடைய வாழ்நாளில் 32000 கீர்த்தனைகளை எழுதியதாகத் தெரிகிறது.
ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் உள்ள தாளபாக்கம் என்னும் ஊரில் இவருடைய
முன்னோர்கள் வாழ்ந்ததால் தாளபாக்கம் அன்னமைய்யா என்றும் இவர்
குறிப்பிடப்படுகிறார். இவருடைய முதல் மனைவியான தாளபாக்கம் திம்மக்கா என்பவரும்
இவருடைய மகனான திருமலாச்சாரியாரும் கூட தெலுங்கில் புகழ் பெற்ற கவிஞர்கள் ஆவர்.
வேங்கடாசல மகாத்மியம்,
சங்கீர்த்தண லட்சணம், சிருங்கார மஞ்சரி ஆகியன அன்னமைய்யாவின் புகழ் பெற்ற இலக்கிய ஆக்கங்கள்.
---------------------
257 - 14.09.2018
உருளைக்
கிழங்கு பஞ்சம்
உலகம்
முழுவதும் மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவுப் பொருள்களில் உருளைக் கிழங்கும்
ஒன்று. அதில் இருக்கும் சத்துகளும் அதற்கேயுரிய சுவையும் அதை உலகம் முழுக்கப்
பரப்பி இருக்கிறது. தென் அமெரிக்காவின் ஆண்டெஸ் பகுதியைத் தாயகமாகக் கொண்ட
உருளைக்கிழங்கு ஸ்பெயின் நாட்டு மக்களால் ஐரோப்பாவிற்கு 16 ஆம் நூற்றாண்டளவில் கொண்டு செல்லப்பட்டது. ஒரு
நூற்றாண்டிற்குப் பிறகு 17 ஆம் நூற்றாண்டில் இறுதிப்பகுதில் அயர்லாந்தில் முக்கிய
உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு மாறியது. மக்களின் ஒவ்வொரு வேளை உணவிலும்
உருளைக்கிழங்கு தவறாமல் இருந்தது. உருளைக்கிழங்கு உண்பதுதான் அவர்களுக்கு உண்ட
திருப்தியைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் அயர்லாந்து மக்கள் அனைவருக்குமான
உருளைக்கிழங்கை அயர்லாந்தில் விளைவிக்க முடியவில்லை. அதேநேரம் 18 ஆம் நூற்றாண்டு அளவில் உருளைக்கிழங்கு பயிரில் ஏற்பட்ட
பூஞ்சை தாக்குதலால் உருளைக்கிழங்கு மகசூல் பாதிக்கப்பட்டு பஞ்சம் உருவானது. அதை
வரலாற்று அறிஞர்கள் ‘அயர்லாந்து உருளைக்கிழங்கு பஞ்சம்’ எனக் குறிப்பிடுகிறார்கள்.
---------------------
258 - 15.09.2018
சான்றோனாதல்
சான்றோன்
ஆதல் என்பது அவ்வளவு எளிதானதுமல்ல. மிகவும் கடினமான காரியமுமல்ல. அன்பு
செலுத்தினாலே சான்றோனாக ஆகிவிட முடியும் என்கிறார் ஒளவையார். குறுந்தொகையில் பாடல்
எண் 102 இல் ஒளவையார் தலைவி பேசுவதான தன்மையில் சொல்கிறார்.
பிரிந்து சென்ற தலைவனை நினைத்தால் அந்த பிரிவு நெஞ்சைச் சுடுகிறது. தலைவனை
நினைக்காமல் இருக்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை. இப்படி எனக்கான காமம் விண்ணை
முட்டும் அளவுக்குப் பெருகிக் கொண்டே இருக்கிறது. எமது நிலைமை இப்படி இருக்க எம்மை
மறந்து வாழுகின்ற தலைவன் சான்றோன் ஆகான் என்கிறார்.
கூட்டு
சமுதாய வாழ்க்கையில் ஆண்மகன் அல்லது தலைவன் என்கிறவன் சான்றோன் ஆவதற்கு
அரும்பெரும் காரியங்களைச் செய்யவேண்டியதில்லை. போர்க்களம் சென்று புகழ் ஈட்ட வேண்டியதில்லை.
தன்னோடு வாழுகின்ற இணையைப் பிரியாமல் பக்கத்தில் இருந்து அன்பு செய்தாலே
சான்றோனாகி விடலாம் என்கிற பொருளையும் தருவதாக பாடலை அமைத்திருக்கிறார் ஒளவையார்.
இணையைப் பிரியாமல் அன்பு செய்கிறவர்கள் அனைவரும் சான்றோர்களே.
---------------------
259 - 16.09.2018
தொண்ணூற்றைந்து
கட்டுரைகள்
கிறித்துவத்தில்
பாவ மன்னிப்புச் சலுகைகள் மீது எழுப்பப்பட்ட கேள்விகள் குறித்து விவாதிக்க அதாவது புனித பீட்டர்ஸின்
பெருந்தேவாலயத்தை புதுப்பிப்பதற்கான பணத் தேவைக்காக பாவ மன்னிப்புகள் விலை
பேசப்பட்டதன் விளைவாக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் தொண்ணூற்றைந்து கட்டுரைகள்
எனப்படுகின்றன. இக்கட்டுரைகள் 1517 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள லிட்டன்பர்க் அரண்மனையின் தேவாலயத்தின் கதவில்
ஒட்டப்பட்டு இருந்ததாகச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வுதான்
சீர்திருத்த கிறித்துவம் தொடங்கப்படுவதற்கான காரணமாகவும் சொல்லப்படுகிறது.
இக்கட்டுரைகள் அதுவரை இருந்து வந்த கிறித்தவ நெறிகளை தீவிரமான மாற்றுப்பார்வைக்கு
உட்படுத்தியதால் பெரும் சார்சைகள் உருவாயின. அதே சமயம் மார்டினுக்காக இருந்த
ஆதரவாளர்களும் பெருகிக்கொண்டிருந்தனர். சர்ச்சைகளை உண்டாக்கி வளர்தல் என்பது
மதவாதிகளின் பொதுக்குணமாகவே இருந்துவந்திருக்கிறது. இருந்து கொண்டும் இருக்கிறது.
---------------------
260 - 17.09.2018
தலிபான்
இயக்கம்
ஆப்கானிஸ்தானில்
நிலைகொண்டிருந்த சோவியத் யூனியன் 1989 ஆம் ஆண்டு தனது படைகளை விலக்கிக் கொண்டதன் விளைவாக ராணுவத்தில்
இஸ்லாமிய மாணவர்கள் பெருமளவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். பாரசீக மொழியில் ‘தலிபான்’ என்ற சொல்லுக்கு ‘மாணவர்’ என்று பொருள் ஆகையால் மாணவர் இயக்கம்
தலிபான் இயக்கம் எனச் சுட்டப்பட்டது. ஒரு நகரில் மட்டுமே இருந்த இந்த
இயக்கத்திற்கு முல்லா முஹம்மத் ஒமர் தலைமை பொறுப்பு ஏற்றதற்குப் பிறகு 1994 - 95 ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் பெரும் பகுதியை தனது
கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. 1996 இல் காபூலைக் கைப்பற்றியதோடு ஆட்சியையும் கைப்பற்றியது.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் அவ்வியக்கம் தீவிரமாகப் பின்பற்றிய பழைமைவாதக்
கொள்கைகளால் நற்பெயரை இழந்தது. இந்த விஷயத்தில் அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டு
தலிபான் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. தலிபான் ஆட்சி முடிவுக்கு
வந்திருக்கிறதே ஒழிய தலிபான்களின் தொடர்ச்சியான இயக்கம் அப்படியே தான் இருக்கிறது.
---------------------
261 - 18.09.2018
புக் ஆஃப்
மிர்தாத்
மிகவும்
புகழ் பெற்ற எழுத்தாளரான மிகைல் ரைமி என்பவர் எழுதிய நூலே புக் ஆஃப் மிர்தாத்.
ஏறக்குறைய உமர்கய்யாமை பின்பற்றி எழுதப்பட்ட நூல் என்று கூட இந்நூலைச் சொல்லலாம்.
உலகில் உள்ள பல சமயங்கள் துன்பத்திற்குக் காரணம் ஆசை என்று போதிக்கின்றன. மனிதன்
ஒன்றின் மீது பற்று வைத்து விட்டாலே அவனுக்குத் துன்பம் தொடங்கிவிடுகிறது
என்றெல்லாம் சமயத்
தத்துவங்கள் பேசுகின்றன. ஆனால் மிகைல் ரைமி பற்று என்கிற
விஷயத்தைச் சற்று வித்தியசமாக அணுகுகிறார். பற்றுகளில் இருந்து விடுபட ஒரே வழி
பற்று வைத்தல் தான் என்கிறார் அவர். எல்லாவற்றிலும் பற்று வைக்கும் போது எதன் மீதும் பற்று
உண்டாகாது என்னும் ஒரேயொரு கோட்பாட்டை விவரித்து எழுதப்பட்டது தான் ‘புக் ஆஃப் மிர்தாத்’. ஆசை, காதல், பற்று
என்றெல்லாம் சொல்லப்படுகின்றவைகள் மனிதனின் இயல்பான வாழ்க்கையில் பேரிடம்
வகிக்கின்ற நிலையில் அதுவே மனிதனின் முக்திக்குத் தடையாக இருக்கின்றன என்று
பேசுகின்ற சமயச் சூழலில் ஆசையில் இருந்து விடுபட அனைத்திற்கும் ஆசைப்படு, காதலில் இருந்து விடுபட அனைத்தையும் காதலி, பற்றுகொள்ளாமல் இருக்க அனைத்து மீதும் பற்றுக்கொள் என்னும்
தத்துவப் பார்வை மிகைல் ரைமியை நமக்கு மிகவும் நெருக்கமாக்குகிறது.
---------------------
262 - 19.09.2018
தோ.ஜம்புகுமாரன்
இருபத்தோரம்
நூற்றாண்டில் சமண இலக்கியத்தின் பிதாமகனாத் திகழ்பவர் தோ.ஜம்புகுமாரன்.
தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் தனிமனிதராக நின்று சமண இலக்கியத்திற்கு ஆற்றிய
பணிகள் வியப்பளிக்கின்றன. தீர்த்தங்கரர்களை மையமிட்டு தீர்த்தங்கரர் காவியத்தை
மிகவும் விரிவாகப் பாடியிருக்கிறார். பார்சுவநாதர் காவியம், மகாவீரர் காவியம், ஆதிநாதர் காவியம் உள்ளிட்ட 58 நூல்களைப்
படைத்திருக்கிறார். அவற்றில் பெரும்பகுதி சமணத் தத்துவங்களை பேசுகின்றனவாக அமைந்திருக்கின்றன.
சில கீர்த்தனை நூல்களும் அவற்றுள் அடக்கம். இசை ஞானமும் நிரம்பப் பெற்றவரான
தோ.ஜம்புகுமாரனின் பார்சுவநாதர் காவியம் 2007 இல் தமிழக அரசால் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு அப்போதைய நிதியமைச்சர்
பேராசிரியர் க.அன்பழகனால் பரிசு வழங்கி பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறது. ‘தமிழக ஜினர்மலைத் திருபதிகங்கள்’ என்பது
இவரது சமீபத்திய நூல். இது தமிழகத்தில் உள்ள 39 சமணத் திருத்தளங்களின் சிறப்புகளைப் பேசுகிறது. ஒவ்வொரு
தளத்தைப் பற்றிய பத்துப்பத்துப் பாடல்களைக் கொண்ட இந்நூலின் பதிகங்களை வாசிக்கும்
போது அத்தலத்திற்கே சென்று வந்த உணர்வினைத் தருவதாக அமைந்திருக்கிறது.
---------------------
263 - 20.09.2018
வணிகத்தின்
வலிமை
உலகின்
முதல் பெரிய பணக்காரர் என்று அறியப்படுகிற பில்கேட்ஸுக்குப் போட்டியாளராக ப்ராவின்
ஃபிரே என்பவர் இருந்தார். இவர் ஓர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி. 2000 ஆம் ஆண்டில் ஃபோர்பஸ் பத்திரிகை வெளியிட்ட பணக்காரர்களின்
பட்டியலில் ப்ராவின் ஃபிரே தான் முதலிடம் பெற்றிருந்தார். 20 ஆம் நூற்றாண்டின் முதல் பெரும் பணக்காரர் இவர்தான். அடுத்த
சில ஆண்டுகளில் தான் பில்கேட்ஸ் 1000 கோடி
டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்தார். 2007 இல் திரும்பவும் ப்ராவின் ஃபிரே பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளினார். இதில்
நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி என்னவெனில் பல நூறு ஆண்டுகளாக அடிமையாக இருந்த
ஒரு இனத்தில் பிறந்த பெண்மணி பரம்பரையாக பணக்காரர்களாக இருந்துவந்த அமெரிக்க
வெள்ளையருக்குப் போட்டியாளராக மாறியிருக்கிறார் என்பதுதான்.
இன்றைக்கு
20 லட்சம் வர்த்தக நிறுவனங்கள் அமெரிக்காவில் கறுப்பர்கள்
கைவசம் இருக்கின்றன. அமெரிக்காவின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகக்
கறுப்பர்கள் மாறியிருக்கிறார்கள். இந்த வரலாறு இன்னொரு செய்தியையும் சொல்கிறது.
அடிமைச் சமுதாயம் விடுதலை பெறுவதற்குக் கல்வியும் அரசியல் அதிகாரமும் மட்டும்
போதாது. வணிகத்தையும் கையில் எடுக்கவேண்டும் என்பதுதான் அந்தச் செய்தி.
---------------------
264 - 21.09.2018
தொழுத்தைமார்
குறைந்த
ஊதியத்திலோ ஊதியமில்லாமலோ வேலை வாங்குவதற்கு அடிமைகள் இருந்தார். உலகமெங்கும்
அடிமைகள் வியாபாரம் நடந்திருக்கிறது. அது குறித்து ஏராளமான ஆவணங்களைக் கொண்டு
பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் ‘தமிழகத்தில்
அடிமை முறை’ என்றொரு நூல் கூட எழுதியிருக்கிறார். அடிமையாக
இருத்தலில் ஆண்களை விட பெண்களின் நிலைமை கொடுமையாக இருந்திருக்கிறது. பெண்கள்
அடிமையாகும் போது அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது மட்டுமின்றி பாலியல்
வன்கொடுமைக்கும் ஆளாகியிருக்கிறார்கள். இவர்களைத் ‘தொழுத்தைமார்’ என சுட்டப்பட்டதாகத் தெரிகிறது. பெருமுதலாளிகள் இப்படி அடிமைகளை வைத்திருத்தது
போல மன்னர்களும் கூட அடிமை என்கிற பெயரில் அல்லாமல்
ஏறக்குறைய அடிமைகளைப் போன்றவர்களை வைத்திருந்திருக்கிறார்கள். மராட்டிய
மன்னர்களில் இரண்டாம் சிவாஜி 20 மனைவிகளையும் 40க்கும் மேற்பட்ட மனைவி போன்றவர்களையும் வைத்திருந்ததாக
அறிஞர் செ.ராசு குறிப்பிடுகிறார். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருப்பது அரச
வாழ்க்கையில் கௌரவமாகக் கருதப்பட்ட நிலையில் பெண்களும் விரும்பி
ஏற்றிருக்கிறார்கள் என்பதற்கான குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன.
---------------------
265 - 22.09.2018
அழுக்கென்னும்
அடையாளம்
சமுதாய
ஒழுங்கில் இரண்டு விஷயங்கள் வலுவாகவும் திரும்பத் திரும்பவும் சொல்லப்படுகின்றன.
ஒன்று சுத்தம் என்பது. மற்றொன்று அழுக்கு என்பது. சுத்தத்தில் ஒன்றியிரு. அழுக்கை
விட்டு அகன்று நில் என பலரும் பல நேரங்களில் வலியுறுத்தியும் வந்திருக்கிறார்கள்.
சுத்தமும் அழுக்கும் இயல்பாகவே உருவானவை அல்ல. அவை மனிதர்களின் இயக்கத்தினாலேயே
உருவாகின்றன. உதாரணமாக உடுத்திக் களைந்த ஆடையை அழுக்கு என்கிறார்கள். பயன்படுத்தி
முடித்த நீரை அழுக்கு என்கிறார்கள். குடியிருந்த வீட்டை அழுக்கு என்கிறார்கள்.
பயன்படுத்திய பாத்திரங்களை அழுக்கு என்கிறார்கள்.
உடுத்தாத அடையை,
பயன்படுத்தாத நீரை, குடி புகாத வீட்டை,
பயன்படுத்தாத பாத்திரங்களைச் சுத்தமானது என்கிறார்கள்.
அதாவது மனிதன் பயன்படுத்தாத அனைத்தும் சுத்தமாக இருக்கின்றன. பயன்படுத்திய அனைத்து
அழுக்காகின்றன. இதை வேறுவிதமாகவும் சொல்லலாம். மனிதனுக்காக உழைக்காத யாவும்
சுத்தமாக இருக்கின்றன. மனிதனுக்காக உழைக்கின்ற யாவும் அழுக்காக இருக்கின்றன.
உழைக்கின்ற மனிதனும் அழுக்காக இருக்கின்றான். அழுக்கு என்பது அழுக்கல்ல. அது
உழைப்பின் அடையாளம்.
---------------------
266 - 23.09.2018
மகிழ்ச்சிக்கான
காரணம்
இலங்கையின்
வரலாற்று நூலாக அறியப்படுகிற மகாவம்சத்தில் ஐந்தாம் அத்தியாயத்தில் இப்படி ஒரு கதை
உள்ளது. ஒருநாள் தீஸ என்னும் இளவரசன் வேட்டையாடச் சென்றபோது காட்டில் உள்ள மான்கள்
எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதைக் கண்டான். அதனால் அவனுக்குள் காட்டிலுள்ள
உள்ள புல்லை மட்டுமே உண்டு வாழும் மான்கள் இப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றன. ஆனால்
சுகமான உறைவிடமும் சுவையான உணவும் கிடைக்கும் பிக்குகள் ஏன் உற்சாகமாகவும்
மகிழ்ச்சியாகவும் இல்லை என்கிற கேள்வி உருவானது. நாட்டுக்குள் வந்த இளவரசன் தீஸ
தனது கேள்வியை அரசனிடம் கூறினான். அரசன் அவனுக்கு அனுபவபூர்வமாக போதிக்க
விரும்பினார். அதனால் எனது அரசாட்சியை ஒருவாரத்திற்கு ஒப்படைக்கிறேன். உனது
விரும்பம் போல் ஆட்சிசெய்துகொள். ஆனால் ஒருவாரம் முடிந்தவுடன் உன்னைக்
கொன்றுவிடுவேன் என்றார். அதன்படி இளவரசன் ஒருவாரம் ஆட்சிசெய்தான். அரசன்
பார்த்தார். இளவரசன் மெலிந்துபோயிருந்தான். மெலிவுக்கான காரணம் என்ன என்றார் அரசன்.
அதற்கு இளவரசன் மரணத்தின் பயமே காரணம் என்றான். மகிழ்ச்சிக்கான காரணம் உண்பதிலும்
உடுத்துவதிலும் உறங்குவதிலும் இல்லை. மரணத்தின் தேதி மறைவாக இருப்பதில் தான்
உள்ளது.
---------------------
267 - 24.09.2018
நாத்திகம்
தெய்வம்
அல்லது தெய்வ நம்பிக்கை போன்ற பொருண்மை சாராதவற்றை ஆராய்கின்ற கோட்பாடு ‘நாத்திகம்’ எனப்படுகிறது. தெய்வம் உள்ளதா? என வினாவெழுப்பி சடப்பொருள்களில் மட்டுமே நம்பிக்கை கொள்ளும் உலகாயதம்
போலல்லாமல் நாத்திகம் தெய்வத்தை முற்றிலும் மறுக்கிறது. இது வேறுபல தத்துவ
முறைகளிலும் வேரூன்றி உள்ளது. கிரேக்க தத்துவவியலாளார்களான டெமாக்கிரிட்டஸ், எபிக்யுரஸ் ஆகியோர் பொருண்மைத்துவம் குறித்துப் பேசுகையில்
தெய்வம் இல்லை என்பது குறித்து பேசியிருக்கின்றனர். டேவிட் ஹர்யூம், இம்மானுவேல் கான்ட் ஆகியோர் நாத்திகவாதிகள் அல்லர் எனினும்
தெய்வ நம்பிக்கைக்கு எதிராக வாதிட்டுள்ளனர். லுட்விட், ஃபாயர்பாக் போன்ற நாத்திகவாதிகள் தெய்வம் என்பது மனித
லட்சியங்களின் உருவகப் புனைவு என்றும், இந்தப் புனைவை அடையாளம் காண்பது தன்னை உணர்தலைச் சாத்தியமாக்குகிறது என்றும்
குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் கிறித்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே
சார்வாகர் நாத்திகம் பற்றி பேசியிருக்கிறார். புத்தர் தெய்வத்தை ஏற்கவோ மறுக்கவோ
இல்லை. ஆதலால் பௌத்தில் கடவுள் வழிபாடு இல்லை.
---------------------
268 - 25.09.2018
சமநிலை
ஜென்
குருக்களில் மிகவும் பிரபலமானவார் ஷ்வாங்ட்ஸூ. அவரது கருத்துகளுக்காகவே அவர் மிகவும் பிரபலமானார். ஒருநாள்
அவரிடம் வந்த நபர் அவ்வூரில் இருந்த இசைக்கலைஞனைப் பற்றி குறை கூறத் தொடங்கினார்.
தீய குணங்களை உடையவர். மக்களை ஏமாற்றுகிறவர் என்றெல்லாம் குறைசொன்னார்.
அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த குரு அவன் அற்புதமான கலைஞனராயிற்றே! அவனது இசையை
கேட்டுக்கொண்டே இருக்கலாமே என்றார். அதே நேரம் அங்கு வேறொரு நபர் வந்தார். அவர்
குருவிடம் அந்த இசைக் கலைஞனைப் பாராட்டிப் பேசினார். அதற்கு குரு அவன் நல்லவன்
இல்லை. தீயகுணம் படைத்தவன். மக்களை ஏமாற்றுகிறவன் என்றார். குருவிடம் வந்து குறை
சொன்னவரும் பாராட்டிப் பேசியவரும் குழம்பிப்போய் நின்றார்கள். இருவரும் குருவிடம்
இசைக்கலைஞனை நீங்கள் புகழ்கிறீர்களா அல்லது இகழ்கிறீர்களா எனக் கேட்டார்கள்.
அதற்குக் குரு நான் புகழவும் இல்லை. இகழவும் இல்லை. சமநிலையில் இருக்கிறேன்.
இசைக்கலைஞனை நல்லவன் என்றும் கெட்டவன் என்றும் சொல்வதற்கு உங்களிடம் என்ன அளவுகோல்
உள்ளது?
நீங்கள் சொல்வதை அப்படியை ஒப்புக்கொள்வது என் வேலையல்ல.
அவன் அவன் வேலையைச் செய்கிறான். நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள். அடுத்தவரைப்
பற்றி பேசிக்கொண்டிருப்பதையே வேலையாகச் செய்யாதீர்கள் என்றார்.
---------------------
269 - 26.09.2018
தேவ பந்த்
பள்ளி
உத்திரபிரதேசத்தின்
சஹராம்பூர் மாவட்டத்தில் 1867 இல் முஹம்மத் அபித் ஹூசைன் என்பவரால் தொடங்கப்பட்டது தேவ
பந்த் பள்ளி. இன்று வரை இந்தியாவின் முதன்மையான இஸ்லாமிய கல்வி நிறுவனமாக இயங்கி
வருகிறது. சமுதாய சட்டத்தை வலியுறுத்துதல், குர்ஆனுக்கான உரை விளக்கம், பாரம்பரிய
முறைகள்,
இறையியல், தத்துவவியல்
போன்றவற்றை வலியுறுத்தும் பாடங்கள் இப்பள்ளியில் கற்பிக்கப்படுகின்றன.
இப்பள்ளியில் படிப்பவர்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் தலைமைப் பணி ஏற்பதற்காகப்
பயிற்சி அளிக்கப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மாணவர்கள்
படிப்பதால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் அராபிய பாரசீக மொழிகளில்
வாசிக்கக் கிடைக்கின்றன. கி.பி. 18 ஆம்
நூற்றாண்டின் இஸ்லாமிய சீர்திருத்த அறிஞராகக் கருதப்படும் ஷா வாலி அல்லாஹர் மற்றும் வஹாபியர்களின் செல்வாக்கால் இப்பள்ளி இன்றளவும்
பழமைவாதத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறது.
---------------------
270 - 27.09.2018
பெலாஜியனிஸம்
ஆங்கிலேயத்
துறவியான பெலாஜியஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட தத்துவம் ‘பெலாஜியனிஸம்’ எனப்படுகிறது. கி.பி 5 ஆம் நூற்றாண்டில் உருவாக்கம் பெற்ற இத்தத்துவம் மனித
இயற்கையில் பொதிந்துள்ள சுதந்திர உணர்வையும் நல்லியல்பையும் வலியுறுத்தியது.
மனிதனுடைய பாவங்களுக்கு அவனது பலவீனங்களே காரணம் என்று சொல்லப்பட்டு வந்த கருத்தை
மறுத்து மனிதன் தான் தெரிந்தே செய்யும் தவறுகள் தான் பாவத்துக்குக் காரணம் என்று
பெலாஜியஸ் வலியுறுத்தினார். இது அக்காலத்திய கிறித்தவ நெறிக்கு முரணாக இருந்தது.
நிறைய எதிர்ப்புகள் கிளம்பின. பெலாஜியஸின் சீடரான செலிஸியஸுயும் பெலாஜியஸுக்கு
ஆதரவாக நின்றார். இதனால் கி.பி.418 இல் இருவரும்
திருச்சபையில் இருந்து விலக்கப்பட்டார்கள். ஆனால் கணிசமான மக்கள் பெலாஜியஸத்துக்கு
ஆதரவாக இருந்தனர். கி.பி.431இல் எஃபிசஸ் திருச்சபைக் கூட்டத்தில் பெலாஜியனிஸத்தை
எதிர்த்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு மெல்ல மெல்ல பெலாஜியனிஸம் என்னும்
தத்துவம் மறையத் தொடங்கியது.
---------------------
271 - 28.09.2018
இந்தியச்
சினிமாவும் இயக்குநர்களும்
இந்திய
சினிமாவில் ஒரு வித்தியசமான போக்கு இருக்கிறது. ஒரு இயக்குநர் எடுத்த சினிமா
கணிசமான வெற்றியைப் பெற்றுவிட்டால் அதே மாதிரியான சினிமாக்களை மற்ற இயக்குநர்களும்
எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதில் கவனிக்க
வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. இந்தியாவின் பிராந்திய மொழிச் சினிமாக்கள்
அனைத்திலும் கடந்த இருபது வருடங்களாக ஒரு விஷயம் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுக்
கொண்டே வருகிறது. அந்தப் போக்கு சமீபத்தில் அதிகரித்திருக்கிறது. அதாவது
சினிமாவில் வில்லன் பாத்திரத்தை தீவிரவாதியாகச் சித்திரித்து அப்பாத்திரத்திற்கு
இஸ்ஸாமிய பெயரிடுவது. இது திட்டமிட்டே இஸ்ஸாமியர்களை மோசமானவர்களாகச்
சித்திரிக்கச் செய்யப்படும் பிரச்சாரம். யாரோ ஒரு இயக்குநர் செய்த வரலாற்றுத் தவறை
மற்ற இயக்குநர்களும் செய்து வருகிறார்கள். பாகிஸ்தானுக்கான பகை உணர்வை அப்படியே பாதுகாக்கவும் இந்தியாவில் ஆட்சிசெய்த இஸ்ஸாமிய மன்னர்களைக்
கொடுமையானவர்களாகச் சித்திரிக்கவும் பயன்பட்ட அல்லது பயன்படுகிற அந்த உத்தியின்
அரசியலை இயக்குநர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீவிரவாதிகள் அனைத்து மத
அடையாளத்தோடும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் சினிமாக்கள் வரவேண்டும்.
---------------------
272 - 29.09.2018
சுதந்திர
மர்மம்
சுதந்திரப்
போராட்ட காலத்தில் சுதந்திரம் பெற்றுவிட்டால் எல்லாம் கிடைத்துவிடும். நம்முடைய
பொருளாதாரத்தை நாமே தீர்மானித்துக்கொள்ளலாம். செல்வம் கொழிக்கும். தேனாறும்
பாலாறும் ஓடும் என்று மக்களுக்குத் தொடர்ந்து சொல்லப்பட்டது. மக்களும்
நம்பினார்கள். சொன்னவர்கள் பின்னால் திரண்டார்கள். ஒரு வழியாக சுதந்திரம்
கிடைத்தது. இன்றைக்குத் தேசம் முழுமையும் தேனாறும் பாலாறும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சுதந்திரம் என்கிற விஷயத்தை தந்தை பெரியர் சற்று வேறுவிதமாக அணுகுகிறார்.
16.09.1961 இல் சென்னையில் நடந்த சொற்பொழிவில் பேசும் போது சுதந்திரம் கேட்டு போராடியதன்
மர்மத்தைப் போட்டு உடைத்திருக்கிறார். பிரிட்டீஸ்காரர்களை இனியும் இருக்க விட்டால்
படிக்கக் கூடாது என்று ஒதுக்கி வைத்தவர்களையும் படிக்க வைத்துவிடுவார்கள்.
படித்தவர்கள் அரசுத்துறைகளுக்குள் நுழைந்துவிடுவார்கள். பொருளாதாரத்தில் முன்னேறி விடுவார்கள்.
சாதியமைப்பு சிதைந்துவிடும். ஆக சாதியமைப்பு சிதைந்துவிடக் கூடாது என்றால்
பிரிட்டீஸார் வெளியேற வேண்டும் என்கிற முழக்கமே எங்களுக்குச் சுதந்திரம் கொடு
என்பதாக முன்வைக்கப்பட்டது என்கிற தொனியில் சாதியைக் காப்பாற்றுவதற்குத் தானே அவர்கள் சுயராஜ்யம் கேட்டார்கள் என்கிறார் பெரியார்.
---------------------
273 - 30.09.2018
ஒழுக்கநெறி
பொதுவுடைமை
புரட்சியாளர் லெனின் மனித சமுதாயத்திற்குப் புறம்பான ஒழுக்கநெறி எதுவும் இல்லை.
அப்படி இருப்பதாகக் கூறுவது மோசடி
என்கிறார். ஒழுக்கம் என்பது மனித சமுதாயத்தைத் தழுவியதாக இருக்கவேண்டும்
என்பதுதான் அக்கூற்றின் நேரடிப் பொருள். மேலும் அவர் சொல்கிறார் மற்றவர்கள்
பட்டினி கிடக்கிறார்களா? கிடக்கட்டும்.
அது எனது வசமுள்ள தானியத்தின் விலையைக் கூட்டும் என்றும் எனக்கு மருத்துவனாகவோ
பொறியாளனாகவோ ஆசிரியனாகவோ எழுத்தாளனாகவோ வேலை கிடைத்தால் போதும் மற்றவர்கள்
எக்கேடும் கெட்டுப்போகட்டும். எனக்குக் கவலை இல்லை. நான் முன்னேறி ஒரு முதலாளி
ஆவேன் என்று ஒரு கம்யூனிஸ்ட் எண்ணவே மாட்டான். அத்தகைய மனப்பான்மையையும்
உணர்ச்சிகளையும் ஒரு கம்யூனிஸ்ட் கொண்டிருக்கவே மாட்டான். மக்கள் நலன் சார்ந்து
சிந்திக்கிறவனே கம்யூனிஸ்டாக இருக்க முடியும் என்கிறார். இதுதான் லெனின் சொல்ல
வருகிற ஒழுக்கநெறி. அனைத்து மக்களின் நலனையும் உள்ளடக்கியதாக அமைவது தான்
ஒழுக்கநெறி. அதுதான் இன்றைய தேவையாகவும் இருக்கிறது.
---------------------
274 - 01.10.2018
உள்ளிருந்து
கேட்கும் குரல்
எழுத்தாளர்
அர்ஷியாவின் ‘கபரஸ்தான் கதவு’ என்கிற சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதை ‘உள்ளிருந்து கேட்கும் குரல்’. இந்தக் கதையில்
மனிதனுக்கும் பூனைக்கும் இடையிலான பிணைப்பு பேசப்பட்டிருக்கிறது. கதையில்
ஏறக்குறைய பூனை தான் ஹீரோ. வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பூனை அந்தக் குடும்பத்துடன்
பிணைந்து கிடக்கிறது. மகனுக்குத் திருமணம் முடிந்து வீட்டிற்கு புது மருமகள்
வருகிறாள். அவளுக்குப் பூனை பிடிக்கவில்லை. பூனையை
காட்டுக்குள் சென்று விட்டுவிட முடிவு செய்கிறார்கள். அப்படியே விடப்படுகிறது.
அன்றுவரை
கதையில் வரும் மனிதனோடு பூனை படுத்திருந்த மெத்தையில் மனைவி படுத்திருக்கிறாள். அதாவது, வாழ்வில் விலங்குகளின் இடத்தை மனிதர்கள் எப்படியெல்லாம்
பறிக்கிறார்கள் என்பதை போகிற போக்கில் சொல்லும் இக்கதை இன்னொரு செய்தியையும்
தருகிறது. பூனையைப் பார்க்கும் சிறுவர்கள் பூனையைப் போல கத்துகிறார்கள். ஆனால்
பூனை இறுதி வரை சிறுவர்களைப் போல கத்துவதற்கு முயற்சிக்கவே இல்லை. அது அதுவாகவே
இருக்கிறது. இந்த இடத்தில் கதை உணர்த்தும் செய்தி இதுதான் விலங்குகள் விலங்குகளாவே
இருக்கின்றன. மனிதன் தான் விலங்காகிக் கொண்டே இருக்கிறான்.
---------------------
275 - 02.10.2018
ஸ்மார்த்த
விசாரமும் நீசக்காரியமும்
எழுத்தாளர்
தாத்ரிகுட்டி என்பவர் எழுதிய நூல் ஸ்மார்த்த விசாரம். அதை தமிழுக்கு யூமா வாசுகி
மொழி பெயர்த்திருக்கிறார். நூலில் இருக்கும் பல செய்திகள் வியப்பையும்
பிற்போக்குச் சமூகத்தின் மீதான ரௌத்திரத்தையும் ஒருசேர உருவாக்குகின்றன.
இப்படியுமா ஒரு சமூகம் நடந்துகொண்டிருக்க வேண்டும் என்றொரு களிவிரக்கமும் கூட
அந்நூலை வாசிக்கும் போது வந்து போகிறது. நூல் ஓரிடத்தில் நம்பூதிரி இனத்தில்
திருமணம் ஆகாமல் முதிர்கன்னியாக இறந்துவிடும் பெண்களின் சாபத்திலிருந்து தம்மை தற்காத்துக்
கொள்வதற்காக நம்பூதிரி ஆண்கள் இறந்து போன பெண்ணை அப்படியே புதைக்காமல் கன்னி
கழித்து அடக்கம் செய்யப்பட்ட செய்தி இடம் பெற்றிருக்கிறது. இச்செயலை அந்நூல் ‘நீசக்காரியம்’ எனக் குறிப்பிடுகிறது.
பிறக்கும் போதும் பிறந்த பிறகும் எண்ணற்ற தடைகளைத் தாண்டி வாழ்கிற பெண்கள் மீது
இறந்த பிறகும் நம்பிக்கை என்கிற பெயரில் வன்முறைகளை நிகழ்த்துவதுதான் ஒரு
சமூகத்தில் பண்பாடாகவோ மரபாகவோ வலியுறுத்தப்படுமானால் அந்தச் சமூகத்தை என்ன தான்
செய்வது?.
---------------------
276 - 03.10.2018
பரியேறும்
பெருமாள்
தமிழகத்தில்
சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் பரியேறும் பெருமாள். இதுவரை
ஒருசாரார் மட்டுமே பேசிக்கொண்டிருந்த விஷயத்தை திரைமொழியில் துலக்கமாக்கிய
இயக்குநர் மாரி செல்வராஜிற்கு சமூகத்தின் மீது தெளிந்த பார்வையும் அக்கறையும்
இருந்ததன் வெளிப்பாடாக படம் அமைந்துவிட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட இனத்தின்
பிள்ளைகள் சாதிய வன்மங்களைச் சகித்துக்கொண்டு படித்து முடிப்பதற்குள் எத்தனை
துரோகங்களையும் அவமானங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை பேசிய
விதத்தில் தமிழ்த்திரையில் பரியேறும் பெருமாள் முக்கியமான படமெனலாம். இட ஒதுக்கீடு
இன்னும் தேவையா? என்ற விவாதம் நவீன கார்ப்பரேட்
அறிவுஜீவிகளிடம் இருந்து எழும்புகிற சூழலில் இந்தப்படம் இன்னும்
முக்கியமானதாகப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் படித்தே ஆக வேண்டும் என்பதையும்
ஒடுக்கப்பட்டவர்களில் படித்து முன்னேறியவர்கள் படித்துக்கொண்டிருப்பவர்களின்
பக்கம் நிற்க வேண்டும் என்பதையும் அழுத்தமாகச் சொல்லும் இப்படம் பேரளவில்
கொண்டாடப்பட வேண்டும். கூடவே சாதிய வன்மைத்தை வீரமெனக் கருதி தோளில்
தூக்கிக்கொண்டு அலைகின்றவார்கள் இனிமேலாவது பக்குவப்பட வேண்டும் என்பதையும் படம்
சொல்லாமல் சொல்கிறது.
---------------------
277 - 04.10.2018
மாற்று
என்னுமொரு சிந்தனை
ஓடிக்கொண்டிருக்கிற
பேருந்து பழுதாகி விட்டால் அதற்குப் பதிலாக வரும் பேருந்தை மாற்றுப் பேருந்து
என்கிறோம். உடுத்தியிருக்கும் துணி அழுக்காகிவிட்டால் அதற்குப் பதிலாக உடுத்தும்
துணியை மாற்றுத்துணி என்கிறோம். ஆக மாற்று என்கிற சிந்தனைக்குப் போய்விட்டாலே
இருக்கின்றவை சரியில்லை என்பதுதான் பொருள். அது போலவேதான் மாற்றுப் பத்திரிகை
என்றால் இருக்கும் பத்திரிகைகள் சரியில்லாதவை என்கிற பொருளும் மாற்றுச் சிந்தனை
என்றால் ஏற்கனவே இருக்கும் சிந்தனைகள் சரியில்லாதவை என்கிற பொருளும் வந்துவிடுகின்றன.
இந்த இடத்தில் எழுத்தாளர் ஜெயராணியின் கூற்று பொருத்தமாக அமைகிறது. அவர்
சொல்கிறார். நேர்மையான சிந்தனை இங்கு மாற்றுச் சிந்தனையாகிவிட்டது. அநீதியை
எதிர்ப்பவர்களை மாற்றுச் சிந்தனையாளர் என்று அழைக்கின்றோம். சமூகத்தின்
பிரச்சினையைப் பேசுபவை இங்கே மாற்று ஊடகங்களாகிவிட்டன. நீதியும் நேர்மையும் இங்கு
மாற்றுச் சிந்தனையெனில் இந்த சமூகத்தின் நேரான சிந்தனை அநீதியும் நேர்மையின்மையும்
தானே என்கிறார் அவர். அதுதான் உண்மையும் கூட.
---------------------
278 - 05.10.2018
காரியத்தின்
விநோதக் காலம்
தமிழ்நாடு
பழம்பெருமைகளுக்கும் பண்பாடுகளுக்கும் பெயர் பெற்றது. வீரம் செறிந்த இனமாக
தமிழ்த்தேசியர்களால் திரும்பத் திரும்ப சொல்லப்பட்ட பிரதேசம் தமிழ்நாடு. அதன்
பெருமையும் பீடும் அப்படியேதான் இருக்கின்றனவா என்று கேள்வி எழுமானால் உடனடியாக
பதில் சொல்ல முடியாது. 2000 முதல் இன்றைக்கு வரையிலுமான பதினெட்டு ஆண்டுகளில்
தமிழ்நாட்டில் குடிப்பவர்களின் எண்ணிக்கைப் பெருகியிருக்கிறது. குடிப்பவர்கள்
எண்ணிக்கையிலும் விற்பனை கணக்கீட்டிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.
இந்தியாவிலேயே தற்கொலை அதிகமாக நடக்கும் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாமிடம்
வகிக்கிறது. சாலை விபத்துக்களில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இளவயது மரணங்களில் தமிழ்நாடு முதலிடத்தில்
இருக்கிறது.
30 வயதுக்கு உட்பட்ட விதவைப் பெண்களை அதிகமாகக் கொண்டதும் தமிழ்நாடு தான். இந்த
நிலைக்கு தமிழ்நாடு வந்துநிற்பதற்குக் காரணம் ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையும்
ஊழலும் தான். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் காரியம் செய்த நிலை கடந்த பதினெட்டு
ஆண்டுகளில் வெகுவாக மாறி இன்றைக்கு பிள்ளைகளுக்குப் பெற்றோர்களே காரியம் செய்கிற
நிலைக்கு வந்திருக்கும் இந்தச் சமூகத்திற்கு குடிப்பழக்கத்தை விட்டால் ஒழிய வேறு விமோசனம் இல்லை.
---------------------
279 - 06.10.2018
காந்தியும்
பெரியாரும்
காந்தி என்றைக்கு ஒரு பெண் நிறைய நகைகளை அணிந்து
கொண்டு நல்லிரவில் பயமின்றி தனியே சென்று பத்திரமாக வீடு திரும்புகிறாரோ அன்று
தான் தேசம் விடுதலை அடைந்திருக்கிறது என்று பொருள் எனக் கூறியதாக பலர் சொல்லக்
கேள்விப்பட்டிருக்கிறோம். அதாவது பெண்கள் பயமின்றி வாழ்வதுதான் தேசத்தின்
விடுதலையாக இருக்க முடியும் என்கிறார் காந்தி. இன்னொரு புறத்தில் நகை ஸ்டாண்டாக
உலா வரும் பெண்கள் சுதந்திரமானவர்களாக இருக்க முடியாது என்கிறார் பெரியார்.
இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். சுதந்திரம் குறித்த இருவரது கருத்துகளும்
அவர்களை அழுத்தமாகப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றன. பெண் பயமின்றி
வாழ்வதுதான் தேசத்தின் விடுதலை என்று காந்தி சொல்ல, பெரியார் சொல்கிறார் பெண் தனது நகை அலங்காரங்களை விட்டுவிட்டு தன்னைச்
சுதந்திரமாக உணர்தலே விடுதலை என்கிறார். காந்தி தேசத்தின் விடுதலை முன்வைக்க, பெரியார் தேசத்தின் விடுதலையை விடர்டுவிட்டு மனிதர்களின்
விடுதலை முன்வைக்கிறார். இந்த வேறுபாடு தான் அனைவரிடமும் காந்தியை விட பெரியாரை
நெருக்கமாகக் கொண்டுவந்து வைக்கிறது.
---------------------
280 - 07.10.2018
கடவுளை விட
பெரியவன்
ஆறு
முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் ஓரமாக நடந்து வந்த ஞானி
ஒருவர் நீரின் ஓட்டத்தை அமைதியாக பார்த்து பரவசமடைந்து கொண்டிருந்தார். தீடிரென்
ஆற்றில் அவருக்கு குளிக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாயிற்று. ஆடைகளைக்
களைந்தார். அதைக் கரையில் வைத்தார். ஆற்றுக்குள் இறங்கினார். வேண்டிய மட்டும்
ஆசைதீர குளித்துக்கொண்டிருந்தார். அவ்வழியை வந்த ஒரு வழிப்போக்கன் ஒருவன் கரையில்
ஆடை மட்டும் கிடப்பதைப் பார்த்து தயங்கி நின்றான். யாருடைய ஆடையாக இருக்கும் என்று
யோசித்தான். ஆடைக்குரியவர் வரும்வரை அந்த ஆடையைப் பாதுகாப்பது என முடிவு செய்தான்.
அதன்படி பாதுகாத்துக்கொண்டிருந்தான். நீண்ட நேரமாகியும் ஆடைக்குரியவர் வரவில்லை.
ஆற்றுக்குள் குழித்துக்கொண்டிருந்த ஞானியைப் பார்த்துவிட்ட வழிப்போக்கன் அவர்தான்
ஆடைக்குரியவராக இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டான். ஞானி கரைக்கு வந்தார்.
வழிப்போக்கன் இது உங்களுடைய ஆடையா? எனக் கேட்டான். ஞானி ஆமாம் என்றார். இப்படி ஆடையை விட்டுவிட்டுச்
செல்லலாமா?
யாராவது களவாடிச் சென்றுவிட்டால் என்ன செய்வது என்றான்.
அதற்கு ஞானி அந்த ஆடைகளைப் பாதுகாப்பாக இருக்கும் என்று கடவுளின் பொறுப்பில்
விட்டுவிட்டுச் சென்றிருந்தேன். அந்தக் கடவுள் தன்னை விட பெரியவனாக உன்னை
நம்பியிருப்பார் போல. அதனால் தான் அவர் உன்னை காவல் வைத்திருக்கிறார் என்றார்.
---------------------
281 - 08.10.2018
சங்கனாங்குளமும்
எம்.ஜி.ஆரும்
திருநெல்வேலி
மாவட்டம் வள்ளியூருக்கு அருகில் உள்ள சங்கனாங்குளம் கிராமத்தில் 1980 களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் 17 பெண்கள் ஆதிக்க சாதியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளக்கப்பட்டார்கள்.
இச்சம்பவத்தின் பின்னணியை நன்கு அறிந்திருந்தும் அப்போதைய மத்திய அமைச்சர் ஒருவர்
ஆதிக்க சாதியர்களுக்கே ஆதரவாக இருந்தார். குற்றச் செயலை நியாயப்படுத்தினார்.
நிலைமை மோசமானது. பிரச்சினை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி வரை போனது. அவர்
இன்றைக்கும் மத்திய அமைச்சராக இருக்கும் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் விசாரணைக்
குழுவை அனுப்பி வைத்தார். விசாரணைக்குழுவின் அறிக்கை பிரதமரிடம்
சமர்ப்பிக்கப்பட்டது. பின்னொரு நாளில் இந்திராகாந்தியை சங்கனாங்குளத்திற்கு
வருவதாக இருந்தது.
இதை
அறிந்த அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் சங்கானங்குளத்திற்கு நேரில் வந்து
விசாரணை நடத்தினார். பெண்கள் பாதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். குற்றத்திற்குக் கிராம அதிகாரிகள் உட்பட பலர் உடந்தையாக இருந்ததைக்
கண்டுபிடித்தார். கிராம அதிகாரிகள் சாதிய ஆதிக்கத்திற்குத் துணை போவதை அறிந்த
எம்.ஜி.ஆர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழகத்தில் இருந்த அனைத்து கிராம
அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்தார். அந்தப் பதவியையும் நீக்கினார்.
நீதிமன்றத்தில் போதிய சாட்சி இல்லை என்று குற்றவாளி விடுவிக்கப்பட்டார்.
அக்குற்றவாளி தற்போது இரண்டாம் மனைவியோடு வசித்து வருவதாகவும் தன்னுடைய நூலில்
குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஜெயராணி.
---------------------
282 - 09.10.2018
சிற்பங்களின்
காலம்
சிற்பங்கள்
வரலாறாக,
அழகியலாக, வழிபடுபொருளாக
இருக்கும் சிறப்பினைப் பெற்றவை. ஒவ்வொரு பிராந்திய சிற்பங்களுக்கும் தனித்துவம்
உண்டு. சிற்பங்களைப் பற்றி தம்முடைய நூலில் குறிப்பிடும் ஆய்வறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி கிரேக்கச் சிற்பங்களுக்கும்
தமிழ்நாட்டுச் சிற்பங்களுக்குமான ஒப்பீட்டைத் தருகிறார். அது
மனம் கொள்ளத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. கிரேக்க சிற்பங்கள் உள்ளதை உள்ளபடியை
காட்டுவன. நம்முடைய சிற்பங்கள் அப்படிப்பட்டனவல்ல. இயற்கையான உருவத்தைக் காட்டுவது
அயல்நாட்டு சிற்பங்கள். உணர்ச்சிகளையும் கருத்துகளையும் காட்டுவது நம் நாட்டுச்
சிற்பம். மனித உடல் அமைப்பின் அத்தனை நேர்த்திகளையும் அயல்நாட்டினர் சிற்பத்தில்
கொண்டுவந்திருப்பார்கள். அவை நமது கண்ணையும் கருத்தையும் கவரும். தமிழ்நாட்டுச்
சிற்பங்களில் அந்த செய்நேர்த்தியைக் காண முடியாது. கண்டவுடன் கவரும் தன்மை
தமிழ்நாட்டுச் சிற்பங்களுக்குக் குறைவாகவே இருக்கும் என்றாலும் அயல்நாட்டுச்
சிற்பங்களைப் போல் வெறும் அழகிய காட்சிப் பொருளாக அல்லாமல் காட்சிக்கும் அப்பால்
சென்று கருத்தையும் விளக்குவனவாக அமைந்திருக்கும் என்கிறார். இந்த வேறுபாட்டு
ஆய்வு முடிவை புதுமைப்பித்தனது ‘சிற்பியின் நரகம்’ என்னும் சிறுகதையில் விரிவாகக் காணலாம்.
---------------------
283 - 10.10.2018
நாயும்
குதிரையும்
பிரிக்கப்படாத
பழைய மதுரை மாவட்டத்தில் நாய்க்கு பெயர் பெற்ற ஊர் கோம்பை. இன்று இவ்வூர் தேனி
மாவட்டத்தில் இருக்கிறது. வேட்டைக்குப் பெயர் பெற்ற இந்நாய் இப்பொழுது முற்றாக
அழிந்துவிட்டது. இன்றைக்கு ‘கோம்பை
நாய்’ என்று குறிப்பிடுவது அதைப் போலவே இருக்கும் வேறொரு
இனநாயைத் தான். 1892 இல் எழுதப்பட்ட ‘மதுரை மேனுவல்’ என்கிற நூலில் அப்போதைய மாவட்ட ஆட்சித்
தலைவர் நெல்சன் இந்த நாயைப் பற்றி வியந்து எழுதியிருக்கிறார்.
அந்த
நூலில் ஓரிடத்தில் கோம்பை நாயின் சின்னஞ்சிறு குட்டியை மிகப்பெரிய குதிரைக்கு
ஈடாகக் கொடுத்து பண்டமாற்றம் செய்த வழக்கத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். மதுரைச்
சுற்றிக் கிடைக்கும் வேறுசில ஆவணங்களில் கோம்பை நாய் ‘பாளையக்காரர்கள் நாய்’ எனக்
குறிக்கப்பட்டிருக்கிறது. முரட்டுச் சுபாவமும் பலமும் கொண்ட இந்நாய்கள்
பாளையக்காரர்களின் ஆட்சியின் போது கோட்டைக்காவலுக்குப்
பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. வேட்டைச் சமூகத்தின் எச்சமாக நிலவுடைமை சமூகத்தில்
இருந்த நாய் வளர்ப்பு, நிலவுடைமைச் சமூகத்தின் சிதைவில்
காணாமல் போய்விட்டது. கோட்டைக்கும் வீட்டுக்கும் நாய்கள் காவலுக்கு இருந்த நிலை
மாறி, விலை உயர்ந்த நாய்களை வாங்கி வீட்டுக்குள்
வைத்துக்கொண்டு நாயைக் காவல் காக்க மனிதர்களை நியமித்துக்கொண்டிருக்கிறது இன்றைய
சமூகம்.
---------------------
284 - 11.10.2018
மெகல்லன்
கண்டுபிடிப்பு
போர்ச்சுக்கல்லின்
மாலுமியான மெகல்லன் புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமுடையவராக இருந்தார்.
1519 ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்து பாய்மரக் கப்பல்களுடனும் 267 மாலுமிகளுடனும் செவிலி என்கிற இடத்தில் இருந்து மேற்கு
நோக்கி பயணத்தைத் தொடங்கினார். இவரது கடல் பயணத்திற்குத் துணையாக இருந்தவர் ஸ்பெயின்
மன்னர் ஐந்தாம் சார்லஸ். ஆதலால் அந்தப் பயணம் முழுக்க சார்லஸின் விசுவாசியாகவே
இருந்தார் மெகல்லன். அவரது பயணம் அட்லாண்டிக் கடலைக் கடந்து தென் அமெரிக்காவின்
தென் முனையை அடைந்தது. அதனாலேயே அவரது நினைவால் அந்த முனை இன்று மெகல்லன் ஜலசந்தி
எனக் குறிப்பிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் செய்த பயணத்தில் ஓரிடத்தில் கடல்
அலைகள் இல்லாமல் அமைதியாக இருந்தது. அந்த இடத்திற்குப் பசிப்பிக் பெருங்கடல் எனப்
பெயரிட்டார். போர்த்துக்கீசிய மொழியில் ‘பசிபிக்’
என்னும் சொல்லிற்கு ‘அமைதி’
என்று பொருள். பசிபிக் கடலைக் கடந்த மெகல்லன் 1521 இல் ஒரு தீவுக் கூட்டத்தைக் கண்டார். அந்தத் தீவுக்
கூட்டத்திற்குத் தனது கடல் பயணத்திற்கு உதவிய மன்னர் சார்லஸூக்கு நன்றி சொல்லும்
விதமாக அவருடைய மகனான இரண்டாம் பிலிப்பின் பெயரால் பிலிப்பைன்ஸ் எனப் பெயர்
சூட்டினார்.
---------------------
285 - 12.10.2018
பேரரசரின்
தனிக்கட்டளை
1711 ஆம் ஆண்டில் ரோமானிய பேரரசராகவும் ஆஸ்திரிய அரசராகவும் அரியணை ஏறியவர் ஆறாம்
சார்லஸ். இவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்புக்கு வர ஆண் வாரிசு இல்லாததால் தனது
மகளான மரிய தெரசாவை ஆட்சிப் பீடத்தில் அமர்த்த விரும்பினார். ஆண்களை மட்டுமே
ஆட்சியில் அமர வைத்து வந்த மரபில் சார்லஸின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் இருந்தது.
அந்தச் சிக்கலைத் தீர்க்கும் பொருட்டு தனது மகளுக்காக ஓர் ஆணையைத் தயாரித்தார்.
அதுதான் ‘பேரரசரின் தனிக்கட்டளை’ எனச் சுட்டப்படுகிறது. ஆணை தயாரித்தது மட்டுமின்றி அவ்வாணையை ஏற்றுக்
கொள்ளும் படி தனது ஆளுகையின் கீழ் இருந்த பல பாகங்களுக்கும் சென்று ஐரோப்பிய
அரசர்களின் கையொப்பத்தினையும் பெற்றார். வாரிசு உரிமைப் பிரச்சினையை தீர்க்க
வேண்டிய வகைகளில் எல்லாம் தீர்த்துவிட்டு தனது மகள் அரசர் ஆவதற்கான சூழலை
உருவாக்கிவிட்டு 1740 ஆண்டு அக்டோபர் மாதத்தில் காலமானார். இன்றைக்கு எல்லா
வகையிலும் முன்னேறிய நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் படித்த அறிவு ஜீவிகளே ஒரு
பெண் அதிபராகி விடக் கூடாது என அரசியல் செய்கிற இன்றைய சூழலில் ஏறக்குறைய முந்நூறு
ஆண்டுகளுக்கு முன்னால் பாரம்பரிய மரபை மீறி ஒரு பெண்ணை அரசராக்கிய செயல் ரோமானிய
வரலாற்றில் மாபெரும் ஆச்சரியம்.
---------------------
287 - 14.10.2018
பரீலியா
பறவைக்
கூட்டங்களையும் கால்நடைகளையும் பாதுகாப்பதாக நம்பப்படும் பேல்ஸ் என்கிற தேவதைக்கு
மரியாதை செய்யும் பொருட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 21 ஆம் நாளில் கொண்டாடப்படும் திருவிழா ‘பரீலியா’ எனப்படுகிறது. இது பண்டைய
ரோமானியத் திருவிழா. இவ்விழா தொடக்க காலகட்டத்தில் ரோமாபுரி மன்னர்களால் மட்டுமே
கொண்டாடப்பட்டது. பின்னர் மக்களில் அனைத்துத் தரப்பினரும் கொண்டாடும் ஒன்றாக
மாறிப்போனது. விழாவின் தொடக்கமே வித்தியாசமாக இருந்திருக்கிறது. அதாவது
தீக்கடவுளின் கோயிலைச் சார்ந்த ஆறு கன்னிகள், வைக்கோல்,
பலியிடப்பட்ட விலங்குகளின் சாம்பல் மற்றும் ரத்தம்
ஆகியவற்றை விநியோகித்து இவ்விழாவைத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் பின்
தூய்மைப்படுத்தும் சடங்குகள், எண்ணெய்க்
காப்பு,
கால்நடைகளையும் இறைப் பீடங்களையும் அலங்கரித்தல் முதலியன
நடைபெற்றிருக்கிறது.
தீயைத்
தாண்டும் போதுதான் தூய்மை அடைகிறோம்
என்ற ரோமானியர்களின் நம்பிக்கையின் படி இந்த பரீலியா திருவிழாவின் போது மக்கள்
எரியும் தீயை மூன்று முறை தாண்டியிருக்கின்றனர். வேறு சில நாடுகளிலும் வழிபாடுகளில்
தீயைப் பயன்படுத்துவது வழக்கத்தில் இருந்துவருகிறது. என்றாலும் அந்நாடுகளில் ‘ஜோதியில் கலந்துவிட்டார்’ எனச் சொல்லும் வழக்கம்
இல்லை.
---------------------
287 - 14.10.2018
தாய்
மதத்திற்குத் திரும்புதல்
இந்திய
வரலாற்றில் இன்றைய நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் நாக்பூரின் தீக்சா பூமியில் 5 லட்சத்து 37 ஆயிரம் மக்களோடு புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் தழுவி
இன்றோடு 62 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பல ஆண்டுகளாக ஆய்வு செய்து உலகின்
பல நாடுகளது மானுடவியல் வரலாற்றை உற்று நோக்கிய அம்பேத்கர் புத்தரின் மேன்மைகளைக்
கண்டடைந்தார். அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். சமத்துவம் நிலவுகின்றதும்
சகோதரத்துவம் கடைப்பிடிக்கப்படுகின்றதும், நிறுவனமாகாததும்,
தனிநபர் சுதந்திரத்தை மதிக்கின்றதும், வர்ணாசிரம பாகுபாடற்றதுமான பௌத்தமே இந்து மதத்திற்கு எதிரான
அரசியலாக இருக்க முடியும். அதுவே இந்து மதத்தின் ஜீவ நாடியான சாதி அமைப்பினை
வேரறுக்கும் செயலாகலாகவும் அமையும் என்று தம்மையும் தம் மக்களையும் துரோகத்தால்
வஞ்சித்த இந்து மதத்தை விட்டு வெளியேறிய அம்பேத்கர் தம் வாழ்நாள் முழுவதும்
பௌத்தத்திற்குத் திரும்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய படியே இருந்தார். அந்தத்
தேவை இன்றளவும் இருந்து கொண்டே இருக்கிறது. பூர்வீகக் குடிகள் தாய் மதத்திற்குத்
திரும்ப வேண்டும்.
---------------------
288 - 15.10.2018
அரச சலுகை
இரண்டாம்
சமுத்ரகுப்தனின் மகளும் வாகாடக அரசர் இரண்டாம் ருத்ரசேனனின் மனைவியும் தலைமை
அரசியுமான பிரபாவதி குப்தா என்பவர் ஆச்சார்ய சனலசாமி என்பவருக்கு நிலத்தைத் தானமாக
அளித்தார். அந்த நிலத்தை ஆச்சார்ய சனலசாமி பயன்படுத்தும் போது அவருக்கும் வழக்கம்
போல வேத பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது
பற்றிய குறிப்பை பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் சுக்ரதாசா என்பவர் செதுக்கிய
பட்டயங்கள் விரிவாகத் தருகின்றன. இந்தப் பட்டயத்தின் வழி வேத பார்ப்பனர்கள்
கால்நடை மேய்ப்பாளர்களுக்கு மேய்ச்சலுக்கு உரிய புல்லை வழங்குவது, பிறருக்குத் தோலாசனம் கொடுப்பது,
சுற்றுப்பயணம் செய்யும் அதிகாரிகளுக்கு எரிபொருள் கொடுப்பது
முதலியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்ததை அறிய முடிகிறது. வேத
பார்ப்பனர்களின் குடியிருப்புக்குள் படைவீரர்கள் நுழையக் கூடாது என்னும்
கட்டுப்பாடு இருந்திருக்கிறது. சாராயம் வாங்குவதில் இருந்தும் உப்புத் தோண்டுவதில்
இருந்தும்,
சுரங்கம் தோண்டுவதில் இருந்தும் மரம் வெட்டுவதில் இருந்தும்
விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பட்டயம் வேத பார்ப்பனர்கள் பூக்களையும்
பாலையும் தானமாக வழங்க வேண்டியதில்லை எனவும் குறிப்பிடுகிறது.
---------------------
289 - 16.10.2018
டெல்லி
தர்பார்
1876 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி பிரிட்டீஸ் பாராளுமன்றத்தில் ராஜாங்கப் பட்டங்கள்
சட்டம் நிறைவேறியதும் அடுத்த நாள் விக்டோரியா மகாராணி இந்தியப் பேரரசியாக முடி
சூட்டிக் கொண்டார். இதனை ஒட்டி இந்தியாவில் விழா எடுக்கப்பட்டது. அப்போதைய வைசிராய்
லிட்டன் பிரபு விழாவுக்கான ஏற்பாடுகளை விரிவாகச் செய்திருந்தார். அவ்விழா தான் ‘டெல்லி தர்பார்’ எனக்
குறிப்பிடப்படுகிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ உடையில் வைசிராய் யானை மீதேறி
வந்த காட்சி இந்தியர்கள் அனைவரையும் வியப்படைய வைத்தது. மாகாண கவர்னர்கள், துணை கவர்னர்கள், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்த நிருவாகிகள், 77 சுதேச மன்னர்கள், நாட்டின் முக்கியமான 300 நபர்கள் தர்பார் மண்டபத்தில் கூடியிருந்து நிகழ்ச்சியைக்
கண்டு களித்தனர். தலைமை அறிவிப்பார் மேஜர் பார்ன் என்பவர் விக்டோரியா மகாராணியின்
பிரகடனத்தை வாசித்தார். வழக்கமாக இங்கிலாந்தில் பாடப்படும் ‘கடவுள் ராணியைக் காப்பாராக’ என்னும் பாடலோடு விழா நிறைவு பெற்றது. விக்டோரியா மகாராணியின் காலத்தில்
பிரிட்டிஸார் இந்தியாவில் கொண்டுவந்த கல்வியும் மருத்துவமும் சமுதாய மாற்றமும் மிக
முக்கியமானவை. அதற்காக அவர்களை நன்றியோடு நினைவு கூற வேண்டும்.
---------------------
290 - 17.10.2018
அவசியமும்
ஆடம்பரமும்
கென்யாவில்
இருநூறு வருடங்களுக்கு மேலாக அந்நியர் ஆட்சியில் பருவ மழை பொய்த்துப் போனதால்
இழந்திருந்த செழிப்பை மீட்டுக் கொணர்டு வந்தவர் வன்காரி மாத்தாய். அமைதிக்கான நோபல்
பரிசு பெற்றவர். மரம் நடுவது ஒன்றையை நோக்கமாகச் செயல்பட்டு கென்யாவை 1980 களில் பசுமையின் தேசமாக மாற்றியவர். பேராசிரியராக, அரசியல்வாதியாக, சுற்றுச் சூழல் ஆர்வலராக இருந்த மாத்தாய் தனது தேவைக்காக ஓரளவு விலை உயர்ந்த
கார் ஒன்றை வாங்கினார். மூன்று குழந்தைகள் பிறந்தன. அரசியலில் அடிக்கடி
சூழ்ச்சியில் சிக்கினார். அடிக்கடி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். கஸ்டம்
அவரைச் சூழ்ந்து கொண்டது. ஒரு கட்டத்தில் குடியிருப்பதற்கு வீடு கூட இல்லாமல்
குழந்தைகளோடு பெரிதும் சிரமப்பட்ட வன்காரி மாத்தாய் தனது சுயசரிதையில் அனுபவத்தைச்
சொல்லி வரும்போது ஓரிடத்தில் வீடு இல்லாமல் குழந்தைகளோடு அலைந்த போது மிகவும்
சிரமப்பட்டேன். கார் வாங்கியதற்குப் பதில் வீடு வாங்கியிருக்கலாம் என்பதை அப்போது
எனது அனுபவம் எனக்கு உணர்த்தியது என்று எழுதியிருக்கிறார். அதாவது முதலில் அவசியமானதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். பிறகு
தான் ஆடம்பரம் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார். கார்
ஆடம்பரம். வீடு அவசியம்.
---------------------
291 - 18.10.2018
நாமும்
அவர்களும்
அறிவியல்
கண்டுபிடிப்புகளில் ஐரோப்பா எப்பவுமே முன்னோடியாக இருந்து வந்திருக்கிறது. இப்பவும்
அது தான் முன்னிலையில் இருக்கிறது. அன்றாட சர்வதேச பொருளாதாரத்தைத்
தீர்மானிப்பதில் கூட ஐரோப்பாவின் பங்கு கணிசமான அளவில் இருந்து வருகிறது.
இன்றைக்கு அவர்களது விஞ்ஞானம் புதியதொரு எல்லையை எட்டியிருக்கிறது. சமீபத்தில்
கண்டுபிடிக்கபட்ட நுண்துகள் மூலம் காற்றில் கரைந்திருக்கும் சாக்ரடீஸ், இயேசு, கலிலியோ
போன்றோரது குரலைப் பிரிந்து ஒலி வடிவில் குறுந்தகடாகக் கொண்டு வர முடியும் என்கிற
நிலையை எட்டியிருக்கிறார்கள். அப்படிச் செய்வதன் வழி பல நூற்றாண்டுகளுக்கு
முன்னால் மறைந்து போனவர்களின் உண்மையான கருத்துகளை நேரடியாகப் பெற முடியும்.
அதனால் அவர்கள் குறித்து வழங்கப்படும் கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மையான
கருத்தியல் தளத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறார்கள். தற்காலத்தில்
நடைபெறும் குற்றச் செயல்களையும் கூட மிக விரைவாகக் கண்டுபிடித்துவிட முடியும்.
குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் கூறுகிறார்கள். இப்படித்தான் அவர்களின்
சிந்தனையும் செயலும் அமைந்திருக்கிறது. அவர்கள் பெண்கள் கோவிலுக்குள் வரக்கூடாது
என்றெல்லாம் சிந்திப்பதே கிடையாது.
---------------------
292 - 19.10.2018
இட்லி
ஸ்டிரைக்
திருநெல்வேலி
மாவட்டத்தில் இருக்கும் மாஞ்சோலை எஸ்டேட் பல போராட்டங்களுக்காக கவனம் பெற்ற ஓர்
இடம். அடிப்படை உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்கள் மீது அதிகார வர்க்கத்தினர்
எண்ணற்ற வன்முறைகளை நிகழ்த்திய மாஞ்சோலையில் 1968 இல் நடத்தப்பட்ட ஓர் ஒத்துழையாமைப் போர்தான் ‘இட்லி ஸ்டிரைக்’. மாஞ்சோலை தொழிற்சாலையில்
நாளொன்றுக்கு மூன்று ஷிப்டுகள் நடைபெறும். அதில் இரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நிருவாகத்தின் சார்பில் இட்லி
வழங்கப்படும். அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலை செய்கிறவர்களுக்கு இட்லி வழங்கப்பட மாட்டாது. தொழிலாளர்கள்
பசியோடு தான் வேலை செய்ய வேண்டும். அல்லது அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
அவர்களே ஏற்பாடு செய்வதில் சிக்கல் இருந்தது. பொருளாதாரமும் ஒரு காரணம். ஆக காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலை செய்வோருக்கும் நிருவாகம் இட்லி வழங்க வேண்டுமென போராட்டம்
நடைபெற்றது. இந்த கோரிக்கையை ஒரு வாரம் வரை ஏற்றுக்கொள்ளாத நிருவாகம் பின்னர்
ஏற்றுக் கொண்டது.
---------------------
293 - 20.10.2018
எதிர்வினை
பொதுவாகவே
உலகம் முழுவதும் வலிமையானவார்களைப் பகைத்து கொள்ளக் கூடாது என்பது ஒரு விதியாகவே
இருந்து வருகிறது. மாறாக, பகைத்துக் கொண்டால் அந்தப் பகையை நமக்கு
எதிரானதாக மாறிவிடும் என்றெல்லாம் அந்த விதி மென்மேலும் கற்பித்துக்கொண்டே
இருக்கிறது. வள்ளுவர் கூட ‘ஆற்றுவார் ஆற்றல் இகழாமை
போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை’ என்கிறார். எதுவும்
செய்து முடிக்கும் படியான வலிமையானவர்களை இகழாதே. அவர்களை இகழாமல் இருப்பதே
தன்னைக் காக்கும் தலையாய நெறி என்பது அக்குறளின் பொருள். வலிமையானதே வாழும்
என்கிறார் டார்வின். இந்த இடத்தில் வலிமை என்று சொல்லப்படுவது எது? என்ற கேள்வி வருகிறது. வலிமையானவர்களைப் பகைத்துக்கொள்ளாமல் அவர்களின்
வலிமையை அப்படியை ஏற்றுக்கொண்டால் வலிமையற்றிருப்பவர்கள் அப்படியே இருக்க வேண்டும்
என்பதை நியாயப்படுத்துவதாகாதா? என்றொரு கேள்வியும் வருகிறது.
வலிமையானவர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் வலிமை ஒரே இடத்தில்
குவிந்து கிடப்பதற்கான பாரபட்ச செயல்பாடுகளின் மீது எதிர்வினையாற்றலாம். ஆற்ற
வேண்டும். வள்ளுவர், டார்வின் முதலியோர் சொல்லியிருக்கிறார்கள் என்பதற்காக
அப்படியை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.
---------------------
294 - 21.10.2018
திலகரின்
தேசப் பற்று
பிற்படுத்தப்பட்டவர்களும்
ஒடுக்கப்பட்டவர்களும் அரசியல் அதிகாரம் பெறுவதை திலகர் ஒருபோதும் விரும்பியதில்லை
என்பதைத் தான் அவருடைய செயல்கள் நமக்குக் காட்டுகின்றன. சான்றாக 1918 இல் நடந்த அனைத்திந்திய தாழ்ப்பட்ட வகுப்பினர் மாநாட்டில்
தீண்டாமை ஒழிப்புத் தீர்மானத்திற்கு திலகர் ஆதரவு தரவில்லை. லிங்கயாத்துகள், மராத்தாக்கள் முதலிய பிற்பட்ட வகுப்பினர் சட்டமன்றத்தில்
பிரதிநிதித்துவம் கோரிய போது அதை எதிர்த்தார். கைத்தொழில் செய்கிறவார்கள்
பிரதிநிதித்துவம் கோரிய போது, நீங்கள்
அவரவர் தொழிலைப் பார்த்துக்கொள்ளுங்கள் அரசியலை பார்ப்பனர்களிடம் விட்டுவிடுங்கள்
என்று கூறிய அவர்,
வேறொரு கட்டத்தில் கிண்டலாக அவர்களைப் பார்த்து, பார்ப்பனர் அல்லாதவர்கள் சட்டமன்றங்களில் கலப்பையையும்
மளிகைக் கடை தராசுகளையும் தூக்கப் போகிறீர்களா? எனக் கேட்டார்.
சோலாப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பார்ப்பனர் அல்லாதவர்கள்
சட்டத்திற்கு அடிபணிந்து போகவேண்டுமே தவிர சட்டத்தை உருவாக்க அதிகாரத்திற்கு வர
ஆசைப்படக் கூடாதென்றார். இப்படிச் செயல்பட்ட திலகரும் இன்றைக்குத் தேசத் தலைவராகக்
கருதப்படுகிறார்.
---------------------
295 - 22.10.2018
இரட்டை நாக்கு
மனிதர்கள்
அனைவருக்குமே இரட்டை நாக்கு இருந்திருந்திருக்கிறது. இருந்தும் வருகிறது. அதுவும்
அரசியல்வாதிகளின் நாக்கு பற்றி இன்றைக்கு அதிகமாகக் காண முடிகிறது. சட்டத்திற்குப்
புறம்பாக பேசுவது. பிரச்சினை என்று வருகிறபோது நான் பேசவில்லை என்பது. வாக்குறுதி
அளிப்பது, தேர்தல் முடிந்த பிறகு வாக்குறுதி அளிக்கவில்லை என்பது. கொலை
செய்வது,
பிறகு தற்கொலை செய்து கொண்டார் என்பது, செய்யவில்லை என்பது. பிறகு செய்ததற்கு மன்னிப்புக் கேட்பது
மாதிரியான பேச்சுகள் முன்னெப்போதையும் விட இப்போது அரசியல்வாதிகளிடம் அதிகரித்து
வருகிறது. இப்படிப் பேசுவதைத் தான் ‘இரட்டை நாக்கு’ அல்லது ‘இரட்டைச்
சிந்தனை’ எனக் குறிப்பிடுகிறார்கள். பிரபல ஆங்கில எழுத்தாளர்
ஜார்ஜ் ஆர்வெலின் 1984 என்கிற நாவல் கூட இரட்டைச் சிந்தனை உடையவர்களின் ஆட்சி
எப்படிப்பட்ட சர்வதிகாரமாக இருக்கும் என்பதை அழகாக விவரிக்கிறது. இரட்டை நாக்கோடு
முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறவர்களிடம் சமுதாயம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
---------------------
296 - 23.10.2018
Me Too இயக்கம்
Me too இயக்கத்தில் பெண்கள் பேசிவருவது ஆரோக்கியமான விஷயம் தான். பெண்கள்
பொதுவெளியில் பேசுவது அவர்களுக்கான உலகத்தை தடைகளற்றதாக மாற்றும் என்று உறுதியாக
நம்பலாம். பேச வருந்திருக்கும் பெண்களில் வசதியான மற்றும்
சினிமாவோடு தொடர்புடைய பெண்களே அதிகமாக இருக்கிறார்கள். சிக்கல் அவர்களுக்கு
மட்டுமில்லை. பெண்ணாகப் பிறந்த எல்லோருக்குமே இருக்கிறது. எல்லோரும் பேச வேண்டும்.
வீரர்களாக,
புருஷ லட்சனம் நிரம்பியவர்களாக, அறிவாளியாக இருந்தவர்களின் வெளிவராத பக்கங்கள் வெளியில் வர பெண்கள்
துணிச்சலாகச் செயல்பட வேண்டும். அரசியல் பலிவாங்குதல் இல்லாமல் காழ்ப்புணர்ச்சி
இல்லாமல் பெண்கள் தன்னிச்சையாகப் பேசுவது அவர்கள் பக்கம் ஏற்கனவே இருக்கும்
உண்மைத் தன்மையை மேலும் உறுதிப்படுத்தும். அவர்களுக்கான ஆதரவைப் பெருக்கும். தனக்காக
தானே பேசத் தொடங்கும் சமூகம் வெற்றியை உறுதிப்படுத்திய நிகழ்வுகள் வரலாற்றில்
நிரைய உண்டு. அது போல பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறையவும் மறையவும் Me too இயக்கம் உதவ வேண்டும். உதவும் எனவும் நம்பலாம்.
---------------------
297 - 24.10.2018
வாழ்தலின் உரிமை
ஒருவர்
மண்பானை செய்து கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் ஏராளமான மண்பானைகள் அடுக்கி
வைக்கப்பட்டிருந்தன. அவரால் கட்டிப் போடப்பட்ட ஆடு ஒன்று பக்கத்தில் கத்திக்கொண்டே
இருந்தது. அவ்வழியாகச் சென்ற குரு ஒருவர் பானை செய்கிறவரைப் பார்த்து இந்த ஆட்டை
நீங்கள் தான் வளர்த்து வருகிறீர்களா? எனக் கேட்டார். அதற்கு அவர் இல்லை இது காட்டாடு. இந்த வழியாக வந்தது.
பிடித்துத் தெய்வத்திற்குப் பலியிடலாம் என்று கட்டிப்போட்டிருக்கிறேன் என்றார்.
இதைக் கேட்ட குரு வேகமாக எழுந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த பானைகளை எல்லாம்
அடித்து நொறுக்கினார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை அள்ளி மண்பானை செய்தவரிடம்
நீட்டினார். அதற்கு அவர் எனது பானைகளை உடைக்க நீங்கள் யார்? அவைகள் எத்தனை நாள் உழைப்பென்று உங்களுக்குத் தெரியுமா? என்று மிகுந்த கோபத்துடன் கேட்டார். அதற்கு அவர் உன்னுடைய
உழைப்பைச் சிதைக்க எப்படி எனக்கு உரிமை இல்லையோ அதே
போல் பிறருடைய உழைப்பைச் சிதைக்க உனக்கும் உரிமை இல்லை. உன்னிடம் இருக்கும் ஆடு
நீயே வளர்க்கிற ஆடாகவே இருந்தாலும் அதைக் கொல்வதற்கான உரிமை உனக்கு இல்லை. வாழ்வதா? வேண்டாமா? என்பதை ஆடு
தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். ஆடு வெறும் மிருகம் தானே என்று மட்டும் எண்ணி
விடாதே. ஆடுகளின் உலகத்தில் மனிதர்களும் மிருகம் தான் என்றார்.
---------------------
298 - 25.10.2018
தலித்
சிறுமியின் குற்றமற்ற ரத்தம்
இன்று
சேலத்தில் தலித் சிறுமி ராஜலட்சுமி பாலியல் இச்சைக்கு ஆட்பட மாறுத்தார் என கொலை
செய்யப்பட்டிருக்கிறார். அந்த அளவுக்கு இந்த தேசத்தில் தலித்துகளின் இரத்தம்
மலிவாகிவிட்டதோ என்னவோ. இது இந்த தேசத்தில் புத்தம்புதிய நிகழ்வும் அல்ல. நீண்ட
காலமாக இருந்துவரும் சாதித் திமிறின் தொடர்ச்சி. சடங்குகளாலும் சாதியாலும்
பெண்களும் தலித் பெண்களும் தொடர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்
கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த நிகழ்வின் வழி விநோத மிருகங்களோடு
வாழுவது சிரமம் என்று தெரிந்திருந்தும் பெண்களும் தலித் பெண்களும் சகிப்புத்
தன்மையில் கடந்து போய்கொண்டேயிருப்பார்கள் என்றே இந்த சமூகம்
கருதிக்கொண்டிருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
ஒருவேளை
இந்த சமுதாயம் அப்படித்தான் கருதுகிறதென்றால் அதற்குப் பெண்களின் பக்கமிருக்கும்
ஆழ்ந்த மௌனமும் ஆண் சாராத தனித்த அரசியல் திரளாகக் கூடாததுமே காரணம். பெண்கள்
தமக்கான அரசியலை ஆண்களிடமிருந்து கற்றுக்கொண்டே இருந்தது போதும் இனியேனும் கற்றுக்கொண்டதை
ஆண்களுக்குத் திருப்பிக் கற்பிக்க வேண்டும். குறிப்பாக அதிகமாக கற்றிருக்கும்
தலித் பெண்கள் சற்று வலுவாகவே கற்பிக்க வேண்டும். அதை போலி மனிதர்கள் வன்முறை
என்று கூட தவறாகச் சித்திரிப்பார்கள். அவர்களுக்குத் தான் மிக மிக அதிகமாகக்
கற்பிக்க வேண்டும்.
---------------------
299 - 26.10.2018
வீச்சுளிப்
பாய்ச்சல்
பாண்டியர்களின்
ஆட்சிக்காலத்தில் நிகழ்த்துப்பட்டு வந்து கூத்து ஒன்றின் பெயர் வீச்சுளிப்
பாய்ச்சல். வீச்சுளி என்னும் பறவையைப் போல பறந்து பறந்து நிகழ்த்துகின்ற
கூத்தாதலின் இதற்கு இப்பெயர் வழங்கியிருக்கிறது. இக்கூத்தை நிகழ்த்துபவர்கள்
ஒருமுறை நிகழ்த்திய பிறகு இரண்டாம் முறையாக நிகழ்த்துவதற்கு குறைந்தது ஆறு
மாதகாலம் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும் என்பது விதியாக இருந்திருக்கிறது.
கழைகளை நட்டி கயிற்றில் ஆடும் பெண் தனது மூக்குத்தியை கீழே விழச் செய்து அந்த
மூக்குத்தி தரையைத் தொடுவதற்கு முன்பாக கீழாகப் பறந்து வந்து மூக்குத்தியைக்
கையால் பிடிக்காமல் மூக்குத்தி அணிந்திருந்த துவாரத்தினாலேயே மூக்குத்தியை
ஏந்திக்கொண்டு பாதம் தரையில் படாமல் பறந்தபடி மேலேறி கயிற்றில் நின்று
நிகழ்த்துகிற கூத்து தான் இது எனத் தெரிய வருகிறது. பாண்டிய
மன்னனொருவன் இக்கூத்தை கண்டுகளிக்க ஏற்பாடு செய்திருந்தான். கூத்து நிகழ்த்திக்
கொண்டிருக்கும் போது அவன் கூத்தைப் பார்க்காமல் வேறொருத்தியைப் பார்த்திருந்துவிட்டு கூத்தைப் பார்க்கவில்லை. மீண்டும் நிகழ்த்து என
கூத்துப்பெண்ணை கட்டாயப்படுத்தினான். அப்பெண் போதுமான மூச்சுப்பயிற்சி இன்றி தொடர்ந்து இரண்டு முறை கூத்தை நிகழ்த்தியதால்
கூத்தாடியபடியே இறந்து போனாள். இச்செய்தி தொண்டை மண்டலச் சதகத்தில் காணப்படுவதாக
பெரியதம்பிப் பிள்ளை பேரில் மான்விடு தூது நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டு
இருக்கிறது.
---------------------
300 - 27.10.2018
தற்பெருமை
துறத்தல்
இணைய
தளத்தில் எதையேனும் தேடினால் ஏராளமாகக் கிடைக்கிறது. இது ஒருவகை வளர்ச்சி தான்.
ஆனால் அந்த தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா வாயிலாகவே கிடைக்கின்றன. உதாரணமாக
கிழக்காசிய பழங்குடிகள் பற்றி தேடினால் தகவல் கிடைக்கிறது. ஆனால் அது அமெரிக்கா
ஏற்கனவே திரட்டி வைத்திருக்கும் தகவலாகவே இருக்கிறது. கிழக்காசிய பழங்குடிகள்
நேரடியாகத் தருகிற தகவலாக அது இல்லை. அப்படி இல்லாத போது தகவலின் நம்பகத் தன்மை
குறைந்து போய்விடுகிறது. மேலும் கிழக்காசிய பழங்குடிகள் குறித்த அமெரிக்காவின்
பார்வையாகத் தான் அத்தகவல் இருக்கிறது. இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஒரு
மானிடப் பிரிவு குறித்து அமெரிக்கா என்ன நினைக்கிறதோ அது தான் உலகத்தின்
பொதுக்கருத்தாக நிறுவப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அதுதான் நடக்கிறது.
பல விஷயங்ளுக்கு அமெரிக்காவைத் தான் உதாரணமாகக் காட்டுகிறார்கள். தற்பெருமை பேசி
மூத்த குடி என நிறுவுவதில் கவனம் செலுத்துகிற அதேசமயம் தமிழர்கள் குறித்து
யாரேனும் இணையத்தில் தேடினால் கிடைக்கிற தகவல் தமிழர்கள் தருவதாக இருக்கிற சூழல்
உருவாக்கப்பட வேண்டும்.
அது காலத்தின் கட்டாயம்.
---------------------
301 - 28.10.2018
விதவைக் காலனி
தலைவர்களின்
அகால மரணங்கள் மாபெரும் துயரத்தைக் கொண்டுவந்து சேர்த்து விடுகின்றன. சான்றாக
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி மரணம் உட்பட பல மரணங்களைச் சொல்லலாம்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் மரணத்தை ஒட்டி உருவான கலவரத்தில்
சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். 392 ரவுண்ட்கள் சுடப்பட்டு 292 நபர்களைக்
கைது செய்து கலரவத்தை அடக்க முயற்சி செய்தது டெல்லி காவல்துறை. என்றாலும்
ஏராளமானோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைகைக் கண்டறிவதற்காக
அமைக்கப்பட்ட அஹிஜா குழு 2733 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக மத்திய அரசிடம் 1984 இல் அறிக்கையைச் சமர்ப்பித்தது. கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் தவிர
இருக்கிறவர்களின் பொருள் சேதங்களைக் கணக்கில் எடுக்க 1985 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட
குருதயாள்சிங் தில்லான் குழு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு
வழங்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்தது. பரிந்துரைகள் மீது அரசு எடுத்த
நடவடிக்கை என்ன என்பது ஒருபுறம் இருக்க இதில் நிகழ்ந்த இன்னொரு கொடுமை எராளமான
சீக்கியப் பெண்கள் தங்கள் கணவனை இழந்திருந்தனர். அவர்களை மையமிட்டு டெல்லியில்
உருவான குடியிருப்பே ‘விதவைக் காலனி’.
---------------------
302 - 29.10.2018
தலைமைகளின்
வகைகள்
மக்களோடு
மக்களாக வாழ்ந்து போராடி தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் தாமே தோன்றி
எழுச்சி பெறுகிற தலைமைகள் உண்டு. அவ்வாறான தலைமையை இயல்பிலேயே தோன்றும் தலைமை
அல்லது சுயம்புத் தலைமை என அடையாளப்படுத்தலாம். அவ்வாறின்றி தேவையையொட்டி அத்தகைய
களங்களும் பணிகளும் கிடைக்கப் பெறாத நிலையிலும் திட்டமிட்டு ஒருவரை அத்தகைய
தலைமைக்குரிய பாத்திரமாகத் தேர்வு செய்து தலைமைப் பண்புகளை காலப்போக்கில் கற்கும் வாய்ப்பளித்து உருவாக்குகிற தலைமையை தேசாற்றுவிக்கப்படுகிற
தலைமை என அறியலாம். கற்பது, கற்பிப்பது என்னும் அடிப்படையில்
களப்பணியில் இருந்து முளைக்கும் தலைமைகள் தாம் இவ்விரு தலைமைகளும். இவையன்றி
கற்கவோ,
கற்பிக்கவோ வாய்ப்பில்லாத நிலையில் தன்னலவாதிகளால் தூக்கி
நிறுத்தப்படும் மாயையான தலைமையை ‘தோற்றமளிக்கும்
தலைமை’ என்றும் அறியலாம் என்று தலைமைகளின் வகைகளை
வரையறுத்திருக்கிறார் ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
---------------------
303 - 30.10.2018
தற்செயல்
நிகழ்வு
பிரிட்டீஸ்
இந்தியாவின் மத்திய காலப் பகுதியில் பண்பாட்டாலும் மொழியாலும் ஏராளமான பிளவுகள்
இருந்தன. ஆங்கிலம் தெரிந்திருந்த மத்திய தர அறிவாளி வர்க்கத்தினராகக் கருதப்பட்ட
சிலர் தமக்குள் இருக்கும் பிளவுகளை எல்லாம் மறந்து ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு
நாமெல்லாம் ஒருங்கிணைய வேண்டும் என கருதினர்கள். அப்படி ஒருங்கிணைய மொழி தான்
மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. அதை இந்தியர்கள் அனைவருமே உணர்ந்தும் இருந்தனர்.
இந்த நிலையில் 1884 இல் அப்போதைய வைஸ்சிராயாக இருந்த ரிப்பன் பிரபு தனது
பணிக்காலத்தை முடித்துக் கொண்டு அவரது நாட்டுக்குச் செல்லும் போது அவரை
வழியனுப்புவதற்காக மும்பையில் சிலர் கூடினர்.
தற்செயலாக நிகழ்ந்த இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும்
இருந்து வந்தவர்கள் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த கூட்டத்தில்
இதே போல ஆண்டுதோறும் நாம் எல்லோரும் கூடி நமது ராஜாங்க விஷயங்கள் பற்றி ஏன் விவாதிக்கக்
கூடாது என்றொரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதை எல்லோருமே ஏற்றுக்கொண்டார்கள்.
அதன்படி 1885 இல் எல்லோரும் கூடினார்கள். அது தான் காங்கிரஸ் கட்சியின்
முதல் மாநாடு. காங்கிரஸ் கட்சி இப்படித்தான் தோற்றம் பெற்றது.
---------------------
304 - 31.10.2018
உழைப்பை மதிக்காத
சமூகம்
பேராசிரியர்
காஞ்சா அய்லய்யா தம்முடைய ‘நான் ஏன் இந்து அல்ல’ என்கிற நூலில் ஓரிடத்தில் வட இந்தியாவில் மரம் ஏறி கள் இறக்குகிற தொழிலைச்
செய்து வருகிற கௌடா சமூகத்தையும் பார்ப்பன சமூகத்தையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.
பார்ப்பனப் பெண்களின் நடனத்திற்கு ஏன் அதிக விளம்பரமும் முக்கியத்துவமும்
கொடுக்கப்படுகின்றன. ஒரு கௌடா பெண்ணின் அழகையும் திறமையையும் ஏன் பாராட்டுவது
இல்லை?
என்று கேள்வி எழுப்பும் அய்லய்யா கௌடா சமூகத்து ஆண்
மரமேறும் போது அவன் கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சியும்
மனப்பயிற்சியும் அவசியம். கவனக் குறைவு ஏற்பட்டால் மரணம் தான். ஆனால் பார்ப்பன நடன
ஆசிரியனுக்கு அப்படி அல்ல. கவனக் குறைவு ஏற்பட்டால் பெரிய இழப்பு ஒன்றும் அவனுக்கு
வந்து விடுவதில்லை. மரத்தில் ஏறி கள் இறக்குவதை யாரும் அவ்வளவு எளிதாகச் செய்துவிட
முடியாது. மரம் ஏறப் பயிற்சி பெறுதல் என்பது வேதபாராயணம் செய்வதைவிட ஆபத்தானது.
உண்மைநிலை இப்படியிருக்க,
வேதம் ஓதுகிறவனுக்கு இருக்கிற மரியாதையும் வருமானமும் கள்
இறக்குகிறவனுக்கு இல்லை. உழைப்பை மதிக்காதது இந்துச் சமூகம் என்கிறார் அவர்.
---------------------
305 - 01.11.2018
எதிரணியில் இருக்கும்
நண்பன்
‘எதிரணியில் இருக்கும் நண்பனை இனம் கண்டுகொள்’ என்பது
மேற்கத்திய பழமொழி. அப்படி இனம்கண்டு கொள்தல் என்பது நல்லெண்ணத்தின் அடிப்படையில்
அல்ல. முடிவுரை எழுதுவதற்கு அது ஒரு விதமான அணுகுமுறை. அரசியலில் பல நேரங்களில்
அதைத்தான் ராஜதந்திரம் என்று சொல்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை வல்லபாய்
படேல் காங்கிரஸ்காரர். அவருக்கு பாஜகவினர் சிலை வைக்கிறவர்கள். இது
வெளிப்பார்வைக்கு முரண்பாடாகத் தெரியும். ஆனால் அடிப்படை அரசியல் வேறு. வல்லபாய்
படேல் பாஜகவினரைப் பொறுத்தவரை எதிரணியில் இருந்த நண்பன். காங்கிரஸில் இருந்துகொண்டு
ஆர்எஸ்எஸின் நடவடிக்கைகளுக்குத் துணையாக இருந்தவர். காந்தியைக் கொலை செய்தவர்களோடு
நேரடியாகவும் கடிதம் வழியாகவும் தொடர்பு வைத்திருந்தவர். காங்கிரசுக்குள்ளேயே
ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் உருவாகவும் காரணமாக இருந்தவர். அதனால் தான் பாஜக வல்லபாய்
படேலுக்கு சிலை நிறுவி வழிபடுகிறது. இப்படி காங்கிரஸில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களாக
இருந்தவர்களை சிலையாக நிறுவுதல் என்பது காங்கிரஸின் மதச்சார்பின்மை என்கிற
கருத்தாக்கத்தை உடைக்கிற அரசியலாகவும் பாஜகவிற்குப் பயன்படும்.
---------------------
306 - 02.11.2018
பெண்ணின்
திருமண வயது 12
1929 இல் பெண்களின் திருமண வயதை 10 இல் இருந்து 12 ஆக உயர்த்தும் போது கடுமையான எதிர்ப்புகள் இருந்தன. நாடு
கெட்டுப்போய் விடும்,
குடும்பம் என்கிற அமைப்பு சிதைந்துவிடும் என்று நன்கு
படித்த வகுப்பினர்களே எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள். இது அன்றைய பிரிட்டீஸ் அரசுக்குக்
கூட நெருக்கடியாக இருந்தது. பெண்கள் பக்கமிருந்து இது குறித்து எந்தவொரு
நிலைப்பாடும் பொதுச் சமூகத்தை நோக்கி வரவே இல்லை. இந்தச் சூழலில் தான் ருக்மாபாய்
என்கிற பெண்மணி முக்கியமானவராகிறார்.
கணவருடனான மனக்கசப்பில் கணவரை விட்டுத் தனியாக வாழ்ந்தார் ருக்மாபாய். அவரது கணவர் நீதிமன்றத்தை நாடினார்.
தம்முடைய மனைவியோடு சேர்ந்து வாழ தான் விரும்புவதாவும் மனைவியை தம்முடன் சேர்த்து
வைக்குமாறும் முறையிட்டார். நீதிமன்றம் ருக்மாபாய்க்கு சாதகமாக இல்லை. அவரது
கணவருக்கே சாதகமாக இருந்தது. ருக்மாபாய் கணவனுடன் வாழ மறுத்தார். நீதிமன்றம்
அவரைச் சிறையில் அடைத்தது. வரலாற்றில் பெண்ணுரிமையை ஆதரித்து, ஆண்களின் ஆதிக்கச் சிந்தனையை எதிர்த்து சிறை சென்ற முதல்
இந்தியப் பெண்ணாக அறியப்படுகிறார் ருக்மாபாய்.
---------------------
307 - 03.11.2018
கப்பல்
இயக்காத மாலுமி
மாலுமி
என்றாலே கப்பலை ஒட்டுகிறவர் என்று தான் பொருள். ஆனால் வரலாற்றில் கப்பலே ஓட்டாத
ஒருவர் மாலுமி என்று அழைக்கப்படுகிறார். அவர்தான் போர்ச்சுக்கல் மன்னர் ஹென்றி.
புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் அந்த எண்ணம் கொண்டோரை
ஆதரிப்பவராகவும் இருந்தார். ஆப்பிரிக்கா கண்டத்தைத் தாண்டி பூகோலத்தின்
கிழக்குப்பகுதியில் நாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அவரது வாழ்நாள்
குறிக்கோளாக இருந்தது. அதற்காக மாலுமிகளின் பயிற்சிப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார்.
புகழ்வாய்ந்த கப்பல் வடிவமைப்பாளர்களை அழைத்து நீண்ட தூரம் தொடர்ச்சியாக இயங்கக்
கூடிய கப்பல் ஒன்றை வடிவமைத்துக் கொடுக்கும் படி கேட்டுக்கொண்டார். இவரது அயராத
முயற்சியினால் போர்ச்சுக்கல்லில் இருந்து சுமார் 1200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அசோர்ஸ், மெடிரா போன்ற தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடல்வழிகளைக் கண்டுபிடிப்பதிலும்
மாலுமிகளை உருவாக்குவதிலும் தனி விருப்பம் உடையவராக இருந்த காரணத்தினாலேயே மன்னர்
ஹென்றி ‘மாலுமி’ என்கிற
அடைமொழியால் குறிக்கப்படுகிறார்.
---------------------
308 - 04.11.2018
அதிகாரம்
சொல்லும் செய்தி
அமெரிக்காவில்
ஆப்ரஹாம் லிங்கனுக்குப் பிறகு துணை குடியரசுத் தலைவராக இருந்து குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு வந்த
ஜான்ஸன் தொழிலாளர்கள் மீது அளவு கடந்த அன்புகொண்டவராகவே இருந்தார். தொழிலாளர்களின்
நலனே தேசத்தின் நலன் என்று செல்லும் இடங்களில் எல்லாம் பேசிக்கொண்டே இருந்தார்.
அதற்காகவே தனது அதிகாரங்களைப் பயன்படுத்தினார். அதற்குக் காரணம். ஜான்ஸனுக்கு
அவரது குடியரசுக் கட்சியினர் மட்டுமின்றி விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பு மக்களும் ஆதரவு வழங்கினர்.
இந்தப் பின்னணியில் தான் ஆப்ரஹாம் லிங்கன் செய்த அடிமை ஒழிப்பு பிரகடனத்தில் 1865 இல் 13 வது
திருத்தம் செய்யப்பட்டது. 1866 இல் 14 வது திருத்தமும்
மேற்கொள்ளப்பட்டது. இது வெறும் சாதாரண திருத்தம் மட்டுமல்ல. ஆப்ரிக்க
அமெரிக்கர்களுக்கு வாக்குரிமைக்கு வழி வகுத்த திருத்தம். இதற்குக் குடியரசுத் தலைவர் ஜான்ஸன் மட்டும் காரணமல்ல. பெருவாரியான அமெரிக்க
மக்களும் காரணமாக இருந்தார்கள். அடுத்தடுத்து நல்ல ஆட்சியாளர்களும் சக மனிதர்களை
மதிக்கின்ற மக்களும் ஒரே நேரத்தில் வாய்த்துவிட்டால் அடிமைகள் இல்லாத தேசத்தை
உருவாக்கி விடலாம் என்பது தான் ஜான்ஸனின் அதிகாரம் சொல்லும் செய்தி.
---------------------
309 - 05.11.2018
புதுவித
முரண்பாடு
இன்றைக்கு
எல்லாராலுமே நன்றி என்கிற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏறக்குறைய அது ஓர்
அடிப்படை ஒழுக்கமாகவே ஆகிவிட்டது. நன்றி சொல்லாதது சில நேரங்களில் கடும்
விமர்சனத்திற்கு உள்ளாவதுடன் பண்பாடற்ற செயலாகவும் கூட பார்க்கப்படுகிறது.
மனிதர்கள் எல்லோருக்கும் நன்றி என்கிற சொல்லை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு வித மயக்கம்
இருக்கத்தான் செய்கிறது. அந்த மயக்கத்திற்கு மனிதமனம் பழக்கப்படுத்தப்பட்டு
விட்டது. இப்படி நன்றி என்கிற சொல் உள்ளிட்ட பல சாதாரண சொற்களில் மயங்குகின்ற
மனதோடு தான் மனிதனின் நவீன வாழ்க்கை பின்னப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட
சொற்களுக்கு மயங்கும் இன்றைய நவீன வாழ்க்கையில் எதிர்பார்ப்பு அடிப்படையில்
உருவாக்கப்படுகிற புதுவித சமூக முரண்பாட்டை தமிழ்ச் சமூகத்தில் ஐம்பதாண்டுகளுக்கு
முன்பே மிகச் சரியாகக் கணித்தவர் தந்தை பெரியார் மட்டும் தான். அந்த புதுவித
முரண்பாடு உற்பத்தி செய்யும் சிக்கலை உடைக்கும் விதமாகத் தான் தந்தை பெரியார் ‘1967 மார்ச் மாதம் 29 ஆம் தேதி விடுதலை பத்திரிகையில் எப்போதும் நான் நன்றி பெறுவதில் கவலைப்படுவதே
இல்லை. மனித ஜீவனிடம் நன்றி எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மையே ஆகும் என்று
எழுதினார்.
---------------------
310 - 06.11.2018
தீபாவளி கதை
பண்டிகைகள்
என்றாலே மகிழ்ச்சியோடு தொடர்புடையவை. பெரும்பாலும் அவை வேளாண்மையோடும் சமயத்தோடும்
தொடர்புடையனவாக இருக்கும். சமயத்தைப் பொறுத்தவரை சமயத்தை நிறுவியவர்களின்
பிறப்பும் முக்தியும் கொண்டாடப்படும். உதாரணமாக கிறித்தவம், பௌத்தம், சீக்கியம்
முதலிய சமயம் சார்ந்த பண்டிகைகளைச் சொல்லலாம். சமண மதம் மகாவீரர் முக்தி
அடைந்ததைத் தான் தீபாவளி என்கிறது. அயோத்திதாசர் மக்கள் ஒவ்வொரு கண்டுபிடிப்பையும்
கொண்டாடினார்கள். அந்த வழக்கப்படி எண்ணெய் கண்டுபிடித்ததை தீபமேற்றி
கொண்டாடினார்கள். அது தான் தீபாவளி என்கிறார். இந்தக் கருத்தியல்கள் எல்லாம்
தீபாவளியை மங்களமாகச் சித்திரிக்கிறது. ஆனால் தீபாவளியை நரகாசுரனோடு
தொடர்புபடுத்துகிற கதை ஒருவரின் மரணத்தை இன்னொருவரின் வெற்றியாகச்
சித்திரிக்கிறது. அமங்களமாக இருக்கிறது. இதுதான் அரசியல். ஒருவரின் மரணம்
ஒருவருக்கு கொண்டாட்டமாக இருக்கிறது என்றால் கொல்லப்பட்டவர் யார்? ஏன் கொன்றார்கள்? கொன்ற பின் கொன்றவர்கள் அடைந்த பயன் என்ன? என்கிற கேள்விகளைக் கேட்டு நியாயமாக பதில் தேடினால் அந்த அரசியல் பிடிபடும்.
கூடவே கதைகளைக் கூட வரலாறு போல திரித்துச் சொல்கிறவர்களை இனம்காண வேண்டும்.
அதுதான் பகுத்தறிவு. மனிதனுக்கு அழகு.
---------------------
311 - 07.11.2018
ஹிப்பாலஸர்
சொற்களும்
சொற்களுக்குப் பின்னால் இருக்கிற வரலாறும் ஏராளமான ஆச்சரியங்களைக் கொண்டிக்கின்றன.
உருவாக்கப்பட்ட சொற்களின் சமூகப் பண்பாட்டு வரலாற்று ஆய்வுகள் பெருகினால் இன்னும்
பல புதிய உண்மைகளைக் கண்டடைய முடியும். ஒரு சொல் உருவாகி அது அகராதியில் இடம்
பெற்ற வரலாறு கூட பல உண்மைகளைப் பேசுவதாக இருக்கிறது. அந்த வகையில் ‘ஹிப்பாலஸ்’ என்கிற சொல்
குறிப்பிடத்தக்கது. ‘ஹிப்பாலஸ்’ என்பது
தொடக்கத்தில் காற்றைக் கண்டு பிடித்தவரைக் குறித்தது. பிறகு பருவக்காற்றைக் குறிப்பிடுவதற்காக
அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது. அந்தச் சொல்லில் இருந்து உருவான ‘ஹிப்பாலஸர்’ என்கிற சொல் தற்பொழுது பருவகாலக்
காற்றைப் பயன்படுத்தி கடல் பயணம் மேற்கொண்டவர்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
அதிகமாகப் பரவலாகாத இந்தச் சொல்லை ரொமிலா தாப்பர் முதலிய வரலாற்று ஆய்வாளர்கள்
தமது ஆய்வுகளில் அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். வேறுசில ஆய்வாளர்களால்
ஹிப்பாலஸர் என்கிற சொல் பெருமளவில் எகிப்தியார்களைக் குறிக்கப்
பயன்படுத்தப்பட்டாலும் பருவகாற்றை பயன்படுத்தி கடல் பயணம் செய்த அனைவரையுமே
குறிப்பது பொது வழக்காக இருக்கிறது.
---------------------
312 08.11.2018
எரிபடும்
புத்தகங்களும் மனிதர்களும்
1933 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி நாஜி கட்சியைச் சார்ந்த இளைஞர்கள் ஹிட்லர் வாழ்க
என்ற முழக்கத்தோடு பெர்லின் நகரத்தில் ஜெர்மானிய பண்பாட்டுக்கு எதிரானவை என்று
கூறி 20 ஆயிரம் புத்தகங்களை எரித்தார்கள். எரிக்கப்பட்ட
புத்தகங்களில் கம்யூனிஸம்,
அறிவியல், மனிதநேயம், கருத்துச் சுதந்திரம் முதலியவற்றை வலியுறுத்திய
புத்தகங்களும் அடக்கம். அதைத்தான் அவர்கள் ஜெர்மானிய பண்பாட்டுக்கு எதிரானவை என்று
கருதினார்கள். அந்த புத்தக எரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாஜிக் கட்சியின்
அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸ் நாஜிக் இளைஞர்களைப் பார்த்து அதீத யூத அறிவுவாதம்
இப்பொழுது முடிவுக்கு வந்துவிட்டது. தீய ஆன்மாவை தீ நாக்குகளுக்கு அனுப்புவதை
நன்றாகச் செய்துள்ளீர்கள் என்று பேசினார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தான் ஆல்பர்ட்
ஐன்ஸ்டின்,
தாமஸ் மான், பால் டில்லிக்,
ஜார்ஜ் க்ரோஸ் உள்ளிட்ட பல அறிஞர்கள் ஜெர்மனியை விட்டு
வெளியேறினார்கள். இந்த நிகழ்வை ஒட்டித்தான் ஜெர்மானிய புரட்சிக் கவிஞரான ஹைன்ரிஷ்
ஹைனே என்பவர் ‘எங்கெல்லாம் புத்தகங்கள்
எரிக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் மனிதர்களும் எரிக்கப்படுவது நிச்சயம்’ என்றார்.
---------------------
313 - 09.11.2018
நான்காம் யுக
வணிகம்
தொழிற்புரட்சியில்
தற்போது நான்காம் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வின் அனைத்துப்
பகுதிகளும் இணையத்தோடு பிணைக்கப்பட்டு விட்டன. இணையத்தைப் பயன்படுத்துகிறவர்கள்
எல்லாம் யாரோ ஒருவரால் எங்கிருந்தோ கண்காணிக்கப்படுகிறார்கள். அந்த அளவுகளுக்கு
ஒவ்வொருவரின் இணைய நடவடிக்கைகள் ஓரிடத்தில் குவிந்துகொண்டே இருக்கின்றன. 1990களில் ஒரு நொடிக்கு இணையத்தில் பரிமாறப்பட்ட தகவல்கள்
வெறும் 100 ஜி.பி. மட்டும் தான். இன்றைக்கு ஒரு நொடிக்கு 80000 ஆயிரம் ஜி.பி.யாக மாறியிருக்கிறது. உலக மக்கள் அனைவரும்
பகிர்ந்துகொள்ளும் ஒருநாள் தகவல்களை மட்டும் வீடியோவாக மாற்றி ஓடவிட்டால் தங்கு
தடையின்றி 90 வருடங்களுக்கு ஓடும். அந்தளவுக்கு தகவல் பகிர்வுகளுக்கு
மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதன்வழி மக்களின் மருத்துவக் குறிப்புகள், நீதிமன்ற உத்தரவுகள், இராணுவ நடவடிக்கைகள்,
அந்தரங்கம், குற்றச் செயல்கள் என அனைத்தையும் நவீன முதலாளிகள் இலவசமாகவே சேகரிக்கிறார்கள்.
அதைப் பகுத்தாய்ந்து ஒருவருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து சந்தையைப்
பெருக்குகிறார்கள். உதாரணமாக தங்கத்தின் இன்றைய விலையை நாம் கூகுலில் தேடினால் நம்
வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் நகைக்கடையில் இருந்து விலைப்பட்டிலோடு ஏஜெண்ட்
வந்துவிடுகிறார். அந்தளவுக்குச் சந்தையை வளர்த்து விட்டார்கள். கண்காணிக்கிறார்கள்.
---------------------
314 - 10.11.2018
விஞ்ஞானிக்குள்
போராளி
உலகின்
மிகச் சிறந்த விஞ்ஞானிகள் என்று முப்பது பெயர்களைக்கொண்ட பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் அதில் முதல் இருபது
இடங்களில் யூதர்கள் இருப்பார்கள். அந்த பட்டியலில் தவறாது இடம் பெறக்கூடிய
ஆல்பார்ட் ஐன்ஸ்டீனை எல்லோருமே அறிந்திருப்பார்கள். ஆனால் அவர் முக்கியமான மனித
உரிமைப் போராளி என்பதை வெகுசிலரே அறிந்திருக்க வாய்ப்புண்டு. உலக சமாதானத்திற்காக
அவர் எழுதியதும் பேசியதும் இன்றைக்கு எராளமாகக் கிடைக்கின்றன.1933 இல் அமெரிக்காவிற்குள் தஞ்சம் புகுந்த அவர் 1955 வரை வாழ்ந்தார். தான் தஞ்ச வாழ்க்கை வாழ்கிறோம் என்ற
எண்ணத்தைக் கூட மறந்துவிட்டு அப்போது ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்காக குரல்
கொடுத்தார். அது வெறும் குரல் அல்ல. ஓர் அடிமையின் நிலையை ஓர் அகதி புரிந்துகொண்டதன் வலிதான் அது. 1960 இல் அமெரிக்க ஆப்பிரிக்கர்களின் ஆயுதப் பேரெழுச்சி ஏற்பட்டதில் ஐன்ஸ்டீன் இன்
பங்கும் இருந்தது. மக்களின் பிரச்சினைகளைப் பேச அவர்களின் தலைவனாக இருக்க வேண்டும்
என்ற அவசியம் இல்லை. அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்ட யாராகவும் இருக்கலாம்
என்பது தான் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை நமக்குச் சொல்கிற செய்தி.
---------------------
315 - 11.11.2018
கோயிலும்
குடியும்
‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றொரு
பழமொழி உண்டு. இதைச் சற்று ஆழ்ந்து ஊற்று நோக்கும் போது அதற்குள் உழைப்பைச்
சுரண்டும் வித்தை மறைந்திருப்பதைக் காண முடியும். இச்சொற்றொடர் குறித்து சில
கேள்விகளை எழுப்பினால் நல்ல பதில்கள் ஏராளமாகக் கிடைக்கும். குடியிருப்பதற்கு
நிலமும் தண்ணீரும் தானியமும் போதும் என்பது தான் நியாயமானது. அதுதான் வாழ்வின்
அடிப்படைத் தேவை. வாழ்ந்து விடலாம். கோயில் இருப்பதால் நிலமோ, தண்ணீரோ, தானியமோ
கிடைத்துவிடப் போவதில்லை. அப்படி
இருந்தும் இந்தச் சொற்றொடரில் கோயிலை முக்கியமானதாகக் காட்டியிருக்கிறார்கள்.
கழிவறையே இல்லாமல் வாழ்கிற நம்மால் கோயில் இல்லாமல் வாழ முடியாதா என்ன? இருந்தாலும்
அதை ஊதிப் பெரிதாக ஆக்கியிருக்கிறார்கள். அப்படி ஆக்கியது யார்? என்பது தான் நமக்கான கேள்வி.
இந்தச் சொற்றொடர் ஓர் உழவன் சக உழவனைப் பார்த்தோ, ஒரு தொழிலாளி சக தொழிலாளியைப் பார்த்தோ, ஒரு நேர்மையாளன் சக நேர்மையாளனைப் பார்த்தோ சொன்னதாகத்
தெரியவில்லை.
---------------------
316 - 12.11.2018
குண்டட்டா
வேட்டை
பதினெட்டாம்
நூற்றாண்டில் பின்பகுதியில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டின் ஐப்பூர்
என்ற சிற்றூரை ஒட்டிய அடந்த காட்டில் அதுவரை இல்லாதிருந்த அமெரிக்காவை
உருவாக்குவதற்காக வெள்ளையர்களுக்குத் தேவையான அடிமை வேட்டையில் முதல் மனிதனாக
வேட்டையாடப்பட்டவன் தான் குண்டட்டா. அவனுக்குப் பிறகே அடிமை வேட்டை பெருகியது.
வெறும் நாற்பது ஆண்டுகளில் 40 ஆயிரம்
மனிதர்கள் வேட்டையாடப்பட்டு அடிமையாக்கப்பட்டு இருந்தார்கள். குண்டட்டாவின்
வம்சாவழியைச் சார்ந்த எழுத்தாளர் அலெக்ஸ்ஹேலி என்பவர் தம்முடைய ஏழுதலைமுறைகள் என்ற
நூலில் இப்படி எழுதுகிறார். ‘வேட்டை நாய்கள் குண்டட்டா மீது ஏவி விடப்பட்டது.
வெள்ளைக்காரனின் அச்சமூட்டக் கூடிய குரலும் சுற்றி வளைத்துக்கொண்டது. தடியடி
தாறுமாறாக விழுந்தது. குண்டட்டா தவழ்ந்து தவழ்ந்து தப்பித்துவிட எத்தனித்தான். அடி
மேலும் மேலும் விழுந்தது. உடலில் உண்டான காயத்தில் இருந்து ரத்தம்
வெளியேறிக்கொண்டிருந்தது. கண்ணில் ரத்தமும் கண்ணீரும் கலந்து வெளிவந்தது.
குண்டட்டா வெறுவழியில்லாமல் சிக்கிக்கொண்டான். அமெரிக்க வெள்ளையர்களுக்கு இதோ
முதல் அடிமை கிடைத்துவிட்டான்’.
---------------------
317 - 13.11.2018
மெய்ப்பொருள்
காண்பவர்
தமிழ்
இலக்கியங்களில் ஒருபாடலில் சொல்லப்பட்ட பொருள் சுருக்கமாக இருக்க அதே பொருள்
இன்னொரு இலக்கியத்தில் விரிவாகவும் தெளிவாகவும் இருப்பதைக் காண முடியும். உதாரணமாக
யார் வழியாகக் கேட்டாலும் அந்தப் பொருளின் உண்மைப் பொருளை அறிந்து கொள்வதுதான்
அறிவு என்கிறார் வள்ளுவர். தான் என்கிற சுயத்தை முன்னிலைப்படுத்துகிற தன்னைச்
சார்ந்து மெய்ப்பொருளை நிறுவிக்கொள்கிற ஒரு தத்துவம் தான் வள்ளுவரின் அந்தக்
கூற்று. வள்ளுவர் மெய்ப்பொருள் என்று சொல்லிச் செல்ல திரிகடுகம் மெய்ப்பொருள்
காண்பதற்கு உரிய தகுதியுடையவர்கள் யார் என்று பட்டியல் இடுகிறது. அதாவது தன்னைத் திட்டிய சொல்லை இனிய சொல்லாக ஏற்றுக்கொள்பவனும், கூழை நெய் பெய்த சோறுக்குச்
சமமாக மதிப்பவனும், கசப்புச் சுவை அதிகமாக இருக்கக்கூடிய ஒரு
பொருளை இனிப்புப் பொருளாகக் கருதி உண்பவனும், மெய்ப்பொருள்
காண்பதற்கு உரியவர்கள் என்கிறது திரிகடுகம். வை’ததனை
இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த சோறுஎன்று கூழை மதிப்பானும் ஊறிய கைப்பதனைக் கட்டி
என்று உண்பவனும் இம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்’
என்பது பாட்டு.
---------------------
318 - 14.11.2018
ஒரு நாள் = 25 மணி நேரம்
கண்டுபிடிப்புகள்
ஒவ்வொன்றும் வியப்பில் ஆழ்த்திவிடும். அதற்கு அப்படி ஒரு ஆற்றல் உண்டு.
கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்ட விதம் குறித்துக் கூட ஏராளமான நாவல்கள் எழுதப்பட்டு
விட்டன. திரைப்படங்களும் வந்திருக்கின்றன. அறிவியல் குறித்து அறிந்துகொள்வதில்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதமின்றி மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு கண்டுபிடிப்பு குறித்து வெளிவந்த
ஆய்வறிக்கையும் கூட அப்படித்தான் அமைந்திருக்கிறது. பிரிட்டானியாவின்
நாடிக்கல் அல்மனாக் மற்றும் தர்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பூமி குறித்த
ஆய்வு முடிவை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் கடந்த 27 நூற்றாண்டுகளாக பூமி சுற்றுவதன் அளவு 2 மில்லி நொடிகள் அதிகரித்து வருவதாகக் கூறியிருக்கின்றனர்.
அவர்கள் கணக்குப்படி இந்த 2 மில்லி நொடிகள் 1 நிமிடமாக மாற இன்னும் 6.7 மில்லியன்
ஆண்டுகள் ஆகும். மேலும் அவர்கள் சொல்கிறார்கள். மிகச் சரியாக இன்னும் 200 மில்லியன் ஆண்டுகள் கழித்து ஒரு நாளின் கால அளவு 25 மணி நேரமாக இருக்கும் எனக் கணித்திருக்கிறார்கள்.
---------------------
319 - 15.11.2018
சுண்டலுக்குத்
தடை
பேராசிரியர்
த.வி.கிருஷ்ணமூர்த்தி சுண்டல் தென் ஐரோப்பாவில் இருந்து குதிரை உணவாகத்தான்
தமிழ்நாட்டுக்கு அறிமுகமானது என்கிறார். சுண்டல் வெளிநாட்டில் இருந்து
கொண்டுவரப்பட்டதாலும் அது குதிரையின் உணவு என்பதாலும் இந்திய பண்டிகைகளிலும்
சடங்குகளிலும் சுண்டல் வழங்கப்படுவதற்கு தொடக்காலத்தில் சாஸ்திர அடிப்படையிலான தடை
இருந்திருக்கிறது. இந்த தடையை ஸ்மிருதி ஆசிரியராகிய விக்னேஸ்வரா என்பவர் தான்
விதித்திருக்கிறார். இந்தக் குறிப்பையுமே பேராசிரியர் த.வி. கிருஷ்ணமூர்த்தி தான்
தம்முடைய தமிழரும் தாவரமும் என்கிற நூலில் குறிப்பிடுகிறார். இதே போல இன்னொரு
செய்தியும் உண்டு. அதாவது கோயிலில் படைக்கப்படுகிற நைவேத்திய உணவில் வெல்லம்
கலப்பதற்கும் தடை இருந்ததை கன்னியாகுமரி அருங்காட்சியத்தில் உள்ள 1494 ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டொன்றால் அறியமுடிகிறது.
காரணம் வெல்லம் தயாரிக்கிறவர்கள் திட்டுக்குரியவர்களாகத் திரித்துக்
கூறப்பட்டதுதான். இன்று அதே நிலைமை இல்லை. நிறைய மாறியிருக்கிறது. கோயில் சுண்டல்
வழங்குவதும் பொங்கலில் வெல்லம் சேர்ப்பதும் ஒரு வழக்கமாக ஆகிவிட்டது. ஆக ஆகாது
என்று தடை செய்யப்பட்ட பொருளான சுண்டலும் வெல்லமும் முக்கியமான சத்தான உணவாக
மாறிவிட்டது. சாஸ்திரங்களை சாதாரண சுண்டலும் வெல்லமும் உடைத்திருக்கிறது.
மனிதர்களால் முடியாதா என்ன?
---------------------
320 - 16.11.2018
மோடியும்
கொத்தவாலும்
மராட்டிய
அரசர்களின் காலத்தில் கோட்டையை காவல் காக்கும் அதிகாரம் படைத்தவரை கொத்தவால் என்று
குறித்திருக்கிறார்கள். அவருக்கான அதிகாரங்கள் என்னவென்பதை மராட்டிய அரசர்கள்
எழுதிவைத்துள்ள மோடி ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஸர்கேல் நீலகண்டராவ் ஜாதவ்ராவ்
என்பவர் 1856 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி எழுதி வைத்த குறிப்பொன்றும் கொத்தவால் அதிகாரம் பற்றி பேசுகிறது.
பணியாளர்களுக்குத் தண்டம் விதித்தல், திருடியவனிடம் வாக்குமூலம் பெற்று நீதிபதியிடம் ஒப்படைத்தல், பணியாளர்களை மாற்றுதல், நகரைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் முதலிய பணிகள் கொத்தவாலின் பொறுப்பில்
இருந்திருக்கின்றன. அரசனுக்கும் நீதிபதிக்கும் இடையில் இருந்து பணியாற்றுதல், அரசனுக்கும் அரச பணியாளர்களும் இடையில் இருந்து
பணியாற்றுதல் என்னும் நிலையில் கொத்தவால் தனி அதிகாரம் பெற்றவராக
இருந்திருக்கிறார் என்று தெரியவருகிறது. பல நேரங்களில் அரசரின் முடிவிலும்
நீதிபதியின் முடிவிலும் கொத்தவாலின் தாக்கம் இருந்திருப்பதையும் மோடி ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
---------------------
321 - 17.11.2018
அமையா துலகு
தமிழகத்தில்
நேற்று வந்து போன கஜா புயலால் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம்
தடைப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் மக்களின் அவதிகளைப் பார்க்கிற போது மின்சாரம்
மக்களின் வாழ்வில் எந்த அளவுக்கு பேரிடம் பெறுகிறது என்பதை உணர முடிகிறது.
மக்களின் எல்லாத் தேவைகளும் எந்திரங்களைச் சார்ந்திருக்கிற காரணத்தினால் தான்
மின்சாரம் அற்ற உலகம் மனித இயங்கியலை முடக்கிப்போடுகிறது. அதனால் தான் உலகத்தின்
பெருமுதலாளிகள் தண்ணீருக்கு அடுத்து மின்சாரத்தில் முதலீடு செய்கிறார்கள். எதிர்காலத்தில் தண்ணீரும் மின்சாரமும்
தான் வணிகத்தில் முன்னிலை வகிக்கும். அரசியலையும் அரசியல் தலைவர்களையும் கூட
தீர்மானிக்கும் என்கிறார்கள் சமூக விஞ்ஞானிகள். நாவல் குமாரகேசன் கவிதை ஒன்று இந்த
இடத்தில் பொருத்தமாக இருக்கும். அவர் எழுதுகிறார் இப்படி
‘மிக்ஸியில் போட்ட தேங்காய் அப்படியே இருக்கிறது.
உளுந்து
ஆட்டிய கிரைண்டர் பகுதியுடன் நிற்கிறது.
துணியுடன்
வாசிங்மிசின் செயலிழந்து போனது.
மேல்நிலைத்
தொட்டியில் ஒரு பொட்டுத் தண்ணியில்லை
சன்னலைத்
திறந்து வைத்தும் வீட்டில் இருக்க முடியவில்லை.
தொடர்வரும்
நேரத்தில் தொலைந்தது சனியன்.
போனவாரம்
போன கணவனைவிட
காலையில்
ஸ்கூல் போன பிள்ளையைவிட
சற்றுமுன்
போன மின்சாரத்தைத்தான்
வீடு
தவறாமல் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்’.
---------------------
322 - 18.11.2018
சித்தாந்த
முரண்
உலகம்
முழுவதும் மே மாதம் முதல் தேதி உழைப்பாளர் தினமாகக் கொண்டாடப்பட்டாலும் சில
நாடுகள் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக முதலாளித்துவ நாடுகளும்
முதலாளித்துவ நாடுகளின் ஏவல் நாடுகளும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம்
அந்தந்த நாடுகள் பிராந்திய முக்கியவத்துவம் வாய்ந்த வேறோரு நாளை
முன்னிருத்துகின்றன. இன்னொரு காரணம் மே முதல் தேதி இடதுசாரி சிந்தனையாளர்களோடு
பிணைந்து இருப்பது. இடதுசாரிகள் எங்கெல்லாம் எதிரானவர்களாகச்
சித்திரிக்கிறப்படுகிறார்களோ அங்கெல்லாம் கம்யூனிஸமும் மே தின கொண்டாட்டமும்
தவிர்க்கப்பட்டு வருகின்றன.
கம்யூனிஸத்தின்
மீது அதிகமான வெறுப்பைக் கொண்டுள்ள அமெரிக்கா மே முதல் தேதியை சட்ட தினமாகவும்
விசுவாச தினமாகவும் கொண்டாடுகிறது. உண்மையில் அமெரிக்காவின் நோக்கம் சட்ட
தினத்தைக் கொண்டாடுவதல்ல. உழைப்பாளர்கள் தினத்தை மக்கள் கொண்டாடி விடக்கூடாது
என்பது தான். இந்தியாவில் கூட மே முதல் தேதியை தவிர்த்துவிட்டு விஸ்கர்மா பிறந்த
தினத்தைத்தான் உழைப்பாளர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற கருத்து நீண்டகாலமாக
முன்வைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் மே முதல் நாள் மகாராஷ்டிர
தினமாகக் கொண்டாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
---------------------
323 - 19.11.2018
டேபோரா கேனெட்
18 ஆம் நூற்றாண்டின் பிறர்பகுதியில் நடைபெற்ற அமெரிக்காவின் சுதந்திரப் போரில்
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டனர். அமெரிக்க வெள்ளையர்களும்
சரி பிரிட்டீஸ் வெள்ளையர்களும் சரி ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் யார் பக்கம் ஆதரவாக
இருக்கிறார்களோ அவர்களே போரில் வெற்றியைப் பெறுவார்கள் என்பதை நன்கு
உணர்ந்திருந்தனர். ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் அமெரிக்க வெள்ளையர்கள் வெற்றி
பெற்றுவிட்டால் தங்களுக்குச் சுதந்திரம் கிடைத்துவிடும். அடிமைநிலை ஒழிந்துவிடும்
என்று கருதினர். அதனால் முழு ஈடுபாட்டுடன் போரில் பங்கெடுத்தனார். அவர்கள் எவ்வளவு
ஈடுபாடு கட்டினார் என்பதற்கு உதாரணம் தான் டேபோரா கேனெட். இவர் ஒரு பெண்மணி.
போரில் பிரிட்டீஸ்,
அமெரிக்க பெண்கள் யாருக்கும் போரில் ஈடுபட அனுமதி இல்லாத
காலத்தில் டேபோரா கேனெட் ராபர்ட் ஷூர்லிஃப் என்ற ஆண் பெயரைச் சூட்டிக்கொண்டு
மாறுவேடத்தில் போரில் ஈடுபட்டார். மாஸாச்சுஸெட்ஸ் என்கிற படைப்பிரிவில்
ஒருவருடத்திற்கு மேலாக ஆண்களுக்கு நிகராக பணியாற்றினார். இந்தச் சம்பவம் பல
ஆண்டுகளுக்குப் பிறகே தெரியவந்தது. அவரை அங்கீகரிக்க வேண்டும் என நினைத்த அரசு
அவருக்காகவே சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானத்தை இயற்றி பரிசுத்தொகை வழங்கிச்
சிறப்பித்தது.
---------------------
324 - 20.11.2018
மாமன்னர்
போற்றுதும்
பதினெட்டாம்
நூற்றாண்டில் இந்தியாவை ஆண்டவர்களில் முக்கியமானவராகவும் நிருவாகத்திறமை
கொண்டவராகவும் மக்கள் நலனின் அக்கறை கொண்டவராகவும் முற்போக்குச்
சிந்தனைகொண்டவராகவும் விளங்கியவர் திப்பு சுல்தான். அவர் பிறப்பால் இஸ்லாமியராக
இருந்தபோதிலும் அனைவரது சமய உணர்வுகளையும் மதித்தவர். சமுதாயத்தில் புரையோடிக் கிடந்த
பிற்போக்குச் சிந்தனைகளை களைந்தவர். கோயிலில் நரபலி கொடுக்கும் சடங்கை முற்றியலும்
தடை செய்த திப்புசுல்தான் மனிதனை மனிதனே கடவுளின் பெயரால் பலியிடும் வழக்கம்
கொடுமையானது என்பதை உணர்த்திக்கொண்டே இருந்தார். பெண்களின் உணர்வுகளையும்
உரிமைகளையும் புரிந்துகொண்ட அவர் தேவதாசி முறையை எதிர்த்தார். காலத்திற்குத்
தகுந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வதுதான் மனிதனின் பக்குவநிலை என்பதை வலியுறுத்திய
திப்புசுல்தான் போரில் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தினார். வேளாண்மையில் நவீன
கருவிகளைப் புகுத்தினார். திப்பு சுல்தான் பிரிட்டீஸ் படைகளைவிட பழைமைவாதத்தையை
தமது முதன்மை எதிரியாகக் கருதினார்.
மக்கள் அதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் விரும்பினார். அவரது பிறந்த நாள்
இன்று.
---------------------
325 - 21.11.2018
ஆக்கிரமிப்பின்
முகம்
இன்றிலிருந்து
மிகச் சரியாக 700 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1318 ஆண்டில் குஸ்றுகான் என்பவர் மதுரையைத் தாக்கினார். அப்போது
மதுரையில் ஆட்சியில் இருந்த அரசன் பராக்கிரம பாண்டியன் காட்டிற்குள் தப்பி
ஓடிவிட்டார். அவருக்கு ஆலோசகராக இருந்த மலிக்குல் அஃலம் சிராஜுதீன் என்பவர் தனது
அரசரைப் போல எங்கும் தப்பி ஓடிவிடவில்லை. காரணம் தம்முடைய மதத்தினரே படையெடுத்து
வருவதால் தன்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று நம்பினார். ஆனால் நடந்தது வேறு.
குஸ்றுகான் சிராஜூதினைக் கொன்று அவருடைய சொத்துகளைக் கைப்பற்றிக் கொண்டார். அதோடு
மட்டுமின்றி சிராஜூதின் இன் மகள் அழகாய்
இருக்கிறாள் என்பதற்காக குஸ்றுகான் திருமணம் முடித்துக்கொள்ளவும் விரும்பினான்.
அந்தப் பெண்ணோ தந்தையைக் கொலை செய்தவனை திருமணம் செய்ய விரும்பாமல் தற்கொலை
செய்துகொண்டார். ஆக்கிரமிப்பாளர்கள் தனது மதம், இனம் என்றெல்லாம் பார்த்து இரக்கப்பட்டுக்கொண்டெல்லாம் இருக்க
மாட்டார்கள். அவர்களின் குறிக்கோல் இருப்பதையெல்லாம் எப்படி தனதாக்கிக் கொள்வது
என்பதாகவே இருக்கும் என்பதைத் தான் இச்செய்தி குறிப்பிடுகிறது.
---------------------
326 - 22.11.2018
ஸ்மார்ட் ஜொர்னலிஸம்
சமுதாயத்தின்
நான்காவது தூண் என வர்ணிக்கப்படுகிற பத்திரிகைத் துறை இன்றைக்கு மிகப்பெரிய
வளர்ச்சியையும் புதிய பரிமாணங்களையும் பெற்றிருக்கிறது. தொடக்கத்தில் அச்சு ஊடகமாக
இருந்த பத்திரிகை படிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே பயன்படுவதாக இருந்தது.
இந்தநிலை இன்று முற்றாக மாறிவிட்டது. ஜெர்னலிஸம் என்கிற துறை இன்றைக்கு அச்சு
ஊடகம் என்பதாக மட்டும் இல்லை. குரல் வடிவமாக, காட்சி வடிவமாக மாறிவிட்டது. இது நிகழ்ந்து ஏறக்குறைய 60 ஆண்டுகள்
நிறைவடைந்துவிட்டாலும் அதனுடைய அடுத்த கட்டமாக வளர்ந்திருப்பது தான் ஸ்மாட்
ஜெர்னலிஸம். இந்த ஸ்மாட் ஜெர்னலிஸத்திற்கென்று தனி வரையறைகள் உருவாக்கப்பட்டு அது
தனியொரு துறையாகவும் கருதப்படுகிறது. சில நிமிடங்கள் ஓடக்கூடிய காட்சித்
துணுக்குகள்,
குரல் துணுக்குகள், மீம்ஸ்,
நிலைத் தகவல்கள் ஆகியன ஸ்மாட் ஜெர்னலிஸத்துக்குள்
கொண்டுவரப்பட்டிருக்கின்றன. வரும் காலத்தில் தனிமனிதனின் மனநிலையை வடிமைப்பது
முதல் தேர்தல் முடிவுகள் வரை ஸ்மார்ட் ஜெர்னலிஸத்தின் தாக்கம் இருக்கும் எனக்
கணித்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தேர்தலில் வெற்றி
பெறுவதற்குக் கூட ஸ்மார்ட் ஜெர்னலிஸம் ஒருவகையில் காரணமாக இருந்தது என்கிறார்கள்
ஊடகவியலாளர்கள் .
---------------------
327 - 23.11.2018
டவர் ஆஃப் சைலன்ஸ்
பார்ஸி
சமயத்தைச் சார்ந்தவர்கள் மிகப்பெரும் தொழில் அதிபர்களாக இருக்கிற அதே சமயத்தில்
ஆழமான நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். உதாரணமாக
பார்ஸியர்களின் அடக்கச் சடங்கையும் அது குறித்த நம்பிக்கைகளையும் குறிப்பிடலாம்.
அவர்கள் சடலத்தைப் புதைப்பதில்லை. மண் மாசுபடும் என்று நம்புகிறார்கள். நதியில்
விடுவதில்லை. நீர் மாசுபடும் என்கிறார்கள். எரித்தால் காற்று மாசுபடும்
என்கிறார்கள். ஆதலால் கழுகுகளுக்கு உணவாக வைத்துவிடுகிறார்கள். மும்பையில்
இதற்காகவே ஓர் இடம் இருக்கிறது. நகருக்கு வெளியே இரண்டடுக்கு கட்டிடத்திற்கு மேலே 50 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தின் உச்சிக்குச் சடலத்தைத்
தூக்கிச் சென்று வைத்துவிடுவார்கள். கழுகுகள் வந்து உண்ணும். இந்த கோபுரத்தைத்
தான் ஆங்கிலத்தில் ‘டவர் ஆஃப் சைலன்ஸ்’
என்கிறார்கள் பார்ஸியர்கள். கழுகுகள் தின்று தீர்க்கும் வரை ஏறக்குறைய ஓராண்டு வரை
உடல் அந்த கோபுரத்திலேயே இருக்கும். தற்போது கழுகுகள் எண்ணிக்கைக் குறைந்து
வருவதால் மாற்றுவழி நோக்கி பார்ஸியார்கள் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள். சோலர்
அடுப்பு,
நெருப்பை உருவாக்கும் சூரியக் கண்ணாடிகள் முதலியவற்றை
பெருமளவில் நாடுகிறார்கள்.
---------------------
328 - 24.11.2018
பகை
முடிக்கும் படை
பகை
இல்லாத வாழ்வே சிறந்தது என்கிற சிந்தனைப் போக்கு சில அறிஞர்களால்
முன்வைக்கப்படுகிறது. பகை வாழ்க்கைக்குத் தேவை. அது தான் வாழ்க்கை என்றால் என்ன
என்பதையே தீர்மானிக்கிறது என்கிற சிந்தனையும் வேறு சில அறிஞர்களால்
முன்வைக்கப்படுகிறது. இந்த இரண்டு சிந்தனைகளில் முன்னைய சிந்தனையை விட பிந்தைய
சிந்தனைதான் மனதோடு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. காரணம் யாரும் எந்த சூழலிலும்
பகை உருவாகாமலோ இல்லாமலோ வாழ்ந்துவிட முடியாது. கூட்டுச் சமுதாய உலகில் பகையின்றி
வாழ்த்தல் என்பது சாத்தியமற்றது. பல நேரங்களில் பகையை வெல்வது தான் வாழ்க்கை
என்பதாகக் கூட அமைந்துவிடும். இந்த பகையோடு இயைந்து வாழ்கிற வாழ்க்கையில் பகையை
எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு வள்ளுவர் அழகான வழியொன்றைக்
குறிப்பிடுகிறார். அதாவது பொருள் இருந்தால் பகையை வெற்றி கொண்டுவிடலாம். பொருள்
தான் பகையை முடிக்கும் சிறந்த படை என்கிறார் வள்ளுவர். ‘செய்கை பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃதனில் கூரிய தில்’ என்பது அக்குறள்.
---------------------
329 - 25.11.2018
இப்படியும்
தலைவார்
ஊழல்
எல்லாக் காலத்திலும் இருந்தே வந்திருக்கின்றன. ஆனால் அதில் கறை படியாதவர்கள்
வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்பதையும் வரலாற்றில் காண முடிகிறது. இந்திய
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பம்பாய் மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்த
போது அவருடைய மகள் இந்து என்பவர் மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு எழுதினார். அவர்
நன்றாகப் படிக்கும் திறமையுள்ளவர் என்பதால் அவர் தான் முதல் மதிப்பெண் பெற்று
தேர்ச்சி பெறுவார் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தனர். தேர்வு முடிவு
வெளிவந்தது. இந்து தேர்ச்சி பெறவில்லை. தந்தையிடம் சென்று முறையிட்டார். மொரார்ஜி
தேசாய் அவர்களோ நீ நன்றாய்த் தான் தேர்வு எழுதியிருப்பாய் என்று எனக்குத்
தெரியும். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து தேர்வுத்தாளைத் திருத்திய ஆசிரியரின் குறை
கண்டுபிடிக்கப்பட்டு உனக்கு வரவேண்டிய மதிப்பெண்ணைப் பெற்று தேர்ச்சி அடைந்தாலும்
பொதுமக்கள் கண்ணில் நான் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவே தெரியும். ஆக நீ
இன்னொரு முறை தேர்வை எழுதி வெற்றி பெற்று மருத்துவத்தில் சேர்ந்துகொள் என்று
அறிவுரை வழங்கினார். மகள் தேர்வு தந்த தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார்.
வரலாற்றில் நேர்மையான வாழ்க்கைக்கு மகளைப் பறிகொடுத்தவர்களும் இருக்கிறார்கள்.
---------------------
330 - 26.11.2018
காயடிப்பு
அரசியல்
எல்லோருமே
திறமையானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் எல்லாரது
திறமைக்கும் சரியான நேரத்தில் அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால் இல்லை. அதற்காக பல
படிநிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. போராட வேண்டியிருக்கிறது. சூழ்ச்சிகளை
எதிர்கொள்ளும் மனநிலை வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் தாண்டித் தான் முன்னிலைக்கு
வர முடிகிறது. அப்படித்தான் வந்தும் இருக்கிறார்கள். குறிப்பாக விளையாட்டு துறையை
எடுத்துக்கொண்டால் மக்களும் சரி,
அதிகாரமும் சரி கிரிக்கெட்டிற்கு தரும் ஆதரவை ஏனைய விளையாட்டுகளுக்குக்
கொடுப்பதில்லை. இதனாலே ஏனைய திறமையான விளையாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் புகழ்வெளிச்சமோ, ஊடகவெளிச்சமோ, பணப்பரிசோ மிகவும் குறைவாக இருக்கிறது. சமீபத்தில்
டெல்லியில் நடந்த உலக குத்துச்சண்டைப் போட்டில் 6 - வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார் மேரி கோம். வடகிழக்கு மாநிலமான
மணிப்பூரைச் சார்ந்த இவர் ஆறு வெற்றிகளுக்கும் சேர்த்துப் பெற்றிருக்கும்
பணப்பரிசு ஒரு முன்னணி கிரிக்கெட் வீரரின் மாத ஊதியத்திற்குச் சமமில்லை. இந்நிலை
மாற வேண்டும். திறமைகள் சமமாக அங்கிகரிக்கப்பட வேண்டும்.
---------------------
331 - 27.11.2018
காலத்தைத் தனதாக்குதல்
உலகப்
புகழ்பெற்ற நடிகரும் தற்காப்பு கலை வீரருமான புரூஸ்லி 1940 ஆம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் பிறந்தார்.
தற்காப்பு கலையில் நிபுணத்துவம் பெற்ற யிப்மான் என்பவரிடம் அந்தக் கலையைக்
கற்றுக்கொண்டார். தத்துவத்தில் அதிகமான ஈடுபாடுகொண்ட புரூஸ்லி அதற்காக ஒரு நூலகமே
வைத்திருந்தார். தற்காப்புக் கலையை தனது தாயகத்தின் அடையாளமாகக் கொண்ட அவர்
அதற்கான பயிற்சிப் பள்ளியை உருவாக்கினார். மேற்கத்திய மல்யுத்தம், ஜூடோ, கராத்தே
ஆகியவற்றுடன் சேர்த்து ஜீட் குன்டோ என்கிற புதிய வடிவிலான தற்காப்புக் கலையை
வடிவமைத்தார். 1971 இல் இவரது நடிப்பில் வந்த பிக்பாஸ் ஆசிய கண்டத்தையை
அசத்தியது. சண்டைக் காட்சியில் இவரது வேகத்திற்கு கேமராவினாலேயே ஈடுகொடுக்க
முடியாமல் 24 என்று இருந்த பிரேம் அளவை 34 என்று மாற்றிய வரலாறு ஹாலிவுட்டில் இன்றளவும் பேசப்படுகிறது. வெறும் 4 படங்கள் மட்டுமே நடித்து உலகம் முழுவதும் பேசப்படும் புரூஸ்லி
மிகவும் குறைவான வயதில் மரித்துப்போனார். காலத்தைத் தனதாக்கிய புரூஸ்லிக்கு இன்று
பிறந்த நாள்.
---------------------
332 - 28.11.2018
காணிக்கையாக்குதலில்
வரலாறு
புதியதாக
நூலை எழுதுகிறவர்கள் அந்நூலை யாருக்கேனும் காணிக்கையாக்குவது உலகம் முழுவதும் இருந்து வருகிற வழக்கம்.
உதவியவர்கள்,
பெற்றோர்கள், இணையர்,
நண்பர் என்கிற வகையில் அவர்களை நினைவு கூறுகிற இடமாகவும்
நூலில் காணிக்கை பக்கம் அமையும். சிலர் இறந்து போனவர்களைக் கூட அந்தப் பக்கத்தில்
நினைவு கூறுவார்கள். அந்த வகையில் எழுத்தாளர் புலியூர் முருகேசனின் ஒரு நாவல்
கவனம் பெறுகிறது. இன்னும் வெளியிடப்படாத ‘சேற்றுப்புளி’ என்கிற அந்நாவலின் காணிக்கை
பக்கத்தில் அவர் தந்திருக்கும் குறிப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
அவமானத்திற்கு உள்ளாக்குகிறது. குற்ற உணர்ச்சிக்குள் ஆழ்த்தி நம்மை திணறடிக்கிறது.
சமுதாயத்திற்கு எதிரான கோபத்தை உருவாக்குகிறது.
அந்தக் குறிப்பு இப்படி அமைகிறது. ‘ஆண்டுக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கலம் நெல்லும் 300 கழஞ்சுப்
பொன்னும் 2000 காசுகளும் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு வருவாயாக
வந்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில் 30 காசுக் கடனை அடைக்க வழியின்றி கோயிலுக்குத் தங்களை அடிமையாக விற்றுக்கொண்ட தாய் அங்காடி மகள் பெரங்காடி போன்ற
பெண்டிரின் அழுகைக்கு’.
---------------------
333 - 29.11.2018
நெடும்பயணம்
சீனாவில்
அதிகாரத்திற்கு வந்த ஷியாங்கே ஷேக் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்ததும்
அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் தலைமறைவாகிப் போயினர். அந்த
நிலையில் மாசேதுங் தனது தோழர்களுடன் நாட்டின் தென் பகுதிக்குப் பின் வாங்கினார்.
அங்குதான் ஒடுக்கப்பட்ட விவசாயிகளைக் கொண்டு செம்படையை உருவாக்கினார். கொரில்லா
போர் முறையினால் அரச படையைத் திணறடித்தார். என்றாலும் அரச படையால்
முற்றுகையிடப்பட்ட செம்படையினர் உணவு, உடை, மருந்து இன்றி தவித்தனர். என்றபோதிலும் வெற்றி
பெற வேண்டும் என்கிற வேட்கையில் 11 மாகாணங்களைக் கடந்து 6000 மைல் தூரத்திற்கு நெடும்பயணம் செய்த செம்படையினர்
ஓராண்டுக்குப் பிறகு பல்வேறு தடைகளை மீறி சீனாவின் வடபகுதியை அடைந்த போது 10 லட்சம் பேரில் 20 ஆயிரம் வீரர்களே எஞ்சியிருந்தனர். பல இன்னல்களைக் கடந்த மாசேதுங் 14 ஆண்டுகள் நடத்திய நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 1949 இல் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை அமைத்தார். விதியை
மதியால் வென்று வீறுநடை போடுகிறவர்களையே காலம் தன் கணக்கில் குறித்து
வைத்துக்கொள்கிறது.
---------------------
334 - 30.11.2018
நேர்காணலுக்கான
தகுதி
ஒரு
முறை நடிகர் கவுண்டமணியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு நேர்காணல் செய்ய
முயன்றனர். அப்போது கவுண்டமணி சமுதாயத்தில் நேர்காணல் கொடுக்க முதலில்
ஆசிரியர்களுக்கும் இரண்டாவதாக மருத்துவர்களுக்கும் மூன்றாவதாக விஞ்ஞானிகளுக்கும்
தான் தகுதி இருக்கிறது. இந்த மூன்றில் நான் எந்த வகைக்குள் வர மாட்டேன் என்று நேர்காணலை மறுத்துவிட்டதாக ஒரு
செய்தி உண்டு. ஆனால் அவர் தான் சொன்னார் என்பதற்கு எந்த ஆதாரம் இல்லை. இந்தக்
கூற்றை அவரோ அல்லது வேறு யாரேனுமோ சொல்லி இருந்தாலும் அது ஒருபுறம் இருக்க, அந்தக் கூற்றில் இருக்கும் சமுதாயத்தின் இயங்கியலைத்
தீர்மானிப்பவர்கள் ஆசிரியர்களும் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தான் என்கிற உண்மைக்கு
மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதனால் தான் முடிவெட்டவும் நேரம் இல்லாமல்
தலைமுடியை நீளமாக வளர்த்துக்கொண்டவரும், சலவை செய்ய நேரம் இல்லாமல் அழுக்கடைந்த ஆடையை உடுத்தியவரும், ஆய்விலேயே சிந்தனையை ஒருமுகப் படுத்தியிருந்ததால் இடுப்பில்
பெல்டுக்குப் பதில் மறதியாக டையை கட்டிக்கொண்டவருமான ஐன்ஸ்டீனுக்கு இஸ்ரேலின்
அதிபர் பதவி தேடி வந்து போது அதை மறுதலித்து கடைசி வரை அவர் விஞ்ஞானியாகவே
வாழ்ந்து மறைந்தார்.
---------------------
335 - 01.12.2018
ஏழைத்தாயின்
மகன்
இந்தியாவின்
இரண்டாவது பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி. பொது வாழ்வில் முற்றிலும் வேறுபட்ட
மனிதராக வாழ்ந்து காட்டியவர். அரியலூர் ரயில் விபத்தில் 112 நபர்கள் இறந்ததற்காக அமைச்சர் பதவியைத் துறந்தவர்.
பதவியைத் துறந்து அரசு வாகனத்தில் ஏற மறுத்து பொதுப்பேருந்தில் ஏறி வீடு வந்தவர்.
வேறொரு தருணத்தில் உள்துறை அமைச்சர் பதவியைத் துறந்த லால்பகதூர் சாஸ்திரி தனது
நண்பரான ராஜேஸ்வர் பிரசாத்துக்கு எழுதிய கடிதத்தில் அரசு வீட்டில் இருந்து மிகச்
சிறிய வீட்டிற்கு எனது குடும்பம் மாறி விட்டது. இனிமேல் ஒரேயொரு காயை மட்டும்
உணவில் சேர்த்துக்கொள்வதென்றும் பால் வாங்குவதை நிறுத்தி விடுவதென்றும்
முடிவெடுத்திருக்கிறோம். எங்கள் துணிகளை நாங்களே துவைத்துக்கொள்கிறோம் என்று
குறிப்பிட்டிருக்கிறார். தாஸ்கண்ட் ஒப்பந்தத்திற்காகப் புறப்படும் போது அங்கே
குளிரைச் சமாளிக்க கம்பளிளை எடுத்துக்கொண்டீர்களா? என கேட்டபோது நான் தற்போது அணிந்துகொண்டிருக்கும் வேட்டியை போதும்
என்றார். அவர் பிரதமராக பதவியில் இருந்தபோதும் தவணையில் தான் கார்
வாங்கியிருந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு தவணைப் பணம் கட்டவில்லை என்று
கடன்கொடுத்த நிறுவனம் காரை எடுத்துக்கொண்டது.
---------------------
336 - 02.12.2018
பயோனியர்
ஃபோர்ஸ் படை
அடிமை
முறை இன்று இல்லை என்கிற நிலைக்கு வந்திருக்கிறோம். உலகின் பெரும்பாலான நாடுகளின்
அரசியல் அமைப்புச் சட்டங்கள் அப்படித்தான் சொல்கின்றன. ஆனால் அதை
ஏற்றுக்கொள்வதற்கான காரணிகள் அந்தந்த நாடுகளில் இல்லை என்பது தான் உண்மை. அடிமை
முறை என்கிற பெயர் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாமே தவிர ஒவ்வொரு
பிராந்தியங்களிலும் அது வெவ்வேறு பெயர்களில் அடையாளப்படுத்தப்பட்டே வருகிறது.
குறிப்பாக கிழக்காசிய நாடுகளில் அதற்கு ஒப்பந்தத் தொழிலாளர் முறை என்று பெயர்.
உதாரணமாக இலங்கையின் முதல் பிரிட்டீஸ் கவர்னரான பிரடெரிக் நார்த் என்பவர்
அரசாங்கத்தை நிறுவுவதற்கான தொடக்கப் பணிக்காக ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஏறக்குறைய 3 லட்சம் தாயகத் தமிழர்களை இலங்கைக்கு அழைத்துச்சென்றார்.
அந்தத் தமிழர்கள் அனைவருமே ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்றே வரலாற்றில்
குறிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் அடிமையாகத் தான் நடத்தப்பட்டார்கள். அப்படி
அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களைத் தான் வரலாறு ‘பயோனியர் ஃபோர்ஸ் படை’ எனக் குறிப்பிடுகிறது.
---------------------
337 - 03.12.2018
படைப்பும்
படைப்பு மனமும்
மூன்று
ஆண்டுகள் இரவு பகலாக அடித்துத் திருத்தி அடித்துத் திருத்தி தான் அன்னா கரீனாவை
டால்ஸ்டாய் எழுதி முடித்தார். அந்த மூன்றான்டுகளும் கூடவே இருந்து
கவனித்துக்கொண்டது முதல் எழுதியதைப் பிரதியெடுப்பது, எடுக்கப்பட்ட பிரதியை மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது வரை
டால்ஸ்டாய்குப் பெருந்துணையாக இருந்தவர் அவரது மனைவி சோன்யா. படைப்பை எழுதி முடித்த
டால்ஸ்டாய் அடுத்த கணமே அது தன்னுடைய படைப்பல்ல எனவும் அது மக்களுக்கானது என்றும்
உணர்ந்தார்.
அந்தப்
படைப்பை வெளியிடும் உரிமையை ஏற்கனவே சோன்யாவுக்குக் கொடுத்திருந்ததால் அந்த
உரிமையை விலக்கினார். தன்னுடைய படைப்புகளை யார் வேண்டுமானாலும்
வெளியிட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்போவதாக தனது மனைவி சோன்யாவிடம் கூறினார். அது
சோன்யாவை கடுங்கோபத்திற்கு உள்ளாக்கியது. என்னைப் பின்தொடர்ந்து வராதே. வந்தால்
நிலைமை மேலும் மோசமாகும். நீ ஒருபோதும் எனது எண்ணத்தை மாற்றிவிட முடியாது என்று
கடிதம் எழுதி வைத்துவிட்டு டால்ஸ்டாய் வீட்டைவிட்டு வெளியேறினார். அவரைப்
பின்தொடர்ந்து சென்ற சோன்யா டால்ஸ்டாயை உயிருடன் பார்க்கவில்லை.
---------------------
338 - 04.12.2018
நன்மதிப்புப்
புள்ளி
நமது
அன்றாடத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு மின்னணு சாதனங்களையை நம்பியிருக்க
வேண்டிய கட்டத்திற்கு வந்தாகிவிட்டது. இது வசதியானதாகவும் எளிமையானதானவும்
நமக்குத் தென்பட்டாலும் இதனால் நாம் பரிமாறிக்கொள்கிற தகவல்களை வைத்தே நம்மைக்
கணித்து நாம் யார்?
எப்படிப் பட்டவர்? என்பதைக் கண்டுபிடித்துவிட முடிகிற சூழலும்
உருவாகிவிட்டிருக்கிறது. அதாவது வரும் காலத்தில் ஒரு மனிதர் நல்லவரா? கெட்டவரா? என்பதை அவரால்
இணையத்தின் வழி பகிரப்பட்ட அவரது தகவல்களே முடிவு செய்யும். இந்த முறையை கடுமையான
எதிர்ப்புகளையும் தாண்டி சமீபத்தில் சீனா தனது நாட்டில் சோதித்துப்
பார்த்திருக்கிறது. அதாவது இணையத்தில் இருக்கும் மின்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு
ஒவ்வொருவருக்கும் நன்மதிப்புப் புள்ளிகள் கொடுக்கப்படும். அதிகமான புள்ளிகளைப்
பெறும் நபர்கள் நேசன்களாகவும் குறைந்த புள்ளிகளைப் பெறும் நபர்கள்
ஆன்டிநேசன்களாகவும் வகைப்படுத்தப்பட இருக்கின்றனர். அதனால் தான் சீனாவின்
பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்னும் மூன்றாண்டுகளில் எமது அரசாங்கம் நம்பகமானவர்களை
சொர்க்கத்தின் கீழ் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கும். அதேநேரம்
நம்பகமற்றவர்களை ஒரு அடிகூட எடுத்து வைக்க அனுமதிக்காது என்கிறார்.
---------------------
339 - 05.12.2018
கொடியும்
கொள்கையும்
பிராந்திய
உரிமை என்னும் கருத்தியலை முன்மொழிந்த நீதிக்காட்சியின் கொடி சிவப்பு வண்ணத்
துணியில் தராசு சின்னம் பொறிக்கப்பட்டதாக இருந்தது. அதை ஜே.எஸ். கண்ணப்பர் என்பவர்
வடிவமைத்திருந்தார். நீதிக்கட்சி ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட
பின் கொடியும் மாற்றப்பட வேண்டும் என்கிற குரல் எழுந்தது. இது குறித்து தந்தை
பெரியாரிடம் கருத்துக் கேட்ட போது அவர் கொடி காலத்திற்கேற்றவாறு மாற்றப்பட
வேண்டும். விஞ்ஞான அறிவு, இலட்சியம்
இவைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அதோடு கொடியை யார் வேண்டுமானாலும் தயாரித்து
பயன்படுத்தக் கூடிய வகையில் எளிமையாக இருக்க வேண்டும் என்றார். அவரது
கருத்திற்குப் பிறகே திராவிடர் கழகத்திற்கு என்று ஒரு கொடி வடிவமைக்கப்பட்டது. அதை
1946 ஆம் ஆண்டு வாக்கில் ஈரோடு சண்முகம் என்பவர்
வடிவமைத்திருந்தார். அதில் கொடி முழுமையும் கருநிறத்திலும் கொடியின் மையத்தில் தீ
சுவாலைகளும் இருந்தன. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருச்சியில் கூடிய
திராவிடர் கழகத்தின் பொதுக் குழுவில் கொடியில் இருந்த தீ சுவாலை நீக்கப்பட்டு வட்ட
வடிவில் சிவப்பு நிறம் இடம் பெற்றது.
---------------------
340 - 06.12.2018
நாஸ்ட்ரடாமஸ்
15 ஆம் நூற்றாண்டில் உலகின் விநோத மனிதராகப் பார்க்கப்பட்டவர் நாஸ்ட்ரடாமஸ்.
அவர் கணித்துச் சொன்ன செய்திகளால் மக்கள் மத்தியில் அவருக்கு அப்படி ஒரு பிம்பம்
உருவாகியிருந்தது. ஆதலால் மக்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்குச் சமமாக
பயத்தோடும் இருந்தார்கள். எதிர்காலத்தைக் கணித்துச்சொல்லும் வம்சாவளியில் பிறந்த
நாஸ்ட்ரடாமஸ் தனது முன்னோர்களை விட கணிப்பில் துல்லியத் தன்மை கொண்டவராகவும்
இருந்தார்.
ஒருமுறை
நாஸ்ட்ரடாமஸ் நடந்து செல்லும் போது எதிரே இளமையான மதகுரு ஒருவர் வந்தார். அவரைப்
பார்த்த நாஸ்ட்ரடாமஸ் முழந்தாளிட்டு வணங்கினர். அந்தக் குரு காரணம் கேட்க, அதற்கு நாஸ்ட்ரடாமஸ் வருங்கால போப்பாண்டவரை வணங்கினேன்
என்றார். உண்மையிலேயே அந்த இளங்குரு பின்னாளில் போப்பானார். இன்னொரு முறை மன்னர்
இரண்டாம் ஹென்றி ஈட்டி எறிந்து விளையாடும் போது தலையில் ஈட்டி பாய்ந்து மரணிப்பார்
என்றார் நாஸ்ட்ரடாமஸ். மன்னர் ஹென்றி அது போலவே ஈட்டி பாய்ந்துதான் இறந்துபோனார்.
---------------------
341 - 07.12.2018
இப்படியும்
இவர்கள்
அரசர்களுக்கு
நீண்ட வரலாறு இருக்கிறது. அரசர்களைச் சார்ந்து இருந்தவர்களுக்கும் வரலாறு
இருக்கிறது. ஆனால் மூன்றாம் தர குடிமக்களுக்கு வரலாறு இல்லை. இவ்விடத்தில்
மூன்றாம் தர குடிமக்களுக்கு ஏன் இல்லை? என்று எழுகிற கேள்வியை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. இந்த இடத்தில்
வரலாறு என்று நாம் குறிப்பிடுவது மனிதர்கள் தம்முடைய மூதாதையர்களைப் பற்றி
அறிந்திருப்பதைத் தான். சில பிரிவினர்களில் அதிகபட்சமாக அவர்களது மூதாதையர்களில்
மூன்று அல்லது நான்கு தலைமுறையினரின் பெயர்களை மட்டுமே அறிந்திருக்கிறார்கள்.
அதைத் தாண்டி அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றி அறிந்துகொள்வதற்கோ அவர்களின்
படங்களைப் பார்ப்பதற்கோ வாய்ப்பில்லை. ஆனால் இதே தேசத்தில் வெகுசில பிரிவினர்
அவர்களின் பத்து தலைமுறைக்கும் மேலான மூதாதையர்களைப் பற்றிய தெளிவான வரலாற்றைக்
கையில் வைத்திருக்கிறார்கள். இது எப்படி அவர்களுக்கு மட்டும் சாத்தியமானது? என்கிற கேள்விக்கான பதில் மிகவும் எளிமையானது. கட்டிடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, நெசவுக்கலை ஆகியவற்றைத் தொழிலாகக் கொண்டிருந்தவர்கள் தம்
குடும்பம் பற்றிய செய்திகள் எதையும் பதிவு செய்து வைக்கவில்லை. காரணம் அவர்கள்
பதிவு செய்து வைக்க அனுமதிக்கப்படவில்லை என்கிறார் பேராசியர் காஞ்சா அய்லய்யா.
---------------------
342 - 08.12.2018
மரணம்
சொல்லும் செய்தி
கலர்
கலராய் மிட்டாய்கள் சாப்பிட்டுத் தொடங்கும் வாழ்க்கை கலர் கலராய் மாத்திரை
சாப்பிட்டு முடிந்து போகிறது என்று கேலியாகச் சொல்வதுண்டு. ஆனாலும் அச்சொற்றொடர்
பல உண்மைகளைப் பேசுகிறது. அதில் ஒன்று உணவு முறை. அந்தந்த மண்ணில் வாழ்கிறவர்கள்
அந்தந்த மண்ணில் விளைகிற உணவுப்பொருளையை சாப்பிட
வேண்டும். அதற்கு ஏற்ப தான் உடற்கூறுகள் அமைந்திருக்கும். மாற்றிச் சாப்பிட்டால்
ஆயுள் குறைவு என்பார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். நாம் நமது மண்ணின் உணவுகளை
விலக்கி வெகுதூரம் வந்துவிட்டோம். இருபதாண்டுகளுக்கு முன்னாள் விளைந்த காய்களில்
இருந்த சுவை இன்றைய காய்களில் இல்லை. காய்களின் வடிவமும் நிறமும் கூட பேரளவில்
மாறியிருக்கிறது. காய்கள் செடியில் பழுக்காமலேயே வதங்கி உதிர்ந்து விடுகின்றன.
அடுத்த பருவத்திற்கு விதையெடுக்க முடியவில்லை. விவசாயிகள் தற்சார்பு வேளாண்மையை
இழப்பதற்கான கடைசிப்புள்ளியில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில்
தான் விதையின் மகத்துவத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தாய்மண் விதைகளை
மீட்டெடுக்க வேண்டும். நெல் ஜெயராமன் விடுத்துச் சென்ற செய்தி அதுதான்.
---------------------
343 - 09.12.2018
கென்சரோ விவா
1958 இல் நைசிரியாவில் ராயல் டச் செல் என்கிற நிறுவனம் எண்ணெய் எடுக்கத்
தொடங்கியது. அதற்காக அந்நிறுவனம் ஏராளமான வேளாண்மை நிலங்களை அழித்தது. அதனால் 5.5 லட்சம் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம்
சீர்கெட்டது. எண்ணெய் கசிவாலும் அமில மழையாலும் மண் சத்தை இழந்தது. விலங்குகளும்
மீன்களும் கூட்டம் கூட்டமாகச் செத்தொழிந்தன. இந்தச் செயற்கைப் பேரழிவில் ஓகோனி
என்கிற பழங்குடி இனம் தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. ஆதலால் அந்த இனத்தில்
இருந்து தலைவராக வந்த கென்சரோ விவா என்பவர் அம்மக்களை ஒன்று திரட்டி 1991 இல் பழங்குடிகள் வாழ்வுரிமை இயக்கம் என்கிற பெயரில்
போராட்டத்தைத் தொடர்ந்தார். 1993 இல்
எண்ணெய் நிறுவனங்கள் சம்பாதித்த பணத்தில் மக்களுக்கான பங்கினைத் தர
வற்புறுத்தியும் அரசியல் சுயநிர்ணய உரிமை கோரியும் 3 லட்சம் மக்களைக் கொண்டு பேரணி நடத்தினார். இதன் விளைவாக எண்ணெய் நிறுவனம்
எண்ணெய் எடுக்கும் பணியை நிறுத்தியது. கோபம் கொண்ட நைசீரிய இராணுவ அரசு மக்களின்
வீடுகளை எரித்தது. பெண்களைத் துன்புறுத்தியது. கென்சரோ விவாவை கைது செய்த அரசு
கொலைக் குற்றம் சுமத்தி அவருடைய நண்பர்கள் எட்டுப் பேர்களுடன் அவரையும்
தூக்கிலிட்டது.
---------------------
344 - 10.12.2018
வியாபாரியும்
விஞ்ஞானியும்
உலகத்தில்
மிகச் சிறந்த விஞ்ஞானியாகவும் புகழ்பெற்ற வியாபாரியாகவும் இருந்த இருவரில்
ஆல்பிரட் நோபலும் ஒருவர். அவர் கண்டுபிடித்த வெடிபொருளை உலகெங்கும் மிக
வெற்றிகரமாக சந்தைப்படுத்தினார். பேரளவில் செல்வம் குவிந்தது. அவர் தயாரித்து
முடிக்கும் வெடிபொருளின் ஒவ்வொரு நுனியிலும் ஒரு மனிதனின் அல்லது ஒரு மனித
கூட்டத்தின் முடிவுரை எழுதப்பட்டிருந்தது. ஒருநாள் ஆல்பிரட் நோபல் இறந்துவிட்டார்
என்றொரு வதந்தி கிளம்பியது. அதை நம்பிய பத்திரிகைகள் செய்தியை உறுதிசெய்யாமல் மரண
வியாபாரி இறந்துவிட்டான் என்று எழுதின. அதை ஆல்பிரட் நோபலும் படித்தார். ஆல்பிரட்
நோபல் நாம் உண்மையிலேயே இறந்து போயிருந்தாலும் பத்திரிகை இப்படித்தானே
எழுதியிருக்கும். மக்களும் நம்மை மரணத்தின் வியாபாரி என்று தானே நம்புவார்கள்.
வரலாறும் அப்படித்தானே எழுதப்படும் என எண்ணினார். அதற்கு தீர்வு காண விளைந்தார். 1895 இல் அறக்கட்டளை ஒன்றை நிறுவி தனது செல்வம் அனைத்தையும்
அறக்கட்டளைக்கு எழுதிவைத்தார். அதன் வழி இயற்பியல், வேதியியல்,
மருத்துவம், அமைதி,
பொருளாதாரம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை
சிறப்புச் செய்யும் வகையில் நோபல் பரிசை நிறுவினார். ஆல்பிரட் நோபல் உண்மையிலேயே இறந்துபோன
நாள் இன்று. இன்றுதான் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
---------------------
345 - 11.12.2018
தன்வேலையை
தானே செய்தல்
ஆணவக்கொலைகள்
அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில் கொலையை நியாயப்படுத்தும் கருத்தியலும்
அதிகரித்திருக்கிறது. அவரவர் சாதியில் காதலித்து திருமணம் செய்துகொண்டால் நாங்கள்
ஏன் கொலை செய்கிறோம்? என்று வெளிப்படையாகவே சில அமைப்புகள்
பேசுகின்றன. மேலும் அவை, எங்களிடம்
சொத்துகள் இருக்கின்றன. அதற்காகவே எங்கள் பெண்களைக் காதலிக்கிறார்கள். அவர்களுக்கு
எங்கள் சொத்துக்கள் தான் நோக்கமே தவிர எங்கள் பெண்கள் அல்ல என்று காரணம்
கற்பிக்கின்றன. இன்னும் சில அமைப்புகளும் தனிமனிதர்களும், அவர்கள் இட ஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு
வந்துவிட்டார்கள் அதனால் தான் எங்கள் பெண்களைத் தேடுகிறார்கள். ஆக இடஒதுக்கீடு
கூடாது என்கிறார்கள். இந்த மாதிரியான கருத்தியல்கள் வெளிப்பார்வைக்கு வேறுவேறாய்த்
தெரியும். ஆனால் அடிப்படையில் ஒன்றுதான். அதாவது ஒவ்வொருவரும் அவரவர் சாதியில்
காதலித்துத் திருமணம் செய்துகொண்டால் பிரச்சினை இல்லை என்பது தான் அந்தக்
கருத்தியல்களின் மொத்த சாராம்சம். இப்படி பேசுகிறவர்கள் நாளை முதல் அவர்கள் மலத்தை
அவர்களே அள்ளிக்கொள்வார்கள் என்றும், அவர்களின் நாப்கினை அவர்களே அள்ளிச் சுமப்பார்கள் என்றும், அவர்களின் பிணத்தை அவர்களே எரிப்பார்கள் என்றும் அவர்களின்
வேலையை அவர்களே செய்துகொள்ள முடியாத போது தற்கொலை செய்துகொள்வார்கள் என்றும்
நம்புவோமாக.
---------------------
346 - 12.12.2018
பலியும்
உணவும்
விலங்குகளை
பலியிட்டால் நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை வேறொரு புரிதலையும் தருகிறது.
விலங்குகளைப் பலியிடுவதால் நல்லது நடக்கிறதோ இல்லையோ ருசியான உணவுக்கு உத்திரவாதம்
கிடைத்துவிடுகிறது. இதை இன்னொரு நிலையில் வைத்துப் பார்க்கும் போது பலியிடுதல், நம்பிக்கை என்கிற பெயரில் தான் ஒருசார்புநிலை உளவியல்
கட்டமைக்கப்பட்டு இருப்பதையும் அறிந்துகொள்ள முடியும். பலியிடுதலில் குறிப்பாக
மாடு பலியிடப்படுவதும் மாட்டிறைச்சியை வழக்கமாக உணவாகக் கொள்வதும் இந்திய
இலக்கியங்களிலும் வேதங்களிலும் அதிக அளவில் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. சதபத
பிராமணத்திலும் அய்த்திரிய பிராமணத்திலும் மாட்டுக்கறி உண்பது பற்றிய குறிப்புகள்
காணப்படுகின்றன. சுத்தநிகடா என்கிற நூலில்
இச்சுவாகு அரசன் ஆயிரக்கணக்கான பசுக்களை கைபர் கணவாய் வழியாக வந்த வந்தேறிகளை
நம்பி யாகத்திற்காக பலியிட்டான் என்ற குறிப்பு காணப்படுகிறது. அய்த்திரிய
பிராமணத்தில் மற்றொரு இடத்தில் திருமண விருந்தில் மாட்டுக்கறி நிச்சயம் இடம் பெற
வேண்டும் என்கிற குறிப்பையும் பார்க்க முடிகிறது.
---------------------
347 - 13.12.2018
ஞானநிலை
நோக்கி
மாத்ஸூ
யோக சாதனையில் ஈடுபட்டவர். அவர் தம்முடைய ஆஸ்ரமத்தில் தனியறையில் இரவு பகலாக
அமர்ந்து மனப்பயிற்சியில் ஈடுபட்டார். கண் திறந்து எதையும் பார்க்கமாட்டார்.
இந்நிலையில் ஒருநாள் மாத்ஸூவின் குரு அவரைப் பார்ப்பதற்காக வந்தார். மாத்ஸூ கண்
திறக்கவில்லை. குரு அவருக்கு எதிரே அமர்ந்துகொண்டு கைக்கு அடக்கமான கல் ஒன்றை
எடுத்து தரையில் தேய்க்க ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்த
மாத்ஸூ கல்லை ஏன் இப்படித் தேய்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்குக் குரு இந்தக் கல்லை கண்ணாடி ஆக்கப்
போகிறேன் என்றார். அதற்கு மாத்ஸூ இதென்ன அபத்தம் கல்லை எப்படி கண்ணாடி ஆக்க
முடியும்? என்றார். அதற்கு சிரித்தபடி குரு கல்லை என்ன
செய்தாலும் கண்ணாடி ஆக்க முடியாது என்று எனக்குத் தெரியும். உன் மனம் மட்டும் இந்த
மனப்பயிற்சியில் கண்ணாடி ஆகிவிடப்போகிறதா என்ன? மனம் என்பதே எண்ணங்களின் கோர்வை தானே. பல திசைகளில்
பயணிக்கும் மனதை ஒருமுகப்படுத்தி ஒரு திசையில் பயணிக்க வைக்கப் போகிறாய். மற்றபடி
மனதில் எண்ணங்கள் தோன்றாமல் ஒதுபோதும் இருக்க முடியாது என்றார். மாத்ஸூவுக்கு அவரது குரு போதித்த இந்த ஞானத்தை
யவக்கிரீவனுக்கு இந்திரன் போதித்ததாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. யாரும்
போதிக்காமல் புத்தர் தானாகவே உணர்ந்தார் என்று தம்மபதம் கூறுகிறது.
---------------------
348 - 14.12.2018
விட்டில்பூச்சிகளும்
யானையும்
அளவில்
சிறியதாக இருக்கும் எந்த ஒன்றும் தனது அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தொடக்கத்தில்
சிரமப்படும். அங்கீகாரம் கிடைத்த பிறகு அதுவே முக்கியமானதாக மாறும். தங்கத்தின்
வரலாறும் வைரத்தின் வரலாறும் கூட அப்படித்தான். இன்னொரு வியப்பான செய்தி 1870 களில் உருவான தாது வருடப் பஞ்சம். அதன கோரத்தை அறிந்தே
இருக்கிறோம். அதற்குக் காரணமாகச் சொல்லப்படும் பலவற்றில் ஒன்று விட்டில்
பூச்சிகள். விட்டில் பூச்சிகளா அப்படிச் செய்திருக்க முடியும் என்கிற வியப்பு
நமக்குள் வந்தாலும் அதுதான் உண்மை. வடதிசையில் இருந்து தெற்கு நோக்கி கூட்டங்கூட்டமாக வந்த வீட்டில் பூச்சிகள்
பயிர்களையும் பிற தாவரங்களையும் அழித்து பஞ்சத்தை உருவாக்கியிருக்கின்றன. இது ஓர்
உதாரணம் மட்டுமே. இப்படி வடக்கே இருந்து தெற்கு நோக்கி வருகிற யாவும் தென்னக
மக்களுக்கு எதிரானதாகவே இருந்திருக்கின்றன. அதை தென்னகம் வீழ்த்தியே
வந்திருக்கிறது. அதற்கு பல உதாரணங்கள் உண்டு. வியட்நாம் தேசத்தின் தந்தை ஹோசிமின்
தம் மக்களிடம் அடிக்கடி விட்டில் பூச்சிகளாகத் தெரியும் நாம், யானையின் குடலை பிடிங்கி வீசுவோம் என்பார். அவர் யானை என்று
சொன்னது அமெரிக்காவை. ஹோசிமின் சொன்னது நடந்தேறியது. வியட்நாம் போரில் யானை
தோற்றுப்போனது. விட்டில் பூச்சிகள் வெற்றி பெற்றன. இன்றைக்குச் சிறுபான்மை
விட்டில் பூச்சிகள் ஒன்றிணைய வேண்டும். புதிய புதிய யானைகள் நிறைய இருக்கின்றன.
---------------------
349 - 15.12.2018
தொலைவும்
ஆடம்பரமும்
சொற்கள்
ஒப்பிட்டு பொருண்மையில் அமைந்தவை. பகல் என்பதற்கு இரவு அல்லாதது என்றும் பொருள்
கொள்ளலாம். மரம் என்பதற்கு செடிகொடி அல்லாதது என்றும் சொல்லலாம். பொய் என்பதை உண்மைக்குப்
புறம்பானது எனவும் குறிப்பிடலாம். அந்த வகையில் ஆடம்பரம் என்பதை எளிமை அல்லாதது
என்று பொருள் கொள்ளலாம். அல்லது தொலைவில் இருப்பது, தொலைவில் இருந்து வந்தது என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது ஒரு சொல்
உருவாக்கப்படும் போது அந்தச் சொல்லுக்கு எதிர்ச்சொல் இயல்பாகவே உருவாகி விடும்.
அப்படி உருவாகும் சொல்லுக்கும் எதிர்சொல்லுக்குமான இடைவெளி பல நேரங்கள் அரசியல்
பண்பாட்டு செய்திகளை அள்ளித்தருவனவாக அமைந்திருக்கின்றன என்பதுதான் நாம் கவனிக்க
வேண்டிய ஒன்று. உதாரணமாக வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் தம்முடைய ‘முற்கால இந்தியா’ என்கிற நூலில் மிகத்
தொலைவு வணிகங்களில் பெரும்பாலானவை ஆடம்பரப்பொருள்களைக் கொண்டவை. உற்பத்திச்
செய்யப்பட்ட மிகவும் சாதாரண பொருள்கள் உள்ளூர் சந்தையிலேயே விற்கப்பட்டன
என்கிறார். அவர் சொன்னது முற்கால இந்தியாவின் ஆடம்பர மனநிலையை பற்றித்தான். நிலைமை
இன்னும் மாறவில்லை. அமெரிக்க மாப்பிள்ளை என்றாலே ஒரு வித மயக்கம் இருக்கத்தானே
செய்கிறது.
---------------------
350 - 16.12.2018
வரியின்
வரலாறு
பல்வேறு
நாடுகளில் பல்வேறு காலங்களில் பண்டைய மன்னர்கள் மக்களுக்கு விதித்த வரிகள் பற்றி
மட்டும் பெரிய அளவிலான நூல்களை எழுதிவிட முடியும். அந்த அளவுக்கு வரிகள் பற்றிய
செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன. மன்னன் மக்களைச் சித்திரவதை செய்ய வேண்டும்
என்றுநினைத்துவிட்டால் அவனது நினைவுகளில் வந்து உதிப்பது வரி விதிப்பாகத் தான்
வரலாற்றில் இருந்திருக்கிறது. காரணம் அது குறித்து மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள்.
கேள்வி கேட்டாலும் மக்களின் நலனுக்காக, மேம்பாட்டுக்காக வரி விதிப்பது தவிர்க்க முடியாதது என்று சொல்லி விடலாம்.
மக்கள் அதை எளிதாக நம்பிவிடுவார்கள். காரணம் மக்களின் சமூகக் கட்டமைப்பு வரிகளால் ஆனது. அதாவது கோவில் திருவிழா, ஊரின் பொதுச்செலவு முதலியவற்றிற்கு வரி கொடுப்பது கடமை
என்கிற உளவியல் அவர்களுள் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த உளவியல்
அவர்களுக்குள் இருக்கும் வரை விதவிதமான வகைகளில் எத்தனை வரிகள் விதித்தாலும்
கட்டுப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். பெண்களின் மார்புகளுக்கும் ஆண்களின்
மீசைக்கும் வரி செலுத்திய வரலாற்றைக் கொண்ட மக்களிடம் இனி வரும் காலத்தில்
வேறுவேறு முறையிலான வரி விதிப்பு வரலாறுகள் நிறைய இருக்கும்.
---------------------
351 - 17.12.2018
வேளிரும்
மன்னரும்
சமுதாயத்தில்
ஒருவரின் அதிகாரத்தை நிலம் தான் தீர்மானித்திருக்கிறது. தீர்மானித்தும் வருகிறது.
அதனால் தான் 2016இல் குஜராத்தில் புதிய அரசியல் அத்யாயத்தைத் தோற்றுவித்த
ஜிக்னேஷ் மேவானி ஜந்து ஏக்கர் நிலம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
பண்டைய காலத்தில் கூட வேளிர் என்கிற சிறுநிலப்பரப்பின் தலைவன், பெருநிலம் அவனது ஆளுகையின் கீழ் வந்தபோது அரசனாக மாறினான்
என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் தி.சுப்ரமணியன். வேளிருக்குத் தேவைப்படாத படையும்
பரிவாரங்களும் அரசனுக்குத் தேவைப்பட்டிருக்கின்றன. அதாவது பெருநிலமும் படையும்
பரிவாரமும் இருந்தால் போதும் அவன் அரசன் என்கிற தகுதியைப் பெற்றுவிடுகிறான்
என்பதைத் தான் மேற்கண்ட செய்தி அறிவுறுத்துகிறது. அதற்கு தொல்லியல் மட்டுமின்றி
மானிடவியல் ஆய்வு முடிவுகளும் சான்றாக அமைகின்றன. அதாவது சிறிய அளவிலான நிலமுடைய
பழங்குடிகள் நிலத்தின் அளவு சற்று விரிந்ததும் வேளிர் ஆகியிருக்கின்றனர்.
வேளிர்களின் நில அளவு அதிகரிக்க அவர்கள் படை, பரிவாரத்தை உருவாக்கி அரசர்கள் ஆகியிருக்கிறார்கள் என்பதுதான்
தி.சுப்பிரமணியனின் முடிவாக இருக்கிறது.
---------------------
352 - 18.12.2018
சிறுபான்மையினர்
தினம்
இன்று
சர்வதேச சிறுபான்மையினர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1992 ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் நாள் ஐ.நா.சபை ஒரு பிரகடனத்தை வெளியிட்டது. இன, மத,
மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்திரவாதம் செய்வதாக
அந்தப் பிரகடனம் அமைந்தது. அது சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும்
இருந்தது. சிறுபான்மையின மக்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில் சர்வதேச சிறுபான்மையினர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐ.நா.சபை
தனது பிரகடனத்தின் வழி ஒவ்வொரு அரசும் தனது நாட்டின் எல்லைக்குள் வாழும் இன, மத,
மொழிச் சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டும் என்று
அவர்களது அடையாளத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்
அறிவித்தது. இந்தியாவில் சிறுபான்மை ஆணையம், டிசம்பர் மாதத்தின் 18 ஆம் நாளை சிறுபான்மையினர் உரிமைகள் தினமாகக்
கொண்டாடி வருகிறது.
---------------------
353 - 19.12.2018
விளக்கும்
தீக்குச்சியும்
‘ஏற்றப்பட்ட விளக்கைவிட ஏற்றி வைத்த தீக்குச்சியை உயர்வானது என்பார்’ கவிக்கோ அப்துல் ரகுமான். இச்சொற்றொடர் வெற்றியின்
தொடக்கப்புள்ளியை பெருமைப்படுத்துகிறது. இச்சொற்றொடரில் விளக்கு என்பது வெற்றியின் குறியீடாக அமைந்திருக்கிறது.
தீக்குச்சி என்பது வெற்றிக்கான முன்னெடுப்பின் குறியீடாக இடம் பெற்றிருக்கிறது.
அதாவது வெற்றியைப் பெற்ற பின்பு கொண்டாடப்பட வேண்டியது வெற்றியை அல்ல. மாறாக வெற்றியின் முதற்புள்ளியை என்பது தான் அப்துல் ரகுமான் சொல்ல
வருகிறது செய்தி. கோபுரத்தைக் கொண்டாடுவோர் கோபுரத்தை கட்டியெழுப்பியவர்களைக்
கொண்டாடுங்கள். உட்கார்ந்து உண்பதற்கு முன்பு உழுதவர்களை நன்றியோடு நினைவு
கூறுங்கள். ஓடி முடித்தபின்பு காலுக்கு நன்றி சொல்லுங்கள். உடலின் ஆரோக்கியத்தை
உணரும் போதெல்லாம் பெற்றோரைப் போற்றுங்கள். கனிகளைப் பறிக்கும் போதெல்லாம் வேர்களை
வணங்குங்கள் என்றெல்லாம் அப்துல் ரகுமானின் இந்தச் சொற்றொடருக்குப் பொருள் கொள்ள
முடியும். ஒற்றைச் சொற்றொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளை உணர்ந்தும் மொழியாளுமை
கைவரப்பெற்றதால் தான் அவர் கவிக்கோ.
---------------------
354 - 20.12.2018
நீதிபதியின்
வியப்பு
நீதிபதி
தருகிற தீர்ப்பு தான் பல நேரங்களில் வியப்பினைத் தரும். வரலாற்றில் நீதிபதியை வியந்த செய்திகள் சிலவும்
காணக்கிடைக்கின்றன. அப்படிப்பட்ட செய்திகளுள் ஒன்று புரட்சியாளர் பகத்சிங்கோடு
தொடர்புடையதாகவும் இருக்கிறது. தனது இறுதி நொடியைப் பற்றிக் கவலைப்படாமல் தனது
குறிக்கோளுக்காகவே திட மனம் கொண்ட பகத்சிங் தூக்கு மேடைக்கு வந்து நின்றதும் தன்
மீதான குற்றப்பத்திரிகையை வாசிப்பதற்காகக் காத்திருந்த நீதிபதியை நோக்கி நீங்கள்
மிகவும் கொடுத்து வைத்த மனிதர். ஓர் இந்தியப் புரட்சியாளன், தனது மகத்தான குறிக்கோளுக்காகப் புன்முறுவல் பூத்தபடி உயிரை
அர்ப்பணிக்கப் போகும் அரிய காட்சியைக் காணும் வாய்ப்பு உங்களுக்குக்
கிடைத்திருக்கிறது என்றார். அதைக் கேட்ட நீதிபதி இந்தியாவில் இப்படியொரு
லட்சியவாதியா?
என்று வியப்போடு நின்றார். மக்களின் விடுதலைக்காக தனது
உடலையை ஆயுதமாகக் கொண்டவர்களுக்குச் சட்டமும் நீதியும் ஒரு பொருட்டே இல்லை
என்பதான் பகத்சிங்கின் இறுதி நொடி உணர்ந்தும் செய்தி.
---------------------
355 - 21.12.2018
கிரம்மாடிகஸ்
சாக்ஸோ
டென்மார்க்
நாட்டின் வரலாற்று ஆசிரியர் என்னும் புகழினைப் பெற்றவர்
சாக்ஸோ. லத்தீனில் இவர் எழுதிய நடைக்காகவே இவருக்கு கிரம்மாடிகஸ் என்ற அடைமொழி
கிடைத்தது. கிரம்மாடிகஸ் என்றால் தமிழில் இலக்கணப்புலவர் என்று பொருள்.
டென்மார்க்கின் சியேலண்ட் பகுதியில் பிறந்த சாக்ஸோ போர் வீரர்கள் குடும்பத்தைச்
சார்ந்தவர். லுண்ட் என்னும் இடத்தில் தலைமைப் பேராயருக்கு எழுத்தராகப் பணியாற்றிய
அனுபவமும் சாக்ஸோவிற்கு உண்டு. இவர் எழுதி 16 தொகுதிகளாக வெளிவந்துள்ள கெஸ்ட்டா டேனோரம் என்னும் நூல் டென்மார்க்கின் மிக
முக்கியமான படைப்பாகவும் உலக இலக்கியத்திற்கு டென்மார்க்கின் முதல்
பங்களிப்பாகவும் இருக்கிறது. கெஸ்ட்டா டேனோரம் என்ற சொற்றொடருக்கு ‘டென்மார்க் மக்களின் கதை’ என்று பொருள்.
டென்மார்க் நாட்டின் பழமையையும் மரபையும் விரிவாக எடுத்துரைக்கும் இந்நூல் கி.பி 19 ஆம் நூற்றாண்டில் டேனிஷ் கவிஞர்கள் பலரது கற்பனையைத்
தூண்டியது. இன்னொரு முக்கியமான சிறப்பு இந்த நூலுக்குக் கிடைத்திருக்கிறது. அது
என்னவெனில் இந்த நூல்தான் சேக்ஸ்பியர் எழுதி மிகவும் புகழ்பெற்ற ஹேம்லெட் என்ற
நாடகத்திற்கு மூலநூலாகவும் அமைந்திருக்கிறது.
---------------------
356 - 22.12.2018
சித்தரும்
மனிதரும்
சித்தர்
ஒருவர் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டு போவோர் வருவோரைப் பற்றி
கத்திக்கொண்டே இருந்தார். ஒருவரை இதோ நாய் போகிறது என்றார். வேறொருவரை இதோ
பாருங்கள் பாம்பு போகிறது என்றார். மற்றொருவரைப் பார்த்து இதோ ஒரு தேள் போகிறது
என்றார். ஒரு நாள் வள்ளலார் அவ்வழியே போனபோது இதோ பாருங்கள் ஒரு மனிதர் போகிறார்
என்றார். உடனே சித்தருக்குப் பக்கத்தில் இருந்தவர் விளக்கம் கேட்டார். அதற்குச்
சித்தர்,
மனிதனின் அகத்தை வைத்தே ஒருவரை நான் எடை போடுகிறேன். உலகில்
எந்த உயிரினமும் மற்றொன்றின் குணாதிசயத்தோடு வாழ்வதில்லை. மனிதன் மட்டும் தான்
மனிதனாக வாழாமல் பல நேரங்களில் தேளாக, பாம்பாக,
நாயாக வாழ்கிறான். எந்த நாயோ, பாம்போ,
தேளோ மனிதனாக வாழ விரும்பியதே இல்லை. இதோ இப்போது நம்மைக்
கடந்து சென்றாரே வள்ளலார் அவர் தான் சகல உயிர்களுக்கும் உய்வளித்து சமமாகப்
பாவிக்கிறார் அதனால் அவரை நான் மனிதராகப் பாவிக்கிறேன். என்னளவில் எல்லா
உயிர்களையும் சமமாகப் பாவிக்கிறவரே மனிதராவார் என்றார் சித்தர்.
---------------------
357 - 23.12.2018
பஞ்சன் லாமா
திபெத்தில்
பௌத்த சமயத்தில் தலாய் லாமாவிற்கு அடுத்த நிலையில் இருக்கக் கூடியவரை பஞ்சன் லாமா
எனக் குறிப்பிடுகிறார்கள். பஞ்சன் லாமா என்பவர் குருவின் மறுஅவதாரம் எடுத்து
பூமிக்கு வந்திருப்பவர் என்று நம்புகிறார்கள். பஞ்சன் லாமா பொறுப்புக்கு
சிறுவயதிலேயே ஆண்கள் தேர்வு செய்யப்பட்டு விடுவார்கள். சிறுகுழந்தையாக இருந்தாலும்
டாஷில்ஹன்போ என்கிற மடத்துக்கு அவர்தான் தலைமை தாங்குவார்.13 ஆம் தலாய் லாமா 1959 இல் நாடு நீங்கிய போது அவருக்குப் பதிலாக சீன அரசு பஞ்சன் லாமாவை பொறுப்பில்
அமர்த்தியது. தலாய் லாமாவை சீன அரசு தேச துரோகி என அறிவிக்கக் கூறிய போது சீன
அரசால் நியமிக்கப்பட்ட பஞ்சன் லாமா மறுத்துவிட்டார். அதற்காக 1964 இல் பஞ்சன் லாமாவை சீன அரசு கைது செய்தது. 1970 களில் விடுதலை செய்யப்பட்டார். 1989 இல் இறந்து போனார். 1995 இல் வேறொரு சிறுவன் பஞ்சன் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வழி தலாய்
லாமாவின் அதிகாரத்தை மட்டுப்படுத்த சீனா எண்ணியது. அவரும் சீனாவிற்குப் பணிய
மறுக்க சீனா வேறொரு சிறுவனை பஞ்சன் லாமாவாக நியமித்தது.
---------------------
358 - 24.12.2018
தியான வாழ்வு
வாழ்க்கையை
மிக எளிதாக அணுகச் சொல்லிக் கொடுத்தவர்கள் ஜென் துறவிகள். அவர்களது போதனைகள்
தனித்துவம் மிக்கவை. உள்ளத்தின் உள்ளொளியைக் கட்டுப்பாட்டில் வைப்பது தான்
அவர்களின் பொதுத்தத்துவம். ஜென்துறவிகளின் தத்துவ வடிவத்தில் நமக்குப் பெரும்பகுதி
கதைகளாகவே கிடைக்கின்றன. அதுபோல ஜென் துறவிகளைப் பற்றிய கதைகளும் ஏராளமாகக்
கிடைக்கின்றன. ஒரு கதை இப்படி அமைகிறது.
ஒருவர் ஜென் துறவி ஒருவரிடம் சென்று வாழ்வில் தியானம் இருப்பது எப்படி? என்று கேட்டார். அதற்குத் துறவி ‘என்னைப்
பார்த்துக்கொண்டே இரு’ என்று சொல்லிவிட்டு துறவி காலையில்
எழுந்து குளித்தார். பகல் முழுவதும் தோட்ட வேலைகள் செய்தார். உணவு வேளைகளில் உண்டார்.
வழிபாடு,
தியானித்தல், படித்தல் என்று வேறு எதுவும் செய்யவில்லை. சலிப்புற்ற மனிதர் துறவியிடம்
எப்பொழுதுதான் எனக்குத் தியானம் பற்றிக் கற்பிப்பீர்கள் என்று கேட்டார். அதற்குத்
துறவி வாழ்வில் தியானம் என்று தனியாக இல்லை. வாழ்வே தியானம் தான். நான் குளித்தது, தோட்ட வேலைகள் செய்தது, உண்டது எல்லாமே தியானம் தான். ஏனெனில் அதில் என் மனதை முழுமையாக ஈடுபடுத்தினேன். மனதை முழுமையாக ஈடுபட
வைக்கும் எந்தச் செயலும் தியானமே என்றார் ஜென்துறவி.
---------------------
359 - 25.12.2018
பிரபஞ்சனின் பெருந்தன்மை
தமிழ்
இலக்கியத்திற்கு அளப்பரிய பணிகளை ஆற்றியவர் எழுத்தாளர் பிரபஞ்சன். அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று அவர் எவ்வளவு
பெருந்தன்மையான மாமனிதர் என்பதை நிறுவி இருக்கிறது. மற்ற
எல்லாரையும் போல அவரது எழுத்துகளிலும் ‘விகாரம்’ என்ற சொல்லைக் காணமுடியும். பொது மக்களில் கூட பலர்
பேச்சு வழக்கில் ‘விகாரம்’ என்ற சொல்லைப்
பயன்படுத்துவதைப் பார்க்கலாம். ‘விகாரம்’ என்ற சொல் தமிழில் ‘மோசமானது’, ‘அருவருக்கத்தக்கது’, ‘சகிக்க முடியாதது’ என்ற பொருளில் பயன்படுத்துவதைப்
பார்க்கலாம். இந்தச் சொல்லை முதன் முதலில்
பயன்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள். என்றும் மனிதர்களை மதிக்க
வேண்டும், சமத்துவம் வேண்டும் என்று பேசிய புத்தர் மீது
பார்ப்பனர்களுக்கு இருந்த காழ்ப்புணர்ச்சியினால் புத்த ஆலயங்களை குறிக்கும் ‘விகாரை’ அல்லது ‘விகார்’ என்ற சொல்லை இழிவான பொருளில் பயன்படுத்தினார்கள் என்றும் எழுத்தாளர்
சாக்கிய மேனன் பிரபஞ்சனிடம் தகுந்த ஆதாரத்துடன் எடுத்துக் கூறியபோது அந்த சொல்லை
தனது படைப்புகளில் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டார் பிரபஞ்சன். பிரபஞ்சனின் பெருந்தன்மை போற்றுதலுக்கு உரியது.
---------------------
360 - 26.12.2018
திடீரெனத் தோன்றும்
குறிப்பு
ஆங்கில
கவிஞர் பைரன் சிறந்த பேச்சாளரும் கூட. எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்பவர்களுக்கு சலிப்புத் தட்டாது என்று அவர்
வாழும் காலத்திலேயே பெயர் எடுத்தவர். அவருக்கு இன்னொரு
சிறப்பு என்னவென்றால் அவர் பேச வேண்டும் என்பதற்காக ஒரு போதும் முன் தயாரிப்பு
செய்யாதவர். எந்தவித திட்டமிடலும் இன்றி மேடை ஏறி அந்த
நொடியில் என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தவர். அவர் ஒரு முறை உரையாற்றும் போது மனிதர்களின் சிறுமையை கண்டு ‘ஏய் நாய்களே’ என்று குறிப்பிட்டார். பிறகு மனிதர்களை விட நாய் உயர்வானது என்பதை சட்டென்று உணர்ந்து ‘ஏய் மனிதர்களே’ என்று மாற்றிக்கொண்டார்’ தடுமாறிய இந்தக் குறிப்பை மட்டுமே வைத்துக் கொண்டு அன்றைய உரையை சிறப்பாகப்
பேசி முடித்தார். அந்த உரை இப்படி அமைந்திருக்கிறது ‘நாம் மனிதர்களும் இல்லை, விலங்குகளும் இல்லை. நம்மிடம் ஒட்டி இருக்கும் விலங்கு குணாதிசயங்களை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கும்
போது தான் மனிதர்கள் ஆகிறோம். மனிதர்களாக இருக்க வேண்டும்
என்றால் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை.
விலங்குகளில் இருந்து வேறுபட்டாலே போதும். என்பதுதான் பைரனின்
அன்றைய உரையின் சுருக்கம்.
---------------------
361 - 27.12.2018
இகபானா
ஜப்பானில்
நடைமுறையில் இருக்கும் மலரால் செய்யப்படும் ஓர் அலங்கார கலையை இகபானா எனக்
குறிப்பிடுகிறார்கள். புத்தரை மலர் கொண்டு வழிபட்ட பிக்குகளால்
இந்த அலங்காரக் கலை கிபி ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. பின்னாலில் அது ஒரு தனிக்கலைப் பிரிவாக வளர ஆரம்பித்தது. அதைப் போன்று மலர்களை வைத்து செய்யப்படும் வெவ்வேறு கலை பிரிவுகளும்
உண்டாகிவிட்டன. ‘மலர் அலங்காரம்’ என்றால் மலர் மட்டுமல்ல மலர்ச்செடியின் ஒவ்வொரு உறுப்புகளும் அலங்காரத்தில்
பயன்படுத்தப்படும். தண்டு, இலை ஆகியவை
கூட இகபானாவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தண்டு, இலை, மொட்டு என அமைந்த ஒவ்வொரு உறுப்புகளும் தத்துவ
விளக்கமும் அந்நாளில் சொல்லப்பட்டது, ஆனால் இன்று இக்கலை
திருமண வயதில் இருக்கும் பெண்கள் அல்லது வயதான பெண்களின் நுண்ணிய
வேலைப்பாட்டுத்திறனை வெளிப்படுத்தும் ஒன்றாக மாறியிருக்கிறது. தத்துவங்கள் அழகியலாக மாறும்போது அது தனது உண்மைத் தன்மையை இழந்து விடும்
என்பதற்கு இகபானா மிகச் சிறந்த உதாரணம்.
---------------------
362 - 28.12.2018
நியாயத்திற்கான
வெகுமதி
1924 ஆம் ஆண்டு மே மாதம் 15
ஆம் தேதி முதல் தந்தை பெரியார் கேரளத்தின் வைக்கம், கொல்லம், தக்கலை,
ரணியல், புதன்கடை, நெடுங்கண்டை, கோட்டயம் ஆகிய இடங்களில் சத்யாகிரகத்தை ஆதரித்து பேசினார். இதனால் பெரியாருக்கு ஏராளமான எதிர்ப்புகள் வந்தன.
தீண்டப்படாத வகுப்பு மக்கள் பொதுச்சாலையில் நடக்கக்கூடாது என்பதை மீறி சாலையில்
நடக்கச் சொல்லி பெரியார் தூண்டியதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. விசாரணை முடிந்து ஒரு மாத காலம் சிறை தண்டனை அனுபவித்தார். பிறகு திருவனந்தபுரம், கோட்டயம், கொல்லம் ஆகிய மாவட்டத்தில் தந்தை பெரியார் பேசக்கூடாது என்று தடை
விதிக்கப்பட்டது. பிறகு திருவிதாங்கூரை விட்டு வெளியேறுமாறு
ஆணை பிறப்பிக்கப்பட்டது. பெரியார் வெளியேறவில்லை. ஆணையை மீறியதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு நான்கு மாத காலம் சிறைத்
தண்டனை விதிக்கப்பட்டது. ஒரே வருடத்தில் பெரியார் ஐந்து மாத
காலம் சிறை தண்டனை அனுபவித்ததற்குக் காரணம் தீண்டப்படாத மக்களும் பொதுப் பாதையில்
நடக்க உரிமை வேண்டும் என்று கேட்டது தான்.
---------------------
363 - 29.12.2018
சுமோ
ஜப்பானில்
வழக்கத்தில் உள்ள ஒரு வகை மற்போரை 'சுமோ' என குறிப்பிடுகிறார்கள். 15 அடி
விட்டமுள்ள வட்டத்திற்குள் போட்டி தொடங்கும். போட்டியாளர் வட்டத்திற்கு வெளியே தள்ளப்பட்டாலோ அவரது உடலின் ஏதாவது ஒரு
பகுதி தரையில் பட்டாலோ அவர் தோற்றவராக அறிவிக்கப்படுவார்.
பங்கேற்கும் போட்டியாளரின் எடையளவு, பலம் ஆகியன முக்கியமானவை. அதோடு தாக்குதலின் திடீர் தன்மையின் வேகமும் கூட வெற்றிக்கான புள்ளிகளாகக் கொள்ளப்படும். சுமோ வீரர்கள் அதிகமாக புரதச்சத்து உணவுகளை
எடுத்துக் கொள்வதால் அவர்களது குறைந்தபட்ச எடை 136 கிலோவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மேல் இருக்கும் அவர்களது எடையின் ஒவ்வொரு கிலோவும்
வெற்றிக்கான புள்ளிகளோடு சேர்க்கப்படும் என்பதால் போட்டியாளர்கள் அதிக எடையோடு
இருப்பார்கள். பழங்கால விளையாட்டான சுமோவில் போட்டியாளரின்
தகுதி, சிக்கலான அளவை முறைகளைக் கொண்டு அளவிடப்படுகிறது.
பிறந்தது முதல் பல வருடங்கள் பயிற்சி பெற வேண்டிய இந்த மற்போர் போட்டி மிகக்
குறைந்த நேரமே நிகழ்த்தப்படுகிறது. சில நேரங்களில் ஒரு
நிமிடத்திற்கு உள்ளாகவே போட்டி நடந்து முடிந்து விடும்.
---------------------
364 - 30.12.2018
சர்வாதிபத்தியம்
பொதுமக்களின்
எல்லா அம்சங்களையும் அரசின் ஆதிக்கத்திற்கு கீழே கொண்டு வரும் ஆட்சி அமைப்புக்குச்
சர்வாதிபத்தியம் என்று பெயர். உங்கள்
தட்டில் என்ன உணவு இருக்கிறது என்பதை உங்களுக்குத் தெரியாமல் ஒருவர்
கண்காணிக்கிறார் என்றால் அதற்கும் சர்வாதிபத்தியம் என்று தான் பெயர். இந்த சர்வாதிபத்தியம் என்ற சொல்லை 1920 களில் தொடக்கத்தில் முசோலினி தான் உருவாக்கினார். சர்வாதிபத்தியம் கடைபிடிக்கும் நாட்டில் எல்லா அரசியல்
அமைப்பும் காரணம் இல்லாமல் மாற்றப்படும். தேவையே இல்லாத
புதியபுதிய சட்டங்கள் உருவாக்கப்படும். மிகப்பெரிய
வன்முறைகளை அரசு சரி என்று நியாயப்படுத்தும். தனது தடாலடியான
குறிக்கோளை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதுவே அரசின் நோக்கமாக இருக்கும். சர்வாதிபத்தியம் இருக்கும் நாட்டில் மக்கள் எப்படி அவதிப்படுவார்கள்
என்பதை கருவாகக் கொண்டு 1951இல்
ஹன்னா அரேண்ட் என்பவர் எழுதிய ‘The Origins of
Totalitarianism’ என்கிற புத்தகம் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய
ஒன்று.
---------------------
365 - 31.12.2018
ஹென்றி ஃபோர்டு
திறமையும்
திட்டமிட்ட உழைப்பும் வாழ்க்கையை மேம்படுத்தி விடும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்
ஹென்றி ஃபபோர்டு. 1863 இல் பிறந்த ஹென்றி ஃபோர்டு பிறந்ததிலிருந்து சொல்ல முடியாத வறுமை. ஒருவேளை உணவுக்காக இளமைக்காலம் வரை வீதி வீதியாக அலைந்தவர். பின்னாளில் கார் தயாரிப்பில் மாபெரும் சாதனைகளை நிகழ்த்தி அமெரிக்காவின்
பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முன்னணி தொழில் அதிபராக மாறினார். அமெரிக்கர்கள் ஹென்றி ஃபோர்டு கம்பெனி தயாரித்த காரில் பயணிப்பதை
கௌரவமாகக் கருதினார்கள். ஒரு முறை உங்கள் வெற்றியின் ரகசியம்
என்ன என்று கேட்டபோது லட்சியத்திற்கான இலக்கைத் தீர்மானித்து அதை நோக்கி மனதை
ஒருமுகப்படுத்தினால் வெற்றிக்கான எல்லை நம்மை தேடி வரும். ஒரே
எண்ணத்தில் மனம் ஒன்றிவிட்டால் யாருக்கும் எந்த சாதனையும் எளிமையானது தான் என்றார்
ஹென்றி ஃபோர்டு. ‘தோல்வி என்பது
கூடுதல் திறமையோடு செயல்படுவதற்கான வாய்ப்பு’ என்கிற அனுபவமொழி ஹென்றி ஃபோர்டு
- வின் புகழ்பெற்ற சொற்றொடர்.
---------------------
இன்னும் இருக்கு…
Comments