Skip to main content

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

 ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.
இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்வுகளை எப்படிப் பாதுகாக்கிறது? என்ற கேள்விகளோடு தனது விவரிப்பைத் தொடங்குகிறார்.
கல்வி, மொழி, மனஉறுதி முதலியன சவர்ணர்களுக்கு ஏன் சதாராணமாகத் தெரிகின்றன, அவையெல்லாம் அவர்களுக்கு எந்த விதமான போராட்டமும் இல்லாமல் எப்படி எளிதாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது, அவற்றின் அடிப்படைகளைப் பெறுவதற்குக் கூட பிறப்பால் ஒடுக்கப்பட்டவர்கள் ஏன் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள், சமூகத் தடைகளால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, ஏன் அவர்களின் ‘தனிப்பட்ட தோல்வி’களாகச் சித்திரிக்கப்படுகிறது என்பதையெல்லாம் விளக்குகிறார். இந்த இடங்களில் போதுமான ஆழம் தவறியிருக்கிறது.
நூலில் ஓரிடத்தில் ‘மெரிட்’ என்ற வாதமே ‘புராணத் தன்மை’ வாய்ந்தது என்கிறார். பழமையானது என்ற பொருளில் அல்ல. 'பொய்யைப் புனிதமாக்கும் செயல்' என்கிற பொருளில் அப்படிக் குறிப்பிடுகிறார். பள்ளி, மொழி, குடும்பம், நட்புறவுகள் அனைத்தும் சாதியால் தீர்மானிக்கப்படும் போது ‘நான் மெரிட்டில் வந்தேன்’ என்பது எப்படி மெரிட்டாகும்? என்கிற அவரது கேள்வியில் நியாயம் இருக்கிறது.
இடஒதுக்கீட்டு எதிரான சவர்ணர்களின் மனநிலை தான் அவர்களை ‘அனைவருக்கும் சமமான வாய்ப்பு’ எனப் பேச வைக்கிறது. அப்படிப் பேசி தங்களை நல்லவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் ஆகச் சிறந்த அநீதிகளின் உற்பத்திச் சாலைகளே அவர்கள் தான் என்கிறார். தொடர்ந்து, சவர்ணர்கள் சாதிக்கு எதிராகச் செயல்பட வேண்டுமானல் அவர்களது வேலைத் திட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறார். முதலில் அவர்கள் சாதிக்கெதிரான தங்களுடைய மெளனங்களைக் கலைக்க வேண்டும். அதிகாரத்தைப் பகிர முன்வர வேண்டும். பிறரின் பிரச்சினைகளைக் காது கொடுத்து கேட்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் தாங்கள் உட்கார்ந்திருக்கும் மேடையை விட்டு விலக வேண்டும் என்கிறார். மேடை என்பதை ‘உயர்சாதி’ என்கிற பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்.

ஊடகங்களில் யார் பேசுவதைப் பெரிதுபடுத்தி பரப்ப வேண்டும். யார் பேசுவதை மறைத்துவிட வேண்டும் என்பதில் சவர்ணர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பதை விவரிக்கும் அவர், சவர்ணர்களால் தான் யாருடைய மொழி உச்சரிப்பு நாகரிகமானது, யாருடைய அனுபவம் தேசியமானது என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பதைச் சுட்டுகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இதைவிட அடர்த்தியான ஆய்வுகள் நிறைய வந்திருக்கின்றன. என்றாலும் விற்றுத் தீருமளவுக்கு இந்த நூல் உடனடிக் கவனம் பெறுவதற்கு என்ன காரணம் என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது.
சாதி குறித்து அறிவதில் அனுபவம் கொண்டவர்களுக்கு இந்நூலில் புதியதாக எதுவுமில்லை. என்றாலும் சொல்லிக் கொண்டே இருப்பதன் தேவை இன்னமும் அப்படியே தானே இருக்கிறது. அந்த வகையில் சவர்ணர் ஒருவரால் எழுதப்பட்ட, உள்ளிருந்து ஒலித்த நேர்மையான புத்தகம் என்று இதைச் சொல்லலாம்.

.......


Read in English...

Regarding Meet the Savarnas, written by Ravikant Kisana… Ravikant Kisana, an Associate Professor at Woxsen University, Hyderabad, is interested in ethnography. He writes particularly on caste. His book Meet the Savarnas, published in May 2025 with the subtitle Indian Millennials Whose Mediocrity Broke Everything, attracted my attention when an introduction to it appeared in Frontline in July. When I searched for the book on Amazon after reading that introduction, it was sold out. I bought and read it when it became available again. Yesterday (28.12.2025), a paragraph about this book was also published in the English daily The Hindu. All these together created an interest in writing about it in Tamil. In this book, Ravikant begins his discussion with questions such as: Who are the savarnas? Why is caste being described as something of the past? How does the well-known savarna statement “we do not see caste” function to protect their caste consciousness? He explains why education, language, confidence and similar attributes appear ordinary to savarnas, how all these come to them easily without any struggle, and why people who are oppressed by birth are still struggling even to obtain the basic foundations of these advantages. He also explains why the injustice inflicted on the oppressed due to social barriers is portrayed as their “personal failure.” In these places, sufficient depth is missing. At one point in the book, he states that the very argument of “merit” has a “mythical” nature—not in the sense of being ancient, but in the sense of sanctifying falsehoods. When school, language, family and social networks are all determined by caste, how can the claim “I came here on merit” be considered merit? There is justification in this question of his. It is the savarnas’ opposition to reservation that makes them speak of “equal opportunity for all.” By speaking thus, they present themselves as good people. In reality, he argues, they themselves function as factories producing the finest forms of injustice. He then goes on to list what the action plan of savarnas should be if they truly wish to act against caste. First, they must break their silence on caste. They must be willing to share power. They must listen attentively to the problems of others. Above all, they must step down from the stage on which they are seated. Here, the word “stage” is used in the sense of “upper caste.” Describing how savarnas are extremely careful in deciding whose voices should be amplified and whose should be silenced in the media, he points out that it is savarnas who determine whose language pronunciation is considered cultured and whose experience is considered national. In Tamil, far more dense and rigorous studies than this have already appeared. Even so, one has to reflect on why this book has received immediate attention to the extent of selling out. For those who have long been familiar with caste, there is nothing new in this book. Yet, the need to keep saying these things still remains exactly the same. In that sense, this can be described as an honest book, written by a savarna, speaking from within.

Comments

Popular posts from this blog

ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ்: தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சி

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சிவில் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவர் ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் (Hosea Lorenzo Williams). போராட்டக் களத்தில் வெகுஜன உளவியலின் உருவாக்கத் தேவையை நன்கு அறிந்திருந்த அவர் , சமகாலத் தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ளப் பங்களித்து இருக்கிறார் . சர்வதேசிய அளவில் சிவில் உரிமைப் போராட்டக் களத்தின் எதார்த்த முகமாக இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் வில்லியம்ஸ் ஜனநாயகம் , அகிம்சை , அரச வன்முறை , ஊடக அரசியல் , வர்க்கம் , இனம் ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகும் பெரியதொரு அரசியல் கேள்வியை அவர் காலத்தில் தம் வாழ்வனுபவத்தின் வழி எழுப்பியிருந்தார் . தேர்தல் பாதையில் அரசமைக்கும் நாடுகளுக்கான கேள்வி அது . ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் மதநீதியும் அரசியலும் வில்லியம்ஸ் 1926 ஜனவரி 5 ஆம் தேதி , அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தவர் . ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு கல்வி , வேலை , வீடு , வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்த ஜிம் க்ரோ (Jim Crow ) சட்டங்கள் அமலில் இருந்தபோது இளமைப் பருவத்தைக் கடந்தவர் . இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...