Skip to main content

நூல் அறிமுகம்

 

கே.என்.சிவராஜ பிள்ளையின் THE CHRONOLOGY OF THE EARLY TAMILS என்கிற நூல் பற்றிய குறிப்புகள்

ஞா.குருசாமி

கே.என்.சிவராச பிள்ளை தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் பொழுது எத்தகைய முன்னாய்வுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். தன்னுடைய ‘The Chronology of the Early Tamils’ நூலில் இலக்கிய வரலாற்றை எழுத முனைகிறவர்கள் என்னென்ன விசயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய நூலில் எவையெவை கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் விவரிக்கிறார். அதில்  குறிப்பாக மூன்று விஷயங்களைக் குறிப்பிடலாம். ஒன்று தொன்மம் குறித்த மறுப்பு, இரண்டு சொல் பயன்பாட்டு ஆய்வின் வழி காலத்தை உறுதி செய்தல், மூன்று காலத்தின் வரிசைப்படி வரலாற்றை எழுதுதல்.

அவர் தொன்மத்தை மறுத்தல் என்பதில் சங்கம் பற்றி இறையனார் களவியல் உரை தருகிற செய்திகளை மறுக்கிறார். அகத்தியர் பற்றி வழங்கிவரும் செய்திகளை முற்றாக மறுக்கிறார். அகத்தியர் பற்றிய செய்திகளும் சங்கம் பற்றிய செய்திகளும் உண்மைக்குப் புறம்பானவை. நம்ப முடியாதவையாக இருக்கின்றன என்பதை சான்றுகளோடு நிறுவுகிறார்.

நூலின் அட்டைப்படம்

 உந்து, ஆங்கு என்கிற இரண்டு சொற்கள் வழி காலத்தை வரையறை செய்ய முடியும் என்று நிறுவியிருக்கிறார். உந்து வினைமுற்று சொல். பெயரெச்சம் அல்ல. பலரால் அது பெயரெச்சம் என தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார். ஒரே பாடலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில்உந்து சொல் வந்து வினைமுற்றாக இருக்கும் போது, அந்த பாடலில் ஆங்கு என்ற இடைச்சொல்  வரும். அதுதான் பாட்டில் வரும் பல வினைமுற்று தொடர்களின் பொருளைத் தொகுத்துத் தரும். சங்க இலக்கியத்தில்ஆங்கு என்ற சொல்லை புரிந்து கொள்ளாமல் உந்து என்கிற வினைமுற்றுச் சொல்லை புரிந்து கொள்ள முடியாது என்கிறார் கே.என்.சிவராஜ பிள்ளை.

 மேலும் அவர் தொல்காப்பியர் உந்து வினைமுற்று சொல் பற்றி கூறவில்லை என்று குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தில்உந்து என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்களாக மாங்குடி கிழார், ஒருசிறை பெரியனார், பரணர், கருவூர் கதப்பில்லை, புறத்திணை நன்னாகன், கோவூர்கிழார், மதுரை நக்கீரர் முதலியோர்களைக் குறிப்பிடுகிறார். இவர்களெல்லாம் உந்து என்கிற சொல்லை பயன்படுத்தி எழுதிய பாடல்கள் புறநானூற்றில் கிடைக்கின்றன. இப்புலவர்களைத் தொல்காப்பியர் காலத்துக்கு முந்தியவர்கள் எனக் குறிப்பிடும் கே.என். சிவராஜ பிள்ளை, உந்து என்னும் சொல் வழக்கு தொல்காப்பியர் காலத்தில் வழக்கொழிந்திருக்க வேண்டும், அல்லது இழிவழக்காக இருந்திருக்க வேண்டும் அல்லது தொல்காப்பியர் காலத்திற்கு பின்னால் வழக்கிற்கு வந்திருக்கலாம் என்கிறார். இதில் மூன்றாவது காரணம் ஏற்புடையதாக இல்லை. ஏற்றால் கே.என்.சிவராஜ பிள்ளையின் ஆய்வே முரணாகும் அபாயமிருக்கிறது.

 இலக்கிய வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல்களாக 1. தலைமுறையை பகுப்பதில் உள்ள சிக்கல்,  2.காலவரையறையை முடிவு செய்வதில் உள்ள சிக்கல் என இரண்டு சிக்கல் பற்றிக் கூறும் அவர், அவற்றை எவ்வாறு வரையறை செய்வது என்பதை விளக்குகிறார். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எழுதும் பொழுது ஓர் இலக்கிய வரலாறு உண்மையிலேயே வரலாறாக இருக்கும் அதில் உண்மைக்கு புறமான செய்திகளுக்கு இடம் இருக்காது. நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும் என்கிறார். நூல் ஆங்கிலத்தில் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்நூல் 1932 - இல் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கிறது. மொத்த பக்கம் 316. அன்றைய விலை ரூ 5/-

.................................



Comments

Popular posts from this blog

கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ‘ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’

இலக்கியக் கட்டுரை என்றால் வரையறுக்கப்பட்ட வடிவத்தோடும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின் சேர்க்கையோடும் எழுதப்படுவது என்கிற நம்பிக்கை பரவலாக இருந்து வருகிறது . இந்தச் சட்டகத்திற்குள் சிக்காமல் ஜனரஞ்சகமாக , அதே சமயம் புனைவிற்கான மொழியில் அமைந்திருக்கிறது ‘ ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு ’. இராமனாதனின் இந்த நூலில் இலக்கியம் , திரை , ஆளுமைகள் , அனுபவங்கள் என்னும் பகுப்பின் கீழ் 28 கட்டுரைகள் இருக்கின்றன . அவை யாவும் காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் வெளி வந்தவை . இந்நூலை வாசிக்கிறவர்கள் அவரவர் வாசிப்பு , அனுபவம் சார்ந்து பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும் . நூலாசிரியர் லண்டனில் உள்ள ஷெர்லாக் ஹோம்ஸ் அருங்காட்சியகத்திற்குச் சென்ற அனுபவத்தை வைத்துக்கொண்டு எழுதப்பட்ட ‘ ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு ’ முதல் கட்டுரையாக இடம் பெற்றிருக்கிறது . ஒரு படைப்பு பல்வேறு அடையாள வேறுபாடுகளைத் தாண்டி வாசிப்பு மனங்களை இணைக்கும் வல்லமை வாய்ந்தது என்பதை ஸ்பானிய மொழியைப் பேசும் ஒரு சிறுவனுடன் தான் உரையாடிய வேடிக்கையான சம்பவத்தை வைத்து விவரித்து இருக்கிறார் . அதாவது அந்தச் சிறுவன் நிறுத்தி நிறுத்தி ஆங்கிலத்தில் இராமன...

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள் ஞா. குருசாமி, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி இருந்த அனிதா என ஆராய்ச்சிலும் கல்வியிலும் தனித்திறன் பெற்ற திறமைசாலிகளை அரசு எந்திரம் குறிவைத்து தற்கொலைக்கு உள்ளாக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தேசத்தில் வருணாசிரமத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சதிக்கொடுமை ஒன்றும் புதியதல்ல. ஏகலைவர் காலம் தொடங்கி நடத்து வருகிறது. ஏகலைவர், நந்தர் என்னும் மிக நீண்ட வரிசையில் இன்றைக்கு அனிதாவை இழந்திருக்கிறது இந்த சமுதாயம் என்று மிகவும் மொன்னையான சமாதானத்தைத் தற்காலிகமாகக் கூடத் தேடிக்கொள்ள மனம் மறுக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் முக்கியக் கவனம் பெற்ற நிகழ்வு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து களம் கண்டனர். அது தமிழர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் உறங்கிக் கிடந்த வீரத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசப்பட்டத...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...