Skip to main content

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது.

கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு மாமா அக்காதான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் போங்கவாரேன்என்பாள். தோணினால் போவாள். இல்லை என்றால் இல்லை. போனால் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ விரும்பம் போல வேலை செய்வாள். வேலை நேரம் முடியும் வரை செய்ய மாட்டாள். இடையிலேயே வீட்டிற்குத் திரும்பி விடுவாள். அவள் செய்த வேலைக்கு கூலி வாங்க மாட்டாள். ஆதலால் நினைத்த நேரத்திற்குப் போய் சிறிது நேரம் செய்துவிட்டு திரும்பி விடுவது அவளுக்கு வசதியாக இருந்தது. அது தோட்டக்காரியோடு நட்பு பேண உதவும். தோட்டக்காரி என்றாவது ஒரு நாள் சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுவாள். கேட்டுக் கூட வாங்கிச் சாப்பிடுவாள். பார்த்திருக்கிறேன்.

அக்காவுக்கு ஸ்பெஷல் குணம் ஒன்று உண்டு. அந்தத் தெருவுக்கு அவள் தான் நீதிபதி. குழாயடி, கறிக்கடை, கோழித் திருட்டு, சாக்கடை அடைப்புச் சண்டைகள் எல்லாவற்றையும் அக்கா தான் உள்ளே புகுந்து பஞ்சாயத்து வைப்பாள். தொண்டை நரம்பு புடைக்க ஓங்கி ஓங்கி வைவாள். வார்த்தைகள் ஏடாகூடமாக இருந்தாலும் அவள் நீட்டி முழங்கிச் சொற்களை உச்சரித்து முடிக்கும் விதம் ரசிக்கும் படி இருக்கும். மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட மொழிநயம் அவளது நாக்குத் தாளத்தில் பட்டுத்தெரிக்கும்.

போலீஸ் ஸ்டேசன் கூட அடிக்கடி போவாள். போலீஸ் எல்லாமே அவளுக்கு மாமா தான். பார்த்தவுடன் அக்கா பிள்ளைக செளக்கியமா மாமாஎன்று தான் பேச்சை ஆரம்பிப்பாள். அவளைப் பற்றித் தெரியும் என்பதால் போலீஸ்காரர்களும் பெரிதுபடுத்த மாட்டார்கள். ஒரு முறை எங்கள் பங்காளிகளுக்கும் எங்களும் சிறு தகராறு வந்து எனது அப்பா ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நானும் என் அம்மாவும் உடன் சென்றோம். செய்தியைக் கேள்விப்பட்டு நாங்கள் ஸ்டேசன் போன சிறிது நேரத்தில் டவுசர் அக்கா வந்து விட்டாள். இன்ஸ்பெக்டரைப் பார்த்து மாமா…’ என்று தான் பேச்சை ஆரம்பித்தாள். அவரது மனைவி, பிள்ளைகளை இயல்பாக விசாரித்தாள். பிறகு எங்கள் தரப்பு நியாயங்களை இன்ஸ்பெக்டரிடம் சொன்னாள். அவர் நாளை ஸ்டேசனுக்கு வரச்சொல்லி எங்களை அனுப்பி விட்டார். வீட்டிற்கு வந்துவிட்டோம். அக்கா எங்களோடு வரவில்லை. நேராக இன்ஸ்பெக்டர் வீட்டிற்குப் போய் அவரது மனைவியிடம் பேசிவிட்டு அவர்களது வீட்டில் இருந்த சிறுசிறு வேலைகளையும் செய்து கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கிறாள். அடுத்த நாள் இன்ஸ்பெக்டர் சொன்ன படி ஸ்டேசன் போனோம். எங்கள் பங்காளிகளும் வந்திருந்தார்கள். இனி சண்டை சத்தம் போடக் கூடாது என்று மிரட்டல் தொனியில் எங்கள் இருதரப்பாரிடமும் சொல்லி அனுப்பிவிட்டார். இப்படி இன்ஸ்பெக்டர் சாந்தமானதற்கு அவர் மனைவியிடம் அக்கா முதல் நாள் பேசியது தான் காரணம்.  இது பிற்பாடு தான் எங்களுக்குத் தெரிய வந்தது. இப்படி நிறைய சில்லறை கேஸ்களை அக்கா செலவில்லாமல் முடித்து வைத்திருக்கிறாள். தேவைப்படுகிறவர்களுக்கு ரேசன் கார்டு, முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவதும் அக்காவின் பணியாக இருந்தது.  சில பொழுது காலை நேரங்களில் பள்ளிக்கூடம் போகும் பிள்ளைகளுக்கு அவளே முன்வந்து ஜடை பின்னிவிடுவாள். இத்தானைக்கும் அக்கா படித்தது ஐந்தாம் வகுப்பு தானாம். தெரு, வீடுகளுக்குள் நுழைந்த பாம்பு ஒன்று கூட உயிருடன் திரும்பி அதன் இருப்பிடம் சேராது. அனாசயமாகப் பிடித்துக் கொல்லுவாள்.

டவுசர் அக்காவுக்குத் திருமணம் நடந்தது. திருமணம் என்றால் பெரிய அளவில் இல்லை. ஒருவரோடு இணைந்து வாழத் தொடங்கி இருந்தாள். சில மாதங்களிலேயே மாமா பிரிந்து விட்டார். காரணம் அக்கா போட்ட சில கண்டிசன்களாம். அவரே என்னிடம் சொன்னார். அக்கா சொன்னதில் 1. என்னை சம்பாதித்து வரச்சொல்லிக் கட்டாயப்படுத்தக் கூடாது. 2. பிள்ளை பெறச் சொல்லக் கூடாது. 3.டவுசரில் கத்தி இருந்துகொண்டு தான் இருக்கும் என்பன முக்கியக் கண்டிசன்கள். தொடக்கத்தில் சரி சொன்னவர், பிற்பாடு மெல்ல மெல்ல அக்காவைக் கட்டுப்படுத்தத் தொடங்கி இருக்கிறார். அது அக்காவிடம் வேலைக்கு ஆகவில்லை. பிரிந்துவிட்டார். பிறகு அக்கா கடைசி வரை ஆண் துணை பற்றி யோசிக்கவே இல்லை. அவளது கண்டிசனை ஏற்கும் ஆண்கள் எங்கும் இல்லை என்பதை அவள் தெரிந்தே வைத்திருந்தாள்.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நான் அக்காவிடம் பேசியிருக்கிறேன். படிக்கிற பயல்களிடம் மிக நாகரிகமாக பேசுவாள். 2000 களில் நான் மதுரையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்தபோது அவளிடம் பேச்சுக் கொடுத்தேன். தன்னை கம்யூனிஸ்ட்என்று சொன்னாள். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. பெரும்பாலும் அக்காவின் பேச்சு எனக்குச் சிரிப்பைத்தான் வரவழைக்கும். அன்று சிரித்தாலும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. எங்கள் பகுதி கம்யூனிஸ்ட் ஒருவரிடம் கேட்ட போது அக்காவிற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னார். அக்காவை ஒரு கெட்ட வார்த்தை சொல்லி திட்டவும் செய்தார். எனக்குள் அக்கா ஏன் பொய் சொன்னாள்என்ற கேள்வி அலையடித்துக் கொண்டே இருந்தது . அக்காவிடமே கேட்டு விட்டேன். அதற்கு அவள் கம்யூனிஸ்ட் என்றால் அவர்கள் மட்டும் தான் இருக்க முடியுமா? எனக்கு நானே இருக்கக் கூடாதா?’ என்று என்னிடம் எதிர்க்கேள்வி கேட்டவள், ‘என்னைப் பற்றி அவனிடம் ஏன் விசாரிச்சஎன்று கோபமாகத் திட்டினாள். அந்த ஆசாமி ரேசன் அரிசி கடத்துவதில் கில்லாடி என்பதைக் கூட அக்கா தான் அப்போது என்னிடம் சொன்னாள்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். உண்மையான கம்யூனிஸ்ட் தேர்தல் அரசியலில் ஈடுபடக் கூடாது தெரியுமாடா உனக்கு?’ என்று வெடுக்கெனக் கேட்டாள். கம்யூனிஸ்ட் கத்திவச்சுக்கலாமா என்றேன். கத்தி கூடாதுனா துப்பாக்கி வச்சுக்குவேன். உனக்கு ஏன் வலிக்குது?’ என்றாள். கடைசி வரை அவள் மண்ணெண்ணெய் ஊற்றி ஓட்டித் திரிந்த டிவிஎஸ் 50 யின் சத்தம் இப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.கத்தியோடே புதைக்கப்பட்ட கம்யூனிஸ்ட்காரிக்கு வீரவணக்கம்.

 

………….. 

Comments

Popular posts from this blog

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள் ஞா. குருசாமி, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி இருந்த அனிதா என ஆராய்ச்சிலும் கல்வியிலும் தனித்திறன் பெற்ற திறமைசாலிகளை அரசு எந்திரம் குறிவைத்து தற்கொலைக்கு உள்ளாக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தேசத்தில் வருணாசிரமத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சதிக்கொடுமை ஒன்றும் புதியதல்ல. ஏகலைவர் காலம் தொடங்கி நடத்து வருகிறது. ஏகலைவர், நந்தர் என்னும் மிக நீண்ட வரிசையில் இன்றைக்கு அனிதாவை இழந்திருக்கிறது இந்த சமுதாயம் என்று மிகவும் மொன்னையான சமாதானத்தைத் தற்காலிகமாகக் கூடத் தேடிக்கொள்ள மனம் மறுக்கிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் முக்கியக் கவனம் பெற்ற நிகழ்வு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து களம் கண்டனர். அது தமிழர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் உறங்கிக் கிடந்த வீரத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசப்பட்டத...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...