Skip to main content

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

 


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர், அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர். அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார். அதற்காக சடங்குகள், பழக்க வழக்கங்கள், இலக்கிய இலக்கணங்கள், நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார். வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார். ஒரு வாசிப்பின் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார். தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர், திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார். அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்திதாசர்

அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு, பண்பாடு, இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது. இந்தியாவின் ஆட்சிப் பணியில் இருந்த ஆங்கிலேயர்களிலும் குறிக்கத்தக்க ஆய்வாளர்கள் இருந்தனர். இந்தியப் பண்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் விளைவாக ஒரு புதிய ஆய்வுக் கோணம் இந்தியர்களுக்குக் கிடைத்தது. அதன் பயனாக சுதேச ஆய்வாளர்கள் உருவாகிவிட்டிருந்தனர். இந்தச் சூழலில் வாழ்ந்த அயோத்திதாசர், ஐரோப்பியப் பார்வைகளின் தாக்கத்தை உணர்ந்திருந்தாலும் தம்முடைய ஆய்வுகளுக்குள் அவை வந்துவிடாதவாறு பார்த்துக் கொண்டார். சுதேச ஆய்வு முறையியலையே பயன்படுத்திக் கொண்டார். அதை மிக முக்கியமான நிலைப்பாடு என்றே சொல்ல வேண்டும். இங்குத் திரிபுகளாக இருப்பவற்றை, அது தான் உண்மை என்று நம்பி மனதில் ஆழமாகப் பதிந்து போயிருப்பதை எதிர்கொள்வதற்குச் சுதேசத்திற்கு வெளியிலிருந்து வந்த பார்வையைத் துணையாகக் கொள்ளும்போது அது அவரது தருக்கத்திற்கு நியாயம் செய்யாமல் போய்விடும் சிக்கல் உண்டு. அதை அயோத்திதாசர் உணர்ந்திருந்ததன் விளைவு அவற்றில் இருந்து விலகியே இருந்தார். சுதேச அணுகுமுறையின் துணைகொண்டே தமது தருக்கத்தை முன்வைத்தார்.

மனிதர்களின் அணுகலுக்கு எதிராக மூடிய துண்டிப்பாக இருக்கும் சாதியப் பாகுபாட்டுக்கான காரணங்களைப் பெளத்தப் பின்னணியிலிருந்து விளக்கினார். சமத்துவத்திற்குப் பெளத்தமே வழி என்பதைத் தீர்க்கமாக வலியுறுத்தினார். சாதியின் பெயரால் நடக்கும் அனைத்துச் சிக்கலுக்கும் பெளத்தத்தில் விடுதலை உண்டு என நம்பினார். தமக்குச் சாத்தியப்பட்ட மதத்திற்குள் இருந்துகொண்டு சாத்தியப்படாத மதத்தின் ஆபத்தான அம்சங்களை விமரிசிப்பதும் அதற்கு எதிரான மாற்று வாழ்வியலை அல்லது பூர்விக வாழ்வியலை முன்வைப்பதான உத்தியை இயக்கச் செயல்பாடாகவும் செய்து காட்டினார்.  இது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் இருந்த ஓர் அறிவுச்செயல்பாடு.

மேற்குலகில் கிறித்தவத்திற்குள் இருந்த பாகுபாட்டிற்கு எதிராக பாதிக்கப்பட்டவர் மாற்று வழிபாட்டை முன்வைத்தார்கள். விடுதலை இறையியல் என்பதாகச் சொல்லப்பட்ட அது பிற்காலத்தில் உலகெங்கும் பிரபலமான தத்துவமாக மாறிப்போனது. இது நிகழத்தொடங்கிய காலம் இருபதாம் நூற்றாண்டின் மையப்பகுதி. ஆனால் அதற்கு முன்பே விடுதலை இறையியலை ஒட்டி இந்தியாவில் யோசித்தவராக, விடுதலைப் பெளத்தத்தை வலியுறுத்தியவராக அயோத்திதாசர் இருந்திருக்கிறார்.

விடுதலை இறையியல் புரிந்து கொள்வதற்கான சில குறிப்புகள்

இந்தியச் சூழலில் விடுதலை இறையியல் இன்னும் விரிவாகப் பேசப்படவில்லை. அதற்கு அது கிறித்தவத்தை மையப்படுத்திய சிந்தனையாகப் பாவிக்கப்பட்டதும் சாதியப் பாகுபாட்டுக்கு எதிரானது என்பதும் காரணமாக இருக்கலாம். அதனால் தான் கிறித்தவர்களே அதைக் கண்டு கொள்ளவில்லை. சமூகத்தில் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக அநீதி செய்யப்பட்டவர்களைக் கணக்கில் கொண்டு அரசியல் மைய நீரோட்டத்தில் பங்கெடுக்க வைப்பது விடுதலை இறையியலின் நோக்கமாக இருந்தது. கி.பி.1950 முதல் 1960 வரையிலான காலகட்டத்தில் இலத்தின் அமெரிக்க கத்தோலிக்கத் திருச்சபைக்குள் விடுதலை இறையியல் தான் முக்கியப் பேசுபொருளாகவும் செயல்திட்டமாகவும் இருந்தது. அதுவரை சமூகத்தில் இருந்து வந்த மதம் குறித்த கருத்தாக்கங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வலியுறுத்தியது. வறுமைக்கு எதிராகப் போராட அழைத்தது. கிறித்தவத்திற்கும் அரசியலுக்குமான உறவை வரவேற்றது. வறுமையை அகற்றிப் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவது தேவாலயத்தின் பணிகளுள் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றது. மூன்றாம் உலக நாடுகளின் இறை நம்பிக்கையாளர்கள் விடுதலைகருத்தியலுக்கு ஆதரவானவர்கள் என்று கருதப்பட்டதால், அவர்கள் வழியாகவும் விடுதலை இறையியல் வலுவான கருத்தியலாக உருமாற்றப்பட்டது. மதத்தின் ஒரு பகுதி போல இருந்தாலும் உண்மையில் மதத்திற்கு அப்பாற்பட்டதாகப் பார்க்கப்பட்டது. விடுதலை என்பது பிராந்திய அளவிலானது என்பதை மறுத்து உலகளாவியதாகப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை முன்மொழிந்தது.

கிறித்தவக் கோட்பாட்டின் விளக்கத்தில் மாற்றத்தை வலியுறுத்தி, அதை விடுதலையின் நடைமுறையாக விளக்கியது. தம்மையே விடுதலைக்கான வழிகாட்டியாகச் சொன்னது. விடுதலை இறையியலின் முக்கியமான பணி அரசியல் என்பதால் அதனுள் அரசியல் இயல்பாகவே அமைந்து விட்டிருந்தது. ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களிடத்தில் கிறித்தவர்கள் செய்ய வேண்டிய பணியை நிரல்படுத்தியது. அரசியல், பொருளாதார கட்டமைப்புகளுக்குள் இருக்கும் சமமின்மையை விமர்சித்து வர்க்கப் போராட்டம் விடுதலை இறையியல் சார்ந்து விளக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அது, தம்மை எதார்த்த அரசியல் சார்ந்து நியாயப்படுத்திக் கொள்ளும் ஒரு தத்துவமாக வெளிப்படுத்திக் கொண்டது.

விடுதலை இறையியலும் பிற தத்துவங்களைப் போல எதிர்மறையான கருத்துக்கள், விமர்சனங்களை எதிர்கொண்டது. சமூக மாற்றத்திற்கு வழி சமைக்கும் என்று சொல்லப்பட்ட போது சமூக மாற்றத்திற்குப் பயனற்றது, உரிமையின்மைக்குக் குரல்கொடுப்பதாக இருந்தாலும் அதைக் கடந்துசெல்வதற்கான திறப்பையும் அது கொண்டிருக்கிறது என்ற கருத்தும் விடுதலை இறையியலுக்கு எதிராகச் சொல்லப்பட்டது. ஆனாலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கத்தோலிக்கக் கிறித்தவத்தின் முக்கியப் பணியாக அது அமைந்துவிட்டிருந்தது. பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகு காந்தி பட்டியல் சாதியினரின் நலனுக்கானவராகத் தம்மைக் காட்டிக் கொள்வதற்கு சேவா சங்கங்களை ஏற்படுத்தியது போல, அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் கத்தோலிக்கத்தின் மீது கொண்ட அதிருப்தியை எதிர்கொள்வதற்கான உத்தி என்றும் விடுதலை இறையியல் அரசியல் விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது.

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

பட்டியல் சாதியினரினுடைய பண்பாட்டு வேர்களின் செழிப்பினை தொடர்ந்து பேசிய அயோத்திதாசர், அவர் காலத்தில் பட்டியல் சாதியினர் மீதான தாக்குதல், புறக்கணிப்புகள் ஆகியவற்றைக் கண்டித்தும் சுட்டிக்காட்டிக் கொண்டும் இருந்தார். பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லுதல், அதன் அடிப்படைகளை விளக்கித் தீர்வை முன்மொழிதல் ஆகியன அயோத்திதாசரின் வழக்கமான பாணியாக இருந்தன. தற்கால இழிவுகளிலிருந்து வெளியேறி பெருமிதம் நிரம்பிய பூர்விக வாழ்க்கைக்குள் பிரவேசிப்பதற்கான வழிகாட்டல்களைச் செய்தார். தமது மக்களை மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பெளத்தர்களாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். விடுதலை இறையியல் அயோத்திதாசர் காலத்திற்கு பிறகு உருவான தத்துவமாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்த அம்சங்கள் அனைத்தும் அயோத்திதாசரிடம் வெளிப்பட்டிருக்கின்றன. ஒரு தத்துவம் பூரணமாக வடிவம் பெற்று கிளர்ந்தெழுவதற்கு முன்னமே அதற்கான அடிப்படைகள் உலகின் எதோ ஒரு பகுதியில் விரவிக் கிடக்கும் என்பது அயோத்திதாசரின் சிந்தனைகள் மிகச் சிறந்த சான்றாகும்.

………………………

Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...