தலித் எழுத்துக்களைப் பொறுத்த மட்டில் பழைய தத்துவம், கொள்கை, கோட்பாடு முதலிய வஸ்துகளை இனி கறாராகக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. உலக அளவிலான பிராந்திய எழுத்துக்களில் அப்படி யாரும் கடைப்பிடித்ததாகவும் நம்பிக்கைக்குரிய தரவுகள் இல்லை. அந்தப் பொழுதுக்கு எது சரியோ அதை நியாயப்படுத்தும் மனம் தான் எல்லோருக்கும் வாய்த்திருக்கிறது. இலக்கியமும் இலக்கியத்திலும் அப்படித்தான். நடப்புக்காலத்தில் எப்படிப்பட்ட எழுத்து சமூகத்தின் இயங்கியலைத் தீர்மானிக்கிறதோ அதே மாதிரியான எழுத்தை எழுதிவிட வேண்டும். அது தான் அன்றைய பொழுதுக்குப் பயனளிக்கும் விஷயம். இலக்கியம் ஒரு மாயவாத புளகாங்கிதச் செயல்பாடு என்பதைப் புரிந்துகொள்ளும் அதேசமயம் அதற்கு ஏற்கனவே இருக்கும் சட்டகத்தை மாற்றிவிடக் கூடிய தீர்க்கமான வல்லமை உண்டு என்பதையும் கணக்கில் கொண்டு புதிய எழுத்து முறைமைக்கு அணியமாக வேண்டும்.
![]() |
பாபாசாகேப் அம்பேத்கர் |
இன்று தலித் இலக்கியத்தைப் பொறுத்தவரை
தலித் அல்லாத குரலில் தலித்
எழுத்தை ஒரு தலித் எழுத வேண்டும். தலித் குரலே இல்லாமல் தலித் இலக்கியம் இருக்க
முடியுமா என்றால் இருக்க முடியும் என்பதே எனது பதில். அதில் தலித்துகளின்
விழுமியம், வீரம் இடம் பெற வேண்டும். கருணை மிக்கவர்கள், இரக்கம் கொண்டவர்கள், விட்டுக் கொடுப்பவர்கள் என்று எழுதிப் பெறுகிற இலக்கிய மோஸ்தர் இனி வேலைக்கு உதவாது.
இலக்கியக் கம்பீரங்களுக்கு எப்போதும் ஒரு சமூக மதிப்பு உண்டு. அவை தான் இலக்கியத்தின் வழி உருவான சகல பெருமிதங்களுக்கும்
காரணமாக இருந்திருக்கின்றன. அப்படியான எழுத்து
தலித்துகளிடமிருந்து வர வேண்டும். அதற்கு
மிகுந்த வலிமை உண்டு. உதாரணமாக,
அவனுக்கு இவ்வளவு மிருகத்தனம் இருக்கும்ணு
என்னால கணிக்க முடியல. வந்தான் நின்னது தெரியல.
அடிச்சுப் போட்டுட்டு போயிட்டான். அவனப் பார்க்கவே
பயமா இருந்துச்சு. கண்ணுல தெரிஞ்ச கம்பீரத்தைப் பாத்தியா…
நம்மள்ல ஒருத்தனுக்குக் கூட அந்தக் கம்பீரம் இல்ல’
என்று தலித் அல்லாத
குரலில் தலித்தின் கம்பீரம் தலித்தால் எழுதப்பட
வேண்டும். இதில் உள்ள ‘மிருகத்தனம்’, ‘பாக்கவே பயம்’, ‘கம்பீரம்’ என்பதைப்
போன்ற வார்த்தைகள் முக்கியமானவை. இதை விட முக்கியம் தலித் அல்லாத
குரலில் ‘நம்மிடம் அந்த கம்பீரம் இல்லை’ என்று தலித்தின் கம்பீரத்தைப் பார்த்து பிரமித்து சொல்வது.
இவை மாதிரியான திட்டமிட்ட சொற்குவியலும் மொழிக் கட்டமைப்பும் தலித் இலக்கியத்தின் அடுத்த
நகர்வுக்கு அவசியமெனலாம்.
கவனத்தில் கொள்ளவேண்டிய மற்றொரு விஷயம்,
ஒரு புனைவை எழுதும் போது அவற்றில் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள்
வாசகனுக்குள் கடத்துகிற நவீன அதிர்வு ஏற்பையும்
கலாவதியான அதிர்வு விலக்கலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம்
கவனத்தில் கொண்டால் இலக்கியங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கம்பீரத்தை
இலக்கியங்களைக் கொண்டே தனது பக்கம் திருப்பிக்கொள்ளும் அதிசயம் தலித் இலக்கியத்தில்
நிகழும். தலித் இலக்கியத்தில் புதியதாக ‘தன் பக்கம் திருப்பிக் கொள்ளுதல்’
நிகழ வேண்டும் என்றால் தலித்துகளிடம் இதுவரை ‘கம்பீரம்’ இல்லை என்பது பொருளல்ல. இருப்பதை ஏற்கனவே இருக்கும் சட்டகத்திற்குள் மூழ்கடிக்கும் வேலையை இனியும்
செய்யக் கூடாது என்பது பொருள். அதாவது, தலித் புனைவில் வரும்
தலித் பாத்திரம் மேலே நின்று கீழே பார்ப்பதாக, எதிர்நிலைப் பாத்திரத்தை
சப்பென்று அடித்து விட்டு இனி இந்தப்பக்கம் நீ வரவே கூடாது என்கிற தொனியில்
அமைக்கப்பட வேண்டும். அது நிகழுமானால் சாதியத்தமிழர்களின் சகல பம்மாத்துக்களும்
தலித் மீதான வன்மங்களும் புதிய வெளிச்சத்தில் தானே அம்பலப்படும்.
Comments