சாங்கிய
காரிகை என்னும் தத்துவ நூல்
ஞா.குருசாமி
வடமொழி என்பது சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய மூன்று மொழிகளையும் குறிக்கும். மூன்று மொழிகளில் இருந்து தமிழில் வழங்கும் சொற்களை வடமொழிச் சொற்கள் என்று குறிப்பிடுவது தமிழில் வழக்கம். அப்படி மூன்று மொழிகளின் சொற்களைத் தமிழில் பொதுப்பெயர்ச் சொல்லால் குறிப்பிடுவது பல நேரங்களில் தவறாகவும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. ஏன் இது நேர்ந்தது என்று தெரியவில்லை.
நெல்லை
க.சுப்பிரமணியன் எழுதிய
‘சாங்கியக் காரிகை’ என்னும் நூல் 1980 ஆம் ஆண்டு வெளியானது. இந்நூலுக்கான அணிந்துரையை இலங்கை,
சிதம்பரா கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியர் கே.எஸ்.கிருஷ்ண ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதில் கடைசிப்
பத்தி ‘The original sutra in sanskirt have been carefully compared with Tamil
rendering and I am glad to state that the translate brings out the meaning
clearly’ என்பதாக அமைந்திருக்கிறது. இதைத் தமிழுக்கு
மொழிபெயர்த்த பா.வளன் அரசு sanskirt என்பதற்கு
வடமொழி எனப் பெயர்த்திருக்கிறார். அப்படி பெயர்ப்பது வளன் அரசு
காலத்தில் பலரும் செய்தது தான். இன்றும் கூட அது தொடர்கிறது.
‘சமஸ்கிருதம்’ எனப் பெயர்ப்பதில் தமிழில் இருந்த
சிக்கல் என்னவென்பது தெரியவில்லை. ஆங்கிலத்தில் North
Language என்ற சொற்பிரயோகம் இல்லை. சமஸ்கிருதம்
உள்ளிட்ட மொழிகளை அதனதன் பெயர்கொண்டே சுட்டுகிறார்கள். ஆனால்
தமிழில் அது மூன்று மொழிகளுக்கான பொதுச்சொல் பெயராக வழங்குவது வியப்பளிக்கிறது.
ஒருவேளை 1910 களுக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட
சமஸ்கிருதத்தின் மீதான ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என்பதை இப்போதைக்கு ஒரு சமாதானமாக
வைத்துக் கொள்வோம்.
சாங்கிய
காரிகைக்கு நா.வானமாமலை முகவுரை எழுதியிருக்கிறார்.
நூலின் செய்திகளைப் புரிந்துகொள்வதற்கு முகவுரை பேரளவில் துணைசெய்கிறது.
சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும்
செய்திகளோடு தொடர்புடைய செய்திகளைத் தொட்டுக் காட்டியும் இந்தியத் தத்துவ மரபை உள்வாங்கிக்
கொள்ள வேண்டிய முறை பற்றியும் விளக்கியிருக்கிறார் வானமாமலை.
மூலச்
சூத்திரங்களை பெயர்த்து விளக்கும் முன் சாங்கியத் தத்துவம் பற்றிய சுருக்கத்தைத் தந்திருக்கிறார்
நூலாசிரியர் க.சுப்பிரமணியன்.
எண்ணியம், மெய்ப்பொருளியல், அறிவு என்றெல்லாம் குறிக்கப்படும் சாங்கியத்தின் பிற்கால நேர், எதிர் பரிமாணங்களைப் பற்றிய செய்திகள் சாங்கியம் குறித்தத் தேடலைத் தூண்டுகின்றன.
இருபத்தைந்து தத்துவங்களைக் கொண்டது உலகம். புருடன்
என்னும் அறிவில் இருந்து புத்தி பிறக்கிறது. புத்திக்கு அகங்காரம்
என்றொரு பெயரும் உண்டு. இது தைசத அகங்காரம், பூதாதி அகங்காரம், வைகாரிக அகங்காரம் என்று மூன்று வகையாகப்
பிரித்து அறியப்படும். தைசத அகங்காரம் மனம், ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள் என்று மூன்றாகும்.
பூதாதி
அகங்காரம் ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்று ஐவகைப்படும்.
தன் மாத்திரைகள் என்று சொல்லப்படும் இவ்வைந்தும் ஐந்து பூதங்களாகின்றன.
ஐந்து பூதங்களும் சேர்ந்து உடம்பையும் உலகத்தையும் தோற்றுவிக்கின்றன
என்பது சாங்கியத் தத்துவத்தின் அடைப்படை. இதைக் கீழ்வரும் படம்
விளக்கும்.
ஹிரியண்ணாவால் ‘இந்தியப் புலமை இலக்கியம்
அனைத்திற்கும் முத்து’ என்று குறிப்பிடப்படும் சாங்கியக் காரிகையின்
தருக்கம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இதில் முக்குணம் பற்றிய
செய்திகள் சாங்கியத்தின் முன் பின் அமைப்பு நிலைப்பாட்டினை விவரிக்கிறது. சத்துவம், இராசதம், தாமதம் என்னும்
முக்குணங்களும் ஒன்றுக்கொன்று சேர்ந்து நின்று உதவிக் கொள்பவை. முக்குணம் சமநிலையில் இருக்கும்போது படைப்புகள் நிகழ்வதில்லை. அவற்றுள் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் போதே படைப்புகள் உருக்கொள்கின்றன.
அவை ஐந்து புலன்களுக்கும் தென்பட்டால் வியத்தம். தென்படவில்லையெனில் அவ்வியத்தம் என்று சொல்லப்படும்.
சாங்கியத் தத்துவத்தை எழுதியவர் கபிலர்
என்று சொல்லப்படுகிறது. கபிலர் ஆரிசு என்பவருக்குப் போதிக்க ஆரிசு பஞ்சசிகருக்குப்
போதித்தார். வடமொழி நூலான சட்டி தந்திரத்தைச் சுருக்கமாக சாங்கியக் காரிகை என்னும்
பெயரில் சுருக்கமாக எழுதியவர் ஈஸ்வர கிருஷ்ணர். ‘புல்நுனிப் பனிநீரில் பனையின் வடிவம்
கூட அடங்கியிருப்பதைப் போல சாங்கியக் காரிகையில் தத்துவங்கள் அனைத்தும் அடங்கியுள்ளன’
என்கிறார் ஆசிரியர்.
நூலின் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து
விளக்கி இருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் மேலதிகமாகத் தெரிந்து கொள்ள சாங்கிய காரிகை நூலினை
வாசிக்கலாம். அண்மையில் இந்நூல் மறுபதிப்பு வந்ததாகத் தெரியவில்லை. வந்தால் நல்லது.
***
Comments