படைப்பாளன் இலக்கிய வெளியில் உலவுதல் என்பது சுதந்திரமானது என்னும்கருத்து
படைப்புச் சிக்கல் வரும்போது மட்டும் உரத்து ஒலிக்கப்படுகிறது அல்லது குறைந்த பட்சம்
நினைத்துப்பார்க்கப்படுகிறது. தவிர எல்லா நேரங்களிலும் அப்படியொரு மனநிலை இருந்தேதான்
வந்திருக்கிறது. என்னதான் சுதந்திர வெளி இருந்தாலும் நினைத்துப்பார்ப்பதெல்லாம் எழுதிவிட
முடியாது. அதாவது எழுத்துச் சுதந்திரம் என்பது என்னவேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அது
ஒரு வட்டத்திற்குள் இருக்க வேண்டும் என்னும் பொதுப்புரிதல் எல்லோருக்கும் இல்லையென்று
சொல்லிவிட முடியாது. புனைவிலக்கியங்களில் கரு, வடிவம், வெளிப்படுத்தும் விதம், ஊடகத்தேர்வு என்பனவற்றை படைப்பாளிதான் தீர்மானிக்கிறார் படைப்பில்
பாத்திரங்களே பேசுவதாக இருந்தாலும் அது படைப்பாளியின் கருத்துதான். அதிலிருந்து படைப்பாளி
விலகிக்கொள்ள முடியாது. படைப்பு எழுதப்பட்டு முடிந்தவுடன் படைப்புக்கும் படைப்பாளிக்குமான
உறவு அறுந்துவிடுகிறது என்றெல்லாம் விவாதித்து ஓய்ந்து விட்டது. புனைவுகளைப் பொறுத்த
மட்டில் படைப்பாளியின் உளவியல் பன்னூறு ஆண்டுகாலம் கூட இருந்துகொண்டுதான் இருக்கும்.
உதாரணத்திற்கு திருவள்ளுவரின் உளவியலை திருக்குறளில் பல இடங்களில் நுற்றாண்டு கடந்து
அவதானித்துக்கொண்டு தான் இருக்கிறோம். எனவே படைப்பாளியின் எண்ணவோட்டங்களாக இருக்கும்
புனைவின் ஆதிக்க மனோபாவம் புனைவுக்கு மட்டுமல்ல. அது படைப்பாளிக்கும் உரியவைதான். அந்தவகையில்
பெரிதும் மதிக்கத் தக்க உலகளாவிய வாசிப்பனுபவம் கொண்ட எழுத்தாளர்களின் எழுத்துக்களில்
கூட விரியும் ஆதிக்க மனோபாவ மொழியமைப்பைப் புரிந்துகொள்வதில் இடர்பாடுகள் இருக்கின்றன.
அது குறித்து விவாதிப்பதற்கு முன் சில கேள்விகளை எழுப்பிக்கொள்வது வசதியாக இருக்கும். கி.ராஜநாராயணன்
1. ஒரு குறிப்பிட்ட சாதியின் பிரதியாக அமையும் புனைவில் சாதியின்
பெயரைச்சொல்லாமல் எழுதவே முடியாதா? எழுத முடியும் என்பதற்கு வெற்றிபெற்ற நிறைய உதாரணங்கள் இருக்கும்
போது சாதியின் பெயரை படைப்புகளில் திணிப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்?
2. அதிகாரம் கொண்டதாகச் சித்திரிக்கப்படும் பாத்திரத்தின் பெயருக்குப்
பின்னொட்டாக சாதியின் பெயரையும் இணைத்தேதான் சொல்ல வேண்டுமா? அப்படிச் சொல்வது அது சாதியின் அதிகாரத்தை புனைவின் வழியை நிலைநாட்டுவதாகாதா?
வர்க்க முரண்பாட்டைச் சித்திரிக்கும் சி.என்.அண்ணாத்துரையின்
செவ்வாழைக் கதையில் பண்ணையாருக்கும் உழைப்பாளிக்கும் இடையில் கணக்கப்பிள்ளை செய்யும்
தகிடுதத்தங்கள் விவரிக்கப்பட்டு இருக்கும். பிள்ளைகளின் வலியை எதிர்கொள்ளும் உழைப்பாளியான
செங்கோடனின் தவிப்புகள் எதையம் அறியாத உலகம் ஒன்று அங்கே இயங்கிக்கொண்டிருக்கும். இதில்
வரும் எந்தப் பாத்திரத்திற்கும் பின்னொட்டாகச் சாதிப்பெயரைச் சேர்த்திருக்க முடியும்.
கதையோட்டம் தடைபடாது என்ற போதிலும் எந்த இடத்திலும் சாதிப்பெயர் இல்லை. சி.என்.அண்ணாத்துரைக்கு
சாதிப்பெயரை புனைவுக்குள் சொல்வதாற்கு தடையேதும் இருந்திருக்க வாய்ப்பில்லை. என்றாலும்
தவிர்த்திருக்கிறார். அது அவரது அப்போதைய படைப்பு மனநிலை என்று நாம் அமைதிப்பட்டுக்கொள்ளலாம்.
கி.ராஜநாராயணனின் கதவு என்றொரு கதை. நுவல்பொருளுக்காகவும், விவரிப்பு நுணுக்கத்திற்காகவும் கவனம் பெற்ற, கல்விப்புலங்களில் மேற்கோள் காட்டப்பெற்ற கவிதை. குழந்தை - பெற்றோர்
- தலையாரி என்னும் முக்கோண உளவியலை அதனதன் தளத்தில் நின்று பேசும் கதை. கதையில் வரும்
குழந்தைப் பாத்திரம் லட்சுமி. லட்சுமியை பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு பரிச்சயமாக
முகம் தலையாரியினது. தீர்வை கேட்டு லட்சுமி வீட்டுக்கு வருகிறார். பெற்றோர்களை கேட்கிறார்.
லட்சுமி தந்தை ஊருக்கும் தாய் காட்டுக்கும் போயிருப்பதாகக் கூறுகிறாள். தலையாரி லட்சுமியிடம்
…
தீர்வையையைக் கொண்டுவந்து போடச்செய்து. தலையாரி (இவ்விடத்து
குறிப்பிட்ட சாதியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அப்பெயரைக் குறிப்பதை இங்கு தவிர்த்துவிடலாம்)
வந்து தேடீட்டுப் போனாருன்னு சொல்லு எனக் கூறுவதாக கி.ரா. எழுதிச்செல்கிறார். இந்த இடத்தில் தலையாரி வந்து தேடீட்டுப் போனார்
என்று எழுதியிருந்தாரேயானால் தொடர்ப்பிழையோ, கருத்துப்பிழையோ எதுவும் நேர்ந்திருக்காது. கதையோட்டச் சிதைவும்
ஏற்பட வழியில்லை. குழந்தையிடம் சாதிய மகோபாவத்தை மூத்த தலைமுறை இளைய தலைமுறைக்குக்
கடத்திவிடுவதாக அமையாதா? இதை ஒரு புனைவு எதார்த்தமாக கொள்ள வேண்டுமென்றால் தணிக்கை ஏதுமற்ற எதார்த்தம் அத்தனையையுமா
படைப்பாளிகள் கொண்டு வருகிறார்? என்னும் கேள்வி தொக்கித்தானே நிற்கிறது.
டிசம்பர் 2016 உயிர்மையில் இமையம் சாந்தா என்றொரு கதை எழுதியிருந்தார். திருமணம்
என்கிற வரையறைக்கு வெளியை பாலியல் சார்ந்து எழும் உணர்வை ஆணும் பெண்ணும் எதிர்கொள்ளும்
விதம்,
அதுவும் மிகப்பெரிய பணக்காரனொருவன் அவன் கட்டும் வீட்டிற்கு
சித்தாள் வேலைக்கு வரும் பெண்ணை (சாந்தா) அணுகம் விதம் குறிந்து எழுதப்பட்ட கதை. பணத்தால்
வாங்க முடியாதது எதுவும் இல்;லை என்ற மனநிலையில் அவன். பணத்தாலும் வாங்க முடியாதது இருக்கிறது என்னும் சுயஒழுக்கத்தில்
அவள். கதை நாயகி சாந்தா வாழுகின்ற குடிசைப்பகுதியில் பன்றி உலவுகிறது. இதன் வழி சாந்தாவின்
சாதி என்வாக இருக்கும் என்பது உய்த்தறியப்படுகிறது. கதையில் எவ்விடத்தும் சாதி குறித்த
சொல்லாடலோ, விவரணைகளோ
இல்லாமல் சாதி அடுக்குக்குள் நிகழும் பாலியல் வன்கொடுமைகளை கதை பேசுகிறது. கதையை இப்படியும்
அமைக்க முடிகிறது.
சுரண்டல் அதிகாரம் என்னும் தன்மைக்காக இக்கதையில் ஒப்பிட்டுப்
பார்க்க வேண்டிய கதை மாப்புக் குடுக்கோணும் சாமீ. பெருமாள் முருகன் எழுதியது. மொழிப்
பயன்பாடு கொங்கு பிரதேசத்தை முன்வைக்கிறது. கால்நடையை தங்களின் உயரிய செல்வமாகக் கருதும்
நிலவுடைமையாளர்களும் இறந்த மாடுகளை உணவாகக் கொள்ளும் ஒரு சமூகமும் இக்கதையில் முக்கயிப்
புள்ளிகள். ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது செலுத்தும் ஆதிக்கமும் சுரண்டலும் கதையின்
மையமாக இருக்கிறது. தமிழ்ச் சமூக அமைப்பில் இறந்த மாடுகளை தின்போர் யாவர் என்பதும்
கொங்கு பிரதேசத்தில் ஆதிக்கம் மிக்கவர்கள் யாவர் என்பதும் யாவரும் அறிந்ததே. பிரச்சினையை
மட்டுமே பிரதானமாகக் கொண்டு கருவைச் சிதைக்காமல் வாசகரிடம் கொண்டு சேர்த்திருக்க முடியும்.
ஆனால் சாதியின் பெயர் மறைவின்றி சொல்லப்படுகிறது. இது கதைப் பொருண்மையையும் தாண்டி
வலியோர் நலிந்தோரை நசுக்குவதற்கான புதுப்பிக்கப்பட்ட மாதிரியாக அமைந்துவிடும் அபாயம்
இருக்கிறது. ஆக தேவை இல்லாத இடத்திலும் யாடிதாரு காரணமும் இல்லாமல் சாதிப்பெயரை புனைவுக்குள்
கொண்டுவரும் போது மீண்டும் அது புதிப்பிக்கப்படுகிறது என்றும் கருத வேண்டிருக்கிறது.
இலக்கியம் என்பது எல்லாருக்குமானது. படைப்பாளி சுய சிலாகிப்புகளை
படைப்புக்குள் கொண்டு வரும்போது அது அப்படைப்பாளியின் டைரியை ஒத்ததே தவிர வேறொன்றாக
இருக்க வாய்ப்பில்லை.
Comments