Skip to main content

புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம்

 

எனது 'தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்)' என்னும் நூலுக்கு சமணப் பேரறிஞர் புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் எழுதியுள்ள அவரது வாசிப்பு அனுபவம்

தோஜம்புகுமாரன்


அன்பிற்கினிய நண்பரீர்! ஆன்மநலம் விளைக! அரியவாம் நற்காட்சி பொலிக! தங்களின் அரிய படைப்பான தமிழிலக்கிய வரலாற்று நூலை இன்றுதான் வாசித்து முடித்தேன். 1970ஆம் ஆண்டு முதல் வெளிவந்த தமிழிலக்கிய நூல்களின் பெரும் பரப்பினை தங்களின் நுண்மாண் நுழைபுலன் என்னும் அளவுகோலைக் கொண்டு அளந்து காட்டி விட்டீர்கள். சிறுவர் இலக்கியம் தொடங்கி இணைய இலக்கியம் வரையிலான இலக்கியங்களை ஆய்ந்து அறிய தாங்கள் எடுத்துக்கொண்டுள்ள பேருழைப்பை நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக உள்ளது.

சமயங்கள் வளர்த்த இலக்கியங்களின் மதிப்பீடுகள் அனைத்தும் நடுநிலைப்பான்மையில் விருப்புவெறுப்பின்றி செய்திகளை அடுக்கிக்கொண்டே செல்லும் அழகும் தம்கருத்தை வலியுறுத்திக் கூறாமல் காலச்சூழலின் அழுத்தத்தை மேம்போக்காகச் சுட்டி காரணம் இவ்வாறு இருக்கலாம் என நாகரிகமாகச் சொல்லிச்செல்லும் தங்கள் திறப்பாட்டினை வியக்கிறேன். 1970க்குப்பிறகு தமிழ்புலத்தில் இத்தனை இலக்கியங்களா? இத்தனை எழுத்தாளர்களா? அது சரி. இத்தனையும் சேகரிக்க தங்களுக்கு எவ்வளவு காலம் ஆகியிருக்கும், நீங்கள் பட்ட பாடுகள் எவ்வளவு இருக்கும்? நினைத்துப்பார்க்கிறேன். இதற்கு முன் வெளிவந்துள்ள பேரறிஞர்கள் பலர் எழுதியுள்ள இலக்கிய வரலாறுகளினும் இந்நூலின் சொல்நடை உரைப்போக்கு முற்றிலும் வேறுபட்டுள்ளது. எல்லாவற்றினும் என்னை வியப்புற வைத்தது அதன் ஓட்டந்தான். சின்ன சின்ன வாக்கியங்களில் செய்திகளை அடுக்கிச் செல்லும் போது, நடைக்கு இறக்கை முளைத்துவிடும் போலும் போகும்போக்கில். தாங்கள் ஆங்காங்கே தூவிச்சென்றுள்ள புதுவதாகப் புனைந்தாளும் சொற்றொடர் அமைப்புகள் தங்களின் மொழிப்புலமையை உயர்த்திக்காட்டுகின்றன.(.டு) ஆண்மையவாத சிந்தனாவெளி-சமுதாய ஒழுக்கவியல் கற்பிதங்களைச் சிதைவிற்குள்ளாக்குதல் -போன்றனவும், அரிய சொல்வகைகளாக, காத்திரம் - (இதை நிறைய இடங்களில் பயன்படுத்தியுள்ளீர்கள்) இறுக்கம் - பொதுவெளி போல்வன. நிற்க,

சமணம்சார்ந்த இலக்கிய செய்திகளை மற்ற சமயச்செய்திகளை மொழிவது போலவே கூடவும் குறைவுமின்றி அளவோடு பேசியுள்ளீர்கள். அடியேனைப் பற்றி, காவியப்படைப்புகள் பற்றி விளக்கமாகவும் சுருக்கமாகவும் சொல்லியுள்ளீர்கள். நன்றி! என்னுடைய படைப்புகளில் நான் பிரதானமாகக் கருதுவது தமிழ்நிலத்தில் வழிபாட்டிலுள்ள சமண ஆலயங்களைப் பற்றிப் பாடியுள்ள "தமிழக ஜைன க்ஷேத்திரமாலை"என்னும்நூலே! 134ஆலயங்களின் மூலவர்களைப் பற்றிய பாடல்கள். அனைத்தும் பதிகங்களே. இதை சமண தேவாரம் என்று சொல்லலாம். இது தங்களின் பார்வைக்குக்கிட்டாமற் போனது ஏனோ தெரியவில்லை.

கவிதை நூல்களையும் ஆசிரியர்களையும் பற்றி ஒன்று விடாமல் பட்டியலிட்டுள்ளீர்கள். இன்று எல்லோரையும் ஆட்டிக்கொண்டு இருக்கும் - அசுரவளர்ச்சி அடைந்துவருகின்ற இணையஞ் சார் இலக்கியவகைகளையும் விவரித்துள்ளீர்கள். இந்த நூலைநான் இன்று படித்துமுடித்த போது, தங்களின் மேதா விலாசமும், நினைவாற்றலும், மொழி ஆளுமையும் என் மனக்கண்முன் இமயம்போல் ஓங்கிநிற்கிறது. தங்களின் இந்த அரிய வரலாற்றுநூல் பின்னர் எழுதவரும் ஆசிரியன்மார்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நூல் கல்லூரிகளில் பாடநூலாக ஏற்கப்படும் காலம் விரைவில்வரும் என்பதிலும் ஐயமில்லை. தங்களின் இத்தகு ஆக்கப்பணி மேலும்மேலும் வளர்ந்தோங்கி இசை பெருகவென வாழ்த்தி மகிழ்கிறேன். உடல்நலமின்றி இருந்தமையால் என் எண்ணங்களைத் தெரிவிக்கத் தாமதமாயிற்று. பொறுத்தருள்க! தங்கள் நூலை வாசிக்கவும் தங்களைப் பற்றி அறிந்துகொள்ளவுமான ஒரு வாய்ப்பளித்தமைக்கு நன்றி! வணக்கம் வாழ்க வளமுடன்!

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

  தத்துவங்கள் குறித்த உரையரங்கம் கோவை பீளமேட்டில் ‘ பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம் ’ தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது . அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் . பெரியாரியம் குறித்து   கு . ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட   தியாகு மார்க்சியம் குறித்துப் பேசினர் .  நான் அம்பேத்கரியம் பேசினேன் . அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன் . மனநிறைவான நிகழ்வாக அமைந்தது . சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே . அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின . ஒருவர் ‘ மாற்றுத்திறனில்  21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது . எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும் ’ என்றார் . ‘ நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும் ’ என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார் . ‘ நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் ...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...