1990 களுக்குப் பிறகு தமிழில் மரபுக் கவிதைகள் எழுதும் போக்கு அருகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். வானம்பாடியும் அதைத் தொடர்ந்து வெளியான இதழ்களும் புதுக்கவிதைக்குத் தந்த ஆதரவு, வாசிப்பு மனநிலையின் கால மாற்றம் ஆகியன இணைந்து தமிழ்க் கவிதை உலகை புதுப்பித்துக் கொண்டே இருந்தது. புதுக்கவிதையிலும் கூட ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கவிதையின் நுவல்பொருள் மாற்றமடைந்து கொண்டே வந்திருக்கிறது.
செ.நிறைமதி |
யாப்பு
கற்று விருத்தங்களின் வடிவங்களை உள்வாங்கி யாரும் எழுதத் தயாரில்லை. இலக்கணத்திற்குள் நின்று கவிதை எழுதுவது என்பது நீளமான கயிற்றில் கட்டப்பட்ட மாட்டின் சுதந்திரத்தை ஒட்டியது.
கற்பனையின் முழு அடர்த்தியையும் அப்படியை இறக்கி வைத்துவிட முடியாது. சரியான சொற்களைத்
தேட வேண்டும். சொற்களின் கட்டமைப்பு அமைந்துவிடுமானால் அது வாசகனுக்கு உணர்வைக் கடத்துவதில்
போதாமையைக் கொண்டிருக்கும். அதனாலேயே மரபுக் கவிதை அருகி வருகிறது. இந்தச் சூழ்நிலையில்
அகவும் பூக்கள் நூல் வழி மரபுக் கவிஞராக தம்மை நிறுவியிருக்கிறார் செ.நிறைமதி. வடிவம்
கலாவதி நிலையில் இருந்தாலும் பழமையை விட்டுவிடக் கூடாது என்கிற விருப்பமும் ஆசையும்
அவரை மரபுக் கவிதை எழுத வைத்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
நூறு
ஆசிரியப்பாக்களில் அமைந்து இருக்கும் இந்நூலில் நிறைய விஷயங்களை மரபுக்குள் நின்று
எழுதிப் பார்த்திருக்கிறார் நூலாசிரியர். புத்தகத்திற்கும் தனக்குமான உறவைச் சொல்லும்
இடத்து ‘நூலே அன்னை மடியும் அன்பும் நீயே’ என்கிறார். அன்னையின் மடி போன்று அமைதி,
ஆறுதல், மகிழ்ச்சி, அன்பு, நம்பிக்கை, பாதுகாப்பு அனைத்தையும் ஒரு புத்தகத்தால் தந்துவிட
முடியும் என்று நிறைமதி நம்பியிருக்கிறார். அதனால் தான் அவரால் அப்படி யோசிக்க முடிகிறது.காதல்,
கல்வி, ஒற்றுமை, ஆன்மிகம், இயற்கை என எல்லாவற்றையும் மரபுக் கவிதையாக்கி இருக்கிறார்.
அதே போல 'நிறத்தில் பேதம் இல்லை' கவிதையும் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.
![]() |
நூலின் அட்டைப்படம் |
தொடர்ந்து நிறைமதி புதிய கவிதை நூல்களோடும் கோட்பாடுகளின் தேவையை, வலியுறுத்தலை ஒட்டி எழுதப்பட்ட நவீன கவிதைகளோடும் தனது வாசிப்பை வைத்துக் கொள்வாரேயானால் காலம் கடந்து நிற்கும் நல்ல கவிதைகளை அவரால் தரமுடியும். தருவதற்கான உழைப்பும் ஆர்வமும் அவரிடம் இருக்கிறது. நிறைமதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
Comments