Skip to main content

லி.ராம்ராஜின் கு.அழகிரிசாமி குறித்த நாடகம் : சில புரிதல்கள்

நண்பர் ராம்ராஜ் சமகால தமிழ் நாடகத்தில் முக்கியமானவரத் தெரிகிறார். Campus Theatre என்ற வகைமையை நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு 2018 வாக்கில் திண்டுக்கல்லில் அர்ஷியாவின் படைப்புகள் குறித்த ஆய்வரங்கில் ஒரு நாடகத்தை நிகழ்த்தினார். அந்நிகழ்வில் எனது உரையை முடித்துவிட்டு அந்த நாடகத்தைப் பார்த்தேன். ஒரு விசயத்தைப் பேசுவதற்கும் நிகழ்த்துவதற்குமான பாரதூர வேறுபாட்டை அன்று தான் கண்டு உணர்ந்தேன். அது முதலே ராம்ராஜின் அரங்கச் செயல்பாட்டின் மீது எனது பார்வையை வைத்துக் கொண்டே வந்திருக்கிறேன்.

ஐரோப்பிய நாடுகளின் அரசியல், பண்பாட்டு மாற்றங்களில் Campus Theatre முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. அதற்குப் பல முகங்கள் இருந்தாலும் எளியோர்களின் முகங்களைச் சுமந்து வரும்போதெல்லாம் பாசிஸ்ட்டுகளின் தூக்கத்தைக் கெடுக்காமல் அவை இருந்ததில்லை. அதனால் தான் கல்விப் புலத்துக்குள் அதிலும் குறிப்பாக நிறுவனப்படுத்தப்பட்ட அதிகாரம் இருக்குமிடத்தில் நாடகம் என்பது எப்போதும் அச்சத்துடனே அணுகப்படுகிறது.

சமீபத்தில் அருள் ஆனந்தர் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த கு.அழகிரிசாமி குறித்த கருத்தரங்கில் அவரது படைப்புகளை மையப்படுத்தி நாடகம் ஒன்றை நிகழ்த்தினார். கதை, கட்டுரை, கடிதம் என்று கலந்துகட்டி அது ஒருவகையிலான Colace Type Ply என்று சொல்லும் வகையில் இருந்தது. அழகிரிசாமி பசி, வறுமை, துரோகம், ஏமாற்றம், இழப்பு, வலி என்று எழுதிய கதைகளை நேர்கோடற்ற தன்மையில் இணைத்து நிகழ்த்தினார் ராம்ராஜ்.



ஒருவரின் ஒரு பிரதியை நடிப்புக்கு உகந்த வகையில் மாற்றியதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. ஆனால் ஒரு படைப்பாளியின் பல பிரதிகளைக் களைத்துப் போட்டு ஒரு நாடகமாக்குதல் என்பது அந்தப் படைப்பாளியை அவரது கருத்தியல் அடிப்படையில் உட்கிரகித்துக் கொள்ள உதவக் கூடும் என்பதை ராம்ராஜ் தனது அசாத்திய நடிப்பு, இயக்கத்தின் வழி பார்வையாளர்களுக்குக் கடத்தினார். ராம்ராஜ் வெற்றி பெற்ற இடம் இது தான் என்பேன்.

ராம்ராஜோடு ரிதன்யா சாருமதி, ஜாக்குலின் பாய் ரம்யா என்னும் இரு மாணவிகள் நடித்தனர். இருவருமே தங்களது உடல்மொழியை வகிபாகமாக்கிக் கொள்ளும் வகையில் உரையாடல் அமைக்கப்பட்டு இருந்தது. அது நாடகத்தை அழகாக்கியது. Dominate Acting இல்லாமல் சம அளவிலான நடிப்பைச் சக நடிகர்களுக்குப் பகிர்ந்து கொடுத்ததன் வழி தனது ‘இயக்குநர்’ பொறுப்பை உன்னதப்படுத்தி இருந்தார். எல்லோருக்கும் இந்த மனம் வாய்க்காது. பெண்கள் இருவரும் அனுபவ முதிர்ச்சியோடு நடித்தார்கள். அவர்களுக்கு இது முதல் நாடகமாக இருக்கும் பட்சத்தில் அளவுக்கு அதிகமான திறமையை வெளிப்படுத்தினார்கள் என்றே சொல்வேன். நிகழ்வை முழுமையாகப் பார்த்த அழகிரிசாமியின் மகன் சாரங்கன் தனது தந்தையை, தந்தையின் படைப்பை இந்தக் கோணத்தில் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். உணர்ச்சிப் பெருக்கில் உட்கார்ந்து இருந்தார்.

இது ராம்ராஜூக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும். புதியதாய் முயன்று பார்க்கும் எல்லா கலைஞனுக்கும் நேரக்கூடிய அனைத்தும் ராம்ராஜூக்கும் நேரும். அவர் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. வழக்கம் போல தமிழ்ச் சூழலுக்குப் புதியதான நாடகங்களைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும். சமூகத்தின் பைத்தியகாரத் தன்மையை ஒரு கலைஞன் மட்டுமே நேர் செய்ய முடியும். ராம்ராஜ் அதைச் செய்வார் என்று நம்புகிறேன். அவருக்கும் அவரது குழுவினருக்கும் அன்பும் பாராட்டும்.

...........

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

  தத்துவங்கள் குறித்த உரையரங்கம் கோவை பீளமேட்டில் ‘ பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம் ’ தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது . அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் . பெரியாரியம் குறித்து   கு . ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட   தியாகு மார்க்சியம் குறித்துப் பேசினர் .  நான் அம்பேத்கரியம் பேசினேன் . அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன் . மனநிறைவான நிகழ்வாக அமைந்தது . சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே . அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின . ஒருவர் ‘ மாற்றுத்திறனில்  21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது . எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும் ’ என்றார் . ‘ நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும் ’ என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார் . ‘ நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் ...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...