Skip to main content

பூர்வீகக் குடிகளின் பாவலர் : மகா மதுரகவிஞர் வீ.வே.முருகேச பாகவதர்

 பூர்வீகக் குடிகளின் பாவலர் :  மகா மதுரகவிஞர் வீ.வே.முருகேச பாகவதர்

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள கொண்ணூரில் வேலாயுதனார், மயிலை தெய்வானை அம்மையார் தம்பதிக்கு 1897 ஆம் ஆண்டு அக்டோபர் 21 இல் பிறந்து 1974 அக்டோபர் 21 வரை எழுபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் மகா மதுரகவிஞர் வீ.வே.முருகேச பாகவதர். 2022 அக்டோபர் இருபத்தோராம் நாள் அவருக்கு 125 – வது பிறந்த நாளும் 48 வது நினைவு நாளுமாகும்.

மொழிப் பற்றாளர், எழுத்தாளர், பேச்சாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர், இசை விற்பன்னர் எனப் பன்முகம் கொண்ட பாகவதர், ஆதிதிராவிடர் சமூக சீர்திருத்தம், அறிவானந்தம், சுயமரியாதை, சன்மார்க்கம், சமதர்மம், ஞானரதம், மதுவிலக்கு, சென்னை சிங்காரம், மாதருரிமை, வெள்ளப்பாடல், தமிழ்ச்சோலை, காந்தி அடிகள், தோல் பதனிடுவோர் துயரம் முதலிய நூல்களை எழுதியிருக்கிறார். திராவிட இயக்க மேடைகளில் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பகுத்தறிவுக் கருத்துகளை கதாகலாட்சேபம் வழியாகப் பரப்புரை செய்திருக்கிறார். சுயமரியாதை இயக்கம், காங்கிரஸ் முதலிய அமைப்புகளோடும் தொழிற்சங்கங்ளோடும் இணைந்து இயங்கியவர். பாரதிதாசன் காலத்திய தமிழ்த்தேசியச் சாயல் இவரது கவிதைகளில் இருந்தாலும் பூர்வீக, ஒடுக்கப்பட்ட மக்களின் பாடுகளை இசைத்ததில் பூர்வீகக் குடிகளின் பாவலராக மிளிர்ந்திருக்கிறார்.


இவர் எழுதியதில் மிக முக்கிய நூலாக தோல் பதனிடுவோர் துயரத்தைக் குறிப்பிடலாம். கவித்துவமும் துயரமும் கலந்து எழுதப்பட்ட அகவல் பாடல். நூலின் இறுதியில் தனியன்களாக சில விருத்தப்பாடல்களும் இருக்கின்றன. ஆடும் மாடும் தமது வாழ்வைப் பற்றிப் பேசிக் கொள்வதான அமைப்பில் இருக்கும் இந்நூலில் காட்டு விலங்குகள் வீட்டு விலங்குகளாக மாற்றப்பட்ட வரலாற்றைச் சொல்லி வீட்டு விலங்குகள் மனிதர்களுக்கு உணவாகிய விதம், கடைசியில் ஆடு, மாடு என்னும் பெயர் நீங்கிதோல்எனச் சுட்டப்படும் நிலை வரை அழகாக விவரித்திருப்பார்.  புளிக்கின்ற கூழன்றிப் புழுதி யன்றிப் பூவுலகில் வாணாளில் என்ன உண்டோம்? ஒளிப்பின்றிக் கேட்கின்றோம் உழைப்புக் கேற்ற ஊதியமே அளித்திட்டால் அழிந்தா போவீர்?’ என்று தொழிலாளர்களின் குரலாக ஒலிக்கும் பாகவதரின் குரல் தொழிற்சங்கச் செயல்பாட்டில் தொழிலாளர்கள் தம்மை ஈடுபாட்டுடன் இணைத்துக் கொள்ள பெரிதும் துணையாற்றி இருக்கிறது.

நூலின் நிறைவுப் பகுதியில் தோல் பதனிடும் தொழிலாளர்களின் சுகாதாரமற்ற வாழ்விடம், உணவு, உப்புநீரில் வேலை பார்த்துக்கொண்டே இருந்ததால் விரல்களில் ஏற்பட்ட புண், துர்நாற்றம் ஆகியவற்றைச் சித்திரம் போல வருணித்திருப்பார். தொழிலாளர்களின் ஒட்டுமொத்த உழைப்பும் முதலாளிகளின் கைகளில் லட்சங்களாக மாறும் உழைப்புச் சுரண்டலை அவர் விவரிக்கும் விதம் வாசிக்கின்றவர்களைத் துணுக்குறச் செய்யும்.

கவித்துவமான பல புதிய தமிழ்ச்சொற்களை மிகச் சரளமாகப் பயன்படுத்தி இருப்பதை இவரது தனித்துவமாகச் சொல்லாம். உதாரணமாக ஒய்வூதியத்தைநன்றி மானியம்எனவும் மாமிசம் உண்போரின் குடலை ஆடு, மாட்டை அடக்கம் செய்யும்சுடுகாடுஎனவும் குறிப்பிடுவதைச் சுட்டலாம்.

பெண்களின் அழகைப் பற்றிச் சொல்லும் போது கருங்கூந்தல், மஞ்சள், பொட்டு, பூ, பொன்னகை அனைத்தும் புறவழகு. புன்னகை, கல்வி, ஒழுக்கம் ஆகியனவே அக அழகு என்கிறார். அக அழகே முக்கியம் என்பது அவர் கூறவரும் செய்தி.

குடிநீர் உரிமையும் கோயில் வழிபாட்டு உரிமையும் மறுக்கப்பட்டமைக்கான எதிர்க்குரலாக பாகவதரின் குரல் பல மேடைகளில் ஒலித்திருக்கிறது. ‘ஆடு, மாடு, கழுதை, பன்றி, நாய் குடிக்கும் நீரை ஆறறிவு மக்கள்/ நாடி குடித்திடவும் தொடக்கூடாதபடி செய்தார்/ நாய், பூனை, அணில், எலி, ஓணான், பறவை, வெளவால் புகுங்கோயில் உள் உரிமை/ கூடி ஒரு சமூகஞ் செல்லத் தடுத்தோரின் மிருகக்குணம் கூற வெட்கம்என்னும் பாட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் போர்க்குரலாக இருந்திருக்கிறது.

மங்கையர்கள் மார்பை மறைக்கக் கூடாதோ/ மங்கல வாத்தியம் முழங்கக் கூடாதோ/ தங்கவெள்ளி நகை அணியக் கூடாதோ/ தலையைச் சீவி புஷ்பம் சூடவும் கூடாதோ/ ஏழுகோடி நாங்கள் இந்தியர் அல்லவோ/ இன்ப சுதந்திரம் எங்களுக்கில்லையோ/ சூழும் எங்கள் மீட்சி அன்றிசுய ஆட்சி சொற்பனத்தும் உண்டோ/ ஏய்த்த காலம் மலையேறி விட்டதய்யாஎன்னும் வரிகள் விடுதலை பெற்ற இந்தியாவில் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமை மறுக்கப்பட்டதைப் புலப்படுத்துவதோடு ஆதிக்கச் சாதிகளை எச்சரிக்கும் பாங்கிலும் இருப்பதைக் காணமுடியும்.

பாகவதரின் சமூகப்பணியில் முக்கியமான காலம் அவர் அரசின் சார்பிலான மதுவிலக்குப் பிரச்சாரத் தூதுவராகப் பணியாற்றியது. செங்கல்பட்டு மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் பணியாற்றியபோது அவர் எழுதிப் பாடிய பாடல்கள் கர்நாடக இசையிலான கீர்த்தனைகளாக இருந்தபோதிலும் சொற்கட்டுகள் நாட்டுப்புறத் தன்மையிலானவையாக இருந்தன. ‘தண்ணீரைப்போல் கள்ளைத் தளராமல் குடிப்பவர்க்கு வெண்ணீறும் ஏதுக்கடிஞானம்பா வெண்ணீறும் ஏதுக்கடி/ மொந்தைக் கள்ளைத்தூக்கி முகந்தூதி குடிப்போர்க்கு சந்தனம் ஏதுக்கடி - ஞானம்பா சந்தனம் ஏதுக்கடிஎன்னும் பாடல் சித்தர் பாடலின் தாக்கத்தோடு சாமானியர்களின் மனச்சாட்சியோடு ஒன்றும் தன்மையில் புனைந்துகொண்டது பாகவதருக்குக் கூடுதல் பலமாக அமைந்தது. பாடலின் அமைப்பை அவ்வாறு அவர் பார்த்துக்கொண்டது தான் அவரை சாமான்ய உழைக்கும் மக்களிடம் கொண்டு சேர்த்தது. அதன்வழியாகத் தான் அவர் ஒடுக்கப்பட்ட, சாமான்ய மக்களிடம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, சுயமரியாதை சார்ந்த உரையாடல்களை நடத்தினார். சாதியப் பாகுபாடு, போதைக் கலாச்சாரம், பெண் வெறுப்பு முதலியன இச்சமூகத்தில் இருக்கும் வரை மகா மதுரகவிஞர் வீ.வே.முருகேச பாகவதர் நடத்திய உரையாடலைத் தொடர்வது தான் காலத்தின் தேவை.

……….

 (வீ.வே.முருகேச பாகவதரின் 125 வது பிறந்த நாள் 2022 அக்டோபர் 21)

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

  தத்துவங்கள் குறித்த உரையரங்கம் கோவை பீளமேட்டில் ‘ பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம் ’ தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது . அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் . பெரியாரியம் குறித்து   கு . ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட   தியாகு மார்க்சியம் குறித்துப் பேசினர் .  நான் அம்பேத்கரியம் பேசினேன் . அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன் . மனநிறைவான நிகழ்வாக அமைந்தது . சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே . அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின . ஒருவர் ‘ மாற்றுத்திறனில்  21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது . எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும் ’ என்றார் . ‘ நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும் ’ என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார் . ‘ நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் ...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...