பெண் – பதிவிரதை X தடிக்கழுதை
ஞா.குருசாமி
‘தடிக்கழுதை பாட்டு’ என்று ஒரு நூல். இதில் ‘ஆண்பிள்ளை
வீண்பிள்ளை’, ‘விலைமாதர்
கும்மி’ என்ற நூலும் உள்ளடங்கி
இருக்கிறது. 1914 ஆம் வருடம் மதறாஸ் என்.சி,கோள்டன் (கோல்டன்?) அச்சியந்திர
சாலையில் திருப்போரூர் டி கோபால் நாயகர் இந்த மூன்று நூல்களையும் ஒருங்கே பதிப்பித்திருக்கிறார். அதற்கு முன்னால் 1905 வருடம் மயிலம் சுப்பிரமணியசுவாமிகளால்
பார்வையிடப்பட்டு பார்த்தசாரதி நாயுடுவின் அச்சகத்தில் அச்சிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சிறுமணவூர் முனியசாமி முதலியார் இந்த நூல்களை எழுதியதாகத் தெரிகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 19
ஆம் நூற்றாண்டில் மத்திய பகுதி வரை தனியொரு மனிதனாக ஏராளமான நூல்களை எழுதியவராகவும் பதிப்பித்தவராகவும் தெரிகிறார். சிறுமணவூர் முனியசாமி
முதலியார் (இனி முனியசாமி எனச் சுட்டலாம்). இவர் குறித்து வீ.அரசு கட்டுரை ஒன்றைக் கூட
எழுதியிருக்கிறார். அச்சு பண்பாட்டில் முனியசாமியின் பங்களிப்பை பதிவு செய்வதாக அந்த கட்டுரை
அமைந்திருக்கிறது. நிற்க.
18 ,19 ஆம் நூற்றாண்டுகளில் உருவான தமிழ் இலக்கியப் பரப்பில்
முக்கியமானவரான முனியசாமியின் தடிக்கழுதைப்பாட்டு நூல் பற்றி
சில குறிப்புகளை பகிர்வதென்பது அவசியமாகப்பட்டது. அந்நூலில் 24 பாடல்களில் பதிவிரதை x தடிக்கழுதை என்று பெண்களை இரண்டு வகையாகப் பகுத்து
பதிவிரதைக்கும் தடிக்கழுதைக்கும் இலக்கணம் (?) தருகிறார். பதிவிரதைக்கு அவர் தரும்
இலக்கணம் கீழ்வருமாறு
1.
அன்னை தந்தையை தினமும் அன்பால் உபசரிப்பவள்
2.
மோசமான கணவனாக இருந்தாலும் அவனை வணக்கம் செய்பவள்
3.
மூடனாக கணவன் இருந்த போதும் அவனை தன்மையுடன் நடத்துபவள்
4.
மாமியார் அடித்தாலும் மௌனமாய் இருப்பவள்
5.
கணவன் சம்பாத்தியம் அறிந்து செலவு செய்பவள்
6.
தலை குனிந்து நடப்பவள்
7.
அந்நிய ஆண்கள் மீது ஆசை கொள்ளாதவள்
8.
பூ வைத்துக் கொண்டு தெருவில் போகக் கூச்சப்படுபவள்
9.
கணவன், மாமியார், மாமனார் அடித்தாலும் அமைதியாக இருப்பவள்
10. காலையில் எழுந்து கணவன் பாதம் தொழுபவள்
11. பசித்து வருவோருக்கு அன்னமிடுபவள்
12. அண்டை, எதிர் வீட்டுக்குப் போகாதவள்
13. தங்கமின்றி கயிறாக மட்டுமே தாலி கட்டி இருந்தாலும் கணவனை
வெறுக்காதவள்
14. வாசப்படி கடந்தால் குற்றமாகும் எனக் கருதுபவள்
15. குடும்பம் சிதையாமல் இருக்க வேண்டும் என நினைப்பவள்
16. கணவன் அழகில்லாமல் இருந்தாலும் அவனை நேசிக்கிறவள்
17. கணவனுக்கு முன் எழுபவள்
18. அறம் செய்பவள்
19. உண்டி சுருக்குபவள்
20. ஊரை பகைக்காதவள்
21. சக்காளத்தி பிள்ளையையும் தன் பிள்ளைபோல் சமமாகப் பார்ப்பவள்
22. பிச்சை கேட்பவனுக்கு பிச்சை தருபவள்
23. அணிகலன் அணிந்து தெருவில் நடக்காதவள்
24. முனியசாமி என்னும் எனது வார்த்தைக்கு ஏற்ப நடப்பவள் பதிவிரதை
‘தடிக்கழுதை’ யாவள்? என்பதற்கு
சில இலக்கணம் தருகிறார். அவை கீழ்வருமாறு
1.
துரோகி என்னும் பெயரை ஏற்றுக் கொள்பவள்
2.
கணவனோடு சண்டை செய்பவள்
3.
மன்னனாக இருந்தால் கூட மதிக்காமல் பேசுபவள்
4.
யாரையும் அறியாமல் இருப்பவள்
5.
கணவனை கடனாளியாக்குபவள்
6.
தெரு சண்டை செய்பவள்
7.
எல்லா சாதி ஆண்கள் மீதும் இச்சை கொண்டு அலைபவள்
8.
பூ முடித்து வம்பு செய்பவள்
9.
கணவன் மாமி மாமியாரை சண்டைக்கிழுத்து மானம் கெடுப்பவள்
10. வேலை செய்யாமல் பாயில் சோம்பலாய்க் கிடப்பவள்
11. பசித்து வருவோருக்கு அன்னம் இடாதவள்
12. கண்ட கண்ட இடம் திரிந்து சண்டை இழுத்து வருபவள்
13. கணவன் இயலாமையை சுட்டுபவள்
14. எல்லா வீடுகளிலும் பேசி சண்டை செய்பவள்
15. குடும்பத்தைச் சிதைப்பவள்
16. அழகாய் வரும் எந்த ஆணோடும் சேர்கிறவள்
17. கணவனுக்கு பின் எழுபவள்
18. அறம் செய்கிறவரை தடுப்பவள்
19. கண்ட பாட்டுக்களையும் ஆட்டங்களையும் பார்த்து கைவீசித்
திரிகிறவள்
20. அனைவரிடமும் வம்பு வளர்ப்பவள்
21. ஒழுக்கம் உடைய பிள்ளையையும் மிரட்டுகிறவள்
22. பிச்சை கேட்டு வருகிறவரை ஏசி விரட்டுகிறவள்
23. அலங்கரித்துக் கொண்டு தெருவில் நடக்கிறவள்
24. இதெல்லாம் ஒரு புத்தகமென்று எழுதி இருக்கிறாரே முனியசாமி என்று பரிகசிப்பவள் தடிக்கழுதை
என்று தடிக்கழுதை பற்றிய இலக்கணத்தை தருகிறார்.
பெண் தனக்கெதிரான
வன்முறைகளை எதிர்க்காதவளாக இருப்பவளும், வீட்டைத் தாண்டி வெளியே வராமல் இருப்பவளும்
பதிவிரதை. கணவன், மாமி, மாமனாராக இருந்தபோதும் அவர்களுக்கு எதிராக இருப்பவள், தன்னை
அலங்கரித்துக் கொண்டு வீதியில் வலம் வருகிறவள் தடிக்கழுதை என்கிறார் முனியசாமி. இது
முனியசாமியின் படைப்புகளுள் ஒன்று பற்றிய சிறிய அறிமுகம் மட்டுமே. மற்றொரு சூழலில்
விரிவாக ஆய்வு செய்து பேசலாம். தடிக்கழுதைப் பாட்டு நூலிம் முதல் பக்கம் கீழே…
தடிக்கழுதைப் பாட்டு நூலின் முதல் பக்கம்
Comments