ஆ.இரா.வேங்கடாசலபதி,
எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா ஆகியோர்களின் இரண்டு நூல்களும் எனது பார்வையும்
ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த ‘வ.உ.சி.யின் சிவஞானபோத உரை’யை ஒரு தேவையின் பொருட்டு வாசிக்க நேர்ந்தது. அந்த நூலின் வழியாக அறிமுகமான அவரே எழுதிய ‘திராவிட இயக்கமும் வேளாளரும்’ என்று ஒரு நூலை வாசித்தேன். அதில் வரும் விவரணைகளை விட அடிகுறிப்புகள் எனக்கு முக்கியமாகப்பட்டன. அதனூடாகத் தேடிக் கண்டைந்த நூல்தான் ‘தினமணி பார்ப்பனியத்தின் முகமூடி ஒரு விவாதம்’ இந்நூலின் பழைய பெயர் ‘திராவிட தினமணியின் பார்ப்பனியம்’. இதை எஸ்.வி. ராஜதுரை, வி.கீதா ஆகியோர் இணைந்து தொகுத்திருக்கிறார் . இது 1990களில் தினமணியில் இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ஆர்.என்.சத்யா, தமிழவன் x எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோர்களுக்கு இடையே நடந்த விவாதமாக இருக்கிறது.
அதிமுகவில் எம்ஜிஆரின் மரணத்திற்குப் பிறகு எழுந்த அரசியல்
குழப்பங்களை நீந்தி கடந்து பெருமூச்சு விட்டபடி முதன் முதலில் முதல்வராக பொறுப்பு
வகித்த ஜெயலலிதாவின் ஆட்சிக்காலமான 1994 இல் இந்த நூல் வெளிவந்திருக்கிறது. அந்தக் காலத்தில் பரவலாக திமுகவின் மீது ‘வெள்ளாளர் கட்சி’
என்றொரு முத்திரை விழுந்திருந்தது. அந்த முத்திரையை மறுத்து திராவிட
இயக்கத்தின் குறிப்பாக திமுகவின் மீது புத்தொளி பாய்ச்சுவதற்கு முயன்ற நூலாக
இதைப் பார்க்க முடிகிறது. நூலாசிரியர் ஒரு
காலத்தில் திராவிட இயக்கத்தில் வேளாளர் கை ஓங்கி இருந்தது
என்பதை ஒத்துக் கொள்ளாமல் இல்லை.
‘தினமணி பார்ப்பனியத்தின் முகமூடிகள் ஒரு விவாதம்’ எனும் நூலில் இடம் பெற்ற ‘இரு
சக்திகளும் (பார்ப்பனர், வேளாளர்) தங்களுக்குள் பங்காளி சண்டை போட ஆரம்பித்தது தான்
ஆரிய திராவிட போட்டி’ என்ற தமிழவனின் கூற்றை
ஆ.இரா.வே. மேற்கோள் காட்டுவதன் வழி அதே காலத்தில் திராவிட
இயக்கத்தின் மீது வெள்ளாளர் முத்திரை விழுந்துவிட்டதை உறுதிப்படுத்தலாம். இதை மறுப்பது தான் திராவிட
இயக்கமும் வேளாளரும் நூலின் உள்ளடக்கம். ஆ.இரா.வே.யின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும்
விதமாகவே
‘நீதி கட்சியும் கூட
ஒரு சில வேளாளர்கள் தமது சொந்த நலனுக்காக உருவாக்கிக் கொண்ட கட்சி அல்ல’ என்னும் எஸ்.வி.ராஜதுரை& வ.கீதா ஆகியோரின் கூற்று அமைந்திருக்கிறது.(‘தினமணி பார்ப்பனியத்தின் முகமூடி ஒரு விவாதம்’ (ப.95)
அதாவது, பார்ப்பனர்கள் அல்லாதார் இயக்கத்தில் இருந்து முகிழ்த்த
திராவிட இயக்கம் வேளாளர்கள் இயக்கமா?
இல்லையா? என்கிற விவாதம் 1990களில் ஏதோ ஒரு தேவையின் பொருட்டு உருவாகியிருக்கிறது. எனது
நிலைப்பாடு என்னவென்றால் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் 19,20
ஆம் நூற்றாண்டில் மட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியா முழுமையும் இருந்து வந்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பிராமணர் அல்லாதார் இயக்கத்தில்
வேளாளர்கள் உட்பட்டு பல சூத்திர சாதியினரும் இருந்திருக்கிறார்கள் என்ற போதிலும் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியினுடைய மகாராஷ்டிர
அரசியல், அதை உருவாகிய அறிவுஜீவிக் குழுக்கள், பதினெட்டாம்
நூற்றாண்டில் தமிழக மராட்டிய அரசியல் என்பதன் வழியாக பயணித்து 20ஆம் நூற்றாண்டு திராவிட இயக்கம் என வந்து நிற்கிறபோது திராவிட
இயக்கம் வேளாளர்களுக்கானது தான் என்பதை
என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
இரண்டாம் நிலை ஆதாரங்களாக நின்று எனது நிலைப்பாட்டிற்கு வலுச்
சேர்க்கும் விதத்தில் இந்த இரண்டு நூல்களும் முக்கியமானவை என்பது என்
எண்ணம்.
ஞா.குருசாமி
Comments