அண்ணாவின் நாடகங்கள்
ஞா.குருசாமி
படைப்பாளியின் படைப்பு மனம் சுயம்பல்ல. அது வேறு சில கருத்தியல்களின் கூட்டுப் பிழிவு.
ஆழ்மனதில் எப்போழுதோ பதிவான ஏதோ ஒன்று அதற்கேற்ற சூழல் அமையும் போது
படைப்பாக மாறுகிறது. மொழி – சூழல்
– கருத்தியல் ஆகியன ஒருங்கிணையும் புள்ளி படைப்பு மனமாக மாறும்.
அதனாலேயே படைப்புகள் மொழி, சூழல், கருத்தியல்களைப் பிரதிபலிப்பனவாக இருக்கும். அண்ணாவின்
நாடங்களைப் புரிந்து கொள்வதற்கு அவரது காலத்திய சூழல், கருத்தியலைப்
புரிந்தாக வேண்டும்.
1916 நவம்பர் 20 இல் தொடங்கப்
பெற்ற நீதிக்கட்சி தமிழகத்தில் 1920 டிசம்பர் முதல் 1937 வரை ஆட்சியில் இருந்தது. 1937 முதல் 1967 வரை இடையில் ஒரு ஆறு வருடங்களை தவிர்த்து காங்கிரஸ்
ஆட்சியில் இருந்தது. 1967இல் திமுக வெற்றி பெற்றது. அண்ணா முதலமைச்சர் ஆனார். அண்ணா
1920 களில் நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டது, பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டது. பெரியாரிடம் முரண்பட்டது,
திமுகவை ஆரம்பித்தது ஆகியன அண்ணாவின் அரசியல் பயணத்தில் முக்கியமானவை.
இந்நான்கு கட்டத்திலும் அண்ணாவின் படைப்பு மனம் ஒரே மாதிரியாக இல்லை.
1935 இல் திருப்பூரில் நடந்த செங்குந்த இளைஞர்
மாநாட்டில் பெரியாரை அண்ணா முதன்முதலாகச் சந்திக்கிறார். 1937 இல் பெரியாரின் குடியரசு இதழுக்குத் துணையாசிரியராகப் பொறுப்பேற்கிறார்.
1944 இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறியது.
1949-இல் அண்ணா பெரியாரை விட்டு பிரிகிறார். ஆனால் அதற்கு முன்பாகவே 1944 இல் ‘வேலைக்காரி’ நாடகத்தில் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என பேசத் தொடங்கி
விட்டார். பெரியாரோடு இருந்த போது அண்ணாவின் எழுத்துகளில்
பிராமண எதிர்ப்பு இருந்தது. பெரியாரைப் பிரிந்த பின் அவரிடம்
ஜமீன்தார், பண்ணையார்கள் குறித்த எதிர்ப்புகளே இருந்தன. ஜமீன்தார்களையும் பண்ணையார்களையும் எதிர்ப்பது அண்ணாவின் கொள்கையாக இல்லை. மாறாக அது அன்றைய பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின்
வெறுப்பாக இருந்தது. மக்களின் வெறுப்பைத் திரளாக்கி அவர்களை
அரசியல் மையப்படுத்தினால் தான், தானொரு வெகுஜன தலைவராக
உருவெடுக்க முடியும் என அண்ணா நம்பினார். அதனால் தான் அவரது
பிற்கால நாடகங்கள் ஜமீன்தார் பண்ணையார்களை எதிரிகளாக சித்தரித்தன.
கலைகள் மக்களின் பகுத்தறிவை மழுங்கடித்து விடும் என்று பெரியார் எழுதியும் பேசியும் வந்த காலத்தில் 1944 இல் ஈரோட்டில் டி.கே.சண்முகம் குழுவினரின் சார்பாக தமிழ்
மாகாண நாடகக் கலை அபிவிருத்தி மாநாடு நடந்தது. அதில் கலந்து
கொண்டு உரையாற்றிய அண்ணா, புராண இதிகாச நாடகங்களை
விட்டுவிட்டு பகுத்தறிவு நாடகங்களை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று பேசினார். 1944 இல் திராவிடர் கழகத்தின் தலைவராக பெரியாரும் அதன்
பொதுச்செயலாளராக அண்ணாவும் இருக்கிறார். அதே காலத்தில் பெரியார் ‘குடியரசு’ இதழையும், அண்ணா ‘திராவிட
நாடு’ இதழையும் தனித்தனியாக நடத்தி வருகிறார்கள். டி.கே.சண்முகம் குழுவினரின்
மாநாட்டை பெரியார் குடியரசில் ‘படுதோல்வி
‘என்ற எழுத, அண்ணா திராவிட நாட்டில் ‘வெற்றி’ என்று எழுதினார்.
1947
- இல் இந்தியா விடுதலை பெற்றதை
பெரியார் துக்க நாளாகக் கடைப்பிடித்தார். அண்ணா இன்ப நாளாகக் கொண்டாடினார். இதனூடே 1947 இல் நடந்த திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் அண்ணா கலந்து
கொள்ளவில்லை. கலந்து
கொண்டவர்கள் மறைமுகமாக அண்ணாவைத் தாக்கி பேசினார்கள். அதை
மறுத்து பேசும் சூழல் அண்ணாவுக்கு உருவாகியது. பெரியார் நீதிக்கட்சியாக
இருந்ததை திராவிடர் கழகமாக மாற்றி, தேர்தல் அரசியலில் இருந்து திராவிடர் கழகத்தை முழுமையாக விடுவிக்கிறார். காங்கிரசுக்குச் சரியான
எதிர்க்கட்சி இல்லாத சூழலில் அதை தனக்குச் சாதமாக மாற்றுகிறார் அண்ணா.
‘சமுதாயத்தில் சீர்திருத்தம், பொருளாதாரத்தில் சமதர்மக் கொள்கை, அரசியலில்
வடநாட்டு ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலை என்ற கொள்கை தான் திமுகவின் கொள்கை’ என்று அக்கட்சி தொடங்கப்பட்ட முதல் கூட்டத்தில் அண்ணா பேசினார். அதே கூட்டத்தில் அவர் தம்மோடு இணைந்து பணி செய்ய வருமாறு
கம்யூனிஸ்ட்டுகளை அழைத்தார்
1935 முதல் 1949 வரை பெரியாரோடு பணி செய்த காலத்தில் அண்ணா எழுதிய
நாடகங்கள் பிராமண எதிர்ப்பை முதன்மையாகவும் அதற்குப் பிறகு எழுதிய நாடகங்கள் பிராமண
எதிர்ப்பை பின்னுக்குத் தள்ளி ஜமீன்தார் பண்ணையார் எதிர்ப்பு, கம்யூனிசம் போன்றவற்றை முதன்மை படுத்திய
நாடகங்களாக வெளிவந்தன. நாடகங்களைப் புனைவதற்கு அன்றாட
பத்திரிகை செய்திகள், வரலாறு, புராண
இதிகாசங்கள் ஆகியவற்றைச் சூழலாகக் கொண்டார்.
1949-ஆம் ஆண்டு ‘வேலைக்காரி’ திரைப்படமாக வெளிவந்தது. தெய்வங்களையும் அரசர்களையும் பேசுபொருளாகவும் படத்தின் தலைப்பாகவும்
கொண்டு வெளியான தமிழ் திரைப்பட வரலாற்றில் ‘வேலைக்காரி’ என்ற பெயர் அண்ணாவை மாற்றுச் சிந்தனையாளராகக்
காட்டியது. இதுதான் அண்ணாவை வெகுமக்களிடம் நெருக்கமாகக் கொண்டுசேர்த்தது. அதற்குப்
பிறகு அவரது எழுத்துகளில் காங்கிரஸார் பற்றிய விமர்சனம் கூடுதல் கூர்மை பெற்றிருந்தது.
Comments