Skip to main content

பா.திருச்செந்தாழையின் ‘வீழ்ச்சி’யும் இளங்கோவன் முத்தையாவின் ‘துறப்பு’ம்

 

பா.திருச்செந்தாழையின் ‘வீழ்ச்சி’யும்

இளங்கோவன் முத்தையாவின் ‘துறப்பு’ம்

ஞா.குருசாமி

இன்று (25.07.2022) தமிழினியில் பா. திருச்செந்தாழையின் வீழ்ச்சி கதை வெளியாகியிருக்கிறது. வழமையான ஒரு நடத்தையை புதியதொரு உத்தியிலும் சொல்ல முடியும் என்பதற்கு அவரின் ‘தேவைகள்’ கதை நல்ல உதாரணம். அதற்குப் பிறகு அவருடைய கதைகளை விரும்பி வாசித்தேன். சமீபத்தில் வெளியான அவரது ‘விலாஸம்’ கதைத் தொகுதி, கதை சொல்லலின் பல புதிய கோணங்களைப் பரிசோதித்திருந்தது.


திருச்செந்தாழையின் கதைகள் வணிக உலகத்தின் ஏற்றம், மாற்றம், துரோகம், போலியான கரிசனம், பெருவணிகத்தின் வரவு, சிதறும் சிறுவணிகம், வணிகத்தில் தாக்குப் பிடிக்கும் வல்லமை பற்றி அசாத்தியமான புனைவில் அமைந்தவை. வணிகம் என்பது வணிக லாபம் பார்ப்பது மட்டுமல்ல. சக வணிகனை வெல்வதும், களத்தை விட்டே துரத்தியடிப்பதும் வணிகம் தான் என்பதை வேறுவேறு கோணத்தில் நின்று வாசகனை உணர வைப்பவை.

சிவபாலன், சகுந்தலா, தினகரன், காசி நால்வரும் தான் வீழ்ச்சி கதையின் முக்கியப் பாத்திரங்கள். சகுந்தலாவின் அப்பா பெரிய அளவில் இரட்டை மாடி மளிகைக்கடை நடத்தியவர். தொழில் வீழ்ச்சி அடைந்து இன்று தீப்பெட்டி அளவிலான கடையில் இருந்து தொழில் செய்கிறவர். அவரது வீழ்ச்சிக்கான காரணம் யாராலும் அறியப்படாததாக இருக்கிறது. அவரே உணர்ந்தும் உணராமலும் தன்னைக் காட்டிக் கொள்கிறார். கடனுக்குச் சரக்குக் கொடுத்த கணக்கை எழுதிவைத்த கணக்குச்சிட்டையில் காரணம் கண்டு பிடிக்க முயல்கிறாள் சகுந்தலா. ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து மிகச் சரியாக் கணிக்கிறாள் சகுந்தலா.  

தினகரன் சகுந்தலாவின் கணவன். செல்வந்தன். பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே அள்ளி செலவழிப்பவன். பணம் கொடுத்து செலவு போக வாங்கும் மீதப் பணம் எவ்வளவு என்றாலும் எண்ணி பார்க்காமலேயே பையில் வைத்துக் கொள்கிறவன். வியாபார உலகின் சூது அறியாதவன்.

சிவபாலன் சகுந்தலாவின் மகன். பத்து வயது சிறுவன். விளையாட்டுப் பிள்ளை. அடித்தாலும் சிரித்துக்கொண்டே இருக்கும் வெகுளி. வயதுக்கும் உடலுக்கும் அறிவுக்கும் இயைபு இல்லாதவன். காசி சூதன். தினகரனின் குடும்ப உதவியில் தொழில் தொடங்கியவன்.

சகுந்தலாவின் பிறந்த வீடும் புகுந்த வீடும் வியாபாரத்தில் நட்டமடைந்து அதலபாதாளத்தில் கிடக்கும் போது ,அதிலிருந்து மீண்டும் விட எத்தடனிக்கும் சகுந்தலா பற்றிய விவரிப்பு கதையின் முக்கியமான இடம். வணிக உலகில் சக வணிகனிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் துரோகம் இழைக்கப்படலாம் என்பதை, காசி வழியாகச் சித்தரித்த இடம் யதார்த்தம் தாண்டிய, வாசகனுக்குள் உறைநிலையை ஏற்படுத்தும் பாடியானது.

கடன்பட்டு சகுந்தலா வேறொரு ஊருக்கு ஓடிய பின் காசியுடன் விட்டுவந்த தன் மகன் சிவபாலனைப் பார்க்க போகிறாள். சிவபாலன் அங்கு மூட்டை தூக்குபவனாக இருக்கிறான். சிவபாலனின் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவரின் ஒத்துழைப்பால் தான் இன்றைக்கு வணிகத்தில் இருக்கிறோம் என்பது காசிக்கு தெரியும். என்ற போதிலும் நிராதரவாக விட்டு விட்டுப் போன  குழந்தைத்தனம் மாறாத சிவபாலனை மூட்டை தூக்க வைக்கிறார் காசி. தன் மகன் மூட்டைதான் தூக்கியிருக்கிறான் என்பதைத் தெரிந்துவிட்ட சகுந்தாவின் முன் சமாளிக்கும் காசியை  சிவபாலன் பார்க்கும் பார்வை, காசிக்கும் சகுந்தலாவுக்கும் வேறுவேறு உணர்வைக் கடத்துவது அருமை.

 சகுந்தலாவின் கனவு, காசிக்கு மீன் வைப்பது, சகுந்தலாவின் மாமனார் புரிதல், கோழியின் சிலிர்ப்பு ஆகிய விவரிப்புகளைக் கதையின் போக்கோடு தொடர்பு படுத்தி இருக்கும் இடம் அழகு.

சகுந்தலாவைப் புரிந்து கொள்ள கதையில் வரும் உருவங்களும் பூடக விவரிப்புகளும் முக்கியமானவை. உருவங்கள் வழியாக கதைக்குள் கதை சொல்ல முடியும், வாசகனின் மனவெளியை அவனுக்குள் அவனையே விஸ்தரிக்க வைக்கும் கலையை நிகழ்த்தி விடமுடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தக் கதையை உறுதியாகச் சொல்லலாம்.

இதே தமிழினியில் இளங்கோவன் முத்தையா எழுதிய ‘துறப்பு’ கதையும் வெளியாகி இருக்கிறது. அது, உதாசீனம், புறக்கணிப்புக்கு மத்தியில் தீவிர திடீர் நோயாளியின் உலகம் பற்றியது. விபத்தில் சிக்கி குழந்தையோடு மருத்துவமனையில் தானே நடந்து வந்து சேர்கிறார். குழந்தை எதுவும் அறியாமல் விளையாடிக்கொண்டே போனில் இருக்கிறது. வரும் அழைப்புகளைத் துண்டித்துவிட்டு விளையாடுகிறது. தன்னைப்பற்றி எந்த தகவலும் சொல்லாமலே சுயநினைவற்றுப் போகிறாள். அது பற்றி குழந்தை எதுவுமே அறியாமல் சார்ஜ் தீர்ந்து போன போனுக்காக சார்ஜர் கேட்டுத் திரிகிறது. பொறுப்பற்ற, சுற்றி நடப்பவற்றைக் கவனிக்க விரும்பாத, உறவுகளின் மீது பிடிப்பற்ற மனிதர்கள் சூழ் உலகமொன்று உருவாகிவிட்டதைச் சித்திரிக்கும் இந்தக் கதையின் மொழி முன்னும் பின்னும் ஒட்டாமல் இருக்கிறது. கதையின் நுவல்பொருள் சமகாலத்தின் பேரவலம்.

.......................

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

  தத்துவங்கள் குறித்த உரையரங்கம் கோவை பீளமேட்டில் ‘ பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம் ’ தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது . அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் . பெரியாரியம் குறித்து   கு . ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட   தியாகு மார்க்சியம் குறித்துப் பேசினர் .  நான் அம்பேத்கரியம் பேசினேன் . அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன் . மனநிறைவான நிகழ்வாக அமைந்தது . சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே . அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின . ஒருவர் ‘ மாற்றுத்திறனில்  21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது . எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும் ’ என்றார் . ‘ நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும் ’ என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார் . ‘ நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் ...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...