Skip to main content

கு.இலக்கியனின் ‘காத்தாள்’ கதை

 


கு
.இலக்கியனின்காத்தாள்கதை

பணம் இருந்தால் குற்றக்கண்மாயின் கசிவை அடைத்து விடலாம் என்பது ஓர் அசைக்க முடியாத கருத்தியலாகவே இருந்து வருகிறது. அதை இலக்கியம் சினிமாக்கள் நிறைய பேசியிருக்கின்றன. ஒரே விஷயத்தை ஏன் திரும்பத் திரும்ப பேச வேண்டும் என நான் யோசித்தது உண்டு. ஆனாலும் பேச வேண்டிய தேவை இருப்பதை சீக்கிரமே கண்டு கொண்டேன். ஒரே விஷயம் ஒரே மாதிரி நடப்பதில்லை. வேறுபாடுகள் உண்டு. வேறுபாடுகளைப் பேச வேண்டும். வேறுபாடுகள் போதி மரங்கள். வேறுபாடுகளைச் சரியாக புரிந்து கொண்டவர்கள் வேஷமற்ற வெகுமக்களின் அரசியலைப் பேசுகிறவர்களாக இருப்பார்கள். அத்தகையோர்களை உருவாக்கிக் கொண்டே இருப்பதற்கு ஒரே விஷயங்களின் வேறுபாடுகளை எல்லா வடிவங்களிலும் பேச வேண்டியிருக்கிறது. அப்படி பேசிய கதை தான் கு.இலக்கியனின்காத்தாள் கதை. 2022 ஜூலை நீலம் இதழில் வெளியாகியிருக்கிறது.

பூவான். காத்தாள், கொயிந்துப் பண்ணை மூவரும் கதையின் முக்கிய புள்ளிகள். பூவான் பசுஞ்சோலைக் கிராமத்தின் பரம்பரை வெட்டியான். பிணம் எரிக்க மேடை தயார் பண்ணுவது, விறகு அடுக்குவது, வேகாத எலும்புகளைப் பொறுக்கிப் புதைப்பது ஆகியவற்றில் நிபுணன். யாரும் இல்லாத தனி ஆள். நெஞ்சுரம் கொண்டவன்.

காத்தாள் அவள் அம்மாவோடு அறுவடை காலத்தில் அறுப்பு அறுத்து பஞ்சம் பிழைக்க பசுஞ்சோலை கிராமத்திற்கு வந்தவள். காத்தாளுக்கு அவள் அம்மாவை தவிர நாதியில்லை. அவள் அம்மாவும் நாதியற்றவள். தனி ஆள். காத்தாளின் அம்மா காத்தாள் பிறப்பதற்கு முன்பிருந்தே பசுஞ்சோலை கிராமத்திற்கு அறுவடைக்கு வந்து போனவள். இப்போது வயது வந்த மகளோடு வந்திருக்கிறாள். வந்த இடத்தில் கடும்காய்ச்சல் உண்டாகி இறந்து விட்டாள். அவளை அடக்கம் செய்ய வேண்டும். நாதியற்றவர்களுக்கு நாதியற்றவர்களே துணை என்பது போல பூவான் காத்தாளின் அம்மாவை தோளில் தூக்கிக்கொண்டு சுடுகாடு செல்கிறான். ஊர்க்காரர்கள் வழி மறிக்கிறார்கள். ஊரோடு சம்பந்தமில்லாதவர்களை அதுவும் பஞ்சம் பிழைக்க வந்தவர்களையெல்லாம் ஊர் சுடுகாட்டில் எரிக்க அனுமதிக்க முடியாது என்கிறார்கள். பூவான் பேசிப் பார்க்கிறான். யாரும் ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. சட்டென்று காத்தாளின் கையைப் பிடித்து இப்போது முதல் இவள் என் பொஞ்சாதி இனி இவளுக்கும் இந்த ஊருக்கும் சம்பந்தம் உண்டு என்கிறான். ஊர் என்ன செய்வதென்று தெரியாமல் வாய்மூடி வழி விடுகிறது

ஊரின் பெரிய மனிதன் கொயிந்துப் பண்ணை. ஒண்டிக்கட்டை. கல்யாணத்தில் மட்டும் விருப்பம் இல்லாதது போல் காட்டிக்கொண்டவன். திடீரென நெஞ்சு வலி கண்டு சாகக் கிடக்கிறான். பூவானை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்புகிறான் கொயிந்துப் பண்ணை. தனது குடிசையில் இருந்த பூவான் அவசர அவசரமாக கொயிந்துப் பண்ணை வீட்டுக்குள் வருகிறான். வீட்டுக்குள் நுழைகிறான். கொயிந்துப் பண்ணை பூவானை அருகில் வருமாறு அழைத்து பூவானின் காதில் அவனுக்கு மட்டுமே கேட்கும்படி மெல்ல ஏதோ சொல்லுகிறான். சொல்லியதும் இறந்தும் போகிறான்.

பூவான் எரிமேடையைத் தயார் செய்கிறான். கொயிந்துப் பண்ணையின் பிணம் கொண்டுவரப்படுகிறது. தன் மனைவி காத்தாளை வைத்து கொள்ளி வைக்கிறான் பூவான். இந்தப் பொருண்மையில் தான் அந்தக் கதை அமைந்திருக்கிறது.

கதையில் கதைக்கான நடை குறைவாகவும் கட்டுரைக்கான நடை அதிகமாகவும் இருக்கிறது என்றாலும் அது கதை ஓட்டத்திற்குத் தடையாக இல்லை. விளிம்புநிலை மக்கள் வேலைத்தளத்தில் பாலியல் ரீதியாக சுரண்டப்படும் வரலாற்றைப் பதிவு செய்த கதைகளில் இதுவும் ஒன்றுதான் என்றாலும் சில வேறுபாடுகளைக் காட்டி இருக்கிறது. வெட்டியானின் மனைவியான காத்தாளை ஊரின் பெரும்பணக்காரப் பண்ணையின் மகளாக சித்திரித்தது மிக முக்கியமான வேறுபாடு. அதையும் பண்ணையின் வாயாலேயே சொல்ல வைத்தது அரசியல். இன்று உள்ள பண்ணைகளின் நிலங்களில் காத்தாள் போன்ற நிறையப் பெண்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதையும் பண்ணைகளின்ஒழுக்கத்தையும் பேசிய விதத்தில் இது நல்ல கதை.

ஒருவர் வாழும் போது நேரும் அவமானத்தை விட அவரின் மரணத்தில் நேர்ந்து விடும் அவமானம் துயரமானது’. தலை குனிந்திருப்பவர்கள் தலை நிமிர்ந்து விடுவதை சரியென்று ஏற்றுக் கொள்ளாத சமூகமிது’. பிடித்தவர்களின் அருகாமையற்ற இந்த இரவின் உறக்கத்தைக் கவலைகள் தின்று செரித்துவிடும் என்கிற கவித்துவ விவரிப்புகள் கதையை கதையாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கின்றன. கு.இலக்கியன் இன்னும் நிறைய எழுத வேண்டும்.

…………………………

                            

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

  தத்துவங்கள் குறித்த உரையரங்கம் கோவை பீளமேட்டில் ‘ பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம் ’ தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது . அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் . பெரியாரியம் குறித்து   கு . ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட   தியாகு மார்க்சியம் குறித்துப் பேசினர் .  நான் அம்பேத்கரியம் பேசினேன் . அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன் . மனநிறைவான நிகழ்வாக அமைந்தது . சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே . அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின . ஒருவர் ‘ மாற்றுத்திறனில்  21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது . எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும் ’ என்றார் . ‘ நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும் ’ என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார் . ‘ நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் ...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...