Skip to main content

அரசுப் பள்ளி மாணவர்களின் புதிய எதிர்கொள்ளல்…



அரசுப் பள்ளி மாணவர்களின் புதிய எதிர்கொள்ளல்…
ஞா.குருசாமி

          மக்களின் பொறியியல் குறித்த எதிர்மறை எண்ணம் கடந்த ஆண்டை விட இப்பொழுது அதிகரித்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிக்குச் செலவிடும் தொகையில் சிறுபகுதியைத் தனியார் பள்ளியில் செலவளித்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குத் தம் பிள்ளைகளைத் தயார் படுத்துவதே நிரந்தர வருவாயுள்ள, நடுத்தர மக்களின் பெருங்கனவாக இருக்கிறது. அது சாத்தியப் படாத பொழுது அவர்களின் அடுத்த இலக்கு பொறியியல். போதிய வேலை வாய்ப்பின்மை, தற்போதைய சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் பொறியியல் இலக்கை மாற்றி இன்று கலை அறிவியல் கல்லூரிகளை நாடத் தொடங்கி விட்டனர். அறிவியலில் இயற்பியல், கணிதப் பட்டப்படிப்புகளுக்கும் கலையியலில் ஆங்கில இலக்கியப் படிப்புக்கும், வணிகவியலுக்கும் மிகுந்த போட்டி ஏற்பட்டிருக்கிறது.
       அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கணிசமான பேரளவில் வெற்றி பெற்று பணிவாய்ப்பு பெற்றுவிடுகின்றனர். கல்வியியல் முடித்த பலர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி இருபத்தைந்து வயதுக்குள் அரசுப் பள்ளியில் ஆசிரியராகி விடுகின்றனர். தனியார் பள்ளிகளிலும் பணி வாய்ப்பு நிரம்ப இருக்கின்றன. இச்சூழலோடு பொறியியலை ஒப்பிடும் மக்களின் மனப்போக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் அவர்களைத் திருப்பி விட்டிருக்கிறது. அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளிலும் தற்போது விண்ணப்பம் வாங்கவும், சமர்ப்பிக்கவும் நீண்ட வரிசையைக் காண முடிகிறது. நான்காயிரம் இடங்களைக் கொண்டுள்ள பிரபலமான கலை அறிவியல் கல்லூரிகள் சிலவற்றில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் இருபத்தைந்தாயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
    பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் விழுக்காட்டு அடிப்படையில் தனியார் பள்ளி மாணவர்களில் பெரும்பாலும் ஆயிரத்திற்குக் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் குறைவு. அதே போல அரசுப் பள்ளி மாணவர்களில் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களும் மிகமிகக் குறைவு. இந்த வேறுபாடு பாடவாரியாக இருப்பதும் மறுப்பதற்கில்லை. மாநில முழுவதும் பாடவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த 54 மாணவர்களில் அரசுப் பள்ளியில் பயின்றவர்கள் மூவர் மட்டுமே. கன்டோண்மெண்ட் போர்டு பள்ளிகள் 99.20 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளில் குறிப்பாக பழங்குடியினர் பள்ளிகள், நகராட்சி, சமூக நலப் பள்ளிகள், வனத்துறை, ஆதி திராடவிடர் நலத்துறைப் பள்ளிகள் 86 விழுக்காட்டிற்கும் குறைவான தேர்ச்சி விகிதங்களையை பெற்றிருக்கின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையில் மதிப்பெண் பெறுவதிலும் தேர்ச்சி விகிதத்திலும் உள்ள இடைவெளி, தொடர்ந்து இருந்துவரும் விஷயம் தான் என்றாலும் அது தற்பொழுது புதியதொரு கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.
    தனியார் பள்ளியில் படித்து மருத்துவம் கிடைக்காத நிலையில் பொறியியல் விருப்பமில்லாமல் இருக்கும் மாணவர்களின் வரவு கலை அறிவியல் கல்லூரிகளில் அதிகரித்துள்ளதால், அதை மட்டுமே நம்பியிருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு மிகவும் பின்னுக்குத் தள்ளப்படுகின்ற சூழல் உருவாகி வருகிறது. கலை அறிவியல் கல்லூரிகள் நிர்ணயிக்கும் கட்ஆஃப் மதிப்பெண் விகிதம் தனியார் பள்ளி மாணவர்களிடமே இருப்பதால் அவர்களே அதிக வாய்ப்பு பெறுகிறார்கள். அறுநூறுக்கும் எண்ணூறுக்கும் இடைப்பட்ட மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களால் உயர்ந்துள்ள கட்ஆஃப் மதிப்பெண்ணைக் கல்லூரியின் அறிவிப்புப் பலகையில் பார்த்து கூசுகின்றனர். ஐநூறுக்கும் அறுநூறுக்கும் இடைப்பட்ட மதிப்பெண் பெற்ற பின்தங்கிய கிராமப்புற அரசுப்பள்ளி ஏழை மாணவர்கள் உயர்கல்வியை நினைத்துக்கூட பார்க்கமுடியாத நிலை உருவாகி வருகிறது. இதனால் சராசரி மற்றும் சராசரிக்கும் குறைவான மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் நிலை கவனப்படுத்த வேண்டியதாக இருக்கிறது.
           அரசுப் பள்ளி மாணவர்களும் உயர்கல்வி பெற ஏதுவாக குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் அவர்களுக்கென்று இடஒதுக்கீடு செய்ய வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது. அது இல்லாத பொழுது தனியார் பள்ளி மாணவர்களின் கலை அறிவியல் கல்லூரிக்கான வரவு அரசுப் பள்ளி மாணவர்களைத் துரத்தியடிக்கும் என்பதே நம் கண்முன் நிற்கும் உண்மை.
      பொறியியலை இலக்காகக் கொண்டவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளை நாடுவதாலும், ஓரிடத்திற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களிடையை போட்டி உருவாகியிருப்பதாலும் பெரும்பாலான சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் இவ்வாண்டு கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இந்தக் கட்டண உயர்வும் தனியார் பள்ளிகளில் இலட்சங்களைக் கொட்டி படித்தவர்களை விட அரசுப் பள்ளிகளில் இலவசமாகப் படித்துத் தேறிய மாணவர்களைப் பாதிக்கும் காரணியாக மாறியுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு தீர்வு காணாவிடில் அரசுப் பள்ளிகள் மீது இருந்து வரும் குறைந்த பட்ச நம்பிக்கையையும் கொன்றொழிக்கத் துணை போவதாகிவிடும்.

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

            ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன.           இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம் அவர்களின் சாதி உணர்...

தத்துவங்கள் குறித்த உரையரங்கம்

  தத்துவங்கள் குறித்த உரையரங்கம் கோவை பீளமேட்டில் ‘ பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம் ’ தத்துவ அறிமுகக் கூட்டம் ஒன்றை 2026 மே 29 அன்று நடத்தியது . அதன் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தார் . பெரியாரியம் குறித்து   கு . ராமகிருஷ்ணன் பேசினார். இணைய வழியில் கலந்துகொண்ட   தியாகு மார்க்சியம் குறித்துப் பேசினர் .  நான் அம்பேத்கரியம் பேசினேன் . அம்பேத்கரை எப்படி வாசிக்கத் தொடங்குவது என்பதில் தொடங்கி கூட்டுச் சிந்தனையில் அம்பேத்கரின் அவசியத்தை வலியுறுத்துவதாக எனது உரையை அமைத்துக் கொண்டேன் . மனநிறைவான நிகழ்வாக அமைந்தது . சிறிய அளவிலான கூட்டம் என்றாலும் ஒருசிலரைத் தவிர அனைவரும் பார்வையற்றவர்களே . அவர்களோடு பேசிய தருணங்கள் நாம் பார்த்திராத உலகத்தைக் காட்டின . ஒருவர் ‘ மாற்றுத்திறனில்  21 வகை உள்ளதாக அரசு வரையறுத்து இருக்கிறது . எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுவது மாற வேண்டும் ’ என்றார் . ‘ நடக்க இயலாதவர்களையும் எங்களையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும் ’ என்ற கேள்வியில் உறுதியாக இருந்தார் . ‘ நடக்க இயலாதவர் தன்னால் இயல்பாகத் தனித்துச் ...

இராணிப்பேட்டை அமுதாவும் அதிபர் டிரம்ப்பும்

கடந்த 2026  ஜனவரி 09 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம் ,  பொன்னேரியில் முதல் அமைச்சர் கலந்துகொண்ட ‘ உங்க கனவ சொல்லுங்க ’ நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கனவைச் சொல்ல அழைக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் , காவேரிப்பாக்கம் ஒன்றியம் , கரிவேடு ஊராட்சி , சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவரும் அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் கங்கையம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவின் ஊக்குநருமான எம் . அமுதா தனது கனவைச் சொன்னார் .  பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு கடனுதவிகளைப் பெற்று மாவு அரைக்கும் எந்திரந்தின் மூலம் வருமானம் ஈட்டி வரும் அமுதா எஸ்சி / எஸ்டி மக்களுக்கு மானியக் கடன் கிடைப்பதாகவும் தங்களுக்கு நேரடிக் கடன் மட்டுமே கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் . அவர் பேச்சில் இருந்த முக்கியமான விஷயம் ‘ எஸ்சி எஸ்டிக்கெல்லாம் குடுத்தா நாங்க எங்க போறது ’ என்கிற அழுத்தம் தான் . அவரது தேவையைக் கேட்டுப் பெறுவதில் அவருக்கு உரிமை உண்டு . ஆனால் ‘ எஸ்சி எஸ்டிகளுக்குக் கிடைக்கிறது எங்களுக்குக் கிடைக்கவில்லை ’ என்கிற ஒப்பீடு சரியானதல்ல . தவிர , இதை அவரது தனிப்பட்ட கருத்து என்பதை விட கூட்டுச் சமூகத்தின் மனநிலை என்பதற்கு அ...