Skip to main content

பண்பாட்டை முன்னெடுத்தலில் இளைஞர்களுக்கான வெளி



ண்பாட்டை முன்னெடுத்தலில் இளைஞர்களுக்கான வெளி
ஞா.குருசாமி,
அரசுக்கும் மக்களுக்குமான வெளி சிறுகச் சிறுக அதிகரித்து இன்று உச்சத்தை எட்டியிருக்கிறது. ஆட்சியாளர்களின் சிந்தனையும் செயல்பாடும் அவர்களின் உள்மனவெளியின் பாசாங்குத் தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. மக்கள் எல்லாவற்றையும் சகிக்கப் பழகிவிட்டிருப்பதுதான் காலத்தின் பேரவலம். ‘கறுப்பாக இருப்பவர்கள் இந்தியர்கள் அல்ல’, ‘சிறுபான்மையினர் தேசத் துரோகிகள’;, ‘லெக்கின்ஸ் அணியும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள’; என்றெல்லாம் ஆட்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்ட ஆபத்தான பேச்சுகளுக்கும் பண்பாட்டோடு தொடர்புடைய பிற்போக்கான கருத்துக்களுக்கும் மக்கள்திரள் போதுமான எதிர்வினையைக் காட்டாதது சமுதாய அக்கறையுள்ளவர்களைக் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. தேசியச் சூழல் இப்படியிருக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் உளவியல் நெருக்கடிகள் ஏராளம். இவைகளுக்கு இடையில் எல்லாவற்றுக்கும் ஏங்கித் தவிக்கும் சமூகம் ஒன்றும் உருவாக்கப்பட்டுவிட்டது.
வாழ்தலுக்கான இருத்தலுக்கே ஏங்கித் தவிக்கும் சூழலில் பண்பாட்டை முன்னெடுக்கும் சாத்தியப்பாடுகள் குறித்தும் அவதானிக்க வேண்டிருக்கிறது. சர்வதேசிய மற்றும் இந்தியத் தேசியத்திற்கான பண்பாட்டுக் கூறுகளில் சில, பிராந்திய பண்பாடுகளுக்கும் பொருந்துவதுண்டு. அந்தவகையில் சர்வதேசிய, இந்தியப் பண்பாட்டுக்கேயுரிய வேளாண்மையை மையமிட்ட தன்மை தமிழ்ப்பண்பாட்டுக்கும் பொருந்தும். தமிழ்ப் பண்பாடும் வேளாண்மையோடு பின்னிக்கிடப்பது. சடங்கு, விழா, வழிபாடு முதலிய எல்லாமும் வேளாண்மையில் இருந்தே உருவாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைத்தவை. இதனால் தான் பழந்தமிழ் இலக்கியங்களும் காப்பியங்களும் வேளாண்மையையும் அதோடு தொடர்புடைய நீர், நிலம், காடு, மலை என எல்லாவற்றையும் கொண்டாடி இருக்கின்றன. இப்போக்கை கிரேக்க காவியங்களிலும் வட இந்தியப் பழங்கதைகளிலும் காணமுடியும்.
வேளாண்மை உயிர்ப்போடு இருந்தவரையில் பண்பாடும் உயிர்ப்போடு இருந்தது. சமுதாயம் இயற்கையில் இருந்து அந்நியப்பட்டதன் விளைவு வேளாண்மையை இழந்திருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் வேளாண்மைக்கு ஏற்பட்ட பின்னடைவில் குடும்பங்கள் உடைந்திருக்கின்றன. களத்துமேட்டில் வாரக் கணக்கில் குடியிருந்து கதிரடித்து அங்கேயே பச்சை நெல்லைக் குத்திச் சமைத்து உண்டு பெருங்கூட்டமாய் வாழ்ந்த குடும்பத்தின் சிதைவுக்குப் பின,; எஞ்சி நின்ற உறவுச் சொற்களும் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா என்னும் இரண்டாம் மூன்றாம் நிலை உறவுச் சொற்களைக் குடும்பங்கள் உச்சரிக்கும் சூழல் வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கிறது.
சர்வதேசிய மற்றும் தேசியக் கொள்கைகள் கூடி வாழும் வாழ்வியல் முறையைச் சிதைத்தமைக்குப் பின் புதிதாக உருவான தனிக்குடும்ப வாழ்வியல் முறையும் இன்றைக்குக் கடைசி மூச்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கல்வி, வேலை, திருமணம் முதலியவைகளின் பொருட்டு ஒவ்வொருவரும் சிதறடிக்கப்பட்டுவிட்டனர். நான்கு உறுப்பினர்களைக் கொண்ட மத்தியதரக் குடும்பத்தில் நால்வரும் சந்தித்துக் கொள்ளும் தருணங்கள் அருகி வருகின்றன. திருவிழா காலங்களிலும் தொடர் விடுமுறை நாட்களிலும் விமானம், இரயில், பேருந்துகளில் நிரம்பி வழிகின்ற மக்கள் கூட்டம் பூர்வீக வாழ்விடத்தில் இருந்து சிதறடிக்கப்பட்டிருக்கும் மக்கள் திரளின் அளவுகோள்.
இவ்வளவு சூழ்நிலைகளையும் கடந்து படித்து முடிக்கும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் தீராத பிரச்சினை வேலையின்மை. அமைப்பு சாரா தொழிலாளர்கள் சம்பாதிப்பதற்கு இருக்கும் சூழல் கூட படித்த இளைஞர்களுக்கு இல்லை. இதனால் இளைஞர்களுக்குத் தக்க வயதில் கிடைக்க வேண்டிய நிரந்தர வருமானம், திருமணம் முதலிய யாவும் தள்ளிப் போகின்றன. இவற்றால் இளைஞர்களுக்கு நேரும் உளவியல் சிக்கல் கொடூரமானது. அதுவும் முதல் தலைமுறையில் இருந்து படித்துவந்த இளைஞர்களெனில் அவர்களுக்கு முன்னால் விரியும் வெறுமை சூழ்ந்த உலகம் இருக்கிறதே அது சொல்லில் அடங்காதது.
இந்நிலையில் இன்று உருவாக்கப்பட்டிருக்கும் நவீன நுகர்வுக் கலாச்சாரம் பணம் படைத்தவர்களுக்கான உலகத்தை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. முன்பெல்லாம் பழுதான பொருள்களைப் பழுது நீக்கிப் பயன்படுத்துகிற பழக்கம் இருந்தது. இன்று தூக்கி எறிந்துவிட்டு புதிதாக வாங்க வேண்டிய மனநிலை அனைவருக்குள்ளும் கட்டமைக்கப்பட்டுவிட்டது. வாரம் ஒருமுறையேனும் உயர்தர உணவகங்களுக்குச் செல்வது அவசியமாக்கப்பட்டுவிட்டது. நண்பனொருவன் இருபதாயிரம் மதிப்புள்ள செல்போன் வைத்திருக்கும் இடத்தில் ஐந்தாயிரம் மதிப்புள்ள செல்போனை வைத்திருப்பவனின் நிலை அவமானத்திற்குரியதாக மாற்றப்பட்டுவிட்டது. நண்பன் வீட்டில் கார் நிற்கும் போது தனது வீட்டில் பைக் கூட இல்லையே என ஏங்குவோரும் இல்லாமல் இல்லை. வசதி படைத்த ஆண் நண்பனைக் கொண்டிருக்கும் சக பெண்ணின் வாழ்வியல் சூழல், அது அமையாத பெண்ணுக்குக் கௌரவப் பிரச்சினையாக ஆகியிருக்கிறது. வரதட்சனை என்ற ஒற்றைக் காரணத்திற்காகத் தள்ளிப் போகும் திருமணத்தாலும் மாப்பிள்ளை வீட்டார் நிராகரிப்பதற்காகச் சொல்லும் அற்பக் காரணங்களாலும் மனம் வெதும்பிப் போயிருக்கிற இளைஞிகள் எக்கச்சக்கம்.
பெருநகரங்களில் படித்த வேலையில்லா இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுக் கைதாகின்ற செய்திகளின் வரத்தும் இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது. இதற்கான காரணம் இன்று நேற்று உருவானதல்ல. வேளாண்மையைச் சிதைக்கத்; தொடங்கியபோதே ஆரம்பித்து விட்டது. மக்களின் வாசிப்பிடத்திலேயே அவர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்துக்கொண்டிருந்த வேளாண்மை அழிக்கப்பட்டதால் உருவான பிரச்சினை அது.
இந்தச் சூழலில் இளைஞர்கள் பண்பாட்டை முன்னெடுக்க வேண்டும். பண்பாடு பேணப்பட வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுக்கான தனித்தன்மையை இழந்து விடக்கூடாது என்பதான முன்னெடுப்புகள் சவால் நிறைந்தது. மக்கள் யாரும் இப்பொழுது கூட்டாக இல்லை. ஒவ்வொருவரும் தனித்தனி மனிதராக ஆக்கப்பட்டுவிட்டார்கள். எல்லாருடைய கைகளிலும் இருக்கின்ற வசதிகள் நிரைந்த செல்போன்களே அவர்களின் உலகத்தைத் தீர்மானிக்கின்றன. அரைமணி நேரப் பயணம் என்றாலும் கூட பக்கத்தில் அமர்ந்திருப்பவரோடு பல கதைகளைப் பேசி பயணம் செய்த காலத்தின் சுகம் இனி சாத்தியம் இல்லை. பத்துமணி நேரப் பயணம் என்றாலும் பக்கத்தில் இருப்பவரை அறியாமல் வாழ்தல் தான் வாழ்வாக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தனித்தனியாகச் சிதைந்திருக்கும் மனிதர்கள் தமது பண்பாட்டைக் காப்பாற்ற முடியுமா? தனி மனிதர்களால் பண்பாட்டு நீட்சி சாத்தியமானதா? இதுவரை கைக்கொண்டு வந்த, மேன்மையானதாக நம்பப்படுகின்ற பண்பாடு இனி அதே வடிவத்தில் தொடர்ந்து வருமா? தற்போதைய பண்பாட்டின் வடிவம் உண்மையிலேயே மிகப் பழமையானதா? உலகம் ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் போது பிராந்தியப் பண்பாட்டைச் சுமந்துகொண்டிருக்க முடியுமா? என்பதான கேள்விகளையும் அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளி விடமுடியாது. காலந்தோறும் காலத்திற்கேற்றவாறு தகவமைப்பட்டே வந்திருக்கும் பண்பாடு, டிஜிட்டல் யுகத்திலும் டிஜிட்டலாக மாற்றப்படும். ஏனெனில் பண்பாடு ஆவதல்ல ஆக்கப்படுவது. பண்பாட்டு முன்னெடுப்பு இளைஞர்களால் மட்டுமே ஆகக்கூடியதும் அல்ல. அது ஒரு கூட்டு மனநிலைச் செயல்பாடு. அது நிகழ்ந்தேற இளைஞர்களோடு அனைத்துத் தரப்பினரும் கைகோர்க்க வேண்டும். அரசியலையும் ஆட்சியையும் இளைஞர்களுக்குக் கொடுத்தாக வேண்டும். செய்யத் தவறும் பட்சத்தில் காலம் அவர்களின் கைகளில் ஆயுதங்களைத் தந்துவிட்டுப் போகும்.
.....

Comments

Popular posts from this blog

ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து….

  ரவிகாந்த் கிசானா எழுதிய 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' (Meet the Savarnas) நூல் குறித்து…. ஹைதராபாத்தில் உள்ள வோக்ஸன் பல்கலைக்கழகத்தில் (Woxsen University) இணைப் பேராசிரியராக உள்ள ரவிகாந்த் கிசானா இனவரைவியலில் ஆர்வமுடையவர். குறிப்பாக சாதிகள் குறித்து எழுதி வருகிறார். அவரது 'சவர்ணர்களைச் சந்தியுங்கள்' நூல் ‘அற்பத்தனங்கள் எல்லாவற்றையும் உடைத்த இந்திய மில்லினியல்கள்’ (Indian Millennials Whose Mediocrity Broke Everything) என்ற துணைத் தலைப்புடன் 2025 மே மாதம் வெளியானது. அது பற்றி ஜூலையில் ஃபிரண்ட் லைனில் அறிமுகம் வந்தபோதே வாசித்து விட்டு அமேசானில் தேடிய போது விற்றுத் தீர்ந்திருந்தது. மீண்டும் விற்பனைக்கு வந்த போது வாங்கி வாசித்தேன். நேற்று (28.12.2025) ஆங்கில இந்து நாளேட்டிலும் அந்த நூல் குறித்த பத்தி ஒன்று எழுதப்பட்டிருந்தது. இவை எல்லாமும் சேர்ந்து தமிழில் அது பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கிவிட்டன. இதில் ரவிகாந்த், சவர்ணர்கள் என்போர் யாவர்? சாதியை ஏன் பழைய விஷயமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? சவர்ணங்களின் ‘நாங்கள் சாதி பார்ப்பதில்லை’ என்னும் புகழ் பெற்ற வாசகம்...

ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ்: தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சி

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சிவில் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவர் ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் (Hosea Lorenzo Williams). போராட்டக் களத்தில் வெகுஜன உளவியலின் உருவாக்கத் தேவையை நன்கு அறிந்திருந்த அவர் , சமகாலத் தேர்தல் அரசியலின் நடைமுறைத் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ளப் பங்களித்து இருக்கிறார் . சர்வதேசிய அளவில் சிவில் உரிமைப் போராட்டக் களத்தின் எதார்த்த முகமாக இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் வில்லியம்ஸ் ஜனநாயகம் , அகிம்சை , அரச வன்முறை , ஊடக அரசியல் , வர்க்கம் , இனம் ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகும் பெரியதொரு அரசியல் கேள்வியை அவர் காலத்தில் தம் வாழ்வனுபவத்தின் வழி எழுப்பியிருந்தார் . தேர்தல் பாதையில் அரசமைக்கும் நாடுகளுக்கான கேள்வி அது . ஹோசியா லோரென்சோ வில்லியம்ஸ் மதநீதியும் அரசியலும் வில்லியம்ஸ் 1926 ஜனவரி 5 ஆம் தேதி , அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தவர் . ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு கல்வி , வேலை , வீடு , வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்த ஜிம் க்ரோ (Jim Crow ) சட்டங்கள் அமலில் இருந்தபோது இளமைப் பருவத்தைக் கடந்தவர் . இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவத்...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...