Skip to main content

அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்



அனிதா - நீட் - தூய்மை பாரதம் - சில விவாதக் குறிப்புகள்
ஞா. குருசாமி,
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர் ரோகித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண்ணைப் பெற்று மருத்துவப் படிப்பை எதிர்நோக்கி இருந்த அனிதா என ஆராய்ச்சிலும் கல்வியிலும் தனித்திறன் பெற்ற திறமைசாலிகளை அரசு எந்திரம் குறிவைத்து தற்கொலைக்கு உள்ளாக்கும் போக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த தேசத்தில் வருணாசிரமத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சதிக்கொடுமை ஒன்றும் புதியதல்ல. ஏகலைவர் காலம் தொடங்கி நடத்து வருகிறது. ஏகலைவர், நந்தர் என்னும் மிக நீண்ட வரிசையில் இன்றைக்கு அனிதாவை இழந்திருக்கிறது இந்த சமுதாயம் என்று மிகவும் மொன்னையான சமாதானத்தைத் தற்காலிகமாகக் கூடத் தேடிக்கொள்ள மனம் மறுக்கிறது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் முக்கியக் கவனம் பெற்ற நிகழ்வு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் ஒருங்கிணைந்து களம் கண்டனர். அது தமிழர்களின் ரத்தத்திலேயே ஊறிப்போய் உறங்கிக் கிடந்த வீரத்தின் வெளிப்பாடு என்றெல்லாம் பேசப்பட்டது. அந்தளவுக்கு பண்பாடு முக்கியம் என்பதாய் மாட்டுக்காகப் போராடிய சமுதாயம், நீட் தேர்வால் உண்டாகும் பாதிப்பை பேசத் தயங்குவது புதிராக இருக்கிறது. ஆங்காங்கு நீட் தேர்வுக்குத் தடை கோரி கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் பொதுமக்களுக்கான பங்களிப்பு ஜல்லிக்கட்டுக்கு இருந்ததைப் போன்று இல்லை.
ஏற்றத்தாழ்வுக்குக் குறைவில்லாத இந்தத் தேசத்தில் மந்திரிகள், அரசியல்வாதிகள், வருவாய்த் துறையினர், ஆசிரியர்கள், சுமைதூக்குவோர், தூய்மைப்பணியாளர்கள், சமையல்காரர்கள், பிச்சைக்காரர்கள், திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகள், வேட்டையாடிகள், வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் என பலப்பல தரப்பினருக்கும் ஒவ்வொரு உலகம் இருக்கின்றது. ஒவ்வொரு உலகத்திற்குள்ளும் ஒவ்வொரு சிறு உலகங்கள் இருக்கின்றன. இவர்கள் எல்லோருக்கும் பொருளாதாரத்தில், வாழ்விடச் சூழலில், கல்வியில் எப்போதும் சமத்துவம் இருந்ததில்லை. ஒவ்வொரு உலகமும் இன்னொன்றைச் சார்ந்தோ, சுரண்டியோ வாழ வேண்டிய நிர்பந்தங்கள் சுயநலத்தின் பேரில் வலுவாகக் கட்டப்பட்டுள்ளன.
இந்த உலகங்களின் எதிர்கால அபிலாசைகளுக்காக அவரவர் வசதிகளைப் பொறுத்து வகைவகையாய் பள்ளிகள் உருவாக்கப்பட்டு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஒரே பள்ளிக்குள்ளும் விதவிதமான கற்பித்தல் முறைகள் வழக்கத்தில் உள்ளன. தேர்வு முடிவுகளிலும் வேறுபாடுகள் ஏராளம். இந்தச் சூழலில் படித்து வருகிறவர்களுக்குத் தேசிய அளவில் பொதுத் தகுதித் தேர்வு நடத்துதல் எந்த வகையிலும் ஏற்புடையதன்று. பத்துத் தலைமுறைகளாகக் கல்விப் பின்புலமுள்ளவருக்கும் முதல் தலைமுறையைச் சார்ந்தவருக்கும் ஒரே மாதிரியான தேர்வை நடத்துதல் துரோகமன்றி வேறெதுவுமில்லை.
அறிவாளிகளாகத் தங்களைக் கருதிக்கொள்கிறவர்கள் மருத்துவப் படிப்பு கிடைக்காவிட்டால் வேறு படிப்பில் சேரலாம் என்று யாருக்குமே தெரியாத, யார் சிந்தனையிலும் உதிக்காத, அறிவுச்சுடர் பிரகாசிக்கும் படியான கருத்தைச் சொல்கிறார்கள். அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர் கேட்கும் படிப்பை அவர்களுக்கு வழங்குவதில் அரசுக்கு என்ன பிரச்சினை? அவர்களுக்கு மறுக்கப்படும் வாய்ப்பு யாருக்குக் கொடுக்கப்படுகிறது? நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உண்மையிலேயே திறமைசாலிகளா? அவர்களுக்காக வரையறுக்கும் திறமைக்கான அளவுகோள் என்ன? என்பது பற்றியயெல்லாம் மாற்றுப் படிப்பை முன்வைக்கும் அறிவாளிகள் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இன்னொரு புறம் அரசின் கொள்கை முடிவுகளும் நகை முரணாக இருக்கின்றன.
அரசுதான் பள்ளிகளை நடத்துகிறது. ஆசிரியர்களை நியமிக்கிறது. பாடத்திட்டத்தை வரையறுக்கிறது. வினாத்தாள் தயாரிக்கிறது. தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது. அதில் அதிகபட்ச மதிப்பெண் எடுத்தவர், தாம் விரும்பிய படிப்பைக் கேட்கும் போது அதற்கு அவர் தகுதி இல்லை என்றால் அதற்கு ‘அரசுக்குத் தகுதி இல்லை’ என்பது தானே பொருளாக இருக்க முடியும்? நீட் தேர்வு எழுதினாலே மருத்துவப் படிப்பில் சேர முடியுமென்றால் அத்தேர்வைக் கட்டாயமாக்கும் முன் அது குறித்து கற்றலில் பின் தங்கிய, கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு அரசு முறையான வழிகாட்டலைச் செய்யாதது ஏன்? திடீரென புதிய விதியைக் கொண்டு வந்து அதற்கு தயார் ஆகச்சொல்வது மடமை அன்றி வேறென்ன?
ஆட்சியாளர்கள் மக்களுக்கானவர்கள் என்று மக்கள் இன்னும் நம்பிக்கொண்டு இருப்பதுதான் பேரபத்தம். ஆட்சியாளர்கள் எப்போதும் பெரும்பணக்காரர்களின் காவலர்கள், மக்களுக்கானவர்களாகக் காட்டிக்கொள்வதில் தேர்ந்த நடிகர்கள். ஆட்சியையும் பதவியையும் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சியில் சிறிதளவாவது நீட் தேர்வுக்கு எதிராக எடுத்திருந்தால் அனிதாவை இழந்திருக்க வேண்டியிருக்காது. அதிகபட்ச மதிப்பெண் எடுத்த அனைவரும் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பார்கள். ஆனால் ஆட்சியாளர்களுக்கு மருத்துவம், அரசுத்துறைகள், இட ஒதுக்கீடு, சமூகநீதி முதலியன பறிபோவது பற்றிய கவலை கொஞ்சமும் இல்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு இருந்ததில்லை. அதனால் தான் வெமுலாவையும் முத்துக்கிருஷ்ணனையும் அனிதாவையும் பலி கொடுக்க வேண்டியிருக்கிறது.
இதையெல்லாம் மிக இயல்பாகக் கடந்து, தேசத்தில் எல்லா மக்களும் செல்வத்தில் சிறந்தோங்கி இருப்பது போலவும் மக்களின் தேவையை மக்களே பார்த்துக்கொள்வதற்கான திராணி அவர்களுக்கு இருப்பதாகவும் அரசுக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்பதால் சும்மா இருக்க மனம் ஒப்பாமல் குப்பையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சிலர் அதை ‘தூய்மை பாரதம’; என்கிறார்கள். அவர்கள் சொல்லும் பாரதத்தின் ‘தூய்மை’ எது? என்பது தான் நம் முன் நிற்கும் முக்கியமான கேள்வி. தூய்மை என்பது மனுவின் கோட்பாட்டுக்குள் வராதவர்களைக் கொன்ற பின் ஏற்படுகின்ற தூய்மையா? ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் தேசத்தில் எல்லோரும் சமம் எனக் கூறி ஒற்றைச் சட்டத்தைப் புகுத்தி ஏழைகளைச் சாகடித்த பின் ஏற்படுகின்ற தூய்மையா? மனுஸ்மிருதிக்கு ‘தகுதித்தேர்வு’ என்று புதிய பெயர் சூட்டி வர்ணக் கோட்பாட்டை வலுப்படுத்திய பின் ஏற்படுகின்ற தூய்மையா? பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்த பின் ஏற்படுகின்ற தூய்மையா? கார்ப்பரேட்களுக்கு வேளாண் நிலங்களைத் தரை வார்த்தபின் ஏற்படுகின்ற தூய்மையா? என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

Comments

Popular posts from this blog

கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ‘ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’

இலக்கியக் கட்டுரை என்றால் வரையறுக்கப்பட்ட வடிவத்தோடும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின் சேர்க்கையோடும் எழுதப்படுவது என்கிற நம்பிக்கை பரவலாக இருந்து வருகிறது . இந்தச் சட்டகத்திற்குள் சிக்காமல் ஜனரஞ்சகமாக , அதே சமயம் புனைவிற்கான மொழியில் அமைந்திருக்கிறது ‘ ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு ’. இராமனாதனின் இந்த நூலில் இலக்கியம் , திரை , ஆளுமைகள் , அனுபவங்கள் என்னும் பகுப்பின் கீழ் 28 கட்டுரைகள் இருக்கின்றன . அவை யாவும் காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் வெளி வந்தவை . இந்நூலை வாசிக்கிறவர்கள் அவரவர் வாசிப்பு , அனுபவம் சார்ந்து பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும் . நூலாசிரியர் லண்டனில் உள்ள ஷெர்லாக் ஹோம்ஸ் அருங்காட்சியகத்திற்குச் சென்ற அனுபவத்தை வைத்துக்கொண்டு எழுதப்பட்ட ‘ ஷெர்லாக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு ’ முதல் கட்டுரையாக இடம் பெற்றிருக்கிறது . ஒரு படைப்பு பல்வேறு அடையாள வேறுபாடுகளைத் தாண்டி வாசிப்பு மனங்களை இணைக்கும் வல்லமை வாய்ந்தது என்பதை ஸ்பானிய மொழியைப் பேசும் ஒரு சிறுவனுடன் தான் உரையாடிய வேடிக்கையான சம்பவத்தை வைத்து விவரித்து இருக்கிறார் . அதாவது அந்தச் சிறுவன் நிறுத்தி நிறுத்தி ஆங்கிலத்தில் இராமன...

ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா?

  ஏழைகள் நடமாடும் குப்பைத் தொட்டியா? உலகப் பிரபலமான ஒருவர் 25.08.2024 அன்று வானொலியில் ஆற்றிய உரையில் சுற்றுச்சுழல் – பிளாஸ்டிக் கழிவு – மறு பயன்பாடு – மறுசுழற்சி பற்றிக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு அவர், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை அப்படியே தூக்கி வீசிவிடாமல் அது தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு அவரே ஓர் உதாரணமும் சொன்னார். ‘பிளாஸ்டிக் பொம்மையை வைத்து விளையாடும் குழந்தை அந்த பொம்மை மீது சலிப்படைந்து விட்டால் அதை வீசி எறிந்து விடாமல், ஒரு சிறு பொம்மை கூட கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்’ என்பது தான் அந்த உதாரணம். அப்படிச் செய்வதால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாட்டுக் கொண்டு வந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றலாமாம். எனக்கு இறந்து நாற்றமடிக்கும் விலங்குகளைச் சாப்பிடுவதாலே காக்கைக்கு ‘ஆகாயத்தோட்டி’ என்றும் கழுதைப்புலிக்கு ‘வனத்தோட்டி’ என்றும் அறிவுஜீவிகள் ‘சிறப்பு’ப் பெயர்கள் வைத்திருப்பதும் வீட்டில் மீந்து போன...