Skip to main content

சமுதாய வலைத்தளங்களின் உள்ளும் புறமும்




சமுதாய வலைத்தளங்களின் உள்ளும் புறமும்

ஞா.குருசாமி
பத்தாண்டுகளுக்கு முன்னால் அலைபேசி, கணினி, மடிக்கணினி, மின்னஞ்சல்;, வாட்ஸ்ஆப், ட்வீட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்;டாகிராம் என்பன இந்தியாவுக்குள் நுழைந்துகொண்டிருந்த நேரம். வெகுஜனமக்களைச் சென்றடையாத காலம். இதனால் பல நூறு நபர்களின் முகவரிகளும், தொலைபேசி எண்களும் நினைவில் இருந்தன. இன்று மேற்கூறிய எல்லாமும் பரவலாகிவிட்டன. விளைவு இன்று மனிதனின் நினைவில் ஒன்றுமில்லை. பள்ளி மாணவர்களின் மனனம் செய்யும் திறனே முன்னெப்போதையும் விட இப்பொழுது குறைந்திருப்பதைக் காணலாம். மிகப் பெரிய பெருக்கல் வகுத்தல்களை மனதுக்குள்ளேயே நிகழ்த்தி விடை சொன்ன காலம் போய் இன்று சிறு கணக்குகளுக்கும் கால்குலேட்டரை நம்பும் தலைமுறை உருவாகிவிட்டது. ஐயாயிரம் பக்கத்திற்கு மேலுள்ள மருத்துவச் சுவடிகளின் செய்திகளைக் கூட செவிவழியாக கடத்தி மனப்பாடம் செய்த தலைமுறையின் வாரிசுகள் இன்று அனைத்தையும் தட்டச்சு செய்து கணினியில் சேமிக்கிறார்கள். ஒரு மனிதரின் அலைபேசி தொலைந்து போகுமெனில் அவர் இழப்பது அலைபேசி மட்டுமல்ல. வங்கிக் கணக்கு எண், மின் இணைப்பு எண், உறவுகளின், பணியிடத்தின் தொலைபேசி எண், மிக முக்கிய சம்பவங்களின் புகைப்படங்கள் என பலவற்றையும் இழக்கிறார். அதாவது மின்னணு ஊடகப் பெருக்கத்தின் விளைவு என்பது மனிதன் தன் மீது இருக்கும் நம்பிக்கையை இழந்து எந்திரங்களை நம்பும்படியாக மாறியிருக்கிறான் என்பதே ஆகும்;. பொதுவான பார்வையில் இது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் உண்மை வேறொன்றாக இருக்கிறது. இன்று மின்னணு ஊடகங்கள் பன்னாட்டு முதலாளிகளின் லாப வேட்கையின் விளைநிலம் என்பதையும் தாண்டி, சர்வதேச வல்லரசுகளின் உளவு காணும் நடவடிக்கையாகவும், தகவல் வங்கியாகவும் மாறியிருக்கின்றன.
‘உலகம் ஒரு குடையின் கீழ்” என்னும் கூவலால் இணையத்தின் மூலம் மனிதக்கூட்டம் இணைக்கப்படுகிறது. இணையவழி இயக்கம் என்பது அத்தியாவசிய தேவையாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. அதில் இருக்கும் வசதிகள் மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தியிருப்பது உண்மைதான் என்றாலும் அதன்வழி தனிமனிதனின் அந்தரங்கம் உள்பட எல்லாத் தகவல்களும் திரட்டப்படுகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சான்றுக்குச் சில… ‘திருமணம் ஆகவில்லை’ என்னும் தகவலைத் தந்து மின்னஞ்சல் முகவரி தொடங்கப்படுமானால் மாட்ரிமெனி விளம்பரங்கள் வந்து குவிகின்றன. ‘திருமணம் நிச்சயமாகிவிட்டது’ என்னும் தகவலைத் தந்தால் வண்ணமயமான வேலைப்பாடுகளுடன் கூடிய ‘இரவு உடைகளை உங்கள் இணையருக்குப் பரிசாகக் கொடுங்கள்’ என்று விளம்பரங்கள் வருகின்றன. உங்களுக்கு பிடித்த பொழுபோக்கு என்ன? என்னும் கேள்விக்கு ‘பெண்களோடு ஊர் சுற்ற பிடிக்கும்’ என பதில் கொடுத்து மின்னஞ்சல் தொடங்குவோமேயானால் ஜொலிக்கும் படுக்கையறைகளை மையப்படுத்திய கேலிக்கை விடுதிகள், கருத்தடைச் சாதனங்கள், தனிமைக்கு ஏற்ற சுற்றுலா தளங்கள் பற்றிய விளம்பரங்கள் வந்து விழுகின்றன. ஸ்போட்ஸில் விருப்பம் என்றால் அது தொடர்பான தகவல்கள் குப்பை குப்பையாகக் கொட்டுகின்றன. அப்படியென்றால் நம்மை யாரோ கவனிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்! ஆம், கவனிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். மாய வலைக்குள் மூழ்கி இருக்கும் நாம் எல்லாவற்றையும் மிக எளிதாக நினைத்து கடந்து விடுகிறோம். ஆனால் தனிமனிதனைப் பற்றிய தகவல்களைப் பெருநிறுவனங்கள் திரட்டுவதை எப்படி சாதாரணமானதாக நினைக்க முடியும்? நினைக்கக் கூடாது.
மூன்றாம் உலகப் போரும் சேகரிக்கப்பட்ட தகவல்களும்
இணையத்தை சந்தைப்படுத்துவதிலோ தண்ணீரை மையமிட்டோ மூன்றாம் உலகப் போருக்கான சூழல் உருவாகுமெனில் அதில் இணைய நிறுவனங்கள் திரட்டிய தகவல்கள்; முக்கியப்பங்காற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஒருவேளை இணைய நிறுவனங்கள் சேகரித்த தகவல்கள் தீவிரவாத அமைப்புகளின் கைகளுக்கு மாறுமானல் நிலைமை என்ன ஆகும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் மதுபோதையை விட இணையதளப் போதை ஆபத்தானது என்னும் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டிய தேவை உருவாகிவிட்டது. நடப்பு வலைத்தள இணைய நிறுவனங்கள் அனைத்தும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவை. அவை போட்டி போட்டுக்கொண்டு மக்கள் அடர்த்தி அதிகமுள்ள ஆசியக் கண்டத்தில் கடை விரிக்கின்றன. சீனா சில நிறுவனங்களுக்கு முற்றாகத் தடை விதித்துள்ள நிலையில் அந்நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் கால்கொண்டுவிட்டன. ஐரோப்பிய நாடுகளுக்கு நம்மைப் பற்றிய விபரங்கள் போய்விடக்கூடாது என்பதில் சீனா விழிப்படைந்து விட்டதால் ஐரோப்பிய நாடுகளின் ஏகோபித்த இலக்கு இந்தியாவாக மாறிவிட்டிருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு ஐந்து கோடி மக்களை இணையப் பயன்பாட்டாளராகக் கொண்டுவர வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்து இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.
2014 ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி உலகில் பேஸ்புக் உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 108.9 மில்லியன் உறுப்பினர்களோடு இரண்டாமிடம் வகிக்கிறது. அதாவது 108.9 மில்லியன் இந்தியர்களின் சுயவிரவக் குறிப்புகள் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கின் கைகளில் இருக்கிறது என்பது பொருள். இதைப் போல கூகுல், யாகூ முதலியவைகளிடமும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. பேஸ்புக்கில் மட்டும் தினமும் 6 லட்சம் முறை திருட்டுத்தனமாக நுழைவதற்கு முயற்சி செய்கிறார்கள் எனவும் 8.7 சதவிகிதம் பேர் போலி கணக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் அந்நிறுவனமே தெரிவித்திருக்கிறது. இன்றைய முக்கிய ஊடகமான ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவரின் நடமாட்டமும் வலைத்தள நிறுவனங்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நவீன மின்னுணு ஊடங்கள் வழி; குற்றச் செயல்களில் ஈடுபாடும் நபர் கைது செய்யப்படுவாரெனில்; அவர் பயன்படுத்திய ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களே நீதிமன்றத்தில் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகின்றன. முறையான கோரிக்கையின் பேரில் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தகவல்களைத் தந்துதவுகின்றன. அதற்கு வசதியாக மக்களின் ஒவ்வொரு தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளும் அந்தந்த நிறுவனங்களில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அதனால் ரகசியங்கள் அற்றவனாக மனிதன் மாற்றப்படுகிறான். அவ்வாறு மாற்றப்படுதல் ஒருவகையான அழிப்பு முறை என்பதைக் கூட நாம் இன்னும் உணரத் தொடங்கவில்லை என்பதுதான் காலத்தின் பேரவலம். ரகசியங்களை இழக்கும் மனிதன் உள்ளத்தளவில் பலவீனம் அடைகிறான். இந்த பலவீனம் தான் மனிதனை மாற்ற எல்லாவற்றையும் விட கீழ்நோக்கி அழுத்துகிறது.
வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து Child Play Roll  என்னும் பெயரில் பெரிய சூதாட்டச் சந்தை உருவாகியிருப்பதையும் பெண்களின் படங்கள் மார்பிங் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவருக்கே அனுப்பி பயமுறுத்தி பணம் சம்பாதிக்கும் செய்திகளையும் ஊடகங்கள் வழி கேள்விப்படுகிறோம். செல்ஃபி மோகம் வந்த பின் இணையப் பயன்பாட்டில் ஆண்களை விட பெண்கள் பத்து சதவிகிதம் கூடியிருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிபரம். மேலும் செல்ஃபி மோகத்தால் முகப்பூச்சு சாயங்கள், ஒப்பனைப் பொருள்களின் சந்தைப் பரிவர்த்னையின் அளவும் கூடியிருக்கிறது.


கருத்துக்களைக் சிதைக்கும் துர்க்குணம்
மனிதனை ஆட்சி செய்வதில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் அதிகார மையம் மனிதன் உருவாக்கிய கருத்துக்களே. தன்னுடைய கருத்துக்களே தன்னை ஆளவேண்டுமென்று மனிதனும் விரும்புகிறான். கருத்துக்கள் தான் ஆட்சியும் செய்து வருகின்றன. இந்நிலையில் மனிதனை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு கருத்து உருவாக்கத்தில் ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. அதன் விளைவு, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் மத்தியில் ஊடகத்தில் வரும் செய்திகள் உண்மையானவை என்ற கருத்தியல் உருவாக்கப்பட்டது. அச்சு, ஒலி, ஒளி வடிவ ஊடகங்களை மக்கள் நம்பினர். இந்த மனநிலையை நவீன ஊடகங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு காலங்காலமாக பொதுக் கருத்தை உருவாக்கி வந்தன. அதே ஊடகம் இன்று மக்களிடம் நிலைத்த கருத்துகள் உருவாகி அவர்கள் திடம்கொண்டுவிடக் கூடாது என்னும் நோக்கில் பரப்பப்படும் தவறான கருத்துக்களின் தளமாகவும் இருக்கின்றன. கருத்துக்கள் அல்லது செய்திகளின் உண்மை தன்மையை அறியாமலேயே பல செய்திகள் பரப்படுவதினால் தவறான பொதுக்கருத்து உருவாக்கப்படுவதும், உண்மையான கருத்துக்களின் வழி உண்டாக்கப்படும் கருத்துக்கள் வலுவிழப்பது நிகழ்ந்துவருகிறது. அதாவது ஊடகச் செய்திகளின் மீதிருந்த மக்களின் நம்பிக்கைகளை ஊடகங்களே சிதறடிக்கின்றன. பொதுவெளியில் கருத்து நிலைபெறுமானால் அங்கு ஊடகத்திற்கு இடமில்லை. கருத்துக்கள் மாறிக்கொண்டே இருக்குமிடத்தில் தான் ஊடகங்களும் உயிர்ப்புடன் தொழிற்பட முடியும். அதற்காகவே உலக முழுவதும் மனிதனின் திடமான கருத்துக்கள் ஊடகங்களால் பொய் கலந்து அழிக்கப்படுகின்றன. இதன் விளைவு மனிதனை எதன்மீதும் நம்பிக்கை கொள்ளாமல் செய்துவிடுவதே ஆகும். அப்படிச் செய்வதன் மூலம் ஊடகங்கள் தனக்கான சந்தையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
வலைத்தளங்கள் பொதுத் தொடர்புமொழியாக ஆங்கிலத்தை முன்வைத்து வெற்றியும் பெற்றுவிட்டன. பிராந்திய மொழிகளில் புதிதுபுதிதாக செயலிகள் உருவாக்கப்பட்டாலும் அவை ஆங்கில பயன்பாட்டு செயலியை விட குறைவான வசதிகள் கொண்டனவாக இருப்பதை தற்செயல் நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. மிகக் குறைவான ஆங்கில அறிவு இருந்தாலே போதும் வலைத்தளத்தில் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் வலைத்தளங்கள் நம்மை முழுமையாக கைக்கொண்டு விட்டன. மதுபோதைக்கு அடிமையான ஒருவர் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட எடுக்கும் முயற்சியை விட பல மடங்கு முயற்சி எடுத்தாலும் வலைத்தளப் பயன்பாட்டிலிருந்து ஒருவர் விடுபட முடியாத நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. காரணம் மனிதனின் மூளை தலைக்கு வெளியை கணினி வடிவில் மாற்றியமைக்கப்பட்டுவிட்டது தான். இன்று மிகவும் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல், முகநூல் முதலியன குறைந்த டேட்டா செலவில் கிடைப்பதாக நினைக்கிறோம். ஆனால் அவற்றிற்கு விளம்பர நிறுவனங்கள் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கின்றன. அவை அனைத்தையும் உற்பத்திப் பொருளின் மீது ஏற்றி விலை நிர்ணயம் செய்யப்பட்டு நுகர்வோர்கள் தலையில் கட்டப்படுகிறது. நாம் மறைமுகமாக உறிஞ்சப்படுகிறறோம்.
அடுத்ததாக விக்கிப்பீடியா. இது பல மொழிகளில் கிடைக்கிறது. எளிமையாக அணுக முடிகிறது. எவரும் தகவலை பதிவேற்றம் செய்யவோ பதிவுகளைத் திருத்தம் செய்யவோ முடிகிறது. குறைகள் இருப்பினும் தவிர்க்க முடியாத தகவல் களஞ்சியமாக உருக்கொண்டுவிட்டது.  அவற்றில் நிரம்பியிருக்கும் அனைத்தும் மக்களின் முயற்சியில் உருவான தகவல் குவியல்கள். வரும் காலங்களில் போதுமான தகவல் சேகரிக்கப்பட்டு, தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்த பின் பணம் செலுத்துபவர்களே விக்கிபீடியாவை பயன்கொள்ள முடியும் என்ற நிலை உருவாகுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. அவ்வாறான நிலை உருவாகுமெனில் ஒவ்வொரு தனிமனிதனின் உழைப்பும் விக்கிபீடியா நிறுவனத்தின் வழி வணிகமாக்கப்படும். இது நவீன வடிவச் சுரண்டலாகப் பரிணமிக்கும். இதுவரை இணையத்தின் வழியான உழைப்புச் சுரண்டல் அடையாளம் காணப்படவில்லை எனினும் அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுக்கொண்டு வருவதை மறுப்பதற்கில்லை.
சமுதாய அமைப்பிற்கு விழுந்த பலத்த அடி
முன்னேறிய நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் கணிசமான அளவு அமெரிக்க - ஆப்பிரிக்கர்கள் செனட் உறுப்பினர்களாக இருந்தபோதிலும், அரசியல் அதிகாரத்தில் நுழைந்த பின்னும் 1990கள் வரை ஊடகத்தில் அவர்களால் கோலோச்ச முடியவில்லை. வெள்ளையர்களின் பிடியிலிருந்த ஊடகங்களில் கறுப்பர்களின் இடம் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. இதே நிலை இந்தியாவிலும் இருந்தது. வருணாசிராம கோட்டுக்கு வெளியே தள்ளப்பட்டிருந்த மக்கள் உரிமைக்கே வாய்ப்பின்றி இருந்த போது பார்ப்பன ஊடகங்களுக்குள் நுழைய முடியவில்லை. மணிக்கொடி, எழுத்து, கல்கி முதலிய பத்திரிகைகளில் இது அப்பட்டமாக பிரதிபலித்தது. வடக்கே தாகூர், திலகர் நடத்திய பத்திரிகைகளிலும் இதே நிலைதான். இந்நிலைக்கு இன்றைய நவீன ஊடகங்கள் பலத்த அடி கொடுத்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.
உலகில் பண்பாடு என்ற கருத்துருவாக்கம் பிராந்திய எல்லைகளை முன்வைத்து இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தேவையான மாற்றங்களுடன் வலுப்பெற்றது. கென்யாவின் மேற்கு மலைத்தொடரை வாழ்விடமாகக் கொண்ட கிகியுயு, ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டலக்காடுகளில் வாழும் பம்பூத்தி, பத்துவா, பாபிங்கா, ஐரோப்பியாவின் தெற்குப் பகுதியில் பரவியுள்ள அம்ஹாரா, கல்லா முதலிய இறுக்கமான பண்பாட்டைக் கொண்ட பழங்குடிகள் கூட தங்களது பண்பாட்டுக்கூறுகளை மறுகட்டுமானம் செய்ய வேண்டிய தேவை உருவானது. இந்தியாவிலும் மேற்குலகின் பண்பாட்டு பிரதிபலிப்புகள் ஐரோப்பியர் வழியாக நுழைந்தபோது திலகர் போன்ற பிற்போக்கர்களால் பண்பாடு என்னும் பிரஞ்ஞை புதிய வடிவம் பெற்றது. சமூக அமைப்பில் மேற்குலகில் இருந்து பெரிதும் வேறுபடும் இந்தியாவைப் பொறுத்த மட்டில் பண்பாடு என்பது சாதியமைப்பை முன்னிருத்தியை உருவாக்கப்பட்டுள்ளதால் இந்தியச் சூழலில் பண்பாட்டுச் சிதைவு என்றாலே சாதியச் சிதைவு என்றுதான்; பொருள்கொள்ளப்பட்டு வந்திருகிறது. இந்நிலையில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வலைத்தளத்தின் பரப்பு மிக விரிவாக இருப்பதாலும் செய்திப் பரிமாற்றத்தின் விரைவாலும் பிராந்திய பண்பாடுகள் சிதைவுக்குள்ளாகி வருகின்றன. இந்தியப் பிராந்தியங்களில் யார் என்ன உடுக்க வேண்டும், உண்ண வேண்டும், என்ன மாதிரியான பெயர்கள் வைக்க வேண்டும் என்றெல்லாம் இருந்த பண்பாட்டு கட்டுப்பாடுகள் இன்று சிதிலமாக்கப்பட்டுவிட்டன. சர்வதேச உணவு வகைகளில் இருந்து சாதாரண பென்சில் வரை சகலமும் வலைத்தளங்களின் வழி சந்தைப்படுத்தப்படுகின்றன. அதன்வழி பேதமின்றி மனிதர்கள் வாழ நவீன ஊடகங்கள் ஓரளவு வழி சமைத்துக்கொடுத்திருக்கின்றன. இது இந்தியா போன்ற நாடுகளில் மாற்றுச் சிந்தனையாளர்களால் முன்வக்கப்பட்ட விஷயங்களில் குறிப்பாக சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளிட்டவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆகப்பெரும் பங்களிப்பினை நல்கி இருப்பதும் வரவேற்கத்தக்கதாகும். அதேபோன்று பேச்சுரிமையும், கருத்துரிமையும் மறுக்கப்படும் சமூக அமைப்பில் வலைத்தளங்களின் தங்குதடையற்ற வெளியில் அனைவருமே கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கான சூழல் உருவாகி இருப்பதனால் ஒவ்வொருவரும் தமக்கென ஊடகக்குழுவை உருவாக்கி செயல்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிராந்திய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் சர்வதேச நவீன மின்னணு ஊடகத்தின் பொதுவெளியில் இல்லாமல் ஆகியிருப்பதும் பெருமைப்படத் தக்க விஷயமாகும்.

Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...