Skip to main content

நவீனத்துவப் பெருவெளியில் தமிழ் அடையாளத்தின் இருப்பும் எதிர்கோடலும்



 ஞா.குருசாமி

        அடையாளம் என்பதான ஒற்றைச்சொல் ஓர் இனம் பற்றிய பின்புலத்தில் பொருள் கொள்ளப்படுமானால் அது சராசரி பொருள் தரும் சொல்லாக இருக்கமுடியாது. ஓர் இனக்குழுவின்  அடையாளம் என்பது அவ்வினத்தின் சர்வதேச முகவரி ஆகும். எப்பொழுதுமே மனித இனங்களுக்கான அடையாளம் ஒற்றைத் தன்மை உடையதாக இருந்ததும் அல்ல. நிலையாக இருந்ததும் அல்ல. அது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு சூழலுக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்பினது. அதாவது குறிப்பிட்ட இனக்குழுவின் பண்பாட்டு நடவடிக்கைகளில் புறச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் போது அக்குழு தமக்கான இயங்குவெளிகளை மாற்றிக்கொள்ளும். இயங்குவெளிகள் மாறும்போது ஏற்கனவே இருக்கும் பண்பாடு மீட்டுருவாக்கம் பெறுவதும், புதிய பண்பாட்டை தமக்கேற்றவாறு தகவமைத்துக்கொள்வதும் வழக்கம். இவ்வாறான மாற்றம் உடனடியாக நிகழ்வதல்ல. அதற்கு சில நூற்றாண்டுகள் தேவைப்படும். இந்தப் பண்பாட்டு உள்மாற்றங்கள் மெல்ல மெல்ல வெளிப்பட்டு பின்னர் அதுவே அக்குழுவின் பொதுக் குணமாக முன்வைக்கப்பட்டு அடையாளமாக உருப்பெறும். சான்றாக மங்கோலியர்களின் அடையாள உருவாக்கத்தைக் கூறலாம்.
        உலக மக்கள் தொகையில் சுமார் 37 சதவீதம் உடைய மங்கோலியார்கள் ஆசியாவைத் தாண்டி ஒஷனியாவிலிலும் அமெரிக்காவிலும் பரவியிருக்கிறார்கள். அமெரிக்க இந்தியர்களின் மூதாதையர்கள் எனக் கருதப்படும் மங்கோலியர்கள் பெரிங் ஜலசந்தி வழியாக ஆசியாவில் இருந்து அமெரிக்காவிற்குக் குடியேறியவர்கள். பெரிங் ஜலசந்தி என்னும் நீர்வழிப் பாதை பனிக்கட்டியாக உருமாறி வழித்தடம் தடைபடும் போதெல்லாம் மங்கோலியர்களின் பண்பாட்டுத் தொடர்புகள் பூர்விகப் பூமியில் இருந்து துண்டிக்கப்பட்டன. நாளடைவில் அவர்களின் பண்பாடு தனித்துவமானதாக உருவெடுத்தது. இன்றைக்கு உலக மானிடவியலாளர்களால் ‘மஞ்சள் இனத்தவர்’ என அழைக்கப்படும் மங்கோலியர்களுக்கு ‘மஞ்சள்’ என்னும் நிறம் சார்ந்த அடையாளம் சர்வதேச அடையாளமாக மாறியிருக்கிறது. வெள்ளை, கறுப்பினத்தவர்களின் சர்வதேசிய இனவேறுபாட்டு பிரச்சினைகளில் இருந்து தம்மை முழுவதுமாக விலக்கிக்கொண்டுள்ள மங்கோலியர்கள், விளையாட்டுத் துறை முதற்கொண்டு அடையாளத்தை உருவாக்கிவிட்டனர். இன்றைக்கும் கூட ஒலிம்பிக்கில் மேற்குலக வீரர்களுக்கு நிகரான போட்டியாளர்கள் மங்கோலியர்கள் தான். அதோடு ஒலிம்பிக் கொடியில் உள்ள ‘மஞ்சள் வளையம்;’ எங்களைக் குறிக்கிறது என மங்கோலியர்கள் கருதுகிற அளவுக்கு அவர்களின் நிறம்சார் அடையாளம் மிக அழுத்தமாக உருக்கொண்டுவிட்டது.
அதேபோல் இன்றைய நவீனத் தொழில்நுட்ப உலகம் யூதர்களை ‘அறிவாளிகள’; என்னும் அடையாளத்தோடு தொடர்புடையவர்களாக முன்வைத்து வெற்றியும் பெற்றுவிட்டது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜிகர்பெர்க், கூகுல் நிறுவனர்கள் லாரிபேஜ், செர்கி பிரின், டெல் கம்பியூட்டர் நிறுவனர் மைக்கேல் டெல், மாக்ஸ் ஃபேக்டர், எஸ்ட்டீ லேடர், கால்வீன் க்ளெயின் போன்ற அலங்காரப்பொருள் உற்பத்தியாளர்கள், நியூயார்க் டைம்ஸ், யு.எஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் பத்திரிகையின் உரிமையாளர்கள், ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதலிய உலகின் முக்கியப் பிரபலங்கள் யூத மரபினர். உலகின் மிகப் பழைமையான இனங்களான மங்கோலியமும், யூதமும் தமக்கென அடையாளங்களை உருவாக்கி விட்டது. இப்படி இனம், மொழி, நிறம், உணவு, உடை, வாழ்விடம் முதலியவற்றைத் தனித்தனியாகவோ, கலவையாகவோ முன்வைத்து உருவாக்கப்படும் ஒவ்வொரு இனக்குழுவுக்குமான அடையாளங்கள் சர்வதேசிய அளவில் அவர்களின் அங்கீகாரமாக மாறியிருக்கின்ற சூழலில் தமிழர்களின் அடையாளம் குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது.
      நவீனச் சூழலில் ‘அடையாளம்’ என்பது முக்கியமான அரசியல் சார்ந்த ஒன்றாக மாறிப்போனதில் டார்வினிஸ்ட்டுகளின் பங்களிப்பு முதன்மையானது. இன்றளவும் அவர்கள் ஆரியச் சிந்தாந்தத்தை வலியுறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை வலிமையுள்ளதே வாழத் தகுதியுடையது. வெள்ளை இனம் உயர்ந்தது என்றும் கறுப்பு, மஞ்சள் நிறம் தாழ்ந்தவை என்னும் பரப்புரையைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். இந்தக் கருத்தாடல்களுக்கு மங்கோலியர்களும் கறுப்பர்களும் தொடர்ந்து எதிர்வினையாற்றி வந்தார்கள்; வருகிறார்கள். அவர்களால் வெள்ளை இனக்கருத்தியலை வெற்றிகொள்ள முடியாவிட்டாலும் விடாமல் தொடர்ந்து மட்டம் தட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ‘வெள்ளை இன எதிர்ப்பு அரசியலில் நாங்கள் விளையாட்டைக் கூட ஓர் ஆயுதமாக முன்னெடுத்தோம’; எனக் கூறிய நெல்சன் மண்டேலாவின் கூற்று இவ்விடத்து இணைத்து நோக்கத்தக்கது. வெள்ளை இனம் அறிவுசார் துறையாகக் கருதிய யாவற்றிலும் மங்கோலியர்களும் கறுப்பர்களும் கால்பதித்து தாமும் அறிவாளிகள் என்பதை நிறுவிவிட்டார்கள். அவர்கள் அவர்களுக்கான தனித்த அடையாளத்தை முன்னெடுத்துப் பேணியதன் விளைவு தனிநாடுகளைப் பெற்று அதிகாரமிக்கவர்களாக மாறிப்போனார்கள். இன்றைக்கு உலக வல்லரசுகளாக இருக்கிற ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் அந்நியச் செலாவணியையும் தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாக மங்கோலியா விளங்குகிறது. தமக்கென நாடு இன்றி சிதறடிக்கப்பட்ட யூதர்கள் தனிநாடு பெற்றுவிட்டார்கள். இவையெல்லாம் ஆரிய அல்லது வெள்ளை இனச் சித்தாந்தத்திற்கு எதிரான அரசியலில் சாத்தியமானவை. தனிநாடு இருந்தாலே தனி அடையாள உருவாக்கம் சாத்தியப்படும் என்பதை உணர்ந்து தமிழருக்கென்று தனிநாடு கோரிய ஈழப்போரும் சூழ்ச்சிகளால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நிற்க.
      இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஏற்கனவே பன்னெடுங்காலமாக தனித்த அடையாளம் இருந்து வந்திருக்கிறது. அவை இயக்க ரீதியிலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. விடுதலைக்குப் பின்னும் அந்நிலை தொடர்ந்தது. இந்த அடையாளம்சார் இயக்கங்கள் 1950களின் பிற்பகுதியில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது முதல் சிக்கலைச் சந்தித்தன. இதில் திராவிடம் என்னும் பேரினம் துண்டுபோடப்பட்டு, துண்டுகளில் ஒன்று தமிழ்நாடாக மாறிப்போனது நமக்கெல்லாம் தெரிந்த வரலாறு. இரண்டாவது சிக்கலை 1990களில் சந்தித்தன. அப்போதைய ஆட்சியாளர்கள் உலகச்சந்தைக்கு இந்தியாவின் கதவைத் திறந்துவிட்டு இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் வெகுவாக உயரும் என நம்பினார்கள். ஆனால் இன்றைக்கு நடந்துகொண்டிருப்பது வேறு.
     இந்தியாவில் 1970 தொடங்கி 2000 ஆம் வரை ‘இராமர்’ என்னும் தொன்மமும், தமிழ்நாட்டில் ‘கண்ணகி’ என்னும் தொன்மமும் தேசிய மற்றும் உள்தேசிய அடையாளங்களாக உருவாக்கம் பெற்றன. ஆனால் சர்வதேசிய அரங்கில் இராமர் தொன்மத்திற்குக் கிடைத்த இடம் போல உள்தேசிய அரங்கில் கண்ணகி தொன்மத்திற்குக் கிடைக்கவில்லை. காரணம் திராவிடக் கட்சிகளில் ஏற்பட்ட பிளவும், தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு கண்ணகி குறித்த புரிதலில் இருந்த முரணும் தான். கூடவே மத்திய மாநில உறவிலான அரசியல் சூழலும் அதற்குச் சாதகமாக அமையவில்லை.
      தமிழ் அடையாள உருவாக்கத்தில் இந்திய விடுதலைக்கு முன்; ஆங்கிலேயர்கள் கூட முனைப்புக் காட்டி இருக்கின்றனர் என்பதும் வியப்பாக இருக்கிறது. எல்லீஸ் தம் பெயரை தமிழ்ப்படுத்திக்கொண்டதோடு மட்டுமல்லாமல் திருவள்ளுவர் உருவம் பொறித்த நாணயங்களையும் வெளியிட்டிருக்கிறார். பின்னர் இந்தத் திருவள்ளுவர் அடையாள முன்னெடுப்பு விடுதலைப் போராட்டம் தொடங்கியது முதல் தனித்தமிழ் இயக்கம் உருவான காலம் வரை நீண்ட தொய்வைச் சந்தித்தது. தொடர்ச்சியாக தமிழின் பொது அடையாளமாகத் திருவள்ளுவர் முன்னெடுக்கப்படாத நிலையில் மீண்டும் 2000க்குப் பிறகு இராமருக்கு நிகரான, அதேசமயம் திராவிடக் கருத்தியலுக்கு முரண்படாதது என்னும் நிலையில் திருவள்ளுவர் தொன்மம் முன்னெடுக்கப்பட்டது. கன்னியாகுமரியில் சிலை நிறுவுதல், உலகத் தமிழ்ச் சங்கங்களில் திருவள்ளுவர் படங்கள் இடம் பெறக் கோரிக்கை வைத்தல், அண்டை மாநிலத்தில் திருவள்ளுவர் சிலை திறத்தல், உலகச் செம்மொழி மாநாட்டு இலச்சினையில் திருவள்ளுவரையும் திருக்குறளையும் வைத்து உலகின் கவனத்தை அதில் குவியச்செய்தல் வரை அடையாள உருவாக்கம் நிகழ்ந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் உலக அரங்கில் தமிழுக்கான அல்லது தமிழர்களுக்கான அடையாள உருவாக்கத்தில் மு.கருணாநிதி என்கிற ஒற்றை மனிதரின் செயல்பாடுகள் சில அதிருப்திகளை உள்ளடக்கி இருந்தபோதிலும் முக்கியமானவை.
      இந்நிலையில் இன்று மேற்குலகின் உணவு, உடை, விளையாட்டு, பொழுதுபோக்கு, உள்கட்டமைப்பு, பாலியல் நடவடிக்கை முதலிய அனைத்தும் உயர்வானவையாக முன்வைக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் சூழலில் உலக முதலாளிகள் தங்கள் கருத்தியலுக்கும் வணிக நடவடிக்கைக்கும் வேறுபாடு இல்லாமல் நுட்பமாக விளம்பரங்களை உருவாக்கி திரும்பத்திரும்ப ஒலிபரப்பி அவர்களின் உற்பத்திப் பொருளுக்கு ஏங்கிக்கொண்டு இருப்பவர்களாக நுகர்வோர்களை வடிவமைக்கிறார்கள். இந்தப் போலியான மேட்டிமை வாழ்க்கைக்குப் பலியாகும் இனங்கள் தமக்கான அடையாளத்தை இழந்து நிற்கும் போது உலக முதலாளியம் தாம் உருவாக்கிய ஒற்றை அடையாளத்தைத் திணித்து தமக்கான சந்தையை உறுதிப்படுத்திக்கொள்கிறது. உலகமயமாக்கல் கொள்கை அமலில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் அந்நாட்டு இனக்குழுக்களின் பண்பாடு, மொழிசார் அடையாளங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன. உலகமயத்தின் நோக்கமே குழுமனப்பான்மையை உடைத்து பிராந்திய அடையாளங்களை அழிப்பதுவும் தான். அந்த வேலையை அது இன்றளவும் சரியாகவே செய்கிறது.
     மற்றொரு புறம் மொழிவழி அடையாளத்தை பாதுகாத்து வந்த கல்விப்புலங்களின் நோக்கமும் இன்று மாறிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் தமிழுக்கும் தமிழாசிரியருக்குமான இடம் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாலேயே தவிர்க்க முடியாததாகத் தொடர்கிறது. தமிழை ஒரு பாடமாக வைத்துக்கொள்வது பற்றி அந்தந்தக் கல்வி நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்னும் அரசாணை வருமெனில் அடுத்த நொடியை தமிழ் துரத்தியடிக்கப்படும். அந்தளவுக்கு உலகமயமாக்கல் சித்தாந்தம் மொழிவழிக் கல்வி மீது வெறுப்பை உருவாக்கி வைத்;திருக்கிறது. இந்நிலையில் உயிர்ப்புள்ள, உலகில் அனைத்துப் பகுதியில் வாழும் தமிழர்களின் கருத்தியலையும் உள்ளடக்கிய பொதுவான தமிழ் அடையாளத்தை உருவாக்கி, வரும் சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதுதான் நமக்கான கடமை. இல்லையெனில் தமிழினம் முகவரி இழந்து அகதியாவதைத் தவிர வேறு வழியில்லை.
சமீப காலத்தில் குறிப்பாக 2010க்குப் பிறகான அடையாள முன்னெடுப்புகளில் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. சான்றாக சர்வதேசிய அரங்கில் தமிழர்கள் வெற்றி பெறும் போதெல்லாம் அவர்களின் மொழிசார் அடையாளம் புறந்தள்ளப்பட்டு இந்தியராகச் சித்திரிக்கப்படுகிறார்கள். குடியரசுத்தலைவர், பிரதமர் சகிதம் புகழ்ந்து தள்ளுகிறார்கள். சர்வதேசியக் கொள்கையினால் தமிழர்கள் பாதிக்கப்படும்போது அவரது தேசிய அடையாளம் மறுக்கப்பட்டு தமிழராகக் காட்டப்படுகிறார். இதை வேறுவிதமாகச் சொல்வதென்றால் இப்படிச் சொல்லாம்: கூகுல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை பொறுப்பேற்றால் அவர் தமிழரல்லர்; இந்தியர். இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்படும் ராமேஸ்வர மீனவர் இந்தியர் அல்லர்; தமிழர். கடுமையான வெள்ளத்தில் புவனேஸ்வர், பாரதீப் பாதிக்கப்பட்டால் அது ஒடிசா அல்ல; இந்தியா. சென்னை, தூத்துக்குடி பாதிக்கப்பட்டால் அது இந்தியா அல்ல; தமிழ்நாடு. இப்படித்தான் இருக்கிறது தமிழ் அல்லது தமிழரின் இன்றைய அடையாளம். என்ன செய்ய!

Comments

Popular posts from this blog

டவுசர் அக்காவுக்கு வீர வணக்கம்

1990 களில் எங்களூர் பகுதியில் டவுசர் அக்கா மிகப் பிரபலம். சாயங்காலம் ஆகிவிட்டால் டவுசரோடு காணப்படுவார். ஆகையால் அவருக்கு அந்தப் பெயர் வாய்த்துவிட்டது. இன்றைக்குப் பெண்கள் டவுசர் அணிவது நகரங்களில் இயல்பாகிவிட்டது. கிராமங்களுக்கு அது இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் டவுசர் அணிவது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தோமானால் இன்றைக்கும் டவுசர் அக்காவை வியக்காமல் இருக்க முடியாது. கை வைத்த பனியனும் டவுசரும் அணிந்திருக்கும் அக்கா எப்போதும் டவுசர் பையில் நான்கு அங்குல நீளத்தில் கைபிடி தெரியும் படி கத்தி ஒன்றை வைத்திருப்பார். பகல் நேரங்களில் சேலையில் இருந்தாலும் டவுசரும் கத்தியும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும். ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் டவுசர் அக்காவுக்கு ‘ மாமா – அக்கா ’ தான். வாய்விட்டு சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். கூலிக்கென்று வேலைக்குப் போக மாட்டாள். சம்பாதிப்பது பற்றி யோசிப்பதே கிடையாது. குடும்பம் கிடையாது. யார் வீட்டில் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். யாரேனும் தோட்ட வேலைக்குக் கூப்பிட்டால் ‘ போங்க … வ...

அயோத்திதாசரின் விடுதலைப் பெளத்தம்

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளமாகத் திகழும் அயோத்திதாசர் , அக்காலத்தின் வாழ்க்கைச் சூழலுக்கும் நிலவிய அரசியல் தன்மைக்கும் ஏற்ப பெளத்தத்தை முன்வைத்தவர் . அவர் காலத்திய வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தினார் . அதற்காக சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , இலக்கிய இலக்கணங்கள் , நிகண்டுகள் உள்ள்ளிட்ட எழுத்தாவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் . வரலாற்றைத் திரிபு செய்தவர்கள் பயன்கொண்ட சான்றுகளையே அயோத்திதாசரும் பயன்கொண்டு அதன் மீது வேறொரு வாசிப்பை நிகழ்த்தினார் . ஒரு வாசிப்பி ன் வழி வரலாற்றை எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான அரசியலை வெளிப்படுத்தியதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார் . தமிழ்ச்சமூகத்தை ஆதி திராவிடர் , திராவிடர் எனப் பகுத்து ஆதி திராவிடர்களைப் பூர்வப் பெளத்தர்கள் என்றார் . அதற்காக அவர் முன் வைத்த வாதங்கள் பூர்விகமான மண்ணின் மணம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது . அயோத்திதாசர் அயோத்திதாசரின் காலத்தில் வரலாறு , பண்பாடு , இலக்கியம் , தத்துவம் ஆகியவற்றை ஐரோப்பிய வெளிச்சத்தில் பார்க்கும் போக்கு உருவாகிவிட்டிருந்தது . இந்திய...

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும்

ஹரிஜனங்களும் சதபத பிராமண கதைகளும் 1933 இல் எம்.ஆர்.ஜம்புநாதன் எழுதிய நூல் சதபத பிராமணம். வேதங்கள் , உபநிடதங்கள் ஆகியவற்றின் செய்திகளை விளக்கும் வண்ணம் எதையாவது எழுதும் வழக்கமுடைய ஜம்புநாதன் , யசூர் வேதத்தின் சில பகுதிகளை விளக்கும் முகமாக சதபத பிராமணத்தை எழுதியிருக்கிறார். அதில் 88 விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவர் ‘ கதைகள் ’ என்கிறார். உண்மையில் அவற்றைக் கதைகள் என்று சொல்வது கூட ரெம்ப அதிகம் தான்.  இந்நூலை அவர் ஹரி ஜனங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே விவரிக்கிறார். நூலில் ருத்திரனின் இயல்புகளை விவரிக்கும் அவர் ‘ ருத்திரனின் குணங்கள் அனைத்தும் ஹரிஜனங்களிடம் உள்ளது ’ என்பதாக அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த ஒப்பீட்டின் வழி அவரது அறிவின் அளவு துலக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி நூல் எதற்காக எழுதப்பட்டிருக்கும் என யோசித்தால் ஹரிஜனங்களை இந்துக்களாகச் சித்திரிப்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சான்றாக , ருத்திரனுக்கும் ஹரிஜனங்களுக்கும் அவர் சொல்லும் ஒற்றுமைக் காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். உலகம் ...