2019 – இல் அழகிய பெரியவனின் ‘ அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார் ’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்கான மதிப்புரையை ‘ பேசும் புதிய சக்தி ’ யில் எழுதியிருந்தேன் . அந்த இதழில் தான் அமுதா ஆர்த்தியைத் தெரியும் . அமுதா ஆர்த்தி அதில் ‘ சைக்கிள் சவுட்டு ’ என்ற கதையை எழுதியிருந்தார் . நாடோடி இளைஞன் , அவன் மீது காதல் கொள்ளும் உள்ளூர் பெண் . அவனை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லும் திருநங்கை என்று மூவருக்குமான உணர்வுச் சிக்கலை நுட்பமாக விவரித்த கதை அது . மார்ச் 2020 இல் ‘ அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும் ’ கதையை காலச்சுவடில் வாசித்தேன் . 2022 – இல் அம்ருதாவில் ‘ வெற்றுடல் குளம் ’ வாசித்தேன் . 2023 ஜனவரியில் காலச்சுவடில் ‘ ரயிலைத் துரத்தும் இரவு ’ வாசித்தேன் . இப்படித்தான் அமுதா ஆர்த்தி கதைகளோடு எனது பயணம் தொடங்கியது . அவரது கதைகளின் களம் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை தான் என்றாலும் அவரது ஒவ்வொரு கதைக்கும் அவர் காட்டுகிற வேறுபாடு தான் அவரது கதையின் தனித்துவம் . பெண் , தனிமை , வெறுமை , முடிந்தவரை தனிமைக்குள்ளும் கொண்டாட்டத்தைத் தேடுதல் , தேடுதல் கைகூடாத போது விரக்தி என்பதாக பல கதை...