ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகள் - சில புரிதல்கள் ஞா.குருசாமி தமிழின் மிக முக்கியக் கவிஞர்களுள் ஒருவராக அடையாளம் காட்டப்பெறாத, அதிபரிசுத்தமான இலக்கியவாதிகள் அவ்வப்போது தயாரிக்கும் அனைத்து தகுதிப் பட்டியலிலும் தவறாது இடம் பெறாமல் இருந்து வருகிற ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகள் கூர்மையான ஆயுதங்களைச் சுமந்துகொண்டிருப்பவை. ஆயுதம் வைத்திருந்தலும் ஆயுதமாகவே வாழ்ந்தாலும் அது தரும் அச்சத்தில் விலகிநின்று வீரம் பேசும் அதிபரிசுத்த இலக்கியவாதிகள் ஆதவன் தீட்சண்யாவை தவிர்த்துவிட்டுப் பேசுவது ஆச்சரியமில்லை தான். அது அவர்களது இயல்பு. அது போலவே எதையும் கண்டுகொள்ளாமல் சுட்டெரித்துக்கொண்டிருப்பது ஆதவனின் இயல்பு. சமுதாயச் செயல்பாட்டாளராக, பத்திரிகையாளராகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகள் சமகாலத்தின் தேவைகளில் முக்கியமானவை. அவை மக்களின் வலிகளை, வரலாற்றை, தியாகத்தை, சுபாவத்தை, பேதத்தை, காலந்தோறும் நிகழ்த்தப்பட்ட சதிகளை, துரோகங்களை உள்ளபடியை பேசுவதில் கவனத்திற்குரியனவையாய் நிற்கின்றன. ‘அம்பலம்’ என்னும் கவிதை தேசத்தைப் பற்றி பேசுகிறது. தேச அபிமானிகளின் உண்மை மனத்தை வெளிச்சத்திற...