அண்ணாவின் நாடகங்கள் ஞா . குருசாமி jeyaseelanphd@yahoo.in படைப்பாளியின் படைப்பு மனம் சுயம்பல்ல . அது வேறு சில கருத்தியல்களின் கூட்டுப் பிழிவு . ஆழ்மனதில் எப்போழுதோ பதிவான ஏதோ ஒன்று அதற்கேற்ற சூழல் அமையும் போது படைப்பாக மாறுகிறது . மொழி – சூழல் – கருத்தியல் ஆகியன ஒருங்கிணையும் புள்ளி படைப்பு மனமாக மாறும் . அதனாலேயே படைப்புகள் மொழி , சூழல் , கருத்தியல்களைப் பிரதிபலிப்பனவாக இருக்கும் . அண்ணாவின் நாடங்களைப் புரிந்து கொள்வதற்கு அவரது காலத்திய சூழல் , கருத்தியலைப் புரிந்தாக வேண்டும் . 1916 நவம்பர் 20 இல் தொடங்கப் பெற்ற நீதிக்கட்சி தமிழகத்தில் 1920 டிசம்பர் முதல் 1937 வரை ஆட்சியில் இருந்தது . 1937 முதல் 1967 வரை இடையில் ஒரு ஆறு வருடங்களை தவிர்த்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது . 1967 இல் திமுக வெற்றி பெற்றது . அண்ணா முதலமைச்சர் ஆனார் . அண்ணா 1920 களில் நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டது , பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டது . பெரியாரிடம் முரண்பட்டது , திமுகவை ஆரம்பித்தது ஆகியன அண்ணாவின் அரசியல் பயணத்தில் முக்கியமானவை . இந்நான்கு கட்டத்திலும் அண்ணாவின் படைப்பு மனம் ஒரே மா...