16.01.2013 அன்று மதியம் முகநூலை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது ஜல்லிக்கட்டு பற்றி லிவிங் ஸ்மைல் வித்யா வினவியிருந்த வினா ஒன்று கண்ணில் பட்டது. தமிழர்களின் விளையாட்டுகள் பற்றி நிறைய யோசிக்க வைப்பதாக அந்தக் கேள்வி அமைந்திருந்தது. ‘ ஆண்களால் மட்டுமே விளையாடப்படும் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த , குறிப்பிட்ட சாதியினரால் , சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விளையாடப்படும் ஒரு விளையாட்டு எப்படித் தமிழர் விளையாட்டாகும் ?’ என்பதுதான் அந்தக் கேள்வி. தமிழர் யார் ? என்று வரையறுப்பதில் ஏராளமான சிக்கல்கள் உண்டு. வரையறைகள் முன்வைக்கப்படும் போது வரையறைக்கு வெளியில் இருப்பவர்களுக்கு அது ஆத்திரம் ஊட்டுவதாகவே அமையும். தர்மபுரி கலவரத்திற்குப் பிறகு சாதி குறித்த பார்வைகள் சில மட்டங்களில் கூர் தீட்டப்படும் வேளையில் தமிழர் பற்றிய வரையறை உருவாக்கம் எளிதானதல்ல. வரும்காலம் வரையறையை அவசியப்படுத்துவதாகவும் அமையலாம். தமிழ்த்தேசியம் வேகமடைந்திருக்கும் இன்று அதற்குள் நின்று ஆதாயம் தேடுகின்ற ஒவ்வொருவரும் தம்மை தமிழர் என்கின்றனர். ஆதாயம் , பாதுகாப்பு , அரசியல் முன்னகர்வு , பண்பாட்டு மீட்டெடுப்பு என்கிற நிலைக...