கட்டுரை மனைக்குறி சாஸ்திரம் - சில விவாதக் குறிப்புகள் ஞா.குருசாமி jeyaseelanphd@yahoo.in இப்பொழுதெல்லாம் ‘சாஸ்திரம்’ என்கிற சொல் அதிகமாக உச்சரிக்கப்பட்டு வருகிறது. ‘சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது’, ‘சாஸ்திர வாக்கு’, ‘சாஸ்திர தர்மம்’, ‘சாஸ்திரக் கட்டுப்பாடு’ என்றெல்லாம் அந்தச் சொல் புழங்கப்படுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் ‘சாஸ்திரம்’ என்கிற சொல்லும், அதன்வழி உருவாக்கப்பட்டிருக்கும் பண்பாட்டு வெளியும், அதன்வழியாகக் கிடைக்கின்ற லாபமும் இதுவரை யாருக்கானதாக இருந்திருக்கிறது. யாருக்கானதாக இல்லாமல் இருந்திருக்கிறது என்பது குறித்த விவாதங்கள் பன்னெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. என்றாலும், அதே வேலையைத் தொடர்ந்து செய்யவேண்டிய தேவை இன்றைக்கு மேலதிகமாக உருவாகிவிட்டிருக்கிறது. வேடனுக்கும் வேட்டை உயிருக்கும் இடையே விரிக்கப்பட்டிருக்கும் வலையின் குணத்தை ஒத்தது சாஸ்திரம். சாஸ்திரத்தை உருவாக்கியவர்களுக்கு அதை உருவாக்காதவர்கள் அனைவரும் வேட்டை உயிர்களே. உயிர்களை வேட்டையாடுவதன் வழி வேட்டை உயிரின் வாழ்வெளியை நிர்மூலமாக்கி அபகரித்தல் தற்செயலாகவே நடைபெற்றுவிடுவதை ஒத்த...